விஷக்கடி : பெருமாள்முருகன்

‘சார், ஒடனே வாங்க… ஒரு பிரச்சின’ என்று விடுதி உதவிக் காப்பாளர் சண்முகம் பதற்றத்தோடு கைப்பேசியில் அழைத்தார். எனினும் அவர் பதறவில்லை. அப்போதுதான் விழித்துக் கழிப்பறைக்குச் செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். இன்னும் ஐந்து நிமிடம் படுத்திருக்கலாம் என்று தோன்றியது. நடைநேரம் பிந்திவிடக் கூடும். ஒருநாள் தானே, ஐந்து நிமிடம் குறைவாக நடந்தால் என்னவாகிவிடும்? கைப்பேசி அழைப்பொலி கேட்டும் சிறிதும் அசையாமல் தூங்கும் மனைவியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லும் வரை வெகுசீக்கிரம் எழுந்து வேலைகள் செய்ய வேண்டிய தேவையிருந்தது. இப்போது நிதானமாக எழட்டும். ஆனால் தனக்கு அப்படித் தூக்கம் வரவில்லையே என்று ஏக்கமாக இருந்தது.

சண்முகத்தின் அழைப்புக்குப் பின் எழுவது நிர்ப்பந்தமாயிற்று. இப்படி ‘உடனே வாங்க’ என்னும் அழைப்பு அவ்வப்போது வருவதுதான். அவசரமாகப் போய்ப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் இருக்காது. ஏதேனும் அற்பப் பிரச்சினையில் மாணவர்களுக்குள் தகராறு வந்திருக்கும். எவனுக்காவது மூக்கு உடைந்து ரத்தம் வரும். தலை கலைந்து வந்து நிற்பார்கள். விடுமுறை நாட்களில் அப்படி நடக்கச் சாத்தியமுண்டு. மாலையிலோ இரவிலோ அடிதடி நடக்கும். அதிகாலையில் என்னவாக இருக்கும்? எதுவாக இருந்தாலும் சண்முகமே பேசித் தீர்த்துவிடலாம் என்றாலும் தைரியம் போதாது. மாணவர்களைப் பற்றி ஒருபயம் மனதிற்குள் உண்டு. தான் தற்காலிக வேலையில் இருப்பதையும் காரணமாகச் சொல்வார்.

‘சார்… நாலு பேரு சேந்து எம்மேல கை வெச்சிட்டான்னா… என்ன சார் செய்யிறது? என்னால திருப்பி அடிக்கவும் முடியாது… அடிய வாங்கிக்கிட்டு அப்பறம் இங்க வேல செய்யவும் முடியாது… எங்குடும்பம் நடக்கோணுமில்ல?’

என்று சண்முகம் விளக்கம் சொல்லும் போது பாவமாகத்தான் இருக்கும். நாற்பது வயதாகியும் அவருக்கு நிரந்தர வேலை அமையவில்லை. இன்னும் போட்டித் தேர்வுக்குப் படிப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். எதுவாக இருப்பினும் நிதானமாகப் பேசினால் இந்தப் பையன்களிடம் பயப்பட வேண்டியதில்லை. எடுத்துச் சொன்னாலும் சண்முகத்தை மாற்ற முடியவில்லை. மேற்பார்க்க இப்படி ஓராள் கிடைப்பதும் கஷ்டம். இந்த அவசர அழைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில் வராது. வந்தால் அத்தியாவசியப் பிரச்சினையாகவே இருக்கும். கழிப்பறைக்குள் போனவன் கால் கழுவத் தண்ணீர் வரவில்லை என்று காலை அகட்டியபடியே நின்று கொண்டிருப்பான். மின்சாரம் போய்த் தூக்கம் கெட்ட ஒருகூட்டம் வாயிலில் நின்றிருக்கும். குறித்த நேரத்திற்குச் சமையல்காரர் வராததால் சீக்கிரம் எழுந்து தேநீர் பருகும் பழக்கமுள்ள ஐந்தாறு பேர் பிரச்சினை செய்திருப்பார்கள். போனவுடன் எதையும் சரிசெய்து விட முடியாது என்றாலும் சமாதானம் சொல்ல வேண்டியிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று நிதானமாகத் தயாரானார். கதவைப் பூட்டிவிட்டு வண்டியை எடுக்கலாமா நடந்தே போய்விடலாமா எனக் குழப்பத்தோடு வாசலில் நின்று யோசித்தபோது மீண்டும் அழைப்பு. ‘சார்… எங்க சார் இருக்கறீங்க? ஒடனே வாங்க சார்…’ என்று கெஞ்சுவது போலச் சண்முகத்தின் குரல் வந்தது. சரி, வண்டிதான் என்று தீர்மானித்து அதனருகில் போனபடி ‘வந்துக்கிட்டே இருக்கறன் சண்முகம்’ என்று சொன்னார்.

அரசு கலைக்கல்லூரியில் வேதியியல் துறைப் பேராசிரியரான முனைவர் C.பரமசிவம், எம்.எஸ்ஸி.,எம்.ஃபில்.,பிஎச்.டி. அவர்கள் கல்லூரியின் கட்டண விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றினார். அதன் முந்தைய விடுதிக் காப்பாளராக இருந்த பேராசிரியர் ஐந்தாண்டுக்கு முன் ஓய்வு பெற்றார். இந்தப் பையன்களோடு மாரடிக்க முடியாது என்று அஞ்சி அடுத்துப் பொறுப்பெடுத்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை. நகரத்தில் குடியிருந்தவர்கள் அடிக்கடி வந்து பார்க்க முடியாது என்று காரணம் சொன்னார்கள். இரண்டு மூன்று முறை சுற்றறிக்கை விட்டும் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. முதல்வராகப் பார்த்து ஒருவரைப் போட வேண்டிய நிலை. கல்லூரிக்கு அருகிலேயே குடியிருந்த காரணத்தால் பரமசிவம் மாட்டிக் கொண்டார். அவரும் மறுத்துப் பார்த்தார். கிடுக்கிப் பிடி போடும் காரணம் ஒன்றால் மாட்டிக் கொண்டார். கல்லூரியிலேயே அவர்தான் மூத்தவர்.  வயதிலோ பணி அனுபவத்திலோ அல்ல. இந்த அரசுப் பணியில் மூத்தவர், இளையவர் என்று பிரிக்க எத்தனையோ அளவுகோல்கள். அவரை விட வயதில் மூத்தவர்கள் பலர் இருந்தனர். இளையவர்களும் அனேகம். ‘ஸ்டேசன் சீனியர்/ஜூனியர்’ என்று ஒரு அளவுகோல் அடிப்படையில் அலுவலகத்தில் இருந்து பட்டியல் கொடுத்தனர். அதில் முதல் பெயராகப் பரமசிவம் இடம்பெற்றார்.

நகரத்தை விட்டுக் கிட்டத்தட்டப் பத்துக் கிலோ மீட்டர் தள்ளிக் கிராமப்புறத்தில் இருந்த அந்தக் கல்லூரிக்குப் பணியேற்று வருபவர்கள் முடிந்தவரைக்கும் சீக்கிரமாக இடமாறுதல் பெற்றுச் சென்றுவிடுவர். அங்கேயே தொடர்ந்து பணியாற்றுபவர்கள் குறைவு. பரமசிவத்தின் சொந்த ஊர் மூன்று மணி நேரப் பயணத் தொலைவில் இருந்தது. ஒருமணி நேரப் பயணத் தூரத்தில் வேறொரு கல்லூரியும் உண்டு. அது மாநகரம். அங்கே சென்றுவிடலாம் என்று முதலில் இடமாறுதலுக்கு முயன்றார். ஏனோ அவருக்கு உடனே கிடைக்கவில்லை. கேட்ட தொகை கொஞ்சம் அதிகம் போலத் தோன்றியதால் யோசித்துக் கொண்டிருந்துவிட்டார். அதற்குள் வேறு யாரோ அந்த இடத்தைப் பெற்றுவிட்டார்கள். சரி, இன்னொரு முறை காலியிடம் வரட்டும், பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் வாய்ப்பு வரும் முன் பிள்ளைகளுக்குப் பிடித்தமான பள்ளி அமைந்துவிட்டது. இந்த ஊரும் கல்லூரியும் அவருக்குப் பொருந்திவிட்டன. அப்படியே இருந்துவிட்டார்.

கல்லூரிக்கு அருகில் புதிதாக மனை போட்ட போது குறைந்த விலைக்கு வந்தது. அதில் சேர்ந்த மாதிரி இருமனைகள் வாங்கினார். வங்கிக் கடன் பெற்று ஒன்றில் வீடு கட்டினார். இன்னொன்றுக்கும் சேர்த்துச் சுற்றுச்சுவர் கட்டி அதில் தோட்டமிட்டுப் பராமரிக்கிறார். சொந்த வீடு அவரைப் பிடித்துக் கொண்டது. எந்தப் பற்று ஒழிந்தாலும் வீட்டுப் பற்று ஒழியாது. இனி எங்கே பெயர முடியும்? அதனால் ‘பணியிட மூத்தோர்’ ஆகிவிட்டார். யாரையேனும் இடமாறுதல் செய்ய வேண்டும் என்றால் பணியிட மூப்புப் பட்டியலைத் தான் முதலில் எடுப்பார்கள். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுபவரை மாறுதல் செய்வார்கள். அந்த அம்பைக் கையில் வைத்துக்கொண்டு விடுதிக் காப்பாளராகப் பொறுப்பேற்க மறுத்தால் இயக்குநருக்குத் தகவல் தெரிவித்துப் பணியிட மாற்றம் செய்துவிடுவதாக அப்போதைய முதல்வர் கிட்டத்தட்ட மிரட்டினார். வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார். காப்பாளரான பிறகு அது ஒருவகையில் அவருக்குப் பிடித்துப் போயிற்று.

அந்த அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவை நடத்தும் சமூகநீதி விடுதிகள் உண்டு. அவையல்லாமல் கட்டணம் செலுத்தித் தங்கும் விடுதி ஒன்றும் உண்டு. அது மிகப் பழையது. அனேகமாகக் கல்லூரி தொடங்கிய காலத்தில் கட்டிய விடுதியாக இருக்கக் கூடும். அதனாலேயே இன்னும் வலுவாக இருந்தது. யாராவது பார்வையிட வரும்போது ‘அந்தக் காலத்துப் பில்டிங்கோட தரமே தனி. இன்னைக்கும் கட்டறாங்களே, ஆறு மாசத்துல விரிசல் வந்திருது’ என்று சொல்லாமல் செல்வதில்லை. சரியாகப் பராமரித்தால் இன்னும் இருபத்தைந்து வருடமேனும் தாங்கும். பரமசிவம் பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித் துறையிடம் போராடிப் பராமரிப்பு வேலைகளை விடாமல் செய்து கொண்டிருக்கிறார்.

தரைத்தளம், முதல் தளம் கொண்ட விடுதியில் மொத்தம் இருபத்தைந்து அறைகள் இருந்தன. ஓர் அறைக்கு இருவர். மாணவர் கூடுதலாக வந்தால் அறைக்கு மூவர், நால்வர் எனப் போடுவதும் நடக்கும். சொந்தக்காரன், சொந்த ஊர்க்காரன் என்று யாரையாவது அழைத்து வந்து ‘எங்க ரூம்ல போடுங்க சார். நாங்க அட்ஜஸ்ட பண்ணிக்கறோம்’ என்று மாணவர்களே கேட்பார்கள். சமூக நீதி விடுதிகளில் இடம் கிடைக்காமல் அல்லாடிவிட்டு ஏதாவது பகுதிநேர வேலை செய்து கட்டணம் செலுத்திவிடலாம் என்று இதில் வந்து சேர்வார்கள். குறைந்த கட்டணம்தான். அதற்கேற்பவே வசதிகளும் இருக்கும். அப்படி இருபத்தைந்து அறைகளிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட எண்பது பேர் இருந்தனர். பகிர்வு முறையில் உணவுக் கட்டணம். அதற்கென்று மாணவர்களைக் கொண்ட உணவுக்குழு ஒன்றும் இருந்தது. அதனால் பெரிய பிரச்சினை ஏதுமில்லை.

பரமசிவத்திற்கு அதிக வேலை இல்லை. மாலையில் ஒருமணி நேரம் போய் அங்கே இருப்பார். கணக்கை எல்லாம் சண்முகம் பார்த்துவிடுவார். சரிபார்த்துக் கையொப்பம் இட வேண்டும். அன்றாட வழக்குகள் சில வரும். அவற்றைப் பேசித் தீர்ப்பார். புகார்களைக் கேட்பார். மாணவர்களோடு இணக்கமாகப் பேசினால் போதும், எந்தப் பிரச்சினையையும் எளிதாகத் தீர்த்துவிடலாம் என்பது அவர் அனுபவ அறிவு. இணக்கம் காட்டும் அதேசமயம் தம் அதிகாரம் சார்ந்த கவனத்தில் குறிப்பிட்ட இடைவெளியைப் பேணவும் தவற மாட்டார். பூனை சாதுவாக இருந்தால் மேலேறிக் குதித்துக் கொண்டு ‘வா வா… கிச்சுக்கிச்சுத் தாம்பாலம் வெளையாடலாம்’ என்று எலி அழைக்குமாம் என்றொரு கதையுண்டு. அதைத் தம் மனதிற்கே அடிக்கடி சொல்லிக் கொள்வார். என்னதான் சிரித்துப் பேசினாலும்  ‘மியாவ்’ என்று கத்தித் தாம் பூனை என்பதை எலிகளுக்கு அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

மற்றபடி அந்த வேலை அவருக்குக் கஷ்டமாக இல்லை. வீட்டில் பிள்ளைகள் படிப்பின் நிமித்தம் வெளியூரில் இருந்தனர். அவரும் மனைவியும் மட்டும்தான். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் கழிப்பது? விடுதிக்கு முன்னால் பரந்த வாசல் உண்டு. அரசு கட்டிடங்களில் வாஸ்து பார்ப்பதில்லை போல. மேற்கில் வாசல் வைத்துக் கட்டியிருந்தனர். வாசலை ஒட்டிய தோட்டத்தின் ஓரங்களில் சில வேம்புகள் நிற்கும். உள்ளே செம்பருத்தி, அரளி எனப் பூச்செடிகளும் இருந்தன. அவர் பொறுப்பெடுக்கும் முன் தோட்டப் பராமரிப்பு சரியாக இல்லை. அதைச் செப்பனிட முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. இருக்கிற செடிகளுக்கு எடுத்துக்கட்டித் தண்ணீர் ஊற்றினாலே போதும். தோட்ட வேலையில் ஆர்வமுள்ள மாணவர்கள் சிலரைப் பிடித்தார். விடுமுறை நாள் ஒன்றில் அவர்கள் வேலை செய்தனர். இரண்டு மணி நேரத்தில் திருத்தமாக முடிந்தது. தண்ணீர் ஊற்றுவதுதான் பிரச்சினை. விடுதி வாசலில் யாராவது நின்றால் ‘சும்மாதான நிக்கற… ஒருசெடிக்கு ஒரே ஒரு கொடம் தண்ணி ஊத்தலாமுல்ல’ என்று சொல்வார். சிலர் ஊற்றுவார்கள். சிலர் அவசர வேலை இருப்பது போல உள்ளே ஓடிவிடுவார்கள். அவர் வருகிறார் என்றாலே தண்ணீர் ஊற்றச் சொல்வார் என்பதால் வெளியே நிற்க மாட்டார்கள். இதுவும் நல்லதுதான் என்று தோன்றும். ஆர்வமுள்ள சிலரால் எப்படியோ தோட்டம் செழிப்பாக இருந்தது.

அவர் உள்ளே நுழையும் போதே நாற்காலியும் மேஜையும் முற்றத்துக்கு வந்துவிடும். சண்முகமே எடுத்துப் போடுவார். சமையல் ஆட்கள் கண்டாலும் செய்வார்கள். அவருடைய துறைப் பையன்கள் இருந்தால் பவ்வியம் காட்டி எடுத்து வந்து போடுவார்கள். காப்பாளருக்கு என்று தனியறை உண்டு. செவ்வக வடிவிலான அதற்குள் ஒரே ஒரு கட்டில் போடலாம். காப்பாளர் வெளியூராக இருந்தால் அதில் தங்கலாம். அவருக்குத் தேவையில்லை. அவரறிய எந்தப் பேராசிரியரும் அதில் தங்கியதில்லை. கிடங்கு போலப் பூட்டியே கிடந்த அதை இந்த வருசம்தான் பரிந்துரையோடு வந்த ஒருமாணவருக்குக் கொடுத்தார். அதனால் முற்றமே அவர் இருப்பு என்றாயிற்று. அங்கே உட்கார்ந்து செடிகளைப் பார்ப்பார். எதிரில் தெரியும் கரடும் அதில் இறங்குகின்ற பொழுதும் பார்க்க நன்றாக இருக்கும். இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டதால்தான் இந்தக் காட்சியைப் பார்க்க வாய்த்திருக்கிறது என்று சந்தோசப்படுவார். வரும்போகும் மாணவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டும் ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டும் தோட்டத்தைச் சுற்றி நடப்பதும் பிடிக்கும். எல்லா இடத்திலும் சந்தோசம் கொட்டிக் கிடக்கிறது; நாம்தான் கை விரித்து அள்ளிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

சந்தோசம் அப்படியே நீடித்துவிட்டால் சுவை இருக்காது. அவ்வப்போது சந்தோசத்திற்குச் சின்னச் சின்ன இடையூறுகள் வேண்டும். இன்றைய இடையூறு என்னவாக இருக்கும் என்று எண்ணியபடி வண்டியை உள்ளே விட்டார். அலுவலகமும் உதவிக் காப்பாளர் அறையும் இணைந்திருந்த வாசலை ஒட்டிய பகுதியில் சிறுகூட்டம் நின்றிருந்தது. இந்நேரத்தில் இத்தனை பேர் எழுந்துவிட்டார்களா என்று ஆச்சரியப்பட்டார். கைப்பேசியை நோண்டிக்கொண்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கும் இவர்கள் கல்லூரி நேரத்திற்குத்தான் எழுவார்கள். குளித்தும் குளிக்காமலும் உண்டும் உண்ணாமலும் வகுப்புக்கு ஓடுவார்கள். ஒருவனும் தலை சீவுவதில்லை. விரல்களை விரித்து இரண்டு மூன்று முறை கோதிக் கொண்டால் தலை சீவியதாகிவிடும். இரண்டாவது மணிநேரம் போனால் போதும் என்று நிதானமாகக் கிளம்புவர்களும் உண்டு. வகுப்பு நேரத்தில் விடுதியில் யாரும் இருக்கக் கூடாது என்னும் கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்திய போதும் காலைநேரத் தாமதத்தைத் தவிர்க்க முடியவில்லை. அரசு கல்லூரியில் ஓரளவுதான் கெடுபிடி காட்ட முடியும் என்பது பரமசிவத்திற்குத் தெரியும்.

வண்டியை நிறுத்தும்போது நேராகப் பார்த்து எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று மனக்கணக்குப் போட்டார். பதினொன்று அல்லது பன்னிரண்டு இருக்கலாம். இருள் பிரிந்து நிழல் கட்டிய காலையில் இத்தனை பேர் நிற்பதே அதிகம். முற்றத்தில் இருந்து படியிறங்கி ஓடிவந்த சண்முகம் ‘சார்… பெரிய பிரச்சினையாகிப் போச்சு’ என்றார். ‘அப்படியா?’ என்பது போலத் தலையை ஆட்டிக்கொண்டே அவருடன் நடந்து முற்றத்திற்கு வந்தார். ஒருவரும் பேசவில்லை. தம் ஒருகையால் இன்னொரு கையைப் பிடித்தபடி இருவர் நிற்பதைக் கண்டார். முகத்தில் வலியின் வேதனை தெரிந்தது. கையில் அடிபட்டிருக்கலாம். காப்பாளர் அறையில் தனியாகத் தங்கியிருக்கும் குமரேசன் இடுப்பில் சாணிநிற வேட்டியும் மேலே போர்த்திய துண்டுமாய் நின்றிருந்தான். குளித்துவிட்டு நிற்கிறானா குளிக்கப் போகிறானா? சுவரோரத்தில் வாளி வைக்கப்பட்டிருந்தது. அதில் மாட்டிய கோப்பையும் அதற்குள் சோப்பு டப்பாவும் தெரிந்தன. அவனருகில் யாரும் இல்லை. தண்ணீர்ப் பிரச்சினையா? அப்படியானால் கையைப் பிடித்தபடி நிற்கிறார்களே? அவன் தனியாய் நிற்கிறான். அவனோடு ஏதும் பிரச்சினையோ?

‘காலங்காத்தால என்னப்பா பிரச்சின?’ என்று  தன் வேலைகளை விட்டு வந்திருக்கும் எரிச்சலைக் குரலில் உணர்த்திக் கேட்டார்.

சட்டென்று மௌனம் உடைந்தது.

‘பாருங்க சார்… கையப் புடிச்சுக் கடிச்சு வெச்சிருக்கறான்… இந்தப் பொட்டத் தாயலி.’

காயம் பட்ட ஒருவனை முன்னிழுத்து விட்டவன் ‘காட்றா’ என்றும் சொன்னான். இந்த வேகக்காரன் அனேகமாக வரலாற்றுத் துறை சார்ந்தவனாகத்தான் இருப்பான் என்று தோன்றியது. பெயரை மனதிற்குள் உருட்டிப் பார்த்தார். நினைவில் எழவில்லை. காயம் பட்டவர்கள் இருவரும் அவர் அருகில் வந்து கையை நீட்டினார்கள். ஒருவன் முன்கையில் வட்ட வடிவில் காயம் தெரிந்தது. கீழ்ப்பக்கம் பற்கள் அழுந்தப் பதிந்து ரத்தம் வெளியேறிய காயப் பொட்டுக்கள். மேற்பக்கம் லேசான பதிவுத் தடங்கள். இன்னொருவனுக்கும் கையில்தான் காயம். தோள்பட்டைக்கு அருகே சதையில் முழுவட்டத்திலும் பற்கள் பதிந்திருந்தன. சதையைக் கவ்வி இழுத்திருக்கக் கூடும். சொதசொதப்புடன் சதை பிதுங்கி நின்றது. ரத்தக்கசிவும் இருந்தது. மனிதப் பல்லால் இப்படிக் காயப்படுத்த முடியும் என்பதை இப்போதுதான் முதலில் பார்ப்பதாகத் தோன்றியது. ஏதோ முதலுதவி செய்து இரத்தத்தை நிறுத்தியிருக்கிறார்கள்.

‘இந்தப் பொட்டக்கூதிய மொதல்ல ஹாஸ்டல உட்டு வெளியில அனுப்புங்க சார்’ என்று ஒருகுரல் ஆக்ரோசமாக வந்தது. கும்பலுக்குள் இருந்து வரும்  குரலுக்கு முகம் கிடையாது. அவன் யாரென்று அறிவதைத் தள்ளிப் போட்டார்.

உடனே குமரேசன் நின்ற இடத்திலிருந்தே ஆங்காரத்தோடு ‘பொட்டையன்னு சொல்றத நிறுத்தச் சொல்லுங்க சார். எனக்குப் பேரு இல்லியா?’ என்றான்.

அவன் கேட்பது நியாயமாகப் பட ‘இந்தப் பட்டப் பேரயெல்லாம் எங்கிட்டச் சொல்லக் கூடாது. அவனுக்குப் பேரு இருக்குதில்ல? யாருன்னாலும் பேரச் சொல்லிப் பேசுங்க’ என்று வாய் திறந்தார் பரமசிவம்.

அவரது முதல் பேச்சே குமரேசனுக்கு ஆதரவாய் வந்ததை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

‘இது வெசக்கடி சார். மனுசப்பல்லு வெசம் சார்’ என்று வந்த குரல் புதிதாக இருந்தது.

‘காயத்துக்கு மொதல்ல பதில் சொல்லுங்க சார்’ என்றது இன்னொரு குரல்.

முன்னால் நிற்பவர்கள் ஏதும் பேசாமல் பின்னாலிருந்து ஏன் குரல்கள் வருகின்றன என்று யோசித்தார். ஆனால் இப்போது முன்னால் நின்றவன் பேசினான்.

‘அவன் கடிச்சு வெச்சிருக்கறான். அதக் கேக்க மாட்டீங்கறீங்க. பொட்டையன்னு சொன்னதுதான் பெரிசாப் போச்சா?’

என்று ஏறி வந்தவன் ரமேஷ். தாவரவியல் துறை. அறிவியல்  மாணவனுக்குப் பேசக் குரல் வருகிறதே என்று ஆச்சரியப்பட்டார். அந்தத் துறையில் சொல்லித் தட்டி வைக்க வேண்டும். குமரேசன் ஒருவன் மட்டும் தனியாக நிற்கிறான். மற்றவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஒருபக்கமாக, அதுவும் தனித்திருப்பவன் பக்கம் பேசுவது போலத் தோன்றிவிடக் கூடாது என்று மனம் எச்சரித்தது.

‘அவன் செஞ்சது சரின்னு நான் சொல்லலையே. பேரச் சொல்றதுல உனக்கென்ன? அதும் கெட்ட வார்த்த போட்டுப் பேசறான்? உங்களுக்குத்தான் கெட்ட வார்த்த தெரீமா? எனக்கெல்லாம் தெரியாதா? உன்னயக் கூளக்கூதின்னு ஆராச்சும் சொன்னாக் கேட்டுக்குவியா?’ என்றார்.

ரமேஷுக்குக் ‘கூளையன்’ என்று பட்டப்பெயர் இருப்பதை அவர் அறிவார். விரும்பவில்லை என்றாலும் அதைச் சுட்டித்தான் அவனை அடக்க முடியும் என்று பட்டது. மேற்கொண்டு மற்றவர்களைப் பேச விடாமல் சண்முகத்தை நோக்கிப் பேசினார்.

‘பசங்க ஆருகிட்டயாச்சும் வண்டி இருக்குதா சண்முகம்?’ என்று கேட்டார்.

‘இல்லீங்க சார். இவனுங்க வண்டி வெச்சிருக்கற அளவுக்கு இருந்தாக் கையில புடிக்க முடியுமா சார்?’ என்றார்.

அவர் தன் எல்லையை மீறிப் பேசுவதாகத் தோன்றியது. ஒரு பிரச்சினையின் போது இப்படி வார்த்தைகளை விடக் கூடாது என்பதை அறியாமல் இருக்கிறாரே என வருத்தமாகவும் இருந்தது. எங்கே என்ன பேச வேண்டும் என்று தெரியாத இவர் எப்படிப் போட்டித் தேர்வில் தேறப் போகிறார்?

‘அதெல்லாம் சொல்லாதீங்க சண்முகம். இன்னக்கி எல்லாருகிட்டயும் வண்டி இருக்குது. அவனவன் ஊட்டுல போயிப் பாருங்க, ஒன்னுக்கு ரண்டா வண்டி வெச்சிருப்பாங்க. நீங்க இல்லீன்னு சொன்னா அதோட நிறுத்திக்கங்க’ என்றார்.

உடனே திரும்பிக்  காயம் பட்டவர்களைப் பார்த்துச் சொன்னார்.

‘சார் வண்டியில ஒருத்தன் ஏறிக்க. என் வண்டியில ஒருத்தன் ஏறிக்க. மொதல்ல ஆஸ்பத்திரிக்கிப் போங்க. என் வண்டிய ஆராச்சும் ஓட்டிக்கிட்டுப் போங்கப்பா’ என்றார்.

பிரச்சினையைத் தீர்க்காமல் மருத்துவமனைக்குப் போவதில் விருப்பம் இல்லாதவர்கள் போலத் தங்களுக்குள் குசுகுசுவெனப் பேசினார்கள்.

‘மனுசப் பல்லு வெசம். வெசக்கடிக்கு ட்ரீட்மெண்ட் தான் மொதல்ல. நான் வர்றதுக்குள்ள பசங்கள ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிக்கிட்டுப் போயி இந்நேரம் கட்டுப் போட்டுக்கிட்டு வந்திருக்கலாமே. அதுதான் மொதல் வேல. நடந்தது எதா இருந்தாலும் பேசிக்கலாம். யாரு எங்க போவப் போறா? அவுங்க ஆஸ்பத்திரிக்கிப் போயிட்டு வரட்டும். நான் இங்கதான இருக்கறன். நாம பேசிக்கலாம்’ என்று பொதுவாகச் சொன்னார்.

அது எல்லோருக்கும் உடன்பாடாகப் பட்டது. ஒத்துக்கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்களால் அதை வலியுறுத்த முடியவில்லை. காயத்தோடு இருப்பவர்களை நிற்க வைத்துக்கொண்டு நியாயம் பேசி அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பயம் வந்திருக்கக் கூடும். கூட்டத்தில் வேதியியல் துறை மாணவன் எவனாவது நிற்கிறானா என்று பார்த்தார். ஒருவனையும் காணவில்லை. விடுதியில் நான்கு பேர் இருக்கிறார்கள். ஒருவன்கூட இந்நேரத்திற்கு எழவில்லை போல. இயற்பியல் மாணவன் ஒருவனை அடையாளம் கண்டார். இயற்பியல் துறை மாணவர்களுக்குத் துணைப்பாடமாக வேதியியல் இருதாள்கள் இருந்தன. ஒருபருவத் தாளை அவர்தான் நடத்தினார்.

அந்த மாணவனை ‘உம்பேர் என்ன?’ என்றார். அவன் ‘அஜித்துங்க சார்’ என்று முன்னால் வந்தான்.  ‘நீ போய்ட்டு வா’ என்று அவனிடம் சாவியை நீட்டினார். இத்தனை பேர் இருக்கத் தன்னை நம்பி சார் வண்டியைக் கொடுக்கிறார் என்று அவனுக்குப் பெருமையாக இருந்தது. சாவியை வாங்கிக் கொண்டு கோட்டுவாய் ஒழுக்கைக் கூடத் துடைக்காமல் அப்படியே அவன் போவதை அசூயையோடு பார்த்தார். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சும் குழாயைத் திறந்து அவசர அவசரமாகத் தண்ணீரை முகத்தில் அடித்துக்கொண்டான். டி-ஷர்ட்டைத் தூக்கி முகத்தைத் துடைத்தபடி வண்டியை எடுத்தான். வண்டியில் உட்கார்ந்து கண்ணாடியில் முகம் பார்த்துத் தலையை விரல்களால் கோதி விட்டுக் கொண்டான். அவற்றைப் பார்க்க அவருக்குக் கொஞ்சம் திருப்தியாக இருந்தது. அரசு மருத்துவமனைக்குப் பேசி விவரம் சொல்லலாமா என்று நினைத்தார். காய்ச்சல், தலைவலி, இரத்த தானம் என்று ஏதாவது காரணத்தை ஒட்டி அரசு மருத்துவமனைக்குப் பையன்களை அடிக்கடி அழைத்துச் செல்வதால் சண்முகத்திற்கு நல்ல அறிமுகம் இருந்தது. சமாளித்துக் கொள்வார். தேவையென்றால் அழைக்கட்டும்.

கடிபட்டவர்களை அனுப்பியதும் மற்றவர்களுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னாலிருந்த சிலர் நகர்வது தெரிந்தது. ஓங்கிக் குரல் கொடுத்தவர்களும் அப்படியே நின்றிருந்தனர். இதை இன்னும் கொஞ்சம் ஆறப் போட வேண்டும் என்றிருந்தது.  குமரேசன் அதே முகத்தோடும் அதே கோலத்தோடும் அதே இடத்தில் சிலையாக நின்றிருந்தான்.

‘குமரேசா… நீ போயி சட்டையப் போட்டுக்கிட்டு ஆபீஸ் ரூமுக்கு வா’ என்றார்.

அவன் தன் வாளியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

‘அவுங்கவுங்க போயி வேலயப் பாருங்க. ஆஸ்பத்திரிக்குப் போனவங்க வரட்டும். நான் ஒவ்வொருத்தராக் கூப்புட்டு விசாரிக்கறேன். அப்பறம் என்ன பண்றதுன்னு பாக்கலாம்’ என்று பொதுவாகச் சொன்னார்.

‘மிருகமாட்டம் கடிக்கறவன இங்க வெச்சிருக்கக் குடாது சார். காலி பண்ணச் சொல்லுங்க.’

முதலில் குரல் கொடுத்தவன் தன் கெத்தை விடாமல் சொன்னான்.

‘உம் பேரு என்ன? எந்த டிபார்ட்மெண்ட்டு?’ என்று அவனைக் கேட்டார்.

‘மகேஷ் சார். இங்கிலீஷ் செகண்டியர்’ என்றான்.

‘எத்தன அரியர் இருக்குது? ஒழுங்காக் காலேஜ்க்குப் போறயா?’ என்று அவனிடம் தன் விசாரணையைத் தொடங்கினார்.

‘போய்க்கிட்டுத்தான் சார் இருக்கறன்’ என்றான்.

அரியர் எத்தனை என்பதற்குப் பதில் ஏதும் வரவில்லை என்பதைக் கவனித்தார். நிலுவை வைக்காமல் ஆங்கிலத் துறையில் ஒருவன்கூட இருக்க வாய்ப்பில்லை. பத்துப் பதினைந்து என்று வைத்திருப்பான்கள். அவனை முடக்கும் அம்பு இருக்கிறது. அதை இப்போதே பயன்படுத்தலாமா பிறகு வைத்துக் கொள்ளலாமா என்று யோசிப்பதற்குள் அவனே ‘செரிங்க சார்… அப்பறம் கூப்புடுங்க’ என்று சொல்லிவிட்டுச் செல்லத் தொடங்கினான். போகட்டும் என்று விட்டுவிட்டார். முற்றத்தில் இப்போது ஒருவர்கூட இல்லை. சமையல்காரர் தேநீர் கொண்டு வந்து வைத்தார். ஏற்கனவே போட்டு வைத்திருந்து சமயம் பார்த்துக் கொண்டு வந்து கொடுக்கிறாரோ? விடுதிக்கு வரும்போது தேநீர் மட்டும் பருகுவது வழக்கம். உணவு நன்றாக இல்லை என்று பையன்கள் புகார் சொல்லி ‘நீங்களே வந்து சாப்பிட்டுப் பாருங்க சார்’ என்று வலுக்கட்டாயமாக அழைத்தால் போய்க் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்ப்பார். நன்றாக இருந்தாலும் ‘ஆமாப்பா… சரியில்ல… சரி பண்ணீரலாம்’ என்று பையன்களுக்கு ஏற்ற மாதிரி சொல்வார். அவர்களுக்கு முன்னாலேயே சமையல்காரரை அழைத்துத் திட்டுவது போலவும் சில குறிப்புகள் கொடுப்பது போலவும் பேசுவார். பையன்களுக்குத் திருப்தியாகிவிடும். அது மாதிரிதான் இப்போதும். தேநீரை எடுத்து உறிஞ்சும்போது பிரச்சினையைத் தற்காலிகமாகச் சமாளித்துவிட்ட நிம்மதி வந்திருந்தது.

குமரேசனிடம் விசாரித்து வைத்துக்கொள்வது நல்லது. சக ஆசிரியர் ஒருவர் பரிந்துரையின் பேரில் கடைசியாக வந்து விடுதியில் சேர்ந்தவன் அவன். இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாண்டு மாணவன். வேளாண்மைப் படிப்பில் சேரக் காத்திருந்து அது கிடைக்காமல் சேர்க்கை முடியும் கடைசி நேரத்தில் வந்து தமிழில் சேர்ந்தான். அதில்தான் இடமிருந்தது. குரல் கீச்சென்று வரும். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் பெண் பேசுவது போலவே இருக்கும். உடல் லேசாகப் பூசினது போலிருக்கும். நடையிலும் பெண் சாயல் தென்படும். கையை வீசும் போது ஒய்யாரமாகத் தோன்றும். அதனாலோ என்னவோ மற்ற பையன்களைப் போல அவன் அரைடவுசர் போடுவதில்லை. காதியில் எடுத்த சாணிநிற வேட்டிகளைக் கட்டினான். சேர்க்கை தாமதம் என்பதால் சமூகநீதி விடுதியில் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. கட்டண விடுதியில் எப்படியாவது சேர்த்துக்கொள்ளச் சொல்லித் தமிழ்த்துறைத் தலைவரே பரிந்துரைக்கு வந்தார். தினமும் போய்வரும் தூரத்தில் அவன் ஊர் இல்லை. இலவசப் பேருந்து அட்டை இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று பேருந்து ஏறி இரண்டு மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். அது கஷ்டம் என்று சொன்னதோடு ‘நல்ல பையன்’ என்று சான்றிதழும் கொடுத்தார்.

பெண் தன்மை உள்ள பையன் என்பதால் பரமசிவம் தயங்கினார்.  எந்த அறையிலும் இடமும் இல்லை. அவன் திருநங்கையாக இருக்கக் கூடுமோ என்று அவருக்குச் சந்தேகமும் இருந்தது. அப்படி இருந்தால் இந்தப் பையன்கள் ஏதாவது வம்பிழுப்பார்கள். அத்து மீறியும் நடக்கக் கூடும். பிரச்சினை வரும் முன்பே அதைத் தடுத்துவிடலாம் என்று நினைத்தார். தமிழ்த்துறைத் தலைவரிடம் எப்படிக் கேட்பது என்று சங்கடமாக இருந்தது. சேர்ந்திருக்கும் பையன்கள் யாராவது காலி செய்தாலோ இருவர் இருக்கும் அறையில் கூடுதலாக இன்னொருவரைச் சேர்த்துக்கொள்ள யாரேனும் ஒப்புதல் கொடுத்தாலோ பார்க்கலாம் என்று சொல்லிச் சமாளித்திருந்தார். இது நடந்த ஓரிரு நாட்களில் முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரிடம் தம் தயக்கத்தை மெல்லச் சொன்னார்.

‘அவன் டிரான்ஸ்ஜெண்டர் இல்ல. நான் விசாரிச்சுப் பாத்துத்தான் சேர்த்தன். நம்ம விண்ணப்பத்துலயே இப்ப டிரான்ஸ்ஜெண்டர் போடறமே. அதுல எத்தன பேரு சேந்தாங்கன்னு கவர்ன்மெண்ட் கணக்குக் கேக்குது. ஒருத்தராச்சும் சேந்தாப் பரவால்லன்னுதான் பாக்கறன். யாரும் வர்லயே’ என்று முதல்வர் விளக்கமாகச் சொன்னார்.

‘இருந்தாலும்… இந்தப் பையன் பொம்பளயாட்டந்தான் பேசறான், நடக்கறான். அவனுக்கு எதுனா தொந்தரவு ஆகிருமோன்னு யோசனையா இருக்குதுங்க சார்’ என்று தம் தயக்கத்தைச் சொன்னார்.

அப்போது முதல்வர்தான் காப்பாளர் அறையைக் கொடுக்கும் யோசனையைச் சொன்னார்.  ‘உங்க வீடு பக்கத்துலதான? அந்த ரூம் சும்மாதான இருக்குது. அதக் குடுத்திருங்க சார். அவன் மட்டும் இருந்துக்கட்டும்’ என்றார். அந்த அறைக்குள் கிடந்த பொருள்களை எல்லாம் எடுத்துக் காலி செய்த போது இருவரே தங்கலாம் போலப் பெரிதாகத் தெரிந்தது. அதைக் குமரேசனுக்குக் கொடுத்தார்.  விடுதியிலேயே அவன் ஒருவனுக்கு மட்டும் தனியறை. அவனால் இதுவரை தொந்தரவு ஏதுமில்லை. அவனுண்டு அவன் வேலையுண்டு என்று இருப்பான். மற்றவர்களாலும் அவனுக்குத் தொந்தரவு ஏதுமில்லை. கேலிப் பேச்சுகள் இருக்கும். பையன்கள் செய்யும் கேலியை எல்லாம் பள்ளியிலேயே பார்த்துவிட்டு வந்திருந்தான். முன்னால் பேசினாலும் பின்னால் பேசினாலும் காது கேட்காதவன் போலச் சென்றுவிடுவான். அவனுக்குச் சில நண்பர்களும் இருந்தனர். அவர்களுடன் சிரிப்பும் பேச்சுமாகக் கல்லூரிக்குப் போவதையும் வருவதையும் பார்த்து இயல்பானார்.

முதலாண்டு முடியப் போகிற தருணம். இரண்டாம் பருவத் தேர்வு வரப் போகிறது. இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றைக்கு எப்படிப் பிரச்சினை வந்தது, யாரால் வந்தது, என்ன நடந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. முதலில் அவன் வாய் வழியாகவே தெரிந்துகொள்வதுதான் சரி என்று தோன்றியது. தேநீரைப் பருகிவிட்டு டம்ளரை மேஜையில் வைத்தார். தோட்டத்தில் நடக்கலாமா என்று நினைத்தார். இந்தச் சூழலில் நடந்தால் ‘இவ்வளவு பெரிய பிரச்சின நடந்திருக்குது. வார்டன் உலா போறாரு’ என்று பையன்கள் கோபம் கொள்வார்கள். மேற்கொண்டு அவர் யோசனைக்கு இடம் கொடுக்காமல் குமரேசன் வருவது தெரிந்தது. பேண்ட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு தலை வாரியிருந்தான். இப்போதைய பையன்கள் போல அவன் தலைமயிர் இல்லை. சுற்றிலும் ஒட்டியும் நடுவில் உயர்ந்தும் இருந்தாலும் பாந்தமாகச் சீவியிருப்பதாகப் பட்டது. முகம் சாந்தமாக இருந்தது. ரத்தம் வரும் அளவுக்குச் சதை கவ்வி இவனா கடித்திருப்பான்?

அலுவலக அறைக்குள் போய்ச் சண்முகத்தின் நாற்காலியில் உட்கார்ந்தார். உள்ளே நுழையத் தயங்கியவனை வரச் சொல்லி எதிரே போட்டிருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார். அவன் உட்காராமல் நின்றான். இரண்டு முறை அழுத்திச் சொன்ன பிறகு உட்கார்ந்தான்.   ‘என்ன நடந்துச்சு? சொல்லுப்பா’ என்றார் மென்மையாக. உடனே அவன் அழ ஆரம்பித்துவிட்டான். அழட்டும் என்று சற்று நேரம் விட்டார். அப்போது கதவருகில் இருவர் வந்து நிற்பது தெரிந்தது.  நிற்கட்டும், அவன் சொல்வதை அவர்களும் கேட்கட்டும் என்று நினைத்து எதுவும் சொல்லவில்லை. அவனிடமிருந்து தேம்பல் மட்டும் வந்த போது ‘செரிப்பா. என்ன நடந்துச்சுன்னு சொல்லு. அப்பத்தான் பிரச்சின பெருசாவாத பாத்துக்க முடியும்’ என்றார். ஆதரவான சொற்களைக் கேட்டு நடந்ததை அவன் சொல்லத் தொடங்கினான்.

இரவு பத்து மணிக்குத் தூங்கப் போய் விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடும் வழக்கம் உடையவன் அவன். எழுந்ததும் குளித்துவிடுவான். எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் நேரம். ஆளரவமே இருக்காது. குளியலறைகளும் கழிப்பறைகளும் பொது. தரைத்தளத்தின் இறுதியில் ஐந்து கழிப்பறைகள், ஐந்து குளியலறைகள் என இருபுறமும் இருந்தன. குமரேசனின் அறை முன்னால் இருந்தது. தரைத்தளத்தில் இருந்த அறைகள் எல்லாவற்றையும் கடந்து குளியலறைக்குச் செல்ல வேண்டும். அந்நேரத்தில் நடமாட்டம் இல்லாததால் இடுப்பில் வேட்டியும் மேலே துண்டுமாய்ச் செல்வான். கையில் வாளி இருக்கும். அவன் குளிக்கச் செல்வதை இதுநாள் வரைக்கும் கண்டவரில்லை. அவன் எப்போது குளிக்கிறான் என்பதை அறியும் ஆவல் பையன்களிடம் இருந்திருக்கிறது. அவன் உடலில் ஏதோ ரகசியம் இருக்கிறது, அதனால்தான் ரகசியமாகக் குளிக்கிறான் என்று எல்லோரும் நினைத்திருக்கிறார்கள். அவர்களுக்குள் அதைப் பற்றி அவ்வப்போது பேச்சும் வந்திருக்கிறது. சிலர் குமரேசனிடமே கேலியாகவும் கேட்டிருக்கிறார்கள். அவன் சிரித்துக்கொண்டே போயிருக்கிறான்.

இன்றைக்குக் காலையிலும் அப்படி அவன் குளிக்கச் சென்றபோது தூக்கக் கலக்கத்தோடு கழிப்பறை போக வந்த ஒருவன் கண்டிருக்கிறான். குமரேசன் குளிக்கும் நேரத்தைக் கண்டறிந்துவிட்ட பரவசம் அவனுக்குள் பற்றியிருக்கிறது. உடனே ஓடித் தன் அறை நண்பர்களை எழுப்பிச் சொல்லியிருக்கிறான். பக்கத்து அறைக்கும் தகவல் போயிருக்கிறது. ஐந்தாறு பேர் எழுந்து வந்திருக்கிறார்கள். குளியலறைக்கு வெளியே சத்தமில்லாமல் காத்திருந்தவர்கள் குமரேசன் வெளியே வந்ததும் ‘பேஎ’ என்று கத்தியிருக்கிறார்கள். பயந்து நடுங்கிப் போன குமரேசன் பிறகு பையன்கள்தான் என்று அறிந்ததும் ஏதோ கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியிருக்கிறான். உடனே அவர்களும் ஆளுக்கொரு வார்த்தை சொல்லித் திட்ட ஆபாசக் களமாக மாறியிருக்கிறது. அப்போது ஒருவன் குமரேசனின் வேட்டியைப் பற்றி இழுத்திருக்கிறான்.

கும்பல் கொள்ளும் குஷியில் இன்னொருவன் ‘என்ன இருக்குதுன்னு காட்டுறா’ என்று மற்றொரு பக்கம் பிடித்து உருவ முயன்றிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து சுற்றிலும் நின்றுகொண்டு இழுக்கவும் தடுமாறிப் போன குமரேசன் ‘உடுங்கடா உடுங்கடா’ என்று வேட்டியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்த்திருக்கிறான். ஒருகட்டத்தில் அது முடியாமல் போகவும் கத்திக்கொண்டு ஒருவன் கையைப் பிடித்துக் கடித்திருக்கிறான். அவன் கை வாகாகக் கிடைக்கவில்லை. அதை விட்டுவிட்டு ஒட்டியிருந்த இன்னொருவனின் கையைப் பிடித்துக் கடித்திருக்கிறான். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வெறியில் அப்போது என்ன செய்கிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. இரத்தம் ஒழுக அவர்கள் கதறிக்கொண்டு ஓடிய போதுதான் நிதானத்துக்கு வந்திருக்கிறான்.

சொல்லிவிட்டு ‘வேற என்ன சார் செஞ்சிருக்க முடியும்?’ என்று கேட்டு அவர் முகத்தையே பார்த்து அழுதான். அவன் தலையை ஆதரவாய்த் தடவிக் கொடுக்க வேண்டும் என்றுதான் அவருக்குத் தோன்றியது. வேறு என்ன செய்திருக்க முடியும் என்னும் கேள்வியே அவருக்குள்ளும் எஞ்சியது. இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என யோசனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்த போது அலுவலக வாசலில் நிழலடைத்தது. ஐந்தாறு பையன்கள் முகம் தெரிந்தது. சிலர் அறைக்குள்ளேயே வந்து நின்றிருந்தார்கள். பின்னால் இன்னும் நிறையப் பேர் இருக்கலாம். செய்தி தெரிந்து பலரும் வந்துவிட்டார்கள் போல. இந்தப் பிரச்சினையைத் தானே தீர்க்க முடியுமா முதல்வர் அளவுக்குக் கொண்டு போய்விடலாமா என்று யோசனை ஓடியது. சட்டென்று தீர்மானிக்க முடியவில்லை. இப்போது குமரேசனை வெளியே அனுப்பிவிடுவது தான் சரி என்று நினைத்தார்.

‘செரி, நீ ரூமுக்குப் போப்பா’ என்றார்.

‘அவன ஹாஸ்டல விட்டு அனுப்புங்க சார்’ என்று வெளியிலிருந்து ஒருகுரல் வந்தது.

‘மிருகத்த ஹாஸ்டல்ல வெச்சிருந்தா நாங்கெல்லாம் எப்பிடிங்க சார் இருக்கறது?’ என்றொரு கேள்வி வந்தது.

‘இன்னம் எத்தன பேரக் கடிப்பானோ தெரீல. பயந்துக்கிட்டு ஹாஸ்டல்ல எப்பிடி இருக்கறதுங்க சார்’ என்றொருவன் கத்தினான்.

‘அனுப்பீருங்க சார்’ எனப் பல குரல்கள் கசமுசவென்று எழுந்தன. மருத்துவமனைக்குச் சென்றவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என்றாலும் இந்தக் கும்பலை எப்படிச் சமாளிப்பது என்று கவலை வந்தது. முதலில் அறையை விட்டு எப்படி வெளியே போய்விட வேண்டும். உள்ளேயே பிடித்து வைத்துக் கொள்வார்களோ எனப் பயமாக இருந்தது.

குமரேசன் எழுந்து வெளியே போக நடந்தான். அறைக்குள்ளும்  வாயிலை அடைத்தும் நின்றிருந்தவர்கள் வழி விடவில்லை. ஆனாலும் அவன் நிற்கவில்லை. அவர்களைத் துளைத்துக் கொண்டு வெளியேற முயன்றான். அப்போது அவன் சட்டையிலோ பேண்டிலோ யார் கையோ பட்டிருக்கக் கூடும். வேண்டுமென்றும் பிடித்து இழுத்திருக்கலாம். விருக்கென்று பின்னால் நகர்ந்தவன் ஆட்காட்டி விரலை உயர்த்தி ஆட்டியபடி சொன்னான், ‘எவனாச்சும் என்னயத் தொட்டீங்க…இன்னமே கையக் கடிக்க மாட்டன்… புடுக்கக் கடிச்சுத் துப்பீருவன்.’

அவன் முகம் பரமசிவத்துக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் ஆக்ரோசத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. மூச்சு விடும் சத்தம் கேட்டது. அவன் வாயையும் திறந்து கொண்டிருக்கலாம். மறித்து நின்றவர்கள் சட்டென்று விலகி நகர்ந்தனர். குமரேசன் தாராளமாக நடக்க வழி கிடைத்தது. அவன் பின்னாலேயே போனால் தானும் வெளியே சென்றுவிடலாம் என்று கருதியவர் வேகமாக நடந்து சட்டென்று அவனோடு சேர்ந்துகொண்டார்.

000

பெருமாள்முருகன்

பெருமாள்முருகன், பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார். படைப்புகளில் கொங்கு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்து, அதிகம் அறியப்படாதிருந்த கொங்கு வேளாண் வாழ்க்கையைப் பதிவு செய்தவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. வாசித்தேன் ஐயா. கதை நன்றாக அதேவேளையில் குமரேசன்களைப் பற்றிய நினைப்போடு நகர்ந்தது. அவர்கள் தரப்பில் கடிப்பதும் தற்காப்புதான்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss