மரவள்ளிச்செடியும் தோடம்பழமும்  – இருண்ட காலத்தின் அகராதிக் கதைகள் : பிரசாந்தி சேகரம்

சேர்னோவிட்ஸ் (Czernowitz) நோக்கிச் செல்லும் பாதை சற்று வினோதமானது. சில பகுதிகள், சிங்கிஸ் ஐத்மத்தோவின் (Chingiz Aitmatov ) படைப்புலக நிலப்பரப்பை ஒத்தது. ‘குல்சாரி’ அல்லது ‘ஜமீலா’ வாசித்தவர்களுக்கு அந்த நிலத்தின் காற்றும், மண்ணும், வானமும், சூழலும் நன்றாகவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் ‘Steppe’ என்று அழைக்கப்படும் பரந்த புல்வெளி நிலம் – அவ்வாறு தான் அந்த நிலப்பரப்பு. சிறு சிறு குன்றுகள், தொலைவில் தொடர் மலைகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெட்டவெளிப் பாலை நிலம். ஆங்காங்கே, ஒரு சில பழமை வாய்ந்த மரக்குடிசைகளும், ஆடுகள் மேய்ப்பவர்களும், அவ்வப்போது, நீண்ட வெள்ளைப்பூண்டு கட்டுகளை விற்கும் பெண்களும் உண்டு. சில பொழுதுகளில், எருதுவண்டி கட்டிப் பயணிப்பவர்களையும் அங்கு காணலாம். மற்றும்படி, அது பெருவெளிப் பாலை நிலப்பரப்புத் தான். ஒரு காலத்தில், குதிரைவண்டியில் சவாரி செய்த நாடோடிகளின் ராஜ்ஜியம் இது. இந்த நகரம் எங்குள்ளது என்று கேட்கும் உங்களுக்கு, மேற்கு உக்ரைனில் (Ukraine ) அமைந்துள்ள Bukowina வின் மரபார்ந்த தலைநகரம் தான் சேர்னோவிட்ஸ் (Czernowitz). கவிஞர் Paul Celan பிறந்த நகரம் இது. காலம் இங்கு உறைந்துவிடவில்லை. ஒரு புறம் கோப்பிக்கடைகளும், நவீன உணவு விடுதிகளும், மறுபுறம் ஏதுமற்ற வனாந்திரப் பிரதேசமுமென, பழையதும் புதியதும் ஒன்றில் ஒன்றாகக் கலந்திருக்கின்றது.

இன்று, சேர்னோவிட்ஸ் ஓர் இலக்கிய நகரம். வருடாவருடம், நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில், இங்கு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறும். 2022 க்கு முன், கவிஞர்கள் இங்கு அமைதியாக ஒன்றுகூடினார்கள், தமது நூல்களில் இருந்து கவிதைகள் வாசித்தார்கள். உரையாடினார்கள். இன்றும் அவர்கள் ஒன்றுகூடுகின்றார்கள், கவிதைகள் வாசிக்கின்றார்கள், உரையாடுகின்றார்கள் – ஆனால் அது போர்க்களத்தின் மிக அருகே இருந்து, களப்பணிகளுக்கு மத்தியில். ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கி (Ostap Slyvynsky) இதற்கு விதிவிலக்கல்ல. 2024 நவம்பர் இலக்கிய விழாவில், தனது கவிதையை, இன்னும் போர் நெருங்காத சேர்னோவிட்ஸ் நகரில் இருந்து வாசிக்கின்றார்:

பின்னர் நாம் மொழியைக் கட்டியெழுப்ப வேண்டும்.
மெழுகுவர்த்தி என்பது பங்கருக்குள் (Bunker) சுடரும் ஒளியாக மட்டும் இல்லாமல் இருக்க,
பறவைக்கு மீண்டும் சிறகுகள் கிடைக்க,
பூக்கள் தீயைக் கக்காமல் இருக்க,
வீட்டின் அடித்தள நிலவறை , மீண்டும் இனிப்பான
‘ஜாம்’ போன்றவற்றை பாதுகாப்பதற்கும், உருளைக்கிழங்குகள் முளைவிடுவதற்குமான இடமாக மாற,
வெப்பம் என்பது மென்சூடாக இருக்க,
மொழியை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்
அது லேசான காரியமல்ல….

