
கவிதை பெரும்பாலான பெண்கள் விரும்பும் ஒரு இலக்கியவடிவாகவே உலகெங்கும் இருந்து வருகிறது. ரசனையிலோ ,எழுத்திலோ ஆண் பெண் என்னும் பாகுபாடுகள் இல்லை என்று ஒரு சாரார் கூறி வந்தாலும், பெண்ணெழுத்துக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது. பெண்மொழி என்பது சற்றுத் தீவிரமானது. அதீத உணர்ச்சியும் அகவயமும் பெண்கவிதைகளின் மொழியாக உள்ளது. பெண்கள் எழுதும் கவிதைகள் பெரும்பாலும் அவர்கள் இயங்கும் தளத்தை சுற்றியே உள்ளன. அன்றாட வாழ்க்கையின் அபத்தங்கள் , உடல் அரசியல், காதல் , அகச்சிக்கல்கள் போன்றவற்றை மிகுந்த தீவிரத்துடனும் , நுட்பத்துடனும் அவர்கள் முன் வைக்கிறார்கள். ஒரு கவிதையை வாசித்தால் அதை எழுதியது ஒரு ஆணா பெண்ணா என ஒரு வாசகரால் சுலபமாக சொல்லிவிட முடியும். இன்று உலகெங்கும் பால் அடையாளமற்ற கவிதைகள் மிகவும் அரிதாகவே உள்ளன.
ஆனால் நம் சங்ககவிதைகளில் இந்த பால் அடையாளங்கள் குறைவாகவே தென்படுகின்றன. சங்க இலக்கியங்களில் மொத்தம் முப்பத்தி நான்கு பெண்பாற்புலவர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்விக்கி கூறுகிறது. ஆண் புலவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவாக தோன்றினாலும், பாடல்களின் தரத்திலோ, தீவிரத்திலோ இவர்கள் சற்றும் குறைந்தவர்களில்லை. நுட்பமான நுண்ணடுக்குகளும் , கூர்மையான பார்வையும் உள்ளனவாகவே விரிகின்றன இவர்களின் கவிதைகள் .
அதிலும் சங்க இலக்கியங்களில் 26 அகப்பாடல்களையும், 33 புறப்பாடல்களையும் பாடியுள்ள ஔவையார் பால்அடையாளங்களை முழுவதுமாய் கடந்த ஒரு மகத்தான பெண்பாற்புலவர். அவர் கவிதைகளின் சொல்வீச்சும், பொருட்செறிவும் படிக்க படிக்க விரிந்து கொண்டே செல்வது.
“பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா” என்று முதன்முதலில் பொதுவெளியில் பெண்ணின் பெருமையை முன்வைத்த பாரதியே “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்ற வரிசையில் ஔவையை விட்டுவிட்டார் என்ற ஆதங்கம் எனக்குண்டு. அந்த ஆதங்கத்தை கொஞ்சம் தணித்தது,
கவிஞர்.இசையின் களிநெல்லிக்கனி-ஔவையார் கவித்துவத் திரட்டு என்னும் தொகுப்பு.
நம்மில் பெரும்பாலோர் பழந்தமிழ் இலக்கியங்களை வெறும் மனப்பாட செய்யுள்களாகவே பார்த்து வந்திருக்கிறோம். அவற்றை நாம் கவிதைகளாகவே கருதுவதில்லை. அதற்கு முதல் காரணம் எளிதாக நெருங்க முடியாத அதன் சிக்கலான மொழி. வரிந்து வரிந்து இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களும் அப்பாடல் உணர்த்தும் கருத்தை, பொருளை பக்கம் பக்கமாக எழுதினார்களேயொழிய அதன் அழகியலை, சொல்லழகை எடுத்து இயம்பவில்லை.
பழந்தமிழ் இலக்கியங்களை கவிதை நோக்கில் அணுகி அதனை விளக்கி ஆராயும் பணியை கவிஞர்.இசை தொடர்ந்து செய்து வருகிறார். மரபு இலக்கியங்களை நவீன வாசகர்கள் கண்டடைய வேண்டும் என்ற நோக்கில் அவர் செய்து வரும் பணி பெரும் மெச்சுதலுக்குரியது. ஒரு புராதன மொழியை, அதன் கரடுமுரடுகளைத்தாண்டி அதன் கவித்துவத்தை, மூலத்தின் சுவை குன்றாமல், அதன் சொல்லழகையும், பொருளழகையும் வாசகனை கட்டுரையை விட்டு விலகவிடாத சுவாரசியமான மொழியில் ரசனையுடன் விளக்கும் கட்டுரைகள் அவருடையவை. “பழைய யானைக்கடை”, “மாலை மலரும் நோய்” “தேனொடு மீன்” முதலிய தொகுப்புகளின் வரிசையில் ஔவையாரின் பாடல்களை முன்வைத்து வெளிவந்துள்ள இந்த “களிநெல்லிகனி” தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரின் தொகுப்புகளில் ஆகச்சிறந்தது. முக்கியமானது.
ஔவை ஒரு மகத்தான பெண்கவி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பெண்பாற் புலவர் இலக்கியத்தில் கோலோச்சி , இன்று வரை தன் பாடல்களால் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது ஔவை மட்டுமே. முதன்முதலில் அ, ஆ என்று தமிழ் கற்க ஆரம்பிக்கும் போதே ஆத்திசூடியையும் சேர்ந்து கற்க தொடங்குகிறார்கள் நம் தமிழ்ப்பிள்ளைகள். உலகெங்கும் தமிழறிந்த, தமிழ்பேச தெரிந்த,தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் எவரும் வள்ளுவனையும் ஔவையையும் அறியாமல் இருக்கமுடியாது. இவ்வாழ்வை அறத்தோடு வாழ்வதற்கான ஒரு முழுமையான கையேட்டை தங்களின் படைப்புகளின் வாயிலாக தமிழருக்கென விட்டுச்சென்றுள்ளனர் இருவரும்.
ஔவை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா! என்று கணீர் குரலில் பாடும் ஒரு மூதாட்டிதான். ஆனால் இவர் மைதீட்டிய கண்களும், வாட்டமான நெற்றியும் அமைந்த மடவரல் மடந்தை என்பதை நம்மில் எத்தனைப்பேர் அறிந்திருப்போம்? பெண்பாற் புலவருக்கு ஔவை என்னும் பெயர் சூட்டுவதென்பது தமிழ்மரபு என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதை போன்ற பல செய்திகள் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் கவிஞர். இசை எட்டு ஔவைகளை முன்வைத்துள்ளார். என்னைப்போல தமிழ் இலக்கியம் அறியாத ஒரு வாசகரு்க்கு அதுவே ஒரு புதியச் செய்தியாகத்தான் இருக்கும். சங்கப்பாடலை பாடிய முதல் ஔவையில் தொடங்கி, தனிப்பாடல்கள், நீதி இலக்கியங்கள் எழுதிய ஔவைகளோடு விநாயகர் அகவல், அந்தாதி, நிகண்டு ,பெட்டகம் , நீதி ஒழுக்கம், கல்வி ஒழுக்கம் தரிசனப்பத்து ஆகிய நூல்களைப்பாடிய ஔவை வரை மொத்தம் எட்டுப்பேரின் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் அனைவரது பாடல்களையும் காலவரிசை வாரியாக நம்முன் நிறுத்தி அப்பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் நிலவிய வாழ்வியல் முறைகளோடு அவற்றை தொடர்புபடுத்தி கதைசொல்வதுபோல் பாடல்களின் பொருளை விளக்குகிறார்.
இந்நூலை ஔவை பாடல்களுக்கான ஒரு உரைநூல் என்று சொல்லிவிட முடியாது. ஒரு உரை நூல் என்றால் உரையாசிரியர் ஒரு நூலை எடுத்துக்கொண்டு அந்த நூலில் உள்ள பாடல்களுக்கு வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக பொருளை விளக்கி பிறகு அந்த பாடல் உணர்த்தும் கருத்தை மொத்தமாக விளக்கி எழுதுவது என்பது மரபு . கவிஞர் இசை, இத்தொகுப்பில் நவீன வாசகனுக்கு எட்டு ஔவையார்களின் படைப்புகளையும் அறிமுகம் செய்து அவற்றில் தன் ரசனைக்கு உகந்த பாடல்களை தேர்ந்தெடுத்து அதன் சொல்லழகை தனக்கே உரிய பாணியில் சுவைபடச் விளக்குகிறார். இந்தப்பாடலை இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் வாசகனை அடைக்காமல் அந்தச் செய்யுளை கவிதையாக்கும் ஒரு சொல்லையோ, தன்னை பரவசமூட்டிய ஒரு வரியையோ எடுத்துக் கொண்டு அதனை ரசனையுடன் விதந்தோதி நவீன வாசகனுக்கு அந்நூலை நெருக்கமாக்குகிறார். இத்தொகுப்பை வாசிக்கும் எவருக்கும் இதில் ஔவையின் அபாரமான சொல்வீச்சை ரசிப்பதா அல்லது தொகுப்பாசிரியரின் நுண் ரசனையை, ஔவை மீது அவர் கொண்டுள்ள அபார அன்பை , ஆசிரியரின் பகடி கலந்த மொழிநடையை ரசிப்பதா என இனிய குழப்பம் ஏற்படும் .
இந்த தொகுப்பில் அவர்,பாடலை முழுமையாகத் கொடுத்து, அதன் பொருளை விளக்கி, அதில் தான் மிகவும் ரசித்த ஒரு வரியை எடுத்துக்காட்டும் வழக்கமான பாணியை கையாளவில்லை. மாறாக ஒரு பாடலின் இடையிலிருந்து ஒரு சொல்லையோ , வரியையோ எடுத்து , அதிலிருந்து தொடங்கி அப்பாடலை விளக்கி பிறகு முதல் வரியை அடைகிறார். சில நேரங்களில் அந்த முதல் வரி சட்டென பாடலின் போக்கையே மாற்றி வாசகனை வியப்பிலாழ்த்துகிறது.
எட்டு ஔவைகளில் சிறப்பு கவனம் பெறுவது சங்ககாலத்தின் முதல் ஔவை, உணர்வெழுச்சியுடன் தனிப்பாடல்களைப் பாடிய இரண்டாமவள், ஆத்திசூடி, நல்வழி, மூதுரை , கொன்றைவேந்தன் போன்ற அற இலக்கியங்களை பாடிய மூன்றாமவளுமே என்றெனக்குத் தோன்றியது.
அதிலும் சங்கப்பாடலை பாடிய ஔவை இதுவரை ஔவைப் பற்றி நாம் கொண்டிருந்த அத்தனை பிம்பங்களையும் அடித்து நொறுக்கி மிகப்பெரிய ரொமாண்டிக்காக நம்முன் விரிகிறாள்.
இந்த ஓளவை நிச்சயமாக மூதாட்டி அல்லள் . இவள் ஒரு பேரிளம்பெண்ணாகவே இருக்க முடியும். முப்பத்தியாறு வயதுக்கு மேல் உள்ளவர்களை பேரிளம் பெண் என விக்கிப்பீடியா கூறுகிறது. சரியாக வயதெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் சங்கக்காலத்து ஔவை கட்டாயம் மத்திய வயதை கடந்த ஒருத்தியாகத் தான் இந்த தொகுப்பில் வெளிப்படுகிறாள். காதலின் பரவசத்தை, காத்திருத்தலின் கொடுமையை , பிரிவின் துயர்களை, உடலின் ரகசிய அறைகளை அறிந்தவள். உறவின் தொடக்கத்தில் உள்ள பரபரப்பெல்லாம் அடங்கி , கூச்சமகன்ற நிதானமான நிறைவான காதல் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு நடுவயதுக்காரியாகத்தான் இந்த ஔவையை அகப்பாடல்களில் காணமுடிகிறது. அற்புதமான அகப் பாடல்வரிகள். அதற்கு ஆசிரியரின் விளக்கங்களும் அபாரம்.
முதல் அத்தியாயத்தில் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் எடுத்து காட்டியிருக்கும் ஒவ்வொரு வரியும் , சொற்றொடரும் வாசகனை பரவசத்தில் ஆழ்த்துவன. “மெய் புகுவ அன்ன கவர் முயக்கம்” “அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”, “பேய் கண்ட கனவிற்” “முலையிடை முனிநர்” “மெய்மலி காமம்” , நாட்படுத்தேறல் …. என அழகழகான சொல்லாடல்கள்.
தலைவன் தலைவியை பிரியும் வேளை வருகிறது. தலைவி தன்னையும் கூட அழைத்துச் செல்லும்படி கேட்கிறாள். அப்படி என்னை அழைத்துச் சென்றால் நாமிருவரும் போகும் வழியில் கூடி இன்பம் துய்க்கலாம் என்று அவனுக்கு ஆசை காட்டுகிறாள்.
“மெய் புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே ” (அக:11)
இந்தப் பாடலில் “கைகவர் முயக்கம்” என்ற சொற்கட்டை ,அது முயக்கத்தின் சிறு அலகல்ல மொத்த முயக்கத்தின் தீவிரத்தையும் காட்டி நிற்கும் காட்சி என்கிறார் இசை.
ஒரு இளைய வாசகனின் எண்ணத்தில் இந்த விளக்கம் உருவாக்கும் பரவசம் அவனை இந்த புத்தகத்தை கீழே வைக்க விடாது.
பாலையின் தீவிரத்தை விளக்கும்இன்னொருப் பாடல்.
ஒரு பெண்புலி மூன்று குட்டிகளை ஈன்று களைப்போடும், பசியோடும் தளர்ந்து படுத்திருக்கிறது. அதன்மேல் அபார அன்புகொண்ட, இரை தேடும் கடமையாற்ற காத்திருக்கும் ஆண்புலி தூரத்தில் ஒரு ஆண்மானின் குரலை உற்றுக் கேட்கிறது.
“ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவுப்பசி கூர்ந்தென
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை”
இப்பாடலில் பாலை நிலம் மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அங்கு நடந்து முடிந்த வேட்டையையும் சித்தரிக்கிறது என்கிறார் கவிஞர். சொல்லப்படாவிட்டவளும் கூட அந்த உழைமான் இப்பொழுது புலியின் வயிற்றுக்குள் தான் இருக்கிறது என்று அவர் எழுதுகையில் நம் நெஞ்சில் மெல்ல குளிர் பரவுகிறது.
பெண்கள் கூட்டம் கையில் ஏந்தி நடக்கும் கார்த்திகை தீபத்தைப் போன்று பூத்திருக்கும் இலவம் பூக்கள், கூதள மாலையை வானத்தில் எறிந்ததைப் போன்று பறந்துசெல்லும் குறுகுக் கூட்டம் என பரவசமூட்டும் ஒவ்வொரு வரியையும் எடுத்து காட்டி நம் கண்முன் அதை காட்சியாக விரியச் செய்கிறார் கவிஞர். இசை.
“பேய் கண்ட கனவிற்” என்ற ஒரு சொற்றொடரை எடுத்துக்கொள்கிறார் . பேய் கனவு காணுமா, அப்படி கண்டால் நம் கனவில் பேய் வருவதுபோல் பேய் காணும் கனவில் நாம் வருவோமா என்றெல்லாம் எள்ளலுடன் கேள்விகள் கேட்டு, அறுதியிட்டு உரை காணமுடியாத அவ்வரிக்கு எழுதப்பட்ட உரைகளில் சில பேயே எழுதியதுபோல் உள்ளது என்று பகடி செய்கிறார் . விரிந்து கொண்டே செல்லும் அப்பாடலுக்கு பேயை கண்ட கனவை வெளியே சொல்லாமல் ஒளித்து வைப்பது போல் யாருமறியாமல் மறைத்த காதல், இப்பொழுது அருவி விழும் பேரொசை ஊர் முழுக்க கேட்பது போல் அலர் பரவியதால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது என சுவையாக உரை விளக்கமளிக்கிறார்.
அதேபோல் “கலிமடை” என்றச் சொல்லின் வழியாக ஒரு துறைமுகத்தை, பரபரப்பாய் அங்கு நடைபெறும் வணிகத்தை , ஒரு பெருங்கூட்டத்தை வாசகனின் முன் காட்சிப்படுத்துகிறார். ஒவ்வொரு வரியையும் அவர் விளக்குகையில் வாசகனின் கண்முன் ஒரு திரைப்படம் விரிகிறது.
இன்னொரு பாடலுக்கு உரை சொல்ல நகுலனின் வரிகளை உதவிக்கழைக்கிறார். ஔவையையும் நகுலனையும் ஒரே உரையில் வைப்பதென்பது ஒரு கவிஞர் உரையாசிரியராக மாறும் போது மட்டும் நிகழும் மாயங்களில் ஒன்று. நினைவென்னும் நச்சரவம் காலந்தொறும் நம்மை அச்சமுற செய்கிறது.
“அழல் தொடங்கினளே ஆயிழை அதனெதிர்
குழல் தொடங்கினரே கோவலர்…”
தலைவன் இல்லாத மழையிரவில் எங்கோ தொலைவிலிருந்து ஒலிக்கும் குழலின் ஒலி தலைவியின் ஏக்கத்தை அதிகரித்து அவளை அழச் செய்கிறதாம். இன்று வரை இரவின் தனிமையின் கேட்கும் ஒரு பாடல் இழந்த உறவொன்றுக்காய் நம்மை அழச் செய்கிறது தானே. அற்புதமான வரிகளை எடுத்துக்காட்டி நம்மையும் அவ்வரியோடு பயணிக்க வைக்கிறார் இசை.
“முட்டுவேன் கொல் ! தாக்குவன் கொல்…
ஆ அ! ஓல் ! எனக் கூவுவேன் கொல்?”
என்று உறக்கமில்லா ஒரு இரவில் தனிமையில் அலறும் ஒரு தலைவியின் குரலாய் ஒருப்பாடல்.
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இந்தப்பாடலுக்கு உரை சொல்லும் கவிஞர், மகவுடை மந்தி என்ற சொல்லில் தொடங்கி நம் ஆசைகளையெல்லாம் யாரோ ஒருவர் , குரங்கு தன் குட்டியை ஏந்துவதுபோல ஏந்தியணைத்துக்கொண்டால் எப்படியிருக்கும் என்ற அழகாக கேள்விக் கேட்டு , அப்படியான குரங்குகள் நம் வாழ்வில் தென்படுவதில்லை என்று பதிலையும் கூறிவிட்டு பிறகு முழுப்பாடலுக்கு விளக்கமளிக்கிறார் . உரை சொல்லி முடித்தப் பி்ன் மீண்டும் “அரிது அவாவுற்றன நெஞ்சே” என்ற தோழியின் கூற்றாக வரும் ஒரு வரிக்குச்சென்று அரிது அவாவுறவில்லையெனில் அது நெஞ்சமே இல்லை பாட்டி என்று ஔவையிடம் நேராக உரையாடுகிறார்.
அதேபோல் இன்னொரு இடத்தில் மேஜிக்கல் ரியலிஸமெல்லாம் உங்களுக்கு சப்ஜெக்ட்டு எனக்கு சாப்பாடு என்று சொல்லி கபிலர் சிரிப்பதாக எழுதுகிறார்.
இந்த புத்தகத்தின் வாயிலில் கவிஞர் இசை பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த தன் எழுத்துகளெல்லாம் நவீன இலக்கிய வாசகர்களை முன்னிலைப்படுத்தியதே என குறிப்பிட்டு இருப்பார். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்காங்கே இளைய வாசகனை குறிவைத்து அவன் மொழியில் உரையாடி அவன் கவனம் சிதற விடாமல் அவனை கட்டுரையோடு பிணைக்கிறார்.
“கானமும் இனியவாம் நும்மொடு வரினே” என்று தலைவனோடு உடன்போக்கு செல்லத்துணிந்த தலைவிக்கு வக்காலத்து வாங்குகிறாள் தோழி . அந்த பாடலி்ல் வெளிப்படும் உணர்ச்சியைச் சொல்ல அய்யனை துணைக்கழைக்கிறார் ஆசிரியர்.
“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்”.
என்ற திருக்குறளை தலைவியின் மெல்லிய பாதத்துக்கு உவமையாக்கி அப்படிப்பட்ட பாதத்தை உடையவள் தலைவனோடு காட்டுக்குள் நடக்கத்தயாராகிறாள் என்றால் அவன்பால் அவள் கொண்ட அன்பு எத்தகையது என்று தோழியோடு இசையும் சேர்ந்துகொண்டு தலைவனை சம்மதிக்க வைக்க முயல்கிறார்கள். அழகு.
அதியனோடு நட்பில் இருக்கும் புறப்பாடல் ஓளவை இன்னும் சுவாரசியமானவளாக இருக்கிறாள். ஔவைக்கு அதியன் நெல்லிகனி கொடுத்த கதையையும் , உண்டவரை இளமை மாறாமல் காக்கும் நெல்லிக்கனியின் மகத்துவத்தை விளக்கும் கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஔவை சுற்றி நிலவும் கதைகளைப் பற்றி சொல்லிவிட்டு “ ஔவை ஒரு ருசிகர குழப்பம்” என்கிறார் கவிஞர் இசை. சட்டென்று நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் அழகிய அவதானிப்பு.
அவ்வையின் பாடல்களில் அதிகமாய் பாடப்பட்டது அதியன் தான். அதியனுக்கும் ஔவைக்கும் இடையே எதனால் அப்படி ஒரு நட்பு, ஏனிப்படி அவனை மாய்ந்து மாய்ந்துப் பாடுகிறாள் என்றெல்லாம் நமக்கு தெரியாது. தெரிந்து ஆகப்போவதும் ஒன்றுமில்லை . அவர்கள் நட்பில் முகிழ்த்த பாடல்கள் ஓவ்வொன்றும் இலக்கியத்துக்கு அவளீந்த பரிசு. அத்தனையும் முத்து. ஆர்கலி நறவை உடையவன் அதியன் என்கிறாள் ஔவை.
மனதை மயக்கும் புறப்பாடலொன்று,
“ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழா அலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை”….
அதியன் எத்தனை இனியவன் என்பதை இப்படிச் சொல்கிறாள் ஔவை. இனிமையை இதைவிட அழகாய் வேறு யாரும் சொல்லிவிட முடியாது. ஆற்றில் சிறுவர்களிடம் தன் பேருடலை ஓப்படைத்துவிட்டு அக்கடாவென அமைதியாய் நிற்கும் ஒரு யானையும் அதன் கழுத்திலும், துதிக்கையிலும் தொங்கும் சிறுவர் கூட்டமுமாய் நம் மனதுக்குள் ஒரு அழகான காட்சி கவிஞரின் உரையின் வாயிலாக நம்கண் முன் ஓடுகிறது. குறுமாக்கள்- சிறிய மனிதர்கள் எத்தனை அழகியச் சொல். அதை எழுதியவருக்கும் எடுத்து காட்டியவருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக.
இன்னொரு பாடல்,.
அதியன் தனது மகனை முதன்முதலாக காணச் செல்லும் காட்சியை காட்டுகிறாள் அவ்வை.
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது புசும்புண்;
…
பசும்புண் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.” (புறம்: 100)
கையில் வேலும் காலில் கழலுமாய் உடல் முழுக்க வியர்வையுடனும் கழுத்தில் காயாத பசும்புண்ணுடனுமாய் பிறந்த குழந்தையைக் காணச் செல்கிறான் அதியமான். முகத்தில் புலியொடு பொருத யானையின் வெஞ்சினம்; போர்க்களத்தில் எதிரியை நோக்கிய கண்களின் சிவப்பு தன் குழந்தையைக் காணும் போதும் மாறவில்லை என்கிறாளாம் அவ்வை.
பெற்ற பிள்ளை வீரனாக வளர வேண்டி, தந்தை போர்க்கோலத்தில் சென்று குழந்தையைக் காணுதல் அக்காலத்திய தமிழ் மரபு என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே “இது புனைவெனில் கொடூரம். மரபெனில் ஆகக் கொடூரம்” என்கிறார் கவிஞர்.
“கொழந்த சார் அது…!” என்று அவர் அதியனிடம் சொல்கையில் வாசிப்போர் அனைவருக்கும் புன்னகை வருகிறது. இதெல்லாம் ஒரு பெருமையா தாயே என்று அவ்வையிடமே கேட்கிறார் இசை.
அதியனின் கொடைத்திறத்தை பாடும் பாடல்களில் இடம்பெற்றுள்ள அபாரமான சொல்லாடல்களை எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.
அதியனின் பரிசிலென்பது “களிறு தன் கோட்டிடை வைத்த கவளம் போல்” உறுதியானது என அதியனுக்கு நான் கியாரண்டி என்கிறாள் அவ்வை. கவிகை – கொடுக்க கவிழ்ந்த கை என்று பொருளாம். மூன்றெழுத்து சித்திரம் என்கிறார் இசை அச்சொல்லை. “கவிழ்த்த மண்டை மலர்குநர்”, “தேற்றா ஈகை” என அவ்வையின் அபாரச் சொல்வீச்சை எண்ணியெண்ணி வியக்கிறார் இசை.
“எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே” என்று பரிசில் கொடுக்காத அதியனிடம் கோபித்துக்கொண்டு செல்லும் அவ்வையின் பாடல் ஒன்றை குறிப்பிடும் ஆசிரியர் அவ்வரியைச் சுற்றி உரையாசிரியர்கள் செய்யும் அதீத கற்பனைகளையும் கேலி செய்கிறார் . ஆனாலும் அவ்வரியில் வெளிப்படும் செருக்கு, வித்யாகர்வம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
“மடவர் மகிழ்துணை” என்ற சொல்லை விளக்கும் கவிஞர், அச்சொல் தன் கண்ணில் நீர் கோர்க்க வைத்ததென்கிறார். இதைப்போன்ற ஒரு சொல்லை கண்டடைந்து, அதை விடாமல் பற்றி கொண்டு அரற்றுவதற்கு ஒரு கவிமனம் வேண்டும். சாதாரண உரையாசிரியர்கள் அடைய முடியாத உயரம் அது.
அதியன் போரில் மாய்ந்தப்பின்
“இனி, பாடுநரும் இல்லை;
பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை”;
என மன்னே! மன்னே! என அவள் அழுதப்படிப் பாடுகையில் ஒலிக்கும் ஒப்பாரி என்றோ இறந்த அதியனுக்காக இன்றும் வாசகனை கண்கலங்க செய்கிறது.
ஆண்கள் நிறைந்த சபையில், அரசனுக்கு இணையாக அமர்ந்து , அவனுடைய அணுக்கியாக அவனோடு ஆர்கலி நறவை அருந்துபவளாக புறப்பாடல் ஔவை, வாசிக்க வாசிக்க வியப்பூட்டுபவளாக திகழ்கிறாள்.
தனிப்பாடல்களில் ஔவையின் மொழி இன்னும் அழகாகிறது. தனிப்பாடல்களில் வெளிப்படும் ஔவையின் மேல் தனக்கு தனிப்பிரியமென்கிறார் கவிஞர்.
தனிப்பாடல் என்னும் தூண்டில் புழு என்ற எழுத்தாளர். பெருமாள்முருகனின் தனிப்பாடல்களை பற்றிய கட்டுரையை குறிப்பிடும் ஆசிரியர் ,அவ்வையின் பாடல்களோடு கம்பர், ஒட்டக்கூத்தர் புகழேந்திப்புலவர் காளமேகப் புலவர், பலப்பட்டடை சொக்கநாதர் என்று தனிப்பாடல்களை எழுதிய பலப் புலவர்களையும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார் . மேலும் அப்பாடல்களை ஒரு நூலாக தொகுத்த சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பற்றிய செய்திகளையும், அவ்வையின் பாடல்களை தொகுத்த புலியூர் கேசிகன் பற்றியும் குறிப்பிட்டு , பல அரியநூல்களை நாமறியாத உரையாசிரியர்களை பற்றிய பல தகவல்களை இத்தொகுப்பில் கொடுத்துள்ளார். இச்செய்திகளின் வாயிலாக இந்த தொகுப்புக்கு பின்னால் உள்ள ஆசிரியரின் கடும் உழைப்பையும் , ஆழ்ந்த வாசிப்பையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
எத்தனை மெனக்கெடலும், அர்ப்பணிப்பும் இருந்தால் இதையெல்லாம் செய்யமுடியும். அதனாலேயே இந்நூல் இதுவரை பழந்தமிழ் இலக்கியங்களை முன்வைத்து வந்த நூல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
“அவ்வையின் தனிப்பாடல்களை அறிவுரைகள், கூர்த்த மதி கொண்டு சொல்லப்பட்ட உண்மைகள், அவர் வாழ்வில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வுகளின் போது பாடப்பட்ட பாடல்கள், இன்றைய முற்போக்காளர்களுக்கு உவக்காத சில வரிகள் என்பதாகத் தொகுக்கலாம். எல்லாப் பாடல்களும் நவீன மனதின் நெஞ்சோடு பேசுபவை அல்ல. ஆயினும் கட்டாயம் காதுகளைக் கொஞ்சுபவை. அதனால் வாசிப்பின்பத்தில் குறை வைக்காதவை. “என்றும் கிழியாதென் பாட்டு” என்கிற அவ்வையின் வரியை இன்றைய கவியும் கண்ணீர் புரள நெஞ்சு விம்மிக் கூவ முடியும்.” (களிநெல்லிக்கனி- கவிஞர் இசை)
வெவ்வேறு அழகுகளை அவ்வை பட்டியலிடும் ஒருப்பாடல் . விரதம் இருந்து இளைத்த மேனி ஒரு அழகு; நித்தமும் அள்ளியள்ளிக் கொடுத்து இளைத்துவிட்ட வள்ளல் ஒரு அழகு ; கொடிய போர்களத்தில் வீரன் வாங்கிய வடுவும், வீழ்ந்துபட்ட வீரர்களுக்கு நடப்படும் நடுகல்லும் அழகானவை என்று ஔவை சொல்வதாக சொல்லும் கவிஞர் மெல்ல அப்பாடலின் முதல் வரியை வாசகனுக்கு அறிமுகம் செய்கிறார்.
அது, “சுரதந்தனில் இளைத்த தோகை” என்னும் வரி.
அதாவது ஒரு புணர்ச்சிக்குப்பின் களைத்து கிடக்கும் பெண் அழகாம்.
எங்கிருந்தய்யா கிளம்பி வருகிறீர்கள் நீங்கள் எல்லோரும், இப்படி உயிர் தின்னும் வரிகளுடன் என்று வாசகனை கதறடிக்கும் ஒரு வரி.
நடுவில் இருந்து தொடங்கி ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லி வாசகனின் எண்ணத்தில் பாடலைப்பற்றிய ஒரு சித்திரத்தை வரைகிறார் . பிறகு பாட்டின் முதல்வரியைச் சொல்லி வரைந்த மொத்தத்தையும் கலைத்துப்போட்டு வாசகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.
ஔவையும் கவிஞர் இசையும் ஆடும் இந்த விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகிறோம் நாமெல்லோரும்.
என்றும் கிழியாதென் பாட்டு என்று உறுதிபடப் உரைப்பவள் தான் இன்னொரு பாடலில்
“உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்”
என்றும் “வாழ்விலாச் சங்கடத்தில் சாதலே நன்று” என்றும் விரக்தி மேலிட புலம்புகிறாள்.
அன்பற்ற ஒருவனுக்கு மானைப் போன்ற ஓருத்தியை இணையாக சேர்த்து வைத்த பிரம்மனின்
“அற்றதலை போக அறாத்தலை
நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ”
என்று வெகுண்டெழும் அவ்வை தான் அன்பில்லாத பெண்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறாள். நேசமில்லா பெண்ணின் கையில் உணவு உண்பதை கொடிதென்கிறாள். அவளைப் பார்த்து அன்பை ஓரிடத்திலும், சோற்றை இன்னொரு இடத்திலும் பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஆகுமா? அன்னையே என்கிறார் இசை.
ஆம்! அவ்வை ஒரு ருசிகர குழப்பம் தான்.
“ஔவைகுறள்” என்னும் நூலை அறிமுகம் செய்யும் ஆசிரியர் , அவற்றில் தனக்குப் பிடித்த சில வெண்பாக்களை அசைப்பிரித்து கொடுத்துள்ளார். “விநாயகர் அகவல்” என்ற நூலைப்பற்றிய தகவல்களும் இத்தொகுப்பில் உண்டு.
ஒரு சராசரி தமிழ் வாசகன் அதிகம் அறிந்தது நீதிநூல்களை நற்றமிழுக்கு ஈந்த அந்த ஔவையைத்தான். அன்றாடம் மண்டையில் குட்டி குட்டி புத்திசொல்லக்கூடியவளாக , பள்ளிக்காலம் முழுவதும் நம்முடனேயே பயணித்த ஔவை நம் வாழ்வு முழுமைக்குமானவள். வளர்ந்தப்பிறகு நாம் படித்தவற்றை மறந்துப்போனாலும், நாம் பிறழக்கூடிய தருணங்களிலெல்லாம் பேயாய் நம் சிந்தைக்குள் வந்து நம் கைப்பற்றி தடுப்பவர்கள் ஔவையும் அய்யனுமன்றி வேறொருவரும் அல்லர்.
ஆத்திசூடிக்கு எழுதப்பட்ட பல உரைநூல்களையும் சிரத்தையுடன் படித்து அவற்றை ஒப்புமைப்படுத்தியும் வேறுபடுத்தியும் காட்டியுள்ளார் கவிஞர் இசை. ராகவையங்கார், அயோத்திதாசர், ஆறுமுக நாவலர் என்று அத்தனை உரையாசிரியர்களின் உரைகளையும் குறிப்பிட்டு அவர்களின் உரைகளில் காணப்படும் தற்குறிப்பேற்றத்தை மென்மையாக இடித்துரைத்தும் இருக்கிறார்.
கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, என்று ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தை ஒதுக்கி, அதன் அற்புதமான வரிகளை நுண்ரசனையுடன் விளக்கி, தன் சொந்த அனுபவங்களுடனும் , வாழ்க்கையுடனும் அதை தொடர்புபடுத்தி , இறுதியாக அதை கவிதை பெருவெளியில் நிறுத்தி ரசிக்கிறார். வாசிக்க வாசிக்க திகட்டாத பக்கங்களால் நிறைகிறது இத்தொகுப்பு.
தமிழில் இருக்கும் அளவுக்கு நீதி நூல்கள் வேறு இந்திய மொழிகளிலோ உலக மொழிகளிலோ இல்லை . அது தமிழின் தனிச்சிறப்பு .
அறத்தோடு வாழ்வதற்கான ஒரு கையேட்டை( manual)ஔவை அவளின் நீதி நூல்களின் வழியாக நமக்கு வழங்கியுள்ளாள். பிறந்தவுடன் ஔவை பாடத்தொடங்கியதாக இசை ஒரு கதையை இந்த தொகுப்பில் குறிப்பிட்டிருக்கிறார். .நம் பிள்ளைகள் பிறந்தவுடன் ஔவையைப்போல் வாசிக்கமுடியுமெனில் அவர்கள் கையில் அந்நூல்களை கொடுத்து, வாழ்ந்து உய்யடா உய் என்று அவர்கள் போக்கில் விட்டுவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போதைக்கு பெற்றோர்களாவது ஔவையை ஊன்றி வாசித்தால் நன்றாக இருக்கும்.
ஔவையின் பிற்கால படைப்புகளான பெட்டகம், நிகண்டு, பந்தனந்தாதி,கணபதி ஆசிரிய விருத்தம், கல்வி ஒழுக்கம்,தரிசனப்பத்து என்று ஒருநூலை கூட விட்டுவிடாமல் அத்தனை நூல்களைப் பற்றிய செய்திகளையும், தகவல்களையும், கதைகளையும் கொடுத்து, ஒரு மாபெரும் தமிழ்ச்சேவை செய்திருக்கிறார் ஆசிரியர் . பிற்கால படைப்புகளை பற்றி அத்தனை கதைகளை கூறியிருக்கிறார். இதில் சில நூல்களுக்கு உரையே கிடையாதாம். தானே முனைந்து அவற்றுக்கு உரையும் எழுதியிருக்கிறார் கவிஞர். எத்தனை மணி நேர உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்றெண்ணும் போது நன்றியால் நிறைகிறது நம் மனம்.
இவையெல்லாம் போதாதென்று பின்னிணைப்பாக ஔவையின் அத்தனை சங்கப்பாடல்களையும், தனிப்பாடல்களையும், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நூல்களின் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்.
ஒரு செய்யுளுக்குள் மறைந்து இருக்கும், அதை கவிதையாக்கும் ஒற்றை வரியை ஒரு சாதாரண வாசகனுக்கு இசையைப் போன்ற ஒரு கவிஞர் தான் எடுத்துச்சொல்ல முடியும். சிறு கேலியும், குட்டித் துள்ளலும், ரசனையுமாக நவீன வாசகனை எளிதாய் அடையும் மொழியில் கவிஞர் இசையின் உரைகள் அளிக்கும் திறப்பை இன்னொரு உரையாசிரியரால் தமிழ் இலக்கியம் படிக்காத நவீன வாசகனுக்கு கொடுப்பது கடினம் . இந்த எளிமையை மொழியில் கொண்டு வர ஆசிரியர் நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. நிறைய பழந்தமிழ் இலக்கியங்களை இதைப்போன்ற ரசனை சார்ந்த ஆய்வுநூல்களாக கவிஞர் அவர்கள் எழுதவேண்டும். அந்நூல்களை தமிழாசிரியர்கள் வாசித்து , மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதைப்போன்ற நவீன உரைநூல்களை உயர்நிலை மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பாடமாகவே வைக்கலாம்.நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடிய சிறந்த நூல் களிநெல்லிகனி.
000

பா.ரேவதி
சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும் இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

மிகவும் அருமையான பயனுள்ள மதிப்பீடு என்று நான் நினைக்கிறேன். மிக்க நன்றி!!!