
குறிப்பு: மீனா அலெக்ஸாண்டர் (1951-2018) இந்திய-அமெரிக்க எழுத்தாளர். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியவர். ஏப்ரில் 23, 2013 அன்று அவர் யேல் (Yale) அரசியல் ஒன்றியதிற்காக ஷெல்லியின் ‘கவிதையின் தரப்பு’ என்ற கட்டுரையின் ஒரு வரியை முன்வைத்து ஓர் உரை ஆற்றினார். ‘கவிஞர்கள் இவ்வுலகின் அங்கீகரிக்கப்படாத சட்டமியற்றிகள்’ என்கிறார் ஷெல்லி. இந்த கட்டுரை அவ்வுரையின் நீட்சியாக எழுதப்பட்டுள்ளது.
1.
சிறிது காலத்துக்கு முன் கொலராடோவில், ராக்கி மலைத்தொடரை எதிர் நோக்கிய பெரிய சாளரம் கொண்ட அரங்கத்தில் இருந்தேன். சற்றே தலையை திருப்பினாலும் தெரியக்கூடிய, வெட்டிச்சிதைத்தது போன்ற கரடுமுரடான அம்மலைத்தொடரின் அழகு என்னை பிரமிக்கச் செய்தது. வழக்கம் போல் வாசிப்பிற்கு பின்னர் அரங்கில் பார்வையாளர்களின் குரல்கள் எழுந்தன. சிவப்பு மேல்சட்டை அணிந்த ஒரு பெண் எழுந்து நின்றாள். அரங்கு நிரம்பிய கூட்டத்தில் கடைக்கோடியில் இருந்த அவளை காண சிரமப்பட வேண்டியிருந்தது. எனினும், அவள் குரல் ஓங்கி தெளிவாக ஒலித்தது.
“கவிதையினால் என்ன பயன்?” எனும் அவள் கேள்வி அரங்கின் சுவர்களில் மோதி எதிரொலித்தது. ஒரு கணம் மூச்சடைத்துப் போனது. இந்த கேள்வியை என்னை நோக்கி தொடுத்தவள் பிளாட்டோவின் மகளாகவும் இருக்கலாம் என்று நினைத்துகொண்டேன். அப்பொழுது அரங்கில் மயான அமைதி நிலவியது. அக்கேள்விக்கு பதிலாக எதையுமே சொல்லமுடியாது என்றே எண்ணினேன். அப்போது என் வாயிலிருந்து சில சொற்கள் உதிர்ந்தன. ஓராண்டிற்குப் பிறகு அச்சொற்களை ஒரு கவிதையில் கொண்டு வந்தேன். நேரடியாக ஒப்புக்கொள்ளவியலாத மையமாக அதை மாற்றினேன். அந்தக்கவிதையின் தலைப்பு எளிமையானது – ‘கேள்வி நேரம்’ – ‘புதையுண்ட கற்கள் கொண்ட பிறப்பிடம்’ (Birthplace with Buried Stones) (2013) என்ற என் புத்தக்கத்தில் வெளியாகிவுள்ளது.
கேள்வி நேரம்
நான் நினைவுக் கொள்கிறேன்
நிலவு நழுவிச் செல்லும்
மலைகளின் தழும்பேறிய முதுகு
மரக்கட்டையில் எழும் பேய்க்கங்கு, புதரின் சிவந்த பருக்கள்
அவளுடைய கேள்வி. சிவப்பு மேல்சட்டை அணிந்த பெண்ணவள்
நிறைந்த சபையில் உயர்ந்தது அவள் கை –
கவிதையினால் என்ன பயன்?
தலைக்குமேல் விளக்குகள் படபடக்கின்றன,
மின்கம்பிகளில் ஏதோ சரியில்லை
நான் திரும்பி நீரில் சுழிக்கும் நிலவைக் கண்டேன்
ராக்கி மலைகள் மெளவ் நிற வெளிச்சத்தில் திடுக்கிட்டிருந்தன
கடல் பிராணிகள் வானப் பச்சையத்தைக் கீறிச்சென்றன.
புதரின் நிழலில் ஒரு நாள் நீயும் நானும்
இதழும் தொடையும் உரசி
தன் கைதிகளை விடுவிக்குமொரு கடந்தகாலத்தை கனாக்கண்டோம்
எட்ட நின்று அவளைப் பார்த்துச் சொன்னேன் –
வரலாற்றினால் இறவாதிருக்கவே
நம்மிடம் கவிதை இருக்கிறது
நான் கூறியதன் பொருள் என்னவென்று எனக்கே தெரியவில்லை.
2.
வரலாறு என்பது கடந்தகாலத்தின் பதிவுசெய்யப்பட்ட நினைவுத் திரட்டு என்று நாம் எண்ணக்கூடும். நினைவை பொதுவெளியில் பதிவு செய்வதற்கான அதிகாரம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்பட்டதையே வரலாறு என்றும் எண்ணக்கூடும். ஆனால், வரலாற்றினுள் முக்கியமானதொரு ஆழ்நதி இருப்பதை – ரகசியக் கடிதங்கள், பத்திரிகைகள், டைரிக் குறிப்புகள், செதுக்கல்கள், சிறையிலிருந்து பதுக்கி அனுப்பப்படும் காகிதத் துண்டுகளில் உள்ள கிறுக்கல்கள் – நான் கண்டுணர கற்றிருக்கிறேன். கவிதை தன் நோக்கத்தில் இப்புதையுண்ட நதிக்கு மிக அருகில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஆழத்துள் உறைவதை கருத்தில் கொள்வதனாலேயே அதை வேர்ட்ஸ்வர்த் “குருதியில் உணர்ந்து மனத்துள் உணர்வது” என்கிறார். இறந்த காலத்தை தியானித்து, அதன் இயல்பான சாத்தியமின்மையின், அதாவது இறந்த காலத்திற்கு மீள விழையும் பிரக்ஞையின் சாத்தியமின்மையின், சாரமாக அமையும் இவ்வரி, கவிதைக்கு சரியாகப் பொருந்துவது.
3.
ஆழத்தில் உணரப்படுவதும் அடிப்படையில் சொல்ல முடியாததுமான விஷயங்களையே கவிதை தன் கவன எல்லைக்குள் எடுத்துக் கொள்கிறது. இந்த முரண் மீதே கவிதை இன்றியமையாமல் சுழல்கிறது . ஓவியர் வண்ணத்தை பயன்படுத்துவதைப் போல ஒரு கவிஞர் மொழியை, தன் கலைக்கான முதன்மைப் பொருளாக கைகொள்கிறார்.ஒலித் துணுக்குகள், விளம்பரங்கள், அரசியல் உரைகள், அச்சுச் செய்திகள் என நம்மை எல்லா திசைகளிலும் எந்நேரமும் சூழந்திருக்கிற பயன்பாட்டில் ஊறிய மொழியை அலசினால்தான் அதை கலையின் பொருளாக கையாள இயலும்.
கவிதை, அதன் பொருள் உருவாக்க செயல்பாட்டின் போது நேரடியானவற்றிலிருந்து விலகுகிறது. கவிதைக் கட்டுப்பட்டிருக்கும் உண்மை என்பது அது எழுப்பக்கூடிய உணர்வு மட்டும் தான். உணர்வு, நினைவினால் தூண்டப்படுவது. அபினவகுப்தர் (பொ.யு. 950-1020) இதைத் தெளிவாக உணர்ந்திருந்தார். கவிதை எப்படி நேரடித்தன்மையிலிருந்து வெகு தூரம் சென்று நினைவின் ஆழத்தை, நினைவின் சில்லுகளை தொட்டெழுப்புகிறது என்பது குறித்து அவர் எழுதுகிறார். ’ரஸா’ எனப்படுகிற அழகியல் இன்பத்தின் உச்சம் இப்படித்தான் அடையப்படுகிறது:
“இன்னொரு புறம், ரஸா என்பது ஒருவர் நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயம். அது அன்றாடத்தின் வெளிப்பாட்டில் இருப்பதில்லை. மாறாக அது ரசிக்க வேண்டிய ஒரு வடிவம். ஒரு நுண்ணிய மனம் தன்னில் சேகரமான நினைவின் கூறுகளை மீட்டுவதன் வழியாகப் பேரானந்தத் திளைப்பை சுவைக்கும் பொழுது துலங்கும் வடிவம். … அது மனதை வசீகரிப்பதாலேயே அழகு கொள்கிறது … இந்த உணர்வின் நிகழ் சாத்தியம் ‘ரஸத்வனி’ எனப்படுகிறது. இது கவிதையில் மட்டுமே நிகழக்கூடியது. கறாராகக் சொல்ல வேண்டுமென்றால், கவிதையின் ஆன்மா ரஸத்வனி.”
(’ஆனந்தவர்தனரின் ‘த்வன்யலோகா’ மற்றும் அபினவகுப்தரின் ‘லோசனா’, ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பிரசுரம், 1990)
4.
கவிதை, உணர்த்திறனுடனும் மனித இருப்பின் புலனாற்றல்களுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது; புலன்களால் கூராகிற உணர்ச்சிகளிலிருந்து ஆற்றல் பெறும் நினைவுகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது; எனினும் அது இடத்துடனும் (Place) பிணைக்கப்பட்டிருக்கிறது. நாம் இடத்திலேயே நம்மை பொருத்தியறிகிறோம். பிறருடனான உறவுகள் வழியாகவே நம்மை அடையாளப்படுத்துகிறோம். மேலும் நம் வாழ்வே இடம் சார்ந்தது தான். ஆனால், இடம் பறிக்கப்படுகிறபோது, உணர்திறன் முற்றிலுமாக அகற்றப்படுகிறபோது, நாடு கடத்தப்படுவதாலோ அல்லது இடம் மாறுவதாலோ இருப்பின் எல்லைகள் அடையாளப்படுத்தப்படுகிற போது , கடந்த காலம் என்னவாகிறது?
5.
இன்றைய காலகட்டத்தில், எதற்காக கவிதை இருக்கிறது? எனக்கு அந்த கேள்வி இன்னொன்றாக விரிகிறது. வன்முறையான உலகை சேர்ந்தவராக இருப்பதற்கு என்ன அர்த்தம்? இங்கு ஒவ்வொருவரும் தமக்குள் சுமக்கும் கண்காணாத ஆவணப்பெட்டகங்களை – ஆழமான அந்தரங்கமான காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்களின் அகச்சேகரிப்புகளை, நினைவு ஒதுக்கி வைத்திருக்கும் பொருளுலகின் இடிபாடுகளை துண்டுகளை- எண்ணிப்பார்க்கிறேன் . ஒருவேளை இது, நம் இருப்புக்கு பொருள் அளிக்கிற, அகவாழ்க்கையின் ஒளியாலான ஓட்டத்தை பற்றி சிந்திப்பதற்கான இன்னொரு வழியாக இருக்கலாம். “நான்” என்று சொல்லத் துணியும்போது மேலிடும் எல்லா விஷயங்கள் குறித்தும் சிந்திக்கும் வழியாக இருக்கலாம். உறுதியாக, இது கவிதையின் ஆளுகைக்குட்பட்ட நிலம்.
6.
பெர்சி ஷெல்லியின் “கவிதைக்கு ஆதரவாக” (‘A Defense of Poetry’) (1821) கட்டுரையில் உள்ள வரிகள் இவை. கவிதையில் திகழும் தன்னியல்பான ஆற்றலை வெளிப்படுத்தும்படி கட்டுரையின் மையமாக இருப்பவை.
“நம் இருப்பிற்குள் இன்னொரு இருப்பை கவிதை படைத்தளிக்கிறது. பரிச்சயமான இவ்வுலகத்தை குழப்பமானதாக தோன்றச் செய்யும்படி வேறொரு உலகத்திற்குள் நம்மை குடியமர்த்துகிறது. ஒரு பொதுப் பிரபஞ்சத்தை மீள் உருவாக்குகிறது. நாமே அதன் ஓர் பகுதியாகவும் அதைக் கண்டுணர்பவர்களாகவும் இருக்கிறோம். இருப்பென்னும் பெருவியப்பை மறைக்கும்படி நம் உளக்கண்ணில் படிகிற பரிச்சயத்தின் திரையை [கவிதை] ஒழித்துக்கட்டுகிறது.”
இது என்ன, மாற்றுலகம்? இருப்பிற்குள் இருப்பு? கவிதை தொட்டெழுப்பும் விழைவின் மண்டலம் என்பது யாது? பேரின்பம் என்னும் நிலையுடன் தொடர்புபட்ட ஒரு மகத்தான உண்மை நிச்சயமாக இதில் புதையுண்டு இருக்கிறது. வெறும் பகுத்தறிவினால் ஊடுருவ முடியாத உணர்வுகள் அதிலுண்டு. ஒரு வகையான பொருள்கோரல் வழிமுறை அது. அதை இழந்துவிட்டால் நாமெல்லோரும் அவரவர் தோலுக்கடியில் பிணைக்கைதிகளாக சிறைப்பட்டிருப்போம்.
7.
நாம் ஒன்றாக பகிர்கிற, இம்மனிதகுல வரலாற்றில் சில தருணங்கள் இருந்திருக்கின்றன. உலகின் குறிப்பிட்ட பகுதிகளில், கவிஞர்களும் பாடகர்களும் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஏன்? எதைக் கண்டு அஞ்ச வேண்டும்? குறிப்பாக இப்படிச் சொல்லலாம்: அவர்கள் அஞ்சுவது கவிதை விடுவிக்கும் பாதரசம் போன்ற தன்னிலையின் ஆற்றலை. எந்த சட்ட திட்டத்தாலும் எப்பொழுதும் கட்டிவைக்க முடியாத விழைவை. இது தான் மானுடத்தின் ஆற்றல். நம் வாழ்வின் ஆன்மீக நிலை என்பதும் இதுவே.
8.
கவிதை என்பது வரலாற்றை மீறி தரிக்கும் ஓர் கண்டுபிடிப்பு. நாம் இப்போது வாழும் விதத்தில், நம் அன்றாட வாழ்வுகளில் உள்ள பல விசைகளும், கவிதை உருவாக்கத்துக்கு எதிராக சதி செய்கின்றன. பதிப்பிக்கப்படும் கவிதைக்காக கொஞ்சம் இடம் இருக்கலாம். ஆனாலும் அது கவிதையின் உருவாக்கத்திற்கானதல்ல. ஒருவர் அமர்ந்து துயரங்களை மீட்டி அசைப்போடுவதை அனுமதிக்குபடி பொதுவான ஒரு இடம் இல்லை. பல்கலைக்கழகங்கள் அதற்கு இணையான மிகச்சிறிய வாய்ப்பை அளிக்கின்றன எனலாம்.
வன்முறையின் காலத்தில், கவிதையின் பணி என்பது, நம்மை உலகுடன் ஏதோவொரு வகையில் சமாதானம் செய்ய வைத்து, ஜீவித்து இருக்கும் அளவில் கனிவையும் அருளையும் சற்றேனும் அனுமதிப்பது. நான் இதை மிகத் தீவிரமாக நம்புகிறேன். அந்தந்த தருணத்தின் சிக்கல்களுக்குள் – அது எவ்வளவு வன்முறைமிக்கதாக இருந்தாலும் – நுழைவதற்கான முயற்சியாக அதைப் பார்க்கிறேன். அதனூடாக கவிதையின் பணி என்பது, ஒரு வகையில், இவ்வுலகுடன் – அதை அப்படியே முகதாட்சயணத்தில் ஏற்காமலும் பிழையான காரியங்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் – நம்மை சமாதானம் செய்ய வைப்பது. சமாதானம் என்பது அதன் உன்னதபொருளில் சொல்லப்படுகிறது. நம்மை மீண்டும் அன்பிற்கு திரும்பச் செய்வது, கற்பனையின் ஆட்சிக்கு திருப்புவது, மரிக்கும் வாழ்வின் எல்லைக்குள் கொண்டு வருவது.
9.
கவிதை ஒரு கைவிடப்பட்ட கலை. கவிதை எழுதுபவர்களுக்கோ அல்லது கவிதையை பயில்பவர்களுக்கோ அல்ல. ஆனால் பெரும்பாலானவர்களை பொருத்தவரை அது கைவிடப்பட்ட கலை. ஆயினும் கவிதை ஒரு வகையான அருளை அளிக்கிறது. அதை சொற்களால் விளக்க முடியாது என்பது அதன் முரண். இந்த அடிப்படை விரைவை ஷெல்லி தன் “கவிதைக்கு ஆதரவாக” கட்டுரையில் வெளிக்கொணர முயல்கிறார். கவிஞனின் ஒப்பில்லாத அசாத்திய செயல் பற்றிய வியப்பூட்டும் கதையை குறிப்பிடுகிறார். அதிலிருந்தே நாம் இன்றைய பேச்சின் தீர்மானத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
ஷெல்லி தன் கட்டுரையின் தொடக்கத்தில், அழகு பற்றி பேசும்போது , “அழிவற்ற ஒழுங்கு” (indestructible order) என்று அவர் அழைக்கும் உள்ளுணர்வானது, கலை உருவாக்குநருக்கு கொடையளிக்கப்படுவது என்கிறார். அதன் பின்னரே நம்பிக்கையின் பாய்ச்சல் வருகிறது. கலைஞர்கள் “சட்டத்தின் தொடக்குநர்கள், குடிமைச்சமூகத்தின் ஸ்தாபனர்கள்” என்று வாதிடுகிறார். இன்னும் முற்கால வழக்கில் சொல்லப்போனால், அவர்கள் விதி சமைப்பவர்கள்.
இது, தவறி விழும் ஓர் உடல், உயிர் பிழைக்க ஏதேனும் ஒரு சாத்தியமான இடத்தை பற்ற எண்ணும்போது நிகழும் ஒரு தாவல் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த உடலையே தாங்கமுடியாத தாவல். அழகின் மீதும் “கட்புலனாகாத உலகம்” மீதும் நமக்கு இருக்கும் தீவிரமான அச்சம் நிரம்பிய கருத்தை, நம்முடைய சாதாரணச் சட்டங்களிலிருந்தும் முறைமைகளிலிருந்தும், கட்சிகள் மற்றும் பாராளுமன்றம் பற்றிய சிந்தனைகளிலிருந்தும், தூய அதிகாரத்தின் ஆற்றல்களிலிருந்தும் பிரிக்க வேண்டும்.
10.
“நான் கேட்கிறேன் சிறுகொக்கிகள் வெடிப்பதை
முலைக் கச்சவிழ்வதை
இதயம் துடிப்பதை, சுவாசிப்பதை“
இதை செய்யத்தான் வேண்டுமா? நிச்சயமாக. என் வரையில், உணர்ச்சியின் பாற்பட்ட வாழ்வும், கவிதையும் -அதாவது ஷெல்லி குறிப்பிடும் பரந்த பொருளில் – அரசியலில் சட்டம் இயற்றுபவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் முடிவுகளுக்கும்கூட முக்கியமே. சமீபத்தைய நம் பொது விவாதங்களிலிருந்து இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லலாம். துப்பாக்கியின் பயன்பாடு சார்ந்த சட்டங்களின் தன்மை; புலம்பெயர்தல் தொடர்பான சிக்கல்.
ஆனால் ஷெல்லியை பொறுத்த மட்டில் தீர்க்கதரிசனத்தின் நிழலே கவிஞனை விதிசமைப்பவராக ஆக்குகின்றது. அவருடைய சொற்களில் “கவிஞர்கள் பற்றமுடியாத அக எழுச்சியின் பூசாரிகள், எதிர்காலம் நிகழ்காலத்தின் மீது விழச்செய்யும் நிழலைக் காட்டும் கண்ணாடிகள்”.
“பேரிடர்கள்” என்ற தலைப்பில் கவிஞர் ஜார்ஜ் ஒப்பேன் (George Oppen) ஷெல்லிக்கு எழுதிய மறுமொழியை நோக்கி என் மனம் திரும்புகிறது. அந்தக் கவிதையில் ஒப்பென் இவ்வாறு எழுதுகிறார்,
“மேற்கே போர்கள்
அரசியலில்
காற்றும் புயலும்
கவிஞனின் தற்பெருமையோ
எனக்கு நோவூட்டுகிறது
[அவர்கள்] அங்கீகரிக்கப்படாத உலகின்
சட்டமியற்றிகள் …
அதென்ன அங்கீகரிக்கப்படாத உலகம்?
அனேகமாகக் கண்ணீரெட்டாத ஆழத்தில் இருக்கும் ஒரு உலகமாக இருக்கக் கூடும்.”

11.
நான் ‘9/11’ துயரம் நிகழந்தபோது நியுயார்க் நகரத்தில் இருந்தேன். உயிர் வாழ்வதற்கான வழியாக, கவிதையே இருந்தது. நான் எப்போதும் சுமந்தலையும் சிறிய காகிதத் துண்டுகளில் கவிதை எழுதினேன். வானொலியில், யூனியன் சதுக்கத்தில், பொது இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் கவிதைகளை வாசித்துக் காட்டினர். நெருக்கடியான அந்த கட்டத்தில் தீவிரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கவிதை எப்படியோ தேவையாக இருந்தது. உயிர் நீத்தவர்களுக்காக நான் ஒரு இரங்கற் பாடல் தொகுதியை எழுதினேன். அவை ’பச்சை பட்டு’ (‘Raw Silk’) என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.
பாடல் கவிதை (Lyric Poem) உலகிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த மெளனத்தின் வடிவம். ஒரு பாடல் கவிதையை, புனைவதற்கு நான் கனவு நிலையை எட்ட வேண்டும். அதே நேரத்தில், தொடர்பறுத்தல் மூலமாகவே உலகை எண்ணித் தொகுத்துக்கொள்ளும் ஒரு நுண்ணிய தளமாகவும் அது மாறுகிறது.
பின்விளைவு (நியுயார்க் சிட்டி, செப்டெம்பர் 13-18, 2001)
“வானில் என்றுமில்லாத ஓர் ஒளி
வெளுத்த மலரிதழ்கள் பாறைகளில் பதிந்துள்ளன
நதியின் ஓரத்தில் குனிந்திருக்கும்
லிண்டன் மரத்தைப்பற்றி எனக்கு எழுத வேண்டும்
ஆனால், காய்ந்த குருதி வண்ணச் சிறகுகளோடு
பூச்சிகள் அதன் இலைகளில் நிறைந்திருக்கின்றன
ஹட்சன் ஆற்றின் கடைக்கோடியில்
நம் தீவின் தெற்கு நுனியில்
ஒரு மலை உயர்கிறது, வாக்கியங்களின் வெள்ளப்பெருக்கு
ஒலியசைகளின் தழல் இடிமானங்களைச் சேர்த்துத் தைக்கின்றது
ஒரு கண், ஒரு உதடு, ஒரு உடைந்த கை மலர்கிறது
இனிப்பும் கசப்புமான புகை வானை நிறமேற்றுகிறது.”
‘அங்கொரு தீவு இருந்தது’ (‘Late, there was an island’) என்று தலைப்பிட்டு நான் கவிதை தொகுப்பொன்றை புனைந்தேன். மேற்குறிபிட்ட கவிதை அத்தொகுப்பின் முதல் கவிதை. இக்கவிதைகளை எழுதிய வேளையில், தீர்த்த யாத்திரை செல்வது போல, ஆயிரக் கணக்கானோரின் சுடுகாடாக மாறிய அந்த இடத்திற்கு, சதையும் உலோகக்கம்பிகளும் கருகும் வாசம் வீசும் அப்பேரிடர் நிகழ்ந்த இடத்திற்கு – எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகில்- மீண்டும் மீண்டும் நடந்து சென்றேன்.
லிபர்ட்டி தெருவை கடக்கும் பொழுது அச்சுற்றுவட்டத்தில் காவல் பணியிலிருந்த படைவீரனின் மிகுதியான இளமை என் முகத்திலறைந்தது. செம்புள்ளிகள் நிரம்பிய புத்துணர்ச்சியான முகம். அவன் பின்னால் தெரிந்த தெற்கு கோபுரத்தின் கூட்டின் முன்னால் நின்று கொண்டு ஒரு தொண்டு கிழம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தது; குழந்தைகள் புறாக்களைக் கண்டு இன்பக்கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்; மீட்புப் பணியாளர் ஒருவர் நச்சுப்புகை முகமூடி இடுப்பில் தொங்க, குழிவிழுந்த முகம் சோர்ந்து வழிய, தன் கையால் தொண்டையை தாங்கிக்கொண்டிருந்தார்.
12.
இதற்கு அடுத்த மாதம், புதிதாக தொடங்கப்பட்டிருந்த ஆசிய/ஆசிய-அமெரிக்க ஆய்வகத்தின் கூடுகை நான் பணிபுரியும் அதே கல்வி மையத்தில் நடந்தது. அதில் என்னை ஆட்சிக்குழு உறுப்பினராகப் பங்காற்ற அழைத்திருந்தனர். நான் மறுயோசனையே இல்லாமல், இயல்பாக சேலை அணியும் தருவாய்களில் அதுவும் ஒன்று என்றாலும், அப்போது என்னை வேறொன்று உறுத்தியது.
என்னுடைய இரண்டு தெற்காசிய மாணவிகள், மேற்கத்திய பாணி அல்லாத உடையணிந்து பிரச்சனைகளை சந்தித்திருந்தனர். அவர்களைப் பார்த்து ஆண்கள் கூச்சலிட்டனர். காகிதப்பைகளை தூக்கி எறிந்தனர். பாஸ்டனில் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஆள் கூச்சலிட்டு தன் மீது காறி உமிழ்ந்ததை என் தோழி தொலைபேசியில் தெரிவித்தாள்.
ஆசியர்கள், தெற்காசியர்கள், பழுப்பு நிறத்தவர்கள் என அராப்களை போல் தோற்றமளிக்கக்கூடியவர்களைச் சுற்றி ஒரு சந்தேக வளையம் விரிந்துகொண்டிருந்தது. வாழ்வின் சிறிய விஷயங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கட்டுப்பாடு தேவையாயிருந்தது. நான் என் சண்டைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்பினேன். சற்று வித்தியாசமாக தெரிவது அபாயகரமானது என்றால் வேண்டுமென்றே துருத்திக்கொண்டு திரிவது வீண்வேலை. நான் அதிகமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். என் ஆற்றலை என் எழுத்திற்கு சேமித்துவைக்க வேண்டியிருந்தது.
என் புடவையை கசங்காத வண்ணம் சுருட்டி ஜாக்கிரதையாக பிளாஸ்டிக் பையில் நுழைத்து புத்தகப் பையின் நடுவில் சொருகினேன். நான்காவது மாடி கழிவறையில் கால் சட்டையை நெகிழ்த்தி புடவையை அணிந்து கொண்டேன். ஓட்டுத்தரையில் என் புடவையின் பட்டைப்பார்த்துக் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தை வெறித்து நோக்கினேன்.
நான் தான் எவ்வளவு கரியவளாக இருக்கிறேன் – சந்தேகத்திற்கிடமில்லாமல் இந்தியன். என் பயத்தை சிந்தித்துக் களைய எண்ணினேன். பின்னால் அதை கவிதையாக எழுதும் போது இடைக்காலத்தைச்சேர்ந்த துறவி-பாவலர் கபீரின் மொழியை செவிகூர்ந்து என் வாழ்க்கையை வாழ்வதற்கான துணிவை அடைந்தேன். அந்த கவிதை இது.
எரியும் கோபுரங்களின் நகரிலே கபீர் பாடுகிறார்
என்ன ஒரு மானக்கேடு
அவர்கள் உன்னை அச்சுறுத்திவிட்டனர்
நீ உன் சேலையை பறித்துக் களைந்து
அதை சிறிய பந்தாகக் கசக்கி
கழிப்பறையின் தரையில்
பரப்பியும் விட்டாய்
கோபுரங்களிலிருந்து தீப்பொறிகள்
பட்டின் ஊடுபாவில் தெறித்தோடின.
உன் கருங்கூந்தலுடன்
வெயிலிட்ட கருந்தோலுடன்
நீ இம்மண்ணின் குழந்தையாய் இருக்கிறாய்
நெசவாளியான கபீர் பாடுகிறான்:
ஓ மனிதர்களே நாய்களே
துக்ககாலத்தில்
நம் சுழலும் பூமி
சிறிதாகச் சுருங்குகிறது.
13.
பேரதிர்ச்சிகளின் காலத்தில், கலை என்பது ஒரு அவசியமான மொழிபெயர்ப்பு. வால்டர் பெஞ்சமின் எழுதுகிறார், “உடைந்த கலத்தின் துண்டுகள் ஒட்டப்பட வேண்டும்“.
ஆனால் ஒட்டும் கோந்து, உடைந்த கோடுகளையும் முறிவுகளையும் வெளிக்காட்டினால் என்ன செய்வது?
வன்முறை காலத்தில் ஒரு கலைப் படைப்பு நிஜத்தின் சட்டகத்தை பயன்படுத்தி, கிட்டத்தட்ட தெளிவேயில்லாமல் இருக்கும் ஒரு எழுத்துருவை, பேரதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான ஒரு ரகசியக் குறியீட்டை மொழிபெயர்க்க வேண்டும்.
தன் லயத்தில் ஒரு கவிதை, ஒரு கலைப்படைப்பு – உடைந்த படிகளை, கடுமையான மௌனங்களை, கொடூரமான வெடிப்புகளை, உண்மையை – அசை பிரித்து அலகிட்டு இணைக்க முடியும். அப்படி இணைத்து உருவாக்கும் ஒன்று ஒரே சமயத்தில் இவ்வுலகத்தில் இருக்கும் ஒரு பொருளாகவும், அதே நேரம் தன் அச்சமூட்டும் ஒத்திசைவினாலும் ஒளிரும் நெகிழ்வுத் தன்மையினாலும், உலகை தன்னுள் அனுமதிப்பதாகவும் இருக்கும்.
நம் வாழ்வை அதன் நொறுங்கும் மென்மையோடும் நிலையின்மையோடும் மீண்டும் நமக்கே தர வல்ல மறுவார்ப்பாக நான் அதைப் பார்க்கிறேன்.
14.
நிறைவாக சில சொற்கள்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கவிஞரை, இருள் நிறைந்த வாயிலில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக நான் கருதுகிறேன்.
அவள் ஓர் இல்லத்தரசி, ஆனால் சற்று விசித்திரமானவள்.
இருள் நிறைந்த வாயிலை ஒட்டி திரிந்து கொண்டிருப்பவள். இவ்வுலகின் விளிம்பில் ஓர் இல்லத்தை பராமரிக்க, அதற்கான சமநிலையை எட்ட சரியான புள்ளியில் அவள் நிற்க வேண்டும்.
தன்னிரு கைகளையும் அவள் நீட்டிக் கொள்கிறாள். அவை தாங்கி நிற்க உதவும். அவள் தன் வழியை கண்டடைய உதவும்.
பல நாவுகளால் அடையாளம் குறிக்கப்பட்ட ஒரு மொழியை அவள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
அவள் எழுதும் எழுத்துரு , அவளை பொதுப்பார்வைக்கு கொண்டு வருகிறது. பொதுவெளியில் முன்வருவது என்பது ஆபத்தை குறிப்பது, வேட்கையை குறிப்பது.
அவளுக்கு நேர் பின்னால், இருண்ட அவளுடைய வீட்டில் அவளூடாக மொழிகள் பொழிந்தபடி இருக்கும்.அவளை அறிந்தவர் எவரும் அதை ஒரு பொழுதும் வாசிக்கவோ எழுதவோ போவதில்லை.
அச்சொற்கள் அழகிய ஓர் உடலை (corpus perdu) வடிக்கின்றன. அது நுட்பமானது, உயிர்த்துடிப்பு மிக்கது. எவராலும் கைப்பற்ற முடியாதது.
அனைத்து மொழிபெயர்ப்பின் பிறப்பிடமும் அதுவே.

பார்கவி
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஸ்ரீநிவாஸ் எனும் தன் நண்பருடன் இணைந்து “இம்பர்வாரி செவ்விலக்கிய வட்டம்” என்ற கம்பராமாயண வாசிப்புக் குழுமத்தை நடத்தி வருகிறார். சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

21 ஆம் நூற்றாண்டின் கவிஞரை ஒரு இல்லதரசி என்று மீனா அலெக்சாண்டர் உருவகப்படுத்துகையில், அவளுக்குப் பின்னால் இருட்டில் பொழிந்துகொண்டிருக்கும் அத்தனை மொழிகளையும் நான் குழந்தைகள் அல்லது அவளது கவிதைகள் என்று வகைப்படுத்துகிறேன். பாலஸ்தீனக் குழந்தைகளின் சாயல்கள் அதற்கு உள்ளன.
கவிதை எதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற நிச்சயத்துடன், ஒப்பிடத்தக்க அளவில் அமைதியான ஒரு காலத்தில், 90களில் கவிதை என்ற வடிவத்தை தேர்ந்து கொண்டவன் நான். இந்தக் காலகட்ட இடைவெளியில் கலைஞர்கள், மதவாதிகள், அடிப்படைவாத ஆட்சியாளர்கள் எல்லாரும் சேர்ந்து, கவிதை என்ற வடிவம் மிகப் பொறுப்புடையது, கனமானது என்ற எண்ணத்தை எனக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.
“இறகுகளைக் கொண்டதும் புனிதமானதுமான லேசான வஸ்து” என்று கவிதையைச் சொல்கிறார் ப்ளேட்டோ. ஆத்மாநாமையும் சமீபத்தில் யவனிகா ஸ்ரீராமையும் அடியொற்றி நான் அதை பொறுப்பு கொண்டதுமென்று சுமக்கத் துணிகிறேன்.
தமிழில் நவீன கவிதையில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கவிஞர்களும் கவிதை வடிவத்தை மலினமாக ஆக்குவது இந்த வடிவத்துக்கே ஏற்பட்ட சாபம். அந்த அடிப்படையில் மீனா அலெக்சாண்டரின் கட்டுரை, கவிதை வடிவத்தில் இயங்குபவனாக, அழகியல் தாண்டி எனது பொறுப்பையும் மீண்டும் நினைவூட்டுகிறது.
சமாதானம், அமைதி, அழகு, அன்பு எல்லாமே வார்த்தைகளாகச் சிறியவை. ஆனால், அவற்றை அடைவதற்கான பாதைகளில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. கவிதை அந்த இடிபாடுகளை நுட்பமாகச் சுட்டிக்காட்டும் வலிமை கொண்டது.
மீனா அலெக்சாண்டர் என்பவரை நான் எனது நண்பர் விஷால் ராஜா வழியாக அறிவேன். அவரது கவிதைகளையும் படிக்கத் தூண்டும் கட்டுரை இது. குறிப்பாக மொழிபெயர்ப்பு வாசகனை எங்குமே இடர்படுத்தாத வாஞ்சை மிக்கது. மீனா அலெக்சாண்டரை மொழிபெயர்த்த பார்கவிக்கு எனது வாழ்த்து.
மிக்க நன்றி, ஷங்கர் sir. நெகிழ்ச்சியடைந்தேன்.
கட்டுரையை பரிந்துரைத்தமைக்கும் செம்மைப்படுத்தியதற்கும் நண்பர் விஷால் ராஜாவிற்கு என் அன்பும் நன்றியும்.
மிகச் சிறுபான்மையினராக இயங்கும் கலைஞர்கள் சமூகத்துக்குள்ளேயே அறிவார்த்த உரையாடலை இழந்து, குழு மனப்பான்மைக்குள், மௌடீகமான கும்பல் மனோபாவத்துக்குள் நாம் சமீபகாலத்தில் தமிழ் சூழலில் சென்றுள்ளோம், பார்கவி. பழையகால மடங்கள் உருவாக்கிய மனோபாவம் அது. தீவிரத்துக்கும், சத்தியப் பாதைக்கும் எதிரானது அது. மீனா அலெக்சாண்டரின் கட்டுரை, அந்த மௌடீகத்தைக் குலைக்கும் வல்லமைகொண்டது. அதனாலேயே அது முக்கியத்துவம் வாய்ந்தது.