
உயிர் தரும் ஞாயிறைக் கருப்புப் புதைகுழியாக, மரணத்தை நேரில் பார்த்து அனுபவித்த ஒருவரால்தான் கற்பனை செய்து வரைய முடியும். அந்த துரதிர்ஷ்டத்தை அனுபவித்தவர் வங்காள ஓவியர் கணேஷ் பைன். கணேஷின் ஜென்மம் கொல்கத்தாவில் 1937இல் மிக நெரிசலான குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்தது. 1947இல் இந்தியப் பிரிவினையின்போது வங்காளத்தில் நடந்த வன்முறைக் கொடூரத்தை ஒன்பது வயதுச் சிறுவனாகப் பார்த்த தாக்கம் அவர் ஓவியங்களில் மேலோங்கிக் காணும் அதேசமயம் சிறுவயதில் அவருடைய பாட்டி சொன்ன தொன்மங்களும், வங்காள கலாசாரத்தில் ஊறிய படிமங்களும் சமமான எண்ணிக்கையில் காணக்கிடைக்கின்றன. இந்த இரு எதிர் துருவங்களுக்குள் வாழ்ந்தவர் கணேஷ். 1959இல் கொல்கத்தா கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று மந்தார் மலிக் நடத்திய பத்திரிகையில் புத்தகத்திற்கு சித்திரம் வரைபவராக சேர்ந்து தனது கலை வாழ்வை தொடங்கினார்.
வங்காள கலைப் பள்ளியின் முன்னோடிகளான அபீந்திரநாத் தாகூர் , கணேஷ் ஹலோய் போன்றவர்களின் தாக்கம் கணேஷின் படைப்புகளில் மேலோங்கிக் காணப்படுகிறது. வங்காள இயக்கம் பெரும்பாலும் ஐரோப்பிய இயக்கங்களைப் பின்பற்றி, இந்திய தலைப்புகளைக் கையாண்டது. ஓவிய நுட்பத்தில் புரட்சிகரமான முன்னடைவுகளை நிகழ்த்தவில்லை என்றாலும், இந்திய மரபு ஓவியத் தலைப்புகளுக்குச் சமகால ஓவிய நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தது வங்காள கலைப் பள்ளி. கியூபிசம் , இம்ப்ரெஸ்ஸினிசம் , பின்பியல் வெளிப்பாட்டியம் போன்ற ஓவியக் கோட்பாடுகள் ஐரோப்பாவில் வேரூன்றி கலையின் எல்லைகளை விரிவு படுத்தும்போது, ஆங்கிலேய காலனித்துவத்தில் அவதிப்பட்ட இந்தியாவில், கலைக் கல்லூரிகள் பெரும்பாலும் பாரம்பரிய ஓவிய நுட்பங்களையே கற்பித்தனர். கணேஷ் இந்தப் பள்ளியின் உறுப்பினர்.
ஓர் ஓவியத்தை பார்த்தவுடனேயே ‘இது கணேஷுடையது’ எனச் சொல்லக்கூடிய அளவிற்கு தனித்துவக் கையெழுத்து பாணியைத் தனக்கென அமைத்துக்கொண்டவர், திரைச்சீலையின் மேல் எண்ணெய் அல்லது நீர் வண்ணங்களை வரையும் வெகுஜனப் போக்கைக் கைவிட்டு முட்டை டெம்பரா (Egg tempera) யுக்தியைக் கையாண்டார். டெம்பரா யுக்தி மறுமலர்ச்சிக் காலங்களில் ஐரோப்பிய ஓவியர்களால் உருவாக்கி உபயோகிக்கப்பட்டது. அக்காலங்களில் வண்ணங்கள், கெட்டித் திரவியமாகக் கிடைக்கப்பெறவில்லை. உலர்ந்த இயற்கை வண்ண பதார்த்தங்களை, திரவியமாக கரைக்க முட்டை மஞ்சளை உபயோகித்தனர். அடர்த்தியில் அதிகமான மஞ்சள், இயற்கையாகவே ஒளி ஊடுருவ விடாத தன்மை உடையதென்பதால் டெம்பரா யுக்தியின் மூலம் வரையப்படும் ஓவியங்கள் பொதுவாக மங்கிய மர்மத் தோற்றம் உடையவை. இது ஒருபுறம் இருக்க, கணேஷின் ஓவியங்கள் இருள் சார் தலைப்புகளை நாடியதோடு நிற்காமல், திரைச்சீலையில் வண்ணங்களை ஒட்டவைக்க ஃபெவிகால் (Favicol) கோந்தை உபயோகித்ததால் அவருடைய படைப்புகள் ஒருவகை அடர்ந்த மனச்சோர்வுத் தன்மை பெற்றது.
கணேஷின் அடையாள பாணி மெதுவாக உருவானது. அவருடைய ஆரம்பகால ஓவியங்கள் நம்பிக்கை, உவகை மற்றும் ஆக்க ஆற்றலின் பிரதிபலிப்பாகத் தோன்றியவை மெதுவாக மாறி இருளை நோக்கி நகர்ந்ததற்கு அப்போதைய வங்காள சமுதாயத்தில் நிலவிய அவல நிலையே முதற்காரணம், தமையனார் கார்த்திக் பைனின் அகால மரணம் இன்னொரு காரணம். கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திறங்கிய அகதிகள், வேலையின்மை , லஞ்சம், பின்தங்கிய சமூகக் கண்ணோட்டம் போன்ற இன்னல்கள் தலைவிரித்தாடிய காலத்தில் பல குறிப்பிடத்தக்க கலை இயக்கங்களை வங்காளம் கண்டது. பசிப்புலவர்கள் இயக்கத்தில் (Hungryalist Generation) வெளிவந்த கவிதைகள், சத்தியஜித் ரே, ரித்விக் கட்டாக் போன்றவர்களின் திரைப்படங்கள், கம்யூனிச இயக்கம் போன்ற மாற்றங்கள் வங்காளத்தின் நிலப்பரப்பை மாற்றி அமைத்துக்கொண்டிருந்தன.

அவருடைய முதல் ஓவியமான மூடுபனி (Winter’s Morning)யில், இரு சிறுவர்கள் (கணேஷ் மற்றும் அவர் அண்ணன் கார்த்திக் ) பள்ளிக்கு செல்லும் காட்சி சித்தரிப்பு, கணேஷின் வருங்கால அடையாள பாணிக்கு பிணக்காகத் தோன்றும். நீர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்ட இம்முயற்சியில் மிதமான வண்ணங்களால் குழந்தை பருவத்தின் கள்ளம் கபடமில்லா ஒய்யாரத்தைப் படிமமாக்கியுள்ளார். மலிக்கின் இதழில் பணியாற்றும்போது கணேஷ் வரைந்த கார்ட்டூன்கள் மற்றும் நிலப்பரப்பு படங்கள், வெகுஜன ரசனைக்கேற்ப மந்தை உற்பத்தி பிரதிபலிப்புகளாகத் தோன்றுகிறது. கார்ட்டூன்களில் கையப்பம் இருப்பதால் மட்டுமே இவை கணேஷின் படைப்புகள் என இனங்கண்டுகொள்ள முடிகிறது. குறிப்பாக நிலப்பரப்புகள் நேரில் மைதானத்திலிருந்து இயற்கையை வரைந்ததுபோல (en plein air) இல்லாமல் ஒருவித அழகாக்கப்பட்ட கற்பனை முயற்சிகள் போல காண்கின்றன. இக்காலகட்டத்தில் கணேஷின் படைப்புகள், தட்டையான ஆழமில்லாத, தெளிவில்லாத பாடநூல் வெளிப்பாட்டையங்கள் போல தென்படுகின்றன. கணேஷ் இந்த முயற்சிகளில் தன் உள் குரலைக் கேட்காமல் நேயர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து வர்த்தக நுகர்விற்கு தேவையான படைப்புக்களை கொடுத்துள்ளதாக தோன்றுகிறது. தேர்ந்த கலைஞர்களின் ஆரம்பகால படங்கள் முதிர்ச்சியின்றி அமைவது இது முதல் உதாரணமும் அல்ல ஆச்சரியப்படுவதற்கும் அல்ல. பிக்காஸோ தன் கல்லூரி முடிவுத்தேர்வுக்கு சமர்ப்பித்த படம், அவர் பிற்காலத்தில் புகழ் பெறத் துணையாக இருந்த சித்திரங்களுக்கு, பாணியில், தலைப்பில் முற்றிலும் புறம்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமகால ஓவியர்களான பம்பாய் முற்போக்கு குழுவினருடன் ( ஃபிரான்சிஸ் சூசா, தையப் மெஹதா, எம் எஃப் ஹுசைன், ரேசா உருவாக்கிய குழு ) தொடர்பில் இருந்தும் பெரும்பாலும் நவீனத்துவ பாணிகளைத் துறந்து பாரம்பர்ய வங்காள ஓவிய பாணியையே தன் ஓவிய வாழ்வில் பின்பற்றினார். கணேஷின் தலைப்புகளில் மரணம், அதுவும் கவித்துவ மரணம், தனி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. மரணம் நேரடியாகவோ அல்லது சின்னங்களாகவோ பல படைப்புகளில் காணக்கிடைக்கிறது. அவர் படைப்புகள் பரப்பில் சிறிதாய் இருப்பினும் கட்புலனில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துபவை. எண்பதுகளிலும் அதன் பிறகும் இந்திய ஓவிய இயக்கம் மேற்கத்திய நவீனவியல் ஈர்ப்பில் திளைக்கும்போது கணேஷ், பாரம்பர்ய வங்காள ஓவியப் பள்ளியின் சுடர்தாங்கியாக விளங்கியது மட்டுமின்றி வங்காள ஓவியப் பள்ளியின் தலைசிறந்த ஓவியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.
கணேஷின் சித்திரங்கள் நிலையானவை. பாத்திரங்கள் நகர்வதுபோலச் சிந்தை மயக்கத்தை கொடுப்பினும் ஸ்திர உணர்ச்சிகளை உள்ளடக்குபவை. அவர் வரையும் படங்களில் இயற்கை ஒளி மற்றும் நிழலுக்கு இடமில்லை. இப்பாணி சிந்தையிலிருந்து வரைபவர்களின் அறிகுறி. படைப்புகள் நேயர்களுக்கு மயக்கத்தன்மையை கொடுப்பது பாத்திரங்களின் புலன் பெயர்ச்சியிலிருந்து உருவாகிறது. திரைச்சீலையிலிருந்து பாத்திரங்களின் கண்கள் வழி சோகம், நேயர்களின் சிந்தைக்குள் அப்பட்ட உணர்ச்சியாய்ப் புகுவதினால் இந்தச் சிந்தை மயக்கம் ஏற்படுகிறது. பெண்மை, சூழ்நிலை காட்சிகள், தார்மீகம்சார் படைப்புகளை வரைந்திருந்தாலும் கணேஷிற்கு மரணத்தின்மேல் இருந்த ஈர்ப்பு, அத்தலைப்பைக் கொண்ட படைப்புகளை அவருடைய கலைக் களஞ்சியத்தில் தனித்து நிற்கச் செய்கிறது. சத்தியவானின் சடலத்திற்குப் பக்கத்தில் வெறித்த கண்களுடன் அமர்ந்திருக்கும் சாவித்ரி, பதுங்கும் கொலையாளி, அலறும் மண்டையோடு, ஆற்றில் மிதந்து செல்லும் எலும்புக்கூடு போன்ற படகு, கருமை நிறப் பின்னணியில் கோரா பற்கள், போன்ற படைப்புகள் மரணத்துடன் கணேஷிற்கு இருந்த ஊடாட்டத்தின் பிரதிபலிப்பு. ஒரு சில பின்பியல் முயற்சிகளையும் மேற்கொண்ட கணேஷ், சுய சித்திரத்தையும் வரைந்துள்ளார். கணேஷ் மேற்கத்திய சினிமாவின் தீவிர ஆர்வலர். கணேஷின் வரைப்புத்தகத்தில் இத்தாலிய திரைப்படக் காட்சியில் தன் சுய சித்திரத்தையும் வரைந்துள்ளார்.
மரணத்தைப் பலவிதத்தில் ஓவியர்கள் கையாண்டுள்ளனர். கரவாஜியோ மரணம் சம்பவிக்கும் தருணத்தை உறையவைத்து நேயர்களுக்கு அதிர்ச்சி அனுபவத்தைக் கொடுத்தார். ஃபிரான்சிஸ் பேகன் மரணத்தைக் குருதிப் புனலாகப் பின்பியலின் மூலம் சித்தரித்தார். மாறாகக் கணேஷின் படைப்புகளில் மரணம் மௌன நிலையாகத் தத்துவ தளத்தில் இறுதியை அடைகிறது. இந்த விஷயத்தில், கணேஷின் படைப்புகள், சமகால ஒடியா கவிஞரான ஜயந்த மஹாபாத்ராவின் கவிதை வரிகள் சிலவற்றை நினைவூட்டும். குறிப்பாகக் கணேஷின் ஓவியங்கள் மரணமடைந்தவரைக் காட்டிலும் அந்த மரணத்தால் பாதிக்கப்பட்ட நெருங்கியவர்களின் கோலங்களைச் சித்தரிக்கின்றன. கோரப் பற்கள் தெரியும் மிருகங்களின் மண்டையோடுகள் பீதியூட்டுபவையாக அல்லாமல் வாழ்வின் அந்திம உண்மையை வெளிப்படுத்துகின்றன. சில சித்திரங்களில் உயிரினங்கள் மூச்சு இருக்கும்போதே எலும்புக் கோலங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதுவே அவரது சித்திரங்களின் சிறப்பும் கூட.
