
எல்லா நாட்களைப் போலவே அன்றைய தினமும் வழக்கமான ஒருநாள் தான் என்று விடுதியிலிருந்து பொது தார் சாலைக்குத் திரும்பும் போது கண்ணில் பட்ட கொன்றை மரத்தைக் காணும் வரையிலும் நம்பிக்கொண்டிருந்தான். எந்தவித ஆர்வமோ, பதட்டமோ அன்றி சலனமற்று இருந்த அவனுக்குத் திடீரென்று கண்ணில் பட்ட அந்த கொன்றை மரத்தின் சடை சடையாய் பூத்துத் தொங்கிய மலர்களைப் பார்த்ததும், யாரோ மஞ்சள் நிற சேலைக் கட்டிக் கொண்டு குறுக்கே நிற்பதைப் போலத் திடுக்கென்றது. எனினும், தாமதமில்லாமல் தனது ஆகாய நிற வெஸ்பாவை செலுத்தியபடி விரைந்தான். இத்தனை நாட்கள் இந்த மரமும் பூக்களும் இங்குதான் இருந்ததா என்று அவனுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.
வண்டி பல்கலைக்கழகத்தில் காதலர்கள் கூடும் தாமரைத் தடாகத்தைக் கடக்கும் போது, இன்னொரு அதிர்ச்சியும் அவனுக்குக் காத்திருப்பதை அவன் முதலில் கவனிக்கவில்லை. எனினும், தான் செல்ல வேண்டிய கட்டிடத்திற்காக வேண்டி அப்போதுதான் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நடந்துகொண்டிருந்த ஒன்டில்லுவை நூலிழையில் இடிப்பதைப் போல அவன் வண்டி நெருங்கி நின்றது.
ஓரேய் நீ… என்று திட்டி முடிப்பதற்குள் அது ஒன்டில்லுதான் என்பதை கண்டுகொண்டு சுதாரித்து வராத சிரிப்பை உதிர்க்க முயற்சித்தான் சித்திரை மாடன்.
என்ன பேசுவதென்று இருவருக்குமே தெரியாததால் அங்கிருந்து இருவரும் கிளம்பிவிட்டது சரிதான் என்று தோன்றுகிறது.
ஆனால், இன்று நேற்று இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட ஐந்தாண்டுகளில் இதுவரை அவர்கள் பேசிக்கொண்டதே இல்லை.
000
சித்திரை மாடன் தான் வேலை பார்க்கும் மொழிப்புலத்திற்கும் ஒன்டில்லு தான் வந்த வேலையின் பொருட்டு புலமுதன்மையர் அலுவகத்திற்குமாக சென்றனர். இருவருக்கும் தங்கள் பழைய நினைவுகள் யாவும் மேற்கிளம்பி அலைமோதின. ஆனால், அது அவர்களைக் குறித்து அல்ல, அவர்கள் இருவரும் காதலித்த கார்த்திகாவைப் பற்றித்தான்.
000
ஒருவர் தன்னைப் பின்தொடர்வதை ஆண்களைவிட பெண்களே உடனடியாகக் கண்டுபிடித்துவிடுகின்றனர். அப்படித்தான் கார்த்திகா தன்னை ஒன்டில்லு பின்தொடர்வது குறித்து ஓர் நாள் சித்திரைமாடத்திடம் சொன்னாள். அப்படியா? யாரது? என்று கவனித்தவனுக்கு எதிரில் நின்ற ஒன்டில்லுவைப் பார்த்ததும் தாழ்வுணர்வு ஓடி வந்து அப்பிக்கொண்டது. ஒன்டில்லுவின் வாளிப்பான உடலையும், அழகிய மயிர்க் கோலத்தையும், உயர்ரக வண்டியையும் தன்னுடைய நோஞ்சான் தேகத்தையும், எதற்கும் வணங்காத சுருள் முடியையும், ஆந்திராவுக்குக் கொண்டுவந்திருந்த தமிழக அரசு தந்த மிதிவண்டியையும் ஒப்பிட்டுக் கொண்டான். அத்தனை வேகத்தில் தன்னை பிறிதொருவனோடு ஒப்பிட்டுத் தாழ்வு கொண்டது ஏன் என்பது, அது எப்படி நிகழ்ந்தது என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அவனும் அவளும் பல்கலைக்கழகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒன்டில்லு அவர்களைப் பின் தொடர்ந்த மாதிரி தெரிந்தாலும் மாடன் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், கார்த்திகா அவன் பின் தொடர்வதையும், பார்த்துச் சிரிப்பதையும், மயிரை ஒழுங்கு செய்வதையும் இவனிடம் சொல்லிக் கொண்டே வந்தாள். சித்திரை மாடத்திற்குக் கோபமும் தெரியாத சிரிப்பும் ஒரு சேர அவனில் முட்டிக்கொண்டு வந்தன.
தன்னைவிட அவன் அவளுக்குப் பொருத்தமானவனாக இருப்பானோ என்றும், தன்னை விட்டுவிட்டு அவள் அவனைக் காதலிக்கிறாளோ என்றும் சில நாட்களாக எண்ணங்கள் தோன்றி அவனை அலைக்கழித்தன. அவள் தன்னை நேசிப்பதை பொதுவெளியிலும் தயங்காது பேச்சிலும், சாடையிலும், தொட்டும் காண்பித்த போதும் ஒன்டில்லு தனக்கு எதுவும் புரியாதது போலவும், அது ஒரு பொருட்டல்ல என்பது போலவுமே நடந்துகொண்டது தன்னைச் சீண்டுவது போல இருந்தது மாடனுக்கு.
தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவன், தன் மொழி பேசாத ஒருவன், தான் காதலிப்பவனைவிடவும் அக்கறையாய் காலை தான் விடுதியிலிருந்து கிளம்பும்போதும், மாலை துறையிலிருந்து கிளம்புபோதும் நேரம் தவறாமல் பின் தொடர்வதை சில நாட்கள் ரசித்து வந்தாலும், அது அவளுக்குத் புரியாத அச்சத்தையே உண்டுபண்ணியது. மாடன் அவனாக கண்டுபிடித்தால் சரியாக இருக்காது என்று, அன்று அவள் சொன்னதும் அவன் திகைத்ததைப் பார்த்து, ஒருவன் என்னைப் பின் தொடர்வதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாயா என்று சண்டைப்போடத் துணிந்தாள். சண்டைப்போடுவதைவிட, அவனைவிடவும் ஒன்டில்லு அக்கறையோடு இருப்பதைச் சுட்டிக்காட்டி மாடனைச் சீண்டுவதும், அதிக அக்கறையைப் பெற்றுக்கொள்வதும் அவளுக்குப் பிடித்திருந்தது.
ஆனால், நாளுக்கு நாள் அதே தீவிரம் ஒன்டில்லுவிடம் இருந்ததைப் பார்த்து அவள் அயர்ச்சிகொண்டாள். மாலை மட்டுமே தன்னை விடுதி வரையிலும், அல்லது அதைத்தாண்டி நுழைவாயிலுக்கு அருகே இருக்கும் கடைகள் வரையிலும் வந்து விட்டுச் செல்லும் மாடனை, காலையும் என்னோடு வா என்று அழைத்தாள். காலை எழுவதையே பெரிய சாகசமாகக் கருதும் மாடனுக்கு அவளை அழைத்துச் செல்வது மட்டும் வேலையாகவே தெரியவில்லை. எனினும் தங்கள் இருவர் முதுகிலும் ஒன்டில்லுவின் கண்கள் அப்பிக் கொண்டிருப்பதைப் போலவும், தாங்கள் பேசும் போது அவனுடைய காதுகள் பிரிந்து வந்து பேசுவதை ஒட்டுக் கேட்பதைப் போலவும் அசௌகர்யம் இருவருக்கும் இருந்தது.
