டில்சா ஒட்டா கவிதைகள்

தமிழில் : கு.அ.தமிழ்மொழி

01
நீ இறந்துவிட்டால்
இருமுறை கண் சிமிட்ட முயற்சி செய்து பார்
நான் உறுதியாகக் கூறுகிறேன்
இரண்டாம் முறை
நம்பமுடியாத வகையில் இருக்கும்

02
எல்லாம் மாறிக்கொண்டு இருக்கும் என்பதால்
நான் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகிறேன்
நீ அறிவாய்
நான் உன்னைப் பற்றியும் பேசுவேன்
நாம் உலகின் மையம்
என்னை நம்பு
இதுவே நீ தொடங்குமிடமும்
நான் முடியுமிடமும்

03
நான் வன்முறையை வெறுக்கிறேன்
அது அழகானதாக, புதுமையாக இருந்தாலும் கூட
என் மோசமான கனவுகள் நனவாகும்போது
அறிவியல் எனக்கு அச்சமூட்டுகிறது
உடனே கவர்ந்திழுக்கக்கூடிய
மாற்றியமைக்கப்பட்ட என் உடலைக் கூர்ந்து கவனிக்கிறேன்
அதுவே அழியக்கூடியதும்
நீடித்திருக்கக்கூடியதும்
‘நிலைத்திருக்கக் கூடிய எதிர்காலம் என்று எதுவுமில்லை’
என்று தட்டையான உச்சரிப்புடன்
கண்ணாடியின் முன் சொல்லும் அந்த கணத்திற்குச் செல்கிறேன்

இப்போதெல்லாம் நான் அலாரத்தை நிறுத்தும்போது
அதை இன்னும் கேட்க முடிகிறது
அது மட்டுமே நான் வெறுப்பது

நான் பெரிதாக அச்சப்படாத ஒன்றுண்டு
அது நீண்ட கவிதையாக இருக்கமுடியாது
வேறெதுவும் இருக்க முடியாது

04
என்றென்றும் காதலோடு இருப்போம் என்று காதலர்கள் சொல்லும்போது
அந்தக் காதல் அப்படியே இருக்கும் என நினைக்க விரும்புகிறேன்
அது அவர்கள் பிரிந்தாலும்
சில நேரம் வெறுத்தாலும்
ஒருவரையொருவர் மறக்கலாம்
அருகாமையை இழக்கலாம்
கடந்த காலத்திற்குச் செல்ல நினைக்கலாம்
ஆனால் காதலைக் கண்டடைய முடியாது
அது நமக்கு அப்பாற்பட்டு
இதயத்தில் இதற்காக ஒப்படைக்கப்பட்ட அறையில் உறைந்துபோயிருக்கும்
அனைத்தையும் நினைத்துப் பார்த்தால்
இப்படி இருப்பதுதான் சிறந்தது எனப் புரியும்
நாம் ஓர் இனமாக அழித்துவிட்டோம்

05
தாயின் முகத்தைக் குழந்தை முதல்முறை பார்க்கிறது
விண்வெளிவீரர் அண்டத்திலிருந்து பூவுலகைக் காண்பது போல
அந்த சீரற்ற நிலப்பரப்பில் தன்னையே பார்க்கிறார்
ஈர்ப்புவிசை அவரைப் பிடித்து வைத்திருக்கிறது
அவர் கயிற்றை விட்டுவிட்டு எல்லையற்ற பரப்பில் தொலைந்துபோகிறார்

நான் மறுபடி பிறக்க, தன்நினைவை இழக்கிறேன்
என் பெயரை அறிய, என் நினைவுத்திறனை இழக்கிறேன்
இது முழுமையுணர்வு
ஏற்கனவே என் இதயம் இங்கில்லை
நாம் சொர்க்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு பறவையின் முட்டையில் இருந்து
வெளிவந்திருக்கிறோம்
அதனால் அழகு என்னுடன் வளரட்டும்

௦௦௦

ஸ்பானிஷ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு ஃபரிட் மடுக்

ஃபரிட் மடுக் – ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வருகிறார். This Isa Nice Neighborhood, My Daughter La Chola, The Real Horse, Moon Mirrored Indivisible ஆகியவை இவரின் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்.

டில்சா ஒட்டா

பெருவில் 1982 இல் பிறந்தார். இவர் காட்சிக் கலைஞரும் ஆவார். திரைப்பட இயக்கத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இந்தக் கவிதைகள் The hormone of darkness என்னும் இவருடைய நூலில் இடம்பெற்றவை.

உரையாடலுக்கு

Your email address will not be published.