இது ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கியின் புதிய நூலில் உள்ள முன்னுரைக் கவிதையின் ஒரு பகுதி. 1978 ஆம் ஆண்டில் பிறந்த ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கி, சமகால உக்ரைன் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். சேர்னோவிட்ஸ் இலக்கிய விழாவில் தொடர்ந்து கவிதைகள் வாசிப்பவர். அவரின் கவிதைகள், உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவரின் புதிய நூல் ஒன்று, சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. “போரில் வார்த்தைகள்” என்பது அதன் ஜெர்மன் மொழியாக்கத் தலைப்பு.

ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கி

போர் என்னவென்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதல்ல. போர் எமது வீடுகளை எலும்புக்கூடுகளாக மாற்றுவது. போர் எமது தோல்பட்டையை உரித்துவிட்டு, அதன் கீழுள்ள இதயம் இன்னும் துடிக்கின்றதா என்று அறிந்துகொள்வது. போர் எமது வாழ்வையே வேரோடு சாய்த்து, அனைத்தையும் மீட்டுவிட முடியாமல் அலையவைப்பது. இவையெல்லாவற்றுக்கும் அப்பால், போருக்கு ஒரு மகா சக்தியுண்டு. அது எமது மொழியை மாற்றக்கூடியது. ஒவ்வொரு வார்த்தையையும் அதன் பொருளையும் கூட மாற்றும் சக்தி போருக்கு உண்டு. அந்த ஒரு வார்த்தை, போரில், களத்தில், புதியதொரு அர்த்தம் பெறும் அல்லது வேறொரு பரிமாணம் எடுக்கும்.

இந்த நூல், அந்த வார்த்தைகள் பற்றியது. எமது அன்றாடத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கதை இங்கு உண்டு. அன்றாடம் என்பதையே, அன்றாடத்தின் சாயலற்று மாற்றுவது தானே போர்! விசித்திரம் என்னவென்றால், ஓர் அகராதி போல இந்த நூல் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. போரின் அகராதி இது. ஆனால், இந்த அகராதி வெறும் வார்த்தைகளின் சேர்க்கை அல்ல. மாறாக, அது குறுங்கதைகளினாலானது. உணர்வுகள், அனுபவங்கள், உரையாடல்களென அனைத்தும், முறிந்து போன வாழ்வின் துணுக்குகளாக a இலிருந்து z வரை ஓர் அகராதி எவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டிருக்குமோ, அவ்வாறு அமைந்திருக்கிறது இந்த நூல். சுருங்கச் சொன்னால், இருண்ட காலத்தின் அகராதிக் கதைகள் அவை.

இந்த நூலின் முன்னுரையில், ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கி இவ்வாறு சொல்கிறார்:

“இந்த நூலில் உள்ள பெரும்பான்மையான வார்த்தைகள் அன்றாடம் எம் வாழ்வோடு இணைந்தவை, உதாரணத்திற்கு ‘சூரியன்’, ‘நம்பிக்கை’, ‘கால்’, ‘கதவு’, ‘அன்பு’, ‘பறவை’, ‘வீதி’, ‘துயரம்’ என இன்னும் பல. சில வார்த்தைகளை போர் மழுங்க வைக்கும். அவை, கல் ஒன்றின் மேல் தீட்டப்படும் கத்தியைப் போல, கூர்மையாக்கப் பட வேண்டும். வேறு சில வார்த்தைகள் ஒலிக்கப்படும் போதே, வெட்டிவிடும் தன்மை கொண்டவை. அத்தனை கூர்மை அதனுள். இன்னும் சில வார்த்தைகள் இலைகள் போன்று வாடி வதங்கி, மிதிபட்டு இறந்துவிடும். மற்றும் சில, நாம் மறந்துபோன இறந்தகாலத்தில் இருந்து புதிதாய் முளைத்து, மீண்டும் அர்த்தம் கொள்ளும், பெரும் கவனப்படுத்தலுக்கு உள்ளாகும்.

பெப்ரவரி 2022 இல், உக்ரேய்ன் ரஷ்ஷிய போர் மூர்க்கம் கொண்டபோது, இந்த அகராதியைத் தொகுக்க விரும்பினேன். நான் கவிஞன், ஆனால் இவை கவிதைகள் அல்ல. கட்டுரைகளும் அல்ல. கற்பனையோ புனைவோ அல்ல. சொல்லுங்கள், போரில் புனைவு எங்கனம் சாத்தியம்?