000
தான் அவளைக் காதலிப்பது நன்கு தெரிந்தும் எப்படி ஒருவனால் அவளை, அவள் காதலிப்பவன் உடன் இருந்தும் பின்தொடர முடிகிறது என்பதை மாடனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. தன்னைவிடவும் அவன் அழகாக இருப்பதால், தன்னை அவன் பொருட்படுத்தவில்லையா என்று தோன்றியது; தன்னைப் பார்த்து ஒன்டில்லு அஞ்சுவதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று பலவாறு அவன் யோசித்தாலும், அதில் எதையுமே அவன் கைக்கொள்ளவில்லை. மட்டுமல்லாது, அவனுமே பின்தொடர்வதைத் தாண்டி அடுத்த முன்னெடுப்புகளுக்கு ஏன் செல்லவில்லை என்பதும், நிகழாத ஒரு விசயத்திற்காக அவன் ஏன் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்று மாடனுக்குத் தெரியவில்லை.
000
ஒன்டில்லு மயிர்க் கோதுவதையும் வண்டியின் மீது வாகாக உட்கார்ந்துகொண்டு சிகரெட் பிடிப்பதையும் அடிக்கடிச் சொல்லும் கார்த்திகா அவன் அழகாக இருப்பதாகவும் சொல்வது உண்மையாகவா அல்லது தன்னைச் சீண்டுவதற்காகவா என்று தெரியாமல் குழம்பியபடியே இருந்தான் மாடன்.
தனக்கு ஒன்டில்லு போல ஒரு உடல் வாய்த்தால், தலை மயிர் தன் பேச்சைக் கேட்டால், தன்னாலும் சிகரெட் பிடிக்க முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தான் மாடன். முதலிரண்டும் இப்போதைக்கு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவள் முன் ஒன்டில்லு போலவே சிகரெட் பிடித்துக் காண்பிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அன்று மாலை எங்கும் இல்லாத தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனக்குச் சுத்தமாக பிடிக்காத புகைப்பதை அவன் முயற்சிக்கத் துணிந்தான்.
வழக்கம் போல இருவரும் தேநீர் கடையை அடைந்தனர். ஒன்டில்லுவும் கருமம் தவறாது அவர்களைப் பின் தொடர்ந்து வந்தான். கார்த்திகா உடன் வந்த இருவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த போது, மாடன்,
மாடன்: அண்ணா ஒக சிகரெட் இஸ்தாரா….
நன்கு பரிச்சயமான கடைக்கார அண்ணன் அவனை தினுசாகப் பார்த்தார். அவர் அவன் புகைப்பவர்களைப் பலமுறை கடைக்கருகே இருந்து விரட்டியதைப் பார்த்து வந்தவர். ஆனால், அதைப் பற்றிக் கேட்பதற்குத் தன் வரம்பிலில்லை என்று சுதாரித்துக் கொண்டு ஒரு சிகரெட்டைத் தந்தார். பிஸ்கெட்கள் நிரப்பி அடுக்கி வைத்திருக்கும் கண்ணாடி பாட்டில்களுள் ஒன்றின் மீதிருந்த தீப்பெட்டியை எடுத்து, எப்படிப் பற்ற வைப்பது என்று தெரியாத கூச்சத்தில், திரும்பிப் பற்ற வைத்து, அவள் முன்னும் அவன் முன்னும் ஒரு இழுப்பு இழுத்துக் காட்ட வேண்டும் என்று நினைத்து இதழ்களின் மீது வைத்தான். அவள் பார்க்கவும், அவனுக்குள் புகை மூண்டு லொக் லொக் என்று இருமவும் சரியாக இருந்தது. ஒன்டில்லு அவனைப் பார்த்துச் சிரிக்கவும், பொத்துக் கொண்டு வந்த கோபத்தில் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டாள் கார்த்திகா.
000
அவள் அங்கிருந்து சென்றதும், ஒன்டில்லு தன்னைப் பார்த்துச் சிரித்ததும் அவனுக்கு மிகுந்த சங்கடத்தைத் தந்துவிட்டது. வழக்கமாக வரும் குறுஞ்செய்திகளும் அழைப்பும் அன்று இரவு அவனுக்கு வரவில்லை. தானும் குழப்பத்தில் இருந்ததால் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த அவனுக்கு இரவு படுக்கையில் சாயும் போது அவன் நித்திரைக்கு உத்தரவிடும் அழைப்புக்குப் பிறகான அவளுடைய குட் நைட், முத்த எமோஜிகள் அவனுக்குக் கிடைக்கவில்லை என்பது நல்லதாகப் படவில்லை. ஏனெனில் எவ்வளவு சண்டை போட்டாலும், பேசவில்லை என்றாலும், அவளிடமிருந்து இந்தக் குறுஞ்செய்திகள் வராத நாள் இல்லை. ஒருவருடத்திற்கும் மேலாக கிடைத்துவரும் ஒரு பொருட்படுத்துதல் திடீரென்று கிடைக்காமல் போகவும், அவன் மேற்கொண்டு அஞ்சியும், குழம்பியும் போனான். உடனடியாக அழைத்தும் அழைப்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. தலை சூடேறி என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் மாடன். என்னண்ணா, அண்ணிக்கு கால் போட்டா போகல, ஸ்விட்ச் ஆஃபா என்று கேட்டான், அவனோடு தங்கி இருந்து அவனுடைய தம்பி பனகல். ஒன்றும் பேசாமல், தூங்கவும் முடியாமல் அன்று ராத்திரி பூராவும் மரங்களடர்ந்த, பூச்சி மண்டிய அந்த விடுதியின் புற வெளியில் அலைந்துகொண்டே இருந்தான் மாடன். மறுநாள் துறைக்கும் அவள் வராததை நினைத்து அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நேற்று நடந்தது, சாதாரண விசயமா அல்லது பிரிவுக்கான நிமித்தமா என்று அவனுக்குத் தீர்மானமாகத் தெரியவில்லை. மறுநாள் காலை அவளாக அழைத்தாள், அழைத்த அடுத்த நொடி பதறியபடி ஃபோனை எடுத்த மாடனால் ஒன்றும் பேச முடியவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.
கார்த்திகா: “ஓ ஸாரி பெரிய மன்மதக் குஞ்சுன்னுதான் நாங்க லவ் பண்ணமோ?” என்றாள்.
மாடன்: …………………..
கார்த்திகா: “மூடிட்டு ஃபோன வை”
அன்று அவள் துறைக்கு வருவாள் என்று தோன்றியது மாடனுக்கு. தனியாகச் செல்லத் துணிவில்லாமல் தன் தம்பி பனகலை அழைத்துக் கொண்டுச் சென்றான் மாடன்.
பனகல்: “என்ன வ்ரோ தம்பிய பாசமா கூட கூட்டிட்டு போறீங்க? ஏதாச்சும் பஞ்சாயத்த தீத்துவைக்கணுமா. அந்த கொல்டிய தூக்கனுமா சொல்லு.. தூக்கிருவோம்?” என்றதும், இவனுக்கு மட்டும் இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சும்மா இருந்தான்.
