/

உயிர் பிழைத்தோரின் குற்ற உணர்வு பிரதி -ஸ்லாம் அலைக் : இளவேனில்

0.

தொழில்மயமாக்கல் உருவாக்கிய முதலாளித்துவம் அதனுடாக உருவான காலனியம், ஐரோப்பிய காலனியம் உலகமெங்கிலும் தோற்றுவித்த தேசியவாதம் என அனைத்து ஐரோப்பிய பொருள்முதல்வாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த மூன்று நான்கு நூறாண்டுகளில் பல்லாயிரம் போர்களையும், பல கோடி போர்க் கொலைகளையும், எண்களில் அடங்கா உடல்/மன அங்கவீனர்களையும், புலம்பெயர்ந்தவர்களையும் தோற்றுவித்திருக்கிறன. போர்களின் வன்முறைகளை விட்டு மீண்டவர்களின் மனதில் அழியாத நினைவுகளாக பதிந்துவிடும் போர், காலப்போக்கில் குற்ற உணர்வாக பரினமித்து மரணம் வரை அழமாக நிலைத்து விடுகிறது. அப்படி நிலைத்திருக்கும் குற்றவுணர்வுகள் மனிதர்களின் வாழ்வில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி, மொத்த வாழ்வையும் குற்றவுணர்வின் இருப்பாக மாற்றி விடுகின்றன.

குற்றவுணர்வு (guilt) எனும் ஆய்வு நூல் தொகுப்பில் வெளியான ஜான் பெர்னமெனின் கட்டுரை, போர் மனிதர்களில் உருவாக்கும் குற்றவுணர்வை வரலாற்று குற்றவுணர்வு, உயிர் பிழைத்தோர் குற்றவுணர்வு என்று இருவகைப்படுத்துகிறது. போர்க்குற்றமிழைத்தவர்களின் குற்றவுணர்வு, வரலாற்று குற்றவுணர்வாகவும் (historical guilt), போரினால் பாதிக்கப்பட்டு தப்பித்தவர்களின் குற்றவுணர்வு உயிர்பிழைத்தோர் குற்றஉணர்வு (survivor guilt) என்றும் வரையறுக்கிறார் ஜான் பெர்னமென்[1]. நான் ஏன் இன்னும் இருக்கிறேன் எனும் ஆய்வு கட்டுரையின் ஆசிரியர்கள் போரினால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வு மிகப் பெரிய தாக்கத்தை – குறிப்பாக உளவியல் சிக்கல்களை/நோய்களை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் [2].

போர் பற்றிய பொதுப் பார்வை என்பது சாவு கணக்குகளாக, வெற்றி தோல்வி பெருமை பீற்றல்களாக, மெய்சிலிர்க்கும் வீர கதைகளாக அல்லது ‘உச்சு’ கொட்ட தோதுவான பரிதாபத்துக்குரிய நிகழ்வாக மட்டுமே பார்க்கப்படும் மனித சமூகத்தில், போர் உற்பத்தி செய்யும் மனரீதியான அங்கவீனங்கள் பற்றிய உரையாடல்கள் பொது வெளியில் அல்லது கலை படைப்புகளில் மிக குறைந்த அளவிலே நிகழ்கின்றன.

சமகால போர்களில் உயிர்பிழைத்து புலம்பெயர்ந்த அனேகம் பேருக்கும் பொதுவான மற்றும் மிக முக்கியமான உளவியல் சிக்கல்களில் ஒன்று “உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வு”. உலகில் நடக்கும், நடந்த போர்கள் அனைத்தும் கணக்கில் அடங்கா மனிதர்களில் உயிர்ப்பிழைத்தோர் குற்றவுணர்வை உற்பத்தி செய்து அவர்களின் வாழ்வில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது/தியது. பலஸ்தீனம், ரூவாண்டா, உக்ரேன், ஈழம், வியட்நாம் என்று அனைத்து போர்களும், போரிலிருந்து தப்பித்தவர்களுக்கு அருளும் கொடையான “உயிர்பிழைத்தோர் குற்றஉணர்வு”, குறித்த பல நூறு ஆய்வுகள் இருக்கின்றன. அனைத்து ஆய்வுகளும் பொதுவான ஒரு முடிவுகளையே உறுதி செய்கின்றன அது, “உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வு” புலம்பெயர்தவர்களின் வாழ்வில் மரணம் வரை உடன் வரும் ஒன்று, அது மனிதர்களை துயர் நிலையிலே இறுதி வரை வைத்திருக்கிறது. மேலும் அது மனிதர்களை புலம்பெயர் சூழல்களில் தனித்துவிடப்பட்டவர்களாய், சமூக அடையாளம் இல்லாத ‘சமூக அனாதைகளாய்’ மாற்றி விடுகிறது.