இந்த நூலின் ஒவ்வொரு வார்த்தையும் எனதேயல்ல. மாறாக, இருண்ட காலத்தில், எனது காதுகளுக்கு எட்டிய மொழி அது. ஒரு தனி மனிதன் தனக்குள் பேசிக்கொண்ட ஒரு மொழி. அது அவனுக்கானது. அவளுக்கானது. ஒரு monologue போல. அந்த நெடு மொழியின் ஒரு துணுக்குத் தான் இந்தக் கதைகள்.

இந்தக் கதைகளுக்குச் சொந்தமானவர்கள் யார்? அவர்கள், போரினால் உறைவிடம் இழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், காயப்பட்டவர்கள், போரில் தம்மால் முடிந்த உதவிகள் செய்தவர்கள், போராளிகள், மருத்துவர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஏன், என்னையும் உங்களையும் போல மிகச் சாதாரண மனிதர்கள் அவர்கள். போர் என்ற ஒன்று அவர்களின் வாழ்வில் வெடித்தது. வெவ்வேறாக இருந்தவர்களை இணைத்தது ‘ஒரு நாள் வரும், அன்று நாம் சுதந்திரமாக வாழ்வோம்’ எனும் ஒரேயொரு கனவு அவர்களை இணைத்தது – இந்தக் கதைகளைச் சொல்லவைத்தது.”

இவ்வாறு தனது முன்னுரையை முடிக்கின்றார் ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கி. பெர்டோல்ட் ப்ரெஷ்ட் (Bertolt Brecht ) 1939 ஆம் ஆண்டு கவிதை ஒன்றை எழுதினார்:

“இருண்ட காலத்தில் பாடல்கள் இசைக்கப்படுமா?
ஆம், இசைக்கப்படும். அவை இருண்ட காலம் பற்றியதாக இருக்கும்.”

ப்ரெஷ்ட் வாழ்ந்த காலத்தில், அகராதி ஒன்று வெளிவந்திருந்தால், அது இதோ இந்த இருண்ட காலத்தின் அன்றாடம் பற்றியதாகத் தான் இருந்திருக்கும், ஒஸ்டாப் ஸ்லிவின்ஸ்கியின் இந்தக் கதைகள் போல. கேட்போமா?

Lwiw நகரத்தைச் சேர்ந்த Wiktor என்பவர் இவ்வாறு சொல்கின்றார்:
‘கால்’
“நமக்குள் ஒரு பழமொழி உண்டு: ‘இங்கொரு கால், அங்கொரு கால்’. அது தான் நான். காயம்பட்ட என்னை, இங்கு கொண்டு வந்தபோது, மருத்துவர்கள் சொன்னது: “உனது காலை நாம் காப்பாற்றி விட்டோம்” என. அந்தக் கால் உயிர் பிழைத்தது தான். ஆனால், என்னால் என்றுமே இயல்பாக இனி நடக்க இயலாது. மிகுந்த வலி. எவ்வித மருந்துக்கும் கேட்கவில்லை. எனது எலும்புக்குள் சிராய் ஒன்று புகுந்து விட்டது. இனி, இந்த ஒரு காலுடன் நான் என்றுமே போர்க்களத்தில் தான் இருக்கப்போகிறேன். அதற்குப் பதிலாக அதனை வெட்டி எடுத்திருக்கலாம்!” (மெல்லச் சிரிக்கின்றார்)

Kyjiw நகரத்தைச் சேர்ந்த Kateryna :
‘இடிமுழக்கம்’
“தனது 3 வயது மகளை ஊஞ்சலில் தள்ளியவாறு, ஒரு பெண் இவ்வாறு சொன்னார்: போர் தொடங்கியபோது, நாம் ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்தோம். அது எவ்வாறென்றால், இடிமுழக்கம் ஒன்று கேட்டால், வீட்டின் அடித்தளத்தில் உள்ள பகுதிக்கு (cellar ) உடனே ஓடிவிடவேண்டும் என்பது. சின்ன மகளுக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்துக்கொண்டது. ஆனால், பெரியவனுக்கு அது புரியவில்லை. அவன் கேட்கிறான் அப்போ, முந்தைய காலத்தில், இடிமுழக்கம் ஒன்று கேட்டவுடன், நாம் ஏன் ஒளிந்துகொள்ளவில்லையென.”

