
ஒரு பணி நாளில்
பாலத்தின் கீழிறங்கும்போது
மேலேறுவதை நினைத்துக்கொள்வதும்
மேலேறும்போது வானத்தை
பார்த்துக்கொள்வதும்
மாறிலிகள்
*
பாலத்தின் கீழ் இருக்கும் நிழல்
மரத்தின் நிழலல்ல
ஒரு பொழுதிற்கான அல்லது
ஒரு பருவத்திற்கான நிழலல்ல
வீடற்றவர்கள்
ஓய்வற்றவர்கள்
அந்தரங்கமற்றவர்கள்
போக திட்டமற்றவர்கள்
நீங்கள்
நான்
நாம் எல்லோருக்கும் இப்போது
ஒரே பாலத்தின் கீழ் நிற்கிறோம்
*
பாலத்தின்கீழ் சென்று திரும்புவதென்பது
ஒரு வெயிலிலிருந்து வெளியேறி
மற்றொரு வெயிலுக்குள் நுழைவது
இரவில் பாலத்தின் வழி
ரொம்பச் சுருக்கம்
கூடுதலாக பூச்சுடியவர் நிற்குமிடத்திலிருந்து
கூடுதலாய் பேரம் பேசாத பாலியல் தொழிலாளியை நோக்கி திரும்புவது
*
ஒரு மழை நாளின் இரவில்
பாலத்தில் வாகனங்கள்
சுத்தமான சாலையில்
அணிவகுத்து நின்றன
அப்படியே
ஆற்றில் அணிவகுத்து அசையும்
அகல் விளக்குகள்போலவே
*
பாலத்தின் மீது
ரயிலோடக் கண்டேன்
ரயில் துயில் கலைக்குதடி அக்கச்சி
*
இப்போது துருபிடித்த கம்பிகளைக் கொண்டு பாலத்தின் இடுக்குகளில்
பறவைகள் கூடு கட்டத் தொடங்கிவிட்டன
*
பாலத்தின் கீழோடும் கழிவுநீரில்
அந்த ஆம்பல் உன்னைப் பார்த்து
ஏன் சிரிக்கிறதென உனக்கு தெரியுமா?

சோ.விஜயகுமார்
சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















இப்போது துருபிடித்த கம்பிகளைக் கொண்டு பாலத்தின் இடுக்குகளில்
பறவைகள் கூடு கட்டத் தொடங்கிவிட்டன – கவியம்சம் உள்ளது போன்று காட்டிக்கொள்கிற போலிமினுமினுப்பு அல்லது மேலோட்டமான கவித்தோற்றம்.
அப்புறம், பாலத்திற்கு அடியே என்றவுடன் பாலியல் தொழிலாளி வந்துவிடும் அரதப்பழசான முரட்டு முட்டு கொடுத்தல்.
பாலம் பாலமாகவும், சம்பவங்கள் சம்பவங்களாகவும் இருக்கின்றன; கவியனுபவத் தோற்றம் இருக்கிறது. மற்றபடி, கவிதை இல்லை என்றே கருதுகிறேன்.
விஜயகுமார், கவனம் தேவை.
அகழ் இதழில் வந்துகொண்டிருப்பது எல்லாமே கவிதைகளா? பிறர் கவிதைகள் வெளிவரும்போதெல்லாம் நீங்கள் எங்கு சார் போயிருந்திங்க?
தங்களது கருத்திற்கு நன்றி. அடுத்தமுறை கவிதை எழுத இன்னும் தீவிரமாய் முயல்கிறேன்