
(ஒற்றை சிறகு ஓவியா நாவலை முன்வைத்து ஒரு உரையாடல்)
கிராமப்புற பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பபு படிக்கிற மாணவர்களுக்கு நாங்கள் ஒரு தலைப்பு கொடுத்திருந்தோம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் படமாக எடுக்க வேண்டுமானால் என்ன தலைப்பு கொடுப்பீர்கள்? ஏன்? அது குறித்து ஒரு பத்தி எழுதவும். இதுதான் கேள்வி. அதற்கான விடைகளில் பெரும்பாலானவை எந்தவித கற்பனைக்கும் இடமில்லாத ஒரே போலான வார்த்தைகள். ஏன் அந்த தலைப்பு என்பதற்கு அவர்கள் காரணங்கள் எழுதியதிலும் பெரியதாக எந்த வித்யாசமில்லை. மிக அரிதாக ஒன்றிரண்டு மாணவர்கள் கொஞ்சம் மாற்றி எழுதினர்.
இந்த கேள்வி, வேறு ஒரு வட்டாரத்தில் உள்ள அதே போன்ற போல ஒரு பள்ளியில் அதே வயதுடைய மாணவர்களிடம் கேட்கப்பட்டபோது அங்கும் எழுதப்பட்ட தலைப்புகளும் பத்திகளும் ஒரே போல இருந்தன. உதாரணத்திற்கு ஒரு மாணவர் எழுதிய தலைப்பு, என் வாழ்க்கை வட்டம். இதே தலைப்பு இரண்டு இடங்களிலும் மாணவர்கள் பயன்படுத்தினர். ஏன் என்பதற்கான பதில், காலையில் எழுந்து பள்ளிக்கு வருகிறோம். மீண்டும் வீட்டுக்கு. மறுநாள் மீண்டும் பள்ளிக்கு. அதனால் இந்த தலைப்பு என மாணவர்கள் பதிலளித்தனர். இன்னும் சில பொதுவான தலைப்புகள் கிடைத்தன. ஆனால் எங்களால் அதை தாண்டி வேறு எந்தவித படைப்பூக்கமான ஒன்றையும் அவர்களிடையே அறிய முடியவில்லை. ஏன் என்பதற்கான என் அளவிலான விடை, அவர்களுக்கு அதற்கு முன்பாக படைப்பூக்கமான எந்த ஒன்றும் அறிமுகமாகவில்லை.
வாசிப்பு என்பது பள்ளி புத்தகத்தை தாண்டி வளரவில்லை. பள்ளி புத்தகத்திலும் எழுத்து குறித்த போதிய அறிமுகம் கிடைக்கவில்லை.
அப்போது எனக்கு தோன்றிய கேள்வி: ஏன் குழந்தைகள் வாசிப்பதில்லை?. நாம் எதுவும் அதற்காக ஆக்கப்பூர்வமாக செய்யவில்லையா?
இந்த கேள்வி உறுத்திக் கொண்டிருந்த வேளையில், நான் சமீபத்தில் விருதுபெற்ற ஒற்றை சிறகு ஓவியா என்கிற நாவலை வாசித்தேன். எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதியது. சமீபத்தில் பால புரஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. அந்த நாவலை வாசித்து முடித்ததும் என்னுடைய கேள்வி வேறு ஒன்றாக மாறியது. நாம் குழந்தைகளை வாசிக்க வைக்கும் வகையில் எதுவும் எழுதுகிறோமா? எழுதப்பட்டாலும் அவை அடையாளம் காணப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினால் அப்போது பல்வேறு புறக்காரணங்களை நாம் கண்டறியக்கூடும். அது குறித்து பேசுவதற்கு முன்னர் சிறார் இலக்கியம் தமிழில் என்னவாக உருவாகியது எனப் பார்ப்பது சரியாக இருக்கும்.