Kyjiw நகரத்தில் இருந்து Anna:
‘அப்பிள் பழங்கள்’
“ஓர் இரவு நான் குளியலறையின் தொட்டியில் தூங்கினேன். தலையணையும் போர்வைகளும் கொண்ட ஒரு கூடு போல அது இருந்தது. அப்போது போர் தொடங்கிய காலம். பேரதிர்வுடன் குண்டுகள் வெடித்தன.

முன்பொரு காலம், என் வாழ்வில் நான் மிகத்தீவிரமாக காதலில் விழுந்திருந்தேன். முதல் முறையாக அவனோடு ‘Karpaten’ எனும் மலைப்பகுதிக்குச் சென்று, ஒரு சிறிய வீட்டில் தங்கினோம். அது இலையுதிர்காலத்தின் உச்சம். ஒருவர் மட்டும் தூங்கக்கூடிய ஒரு கட்டிலில் இருவரும் தூங்கினோம். இப்போது எனது குளியலறைத் தொட்டியை விட அது சொகுசல்ல. அன்றிரவு, எம்மைச்சுற்றியிருந்த பழத்தோட்டத்தில் அப்பிள் பழங்கள் நிலத்தில் தொப்புத்தொப்பென்று விழுந்தன. பெரிய, கனிந்து பழுத்த பழங்கள், ஒரு வித சந்தத்துடன் இரவு முழுதும் ஓய்வின்றி விழுந்தன. அன்று நான் அத்தனை மகிழ்வாக இருந்தேன்.

இதோ, இன்று, குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் நான் தூங்க முயல்கிறேன். ஆனால் எனக்கு கேட்பதோ அந்த அப்பிள் பழங்கள் விழும் ஓசை. நான் வேண்டுவது ஒன்றைத் தான்: எம்மைச் சுற்றிய தோட்டத்தில் என்றுமே அப்பிள் பழங்கள் மட்டும் விழவேண்டும் என்பது.”

Charkiw நகரத்தில் இருந்து Maryna :
‘கனவுகள்’
“முன்பெல்லாம் நான் எழுவதற்கு அரைமணி நேரம் முன்பே அலாரத்தை வைப்பதுண்டு. எழுந்து பார்க்கும் போது, அட இன்னும் அரைமணி நேரம் தூங்கலாமே என்பது அத்தனை அலாதி. இப்போது என்னால் தூங்க முடிவதில்லை. ஆழ்ந்து தூங்க மிகவும் அஞ்சுகிறேன், மீண்டும் விழிக்கமுடியாது போய்விடுமோ என்று. ஒரு வெடிகுண்டுத்தாக்குதலால் விழிக்கவேண்டி வந்துவிடுமோ என்றும் அஞ்சுகிறேன். கனவுகளை நான் வெறுக்கின்றேன். கனவு முடியும் போது எல்லாம் சிதைந்து விடுகின்றது. அது மூச்சு முட்டுகின்றது. எனவே, தூக்கம் வரும் போது, மிகக் குறைவாகத் தூங்க முயல்கிறேன். கனவு காண அங்கு எனக்கு நேரமில்லை. முன்பெல்லாம் வண்டி ஒட்டவும் நடனம் ஆடவும் கற்றுக்கொள்வது போன்ற கனவுகள் எனக்கு வரும். இப்போது தூங்குவதற்கு நான் கற்றுக்கொள்ளவேண்டும்.“ (சிரிக்கின்றார்).

Kyjiw மற்றும் Lwiw நகரத்தில் இருந்து Bohdana:
‘இனிப்பு’
“இன்று Sewerodonetsk இல் இருந்து ட்ரெயின் வந்திருக்கின்றது. எண்ணிலடங்கா குடும்பங்கள் ட்ரெயின் கூரை வரை அடைக்கப்பட்டு. அவர்களில் பலர் இவ்வாறு கேட்டனர்: “நாம் Sewerodonetsk இல் இருந்து வருகின்றோம், இங்கு தேநீர் கிடைக்குமா?”
என்னைப் புரட்டிப்போட்டது, இந்தக் கேள்வியல்ல. மாறாக, அவர்கள் ‘இனிப்பானதொன்றை’ வேண்டி நின்றது. மூன்று பெரிய கரண்டி சீனியை ஒரு சிறிய அளவு தேநீருக்கு அவர்கள் போட்டுக்கொண்டனர். பிஸ்கட் வேண்டும் என்றனர். இனிப்பான ஏதும் வேண்டும் என்றனர். அனைவரும் இனிப்பையே கேட்டனர்.
அவர்கள் கூறியது: “பயம் வரும் போதெல்லாம் நாம் இனிப்பானதை உண்போம். அடுத்த முறை எப்போது மீண்டும் இனிப்புக் கிடைக்கும் என்று எமக்குத் தெரியாது. இனிப்பானவற்றை சாப்பிடும் போதெல்லாம் பாதுகாப்பான எம் குழந்தைப்பருவத்துக்குப் போய்விடுகின்றோம். அங்கு எம் தலைக்கு மேல் ராக்கெட்டுகள் பறக்காது.”