விடுதிக்கு அருகே இருந்த கோவில் முன் இருவரும் உட்கார்ந்திருந்த போது ஒன்டில்லும் தவறாமல் அங்கு வந்து சேர்ந்தான். நான்கு பக்கமும் பெரிய சுவர்களைக் கொண்ட அந்த விடுதிக்கு கார் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல பெரிய இரண்டு கதவுகளும், மற்ற சமயங்களில் விடுதி தென்படாமல் இருக்க, ஓரிருவர் மட்டும் சென்று வருவதற்கென்று சிறிய கதவும் இருந்தது. கார்த்திகா இவனோடு நேரம் செலவழிப்பதற்காக சீக்கிரமே கிளம்புவதை வாடிக்கையாக வைத்திருந்ததால், அவள் அந்தச் சின்னக் கதவின் வழியாகத்தான் வெளியே வருவாள். அவள் வெளியே வந்ததும் எதிரில் சாலையின் எதிர்ப்புறத்தில் நின்று கொண்டிருந்த ஒன்டில்லுவைப் பார்த்ததும் அவளுக்கு எரிச்சலும், அழுகையும் வந்தது. சுதாரித்துக் கொண்டு திரும்பி இடது பக்கம் பார்க்கவும் அங்கு போடப்பட்டிருந்த கற் பலகைகளின் மீது உட்கார்ந்திருந்த மாடனையும், பனகலையும் பார்த்து அவளுக்குப் புரியாத சிரிப்பு வந்தது. எனினும் வந்தச் சிரிப்பை உடனே மறுத்துவிட்டு, முறைத்தபடி சாலையில் நடந்தாள். (விடுதிக்கு முன்பு யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். உரியவர்கள் வருவதைப் பார்த்துவிட்டு, அவர்களைப் பின்தொடர்வது மட்டுமே வாடிக்கை. பின் தொடர்ந்து கொஞ்ச தூரம் சாலையில் நடந்து சென்ற பின்பு, விடுதி, விடுதி காவலரின் கண்களிலிருந்து மறைந்த பின்புதான் சகஜமாக யாரும் யாருடனும் பேசிக்கொள்ள முடியும்; மற்றபடி ஏதாவது பொருட்களைத் தரவேண்டும் என்றாலும் கூட அங்கிருக்கும் காவலரிடம் தான் தந்துவிட்டுச் செல்ல வேண்டும்).
தன்னைப் பார்த்ததும் ஒன்டில்லு மீண்டும் சிரிப்பதைப் போல பட்டாலும் ஒன்டில்லு பனகலைப் பார்த்து சற்றே ஜகா வாங்கியதைப் போலப் பட்டது மாடனுக்கு. தாங்கள் பேசத்தொடங்கும் இடம் வரவும் தன் நடையின் வேகத்தைக் குறைத்தாள் கார்த்திகா. அதை அறிந்து உடனே, மாடனும், பனகலும் வேகத்தைக் கூட்டி அவளை நெருங்கினார்கள். பனகல் குஷியுடன் குட் மார்னிங் மேடம் என்று பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியைக்கு வணக்கம் வைப்பது போல ராகத்துடன் சொன்னான்.
கார்த்திகா: என்ன ஸார். அண்ணிய பாக்க வந்திருக்கீங்க. என்ன தூதா?
மறுமொழியாக பனகல் ”தூதா? என்னத்துக்கு” என்றதும், அவனிடம் நடந்த விசயம் எதுவும் பகிரப்படவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு சுதாரித்தவளாய், ”ம்ம்ம்… உங்கண்ணனுக்கு வேற அண்ணி வேணுமாம்?” என்று சீண்டினாள்.
பனகல்: “யாரு இவனுக்கு….? அவ்ளோலாம் இல்ல இவனுக்கு. ஒருநாள் நீங்க மூஞ்ச தூக்கி வச்சிக்கிட்டாலே மூக்க சிந்திட்டு இருப்பான். இவனுக்குப் போயி…”
கார்த்திகா ஏதோ தயக்கம் விலகியதைப் போல மாடனை நெருங்கி, அவன் இடுப்பில் கை போட்டு, வலுவாக ஒரு கிள்ளினாள். மாடன் வலி தாங்காமல் குதிக்கவும், பின்னால் சற்று தொலைவில் வந்துகொண்டிருந்த ஒன்டில்லு அங்கிருந்து மாயமானதைப் போலப்பட்டது இருவருக்கும்.
000
பருவத் தேர்வுகள் நிறைவுற்று, கிடைத்தக் கோடை விடுமுறை முடிந்து திரும்பவும் பல்கலைக்கழகம் திறந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அத்தனை நாட்கள் ஆகியும் ஒன்டில்லுவைக் காணாதது மாடனுக்கு அதிசயமாய் இருந்தது. அவனைக் குறித்துக் கேட்கலாம் என்றால் யாரை உடனே கேட்பது என்று தெரியவில்லை. கார்த்திகாவைத் திரும்பக் கேட்டால் வம்பாகிவிடுமோ என்று நினைத்தும் தடையில்லாமல், ”எங்க அவன் ரொம்ப நாளா காணல” என்றான்.
“யாரு…. ?” என்றாள் புரிந்துகொண்டும் கார்த்திகா.
யாரு.. என்ற கேள்விக்கு உண்மையில் அவனுக்குப் பதில் தெரியவில்லை. அவனை என்னவென்று சொல்லி அடையாளப்படுத்துவது என்று இதுவரை அவர்கள் எதிர்கொள்ளாத பிரச்சனை.
திடீரென்று “ம்ம்ம் என் பங்காளி….” என்றான் மாடன்.
கார்த்திகாவுக்குப் புன்னகை பிரவகித்தது. “ஓ… பங்காஆஆஆளி… ம். ஏன் அவன் இங்க இருந்தா கூட்டிவந்து கட்டி வைக்கப் போறியா?” என்றாள் அவனை சீண்டும் தொனியில்.
“ஓய்…” என்று அவனும் சிரித்தான்.
ஒன்டில்லு படிப்பை நிறைவு செய்துவிட்டு, அந்தக் கோடை விடுமுறையின் போது விடுதியைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டது கூட அவனுக்குத் தெரியாமல் இருந்தது. அவனிடம் இருந்த அவனைப் பற்றிய சொற்ப தகவல்களான, அவன் அறிவியல் பாடம் படிப்பவன் என்பதும், அதைவிட அவன் ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்தவன் என்பதும், வந்த புதிதில் தமிழ் கிஞ்சித்தும் தெரியாது என்றும், கார்த்திகாவுக்காக வொணக்கம், சாப்பூட்டிங்ளா, காதல் பண்றேன்… ஆகிய வார்த்தைகளை மட்டும் கற்று வைத்திருந்தான் என்பதும் இருந்தனவே ஒழிய அவன் எந்த ஆண்டு படித்துவந்தான் என்பதுகூட தெரியவில்லை; இந்தத் தகவல்கள் கூட கார்த்திகா இவனுக்குச் சொன்னவைதான். தாமாக ஒன்டில்லு குறித்து ஏன் எதையும் விசாரிக்கவில்லை என்பதைத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
000
ஒன்டில்லு இருந்த நாட்களைவிட, அவன் இல்லாத நாட்களில் அவனைப் பற்றி இருவரும் நினைத்துக்கொண்டார்கள். அதில் அவனைக் குறித்தப் பெரிய நினைவுகள் அதிகம் இருக்காது என்றாலும், (தெரியாது என்பது ஒரு காரணம்) ஒருவரை மற்றொருவர் பரஸ்பரம் சீண்டிக்கொள்ள அவன் இவர்களுக்குத் தேவைப்பட்டான்.
”பங்காளி நெனப்பாவே இருக்குடீ. பாவம் உன்ன பிரிஞ்சு எப்படி இருக்கானோ” என்பான் மாடன்.
“ஆமா ஆமா. ரொம்ப அக்கறை. ஆனா, அவனே தேவலாம் உனக்கு. பாஷ தெரியாம போச்சு. என்ன பன்றது.” என்று சிரிப்பாள் அவள்.
இருவருக்குள்ளும் சன்னமான கோபம் சீண்டப்பட்டு அடங்கும்.
அவனைப் பற்றி பேசி நெருக்கத்தையும் விலக்கத்தையும் உண்டு பண்ணிக் கொள்வது அடிக்கடி நடந்துகொண்டிருந்தது. அவன் இன்னமும் பின் தொடர்வதைப் போல அவளுக்குக் கனவு வரும் நாளில், மிரண்டு அவள் எழுந்தாலும், அவனின் உறுதியான பின் தொடரலை நினைத்து அவளுக்குத் திடீரென்று பாவம் போலவும் தோன்றும்.
000
கார்த்திகாவின் படிப்பும் அந்த ஆண்டு நிறைவுற்றது.
000
இத்தனை ஆண்டுகள் கழித்து பல்கலைக்கழகம் வந்ததும் ஒன்டில்லுவுக்குக் கார்த்திகாவின் நினைவுகள்தான் முதலில் வந்தன. வேலை குப்பத்திற்கு அருகே பெங்களூருவிலேயே கிடைத்த போதும் அவனுக்குப் பல்கலைக்கழகம் வரப் பிடிக்கவே இல்லை. வேலையில் சேர்ந்த இதுநாள் வரை சான்றிதழ் பற்றிய பேச்சு முதலிரண்டு மாதங்களுக்குப் பிறகு கேட்கவில்லை. தன் சீனியர்தான் தன்னை வேலைக்கு எடுத்தார் என்பதால், அதை அவன் சமாளித்துவிட்டான். அதே நகரத்தில் மேலும் உயர்ந்த சம்பளத்திற்கான வேலைக்குச் சென்ற போது, இரண்டு வாரங்களில் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்பதால் இங்கு வரவேண்டியதாய்ப் போயிற்று.
பல்கலைக்கழகத்தில் மைய கட்டிடத்தின் முன்பு ஆட்டோ நின்றதும் இறங்கி நடந்து வந்தவனுக்குப் பல்கலைக்கழகம் முழுவதும் மாறிவிட்டதைப் போலத் தோன்றியது. கட்டிடங்கள் அனைத்தும் வண்ணம் பூசி புதுப்பொலிவுடனும், விளையாட்டு மைதானங்கள் புற்களெல்லாம் நீக்கப்பட்டு செம்மையாக இருப்பதைப் பார்க்கவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், தாமரைத் தடாகத்தை நெருங்கவும் அதில் ஒரு பூவோ, இலையோ இல்லை. சாதாரண சாக்கடைக் குளத்தைப் போல இருந்தது அது. அதை நெருங்கிப் பார்க்கவும், அதையொட்டிய பகுதியில் உள்ள புல முதன்மையர் அலுவலகத்திற்குச் செல்லவும்தான் அவன் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நகர்ந்தான். சரியாக கவனிக்காததால், இடிக்கும் படி நெருங்கிய அந்த வண்டியில் வந்திருப்பது மாடன் என்பதை அவனால் உடனடியாக நம்பமுடியவில்லை.
தான் முதலில் பார்த்த எந்த அடையாளத்துடனும் மாடன் இப்போது இல்லை. ஒடிசலான தேகம், அளவு கூடிய பொருத்தமற்ற ஆடைகள், சரியாக மலிக்காத சிறுதாடி என எதுவும் இப்போது இல்லை; சைக்கிளும். இவற்றிற்கு நேர்மாறான வாளிப்பான தேகம், நல்ல உடை, விலையுயர்ந்த ஆகாய நிற வெஸ்பா வண்டி, சீராக வெட்டிய தலை முடி, வடிவான தாடி, மீசை என ஆள் சுத்தமாக மாறிப் போயிருந்தான். தன்னைவிட உயரமானவன் என்ற மாடனின் வாட்டம் இப்போது உடம்பு போடவும் இவனை மேலும் தாழ்வுணர்ச்சிக்குள் தள்ளியது. கை தானாகத் தலைமயிரைச் சரி பண்ணப் போனது. சிகரெட் பிடித்துப் பிடித்து முன்பைவிடவும் கருத்துப் போன இதழ்களை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டான். முகத்தில் படிந்துள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பைத் துடைத்துக் கொள்ள எண்ணான். ஆனால், முன்பு போலவே அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
000
ஒன்டில்லுவைப் பார்த்ததும் முதலில் தெரியாதப் பதற்றம் தோன்றினாலும், அவனைக் கண்டது அவனுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அவனைத் திரும்பச் சென்றுப் பார்த்து, அவனோடு நிறைய பேச வேண்டும் என்றும். கார்த்திகாவுக்கு வேறொருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது என்றும். எனவே நீ வருத்தப்பட வேண்டாம் என்று தெலுங்கில் சொல்லத் தயாரானான். பங்காளி என்ற வார்த்தைக்குத் தெலுங்கு நிகரன் என்ன என்பதை யோசித்து யோசித்து அவனுக்கு நேரம் விரயமானது. திரும்பவும் கிளம்பி வண்டியை எடுத்துக் கொண்டு புல முதன்மையர் அலுவலகத்திற்குள் அடியெடுத்து வைத்தான். காத்திருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒன்டில்லுவைப் பார்த்ததும் பேச வேண்டும் என்று நினைத்தவனுக்கு, அது உடனே முடியாமல் போக, மேலே படியேறி தான் ஒரு வேலையாகவே அங்கு வந்ததைப் போல காட்டிக் கொண்டான். தன்னைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டு ஃபோனைப் பார்த்த ஒன்டில்லுவிடம், தயங்கிச் சென்று.
“ஹே. எலாவுன்னாவு…” இவனுக்குத் தெலுங்கு தெரியுமா என்பதைப் போல பார்த்த ஒன்டில்லு, மாடனிடம், ”ஹாங்.. பாகுன்னானு” என்றான் மாடனிடம்.
என்ன பன்ற என்று தெலுங்கில் கேட்டதற்கு. ”சீனியர் டேட்டா அனலிஸ்ட்” என்று இவனுக்குப் புரியாத வேலையைச் சொன்னான் ஒன்டில்லு.
ஒன்டில்லு: “மீரு”
மாடன்: ”சீனியர் ரிசெர்ச் பெல்லோ”
(தான் மாத ஊக்கத்தொகைப் பெறுவதை வேலையாக மாற்றி.)
ஒன்டில்லு: “பேக்கேஜ்…?”
மாடன்: “40+ வஸ்துந்தி” என்றான் நேர்மையாக.
பிறகு, “மீக்கு….” என்றான்.
ஒன்டில்லு சுதாரித்துக் கொண்டு, “60கே ப்ரோ” என்றான்.
அவ்வளவு பெரிய தொகை வெறும் முதுகலைப் படித்தவனுக்கு எப்படித் தருவார்கள் என்று இவனுக்குத் தோன்றினாலும், முதலில் தன்னுடைய சம்பளத்தைச் சொன்னதற்காக வருத்தப்பட்டான். திரும்பவும் தாழ்வுணர்வு அவனை ஆட்கொண்டது.
ஒன்டில்லுக்கு மாடன் ஏன் அவனாக வந்து தன்னோடு பேசுகிறான் என்று குழப்பமாக இருந்தது.
தனக்கு நிகரான அவனுடைய எல்லாவித தோரணையையும் அவனுக்கு வெறுப்பை உண்டுபண்ணியது.
”வாங்க நம்ம ரூமுக்குப் போகலாம். ரெஸ்ட் எடுத்துட்டு வருவீங்க. சாப்டீங்களா” இவற்றை எல்லாம் தெலுங்கில் சொன்னான் மாடன்.
ஒன்டில்லுக்கு இயல்பாக மாடன் தன்னை விசாரிப்பது பிடிக்கவில்லை. “பர்லேது ப்ரோ” என்றான் கூச்சத்தால் நெளிந்து.
அடுத்து, “இப்பத்தான் முதல் முற பேசிக்குறோம். இல்ல” என்று தெலுங்கில் சொல்லவும் இருவருக்கும் லேசானதைப் போலபட்டது. ”அவுனு” என்று அதுவரையிலும் இல்லாத புன்னகை உதிர்த்தான் ஒன்டில்லு. அத்தனை ஆண்டுகளில் தான் கண்டிராத அந்த வசீகரப் புன்னகையைப் பார்த்ததும் மாடனின் கண்கள் விரிந்தன. கார்த்திகாவைத் தான் கல்யாணம் முடிக்கவில்லை என்ற தகவலைச் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து உடனே அங்கிருந்து கிளம்பினான்.
000

றாம் சந்தோஷ் வடார்க்காடு
றாம் சந்தோஷ் (றாம் சந்தோஷ் வடார்க்காடு, இயற்பெயர் :சண்முக. விமல் குமார்) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
very nice