
பழைய குழம்பு
அகிலன்
ஒரு திரைக்கதையாளன்
ஓடிக் கொண்டிருக்கிற
காட்சியை
இடையில் வெட்டி
நிறுத்திவிட்டு
புதியதொரு காட்சியைத் திறந்தால்
அகிலனிடம் பூத்துச் செழித்திருந்த கதைகளுக்கு
திரை இன்னும் வாய்க்கவில்லை
ஓடுகிற காட்சியை
இடைவெட்டி நிறுத்தி
புதுக்காட்சியைத் திறந்தால்
அகிலனின் மனைவி
பழைய குழம்பை
சூடு பண்ணிக் கொள்ளும்படி
சொல்லிவிட்டு வேலைக்குப் போகிறாள்.
ஓடுகிற காட்சியை வெட்டி
புதுக் காட்சியைத் திறந்தால்
பெரிய அலுவலகத்தின்
பெரிய பொறுப்பிலிருக்கும்
அகிலனின் தோழி
பெரிய வேலைகளுக்கிடையில்
சலிப்பு வருந்தோறும்
அகிலனை அழைக்கிறாள்
காட்சியை வெட்டி
காட்சியைத் திறந்தால்
முரகாமி ரசவாதி முதலானோரைக் கூட்டி வந்து
தோழியின் வெளுத்த வானுக்கு
நிறமூட்டி நிலவு பதித்து
மினுக்குப் பொடி தூவி அனுப்புகிறான் அகிலன்
வெட்டித் திறந்தால்
அகிலன் தனது பழைய குழம்புக்குத் திரும்புகிறான்
வெட்டினால்
காய்கறிக்கிடையில்
காற்றின் முட்டைகள் கொப்பளிக்கின்றன
திறந்தால்
பூவாய் வெந்து மலர்ந்து
மேலெழுந்து வருகிறது மனைவியின் திருஇதயம்
000
காவல் மாதுளை – தோழிக் கூற்று
பொருந்தவில்லை
காவல்நிலையத்தில் மாதுளஞ்செடி
எவரேனும் பழைய தலைமுறைக் காவலர்
பணியோய்வில் நட்டதாயிருக்குமோ
ஈரமுள்ள நன்னெஞ்சேயவர்
எழுத்தராயிருக்குமோடி ஒருவேளை
அரிசிக்குத் திருடிய எவனையாகிலும்
அடித்துக் களைத்த அரசுத் திருடர்
முகங்கழுவி கொப்பளிக்கப் பிழைத்திருக்குமோ
குழலவிழ வாரமொரு பெண்ணணங்கு
நிச்சயம் அழுதிருக்குமோடி
மாறாத ஈரப்பதம் அதில் பச்சை பிடித்திருக்குமோ
பெற்றவளின் ஒட்டிப்பிறந்த
உறுப்பெனவொரு பால்மணக்குழந்தை
உறக்கநிலையில் சிறைக்குப் போக
இளம்பிஞ்சு கண்டு வெடித்திருக்குமோடி
கைதி மாண்ட கதைகேட்டு
முத்துப்புழுங்கி வெளுத்திருக்குமோ
புதுமணப்பெண் பதறிவர
காயில் மஞ்சள் படிந்திருக்குமோடி
ஆதிக்கக் கைகலப்பில் இளந்தண்டு முறிந்திருக்குமோ
அடிவிழுந்த சிறுமனிதர் உடலாக
மொழிபதற தரைமீது கிடந்திருக்குமோ
அரசப்படை தடித்தனமோ எமனடியார் பெருவுடலோ
எதுவரினும் அஞ்சாது நெறுநெறென முறியவிடும்
பொதுவுடமைக் கொடிவுயர உரத்தகுரல் முழக்கமென
முறுகியவர் கரமுயர முரசதிர
அரத்தப்பூவும் வந்தாரே தோழரென
முகம்விரியச் சிரித்திருக்குமோடி தோழீ
000
பெரிது கேள்
உன்னுடன்
விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்
வண்டி வந்து விட்டது
இரட்டை மாட்டுக் கூண்டு வண்டி
குதிரைகள் பூட்டிய குடை வண்டி
குட்டிக்கார் குபேரத்தேர்
நீ அமைதியாயிரு
உன் மைதானத்தைப் போல
அதைவிடப் பெரிதாய் ஆனை வரும்
அன்றேல்
ஆனைக் கருப்பில் இருளிறங்கும்
இருளினும் பெரிதாய் கனவை வரை
அதனினும் பெரிதென்று எதுவுமில்லை
காத்திரு காத்திரு சாகாதே
000
தேநீர்ப் பொழுது
புலித்தோலை கழற்றி
கொக்கியில் மாட்டி விட்டு
பருத்தி வேட்டியைக் கட்டிக் கொண்டு
ஊஞ்சலுக்கு வந்தார் அய்யன்
வர மல்லி காப்பி தந்த வீட்டம்மாள்
மடிக்கணினியைத் தட்டிவிட்டாள்
சிறுவனின் தலையில் அவன்
திருப்புளியால் அடித்தபோது துடித்துப் போனார்.
‘அச்சுக்குப் போவதற்கு முன்பே பார்த்திருக்க வேண்டும்.
உங்களுடைய தவறுதான்.. ‘
‘வேறேதும் வழியில்லையா?’
‘நேற்று பையனின் தொடையில்
குறடால் கிள்ளினான் அந்த வண்டிப் பழுது வல்லான் ‘
‘மனித இதயங்களை அவ்வளவு நேரம்
உலர வைக்க வேண்டியதில்லை’
‘சொல்லும்போது கேட்டால்தானே? ‘
‘பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது யார்?’
‘அவனை பெருஞ்செல்வந்தன் ஆக்கிவிடவா?’
‘வாய்ப்பில்லை
உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பதைப் பாருங்கள்.
வாரியிறைக்கிற போது யோசித்திருக்க வேண்டும்..’
‘எனக்கு கண்ணில்லாமல் போயிற்றா?’
‘கவனமில்லாமல் போயிற்று அவ்வளவுதான்!’
‘குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது..’
தன்னுடைய முந்தானையில் முடிந்திருந்ததை
இவருடைய மேசையில் கொட்டினாள்.
நான்கு பொன்வண்டுகள்.
‘அந்தப் பையன் வருகிற வழியில் போட்டு வைப்போம்.
இப்போதைக்கு அவ்வளவுதான் செய்ய முடியும்’
000
பயணச்சித்திரங்கள்
ஆனைத்தோட்டி உயரமுள்ள கிளிப்பையன்
சாலையின் நடுவே நின்று கவிதை வாசிக்கிறான்
ஒவ்வொரு சொற்பலுக்கலுக்கும் உடலைக் குறுக்கி
குனிந்து தவழ்ந்து ரயில் பாலத்துள் நுழைகிறது நல்ல நெடுகமுள்ள லாரி
மின்மரக் குருவிகளைக் குறித்துப் புலம்புகின்றன கோபுரப்பட்சிகள்
வேறெங்கோ பார்த்துச் சிரிக்கின்றன காவல் தெய்வங்கள்.
குளத்து நீரில் இறங்கிக் கரையேறும் வயிறு நனைந்த மாடுகள்
வெளியே வந்து தலை துவட்டி
திரும்பவும் அலைபேசிக்குள் குதிக்கிறான் படிக்கிற பையன்.
இன்னும் அயல்கிரகத்து ஆள் மாதிரி ஆறு கைகளாலும் பூவரும்பை
தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது மழைத் தும்பி.
சிற்பங்களைத் தேடிவந்தோரும் மரப்பொந்தின் பசுங்கிளிகளும்
வெளியே வந்து பார்க்கும்படி முறையிடுகிறாள்
கோயில் குளத்தில் துவைக்கிற பெண்.
அவசர ஊர்தி அலறிப் போகிறது.
நெஞ்சில் சிலுவையிட்டுக் கொள்கிறான் தேவாலயக் காவல்காரன்.
பெருமூச்செரிகிறாள் சிக்னல் கம்பத்தை அண்டிப் பிழைக்கிறவள்.
கருணையின் பெயரால் விம்முகிற முலைகளின் பெயரே நெஞ்சம்.
சாதி பார்க்காமலே வாலைக் குலைக்கிறது சாலையோர நாய்க்குட்டி.
அவசர ஊர்தி கடக்கும்வரை
காருக்குள் ஒலிக்கும் உற்சாகப் பாடலை நிறுத்தி வைக்கிறான்
மனிதன் என்று சொல்லத் தக்க மனிதன்
000
அல்லாந்தெரியிம் வெங்குட்டுக்கு
எச்சுப்பேச்சே எழுப்பாது செவலை.
தெரிஞ்சுதான் காயடிக்கிறான் வெங்குட்டு.
கிட்டாங்காட்டு வாழக்கொலை
பக்கத்தூட்டு சந்து வழியில ஒன்றயடி.
முண்டச்சிவூடுதான
அட வில்லங்கம் வரும்போது பாத்துக்கலாம்.
அல்லாந்தெரியிம் வெங்குட்டுக்கு.
அப்பப்ப காயடிப்பான் வெங்குட்டு.
கண்ணுமுன்ன
பித்தளை வட்டுக் களியுருண்டையில
சோடியைப் போட்டேறுது பீயுருட்டி.
அறிவான் வெங்குட்டு.
அட அவங் கையில என்ன இருக்குது.
நடுச்சாமத்துல கொல்லைப்படலு
தெறந்து மூடற சத்தம் கேட்டும்
சொள்ளைக்கி சொரியறமாரி நடிக்கிறான் வெங்குட்டு.
அட தெரிஞ்சுதான் என்னவண்ணப்போறான் வெங்குட்டு.
000

ஜான் சுந்தர்
ஜான் சுந்தர். எழுத்தாளர், மேடைப்பாடகர், இசைக் கலைஞர், கவிஞர். கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். சொந்த ரயில்காரி, பறப்பன திரிவன சிரிப்பன, நகலிசைக்கலைஞன் முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் விக்கியில்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















கவிதைகள் நன்றாக வந்துள்ளன.சொல்முறையில் ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்கும் சற்றாவது தனித்திருக்க முயலவேண்டும் என்பது எனது எண்ணம்.அந்த வகையில் உங்கள் கவிதைகள் வாசிக்கவும் பிரியம் தருவதாக உள்ளது.பழைய குழம்பும்,அல்லாந் தெரியும் வெங்குட்டுக்கு,காவல் மாதுளை-தோழிகூற்று போன்றவை தினித்திருக்கின்றன.மகிழ்ச்சி ஜான்சுந்தர். -கண்டராதித்தன்.
தனித்திருக்கின்றன.
வணக்கத்துக்குரியது
கள்ளமௌனத்தை கலைத்து எழுகிற முதல் குரல் .
வணக்கம் கண்டராதித்தன்.
மாதுளை கவிதை மிக நன்றாக வித்தியமாக இருந்தது , அதிகம் புரிதலுக்குள்ளன கவிதைகள் நன்றி.