இருண்ட மாகாணத்திற்கு வெளிச்சம் பாய்ச்சியவர்

(நாமக்கல் தமிழ்ச்சங்கமும் கூடு ஆய்வுச் சந்திப்பும் இணைந்து நடத்திய ‘பாட்டும் பாராட்டும்’ என்ற நிகழ்வில் ஆ.இரா. வேங்கடாசலபதி குறித்துப் பேசிய உரையின் எழுத்து வடிவம்)

‘ஊரார் நெல்லை உலர்த்தினால் எலி தன் வாலை உலர்த்துமாம் என்பதுபோல் என் பங்கும் பாரதியியலுக்கு உண்டு’, ‘ஆலையில்லாத ஊரின் இலுப்பைப் பூ’,  ‘பூக்களோடு சேர்ந்த நார்’ என்றெல்லாம் தன் உயரத்தைக் குறைத்துக் கூறினும் ஏழு மலைகளுக்கு அப்பால் உயர வீற்றிருக்கும் வேங்கடாசலத்தைப் போல், தன் ஆய்வுப் பணியால் தமிழ்நாட்டின் வரலாற்றைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கும், 2024ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருதாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம். இவ்விழாவில் பேசுவதற்கு வாய்ப்பமைத்துக்கொடுத்த எழுத்தாளர் பெருமான் முருகன் அவர்களையும், எனக்கு முன்பு பேசிய  எழுத்தாளர் அரவிந்தன் மற்றும் ஆய்வறிஞர் பழ. அதியமான் அவர்களையும் வணங்கி இவ்வுரையைத் தொடங்குகிறேன்.

இம்மாத (ஆகஸ்ட், 2025) தொடக்கத்தில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட சலபதிக்கான பாராட்டு விழாவில் பேசிய அண்ணன் அருண் பிரசாத் அவர்கள், சலபதி குறித்த தன் உரையை, “ மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்/ சொல்வதிலோர் மகிமை இல்லை/ திறமான புலமையெனில் வெளி நாட்டோர்/ அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் பாடல் கொண்டு முடித்திருப்பார். அவர் விட்ட புள்ளியில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும்.

1994-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் ஆ.இரா. வேங்கடாசலபதி முனைவர் பட்டம் பெற்று தமிழ்நாட்டிற்குத் திரும்புகையில், அவர் நெறியாளர் கே. என். பணிக்கருக்கு அதில் உடன்பாடில்லை. 1954இல் ஏ.எல். பாஷம் எழுதிய ‘The Wonder that was India’ நூலில் அதன் உள்ளடக்கக் குறிப்புகளைக் (Index) காட்டிலும் குறைவான பக்கங்களில் இடம்பெற்ற ஒரு பிரதேசத்திற்கு, ஒரு நல்ல வரலாற்றாய்வாளரை நாடு கடத்த யாருக்குத்தான் மனம் வரும்.

ஆனால் சலபதி அதை விரும்பி ஏற்றார். அதிகக் கவனம் பெறாத இம்மாநிலத்தின் இருநூற்றாண்டு வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்தையும் படியெடுத்ததோடு மட்டுமன்றி, அதன் நீல அகலங்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பணியில் ஆழ்ந்தார்.

இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த காலத்தில், 2.5 ஆண்டுகளுள் 1,00,000 மைல்கள் பயணித்து, நூற்றக்கணக்கான புகைப்படக் கலைஞர்களால் ஒளிகூட்டியெடுக்கப்பட்ட 50,000 அடி நீளமுள்ள படச்சுருள்களை நான்கு கண்டங்கள் தேடியலைந்து சேகரித்து, 12000 அடி நீளத்திற்குக் கத்திரித்துப் பெரும் உழைப்பு கோரும் மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை உருவாக்கிய ஏ.கே. செட்டியார், அவ்வாவணப்படத்தை எங்ஙனம் உருவாக்கினார் எனும் நூல்தான் ‘In the Tracks of the Mahatma: The Making of a Documentary’.   

