
மென்மழை திரும்பும்
மண்ணின் வாசனையோடு
மென்மையாக மழை பொழியும்.
சலசலக்கும் சப்தத்துடன்
தகவிலாங் குருவிகள் வட்டமிடும்.
இரவுகளில்
குளத்து தவளைகள் பாடும்.
காட்டுப்பிளம் மரங்கள்
வெண்ணிறத்தில் குலுங்கும்.
சிறகுகளில் தீயை கொண்ட
கருஞ்சிட்டுக்குருவிகள்
தாழ்வான வேலிகளில் அமர்ந்து
தம் விருப்பங்களை சீட்டியடிக்கும்.
இந்தப் போரைப் பற்றி
எவரும் அறிந்திருக்க மாட்டார்கள் .
இறுதியாய் அது முடிவுக்கு வந்ததை
குறித்து ஒருவரும்
பொருட்படுத்த மாட்டார்கள்
மனித இனமே
சுவடின்றி அழிவதை எண்ணி
ஒரு பறவையோ ஒரு மரமோ
வருந்தப் போவதில்லை.
நாம் அனைவரும்
இங்கு இல்லாமல் ஆனதை
ஒரு விடியலில்
துயில் கலைந்தெழும்
வசந்தமும் அறிந்திருக்காது
000
நான் உன்னுடையவள் அல்ல
நான் உன்னுடையவள் அல்ல
உனக்குள்
தொலைந்தவளும் அல்ல
என்னை இன்னும்
நான் இழந்து விடவில்லை
எனினும்
மதியவேளையில் ஏற்றப்பட்ட
ஒரு மெழுகுவர்த்தியாய்
கடலுக்குள் கரைந்துப்போன
ஒருபனித்துகளாய்
தொலைந்து போகத்தான்
விரும்புகிறேன்
நீ என்னை விரும்புகிறாய்
என்னால் ஒளிரும்
உன் அழகியஆன்மாவை
இன்னமும் காணமுடிகிறது
இருந்தும்
நான் நானாக இருப்பதால்
ஒளியினுள் மறைந்த ஒளியாய்
தொலையவே ஏங்குகிறேன்
ஓ! என்னை
உன் பிரியத்தின் ஆழத்தில் புதை
என் புலன்களை மழுங்கச் செய்து
செவிடியாக குருடியாக
என்னை விட்டுச் செல்
உன் காதல் கடும் புயலில்
அடித்து செல்லப்பட்டவளாய்
விரையும் காற்றில்
ஒளிரும் மெல்லிய தீபமாய்
என்னை ஆக்கிவிடு
000
போர்கால வசந்தம்
நான் தூரத்தில்
மிகத் தொலைவில்
வசந்ததின் வருகையையும்.
பசிய இலைகளின்
மலர் மொட்டுகளின்
மெல்லிய மணத்தையும் உணர்கிறேன்
ஓ! இவ்வளவு
துயர் மிகுந்த உலகுக்குள்
ஆழ்ந்த துக்கத்துக்குள் வர
இந்த இளவேனிற் பருவத்துக்கு
எவ்வாறு இயலுகிறது?
கதிரவன்
வடக்கு நோக்கி திரும்பி விட்டான்
நாட்கள்
நீளமாக தொடங்கி விட்டன
பின்னர் நட்சத்திரம்
இரவு வானில்
பிரகாசத்துடன் ஒளிரத் தொடங்கும்
மனிதர்கள் போரிட தோதாகவா
இன்னும் சண்டையிட ஏதுவாகவா
இன்னுமிங்கு
இந்த பகலொளி நீண்டலைந்து திரிகிறது?
பசும்புற்கள் மண்ணில்
கண்மலர்கின்றன
விரைவில்
அவை எழுந்து அலையலையாய்
அசையத்தொடங்கும்
கல்லறைகளின் மீதும்
அன்றாடம் நிகழும்
புதுப்புது மரணங்களின் மீதும்
இப்படி துள்ளியபடி சாய்ந்தாட
அவற்றால் எப்படி முடிகிறது.
இளங்காதலர்கள் உலவிய மரத்தடியில்
ஆப்பிள் மரப் பூக்கள் வாசத்துடன் உதிரும்
ஆனால்
மரணத்தினால்
கொடுங்கூழினால்
பிரிக்கப்பட்ட அக்காதலர்கள்
இனிஎங்குச் செல்வர்
000
இன்றைய இரவு
நிலா
ஒசியும் பொன்முகை
ஆழ் அமைதியுடன் நீலமாய்
விரிகிறது விசும்பு
வானம் தன் கைகளில் ஏந்தவென
படைக்கப்பட்டது நிலவு
நானோ உனக்காக .
நிலா
ஒரு காம்பில்லா மலர்
ஒளிர்கிறது ஆகாயம் .
நித்திய நிரந்தரம்
அவர்களுக்கானது
இன்றைய இரவு
நமக்கானது.
000
ஒரு பிரார்த்தனை
நான் மரித்துக் கொண்டிருக்கையில்
என்னிடம் சொல்லுங்கள்
கசையடியாய் வலிக்கத் தீண்டியப் போதும்
நான் பனி பொழிவை விரும்பியதை
அழகான அனைத்தையும் நான் நேசித்ததை
அவை பரிசளித்த வலிகளை
நான் கசப்பற்ற புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதை
நான் முழு வலிமையுடன் அன்புச் செய்ததை
என் இதயம் முறிவதைப் பற்றிய
கவலைகள் ஏதுமின்றி
என் ஆன்மாவின் நீள அகலங்கள்
முற்றிலும் நிறையும் வண்ணம் நான் காதலித்ததை
குழந்தைகளைப் போல
எல்லாவற்றிலும் இசைச் சேர்த்துப் பாடித் திரிந்ததை
வாழ்வை வாழ்வுக்காகவே நான் விரும்பியதை.
000
சாரா டீஸ்டேல்

சாரா டீஸ்டேல் (Sara Teasdale, 1884–1933) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் கவிஞர். ஓசைநயத்துடன் கூடிய நுட்பமான மொழியமைப்பில் எழுதப்படுகிற “lyrical poems” என்றழைக்கப்பட்ட கவிதைகளை எழுதுவதில் தேர்ந்தவர். அவரது கவிதைகள் பெரும்பாலும் அகவயமானவை. சுயஅனுபவத்தை சார்ந்து எழுதப்பட்டவை . காதல், தனிமை இறப்பு என பொதுவான பாடுபொருள்களே இவர் கவிதைகளுக்கான கருப்பொருட்கள். மென் சோகம் இழையோடும் எளிய மொழியில் நுண்ணிய உணர்வுகளையும் அக கொந்தளிப்புகளையும் வெளிப்படுத்துகிறார். மழை, மரங்கள், நிலா, நட்சத்திரங்கள் என அனைத்தும் துயரத்தை வெளிப்படுத்தும் படிமங்களாகவே இவரின் கவிதைகளில் இடம்பெறுகின்றன.
இறப்பு, துயரற்ற அமைதியைத்தரும் ஒன்றாக, வலி நிவாரணியாக இவரின் கவிதைகளில் சித்தரிக்கப்படுகிறது. இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒருவராகவே டீஸ்டேல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
மிசூரியின் செயின்ட் லூயிஸில்,1884 ஆம் ஆண்டு பிறந்த டீஸ்டேல், சிறுவயதிலிருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் வீட்டில் இருந்தபடியே கல்வி பெற்றார்.
நோயும் , நொய்மையான மனதையும் தன் அடையாளமாக முன்னிறுத்தும் இவர் இளம் வயதிலிருந்தே தனிமையையும் அகத்தத்தளிப்புகளையும் பாடுபவராகவே தன் கவிதைகளில் தன்னை நிலைநிறுத்துகிறார்.
1907ல் Sonnets to Duse and Other Poems என்ற தலைப்பில் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. பின்னர் 1911ல் Helen of Troy and Other Poems, 1917ல் Love Songs ஆகிய தொகுப்புகள் வெளியாகின. Love Songs கவிதைத்தொகுப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கவிதைப் பரிசு வழங்கப்பட்டது (பின்னர் அது புலிட்சர் பரிசாக மாறியது).
வெற்றிகரமான கவிஞராக பார்க்கப்பட்டாலும் , சாரா டீஸ்டேல் மன அழுத்தத்துடனும் தனிமையுடனும் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். அவரின் நெருங்கிய நண்பரான கவிஞர் வாஷேல் லின்சே (Vachel Lindsay) இறந்ததால் கடுமையான மனபிறழ்வுக்கு ஆளானார். மனநோயோடு போராடி தோற்றவர் 1933ல் தற்கொலை செய்து கொண்டார்.
சாரா டீஸ்டேலின் இந்த இரு கவிதைகளும் இரண்டு முற்றிலும் வேறுப்பட்ட மனநிலையை பேசுவனவாக அமைந்துள்ளன. ஒன்று சாமானியர்கள் கடக்கவொண்ணா பற்றை, தன்னை மூழ்கடிக்கும் ஒரு காதலுக்கான ஏக்கத்தையும் தேடலையும் பதிவு செய்கிறது , இன்னொன்று வாழ்க்கையை விலகி நின்று பார்க்கும் பற்றற்ற நிலையை, போரின் துயரங்களால் பாதிக்கப்படாமல் காலமற்று நீளும் இயற்கையின் நீட்சியைப் பாடுகிறது. மனித மனதின் இரு வேறு துருவங்களை எளிய நடையில் பேசும் தன்மையினால் இவை எக்காலத்துக்குமான வரிகளாக நம்முன் நிற்கிறது.

பா.ரேவதி
சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும் இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

மென் மழை திரும்புதல் கவிதை தரமான மொழி பெயர்ப்பு.
நிலா
ஒரு காம்பில்லா மலர்
ஒளிர்கிறது ஆகாயம் .
நித்திய நிரந்தரம்
அவர்களுக்கானது
இன்றைய இரவு
நமக்கானது. இந்த வரிகள் செய்யும் அற்புதம்
ஆழமான வாசிப்பில் வெளியான மொழி பெயர்ப்பு இரு மொழிகளின் தேர்ந்த வார்த்தைகள். நல்ல கவிதைகளை படித்த அனுபவம். நன்றி
ஒரு பறவையோ ஒரு மரமோ
வருந்தப் போவதில்லை.
நாம் அனைவரும்
இங்கு இல்லாமல் ஆனதை – அப்பட்ட அனுபவம்
நிலா
ஒரு காம்பில்லா மலர் – இரசவாத அனுபவம்.
குழந்தைகளைப் போல
எல்லாவற்றிலும் இசைச் சேர்த்துப் பாடித் திரிந்ததை – மேலதிக இரசமாதம்.
மூலக்கவிஞருக்கும், மொழியனுபவமாக்கிய ரேவதிக்கும் கைகுலுக்கல்.
– சக்திவேல், கோபிசெட்டிபாளையம்