1.

தமிழ் கலை வெளியில், இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை வெளியான போர் இலக்கியங்கள் அனைத்தும் பெருமைசார் விழுமியங்களையும் மிகப்படுத்தல்களையும் கொண்ட கிளர்ச்சியூட்டும் கதைகளாகவே இருந்தன அல்லது அதிகாரம்/அரசு சார்ந்த கதைகளாக இருந்தன. எண்பதுகளுக்கு பின்னான ஈழ இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வெளியில் போரின் துயர் கதைகளையும் போருக்குளான மனித அனுபவங்களை பேசின. 2009ல் போர் நிறைவுற்று பல ஆண்டுகள் கழித்தும் அனேக ஈழ இலக்கியங்களின் தளங்களும் ஈழம் எனும் புவி நிலையை சுற்றியே நிகழ்ந்தன.

போர் உற்பத்தி செய்த உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வு படைப்பாளிகளின் வெளிகளை “ஈழம்” எனும் புவியியல் அமைப்புக்குள் நிறுத்தியது என்பது மட்டுமல்லாது போரின் உளவியல் மற்றும் புலம்பெயர் சிக்கல்களையும் நிராகரித்தன. அல்லது மரணத்தை விட புலப்பெயர் வாழ்வு நிம்மதியானது என்ற முன்முடிவை ஏற்றுக்கொள்ளும் சூழலுக்கு போர் கதைகளை எழுதியவர்கள் தள்ளப்பட்டனர். குறிப்பாக ஈழத்து போரை உச்சகட்ட கிளர்ச்சி நிகழாவாக அவதானித்த தமிழ்நாட்டு வாசகர்கள் குருதி கரைப் படிந்த, துவக்குகளும், வெடிகுண்டுகளும் நிறைந்த ஈழக் கதைகளையே நுகர விரும்பினர்.

இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட போர் இலக்கியங்கள் பலவும் ஈழத்தை கடந்த குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க, பசுபிக் நிலங்களிலிருந்து எழுதப்பட்டவையே என்றாலும் கதைகளின் களம் ஈழத்தை கடக்காமலே இருந்தது. ஈழத்தை விட்டு பல தசபதங்களுக்கு முன் பிரிந்தாலும் மனித மனம் உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வின் நினைவேக்கங்களின் வழியே திரும்ப திரும்ப போர் மையத்திலிருந்தே போரை அணுக எத்தனித்தது, அப்படி எழுதுவது மட்டுமே போர் இலக்கியங்களாக அல்லது உலக இலக்கிய அளவீடுகளுக்கு நெருக்கமான இலக்கியங்கள் என்று நுகரப்பட்டன. போர் எப்போதும் அதன் மையத்தில் முடிவடைந்து விடுவதில்லை அது கடல் கடந்து போர் நினைவுகளை சுமந்து செல்லும் மனிதர்கள் செல்லும் இடங்கள் அனைத்துக்கும் தன் மையத்தை விரிவடைய செய்கிறது. இந்த கால இடைவெளியில் புலம்பெயர் சிக்கல்களை மிக குறைத்த அளவிலான இலக்கியங்களே அனுகின, அச்சிக்கல்களை அணுகுவதற்கு தடையாக உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வு இருந்தது என்று சொல்ல முடியும்.

2009ல் போர் முடிந்து ஒரு தசாபத்துக்கு பின்னான ஈழ இலக்கியங்களில் போரின் புவியியல் எல்லைகள் ஈழத்தை கடந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கும், பசிபிக்கும் விரிவடைந்து, போரையும் புலம்பெயர் வாழ்வையும் அதன் சிக்கல்களை கதைகளாக வெளிப்படுத்துகின்றன.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் என்னவெனில், வரலாற்று குற்றவுணர்வுக்கு முதலாளிகாலான, அதாவது உலகமெங்குமான போர்களை நடத்தும் அதிகார மையங்களுக்கும், அரசுகளும் – குறிப்பாக மேற்குலகுக்கு, வரலாற்று குற்றவுணர்வு என்பது ஒரு சதமும் இல்லை என்பது தான். ஆனால் போரின் வன்முறைக்கு உள்ளாகி அதிலிருந்து தப்பிக்க எத்தனித்த தனி மனிதர்கள் உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வில் உலன்று மடிகின்றனர்.

2.

ஷோபாசக்தியின் கதைகளை பாக்ஸுக்கு முன்பு பாக்ஸுக்கு பின்பு என்று இரு முனைப்படுத்த வேண்டி தேவையிருக்கிறது எனக் கருதுகிறேன். அதன் காரணம் கதை சொல்லல்முறை அல்லது அழகியல் என்பதாக இல்லாமல், கதைகளும் கதை மாந்தர்களும் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதாக இருக்கிறது.

ஷோபாசக்தியின் கதை சொல்லல் முறை, நவீன கதை சொல்லும் அழகியலில் இருந்து பெரிதாக மாறுப்படவில்லை அல்லது அவர் நவீன கதைகளை தான் எழுதுகிறார். ஆனால் அவை தற்கால post truth இலக்கியங்களில் கூறுகளை கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரின் சமீபத்திய புனைவுகளில் வெளிப்படும் post truth கூறுகள் நிகழ்கால நிறுவனங்களை அதிகார அமைப்புகளை நிராகரிக்க எத்தனிப்பவையாக இல்லாமல் அவற்றை கேள்விக்கு உட்படுத்தி அதில் சமாதானத்தை தேட முனைகின்றன – ஒரு post truth பிரதி கண்டிப்பாக அமைப்புகளை நிராகரிக்க வேண்டுமா எனும் கேள்விக்கு எவ்விதமான பதில்களையும் சொல்ல முடியும் என்றாலும், அது தனித்த ஒரு உரையாடலாக இருக்கக் கூடும்.

பாக்ஸ் புனைவாக கொடுத்த வாசக அனுபவம் என்பது ஷோபாசக்தியின் பிரதிகளில் முற்றிலும் வேறானது. நவீன கதை சொல்லும் முறையை விடுத்து, புதிய வடிவங்களில் எழுத முனைந்ததின் வெளிப்பாடு தான் பாக்ஸ் கொடுத்த வாசக அனுபவம். கலாமும் வெளியும் நெகிழ்வாகி அனைத்து திசைகளிலும் வளையும் தன்மையில் பயணித்த கதை அமைப்பை பாக்ஸ் கொண்டிருந்தாலும் அதற்கடுத்தான இச்சா மற்றும் ஸ்லாம் அலைக் மீண்டும் நவீன கதை சொல்லும் முறையை பின்பற்றி உருவாகி இருக்கின்றன.

பாக்ஸ்க்கு முன்னான கதைகளில் ஷோபாவின் கதை மாந்தர்கள் குறிப்பாக கதை சொல்லிகள் எம்ஜியாரின் சாயலை கொண்ட எளிதாக எதிரில் இருப்பவரை விழ்த்தும் நாயகர்களாகவே பவனி வந்தனர். அதுவே தங்க ரேகை, கண்டி வீரன் வரையான கதைகளில் நிகழ்ந்தது. தங்க ரேகை கதையில் எதிர் முனையில் பயணிக்கும் இரண்டு கதாப்பாத்திரங்கள் ஒரு ரொட்டியை பகிர்ந்து கொள்ளும் இடத்தில், அதை மற்ற மனிதருக்கு பகிர்ந்து கொடுக்கும் பாத்திரம் வாசகரின் நினைவேக்கம் வழியாக சினிமா நாயகரின் பின்பதை அடைகிறார்.

ஆனால் பாக்ஸ், இச்சா மற்றும் ஸ்லாம் அலைக் விறுவிறுப்பான நாயக கதை சொல்லல் முறையை விடுத்து அதிகப்படியான பொறுமையுடன் கதைகளை கூற ஆரம்பித்தன. அந்த கதை கூறல் முறையில் முதன் முறையாக தமிழ் இலக்கியத்தில் குற்றவுணர்வுப் பிரதிகள் உருவாக தோன்றின.

இச்சா மற்றும் ஸ்லாம் அலைக் இரண்டிலும் அதன் தொடக்க பகுதிகள் மிக தொய்வான ஒரு கதை சொல்லும் முறையை கொண்டிருந்தன. அதற்கு இரண்டு காரணங்களை கூறமுடியும். ஒன்று ஆசிரியரின் தேர்வாக இருக்கக்கூடும். இரண்டு, 90களுக்கு பிறகான ஈழ நிலத்தை இரத்தமும் சதையுமாக எழுத எழுத்தாளருக்கு இருக்கும் இடர்பாடுகளை உணர் முடிடுகிறது . அது கதை ஆசிரியரின் புலம்பெயர்தல் காரணமாக இருக்கக்கூடும். இந்த இடறல் வாசிப்புபில் ஒருவித சலிப்பை உற்பத்தி செய்கிறது.

3.

ஸ்லாம் அலைக், தமிழில் எழுதப்பட்ட முழுமையான முதல் உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வு பிரதி. வரலாற்று குற்றவுணர்வுக்கும் உயிர்பிழைத்தோர் குற்றவுணர்வுக்கும் இடையேயான இடைவெளியே கதைக் களமாக நிகழ்கிறது. போர் உருவாக்கிய நிச்சியமின்மையை விட்டு தப்பிக்க தொடர்ந்து அலைந்துக்கொண்டே இருக்கும் ஒரு தனி மனிதர், போரிலிருந்து மீள, விக்டோரிய பின்-காலனிய உலகம் வரையறைத்து வைத்திருக்கும் அனைத்து அறங்களையும் மீறுகிறார், அப்படி மீறுவது ஒன்றே உயிர்வாழ்வதற்கான வழியாக இருக்கிறது. திருடுதல, ஏமாற்றுதல், குடும்ப உறவுவின் மகத்துவங்களை தூக்கி எறிதல், சக பயணிகளின் சாவுகளை தாண்டி ‘தப்பிக்க’ விளைதல் என்று கதை முழுவதும் போர் செல்லரித்த சமூகத்தின் அடையாளமாக மையப் பாத்திரம் வருகிறது.

நாகரீக மனித சமூகத்தில், இறப்பு என்பது எளிதான விடயமாக, வாழ்தல் என்பது அதிகம் துயரமானதாக, சுமையானதாக இருக்கிறது. ஒரு மனிதரின் சமூக இருப்பு என்பது அவரின் மனித அடையாளங்களை சிதைத்து அவரை வேறு ஒன்றாக ஆக்கி விடுகிறது – அகதியாக, திருடராக, அனாதையாக, கொலை குற்றவாளியாக என்று பல்வேறு அடையாளங்களையும் சூட்டி மகிழ்கிறது. இலங்கையை விட்டு வெளியேறிய நாள் முதல் “வந்தேறி” எனும் சுமையுடன் ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் திரியும் ஸ்லாம் அலைக்கின் கதையை உயர்ப்பிழைத்தோர் குற்றவுணர்வு விடாது துரத்திக்கொண்டே இருக்கிறது.

மறுப்பக்கம் போர்களுக்கும், வெளியேறுதல்களுக்கும் காரணமாக இருக்கும் அதிகார நிறுவனங்களும், அரசுகளும் ஒரு சதம் கூட வரலாற்று குற்றவுணர்வு என்பது இல்லாமல், நீதி மற்றும் விதிகளின் காகித பக்கங்களுக்குள் ஒளிந்துக் கொள்கின்றன. “மனித உரிமைகள்” அமைப்பு என்று பெருமை பீற்றிக்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளை திறக்ககூட குருதியும் மரணமும் தேவையானதாக இருக்கிறது. ஆனால் இது எதுவும் இந்த நிறுவனங்களை குற்றவுணர்வு கொள்ள செய்வதில்லை – எப்போதும் போல் அதிகாரங்களின் செவிகளுக்கு உயிர்களின் குரல்கள் கேப்பதில்லை.

