
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென அருகே ஒரு நாய் சத்தமாகக் குரைக்கத் தொடங்கியது. அது எங்கே இருக்கிறது எனப் பார்க்க முயன்றேன். சில பயணிகளும் அவ்வாறே பார்த்தனர். பேருந்தில் கூட்டம் வழியவில்லை: எல்லா இருக்கைகளும் நிரம்பி இருந்ததால், வெகு சில பயணிகளே நின்று கொண்டிருந்தனர்; அவர்களுக்கு நாயைப் பார்க்க வாய்ப்பு அதிகம், ஏனெனில் மேலிருந்து பார்ப்பதால் அவர்களால் இருபுறமும் பார்க்க முடிந்தது. என்னைப் போல் அமர்ந்திருக்கும் சிலருக்கும் கூட, நமது முன்னோர்களுக்குக் குதிரைகள் அளித்ததைப் போல உயர்த்தப்பட்ட பார்வைக் கோணத்தை பேருந்துகள் அளிக்கின்றன: குதிரைவீரன் கண்ணோட்டம் போல. கார்களை விட தரைக்கு மிக அருகில் கொண்டு செல்வதால் தான் பேருந்துகளையே நான் விரும்புகிறேன். தர்க்கரீதியாகச் சொன்னால், நடைபாதைப் பக்கம் அதுவும் என் பக்கமே அந்தக் குரைப்பு கேட்டது. அப்படியிருந்தும் கூட என்னால் நாயைப் பார்க்க முடியவில்லை, ஏற்கெனவே அவனை விட்டு விலகி வந்துவிட்டதால் நாங்கள் வேகமாகச் சென்றதால் தான் தாமதம் ஏற்பட்டது என நினைத்தேன். ஏதேனும் சம்பவம் அல்லது விபத்தால் எழும் ஆர்வத்தை அவன் தூண்டினான், ஆனால் இந்த நிகழ்வில் குரைப்பின் ஒலியளவைத் தவிர ஏதாவது நடந்திருக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை: மக்கள் நடமாடும் நகரத்தில் நாய்கள் மற்ற நாய்களைப் பார்த்துக் குரைப்பதைத் தவிர அரிதாகவே இவ்வாறு குரைக்கின்றன. அதனால் பயணிகளின் கவனம் ஏற்கெனவே சிதறத் தொடங்கியிருந்தது… திடீரென்று அது மறுகவனம் பெற்றதும் முன்னைவிட அதிக சத்தமாகக் குரைக்கத் தொடங்கியது. பின்னர் அந்த நாயை நான் பார்த்தேன். பேருந்தையொட்டி பின்தொடர்ந்தவாறே அதைப் பார்த்து குரைத்துக் கொண்டு நடைபாதையில் ஓடி வந்தான். இது மிகவும் விநோதமாக இருந்தது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களிலும் நகரின் வெளிப்புறங்களிலும் கார்களின் சக்கரங்களைப் பார்த்து குரைத்தபடி நாய்கள் கார்களின் பின்னால் ஓடி வரும், இதை பிரிங்கில்ஸில் நான் வாழ்ந்த பால்ய பருவத்தில் கண்ட நினைவுள்ளது. ஆனால் அதை நீங்கள் இனிக் காண முடியாது ஏனென்றால் நாய்கள் பரிணாமம் பெற்று வளர்ந்துவிட்டதைப் போல கார்களின் இருப்பிற்கு அவை பழகிவிட்டன. அதுவுமில்லாமல் இந்த நாய் பேருந்தின் சக்கரத்தைப் பார்த்துக் குரைக்காமல் முழு வாகனத்தையும் தலைதூக்கிப் பார்த்தபடி அதுவும் ஜன்னலை முறைத்துப் பார்த்துக் குரைக்கிறது. எல்லாப் பயணிகளும் இப்போது பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை, அவனது எசமான் அவனை மறந்துவிட்டோ அல்லது கைவிட்டுவிட்டோ பேருந்தில் ஏறி விட்டாரா? அல்லது நாயின் உரிமையாளரை யாராவது அடித்திருக்கலாம் அல்லது கொள்ளை அடித்திருக்கலாமோ? ஆனால் பேருந்து அவேனிடா டிரக்டோரியாவில் இருந்து எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் ஒட்டப்பட்டு வந்துள்ளது, இந்த நிறுத்தத்தில் தான் அந்த நாய் துரத்த ஆரம்பித்துள்ளது. இன்னும் விரிவான அபிப்ராயம் என்னவெனில்– உதாரணத்திற்கு, அந்த பேருந்து அந்த நாயின் உரிமையாளர் மீது மோதியிருக்கும் அல்லது வேறு ஒரு நாய் மீது- என்பதையெல்லாம் ஒதுக்கி வைக்கலாம், ஏனெனில் அது மாதிரி எதுவும் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரம், தெருக்கள் ஏறத்தாழ காலியாக இருந்தன: ஒரு விபத்து கவனிக்கப்படாமல் இருக்க முடியாது.
நாய் சற்று பெரிதாகவும் கருஞ்சாம்பல் நிறமும் கூர்மையான மூக்கும் தூய இனத்திற்கும் தெருநாய்க்கும் இடைப்பட்ட ஓரினமாகவும் இருந்தது. பியூனெஸ் ஐரஸில் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நாம் கடந்து செல்லும் சுற்றுப்புறத்தில் தெருநாய்களைப் பார்ப்பது கடந்த கால விஷயமாகத் தான் உள்ளது. அவனைப் பார்க்கும் போது பயமுறுத்துவது போல பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால் அவன் கோபமடைந்தால் பயமுறுத்தும் அளவிற்குப் பெரிதாகத்தான் இருந்தான். எப்படியோ தற்சமயம் கோபமாகவும் அதைவிட வெறி கொண்டதாகவும் கவலையுற்றிருப்பதாகவும் தோன்றியது. அவன் துரத்துவது வம்புச் சண்டைக்காக அல்ல என்றாலும் பேருந்தைப் பிடிப்பது அல்லது நிறுத்துவதற்கான விருப்பமா… யாருக்குத் தெரியும்?
குரைத்தலுடன் பந்தயம் தொடர்ந்தது. முந்தைய சந்திப்பில் ஒரு சிவப்பு விளக்கால் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து வேகமெடுத்தது. நாய் தோல்வியைத் தழுவியவாறு ஓடி வரும் நடைபாதைக்கு நெருக்கமாக பேருந்து இயங்கியது. கிட்டத்தட்ட அடுத்த தெருமுனைச் சந்திப்பை நாங்கள் அடைந்தபோது, இந்தத் துரத்தல் ஒரு முடிவுக்கு வந்ததாகத் தோன்றியது. ஆனால், எங்களுக்கு ஆச்சரியம் தருவது போல, நாங்கள் அங்கே சென்ற போது, அடுத்த நிறுத்தத்தை தாண்டிய நாய் எங்களை முடுக்குவது போல துரத்திக் கொண்டு குரைத்தது. நடைபாதையில் அதிக மக்கள் இல்லை, இல்லாவிடில் அதன் பார்வை பேருந்து ஜன்னலின் மீதே பதிந்தபடி அவர்களைத் தூக்கி வீசியிருக்கும். அவன் குரைப்பு மிகச் சத்தமாக மாறியது; அவை காது செவிடாகும்படி, உலகத்தையே நிரப்புவது போல மோட்டார் சத்தங்களையே மூழ்கடிக்கும் வகையில் இருந்தது. ஆரம்பத்திலிருந்து வெளிப்படையாக இருந்திருக்க வேண்டிய ஏதோவொன்று முழுமையாகப் புரியத் தொடங்கியது: பேருந்தில் பயணம் செய்யும் யாரோ ஒருவரை நாய் பார்த்திருக்க (மோப்பம் பிடித்திருக்க) வேண்டும், அதனால் தான் அது அவரைப் பின்தொடர்கிறது. ஒரு பயணி, எங்களுள் ஒருவர்…இந்த விளக்கம் மற்றவர் மனதிற்கும் பட்டிருக்கலாம்; ஆர்வமிக்க முகபாவத்துடன் மக்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். யாருக்காவது இந்த நாயைத் தெரியுமா? அதற்கு என்னவாம்? ஒரு முன்னாள் உரிமையாளர் அல்லது யாரேனும் நாய்க்குத் தெரிந்தவரா? நான் வியப்பில் சுற்றும் முற்றும் பார்த்தேன், யாராக இருக்கக் கூடும்? இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கடைசியாக நீங்கள் நினைப்பது உங்களையேதான். அதை உணர எனக்குச் சிறிது நேரம் ஆனது. அந்த உணர்தல் மறைமுகமானது. இன்னும் இது தெளிவில்லாத உள்ளுணர்வாக இருந்ததால், திடீரென ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். சாலை நெரிசல் இல்லாமல் இருப்பதைப் பார்த்தேன்: எங்களுக்கு முன்னால் பச்சை விளக்குகளின் வரிசை அடிவானம் வரை தடையற்ற வேகத்தை உறுதி செய்வது போலிருந்தது. ஆனால், நான் இருப்பது டாக்சியில் அல்ல என்பதை அதிகரிக்கும் மனக்கலக்கத்துடன் நினைவுபடுத்திக் கொண்டேன்: ஒரு பேருந்து நான்கு அல்லது ஐந்து தொகுதிகளுக்கு ஒரு நிறுத்தம் கொண்டது. பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லை என்றாலோ அல்லது பேருந்தில் இருந்து இறங்க யாரும் மணியோசை எழுப்பவில்லை என்றாலோ பேருந்து போய்க் கொண்டே இருக்கும் என்பது உண்மைதான். இப்போதைக்கு யாரும் பின் கதவருகே செல்லவில்லை. அதிர்ஷ்டவசமாக அடுத்த நிறுத்தத்தில் யாரும் இறங்க மாட்டார்கள். இவை எல்லாம் ஒரே நேரத்தில் எனக்குத் தோன்றின. என் மனக் கலக்கம் தொடர்ந்து அதிகரித்தபடி, அதை வெளிப்படுத்தத் தேவையான சொற்களைக் கண்டறியும் நிலையில் இருந்தது. ஆனால் இவை எல்லாம் சூழ்நிலையின் அவசரம் காரணமாக தாமதமானது. நாய் அதன் துரத்தலைக் கைவிடும்வரை பேருந்தை ஓட்டுவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்குமா? என் பார்வையை கண நேரத்திற்கு வேறு பக்கம் திருப்பிய நான், மீண்டும் அவனை நோக்கினேன். உணர்ச்சியால் பீடிக்கப்பட்டு இன்னும் தொடர்ந்து வந்த அவன்… இப்போது என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எனக்குத் தெரிந்தது: அவன் யாரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தானோ, யாரைத் துரத்திக் கொண்டிருந்தானோ அது நான் தான். மிகவும் எதிர்பாராத பேரழிவுகளின்போது ஏற்படும் பயங்கர நடுக்கத்தால் நான் பீடிக்கப்பட்டேன். அந்த நாயால் நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு விட்டேன், அவன் என்னைப் பிடிக்க வருகிறான். அவன் சரி, நான் தான் தவறானவன் என்பதை என் மனதின் ஆழத்தில் நான் அறிவேன் என்றாலும் இந்த உக்கிரமான தருணத்தில் எதையும் ஒத்துக் கொள்ளாமல் அனைத்தையும் மறுத்துவிட ஏற்கெனவே தீர்மானித்திருந்தேன். ஏனென்றால் ஒரு முறை அந்த நாயை நான் கொடுமைப்படுத்தி உள்ளேன்; நான் அவனுக்கு செய்தது உண்மையில் வெளியே சொல்ல முடியாத அளவு இழிவானது. உறுதியான தார்மீகக் கொள்கைகள் எதுவும் நான் கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். என்னை நானே நியாயப்படுத்திக் கொள்ள முயற்சிக்கப் போவதில்லை எனினும் இளம் வயதிலிருந்து பிழைப்பதற்காக ஓயாத போராட்டத்தில் நான் ஈடுபட வேண்டியிருந்ததால் அந்தக் குறைபாடுகள் குறித்து என்னால் சிறிதாவது விளக்க முடியும். அது படிப்படியாக எனது நன்னெறி உணர்வை மங்கச் செய்துள்ளது. எந்தவொரு கண்ணியமான மனிதனும் எப்போதும் செய்யாத செயலை செய்ய என்னை அனுமதித்துக் கொண்டேன். அல்லது அவன் செய்வானா? நம் எல்லோரிடமும் ரகசியங்கள் உள்ளன. எனது தவறுகள் ஒருபோதும் அவ்வளவு தீவிரமானவை அல்ல. நான் உண்மையான குற்றங்கள் எவையும் செய்யவில்லை. அல்லது உண்மையான கயவன் செய்வதைப் போல நான் என்ன செய்தேனோ அதை மறக்கவும் இல்லை. என்னை நானே திருத்திக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டாலும் எப்படிச் செய்வது என்று யோசிப்பதை நான் நிறுத்தவில்லை. இது தான் நான் கடைசியாக எதிர்பார்ப்பது: மனதில் ஆழமாகப் புதைக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்த ஒரு கடந்த காலத்தின் மூலம் வினோதமான முறையில் அங்கீகரிக்கப்படுவதை எதிர்கொள்வது. சில விதிவிலக்கைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன். என் நிலையிலிருந்து யார் நோக்கினும் நாய் என்பது முதலில் வெறும் நாய் தான் என்பதால் அந்த இனத்திற்குரிய தன்மையால் உந்தப்பட்டு கடைசியில் அது மறைந்து போகும் என்று நான் ஊகித்தேன். அந்த மறைவால் என் குற்றவுணர்வும் மறைந்துவிடும். என்னுடைய கீழ்த்தரமான துரோகம் அந்த நாயை ஒரே ஒரு கணம் தனித்தன்மை கொண்டதாக ஆக்கியுள்ளது. ஆனால் அந்தக் கணம் பல ஆண்டுகளாக நீடித்துள்ளது என்று நினைக்கும் போது அமானுஷ்யமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. ஆனால் இத்தோடு முடிந்தது என்று நினைக்கும் போது ஒரு எண்ணம் எழுந்தது: நீண்ட காலம் ஆகிவிட்டது. நாய்கள் அவ்வளவு காலம் உயிர் வாழ்வதில்லை. ஆண்டுகளை ஏழால் பெருக்கினால்…. இவ்வாறு மென்மேலும் அதிகமான குரைப்பொலியுடன் கலந்தபடி இந்த எண்ணங்கள் என் தலையில் ஓடிக் கொண்டிருந்தன. இல்லை, நீண்ட காலம் கடந்துவிட்டது என்பது உண்மையல்ல; கணக்கீடு செய்வதெல்லாம் என்னை நானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு வழிதான். சில தாங்க இயலாத சூழ்நிலையை சந்திக்கும்போது அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக பின்வாங்குதல் எனும் செவ்விய உளநிலை உத்தி தான் எனது கடைசி நம்பிக்கையாக இருந்தது. “இது இருக்க முடியாது, இது நடக்க இயலாதது, நான் கனவு காண்கிறேன், என் கணக்கு தவறியிருக்க வேண்டும்.” இந்த முறை வெறும் உளவியல் எதிர்வினை மட்டுமல்ல; மெய்யாலுமே நிகழ்ந்தது. என்னால் அந்த நாயைப் பார்க்க இயலவில்லை; அவன் எவ்வாறு பாவனை செய்வானோ என்பதை நினைத்து பீதியடைந்தேன். ஆனால் எதுவும் நடக்காதது போல இருப்பதற்கான முயற்சியால் நடுக்கமடைந்தேன். நான் நேராகப் பார்த்தேன். எல்லாப் பயணிகளும் இந்தப் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்க, ஓட்டுநர் கூட பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்தபடி முன்னால் அமர்ந்திருந்த பயணிகளிடம் கேலியாகப் பேசிக் கொண்டே ஓட்டினார். அவரைப் பார்த்து எனக்கு வெறுப்பாய் இருந்தது: இந்தக் கவனச் சிதறல் அவரை மெதுவாக ஓட்ட வைத்தது; இல்லாவிட்டால் இந்த நாயால் எப்படி சாலையின் இரண்டாவது சந்திப்பு வரை பேருந்தைப் பின் தொடர முடியும்? ஆனால் பின் தொடர்ந்து வருவது பெரிய விஷயமா என்ன? குரைப்பதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? அவனால் பேருந்தில் ஏற இயலாது. ஆரம்பகட்ட அதிர்ச்சிக்குப்பின் அந்தச் சூழ்நிலையை மேலும் பகுத்தறிவுடன் அலச ஆரம்பித்தேன். இந்த நாயை எனக்குத் தெரியும் என்ற விஷயத்தை மறுப்பது என நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன். நடக்கப் போவதில்லை என நினைத்தாலும் ஒரு தாக்குதல் (அவனது கடியை விட குரைப்பு மோசமாக இருக்கிறது) என்னை பாதிக்கப்பட்டவன் என்ற நிலைக்குத் தள்ளும். உடனே வேடிக்கை பார்ப்பவர்களும் தேவைப்பட்டால் காவலர்கள் கூட எனக்கு உதவி செய்ய வரக்கூடும். ஆனால் நான் அவனுக்கு வாய்ப்புக் கொடுக்கமாட்டேன். அவன் பார்வையில் இருந்து மறையும் வரை நான் பேருந்தில் இருந்து இறங்கப் போவதில்லை. அவெனிடா சான் யுவானைத் தாண்டிய பின் வளைந்தும் நெளிந்தும் செல்லும் பாதையில் ரெட்டிரோவை நோக்கி 126ம் எண் பயணித்தது. அந்த வழியை ஒரு நாயால் பின் தொடர முடியும் என்பது நினைத்துப் பார்க்கவும் இயலாத விஷயம். நான் தைரியமாக அவனைப் பார்க்க முயன்றேன். ஆனால் உடனே வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினேன். எங்கள் பார்வைகள் சந்தித்தபோது அவன் கண்களில் தெரிந்தது நான் எதிர்பார்த்த சீற்றத்திற்கு மாறாக எல்லையில்லா வேதனை தான். அந்த வேதனை மனிதர்கள் அடைவது போன்றதல்ல, ஏனெனில் அது ஒரு மனிதன் தாங்கக் கூடியதை விட கடுந்துயரமானதாக இருந்தது. நான் அவனுக்குச் செய்தது உண்மையில் அவ்வளவு கொடுமையானதா? அலசி ஆராயும் நேரம் இதுவன்று. எதுவாக இருந்தாலும் ஒரே ஒரு முடிவு தான் இருக்க முடியும். பேருந்து வேகமாகச் சென்றது. நாங்கள் இரண்டாவது சாலைச் சந்திப்பைக் கடந்தோம். அந்த நாயும் போக்குவரத்து சமிக்ஞைக்காக நின்ற ஒரு கார் முன்பு சாலையைக் கடந்தது. ஆனால் அந்தக் கார் நகர்ந்திருந்தால் அவனும் கண்ணை மூடிக் கொண்டு கடந்திருந்தால், அவன் கொல்லப்பட்டிருப்பான் என்று நான் நினைத்ததை ஒத்துக் கொள்ள எனக்கு அவமானமாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நாஜி வதைமுகாமில் பார்த்த காப்போ-வை (தலைமைக் கைதி, மேற்பார்வையாளன்) நியூயார்க் நகரில் அடையாளம் கண்டு கொண்ட ஒரு யூதர் அவனைத் துரத்திக் கொண்டு சென்றபோது கார் மோதி இறந்துவிடுவதாக ஒரு திரைப்படத்தில் வரும். அதை நினைத்தபோது வழக்கமாக முன் நிகழ்வுகள் அளிக்கும் ஆறுதலை விட மன உளைச்சலையே கொடுத்தது. ஏனென்றால் அது புனைவில் நிகழ்ந்தது. ஆனால் என் சூழ்நிலையின் தன்மை யதார்த்தமாக இருந்தது. நான் அந்த நாயைப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அவனுடைய குறைந்த குரைப்பொலியானது அவன் பின்தங்கிவிட்டதைக் குறிப்புணர்த்தியது. தனது கேலிப்பேச்சால் சலிப்புற்ற ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டத் துவங்கினார். நான் தைரியமாக சுற்றுமுற்றும் பார்த்தேன். அதில் எந்த அபாயமும் இல்லை ஏனெனில் பேருந்தில் இருந்த அனைவரும் அவ்வாறே பார்த்தனர். நானும் அவ்வாறு பார்க்கவில்லை எனில் அது என்னை சந்தேகத்திற்கு ஆளாக்கிவிடும். இதுவே நான் அவனைப் பார்க்கும் கடைசிப் பார்வை என நினைத்தேன். இது போன்ற நேரடி சந்திப்பு மீண்டும் நடக்கப் போவதில்லை. ஆம், அவன் நிச்சயமாக பின்னால் சென்றுவிட்டான். அவன் சிறியதாகவும், பாவப்பட்டவனாகவும் கேலிக்குரியவனாகவும் தெரிந்தான். மற்ற பயணிகள் சிரிக்கத் தொடங்கினர். சாவின் விளிம்பில் இருக்கும் வயதான மெலிந்த நாய் அவன். அந்தக் குரைப்பொலியின் பின்புலமாக பல ஆண்டுகளாக இருந்த வெறுப்பும் கசப்பும் அதன் தடயத்தை விட்டுச் சென்றன. அந்த ஓட்டம் அவனைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால் அந்த சந்தர்ப்பம் அவனுக்கு வாய்ப்பதற்காக அவன் விட்டுக் கொடுக்காமல் காத்திருந்தான். அவன் தோல்வியைத் தழுவுவான் என அவனுக்குத் தெரிந்திருந்தாலும் கூட குரைப்பதும் ஓடுவதுமாக, ஓடுவதும் குரைப்பதுமாக இருந்தான். ஒருவேளை, தொலைவில் செல்லும் பேருந்து அவன் கண்ணிலிருந்து மறைந்தாலும் அவன் தொடர்ந்து ஓடுவதும் குரைப்பதுமாகவே இருப்பான். ஏனெனில் அதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய இயலாது. தொலைதூர அருவமான நிலவெளியில் அந்த நாயின் உருவம் எனக்குப் புலப்பட்டபோது துயரமாகவும், அதே வேளையில் அமைதியாகவும் ஏறக்குறைய அழகியல் உணர்ச்சி மிகுந்தும் நான் அந்த நாயைத் தொலைவில் இருந்து கற்பனையில் பார்ப்பது போலவே அந்தத் துயரம் என்னைத் தொலைவில் இருந்து பார்ப்பது போன்றும் இருந்தது. கடந்த காலம் திரும்பாது என ஏன் கூறுகிறார்கள்? இவை எல்லாம் மிக விரைவாக நடந்தேறியவை. எனக்கு நினைத்துப் பார்க்கவும் நேரமில்லை. நான் எப்போதும் நிகழ் கணத்திலேயே வாழ்ந்தவன். ஏனெனில் அக்கணத்தை உள்வாங்கி அதற்கு எதிர்வினையாற்றுவதற்கே எனது உடல் மற்றும் உளச் சக்தியை பயன்படுத்திக் கொண்டுள்ளது. அவ்வப்போது திடீரென எழும் நிகழ்வையே என்னால் சமாளிக்க இயலும். ஏராளமான விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பதாக நான் உணர்ந்ததால் அவற்றை எதிர்கொள்ள வீர சாகச முயற்சி செய்வதுடன் தற்கணத்தை சமாளிக்க எனக்கு இருக்கும் ஆற்றலை விட மேலான சக்தியை வரவழைக்க வேண்டியிருந்தது. அதனால் தான் எப்போதெல்லாம் மனச்சுமையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தாலும் அறநெறி உணர்வு பற்றி எல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. என் வாழ்க்கைக்கு கட்டாயத் தேவையில்லாத எது ஒன்றிலிருந்தும் நான் விடுபட வேண்டியிருந்தது. எப்பாடுபட்டாவது எனக்கான அந்தரங்கத்தை, அமைதியை நான் பாதுகாக்க வேண்டியிருந்தது. இது எப்படி மற்றவர்களைப் பாதிக்கும் என்பது பற்றியெல்லாம் எனக்குப் பிரச்சினை இல்லை. ஏனெனில் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் உடனடியானவை அல்ல என்பதால் என்னால் அதைக் காண இயலவில்லை. மீண்டும் ஒருமுறை நிகழ்கணமானது தொல்லை தரும் விருந்தினரிடமிருந்து என்னைக் காப்பாற்றியது. இந்த நிகழ்வு கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வைக் கொடுத்தது. ஒருபுறம் நூலிழையில் தப்பித்தேன் என்ற ஆசுவாசம், மறுபுறம் கழிவிரக்கம். ஒரு நாயாய் இருப்பது எவ்வளவு துயரமானது. ஆறாத சினத்துடன் மரணத்தின் அருகே வாழ வேண்டும். விதியின் கைகளில் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு எப்போதோ தனக்கு ஏற்படுத்தப்பட்ட ஆறாத காயத்தைக் காட்டும் அந்த நாயாக இருப்பது இன்னும் துயரம் மிக்கது. ஓட்டமும் குரைப்பதுமாக தொடர் போராட்டத்தில் இருக்க, மரித்த உடலிலிருந்து உயிர்த்தெழுந்ததை போலவோ அல்லது உயிர் கொண்ட உடலில் இருந்து வரும் வலியைப் போலவோ பியூனெஸ் ஐரஸின் ஞாயிற்றுக்கிழமை வெயிலில் தெரிந்த அந்நாயின் நிழலுருவம் ஒரு பேயைப் போல நடமாடியபடி என்னவோ கேட்பது போலிருந்தது. என்ன? பரிகாரமா? மன்னிப்பா? தட்டிக் கொடுத்தலா? அவனுக்கு வேறு என்ன வேண்டி இருந்திருக்கும்? பழி வாங்குதலாக இருக்காது, ஏனெனில் தகர்க்க முடியாத மனிதர்களின் உலகத்தை எதிர்க்கும் வல்லமையற்றவன் என அவனது அனுபவத்தில் உணர்ந்திருப்பான். அவனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மட்டுமே இயலும். அதைச் செய்துவிட்டான். அவனால் சாதிக்க முடிந்தது எல்லாம் அவனது வலிமையற்ற வயோதிக இதயத்தை வருத்திக் கொள்வதுதான். அமைதியான, உலோகச் சத்தமிட்டபடி ஓடும் பேருந்தின் சன்னல் கண்ணாடியின் வழியே பார்க்கும் ஒரு முகத்தால் அவன் தோற்கடிக்கப்பட்டுள்ளான். அவன் என்னை எப்படி அடையாளம் கண்டுகொண்டான்? நானும் நிறைய மாறியுள்ளேன். என்னைப் பற்றிய அவனது ஞாபகம் மிகத் தெளிவாக இருந்தது. அநேகமாக ஒரு கணம் கூட குன்றாமல் இத்தனை வருடங்களாக அவன் நினைவில் இருந்திருக்கிறது. ஒரு நாயின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனது உடல் வாசத்தை அவன் கண்டு கொண்டுவிட்டான் என்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் ஒன்றுமில்லை. விலங்குகளின் மோப்ப சக்தி பற்றி அற்புதமான கதைகள் உள்ளன. உதாரணமாக, ஆயிரக்கணக்கான இடையீட்டு நறுமணங்களுக்கிடையே ஓர் ஆண் பட்டாம்பூச்சியானது பல மைல்களுக்கு அப்பால் உள்ள பெண் பட்டாம்பூச்சியை முகர்ந்துவிடுகிறது. நான் அறிவுப்பூர்வமாக ஆராய ஆரம்பித்தேன். அந்தக் குரைப்பு வெவ்வேறு சுருதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் வேறொரு பரிமாணத்தில் இருந்து எழும் எதிரொலி போலிருந்தது. திடீரென என் உடலில் ஏற்பட்ட ஓர் உள்ளுணர்வு என் சிந்தனைகளில் இருந்து என்னைக் உலுக்கித் தள்ளியது. என் வெற்றியை அவசரகதியில் அறிவிப்பதாக உணர்ந்தேன். வேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்து இப்போது மீண்டும் மெதுவாகச் சென்றது. அடுத்த பேருந்து நிறுத்தம் தென்படும் போது ஓட்டுநர்கள் அவ்வாறுதான் செய்வார்கள். பேருந்தை வேகமெடுக்க வைத்து தூரத்தை கண்களால் அளந்தபின், நிறுத்தம் வரை நழுவிச் செல்லவிடுவார்கள். ஆம், அது வேகம் குறைந்தபின் நடைபாதையோரம் நின்றது. நான் நேராக அமர்ந்து வெளியே பார்த்தேன். ஒரு வயதான பெண்மணியும் ஒரு குழந்தையும் பேருந்தில் ஏறக் காத்திருந்தார்கள். குரைப்பொலி மீண்டும் சத்தமாகக் கேட்கத் தொடங்கியது. அந்த நாய் ஓடிக் கொண்டே இருந்திருக்க முடியுமா? அவன் கைவிட்டிருக்கமாட்டானா? நான் பார்க்கவில்லை. ஆனால் அவன் மிக நெருக்கமாக வந்திருக்க வேண்டும். பேருந்து ஏற்கெனவே நின்றுவிட்டது. குழந்தை சட்டென ஏறிவிட்டது. ஆனால் அந்தப் பெண் மெல்ல ஏறினார். அவரைப் போன்ற வயதானவருக்குப் பேருந்தின் உயரமான படிக்கட்டு ஏறக் கடினமாக இருந்தது. அடக் கிழவி சீக்கிரம் என்று நான் மௌனமாகச் சத்தமிட்டுக் கொண்டே அவர் ஏறுவதை பதைபதைப்புடன் கவனித்தேன். வழக்கமாக நான் இப்படி பேசுபவனோ நினைப்பவனோ கிடையாது. இப்போது நான் மன அழுத்தத்தில் இருப்பதால் இவ்வாறு நினைத்தாலும் சட்டென்று அதிலிருந்து விடுபட்டேன். உண்மையில் அங்கே கவலைப்பட ஏதுமில்லை. ஒருவேளை அந்த நாய் தன் தோல்வியிலிருந்து மீண்டாலும் அவன் மீண்டும் தோற்கக் கூடும். நிலைமை மோசமடைந்தால் அவன் என் சன்னலருகே வந்து நின்று குரைத்தால் அதைக் காணும் பயணிகள் அந்த நாய் துரத்தி வந்த ஆள் நான் தான் என நினைப்பார்கள். ஆனால் நான் செய்ய வேண்டியதெல்லாம் அந்த விலங்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவதுதான். அப்படிச் சொன்னால் யாரும் என்னுடன் முரண்படமாட்டார்கள். குரைத்தலை விட மேன்மையான சொற்களுக்கு நான் நன்றி கூறினேன். அந்த வயதான பெண்மணி தனது அடுத்த காலையும் பேருந்தின் படிக்கட்டில் எடுத்து வைத்தபோது வெடித்தெழும் குரைப்பொலி என் காதுகளைச் செவிடாக்கியது. நான் வெளியே பார்த்தேன். மென்மயிர் பறக்க இரைச்சலுடன் ஒரு துப்பாக்கி குண்டைப் போல அவன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய சக்தி நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. எல்லா வயதான நாய்களைப் போல அவனுக்கும் மூட்டுவலி இருந்திருக்க வேண்டும். அநேகமாக அவனது கடைசிப் போராட்டத்தை அவன் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் என்னைக் கண்டுபிடித்துள்ளதால் அவன் தனது சினத்தை வெளிப்படுத்தி என்னைப் பழி தீர்ப்பதற்கும் சாத்தியம் உள்ளது என்பதை மறுப்பானேன்? முதலில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது விசித்திரமாக உள்ளது என்பதை மட்டும் நான் அறிவேன். அவன் என் சன்னலருகே நிற்காமல் ஓடிச் சென்று கொண்டிருந்தான் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். அவன் என்ன செய்கிறான்? ஒருவேளை…? அவன் ஏற்கெனவே பேருந்தின் கதவின் அருகே வந்து, விலாங்கு மீனைப் போல வளைந்து நெளிந்து உள்ளே ஏற முயன்றான். அவன் பேருந்தில் ஏறியே விட்டான் ! அந்த வயதான பெண்ணைத் தள்ளிவிடாமல் – அவர் தன் கால்களில் ஏதோ தூரிகை தடவுவது போல உணர்ந்தார்- அவன் மீண்டும் திரும்பி, மெதுவாக குரைத்துக் கொண்டே நடைவழியில் வந்தான். பயணிகளோ ஓட்டுநரோ எதிர்வினையாற்ற சிறிதும் நேரமில்லை; அவர்களது தொண்டையிலிருந்து எழுந்த கூக்குரல் இன்னும் வெளியே வரவில்லை. நான் அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும்: பயப்படாதீர்கள், அவன் உங்களைத் தேடி வரவில்லை, என்னைத் தேடி வந்துள்ளான்… ஆனால் நானும் அச்சத்தில் உறைந்திருந்ததால் எனக்கும் எதிர்வினையாற்ற நேரமில்லை. அவன் என்னை நோக்கி ஓடி வருவதைப் பார்க்கவே எனக்கு நேரமிருந்தது. வேறு எதையும் என்னால் காண முடியவில்லை. நெருக்கத்தில் அவன் வித்தியாசமாகத் தெரிந்தான். இதற்கு முன் பேருந்தின் சன்னல் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தபோது என் நினைவுகளாலும் நான் அவனுக்குச் செய்த காயங்களின் என் பார்வை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் பேருந்தின் உள்ளே கைக்கெட்டும் தூரத்தில் அவனது உண்மையான முகத்தை நான் கண்டேன். அவன் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தான். என்னைவிட இளமையாக துடிப்பானவனாக இருந்தான் (குளியல் தொட்டியிலிருந்து தண்ணீர் ஒழுகுவதைப் போல இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கை என்னிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது) சற்றும் குறையாத அவனது குரைப்பொலி பேருந்தில் எதிரொலித்துக் கொண்டிருக்க, தகதகவென மின்னும் வெண்பற்கள் கொண்ட அவனது தாடைகள் என் சதையை ஏற்கெனவே நெருங்கியிருக்க, ஒளிரும் அவனது கண்கள் என் கண்களை உற்று நோக்குவதை ஒரு கணம் கூட நிறுத்தவில்லை.
000
The Musical Brain and other Stories என்ற தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை.
நன்றி: lithub.com
செசார் ஐரா (César Aira) (23.02.1949): ஸ்பானிய மொழி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளுமை. அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பேராசிரியர் ஆவார். பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ரொசாரியோ பல்கலைக்கழகங்களில் (University of Rosario) இலக்கியம் கற்பித்துள்ளார். சமகால லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் எல்லைகளை உடைத்தெறிந்த ஒரு நபராக கருதப்படுகிறார். 100-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது புத்தகங்கள் பெரும்பாலும் அளவில் சிறியவை, ஆனால் உள்ளடக்கத்தில் மிகவும் அடர்த்தியானவை.
அவர் தான் எழுதியதை ஒருபோதும் மறுபரிசீலனை (revise) செய்வதில்லை அல்லது திருத்துவதில்லை. முதல் சொற்றொடரை எழுத ஆரம்பித்தவுடன், கதை எங்கு செல்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து புதிய கற்பனைகளுடன் முன்னோக்கிச் செல்வதே இவரது உத்தி. இதன் விளைவாக, கதைகள் திடீர் திசைகளை எடுத்து, புதிராகவும், வினோதமாகவும் முடிவடைகின்றன. இதை அவர் முன்னோக்கிப் பறத்தல் முறை என்கிறார். ஆனால் இதுவே இவரை விமர்சனத்திற்கும் உள்ளாக்குகிறது. அவரது எழுத்துக்கள் சாகசத்தையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டவை. சர்ரியலிஸம், அறிவியல் புனைவு, துப்பறிதல், வரலாற்றுப் புனைவு ஆகியவற்றை தன் எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
போர்ஹேஸின் உண்மையான இலக்கிய வாரிசு என்று அழைக்கப்படும் இவரை, ஸ்பானிய மொழியில் எழுதும் மூன்று அல்லது நான்கு சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று ரொபர்ட்டோ பொலன்யோ புகழ்ந்துள்ளார்.
ஸ்பானிய மொழி பேசும் உலகின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பார்மென்டோர் பரிசினை 2021ல் பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு மேன் புக்கர் இறுதிப் பட்டியல், 2016ஆம் ஆண்டு நியோஸ்டாட் சர்வதேச இலக்கியப் பரிசு இறுதிப் பட்டியலில் இடம் பெற்றவர்.

க. ரகுநாதன்
க. ரகுநாதன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசுப் பணியாளராக உள்ளார். பல்வேறு சிற்றிதழ் மற்றும் இணைய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்பில் புனைவு மற்றும் அபுனைவுகள் வெளியாகி உள்ளன. காத்திரமான அயல்மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.