சுதந்திரப் போராட்ட காலத்தில் தூங்குமூஞ்சு மாகாணம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒருவர், இத்தகு ஹெர்குலியன் சவாலை எங்ஙனம் செய்து முடித்தார் என்பதை விவரிக்கும் மேற்கண்ட நூலை விரிவான அறிமுகத்துடன் தமிழில் பதிப்பிப்பதற்கு எப்பேற்பட்ட வாசிப்புத் தேடல் வேண்டும்! இந்நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் எஸ். தில்லைநாயகம் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரிவான குறிப்புகளுடன் சலபதி பதிப்பித்தது நவீன இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து எழுதத் தொடங்கும் முக்கியப் புள்ளிக்கு அடிகோலிடும் பணி எனத் துணிந்து சொல்லலாம்.

பாரதிதாசன் எழுதிய அமைதி எனும் ஊமை நாடகத்தை, தன் 20ஆவது வயதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த (Tranquillity: A Mute Play, Apollo Veliyeedu, Madras) சலபதிக்கு, இலக்கியம் மீதுள்ள ஆர்வத்தைச் சொல்லில் வடிக்க முடியாது. சங்க இலக்கியப் பாடல்கள், ஆண்டாள் பாசுரங்கள் முதலானவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவர், நெரூடா கவிதைகளைப்  (துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், காலச்சுவடு பதிப்பகம்) போலன்றி ஏனோ அவற்றைப் புத்தமாக்காமல் விட்டுவிட்டார். ‘நெரூடாவுக்கு என்னிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. சேரனுக்கு எப்போதோ?’ என்று அவர் எழுப்பிய கேள்விக்குள் இன்னும் பல கவிஞர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்நூலுக்குச் சலபதி எழுதிய முன்னுரை, மொழிபெயர்ப்பாளர்கள், குறிப்பாக கவிதையை மொழிபெயர்ப்பவர்கள் அவசியம் வாசிக்கவேண்டியது. 

Since என்ற சொல் ‘பின்னாக’ என்றும் ‘என்பதனால்’ என்றும் இருவகையில் பொருள்படும். ‘You are like nobody since I love you’ எனும் அற்புதமான வரியை ‘என் காதலி என்பதனால் யாரும் உனக்கு ஈடாக மாட்டார்கள்’ என்று மொழிபெயர்க்காமல் ‘நான் உன்னைக் காதலித்ததிலிருந்து நீ யாரைப் போலவும் இல்லை’ என்று மொழிபெயர்த்து சிலர் செய்த வாதைகளைக் குறிப்பிடுகிறார். தமிழ் மொழியில் ‘தோன்றா எழுவாய்’ எனும் உத்திமுறையை, குறைந்த சொற்களைக் கொண்டு எழுதும் கவிதை வடிவத்திற்கு – குறிப்பாக மொழிபெயர்ப்பில் – எங்ஙனம் இலாவகமாக பயன்படுத்தலாம் என விளக்குகிறார். சான்றாக,  ‘I came. I saw. I conquered’ என்ற கவிதை வரியை, ‘நான் வந்தேன், நான் கண்டேன். நான் வென்றேன்’ என ‘நானை’ தூக்கிச் சுமக்காமல் வந்தேன், கண்டேன், வென்றேன் என கைக்கொள்ளலாம் என்பது போன்ற பல அறிவுறுத்தல்கள் இக்கட்டுரையில் உண்டு. நிற்க.

சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பை சலபதி அச்சேற்றாவிட்டாலும், அப்பாடல்களுக்கு ம.இலெ. தங்கப்பாவின் மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்து கைக்கூடியது.  தங்கப்பாவைப் பற்றிப் பேசுகையில், “அவருடைய தமிழ் உரைநடையிலும் ஆங்கிலக் கவிதை நடையிலும் எனக்குத் தீராக்காதல். பழந்தமிழ் பாடல்களை அநாயாசமாகவும் அழகாகவும் அவர் மொழிபெயர்ப்பார். ஆனால், அவருக்கு உலகியல் தெரியாது. எனவே அவருடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக என்னை நானே அமர்த்திக் கொண்டேன். தங்கப்பாவின் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சிட்டும், மூலத்தோடு ஒப்பிட்டும் அவருடனே கலந்துபேசி மெருகேற்றியும் இருபதாண்டுகள் வெவ்வேறு பதிப்பகங்களுக்குக் கையெழுத்துப் படியை அனுப்பி வந்தேன். போன வேகத்தில் அது திரும்பிவிடும். அக்காலச் சூழல் அப்படி” என ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். ஒருவழியாக அந்நூல் 2010-இல் சலபதியின் 36 பக்க அறிமுகக் குறிப்புடன் பென்குவின் வழியாக வெளிவந்ததது. இந்நூலுக்குச் சலபதி எழுதிய முன்னுரையை இலக்கியப் பேராசிரியர்கள் மனனம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என்று ஒரு மூத்த மொழிபெயர்ப்பாளர் நேர்ப்பேச்சில் சொன்னார். உண்மைதான் சங்க இலக்கியம் குறித்து தமிழிலும் அத்தகு கட்டுரை அரிது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர்க்கு, 17 ஆண்டுகள் கழித்து ஆங்கிலப் பிரிவில் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்த அற்புதமும் இந்நூலின் மூலம் சலபதியால் நிறைவேறியது.1

தமிழ்ப்புலத்திலிருந்து சர்வதேச அரங்கிற்குச் செல்ல திறமுள்ள எழுத்துக்களை இனங்கண்டு அவற்றைச் சலிக்காமல் செப்பனிட்டு மேடையேற்றுவதோடு, சிகாகோ மற்றும் அமெரிக்கா வீதிகளிலிருந்து மதுரை மாநகரின் குறுகல் சந்துக்குள் வந்து ஆய்வு உதவி கோருபவர்களுக்கும் சலபதிபெருமான் இல்லையென்று சொல்வதில்லை. ஒருபுறம் நாவுக்கரசர் தேவாரத்தின் தாக்கத்தால் ‘அவனுக்கே பிச்சனானேன்’ என்பார். மறுபுறம் ‘ஸ்டீபன் ஜே கோல்ட்’ கட்டுரை முழுவதையும் எழுத்துப் பாடமாக ஒப்புவிப்பார். ஒருபுறம் வியாச பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ம.வீ. ராமானுஜாச்சாரியார் பற்றி மணிக்கணக்காகப் பேசுவார். மறுபுறம் இ.பி. தாம்சனின் மார்க்சிய எழுத்து நுட்பங்களைப் பட்டியலிடுவார். இன்ன துறைதான் என்று அளவிடற்கரியவர் சலபதி.

தொ.பரமசிவன் எழுதிய நூல்களுள் அறியப்படாத தமிழகம் மிக்குப் புகழ்பெற்றது.  இந்நூலின் முதல் பதிப்புக்குக் காரணமாக இருந்தவர் சலபதி. தொ.ப.வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஒரு பகுதியாக அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும் ‘இசுலாமிய பாணர்’  முதலான கட்டுரைகளை அவர் சொல்லச் சொல்ல எழுதியும் மெய்ப்புப் பார்த்து அச்சிட உதவினார். இன்று அந்நூல் 20,000 பிரதிகளுக்கும் மேல் விற்று பெரும் தொ.ப.விற்கு அடையாளம் சேர்த்திருக்கிறது. 

அத்தகு ஆய்வாளரை தான் முதன்முதலாகத் அறிய நேர்ந்தது அவரின் மாணவரால்தான் என்று ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் சலபதி.  அவர் பெயர் பார்ணி பேட். அமெரிக்காவைச் சேர்ந்த மொழியியல் மானுடவியல் அறிஞரான இவர் தமிழ் மொழியில் ஆர்வங்கொண்டு, Tamil Oratory and Dravidian Aesthetic: Democratic Practice in South India மற்றும் Protestant Textuality and the Tamil Modern: Political Oratory and the Social Imaginary in South Asia என்கிற இருநூல்களைப் படைத்துள்ளார். முதல் நூலின் முன்னுரையில் சலபதி செய்த உதவிகளைப் பார்ணி பேட் குறிப்பிடுகிறார். ஆனால் இரண்டாம் நூலுக்கு முன்னுரை எழுதும் அளவு காலம் அவருக்குக் கருணை காட்டவில்லை. 2016-இல் மறைந்த பார்ணி பேட்டின் கட்டுரைகளைச் செப்பம் செய்து முன்னுரை வழங்கி, நூலாக்கம் செய்துள்ளார் சலபதி. பார்ணி பேட் இந்நூலை சலபதிக்கே சமர்ப்பணம் செய்ய விரும்பியுள்ளார். அவர் மறைவுக்குப் பிறகும் அவ்வாசை நிறைவேறியுள்ளது காலம் செய்த உதவி. தமிழ் நிலத்தின் பேச்சுக்கலை மரபு குறித்து ஆராய்ந்து, ஆங்கில உலகிற்கு அறிமுகப்படுத்தும் மிக நுண்ணிய ஆய்வுகள் இவை. இவை போன்ற ஏராளமான அறிஞர்களுக்கும் ஆய்வுகளுக்கும் சலபதி உதவியுள்ளார்.

செவில்ராட், பவானி ராமன், ஸ்டூவர்ட் ப்ளேக்பர்ன், சாஷா எபெலிங், டேவிட் ஷுல்மன், தாமஸ் ட்ரவுட்மன் என நீண்டுகொண்டே போகும் பட்டியலின் ஒருதுளி சான்றே சலபதி பெருமையைப் பறைசாற்ற போதுமான ஆதாரமாக விளங்கும். தமிழ் நிலத்தின் எல்லையைத் தொட்டு எவர் ஆய்வு செய்ய வேண்டுமென்றாலும் சலபதியின் கட்டுரைகளை Cite செய்யாமல்; சலபதி எனும் டோல் கேட்டிற்குக் கப்பம் கட்டாமல் உள்ளே வர முடியாது என்ற அளவிற்குத் தமிழகம் குறித்து எழுதிக் குவித்திருக்கிறார்.

தீவிர வரலாற்றுச் சிந்தனைக் கொண்டவராக இருப்பினும், இமையம் படைப்புகள் குறித்து விமர்சனம் எழுதுவார். அசோகமித்திரன் (Ashokamitran: The Aesthetic of the Ordinary’, Afterword to Ashokamitran, Mole!, Orient Longman), சோ. தர்மன் (‘When Koilpatti Sneezed…’. Introduction to Cho. Dharman, Koogai: The Owl, New Delhi: Oxford University Press) படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து அனுப்பும்போது அவற்றுக்கு விரிவான முன்னுரை வழங்குவார். உள்ளூர் இலக்கியப் போக்கு குறித்து ஆங்கில நாளிதழ்களில் கட்டுரை எழுதுவார். 

2016-இல் மாதொருபாகன் நூலுக்குச் சிக்கல் வந்தபோது அச்சூழல் குறித்து, கே. சச்சிதானந்தன் தொகுத்த Words Matter: Writings Against Silence, Penguin Viking, Gurgaon. ‘Who Killed Perumal Murugan’ என்ற கட்டுரையை எழுதினார். தனது Tamil Characters புத்தகத்திலும் மாதொருபாகன் நூல் குறித்து எழுந்த சர்ச்சைகளை ஆங்கில உலகிற்கு விரிவாக எழுதி அறிமுகம் செய்தார். தொல்லை தரும் மன உளச்சலில் இருந்து மீண்டு வந்த பெருமாள் முருகன் அதே ஆண்டு ‘கோழையின் பாடல்கள்’ என்றொரு கவிதைத் தொகுப்புக் கொண்டுவந்தார். அதற்கான வெளியீட்டுக் கூட்டம் தில்லியில் நடந்தபோது, பெருமாள் முருகனின் அறிக்கையை ‘Growing out of the Cocoon’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் சலபதி. அதன் பிரதி ‘தி வயர்’ முதலான பல முன்னணி இணைய இதழ்களில் வெளியானது.

 கல்கியின் பொன்னியின் புதல்வர் நூல் குறித்து ஒருமணிநேரம் ஆங்கிலத்தில் உரையாடியிருக்கிறார். வைக்கம் போராட்டம் குறித்துப் பழ. அதியமான் எழுதிய இரண்டு கட்டுரைகளை ஆங்கில இந்துவில் ‘Periyar, the Hero of Vaikom’ என்றும், ‘A Struggle Against Social Orthodoxy’ என்றும் மொழிபெயர்த்து வெளியிட்டார். இராமச்சந்திர குஹா எழுதிய Makers of Modern India நூலில் பெரியாரின் வட்டாரப் பேச்சுக்களை ஆங்கிலத்தில் மிகச் சாமர்த்தியமாக மொழிபெயர்த்திருப்பார். இலக்கியங்களோடு இத்தனை அணுக்கமாக கைக்குலுக்கிக் கொண்டு செயல்படும் சமகால வரலாற்றறிஞரைக் காண்பது கடினம். ஆனால் இப்பேற்பட்ட அறிஞர்க்கு சாகித்திய அகாதெமி கொடுத்தபோதுதான், இலக்கிய உலகம் கொந்தளித்தது.2

இந்தியச் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் ஏனைய இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பாகுவது இயல்பான விஷயம். ஆனால் ஆய்வுக் கட்டுரைகளுக்கு இம்மதிப்புக் கிடைப்பது எளிய காரியமல்ல. அந்தக் காலத்தில் காப்பி இல்லை எனும் கட்டுரை, மலையாளத்தில் ‘Andha Kalathil Kapi Illai: Tamilagathe Kapiyude Samskariga Charithiram’, என்ற பெயரில் பச்சக்குதிரை இதழில்(ஆகஸ்ட், 2005) வெளியானது. 

பாரதியின் காப்புரிமை தொடர்பான நூல் (Who Owns That Song?: The Battle for Subramania Bharati’s Copyright), தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை (The Brief History of a Very Big Book: The Making of the Tamil Encyclopaedia) முதலான நூல்கள் தமிழில் வெளியாகி முறையே 3 மற்றும் 4 ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளியானதற்கும், வ.உ.சி. குறித்த Swadeshi Steam புத்தகம் நேரடியாக ஆங்கிலத்தில் வெளியானதற்கும் இடையே சலபதியின் வாழ்வியல் கொள்கைகளே அடங்கியுள்ளன. 

நான் முன்பு ஏ.எல். பாஷம் உதாரணத்தில் குறிப்பிட்டதுபோல், தமிழ் நிலப்பரப்பு குறித்து ஆங்கிலத்தில் அதிகம் எழுதப்படாததற்குக் காரணம், தமிழக ஆட்கள் இவற்றை ஆங்கிலம் புரிந்தவர்களுக்குக் கடத்தாததே காரணம் என்று தனிப்பட்ட உரையாடலிலும், பலவிடங்களிலும் சலபதி குறிப்பிட்டிருக்கிறார். இன்று Swadeshi Steam புத்தகம் வங்காளிகளும் மெச்சிக் கொண்டாடும் உலகளாவிய புகழைச் சம்பாதித்து பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

சுதந்திரப் போரட்டத்தில் தமிழ்நாடு தூங்குமூஞ்சு மாகாணம் இல்லை என்பதை நிறுவுவதற்காக, தன் வாழ்நாள் முழுவதும் தூக்கம் பாராமல் ஆய்வு செய்து தமிழகத்தின் வரலாற்றை  அலசி ஆராய்ந்து எழுதி வரும் சலபதிக்கு ஆயிரம் வணக்கங்கள் சொன்னாலும் தீராது. தமிழ்ச் சமூகம் என்றென்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

தம்மைக் குறித்துப் பேசுவதற்கு யாரை அழைக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது, என் பெயரைச் சுட்டிக்காட்டிய சலபதியாருக்கு, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற சிவபுராண அடிகளைச் சுட்டி வணங்கி மகிழ்கிறேன். சலபதி குறித்துப் பேசப் புகும் எல்லா ஆய்வாளர்களுக்கும் தோன்றுவதுதான், விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும். ஏக்கத்தை மூட்டைக்கட்டிக்கொண்டு, வாய்ப்புக் கொடுத்தவர்களுக்கு நன்றி பாராட்டி இடம்சார்ந்து அமர்கிறேன், நன்றி வணக்கம்.

அடிக்குறிப்புகள்:

  1. நூல் வெளியீட்டில் சலபதியின் நெடும் முயற்சியைத் தெரிந்துகொள்ள, வாசிக்க: Love Stands Alone, Penguin, 2010 – முன்னுரை
    ↩︎
  2. சலபதி குறித்தும் நூல் குறித்தும் முன்வைத்த விமரிசனங்களுக்குப் பதிலளிப்பதாக ‘ஆ.இரா.வேங்கடாசலபதி: ஆய்வு நூலுக்கான அகாதெமி விருதும் அதற்குப் பிறகும்’ என்ற பெயரில் நான் எழுதிய கட்டுரை பெயல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
    ↩︎

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop