எதைத்தான் எழுத வேண்டும்? : ஹருகி முரகாமி

தமிழாக்கம் - சஜன் பரந்தாமன்

நான் இளைஞர்களுடன் கேள்வி-பதில் (Q&A) நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அவர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பது, ‘ஒரு நாவலாசிரியராக உருவாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்ன வகையான பயிற்சி தேவைப்படுகிறது? என்ன பழக்கவழக்கங்கள் வேண்டும்?‘ இந்தக் கேள்வி உலகின் எந்த ஓரமாக நான் சென்றாலும் எழுகிறது. இது உலகம் முழுவதும் எழுத்தாளராகவேண்டுமென்று ஆசைப்படும் நபர்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது. “சுயவெளிப்பாடு” என்ற எண்ணத்தில் ஈடுபட நினைப்பவர்கள் பலர். ஆனால் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது எளிதானது அல்ல.

உண்மையில், எனக்கே நான் இப்போது வரை எப்படி வந்தேன் என்பது தெளிவாகவே தெரியவில்லை. சிறு வயதில் நான் ஒரு நாவலாசிரியராகவே ஆகவேண்டும் எனத் திட்டமிட்டு செயல்பட்டதில்லை. எந்த ஒரு திட்டமோ பயிற்சியோ கூட இல்லை, ஏதேனும் குறிப்புப் புத்தகங்களில் எழுதிவைத்தலும் இல்லை. என் வாழ்க்கையில் பல விஷயங்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் நடந்துகொண்டே இருந்தன. அதில் அதிர்ஷ்டத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது அதுதான் உண்மை என்று சொல்லலாம்; அது களைப்படையவும் செய்யும் உண்மை.

கேள்விகேட்ட இளைஞர்களின் உணர்வுமிக்க பொலிவான முகங்களைப் பார்த்துவிட்டு, “நான் தெரியாமல்தான் வந்தேன், அதிர்ஷ்டம் இருந்தது, உங்களுக்கும் அதே மாதிரி நடக்கலாம்” என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்ல முடியாது. அது கொஞ்சம் அநாயாசமாக இருக்கும். அதனால், இந்தக் கேள்விக்குப் பொறுப்புடன் ஒரு பதிலை நான் உருவாக்க முயற்சிக்கிறேன். அதில் முதலாவது:

எதிர்காலத்தில் நாவலாசிரியராக வருவதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது – அதிகளாவான நாவல்கள் வாசிப்பது; இது சாதாரணமான விஷயம்தான், ஆனால் மிக மிக அவசியமான பயிற்சி. நாவலை எழுத விரும்புகிற ஒருவருக்கு முதலில் அது எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை உடல் மட்டத்தில் உணர வேண்டும். இது “முட்டையை உடைக்காமல் ஆம்லேட் செய்ய இயலாது” என்ற பழமொழி போலவே தெளிவான ஒன்று.

இன்னும் சிறப்பாக, இளம் பருவத்திலேயே அதிகமான நாவல்கள் வாசிக்க வேண்டும். நன்றாக இருந்தாலும், இல்லையென்றாலும், மோசமானதாயினும் – எதையும் வாசிக்கத் தயங்காதீர்கள். கதைகளை உள்வாங்குங்கள். உயர்ந்த இலக்கியங்களையும், நடுத்தரங்களையும் வாசியுங்கள். இது உங்கள் முதன்மை வேலை. இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் எழுதும் திறனை வளர்க்கும் அடிப்படை தசைகள் உருவாகும். அதற்கான அடித்தளத்தை இளம் பருவத்தில் பயிற்சிபடுத்திக்கொள்ளுங்கள்.

எழுதுவதைப் பற்றிப் பேசும் முன், நீங்கள் செய்தி, சம்பவங்கள், மனிதர்களைப் பற்றிய கவனிப்பை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது, யார் என்ன செய்கிறார்கள் என்பதை உள்ளுணர்வோடு கவனியுங்கள். ஆனால், உங்கள் கவனிப்புகள் மீது மதிப்பீடுகளை இறுக்கிவைப்பதை தவிருங்கள். தற்காலிக முடிவுகள் முக்கியமில்லை. ஒரு தருணத்தின் அனைத்து விவரங்களையும், அதனை உள்ளுக்குள் “மூலப்பொருளாக” சேமிப்பதுதான் முக்கியம்.