நான் கூறினேன்: “இங்கு எம்மிடம் போதுமான அளவுக்கு சீனி உள்ளது. உங்கள் ஊருக்கும், இன்னும் Mariupol மற்றும் Kherson முழுவதற்கும். நீங்கள் வரவேண்டியது தான் மிச்சம்.”

Czernihiw நகரில் இருந்து Marija :
‘இரத்தம்’
“ஒரு பஞ்சுமேகத்தின் மேல் போல நான் கிடந்தேன், தலைக்குள் ஏதோ ஓர் இரைச்சல், உடல் மட்டும் அத்தனை லேசாக. அதன் பின்னர், எனது இரத்தத்தின் மணம் உணர்ந்தேன். அது விசித்திரமாகத் தலைக்கேறியது. இரத்தத்தை உணர்ந்த அந்த அச்சமும் அதிர்ச்சியும் தான் என்னைக் காப்பாற்றி இருக்கவேண்டும். ஒரு வேளை, இரத்தம் என்பது நச்சுவாயு போல இருக்கலாம்: அந்த மணம் தான் பீதியூட்டி என்னை விழிக்கவைத்திருக்க வேண்டும். அன்று, அந்த மணம் தான் என்னை என் நினைவுக்கு கொண்டுவந்தது, அசைய வைத்தது, நான் உயிருடன் இருப்பதை எனக்குச் சொன்னது. அவசர உதவி புரிந்த ஒருவர் எனக்குச் சொன்னார் இன்னும் 10 வினாடிகள் தாமதமாகி இருந்தால், இரத்தக் கசிவால் நான் இறந்திருப்பேன் என.

இப்போது நான் தினமும் இரத்தம் பார்க்கின்றேன். எந்த அச்சமுமின்றி, வெறுமனே அதனைப் பார்க்கின்றேன். முன்பும் என்னைச் சுற்றி இவ்வளவு இரத்தம் இருந்ததா? வரைபடத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட எமது பிரதேசங்களைப் பார்க்கின்றேன். அவை சிகப்பும் ரோசா வண்ணத்திலும் குறிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வரைபடத்தின் ஓரங்களில் இருந்து இரத்தம் கசிவதைப் போல காட்சி தருவது எனக்கு மட்டும் தானா?”

Kyjiw நகரில் இருந்து Natalja :
‘Cellar ‘ எனும் வீட்டின் அடித்தள நிலவறை
“எமது வீட்டில் இருந்து படையினரால் விரட்டப்பட்டோம், வீட்டின் அடித்தளத்தில் ஓடி ஒளியும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். முளைவிடும் உருளைக்கிழங்குகளுக்கு மத்தியில் நாம் அமர்ந்திருக்கின்றோம். எனது பேரக்குழந்தை, ஒரு தட்டில் உள்ள கோதுமை மணிகளை தனது விரலால் பொறுக்கியபடி இருக்கிறான். பிறகு வெளியே போகவேணும் என்று கேட்கிறான். இது இலைகள் துளிர்க்கும் காலம். ஒவ்வொரு குழந்தையும் வெளியில் விளையாடத் தானே விரும்பும்! திடீரென அவன் கேட்கிறான்:
“பாட்டி, அவர்களின் மொழியில் ‘என்னைக் கொல்ல வேண்டாம்’ என்று எவ்வாறு சொல்வது?”