ஒரு சட்டவிரோத குடியேறி தனது நாளின் அனேக காலத்தை வாழ்விட உரிமை வேண்டி விண்ணப்பங்களை எழுதுவதிலும், நிராகரிப்பு கடிதங்களை பெறுவதிலுமே கழித்துவிடுகிறார். அவ்வாறாகவே ஸ்லாம் அலைக்கின் நாயகரும் எந்த மாற்றமும் இல்லாமல் தனது ஐரோப்பிய வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் “வெள்ளை” உறையிட்ட, அரசு முத்திரை பதித்த நிராகரிப்பு கடிதங்களை நடுக்கத்துடன் பெறுவதிலும், நிராகரிக்கப்பட்ட அகதி விண்ணப்பங்களையும், மேற்முறையுட்டு கடிதங்களையும் தமிழுக்கும் – பிரஞ்சுக்கும் மொழிபெயர்ப்பு செய்யவதற்கும், சட்டவிரோதமான கூலி வேலைகளில் கிடைக்கும் சொற்ப வருவாயையையும் இழக்க நேரும் வாழ்வை தான் மேற்குலகம் ஒரு ஏதிலிக்கு அருளுகிறது.

புலம்பெயர் சிக்கல் தமிழ் சமூகத்தில் “அவருக்கு என்ன, பிரான்ஸ் போயிட்டார், கனடா போயிட்டார், ஆஸ்திரேலியா போயிட்டார்” எனும் உயர்வு நவிற்சி புரிதலை உருவாக்கி இருக்கிறது. அதாவது போரிலிருந்து தப்பித்து மேற்குலகம் சென்று விட்டால் துயரம் அனைத்தும் முடித்து, வாழ்க்கை ஏடன் தோட்டமாக மாறிவிடும் எனும் – காலனியத்தின் வழியாக கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்குலகம் குறித்த அதீத கற்பனையின் வாயிலாக, இக்கருத்துரு பரவியிருக்கிறது. மேற்குலகம் குறித்த ‘சொர்க்க’ கற்பனைகளை தகர்த்தெறிகிறது ஸ்லாம் அலைக்.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்’ எனும் முழக்கத்தின் சொந்த நிலமான பிரான்ஸ் பற்றிய மெய்மறக்கச் செய்யும் கற்பனைகளை புறம்தள்ளி, ‘லா பாரி’யின் வறுமையான, அடக்குமுறைகளும், வன்முறைகளும், புறக்கணிப்புகளும், ஏற்றத்தாழ்வுகளும், பகுப்பாடுகளும் நிரப்பிய, மனிதமற்ற, அருவெறுக்கத்தக்க முகத்தை முன்வைக்கிறது. யாருக்கான சுதந்திரம்? யாருக்கான சமத்துவம் யாருடனான சகோதரத்துவம்? எனும் கேள்வியை எழுப்பும் கதை சொல்லியின் வாழ்வில் ‘சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும்’ இறுதி வரை தீண்டப்படாத ஆப்பிளாகவே இருக்கிறது.

ஸ்லாம் அலைக், போரினால் சொந்த நிலத்தை இழந்த தனி மனிதர்களில் தப்பிழைத்ததின் குற்றவுணர்வு கொடுக்கும் துயரமும், அது உருவாக்கும் சரீர மற்றும் உளவியல் வன்முறைகளும், அதே நேரம் போர்களை நடத்தும் அதிகார நிறுவனங்கள் தங்களினால் பல கோடி மனிதர்கள் வாழ்வதற்கு வழியின்றி இந்த உலகில் தனித்துவிடப்பட்டு அலைந்து கொண்டிருப்பது பற்றி, கொல்லப்படுவது பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் அனைத்தையும் காகிதங்களில் இருக்கும் தரவுகளாய் கடப்பதில் இருக்கும் முரணில் அரசியல் புனைவாக முழுமைக் கொள்கிறது.

முடிவுக்கு முன்:

போரினால் புலம்பெயர்ந்தவர்கள் போரை விட்டு மட்டும் தப்புவதில்லை. ஒரு நல்ல நாளில் விழித்தெழுவதற்காக, அவர்களுக்கும் அவர்களின் துயரத்திற்கும் இடையே போதுமான நேரத்தையும் தூரத்தையும் உருவாக்கும் வரை அவர்கள் ஆயிரம் நினைவுகளிலிருந்து தப்பிக்க வேண்டியிருக்கிறது – நாடியா ஹாஷிமி.

  1. ஜான் பெர்னமென்; குற்றவுணர்வு;ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம்; 2022; 77-98
  2. ஜெசிந்தா கோவியாஸ், சுதர்ஷனா குமாரசுவாமி; இன்றைய இளைஞர்கள் மற்றும் மனநலம்; ஸ்ப்ரிங்கர்;101–117
இளவேனில்

இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.