ஈயூனிஸ் டி சௌசா சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர். சார்லஸ் பூக்கோவ்ஸ்கியின் அப்பட்டமான விமர்சனத் தன்மை, மேரி ஆலிவரின் ஈரத்தன்மை கலந்த சிறிய கவிதைகளை எழுதியவர். பூனைகள், தெரு நாய்கள், பருந்து, சிறுத்தை, காகம், கிளி என பிராணிகளும் பறவைகளும் ஆண் பால், பெண் பாலாகவே பிரித்து இவர் கவிதைகளில் சுட்டப்படுகின்றன. மூன்று வயதில் தந்தையை இழந்த ஈயுனிஸ் டி சௌஸாவை அப்பாவின் மரணம் மிகவும் பாதித்துள்ளது. சுயசரிதைத் தன்மை கொண்ட இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். தோழிகள், தோழர்கள், கணவர்கள், காதலர்கள் கதாபாத்திரங்களாக நேராகவும் மறைமுகமாகவும் உலவுகின்றனர். மற்றமையை, மற்ற உயிர்களுடனான பிணைப்பைக் கொண்டாடுவதோடு மரணத்தையும் விசாரித்தபடி இருக்கும் கவிதைகள் இவருடையவை.
பெண்களுக்கு அறிவுரை
காதலர்களின் மற்றமையோடு சமாளித்துப் போகக் கற்றுக்கொள்வதற்கு பூனைகளை வைத்திருங்கள். மற்றமை என்பது எப்போதும் புறக்கணிப்பாக இருக்க வேண்டியதில்லை. பூனைகள் தேவையான வேளையில் கழிக்கும் தட்டுகளுக்கு வருகின்றன.. பூனைகள் ஜன்னலுக்கு வெளியிலுள்ள எதிரிகளிடம் மூர்க்கம் கொள்வதில்லை. பூனைகளின் மகத்தான பச்சைக் கண்களிலுள்ள சாசுவத விந்தை தனிமையில் சாக உங்களுக்குக் கற்றுத்தரும். 000
எனது நாய் லௌட்டின் நேசத்துக்காக…
ஊளையிடும் குட்டி நாயாக எனது வாசல்படியில் விடப்பட்டது. நடைக்கு அழைத்துச் செல்வதற்காக காலை நான்கு மணிக்கு எழுவேன். மிகுந்த நட்பான நாய் அவன், கவட்டைகளை முகர்ந்துபார்ப்பதில் விருப்பமுள்ளவன். அண்டை வீடுகளைச் சேர்ந்த கௌரவமான பெண்கள் அவனைத் தவிர்க்கிறார்கள். அதனால் ஆண்களும். லௌட் மிகக் கூடுதலான ரகசியங்கள் அறிந்தவன். 000
கிளிக்குஞ்சு
தானியப் பெட்டியில் உள்ள குஞ்சுக்கிளி வேண்டாதவளைப் பார்ப்பது போல என்னை உறுத்துப் பார்க்கிறது தானியங்களை உனக்கு அளிப்பது யார் தெரியுமா குட்டிப்பையா? குஞ்சுக் கிளியிடமிருந்து பதிலே இல்லை. அது இன்னமும் ஆங்கிலம் பழகவில்லை. நான் இன்னும் கிளி பழகவில்லை.
000
எனக்குச் சொல்
தேதி, நேரம், இடம் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிடு மரியாதைக்குரிய மரணமே பாவ வாழ்க்கை நிரம்பிய என் பேண்டிஸ்களை நான் தேடவேண்டும் பாத ஒப்பனை சிகிச்சைக்கு நேரம் கேட்க வேண்டும். 000
நிலா
வடிவம் கம்பீரம் குலைய அறையப்பட்டு வடுபட்டு கூம்பு கோபுரங்களின் பின்னால் தனது முகத்தை மறைத்து நிற்கிறாள் நிலா. மேலெழுந்து உதயமாக அவளுக்கு அவசரமேதும் இல்லை: அவள் கடக்கவேண்டும் ஒரு பாலைவனத்தையும் நொறுங்கிய குன்றுகளின் வரிசையையும். 000
நிலைத்திருப்பது
பறந்தோடிச் சென்றவை மூன்று பெண் கிளிகள் தான். ஆண் கிளியோ வீட்டில் நிலைத்துவிட்டது. கையிலும் பாதத்திலும் காத்திருக்க விரும்புவதைப் போல. அதில் எங்கேயோ ஒரு பாடம் இருக்கிறது.
000
போவது
அவனது சவப்பெட்டி இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப்படும்போது நீ போகிறாய், அவள் சொன்னாள். அவன் பதிலளிக்கவில்லைதான். அவன் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. கடமுடவென்று வேர்க்கடலைகளைக் கொறித்தபடி மாலை செய்தித் தாளை மேய்ந்துகொண்டிருந்தான். காலை உணவின் போது முட்டையின் மஞ்சள் கரு அவனது தாடையில் வழிந்தது. 000
தாய் காகம்
அம்மாப் பறவை தனது அலகால் ஆண் குஞ்சின் இறகுகளைக் கோதுகிறது ஆண்குஞ்சு குனிந்து பணிகிறது. அங்கே! அது அந்த நாளுக்குத் தயாராகிறது. கூட்டிலிருந்து எனது ஜன்னலுக்கும் ஜன்னலிலிருந்து கூட்டுக்கும். அதன் வாய் ஒரு பெருங்குகை. எதுவாகிலும் போய்க்கொண்டேயிருப்பது. 000
மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் என் சாம்பலை எறியுங்கள் என் வீடாகவே அவை தோன்றியிருக்கின்றன. சிறுத்தைப் புலிகள் கவிதையின் ருசியை அறியத் தொடங்கலாம். காகங்களும் பருந்தும் தங்கள் குரல்களை மெருகேற்றிக் கொள்ளப் பழகலாம். மூடுபனியும் அருவிகளும் புற்களும் மலர்களும் பருவம் தப்பித் தோன்றலாம். 000
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
சமகால இந்திய ஆங்கிலக் கவிஞர்களில், தன் வாழ்நாள் காலத்திலேயே கவனிப்புக்கும் விமர்சனப் பார்வைக்கும் உள்ளானவர். தனி அடையாளத்தையும் உலகையும் கொண்ட கவிஞர். கோவாவைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் 1940-இல் பிறந்து மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, தனியாகவே வாழ்ந்து 2017-இல் மறைந்தவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.