Lwiw நகரில் இருந்து Sofija :
‘உடல்’
“ஒரு மனிதன் தனது உடலை அதி தீவிரமாக உணரமுடிவது, வலியின் போது தான். நான் நினைக்கவேயில்லை, ஒரு நாள் எனது நாட்டையும் எனது உடல் போல உணர்வேன் என்று. கடை ஒன்றினுள் சென்று, அதன் கதவின் பிடியை அழுத்தித் திறக்கும் போது, அதற்கு வலிக்குமோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. எம்மில் இருந்து ஒரு நூறு கிலோமீட்டர் தொலைவில், ஆறாத காயங்கள் உள்ளன. அது தான், இங்கு எல்லாமே வலிக்கின்றது.”

Czernihiw நகரில் இருந்து Roman :
‘குகை’
“என் வாழ்நாள் முழுதும் குகை ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஒரு நாள் விடுமுறை என்றாலும், தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ஏதும் குகைகளுக்குச் சென்றுவிடுவேன். எமது வட்டாரத்தில், பாடசாலைக்கு அடியில் ஒரு பெரிய பதுங்கு குழி உள்ளது. போரின் ஆரம்ப நாட்களில், அங்கு மின்சாரம் இருக்கவில்லை. குகை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒளிவிளக்கை நெற்றியில் அணிந்து, நான் அங்கு சென்ற போது, மயான அமைதி அங்கு நிலவியது. அந்த அமைதி, அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்ற உணர்வைத் தான் எனக்குத் தந்தது. ஆனால், அடுத்த நொடி, சுவரெங்கும் ஒட்டியது போல அமர்ந்திருந்தனர் பெரியவர்களும் குழந்தைகளும். அந்த பதுங்கு குழியின் இன்னொரு வழியில், அதே போல அமர்ந்திருந்தனர் அனைவரும். ஊசிவடிவில் குகையின் உள்கூரையில் வளர்ந்திருக்கும் சுண்ணாம்புக் கரைசல் போல அந்த மனிதக் காட்சி இருந்தது. நடுங்கவைத்தது. ஏதோ, ஓராயிரம் ஆண்டுகாலமாக அவர்கள் அங்கு தான் அமர்ந்திருப்பது போன்ற ஒரு பிம்பம். ‘காலத்தை’ ஏதோ செய்கின்றது இந்தப் போர்.”

Lwiw நகரில் இருந்து Andrij :
‘வலி’
“சொல், வலி எவ்வாறு மணக்கும்? பொதுவாக, வலியின் அனைத்து வித மணமும், ஒரு மருத்துவ ஊர்திக்குள் அடங்கி இருக்கும்.

இன்னும் ஒரு படி மேல் சொன்னால், ஓர் இறைச்சிக்கடையின் மணம் தான் வலியின் மணம். இப்போது தான் கூறுபோடப்பட்ட இறைச்சித்துண்டுகள் போல. வலிக்கு இரத்தத்தின் வாடையும் உண்டு: அது இனிப்பான ஒரு மணம், கூடவே இரும்பின் பாகங்கள் அதனுள் பட்டது போலவும் இருக்கும். இதற்கும் அப்பால், வலிக்கு வியர்வையின் மணமும் உண்டு, நாட்கணக்காக தண்ணீர் படாத உடல் போல. இதனுடன் ஒரு சிறு துளி ஆல்கஹால், ஐயோடின் திரவம் மற்றும் க்ளோரினும் சேர்ந்தால், அது தான் வலியின் மணம்.

கூடவே, போர்க்களத்தின் சாம்பல் புகையும், கோப்பியும் சிகரட் மணமும் மேற்கூறியவற்றுடன் சேர்ந்துகொண்டால், வலியின் மணம் முழுமையடையும். உங்களால், லேசில் மறக்கமுடியாத மணம் தான் வலியின் மணம்.“

இவை, சுமார் நூறு கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட வெறும் பத்துக் கதைகள் தான். முழுவதும் வாசித்தால், உடலும் மனமும் சிதைவுறும் நிலத்துக்குச் சென்றுவிடுவீர்கள். உங்களை அங்கிருந்து மீட்பதென்பது என்னால் முடியாதது. நானே அந்த நிலத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. எவ்வாறு மீள்வது? சொல்லுங்கள்! என்னுள்ளும், என்னிடமிருந்து பிரிக்க முடியாத பெரும் போரின் பாடல் ஒன்று ஒலித்தவண்ணம் இருக்கின்றதே! அதனை நான் யாருக்குச் சொல்வேன்! என்னிடமும் போரின் ஒரு நூறு அகராதிக் கதைகள் உண்டென்பது உங்களுக்குத் தெரியாதா? நானும் ஒரு நாள் இடம்பெயர்ந்தேன் என்பது கூட உங்களுக்குத் தெரியாதா? இரண்டு கதைகளுடன் மட்டும் நிறுத்துகிறேன்.

1983, யாழ் நகரின் கந்தர்மடத்தில் இருந்து சிறுமி பிரசாந்தி:
‘மரவள்ளிச்செடி’
“இனக்கலவரத்தின் அண்மைக்காலங்கள் அவை. ஊர் கொந்தளித்துக்கிடந்தது. எனக்கும் அண்ணாவுக்கும் திகில் நிறைந்த நாட்கள் அவை. பத்திரிக்கைகளில் “ஈழத் தமிழ் மண்ணில் எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி! தங்கதுரை – குட்டிமணி – ஜெகன் உட்பட 37 தமிழர் படுகொலை” என்ற செய்தி. பிறகொரு நாள், தின்னவேலியில் (திருநெல்வேலி) 13 ஆமிக்காரர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். ஒரு நாள் பின்னேரம் திடீரென்று அம்மா எங்களை இழுத்தபடி ஓடுகின்றார். உடுத்த உடையுடன் எத்தனை விரைவாக ஓட முடியுமோ அத்தனை விரைவாக ஓடுகின்றோம். கூடவே எங்கள் அயலவர்களும். எங்கும் அலறல் ஓசை. எமது ஒழுங்கையின் கடைசியில், வள்ளியம்மை ஆச்சியின் மரவள்ளித் தோட்டம் உண்டு. மிக அடர்த்தியான மரவள்ளிச்செடிகள் கொண்ட தோட்டம் அது. அங்கு ஒளிந்திருந்தால் எவரின் கண்ணுக்கும் தெரியாது. இருட்டும் வரை அன்று நாம் எல்லோரும் அங்கிருந்தோம், அந்த மரவள்ளிச்செடிகளுக்கு மத்தியில், செடியோடு செடியாக. கேட்கும் போது அழகான காட்சி ஒன்றை தருகின்றது, இல்லையா? ஆனால், அது கொடுமை. பாத்திகட்டிய மரவள்ளித் தோட்டமெங்கும் எறும்புகள் நிறைந்திருந்தன. எறும்புக்கடிக்கு மத்தியில் மூச்சுக்காட்டாமல் இருப்பது, போர் எமக்குக் கற்பித்த பாடங்களில் ஒன்று. குழந்தைகள் கூட அன்று அத்தனை அமைதியாக இருந்தனர். அந்த மரவள்ளிச்செடியும் அங்கு நிலவிய மயான அமைதியும் நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அது நடுங்க வைத்தது. இன்றும் மரவள்ளியை என்னால் தொடவோ உண்ணவோ முடிவதில்லை.”

1985 , ரஷ்ஷியன் Aeroflot விமானத்தில் இருந்து சிறுமி பிரசாந்தி:
‘தோடம்பழம்’
“இனிப் போர் ஓயாது. நீங்கள் கொஞ்சக் காலம் இங்கு ஜெர்மனிக்கு வாங்கோ” என்று அப்பா என்னை, அம்மா அண்ணா தம்பியை அழைத்தார். எல்லா ஒழுங்கும் செய்யப்பட்டு, ஒரு நாள் நாம் விமானம் ஏறினோம். அது தான் எமக்கு முதல் முறை விமானப்பயணம். எனக்கும் அண்ணாவுக்கும் அந்தப் பயணம் ஒத்துவரவேயில்லை. எண்ணிட முடியாத அளவுக்கு சத்தி (வாந்தி) எடுத்தெடுத்து, எதுவும் குடிக்கவோ உண்ணவோ முடியாது போனது. இனி எதுவும் எடுப்பதற்கு இல்லையென்றான போது, Moscow விமான நிலையம் வந்தடைந்தோம். என்றுமே அறிந்திராத பனியும் குளிரும், பற்களை நடுங்க வைத்தது. பேச்சு வரவில்லை. இறுதி விமானம் ஏறினோம். அது Aeroflot. பணிப்பெண்களிடம் உணவேதும் வேண்டாம் என்று அம்மா மறுத்துவிட்டார். ஆனால், அவர்கள் ஆளுக்கு ஒரு தோடம்பழத்தை மட்டும் தந்துவிட்டுப் போனார்கள். அந்த 7 வயதில் இத்தனை தீர்க்கமான செம்மஞ்சள் வண்ணத்தில், இத்தனை பெரிதான ஒரு தோடம்பழத்தை நான் அதுவரை எங்குமே கண்டதில்லை. அம்மா மிகவும் சிரமப்பட்டு அதன் தோலை உரிக்க உரிக்க, ஓர் அலாதி மணம் விமானமெங்கும் பரவியது. இனிமேல் சத்தி வராது என்ற ஒரு மன தைரியத்தை அந்த மணம் தந்தது. ஒவ்வொரு சுளையாக எனக்கும் அண்ணா தம்பிக்கும் அம்மா தந்தார். அமிர்தம் என்றால் என்னவென்று அன்று அந்தத் தோடம்பழம் எனக்குச் சொன்னது. கூடவே அது வெறும் பழமல்ல. ஒரு முழு உணவானது எனக்கு. உயிர் வந்தது. நாம் ஜெர்மனி வந்தடைந்தோம். போருக்கு அஞ்சி, கடல் கடந்து நாம் கால்பதித்த நகரம், அன்று பிளவுபட்டுக் கிடந்தது – அது பெர்லின் நகரத்தின் கிழக்குப் பகுதி.“