அகநானூறு காலத்திலேயே ‘நீ இங்கு வந்தால் உனக்கும் பால் தருவேன்’ என நிலவினை பார்த்து தாய் கூறும் பகுதி சிறார் இலக்கியத்தன்மை கொண்டது என சிறுவர் இலக்கிய வரலாறு நூலில் பூவண்ணன் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியம் வரை செல்ல வேண்டியதில்லை. நவீன இலக்கியம் தொடங்கியபோது இருந்தே பார்த்தால்கூட பாரதியாரின் ‘பாப்பா பாட்டு’ தொடங்கி பெ.தூரன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி என பலரும் பெயர் சொல்லும் அளவுக்கு அளப்பரிய பணிகளை இங்கு செய்து வைத்துள்ளனர். ஆனால் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மொழியும் கதைக்கருவும் அவர்கள் எழுதியதை தாண்டவில்லை என்பதே என்னுடைய அவதானிப்பு.
ஒற்றைச்சிறகு ஓவியா நூலுக்கு வருகிறேன். இதன் மொழி மிக முந்தையது. தமிழில் நவீன எழுத்தாளர்கள் மொழியை இன்னும் கூர்மையாக மாற்றியுள்ளனர். அசோகமித்திரன், சு.ரா, ஜெயமோகன் என இவர்களின் எழுத்துகளில் கூர்மையும் அதே நேரத்தில் கதை அறிந்து கொள்வதற்கான போதிய தகவல்களும் கிடைக்கும். சிறுவர் இலக்கியத்தில் ஒரு நிகழ்வை எத்தனை தூரம் அவர்களின் கற்பனைக்கேற்ப விரிக்கிறோமோ அந்தளவுக்கு அதன் நம்பகத்தன்மை உறுதிப்படும்.
இந்த நாவலில் குறிப்பிடப்படும் ஊரின் எந்தவித மொழி வழக்கும் அந்த குழந்தைகளிடையே இல்லை. அவர்களுக்கு என எந்த தனித்துவமும் இல்லை. அடையாளமற்ற கதாபாத்திரங்களாக, 20 ஆண்டுகளுக்கு முன்பான சிறுவர்மணி மொழியில் கதை சொல்லல் நடக்கிறது.
தமிழ் இலக்கியத்தை உலக இலக்கியத்துக்கு முன்வைக்கும் அளவுக்கு இங்கு நடைபெற்ற முயற்சிகள் சிறார் இலக்கியத்தில் மேற்கொள்ளப்பட்டதா எனப் பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. இன்றைக்கு குழந்தைகளுக்கு நல்ல சிறார் நாவலை பரிந்துரைக்க வேண்டுமெனில் நம்மிடம் இருப்பது குட்டி இளவரசன் போன்ற மொழிப்பெயர்ப்பு நூல்களே. எஸ்.ரா, ஆயிஷா இரா. நடராஜன், யூமா வாசுகி ஆகியோர் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருப்பினும் பரவலான சிறார் வாசிப்புக்கும் மிக குறிப்பாக இன்றைக்கு வளர்ந்துவரும் குழந்தைகளுக்கான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கோருகிற எழுத்தாக எதுவும் இல்லையென சொல்லிவிடலாம்.
உலகம் முழுவதும் குழந்தைகளுக்காக எழுதப்பட்டு திரைப்படங்களாக, ஒலி வடிவாக மாறுகிற புத்தகங்களை நாம் பட்டியலிட முடியும். அதுபோக ஒவ்வொரு மொழியும் அதில் வாசிக்கிற குழந்தைகளின் வயதுக்கேற்ப புத்தகங்களை வரிசைப்படுத்துகின்றன. அப்படியான வகைப்பாடு தமிழில் இல்லை.
ஒற்றைச்சிறகு ஓவியா நாவல் எந்த வயதினருக்கானது என்பதில் எழுதப்பட்டபோதும் பதிப்பிக்கபட்டபோதும் தெளிவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் பன்னிரண்டு வயதினராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பேசுவது இருபது ஆண்டுகளுக்கு முன் பன்னிரண்டு வயதில் இருந்தவர்கள் பேசுவதுபோல உள்ளது.
மொழியை தீர்மானிக்கும் முன்னர் அந்த எந்த வயதினருக்கானது என்பதை தீர்மானிக்க வேண்டும்.
ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன், டானிஷ் எழுத்தாளர். 19ஆம் நூற்றாண்டில் அவர் எழுதிய கதைகள், வேறு நிலத்தில் வேறு மொழியில் இருக்கிற குழந்தைக்கு சொல்லப்படும்போதும் அவர்களின் விருப்பத்துக்குரியதாக இருப்பதை பார்க்க முடியும். தமிழில் இருந்து ஒரு கதையை உலக சிறுவர் இலக்கியத்துக்கு மத்தியில் கொண்டுபோய் வைத்தால் அது ஒன்பதாம் வகுப்பு மாணவனையும் ஒன்றாம் வகுப்பு மாணவனையும் ஒப்பிடுவதுபோல இருக்கும். எனில் இங்கு எழுதப்படுவது குழந்தைகளுக்கு ஏற்றதில்லையா?
குழந்தைகளின் உலகம் எதிர்ப்பற்றது (Irresistable). பெரியவர்கள் எளிதாக அதில் நுழைந்துவிடலாம். ஏனெனில் அவர்கள் உலகம் எந்தவித தடைகளும் இல்லாதது. உள்ளே வருபவரை மறுக்காது. அதனால் அவர்களுக்கு கதைகளாக சொல்வதும் எழுதுவதும் என்ன செய்தாலும் அவர்கள் உலகில் ஏற்றுக்கொள்ளப்படும். அத்தனை வெள்ளந்தியானது அந்த இடம். ஆனால் நாம் அங்கு சென்று கொட்டுகிற எழுத்துகள் என்னவாக இருக்கிறது என்பதை நாம்தான் பொருட்படுத்த வேண்டும்.
கதையை முன்வைக்கும்போது குறிப்பாக கற்பனைரீதியான (fantasy) வகை கதைகள் எழுதும்போது, நீங்கள் உருவாக்குகிற புனைவு உலகத்துக்கு சில அடிப்படை நிர்ணயங்கள் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் எழுதும் உங்கள் புனைவு உலகில் புவியீர்ப்பு விசை இல்லையென வைத்துக்கொள்வோம். எனில் எந்தவிதமான தர்க்கங்களால் அந்த உலகம் செயல்படுகிறது என்பதை நிர்ணயிக்க வேண்டும். அதற்கான விதிகள் தெளிவாக வகுக்கப்படவேண்டும். புவியீர்ப்பு விசை இல்லாத உலகில் மக்கள் இப்போது இருக்கும் இதே உடலமைப்போடு வாழ்வதாக குறிப்பிட்டால் அது பெரும் அபத்தமாகும்.
இதனை தர்க்கம் (Logic) எனச் சொல்வோம். கதையமைப்பு (Story Setting) என்பதன்கீழ் இது வரும். ஆங்கிலத்தில் எழுதப்படுகிற எந்த சிறார் கதையையும் நீங்கள் இந்த கதையமைப்பு வகையில் பிரித்து பார்க்க முடியும். ஆனால் அங்கும்கூட நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. அதற்கான தர்க்கப்பூர்வ நியாயம் வேண்டும். முன்னர் பார்த்த அதே உதாரணத்தை திரும்பி சொல்கிறேன். புவியீர்ப்பு இல்லாத உலகில் மனிதர்களால் தங்கள் உடலை இப்போது இயங்குகிற வடிவில் பாதுகாக்க இயலாததால் அவர்கள் அதற்கிணையான ஒரு கருவியை வடிவமைக்கின்றனர். ஆனால் அந்த கருவி ஒரு பஞ்சு மிட்டாயாக மாறிவிடுகிறது. இப்படி எழுதினால் எப்படி இருக்கும்? இந்த பிழைகள் தவிர்க்கப்படுவது நாம் உருவாக்குகிற உலகத்துக்கு இன்னும் வலு கொடுக்கும்.
இப்போது இந்த நாவலுக்கு வருகிறேன். இங்கு ஒரு சூப்பர் பவர் ஒருத்திக்கு கிடைக்கிறது. கிடைத்ததும் அந்த பவர் மூலமாக ஒரு குழந்தை தனக்கு பிடித்ததை தேடி போகும். மிக சதாரணமாக யோசித்தால் அதுதான் நடக்கும். ஒரு குழந்தையின் இயல்பு. இங்கு அந்த குழந்தை தனக்கு சூப்பர் பவர் கிடைத்ததை பள்ளிக்கு வரும்போது மட்டுமே ஏதோ தோள்பை போல எடுத்துக் கொள்கிறாள். அல்லது அது பற்றிய எந்த விவரணையும் இல்லை. லட்சிய குழந்தைகளால் மட்டுமே இது பற்றி எதையும் பொருட்படுத்தாத அவர்கள் உலகில் வாழ முடியும். ஆனால் அது எதார்த்தம் போலவே இருப்பது நெருடுகிறது.
ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்று என கதை நகரவே இல்லை. திடீரென அவளுக்கு கனவில் புகுகிற திறன் கிடைக்கிறது. மற்ற சிறுவர்கள் கனவில் ஒவ்வொரு துண்டை ஒளித்து வைக்கிறார்கள். திடீரென எங்கிருந்தோ மறையும் சக்தி வருகிறது. எந்த அடிப்படையுமற்று தோன்றியதை எல்லாம் எழுதுகிற ஒன்றை நாவல் என எப்படி சொல்ல முடியும்.
குழந்தைகள் கேள்விகள் கேட்பவர்கள். அவர்கள் கேள்விகள் மூலமே தங்கள் உலகை வடிவமைக்கிறார்கள். அவர்களை கேட்காமல் இருக்க செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை நமது பள்ளிகள் பார்த்துக்கொள்ளும். ஆனால் அவன் தனக்கான இடமாக நினைக்கிற/ அல்லது நாம் அவனுக்கான இடமாக முன்வைக்கிற புத்தகத்திலும் எந்த கேள்வியும் இல்லை என சொல்வது எந்த வகையில் நியாயம். நிற்க.
கனவில் ஒளித்து வைக்கும் துண்டுகளை தேடும் பயணத்தில் கொலை குற்ற துப்பறிவு வர்ணனைகள் போல வருகின்றன. மாய எதார்த்த கனவுலக துப்பறியும் நாவலுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.
உடன் தனியார் பள்ளிகள் மீதான வெறுப்பும். ஏன் ஒரு அரசுப்பள்ளி மாணவன் தனியார் பள்ளியை பார்த்து நாண வேண்டும். பின்னர் அந்த புத்தகம் முழுவதும் சமூக/ சூழலியல் பிரச்னைகள் பேசுவதில் என்ன பயன்?
இப்படியான நாவலுக்கு விருது கொடுத்தது பயனற்றது. அதை காட்டிலும் அதனை முன்வைத்து அதில் பேசப்படும் பிரசாரங்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பது அதையும்விட மோசமானது.

இன்னும் எத்தனை நாள்களுக்குதான், குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல கதை எழுதப்போகிறோம் எனத் தெரியவில்லை. குழந்தைகள் இந்த கதையமைப்பை எல்லாம் தாண்டி வேறு வேறு பரிணாமங்களில் தங்களின் பொழுதுபோக்கை கண்டறிந்துவிட்டார்கள்.
சூழலியல் பிரச்னைகள் முக்கியமில்லையா எனக் கேட்டால் முக்கியம்தான். ஆனால் அதற்கான தீர்வாகவோ அல்லது சரி செய்வதற்கான வழியாகவோ புத்தகம் என்ன முன்வைக்கிறது என்பது விவாதத்துக்குரிய ஒன்று. எல்லாவற்றுக்கும் ஒரு தொழிற்சாலை காரணம், அதை எதிர்த்து போராடுகிற குழுவுக்கு சிறார்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்பதெல்லாம், சார் கொஞ்சம் உங்க வட்டத்துல இருந்து வெளியே வந்து உண்மையாக, குழந்தைகளை சந்தியுங்கள் எனச் சொல்ல தோன்றுகிறது.
இந்த நாவலுக்கு விருது கொடுக்கப்பட்டதால் இது கவனத்துக்குரியதாக மாறுகிறது. ஆனால் விருது என்றால் யாருக்காவது கொடுக்கப்படத்தானே வேண்டும். இந்த நாவலுக்கு கூடாது எனில் வேறு யாருக்கு என நமக்கு எழுகிற கேள்விக்கு பதில் இல்லை. இந்த சூழலே ஆரோக்கியமானதாக இல்லாதது கவலையை அளிக்கிறது.
இன்றைக்கு சமகால குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அதீத மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பத்து வயதில் அவர்களுக்கு உருவாகிற உணர்வுகள் பதின்வயதினரைவிட அதீதமானது. அதனை தாங்க உடல் இன்னும் தயாராகாத நிலையில் அவர்களின் முதிர்ச்சி ஆபத்துகளை தரக்கூடியதாக மாறுகிறது. அலைபேசி/ தொழில்நுட்ப சாதனங்களின் வரவால் இந்த நிலை நம்மால் யோசிக்கவே முடியாத ஆபத்தை கொண்டிருப்பதாக குழந்தைகள் மனவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இப்படியான சூழலில் குழந்தைகள் தங்களை கண்டறிய நாம் எழுத வேண்டியுள்ளது. அவர்களின் வெளியுலகை அறிந்துகொள்ள நாம் எழுத வேண்டியுள்ளது. அதுவும் அத்தனை கவர்ச்சி உடைய அலைபேசியில் இருந்து அவர்களை வெளியே இழுத்து வந்து அமர செய்ய வேண்டிய அளவில் சுவாரஸ்யமாக கதை சொல்ல வேண்டியிருக்கிறது.
கனவுகள் மொழி வழியாக உருவாகின்றன. கனவுகள் என்பது இங்கு இலட்சியம் என தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. இங்கு கனவுகள் என்பது கற்பனையை விரிப்பது. உலகை விரிவாக பார்ப்பது. உலகையும் தாண்டி ஒன்றை பார்ப்பது. மொழி வழியாக கனவு காண நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டியுள்ளது. அதற்கான வழி மிக நீண்டது. வெற்று வரிகளுக்கு எல்லாம் அங்கு இடமில்லை.
–
பிரபாகரன் சண்முகநாதன்: “மருள்’ என்கிற தலைப்பில் சிறுகதைகள் தொகுப்பாக யாவரும் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு மீது ஆர்வம் உண்டு. சிறார் இலக்கியம் விருப்பத்தளம். தற்போது கோவையில் வசிக்கிறார்.

பிரபாகரன் சண்முகநாதன்
“மருள்’ என்கிற தலைப்பில் சிறுகதைகள் தொகுப்பாக யாவரும் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு மீது ஆர்வம் உண்டு. சிறார் இலக்கியம் விருப்பத்தளம். தற்போது கோவையில் வசிக்கிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
ஆழமான செறிவான கட்டுரை. யூமா வாசுகி மொழிபெயர்ப்பு அளவிற்கு சொந்த படைப்புகளை எழுதவில்லை. கி.ரா-வின் பிஞ்சுகள் அளவிற்கு அவரது குழந்தை கதைகளின் அளவிற்கும் யாரும் சமகாலத்தில் குழந்தை / சிறார் இலக்கியம் படைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
வாழ்த்துக்கள் பிரபா 🌹🌹🌹
அருமையான துணிவான அலசல். குழந்தை இலக்கியத்தில் குழந்தைக்கான மொழியைத் தேட வேண்டிய சூழல். சுட்டிக்காட்டியவை அனைத்தும் படைப்பாளிகள் மனம் கொள்ளக் கூடியவை.
வாழ்த்துகள் பிரபா.