
கழுதை நான்
காவிய காலத்தில்
ஒரு கழுதை
எப்படி இருந்ததோ
அதிலிருந்து
ஒரு செல்
ஒரு உறுப்பில்
கூட
பரிணமிக்காத
கழுதை
நான்.
உங்கள் அலங்காரப் பாண்டங்களுக்கு
எது சட்டகமோ
அந்தப் புராதன எலும்புதான்
நான்.
ஆபரணங்களோ
தளவாடங்களோ
கருவிகளோ
அழகோ
அன்போ
உள்ளும்
புறமும் ஏறாத
உழைப்பு என
நீங்கள் மொழிபெயர்க்கும்
வெறும் கழுதைதான் நான்.
இம்மலைவாசஸ்தலத்தின்
தடுப்பணை
கவர்னர் மாளிகை
மலர் தோட்டம்
படகு இல்லம்
பங்களா வீடுகள்
தேவாலயங்கள்
கோயில்கள்
தேயிலைத் தொழிற்சாலைகள்
தொழிலாளர் குடியிருப்புளைக் கட்ட
என் முதுகில்
மண்சுமந்து
சிற்றாறுகளை
சிறுகுன்றுகளை
ஒற்றையடித் தடங்களை
தடங்களே உருவாகாத சிறு வனங்களை
கடந்தேன் நான்
என்றாலும்
ஒரு நினைவகமோ
சிலையோ
சதுக்கமோ
ஏதுமற்ற
கழுதைதான் நான்.
என்னை ஓட்டிச்செல்லும் எஜமானன்
என் ஆறாத காயங்களை உலரக்கூட விடுவதில்லை
மழையிலும் வெயிலிலும்
நீர்வழிகளிலும்
என்னை அடித்து
வழிநடத்துபவன் அவன்
மலை ஆற்றில் இறங்கும்போது
அவன் கழற்றும்
அழுக்கேறிய லுங்கியை
அரைக்கால் சட்டையை
அதில் உள்ள பீடியைக்
கழித்துப் பார்த்தால்
அபரிமிதமோ உபரியோ
சதையில் கூட தங்காத
சக மிருகங்கள்தாம்
நாங்கள்.
எனக்குத் தனிக்கதைகள் இல்லை
எந்தப் புராணக் கடவுளரின் வாகனமாகவும்
நான் இடம்பெறவேயில்லை
உச்சைஷ்ரவஸ் போன்ற மகத்துவமான பெயர்
வரலாற்றில்
என்னைத் தீண்டக்கூட இல்லை.
நான் யார் ?
நீங்கள் கேட்ட சுமைகொண்ட
கேள்வி
என்னுடையதல்ல.
எனினும்
புதிய விடுதியொன்றின் கட்டுமானத்துக்காக
ஈரம் சொட்டச் சொட்ட
ஆற்றுமணல் பொதியுடன்
அவன்
கைப்பிரம்பு
என் உடம்பை
நெருங்கிக் கொண்டிருக்கும்
அவகாசத்தில்
கற்பூர மரத்தின் கீழ்
சற்றே நின்று இளைப்பாறி
கேட்டுக் கொள்கிறேன்.
நான் யார்?
(கவிஞர்கள் யவனிகா ஸ்ரீராமுக்கும், கல்பற்றா நாராயணனுக்கும்)
000
இனிய ஹென்றி மத்தீஸ்

இனிய
ஹென்றி மத்தீஸ்
எப்போது
உன் மனைவி
அமேலி மத்தீஸின் முகம்
முகமூடியாக உனக்கு உருமாறியது?
இனிய
ஹென்றி மத்தீஸ்
உன் மனைவி
அமேலி மத்தீஸின் கண்கள்
எப்போது
முகமூடியின் இரண்டு குழிகளாக
உனக்குத் தோன்றியது?
இனிய
ஹென்றி மத்தீஸ்
உன் மனைவி
அமேலி மத்தீஸின் முகம்
வெறும் கபாலமாக
எப்போது
உன் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது?
எலும்புக்கும்
உடலுக்கும்
முகத்துக்கும்
கபாலத்துக்கும்
எத்தனை நூற்றாண்டுகள் தொலைவு?
இனிய ஹென்றி மத்தீஸ்.
(இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃபாவிய கலை இயக்கத்தின் முதன்மையான ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் பிரெஞ்சு ஓவியர் ஹென்றி மத்தீஸ். அவரது போர்ட்ரெய்ட் ஆஃப் மேடம் மத்தீஸ் புகழ்பெற்ற ஓவியம்.)
000
அந்தரப்பட்டிணம்
பள்ளியெனவும் நூலகமெனவும் தொனித்த ஒரு பாழடைந்த மாளிகைக்குள் நுழைந்தேன். படிகளேயில்லாமல் நிர்மாணத்தில் உள்ள ஓர் அந்தரப்பட்டிணத்துக்கு ஏறிவந்து விட்டேன். பூமியில் உள்ள கட்டிடங்களை வாகனங்களை அலையும் மனிதர்களை எல்லாம் பார்க்கும் வகையில் கண்ணாடித் தளத்தில் அந்தரப்பட்டிணம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தரப்பட்டிணத்தின் சுவர்கள் உயர்ந்துகொண்டிருந்தன. சிற்பிகள் நவீன சிற்பங்களை கல் தூசிப்புகை சூழ செதுக்கிக் கொண்டிருந்தனர். சிறு உணவங்கங்கள் அந்தரப்பட்டிணத்தில் மூலைகளில் தெரிந்தன. அந்தரப்பட்டிணத்துக்கு ஏறி வந்துவிட்டேன். ஆனால் இறங்கும் வழி தெரியவில்லை. கீழே குதிக்கும் அளவுக்கான உயரத்திலும் இல்லை. மதிய வெயில் ஏறியபோது மேற்பார்வையாளர்கள் கட்டுமானத்திலிருக்கும் அந்தரப்பட்டிணத்தைப் பார்வையிட வந்தனர். ஒரு தண்டனை போல, ஒரு திறந்த சிறையைப் போல அந்தரப்பட்டிணம் ஆகிவருவதை உணர்ந்தேன். அந்தரப்பட்டிணத்தின் தொழிலாளிகள் எல்லாரும் நேசபாவமின்றி அன்னியமாக அச்சமூட்டக்கூடியவர்களாகத் தெரிந்தனர். இருப்பதிலேயே சாமானியமாகத் தெரிந்த ஒரு தொழிலாளியிடம் தரையில் இறங்குவதற்கு வழி உண்டா என்று கேட்டேன். பீடி குடித்துக் கொண்டிருந்த அவரிடம் ரகசியத்தைக் கேட்கும் குழைவைச் சேர்த்தேன். இங்கே மேலேறி எளிதாக வந்துவிடலாம். எனக்குத் தெரிந்தவரை இறங்குவதற்கு வழியே இல்லை என்றார். வீட்டில் என் அம்மா தேடிக்கொண்டிருக்கும் ஞாபகம் உறுத்தலாக ஆரம்பித்தது. நான் அந்தரப்பட்டிணத்தில் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டேன். வீட்டுக்கு திரும்பிப் போகவேண்டும். அம்மா தூர தொலைவில் வீட்டில் என்னைக் கடிந்தபடி காத்திருக்கிறாள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிதொலைந்து போகும் கனவுகளை வேறுவேறு விதமாக கண்டுவருகிறேன். தொலைந்துபோகும் எல்லா கனவிலும் அம்மா வீட்டில் காத்திருப்பது மட்டும் மாறாமல் தொடர்கிறது.
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
மிகவும் அருமையான நான்,,,