‘கொஞ்சக் காலம்’ என்று தான் அன்று அப்பா எமை தன்னோடு இங்கு அழைத்தது. இன்று, இன்னும் சில நாட்களில், அந்தக் ‘கொஞ்சக் காலத்துக்கு’ 40 வயது.

௦௦௦

ஈழத்து தமிழில் ‘தோடம்பழம்’ என்பது ஆரஞ்சின் (Orange ) அனைத்து வகைகளும் அதனுள் அடங்கும்.

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையான வீடுகளுக்கு, வீட்டின் அடித்தளத்தில், ஒன்று அல்லது பல ‘Cellar‘ என்று அழைக்கப்படும் நிலவறைகள் கட்டப்பட்டிருக்கும். போர்க்காலத்தில் தனியே பங்கர் (bunker ) வெட்டத் தேவையில்லை. இதுவே பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகின்றது. ஏனைய காலங்களில் குறிப்பாக உணவுப்பண்டங்களை பாதுகாக்கப் பயன்படுத்தப் படுகின்றது. 

பிரசாந்தி சேகரம்

இலங்கையிலிருந்து சிறுவயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். மொழியியல், இலக்கியம், மானுடவியல், சமூகவியல் போன்றவற்றில் முதுமாணி. ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ் மொழி இலக்கியங்களை தமிழிற்கு மொழிபெயர்ப்பதில் ஆர்வமுடையவர்.

9 Comments

  1. அருமையான பதிவு. மேலும் தொடர வாழ்த்துகள்.

  2. சிறப்பான முறையில் பேசப்படும் கதைகள், அருமை அருமை, வாழ்த்துகள்,,

  3. மிகச் சிறப்பான கட்டுரை, போரின் வலிகளை பலரும் அவர்களுக்கு கிடைத்த அனுபவமும். அதன் விளைவுகளும் நல்ல பதிவு . குறிப்பாக சேர்னோவிட்ஸ் வாசித்த கவிதை நன்றி

  4. அருமையான பதிவு. அருமையான பதிவு. வாழ்த்துகள்

  5. அருமையான கட்டுரை எந்த நாடுகள் என்றாலும்கூட போர்களின் வலி ஓன்றே என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் புலமை தொடரட்டும்

  6. போர் முடிந்தது. இடம் மாறி ஆயிற்று. ஆனால் போர் நடந்த நிலத்தில் இருந்து வந்தவர்களின் ஏழு தலைமுறையும் கூட உறங்க முடியாது. அந்த துயரத்தின் நிழலை இதில் பதித்திருக்கிறீர்கள்.

  7. “பாத்திகட்டிய மரவள்ளித் தோட்டமெங்கும் எறும்புகள் நிறைந்திருந்தன. எறும்புக்கடிக்கு மத்தியில் மூச்சுக்காட்டாமல் இருப்பது, போர் எமக்குக் கற்பித்த பாடங்களில் ஒன்று. குழந்தைகள் கூட அன்று அத்தனை அமைதியாக இருந்தனர்.”

    அழவைக்கும் வரிகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.