ஓவியப் பிரிவுகளில் உருவவியல் (figuration) பாணி மிகப்பழமையானது. கணேஷின் பாத்திரங்கள் உருவவியல் உன்னதங்களாகக் காட்சியளிப்பவை அல்ல. உறுப்புகள் எளிமையாக்கப்பட்டு , பாரம்பரிய வங்காள பாணியில் உருவாக்கப்பட்டவை. மங்கிய ஒளித்தன்மை, கணேஷின் பாத்திரங்களுக்கு ஒருவித கவித்துவத்தைக் கொடுக்கிறது. பொதுவாக உருவவியல் ஓவியங்களில் கண்கள் மட்டுமே அதிகம் பேசக்கூடியவை. கணேஷின் ஓவியங்கள் இவ்விஷயத்தில் விதிவிலக்கல்ல. நிறம் , வடிவம், கோணம் , உடை , பின்னணி போன்ற பல ஊடகங்கள் இருப்பினும் , கண்கள் சொல்லும் கதைகளை மற்றவையால் சொல்ல இயலாது. கணேஷின் ஓவியங்களில் கண்கள் ஒருவிதப் பீதியடைந்த ஆன்மாவின் மௌனமான உள் அலறலை நேயர்களுக்குக் காண்பிக்கிறது. கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள் எனச் சொல்வதுண்டு. கணேஷ், தன் படைப்புகளின் கண்கள் மூலமே மௌனத்தின் மொழியைப் பேசினார். வார்த்தை வராமல் மனதில் அடைந்திருக்கும் பெருந்துயரம் நித்தியம்வரை வெளிப்படுத்தும் இமையற்ற மீன் போன்ற கண்கள்.
அதிக ஆரவாரமில்லாமல் அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொண்ட கணேஷ், எண்பதுகளில் இந்திய ஓவியக் கலை உலக அரங்கில் அதிகமாகப் பேசப்பட்ட போதும் தன்னை அதிக விளம்பரத்திற்கு ஆளாக்கிக்கொள்ளவில்லை. தலைப்புகளில் மரணத்திற்கு அடுத்தபடியாகத் தொன்மங்கள் காணக்கிடைக்கின்றன. சைதன்யா, சகுந்தலை , துர்கா போன்ற தலைப்புகள் அவருடைய தனித்துவம். குறிப்பாக வங்காளத்தைத் தாண்டி வேறெந்தப் பிராந்திய அடையாளங்கள் அவர் ஓவியங்களில் காணக்கிடைக்காது.
‘நினவிலியின் குரலை , தர்க்க, தெளிவான உருவத்திற்குக் கொண்டுவருவதே என் கலைப்பணி’ ‘எங்கள் காலத்தவர் கலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வரைந்தவர்கள். ஓவியர்களுக்குத் தங்கள் ஆக்க ஆற்றலுடன் பிணைப்பு இருத்தல் அவசியம். இல்லையேல் வர்த்தக அலையில் அடித்து செல்லல்படுவர்’
– கணேஷ் பைன்.

உள்ளுணர்வின் ஓட்டம் தெளிவான அர்த்தமுள்ள படிமங்களாக இருப்பதில்லை. அவருடைய புகழ்பெற்ற ஓவியமான ‘ஆர்த்தி’ என்ற படைப்பில் பொலிவாக எரியும் விளக்கிற்குப் பக்கத்தில் தோலுரித்த மாமிச சடலம் தொங்குவது, வாழ்வும் சாவும் பிணைந்திருக்கும் உண்மையை உணர்த்துகிறது. கூட்டினை நோக்கிப் பறக்கும் பறவையின் சித்திரத்தை வரைந்த அதே சிந்தை இன்னொரு படைப்பில் பறவையையும் கூட்டைப்போல நாறுகளாலான வடிவத்துடன் வரையத் தயங்கவில்லை. சாந்த முகம் கொண்ட சாதுவின் சித்திரத்திற்குப் பக்கத்தில் அதே அமைதியுடன் இன்னொரு படைப்பில் குரங்கு காணப்படுகிறது. ஓவியர்களுள் பலர் ஒரு தலைப்பையே தங்கள் வாழ்நாள் முழுவதும் வரைந்துள்ளனர். பாணி மாறவில்லை என்றாலும் தலைப்புகளும் அத்துடன் சார்ந்த உணர்ச்சியும் மாறிக்கொண்டே இருக்கின்றன கணேஷின் படைப்புகளில்.
கணேஷின் படைப்புகளில் குரங்கு பல முறை தோன்றுகிறது. பீர் பஹாதுர் , ஏப் அண்ட் தி ஃபிளவர் (Ape and the flower) போன்ற படைப்புகளில் குரங்கு மத்திய பாத்திரமாகத் தோன்றுகிறது. குரங்கை ஒருவித உருவகமாகக் கணேஷ் உபயோகித்திருக்கலாம் அல்லது பால்யத்தின் பாதிப்பாகவும் இருக்கலாம். சில ஓவியங்களில் கருப்பு நிறம் மேலாக முழுப் பரப்பையும் சூழ்ந்து கொள்வதைப்போல தெரிந்தாலும் உன்னிப்பான கவனத்தில் கருப்பினுள் வடிவங்கள் வெளிவருவது, இருளுக்குள்ளும் ஜீவன் வாழமுடியும் என்பதன் பிரதிபலிப்பு. இருள் சில சமயம் உருவமில்லா பின்பியல் வெளிப்பாட்டையமாகவும் ஞாயிறாகவும் மாறுகிறது. சமகால ஓவியரான ஃரான்சிஸ் சூசாவைப்போல அல்லாமல் கொதிக்கும் நிறங்களை (சிகப்பு , ஊதா ஆரஞ்சு போன்றவை) கணேஷ் அறவே உபயோகிக்கவில்லை. அதேபோல் தையப் மெஹதாவிற்கு புகழ் சேர்த்த பெரிய பரப்புடைய நீர்த்தன்மை உருவப் படைப்புகளையும் உருவாகவில்லை. வாழ்நாள் முழுவதும் கொல்கத்தாவில் கழித்த கணேஷை பற்றி 1998இல் புத்ததேப் பட்டாச்சார்யா இயக்கிய உன்னதமான ஆவணப்படம், கணேஷின் சில எண்ணப் பதிவுகளுடன் வலைத்தளங்களில் காணலாம்.
ஓவியர்கள், எழுத்தாளர்களைப் போலக் குழுக்களில் செயல்படுவது இயல்பு. ஆனால் கணேஷ் தனிமையை விரும்பியவர். படைப்பாளிகளின் ஆக்கங்களில் அவர்களுடைய சிந்தையின் ஒரு சிறு பகுதி உறைந்துவிடுகிறது. அவர்களின் ஆளுமையின் , எண்ணங்களின் , பாதிப்புகளின் சிதறல்கள். தனித்துவம் பாணியிலோ , நுட்பத்திலோ அல்லது ஆக்கக் கருவிலோ இருந்தால்தான் முழுமை பெரும். கணேஷின் படைப்புகள் அவருக்கும் அவருடைய எண்ணங்களுக்கும் பாத்திரங்களுக்குமிடையே தனிமையில் நடந்த உரையாடல். ஓவியங்கள் சுவரின்மேல் அலங்காரப் பொருட்களாகத் தொங்குவதில் தவறில்லை. செயற்கை நுண்ணறிவினால் செய்ய முடியாத காரியங்கள் எதுவுமில்லை என மார்தட்டிக்கொள்ளும் சமகாலத்தில், உள்ளத்தின் பாவனைகளை கவித்துவமாக வெளிப்படுத்தும் கணேஷின் தனித்துவ படைப்புகள், வருங்காலங்களில் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆர் சீனிவாசன்
ஆர் சீனிவாசன். பிறந்தது சென்னையில், வசிப்பது பெங்களூரில். படித்தது பொறியியல், விரும்புவது ஓவியமும், எழுத்தும். சொல்வனம், வாசகசாலை, மயிர், திண்ணை போன்ற தளங்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
