
அலான் டி பாட்டன் (1969 -) ஸ்விஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். காண்பியல் கலை சார்ந்து “கலையே உளசிக்கிச்சையாய்” எனும் நூலை எழுதியிருக்கிறார். கலாச்சாரம் மற்றும் மனித உறவுகள் பற்றி எளிமையும் ஆழமும்கூடிய மொழியில் நிறைய எழுதி வருபவர். “காதலின் காலம்” (The Course of Love) என்ற அவர் நூல் நவீன காலத்தில் காதல் மற்றும் திருமணத்தின் சிக்கல்களை பேசுகிறது. இதில், காதல் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு திறமையாக கற்றுக்கொள்ள வேண்டிய கலை எனச் சொல்கிறார். இக்கட்டுரையும் அவ்வரிசையில் வருவதே.
– மொழிபெயர்ப்பாளர்
ஒருவருடன் நாம் காதல் கொள்வதை நமக்கே உரித்தான தனிப்பட்ட புது அனுபவமாகவும், தன்னிச்சையான நிகழ்வாகவும் எண்ணிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் நம் காதல் உணர்வெழுச்சிகளையும், அதன் அந்தரங்கமான தருணங்களையும் வடிவமைப்பதில் நம் சமூகமும், கலாச்சாரமும் மறைமுகமான முறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்படிச் சொல்வது ஒருவேளை விசித்திரமாகத் தோன்றலாம். சொல்லப்போனால் இதை சிறு அவமதிப்பாகவும்கூட நாம் உணரக்கூடும்.
இருப்பினும் மனிதகுலத்தின் நீண்ட வரலாற்றில் காதலை அணுகுவதிலும், ஏன் இரு காதலர்கள் ஒன்றிணைவதிலும்கூட பல்வேறுபட்ட வழிமுறைகளும், ஊகங்களும் நிறைந்திருப்பதைக் காணலாம். நாம் எவ்வாறு உணர்வுகளை விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதில்கூட பிரத்யேகமான நடைமுறைகள் உருவாக்கி நிலைத்திருக்கின்றன. சொல்லப்போனால், நாம் நமது காதல் உறவை அணுகும் முறை, நமது படுக்கையறைக்கு அப்பால் உள்ள பரவலான சூழலுக்கு உண்மையிலேயே நிறைய கடன்பட்டிருக்கிறது என்பதை நாம் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நம் காதல் உணர்வுகள் கலாச்சாரப் பின்னணியிலிருந்தே விரிகின்றன; அதுவே காதலில் எது “இயல்பானது” என்னும் திடமான பரிச்சயத்தை நமக்கு உருவாக்கி அளிக்கிறது. அதுவே நுட்பமாக நமது உணர்வுகளை வழிநடத்தவும் செய்கிறது – எதற்கு மதிப்பளிக்கவேண்டும்?, முரண்பாடுகளை எப்படி அணுக வேண்டும்?, எப்போது நாம் உற்சாகமடையலாம்?, எவற்றையெல்லாம் நாம் சகித்துக்கொள்ளலாம்?, எப்போது நாம் நியாயமாக கோபப்படலாம்! என்பன போன்றவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. காதலுக்கென ஒரு பெரும் வரலாறு உருவாகி வந்திருக்கிறது. நாம் அதன் நீரோட்டத்தில் – சில சமயம் கையறுநிலையில் அடித்துச்செல்லப்படுகிறோம்.
காதலின் மிக நீண்ட சகாப்தத்தில் 1750-கள் தொடங்கி நாம் மிகத் தனித்துவமானதொரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். ‘கற்பனாவாதம்'(Romanticism) என்னும் அது 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் கவிஞர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள் என எல்லோரது மனதிலும் ஒரு சித்தாந்தமாக உருவானது. அது இப்போது பேராற்றலுடன் உலகையே வென்றுள்ளது (இருந்தும் சப்தமின்றி செயல்படுகிறது/ உள்நுழைந்துள்ளது). யோகஹாமாவில் (Yokohama) உள்ள ஒரு கடைக்காரரின் மகன் தன் முதல் காதல் சந்திப்பை எப்படி அணுகுவார் என்பதையும், ஒரு ஹாலிவுட்டில் திரைக்கதை ஆசிரியர் படத்தின் இறுதிக் காட்சியை எப்படி வடிவமைப்பார் என்பதையும், பாய்னிஸ் ஏரிஸ்-ல் (Buenos Aires) உள்ள ஒரு நடுத்தர வயது பெண் 20 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் எப்போது தன் கணவரை விட்டு பிரிந்து செல்லலாம் என்பதை முடிவெடுப்பார் என்பதையும் தீர்மானிக்கிறது.
எந்த ஒரு காதலர் இணையும் கற்பனாவாத பாணியை முழுமையாக அப்படியே பின்பற்றாவிட்டாலும், கற்பனாவாதத்தின் பரந்து விரிந்த அதன் பின்னல்களுக்குள்ளேயே அவர்களது உறவுகள் சிக்கியிருக்கின்றன. அதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:
கற்பனாவாதம் திருமண பந்தம் குறித்து ஆழமான நம்பிக்கையை கொண்டுள்ளது. நீண்டகாலத் திருமணத்திலும் காதல் உணர்வெழுச்சிகள் நீடித்து நிலைத்திருக்கும் என்று அது நம்பச்சொல்கிறது. ஒரு உறவின் தொடக்க காலத்தில் நமக்கு ஏற்படும் காதல் மனவுணர்வுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கச் செய்கிறது. அதுவரை உணர்ச்சிபூர்வங்களற்றதும், நடைமுறை காரணங்களுக்காகவும் நிகழ்ந்த திருமணத்தை கற்பனாவாதம் உணர்ச்சிவயமிக்க காதல் கதையுடன் இணைத்து, ஒரு தனித்துவமான கருத்துருவை உருவாக்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் தீவிர உணர்ச்சிகளாலான காதல் திருமணம் என்பதே அது.
கற்பனாவாதம் காதலையும் காமத்தையும் பிறிதொன்றல்லாததாக ஒன்றிணைத்தது. அதற்கு முன்பு மக்கள் தாங்கள் விரும்பாத மனிதர்களுடனும் உடலுறவு கொள்ளலாம் என்று நினைத்து வந்தனர். அதுபோல, ஒருவருடனான உடலுறவு உன்னதமாக இல்லாவிட்டாலும்கூட, அவரை விரும்ப முடியும் என்றும் நினைத்தார்கள். கற்பனாவாதம் உடலுறவை ‘அன்பின்’ உச்சபட்ச வெளிப்பாடாக மாற்றியது. எந்தவொரு காதல் உறவிலும் பரஸ்பரம் திருப்தியளிக்கும்படியான உடலுறவு அடிக்கடி நிகழ்வதையே அதன் ஆரோக்கியத்திற்கான அளவுகோலாக ஆக்கியது. கற்பனாவாதத்தின் நேரடியான நோக்கம் இதுவாக இல்லாவிட்டாலும், அடிக்கடி நிகழாத தாம்பத்தியத்தையும், திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவுகளையும் அது திருமண பந்தத்திற்கெதிரான பேரழிவுகளாக மாற்றியது.
உண்மையான காதல், அனைத்து விதமான தனிமையிலிருந்து நம்மை மீட்டெடுத்து சர்வநிவாரணியாக செயல்படவேண்டும் என்று கற்பனாவாதம் முன்மொழிகிறது. நமக்கானதொரு சரியான காதல் துணை, நாம் பேசக்கூடத் தேவை ஏற்படுத்தாமல், நம்மை முழுமையாகப் புரிந்துகொள்வார் என்று அது உறுதியளித்தது. அவர்கள் நம் ஆன்மாவை உள்ளுணர்வால் அறிவார்கள் என்று அது விதந்தோதியது. (கற்பனாவாதிகள் நமது துணைவர் வார்த்தைகள் ஏதுமின்றி நம்மைப் புரிந்துகொள்வார் என்ற கருத்துக்கு அதிமுக்கியத்துவம் அளித்து அதை வளர்த்தெடுத்தனர்)
கற்பனாவாதம், துணையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒருவர் தன் உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் தப்பித்தவறிகூட நடைமுறை சார்ந்த விஷயங்களைப்பற்றிய எண்ணங்கள் எழுந்துவிடக்கூடாது என்றும் தீவிரமாக எச்சரிக்கிறது. வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில், மக்கள் தர்க்கரீதியான, நடைமுறை காரணங்களுக்காகவே காதல் கொள்ளவும், திருமணம் செய்துகொள்ளவும் செய்தனர். காரணங்களின் அடிப்படையிலான திருமணங்கள் கற்பனாவாதத்தைப் பொறுத்தவரை அதன் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணப் பட்டியலிலேயே இல்லை. அதனால்தான், அது மாற்றாக முன்னிறுத்திய உணர்வுகளின் அடிப்படையிலான திருமணம், தனக்கான எந்தக் காரணத்தையும் நியாயப்படுத்தவேண்டிய அவசியத்திலிருந்து மிகப்பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டது. அதைப்பொறுத்தவரையில், அதிமுக்கியமானது என்னவென்றால், இணையர் இருவரும் அது நடக்க வேண்டும் என்று மனதாழத்தில் விரும்ப வேண்டும்; ஒரு மகத்தான உள்ளுணர்வால் அவர்கள் ஈர்க்கப்பட வேண்டும்; தங்கள் இதயங்களில் அதுவே ஆகச்சரியானது என்று அவர்கள் உணர வேண்டும். உடனடியாக அவர்களது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டன.
கற்பனாவாதம் நடைமுறை சார்ந்த சிந்தனைகளையோ, பணம் சார்ந்த விவாதங்களையோ இழிவாகக் கருதி ஏளனம் செய்வதோடு அவற்றை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இப்போதெல்லாம் கற்பனாவாதத்தின் தாக்கத்தால், உறவுகளில், குறிப்பாக ஆரம்ப நாட்களில், இதுபோன்ற விஷயங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதை நாம் விரும்புவதில்லை. நிதி நிலைமையில் ஒருவர் நமக்கு பொருத்தமான அதே அந்தஸ்தோடு இருக்கிறார் என்பதாலும், நம்மைப்போன்றே அவரும் சில குளியலறை பழக்கவழக்கங்களையும், சுய ஒழுக்கங்களையும் கொண்டிருப்பதாலும் நாம் அவரோடு இணக்கமாக உணர்வது இக்காலகட்டத்தில் காதல் சொட்டாதா குளிரத்த பாறையின் இறுகிய மனநிலையாக நம்மையே உணர்ச்செய்துவிடுகிறது.
உண்மையான காதல் என்பது ஒருவர் தன் காதலரின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆனந்தத் தகிப்பை உணருவதே என்று கற்பனாவாதம் வகுக்கிறது. ‘உண்மைக்காதலும்’, ‘ஒருவரைப் பற்றிய அனைத்தையும் நிபந்தனையற்று ஏற்றுக்கொள்வதும்’ நிகர்ச்சொற்களாகும். ஒருவர் தன் துணையின் (அல்லது அவரது) குணாதிசயத்தில் சிறு மாற்றம் அவர்களை மேம்படுத்தும் என்று நினைப்பதைக்கூட, அந்த உறவின் அடிப்படையே முறிந்துபோவதற்கான அறிகுறியாகக் கொள்கிறது.

காதலுக்கான சாட்சியங்களாக விதந்தோதப்படும் மேற்படி கூற்றுகள் இவ்வரலாற்றின் எச்சங்களே. இந்த இடத்தில் நாம் தைரியமாகச் சொல்லலாம்: கற்பனாவாதம் காதலுக்கு ஒரு பேரழிவாகவே இருந்துள்ளது. அது ஒரு அறிவுசார், ஆன்மிக இயக்கம்; அது சாதாரண மனிதர்கள் தங்களது வாழ்வில் உணர்வுகளைச் சரியாகக் கையாளும் திறனுக்கெதிராகச் செயல்படுகிறது. இப்பேரழிவுகரமான தாக்கத்திலிருந்து காதலை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி, கற்பனாவாதத்திற்குள் உள்ள போதாமைகளை, தவறுகளை புரிந்துகொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டிச் செல்வதில்தான் உள்ளது.
நம்முடைய வலுவான கலாச்சாரக் பின்னணி /குரல்கள் – தவறான எதிர்பார்ப்புகளை நமக்குள் விதைத்து, நம்மை பெரும் விலை கொடுக்கச் செய்துள்ளன. அவை உணர்வெழுச்சிசார் பொழிப்புரைகளை நம்முள் திணித்தனவே தவிர, நாம் எப்படி ஒரு உறவை வெற்றிகரமாக செயல்படுத்தலாம் என்பதைப்பற்றிய நடைமுறை உதவிகளை வழங்கவில்லை. அதே சமயம், ஆக்கபூர்வமான வழிகாட்டல்களைத் தரக்கூடிய உணர்வுகளிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டன. யோசித்துப்பார்க்கையில் நாமெல்லாம் அனுதாபத்திற்குரியவர்களே.
உறவுகள் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படக்கூடும் என்பதைப்பற்றிய இச்சிந்தனைகள் என்னதான் நல்லெண்ணத்திலிருந்தே தோன்றியிருந்தாலும், தற்போதைக்கு நாம் மிக மோசமாக சிதைந்த ஒரு இலட்சியத்தைக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தால் தான் சூழப்பட்டுள்ளோம். ஒரு மிகச்சிக்கலான பரிட்சைக்கு ஒரு முற்றிலும் உதவாத கையேட்டை நாம் பயன்படுத்த முயற்சிக்கிறோம். இத்தருணத்திலாவது காதல் மீது படிந்திருக்கும் கற்பனாவாதக் கண்ணோட்டத்தின் அனுமானங்களை அறிவுடன் அணுகி கேள்விக்குட்படுத்துவது அவசியமானது எனத் தோன்றுகிறது – இது காதலை அழிப்பதற்காக அன்றி காப்பாற்றுவதற்காகவே.
நாம் கற்பனாவாதத்திற்குப் பிந்தைய காதல் கோட்பாடுகளை வரைவுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் ஒரு உறவு நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என நாம் எண்ணத்துணியும்போதே, இவ்வலைப்பின்னலில் முதன்முதலில் நம்மை சிக்கவைத்த கற்பனாவாத உணர்வெழுச்சித் தத்துவங்களை பக்குவத்துடன் நிராகரிப்பது பிரதானமாகிறது. கற்பனாவாதத்திற்குப் பிந்தைய கோட்பாடு(post-Romantic) என்று நாம் யூகிப்பது நிச்சயம், மனிதத்தில் நம்பிக்கை இழந்த வெறுப்பு மனப்பான்மையை அல்ல (cynicism). அதாவது உறவுகள் நீடிக்கவோ, சிறப்பாக அமையவோ வாய்ப்புகளே இல்லை என்று ஒருவர் நம்பிக்கையை கைவிட்டுவிடுவதைப்பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. கற்பனாவாதத்திற்குப் பிந்தைய மனப்பான்மை என்பதும், நல்ல உறவுகள் குறித்து அதே அளவு லட்சியத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அந்த லட்சியங்களை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதில் மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது.
இக்கற்பனாவாத பாணியை நாம் நிச்சயமாக மாற்ற வேண்டும். உளவியல் ரீதியாக சற்று முதிர்ச்சியான காதல் பார்வையைக் கொண்டிருக்கும் வேறொரு பாணியை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் அதைச் ‘செவ்வியல்’ என்றழைக்கலாம். அது, இதுவரை நமக்கு பழக்கமில்லாத, ஆனால் நம்பிக்கையூட்டும் சில பயனுள்ள மனப்பக்குவங்களை ஊக்குவிக்கும்:
- காதலும் காமமும் எப்போதும் ஒன்றிணைந்ததாகவே இருக்க வேண்டியதில்லை; இவ்வியல்பிற்கு நாம் பக்குவப்படலாம்;
- ஆரம்பத்திலேயே, வெளிப்படையாகவும், தீவிரமாகவும் வரவு செலவுகள் குறித்து விவாதிப்பது ஒன்றும் காதலுக்கு நாம் செய்யும் துரோகம் அல்ல;
- நம்மிடம் சில குறைபாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அதேபோல நமது துணையிடமும் இருப்பவற்றை காணலாம். இப்புரிதல் இணையர்களுக்கு மத்தியில் பொறுமையையும், பெருந்தன்மையையும் பரவலாக அதிகரித்து உறவை மேம்படுத்தும்.
- நாம் ஒருபோதும் மற்றொருவரில் அனைத்தையும் காண மாட்டோம், அவரிடமிருந்து எல்லாவற்றையும் பெற மாட்டோம், அவர்களுக்கும் நம்மிடம் சகலத்தையும் அனுசரிக்கும் வரம் பயக்கமாட்டாது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட குறைபாடு காரணமாக நிகழ்வதல்ல, மாறாக மனித இயல்பு செயல்படும் விதமே இப்படித்தான்.
- ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு, பல ஆழமான முயற்சிகளும் சில சமயங்களில் செயற்கையான ஒலிக்குறிப்புகளும்கூட அவசியமாகலாம்.
- குளியலறையில் துண்டுகளைத் தொங்கவிடலாமா அல்லது தரையில் போடலாமா என்பது குறித்து இரண்டு மணி நேரம் விவாதிப்பது ஒன்றும் சிறுவிஷயமோ அல்லது அற்பமானதோ அல்ல.
இவ்வாறான பல்வேறு மனப்பான்மைகளும் காதலுக்கான ஒரு புதிய, நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தைச் சேர்ந்தவை.

தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















அதீத கற்பனாவாத குழப்பத்தால் தற்போதைய தலைமுறை காதல் என்ற சிக்கலில் முடிவெடுக்க முடியாமலும் தொடர இயலாமலும் தினறுகிறது என கருத இடமளிக்கிறது சிறப்பான மொழிபெயர்ப்பு நன்றி😍🙏
ஒருவித psycho analysis செய்து குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் காதலின் உண்மையான முகங்களை காண்பிக்கும் கட்டுரை.
மொழி பெயர்ப்பு சிறப்பானதே.
ஜெயானந்தன்.