சிலர் மிகவும் வேகமாக மக்கள், நிகழ்வுகளை மதிப்பீடு செய்வதற்குள் முடிவுகளை உருவாக்குவார்கள். எனது அனுபவத்தில், அவர்கள் சிறந்த விமர்சகர்கள், பத்திரிகையாளர், அல்லது கல்வியாளராக மாறலாம். ஆனால் நாவலாசிரியராக இருக்கும்போது, நீங்கள் உடனடியாக அடையும் முடிவுகளை சந்தேகிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

“இது தான் உண்மை போலிருக்கிறது… ஆனால் நம்மோட முன்கூட்டிய அபிப்பிராயம் கூட இருக்கலாம்… ஒரே பக்கம் பார்ப்பது போதாது…” என்பதுபோல் ஒரு நாவலாசிரியன் எண்ணுவார். நானும் அப்படித்தான். காரணம், நான் சொல்கிற வேகமான கருத்துகள் பெரும்பாலும் தவறாகிவிடும். அதனால், சிறிது சிறிதாக, ஒரு விஷயத்தில் உடனடி முடிவுகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டிய பழக்கம் எனக்குத் தோன்றியது. இது இயற்கையான அல்ல, அனுபவங்களில் இருந்து உருவான பழக்கம்.

இந்தப் பழக்கத்தால், ஒரு மனிதர், ஒரு சம்பவம், ஒரு சூழ்நிலை போன்றவை குறித்து முழுமையான “மாதிரித் தரவுகள்” என வைத்துக்கொள்கிறேன். பின்னர் மனச்சாந்தி ஏற்பட்டவுடன், பல கோணங்களில் இருந்து திரும்பிப் பார்ப்பேன். முடிவுகள் அவசியமான தருணங்கள் என்பது எண்ணத்துக்கு மாறாக மிகக் குறைவுதான். நம்மைத் தள்ளும் வேகமான அரசியல் உலகில், ஒவ்வொரு விஷயத்தையும் உடனடியாக கருப்பு-வெள்ளை தீர்வுகளாக வடிவமைக்க முயற்சி நடக்கிறது. ஆனால் நாவலாசிரியருக்கான கடமை வேறுபட்டது.

…நாவலாசிரியருக்கான கடமை என்பது, நிகழ்வுகள் மற்றும் மனிதர்களைப் பற்றியத் தகவல்களை முடிவுகள் இன்றி ஒரு உள்ளார்ந்த இடத்தில் சேமித்துவைப்பது. உண்மையில், எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க முடியாது – நம் நினைவுத்திறனுக்கும் ஒரு வரம்பு உண்டு. எனவே, ஒரு சுருக்கப்பட்ட தகவல் சேமிப்பு முறையை நாம் பயனாக்க வேண்டும்.

அதாவது, அந்தச் சம்பவம் அல்லது மனிதர் குறித்த சில முக்கியமான, மனதில் பதிந்த விவரங்களை மனதில் வைத்துக்கொள்வது. அனைத்தையும் நினைவில் வைத்திருக்க முடியாத நிலையில், ஏதாவது ஆழமான, விசித்திரமான, நேரடியாக விளக்கமளிக்க முடியாத விசயங்களை வைத்துக்கொள்வது சிறந்தது. அது நேரத்துக்கேற்ப புதுவிதமாக வளரவும், புதிய கேள்விகளை எழுப்பவும் முடியும்.

இவ்வாறு சேமித்த விவரங்களை நீங்கள் மனதிலோ, அல்லது குறிப்பு புத்தகத்திலோ வைத்திருக்கலாம். ஆனால், எனக்கு தனிப்பட்ட விருப்பம் – நினைவுத்திறனில் வைத்துக்கொள்வது. ஏனெனில், எழுதிய பிறகு நம்மிடம் ஒரு வெற்றிட உணர்வு உருவாகி அதை மறந்துவிடக்கூடும். ஆனால், நினைவில் வைத்திருந்தால் அவை தேவையான தருணத்தில் மீண்டும் எழும்.

இது பற்றிய ஒரு சிறிய சம்பவம் எனக்குப் பிடிக்கிறது. பால் வேலரி, ஐன்ஸ்டீனை ஒரு நேர்காணலில் கேட்டார்: “நீங்கள் உங்கள் எண்ணங்களை எழுத ஒரு குறிப்பு புத்தகத்தை வைத்திருக்கிறீர்களா?” ஐன்ஸ்டீன் பதிலளிக்க: “இல்லை. எனக்கு புதிய யோசனைகள் அதிகமில்லை.” அதேபோல், எனக்கு மிகக் குறைவான தருணங்களில் மட்டுமே “இப்போது ஒரு புத்தகம் இருந்திருக்க வேண்டிய தருணம்” என எண்ணியிருக்கிறேன்.

இந்த மனப்பெயர்ச்சி அலமாரி என அழைக்கக்கூடிய நினைவகம் ஒரு நாவலாசிரியருக்கு மிகப் பெரிய வளம். ஆய்வுசெய்த முடிவுகளும், உணர்வுப்பூர்வமான சிந்தனைகளும் நாவல்களுக்குப் பயனாகாது, அவை கதையின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கக் கூடும். ஆனால், அதிலிருந்தும் வெவ்வேறு, சீரற்ற தகவல்களை உங்கள் நினைவகம் உள்ளே வைத்திருந்தால், அவை கதையில் தேவையான தருணத்தில் வெளிப்பட்டு கதை வடிவமெடுக்கும்.

எப்படிப் பட்ட தகவல்கள் என்று நீங்கள் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் மிகவும் கோபப்படும்போது திடீரென தும்ம ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான விசித்திர தகவல்களை என்னால் பரிசோதிக்க இயலாது. ஆனால், “அப்படியொரு மனிதர் இருக்கிறார்” என்று நினைத்துவிட்டு, அதை வேறு எதனுடன் ஒப்பிடாமலேயே களஞ்சியமாக வைத்துவிடுவேன். இது தான் நினைவில் கட்டிய அழகான தற்செயல் அலமாரிகள்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறியதுபோல்: “கற்பனை என்பது நினைவு.” இது மிகவும் உண்மையான கூற்று. நம்முடைய கற்பனை என்பது ஒருங்கிணைக்கப்படாத நினைவுகளின் தொகுப்பு. இந்தத் துணிக்கைகள் ஒன்றோடொன்று கலந்துபோனால், நம்முடைய உள்ளுணர்வுகள் செயல்பட்டு ஒரு நாவலின் ஆழமான உயிர் வெளிப்படும்.

நான் எழுதும்போது, இந்த நினைவுகள் நிறைந்த அலமாரிகளைத் திறந்து, தேவையானவற்றை எடுத்து கதையில் சேர்த்துவிடுகிறேன். சில பட்டறையோ, இசை அறையோ போல் – ஒவ்வொரு திருப்பத்திற்கும் சரியான பூட்டுகளைத் திறந்து, சரியான தொகுப்பை எடுத்துச் சேர்க்கிறேன். இது ஒரு சுதந்திரமான, இயங்கும் நினைவுலகமாகி விடுகிறது. இது ஒரு எழுத்தாளருக்கான பேரனுபவம்.

ஸ்டீவன் சோடர்பெர்க்கின் “Kafka” திரைப்படத்தில் ஜெரெமி ஐரன்ஸ், ஒரு மர்மமான கோட்டையில் புகும்போது, ஒரு அலமாரி முழுவதும் உள்ள அரிய மரப்பட்டுகளைத் திறந்து செல்கிறார். அந்த காட்சியைப் பார்த்தபோது, அது என் மனதின் ஒரு அமைப்பைப் போல் இருக்கிறது என்று தோன்றியது.

நாவல்களை எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் வேறு எந்த எழுத்துப் பணியிலும் ஈடுபட மறுக்கிறேன். ஏனெனில், ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒரு நினைவுப் பீடத்தைத் திறந்துவிட்டு அதிலிருந்தும் ஏதாவது எடுத்துவிட்டால், அது நாவலுக்கான முக்கியமான விஷயமாக இருக்கக்கூடும். அதுவே ஏற்கனவே வெளியானிருந்தால், அது கதையில் சேர்க்கவே முடியாது.

எனவே, நான் என் மனப்பெயர்ச்சி அலமாரிக்கு “புனைகதை மட்டும்” என்ற அடையாளச்சீட்டை தொங்கவைக்க சொல்வேன். நீங்கள் என்ன தேவைப்படும் என்று உங்களுக்கே தெரியாது, எனவே சிறிது பதற்றத்துடன், கருப்புப் பெட்டியில் சேமித்து வைத்திருங்கள். இது எனது நீண்ட எழுத்துப் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய பாடம்.

இது குறித்துப் பேசும் போது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் “E.T.” திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. அங்கு E.T. ஒரு பரிணாமமான தொடர்பு சாதனத்தை உருவாக்க, கேராஜ் இடத்தில் கிடைக்கும் பழைய பொருட்களை – குடை, விளக்குக்கம்பம், பான்களும், ரெக்கார்ட் பிளேயரும் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். அந்த சாதனம், தன் கோளுக்குத் தொடர்பு ஏற்படுத்துகிறது. அந்தக் காட்சியை நான் திரையரங்கில் பார்த்தபோது, மிகவும் ரசித்தேன்.

இப்போது நினைக்கும்போது, ஒரு நாவலை உருவாக்குவது இதேபோலதான். முக்கியமானது – நீங்கள் என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதல்ல; அதில் இருக்கும் “மாயம்”தான். அந்த மாயம் இருந்தால், சாதாரணமான வாழ்க்கை விஷயங்களும், எளிய மொழியும்கூட, ஆழமுள்ள கலையாக மாறிவிடும்.

ஆனால் அதற்கேற்ப, உங்கள் கேராஜ் காலியாக இருக்கக்கூடாது. அதில் ஏராளமான “குப்பைகள்” இருக்க வேண்டும் – அதில் தங்கம் இருக்கலாம், அல்லது ஒருநாள் தங்கமாவதற்கான வாய்ப்புகள். E.T. வந்தால், நீங்கள் தயாராக இருக்க வேண்டும்!

நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதச் சமயத்தில், என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. என் பெற்றோர் போல் ஒரு போர் அனுபவமோ, பிந்தைய காலத்தின் குழப்பங்களோ, ஏழ்மையோ எனக்கு இல்லை. புரட்சி, அழிப்பு, சமூக ஒடுக்குமுறை – எதுவும் நேரடி அனுபவமாக எனக்கு இல்லை. நான் வளர்ந்தது ஒரு அமைதியான நடுத்தர குடும்பத்தில். அதாவது, நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவன்.

எனவே, எழுதத் தேவையான “மூலப்பொருள்” எனக்கில்லை என்று எண்ணினேன். எனக்குத் தெரிந்தது, நாவலை வாசிப்பது மட்டுமே. நூற்றுக்கணக்கான நாவல்களை வாசித்தேன். ஆனால், எழுத வேண்டும் என்பதற்கான உட்சபைதல் இல்லை. எனவே, நான் 29 வயதான வரை, ஒரு நாவலை எழுதவேண்டும் என்ற எண்ணமே எனக்குப் பிறக்கவில்லை.

இன்றைய இளம் தலைமுறையும் இதே போன்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில் அவர்களிடம் எழுதவேண்டிய நிகழ்வுகள் நாம் எதிர்கொண்டதைவிடக் குறைவாகவே இருக்கலாம். ஆனால் அதற்கான தீர்வு என்ன?

எனக்குத் தோன்றும் ஒரே வழி – “E.T. முறை.” உங்கள் நினைவுக் கேராஜைத் திறந்து, உள்ளே என்ன இருக்கிறதோ, அது எவ்வளவு அர்த்தமற்றது போலத் தோன்றினாலும், வெளியே இழுத்து, வேலைக்கு விடுங்கள். அதில்தான் மாயை பிறக்கும் வாய்ப்பு. உங்கள் கையிலிருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அதனுடன் நீங்கள் உழைத்தால், நீங்கள் வெற்றிபெறலாம்.

நாவலை எழுதுவது என்பது – வேறு கிரகங்களில் உள்ள வாசகர்களுடன் ஒரு தொடர்பை உருவாக்குவதற்கே ஒப்பானது. உண்மையிலேயே!

நான் என் முதல் நாவல் “Hear the Wind Sing” ஐ எழுதத் தொடங்கியபோது, “எழுத ஏதுமில்லாத நிலையை” எழுதவேண்டும் என்று தீர்மானித்தேன். ஏதுமில்லாத நிலையே எனக்கான ஆயுதம். பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களுடன் போட்டியிட வேண்டுமானால், அதுதான் என் வழி. இது தான் “கையிலிருக்கும் பொருளால் எழுதுவது” என்பதன் அர்த்தம்.

இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதற்கான முக்கிய அம்சம் – புதிய மொழி, புதிய நடை. நான் கையாளும் விஷயங்கள் இலகுவானவை. ஆகவே, அந்த வாகனமும் இலகுவானதாக, நுட்பமானதாக இருக்க வேண்டும். பல முயற்சிகள், தோல்விகளுக்குப் பிறகு, நான் எனக்குறிய எழுத்து நடையை உருவாக்கினேன். அது மிகவும் பூரணமானது என்றும் சொல்ல மாட்டேன்; ஆனால், முதல் முயற்சிக்கு அதுவே போதுமானது.

இரு வழிகாட்டிச் சூத்திரங்களை நான் பின்பற்றினேன்:

  1. விளக்கங்களைத் தவிர்க்க வேண்டும். வண்ணமயமான பகிர்வுகள், சம்பவங்கள், காட்சிகள், வரிகள் அனைத்தையும் நாவல் என்னும் குழியில் போட்டுவிட்டு, அவை மூவினக் கோணத்தில் ஒன்றாக இணையவேண்டும்.
  2. அவை இணையும் இடம் – சீரான தர்க்கவாதத்தையும், இலக்கிய முறைகளையும் தாண்டிய இடமாக இருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு எனக்கு மிகவும் உதவியது – இசை. குறிப்பாக ஜாஸ் இசை. ஒரு ஜாஸ் இசை நிகழ்வில் மிக முக்கியமானது அந்த இசையில் பிறக்கும் ரிதம், லயம் மற்றும் இசைத்துணைகள். ஒரே 88 விசைகள் கொண்ட பியானோவிலிருந்து எந்த இசைக்கலைஞர் வாசிக்கிறாரோ அதற்கேற்ப அந்த சத்தம் மாறிவிடும். அது நாவல் எழுதுவதற்கும் பொருந்தும்.

மூன்றாவது முக்கிய அம்சம் – மேம்படுத்தல். அதாவது, கட்டுப்பாடின்றி உரையாடுவதுபோல் எழுதுவது. எனக்கு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியாது. ஆனால் இசையில் பங்கேற்கும் ஆசை உள்ளது. எனவே, எழுதும்போது நான் பியானோ வாசிப்பது போல எழுதுகிறேன். அதுவே என் எழுத்தின் உட்பொருள்.

என் அனுபவத்தின் அடிப்படையில் சொல்லவேண்டுமென்றால், “எழுதவேண்டிய ஒன்றும் இல்லை” என்ற உணர்வுடன் எழுதத் தொடங்குவது தொடக்கத்தில் சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், கதை ஓடத் தொடங்கியதும், எழுதுவது எளிதாகிவிடும். ஏனெனில், எழுதவேண்டிய கட்டாயத் தரவுகள் இல்லாதபோது, நீங்கள் உங்கள் சுதந்திரம் மூலம் எதை வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் பொருள் மெலிதானதாக இருக்கலாம், ஆனால் அதை இணைக்கும் மாயை வழிவகை புரிந்துவிட்டால், உங்கள் புனைவு இலக்கியம் ஆழமும் தளபாடமும் பெறும்.

இதற்குப் பிரதான நிபந்தனை – உங்களிடம் ஒரு உறுதியான எழுத்தாசை இருக்கவேண்டும். ஆனால், ஆரம்பத்திலேயே பெரும் பாரத்தைச் சுமந்து எழுதும் எழுத்தாளர்கள் சில நேரங்களில் அந்தக் களத்தில் சிக்கிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, யுத்தம் பற்றிய முதல் நாவல்களை எழுதும் சிலர், வெவ்வேறு யுத்தங்களை வட்டமிட்டு எழுதலாம். ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு “அடுத்து என்ன?” எனக் குழப்பம் ஏற்படலாம்.

சிலர் தங்கள் எழுத்துப் பயணத்தில் பாதையை மாறுகிறார்கள். ஆனால் அந்த மாற்றத்தைச் செய்ய முடியாதவர்கள் மெதுவாக வலிமையை இழக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, அர்னெஸ்ட் ஹெமிங்க்வே – 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் ஆரம்ப நாவல்கள் – The Sun Also Rises, A Farewell to Arms, Nick Adams கதைகள் – அனைத்தும் பறக்கிற வேகத்தில் எழுதப்பட்டவை. ஆனால் பிந்தைய எழுத்துக்கள் அப்படியான ஒளியை இல்லாமல் போனதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஏன் என்றால், ஹெமிங்க்வே தனது புனைவு எழுத்தை வெளிப்புற அனுபவங்களிலிருந்து பெற்றவர். அதனால்தான் அவர் யுத்தங்கள், விலங்கு வேட்டைகள், புள்ளுப் பந்தயங்கள் என்று வாழ்க்கையைப் பரபரப்பாக நடத்தினார். ஆனால், வயதாகி அவரின் உடல் வலிமை குறைய ஆரம்பித்ததும், அந்த அனுபவங்கள் போதாதவையாக மாறின. 1954-இல் நோபல் பரிசு பெற்ற பின், அவர் மது பழக்கத்தில் சிக்கி, 1961-இல் தற்கொலை செய்து கொண்டார். இது எனது ஊகம்தான், ஆனால் இந்த உண்மைகள் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது.

அதற்கு மாறாக, தங்கள் எழுத்து சுமைகளை வெளிப்புறத்தில் இல்லாமல், உள்ளிருந்தே உருவாக்குகிற எழுத்தாளர்கள், தொடர்ந்து எழுத இயலும். அவர்கள் தினசரி வாழ்க்கையிலிருந்தும், சாமான்யமான சம்பவங்களிலிருந்தும் கற்பனை உண்டாக்க முடியும். இவர்கள் மறுசுழற்சி ஆற்றலால் இயங்கும் எழுத்தாளர்கள்.

நான் சொல்கிறேன், யுத்தம், களரிகள், வேட்டை ஆகியவற்றில் நேரடி பங்கேற்பு தேவையில்லை என்பதல்ல. அனுபவங்கள் முக்கியம் தான். ஆனால், அவை பெரும் உல்லாச அனுபவங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகச்சிறிய, தானாக நிகழ்ந்த சம்பவங்கள் கூட, சரியாக அணுகினால், மிக பெரிய எழுத்துத் திறன்களைக் கொண்டுவரும்.

ஜப்பானிய மொழியில் ஒரு பழமொழி உண்டு – “மரங்கள் மூழ்கி, கற்கள் மிதக்கும்.” இது இயற்கைநிலைகளை மீறி நடக்கும் சம்பவங்களை குறிக்கிறது. ஆனால் புனைவுலகத்தில், அல்லது கலை உலகத்தில் இதுவே எப்போதும் நடக்கிறது. சில துளிகள், காலத்துடன் ஆழம் பெறுகின்றன; சில பெரும் பொருட்கள், காலமின்றி வெறுமையாகிவிடுகின்றன.

எனவே, “எழுத ஏதுமில்லை” என ஏமாற்றப்படாதீர்கள். உங்கள் பார்வையை சற்று மாற்றுங்கள். உங்கள் நினைவு பண்ணைகளை சற்று ஆழமாகக் கவனியுங்கள். வாசிக்க வேண்டியதை நீங்கள் காண்பீர்கள்.

மனித சாதனைகளில், சாதாரணமான விஷயங்களே, பொறுமையாக அணுகினால், செழுமையான உண்மைகளை உருவாக்கும். மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன் – இதற்குத் தேவையானது: உறுதியான எழுத்தாளராயும், கற்பனை ஆற்றலுடன் கூடிய முனைப்பும்.

நான் நீண்ட காலமாக நம்புகிறேன் – ஒரு தலைமுறை மற்றொன்றை விட சிறந்தது அல்லது கெட்டது என்று கூறுவதில் நியாயம் இல்லை. வயதுக்கேற்ப தலைமுறைகளை ஒப்பிடுவதும், மதிப்பீடு செய்வதும் பொதுவானது. ஆனால் உண்மையில், ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் தனித்துவங்களும், வலிமைகளும், பலவீனங்களும் உண்டு. ஒரு தலைமுறைக்கு ஒரு விசயத்தில் குறைப்பட்டிருந்தாலும், வேறு ஒரு துறையில் அவர்கள் சிறந்திருக்கலாம்.

உதாரணமாக, இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் – அவர்களது பெரியவர்கள் போல கஞ்சி எழுத்துக்களை வாசிப்பதில், எழுதுவதில் பலவல்லவையாக இருக்கலாம் (இது உண்மையா என எனக்குத் தெரியாது), ஆனால் கணினி மொழி, தகவல் செயலாக்கத்தில் அவர்கள் மிகச் சிறந்தவர்கள். இதுவே என் கருத்து. ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்கே உரிய வலிமைகள், திறன்கள் கொண்டுள்ளன.

எனவே, எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழியை ஒரு ஆயுதமாகக் கொண்டு, தங்களுக்கு இயல்பாக வரும் சொற்களால் தங்களது பார்வையை தெளிவாகக் கூறவேண்டும். மூத்த தலைமுறையினரைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. அதேபோல், அவர்கள் மீது எந்தவிதமான மேலோட்டப் பெருமிதமும் கொள்ளவேண்டியதில்லை.

நான் எழுதத் தொடங்கிய போது, பெரிய விமர்சகர்கள் கூறியது: “இது நாவலா? இது இலக்கியமா?” என்றே. அவர்களின் குற்றச்சாட்டுகள் எனக்கு மனஅழுத்தமாக இருந்ததால், நான் ஜப்பானை விட்டு வெளிநாட்டில் வசித்து எழுதி வந்தேன். ஆனால் ஒரு போதும் – நான் என்ன செய்கிறேன் என்ற கேள்வியில் குழப்பமடையவில்லை. என் பதில்: “நான் வேறு விதமாக எழுத முடியவில்லை. நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் விருப்பம்.”

என் எழுத்து முறைகள் இன்னும் பரிபூரணமானவை அல்ல. ஆனால், தொடர்ந்து முயற்சித்தால், மேலும் சிறந்ததொன்றை உருவாக்க முடியும் என்று நான் நம்பினேன். 1979-இல் நான் என் முதல் நாவலை வெளியிட்ட பிறகு – “நான் எடுத்த பாதை சரியானது” என்ற நம்பிக்கை இன்று வரை மாறவில்லை. இன்னும் 30-40 ஆண்டுகளில், என் எழுத்தின் மதிப்பு பற்றிய தெளிவு உருவாகலாம். ஆனால், நான் அந்த நேரத்தில் இருப்பேனா தெரியாது. எனவே, உங்களுள் யாராவது என் பெயரால் அதை கவனிக்க வேண்டும்.

இறுதியாக நான் சொல்வது:

ஒவ்வொரு தலைமுறைக்கும், அந்தக் காலத்திற்கேற்ப எழுதக்கூடிய தனித்துவமான, ஒரு குறிப்பிட்ட அளவு “பொருள்” இருக்கிறது. அந்தப் பொருளின் வடிவம், அதன் எடை – எல்லாம் அந்தக் கதையை அழுத்தும் வாகனத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது. அந்த பொருளுக்கும், அதைக் கடத்தும் வாகனத்திற்கும் இடையே உருவாகும் உறவிலிருந்து தான் புது நாவல்களின் உண்மை உருவாகிறது.

ஒவ்வொரு காலகட்டமும், ஒவ்வொரு தலைமுறையும் – தங்களுக்கே உரிய ஒரு “உண்மைச்சூழலை” அனுபவிக்கின்றன. அந்தச் சூழலைத் தொகுக்கவும், சேமிக்கவும், வாசகர்களுக்கு வழங்கவும் செய்யும் கடமை நாவலாசிரியருக்கு நவீன காலத்திலும் அவ்வளவுதான் முக்கியமானது. எதிர்காலத்திலும் அது முக்கியத்துவம் பெறும்.

எனவே, நீங்கள் ஒரு புனைவெழுத்தாளர் ஆக விரும்பினால், உங்கள் சுற்றுப்புறத்தை நன்கு கவனியுங்கள். உலகம் சாதாரணமாகத் தோன்றலாம் – ஆனால் உண்மையில், அது விசித்திரமான கனிமங்களால் நிரம்பியிருக்கிறது. இந்தக் கனிமங்களை கண்டுபிடித்து சுத்தப்படுத்தும் திறனே நாவலாசிரியரின் தனிச்சிறப்பு.

அதிகம் செலவில்லாத, அழகான ஒரு தொழில். உங்கள் கண்கள் நன்கு காணக் கூடியதாயிருந்தால், உங்கள் மனக்கண்களால் – நீங்கள் விரும்பும் எந்த கனிமத்தையும் தோண்டிக்கொண்டு எழுதலாம். இதைவிட அருமையான தொழில் வேறு என்ன இருக்க முடியும்?

௦௦௦

ஆங்கில மூலம்

சஜன் பரந்தாமன்

தற்சமயம் பணி நிமித்தம் ஜெர்மனியில் வசித்துவருகிறார். மொழியாக்கம் மீது ஆர்வம் கொண்டவர். பல்வேறு புனைப்பெயர்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. மிக அழகாகவும், தெளிவாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. எழுத விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய அவசியமான கட்டுரை.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop