நகரத்தில் ஒரு காலம் : குமாரநந்தன்

சிறுகதை

நான் இந்த நகருக்கு வரும்போது, என்னிடம் ஏதோ ஒன்று சேதமாகிவிட்டது என்கிற உணர்விலிருந்து மீள முடியாதவனாய் இருந்தேன். ஏற்கனவே இந்த உலகின் மீது போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. போர் துவங்கிய காலத்தில்தான் எனக்கு இந்த உணர்வு ஏற்பட்டதா? அல்லது அதற்கு முன்பிருந்தே நான் இப்படி ஆகிவிட்டேனா எனத் தெரியவில்லை. ஏனென்றால் போர் துவங்கியும், நான் அந்த மோசமான உணர்வுக்கு ஆட்பட்டும் நீண்ட நாட்கள் ஆகின்றன.

நான் இதுவரை எத்தனை கதைகள் எழுதியிருக்கிறேன் என்ற எண்ணிக்கையை நான் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஏறக்குறைய நூறு கதைகள் எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன். சில வருடங்களாக நான் கதை எதுவும் எழுதவில்லை. அதனால் தான் என்னுள் அந்த சேத உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இப்படியான எண்ணம் தோன்றும் முன் எனக்குள் எப்போதும் கதைகள் கொப்பளித்துக் கொண்டே இருந்தன. அந்த தளதளப்பு எப்படி அடங்கிப் போனது. ஏன் அடங்கிப் போனது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த சமயத்தில் நான் ஆதிகாலத்தில் மனிதன் சமுதாயமாக உருவாகி வந்த நிலையில் என்னென்ன பிரச்னைகளை சந்தித்திருக்கக் கூடும் என்பதைப் பற்றியும், இன்னும் சில நூறு ஆண்டுகள் கடந்து பின் மனிதன் சந்திக்க நேரும் பிரச்னைகளையும் கூட எழுதியிருக்கிறேன். இப்பொழுதும் அந்தக் கதைகள் வித்தியாசமாக இருப்பதாக யாராவது ஒரு வாசகர் என்னைத் தொடர்பு கொள்ளும்போது, கூறுகிறார்.

நான் ஏற்கனவே வேலை பார்த்த வேற்று மொழி பேசும் நகரத்தைப் போலவே இந்த நகரமும் அதிவேகமாக சுழன்றபடி இருக்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் பல லட்சம் பேர் உள்ளே வருகிறார்கள். பல லட்சம் பேர் வெளியேறுகிறார்கள். சிலர் என்னைப் போல உள் மையத்துக்குள் இழுக்கப்பட்டுவிடுகிறார்கள். நான் வருமான வரித்துறையில் பணிபுரியும் ஒரு அதிகாரி. ஆனால் என் அதிகார இடத்திற்கும் என் கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் வாகனத்தில் அமர்ந்தபடி, நகரச் சாலையின் ஊடே செல்லும்போது, கண்ணில் படும் பல்லாயிரம் மக்களின் வெவ்வேறுவிதமான வாழ்க்கையை, துன்பத்தை, மகிழ்ச்சியை அந்த விநாடியே நான் புனைந்து விடுவேன்.

அவற்றை உட்கார்ந்து எழுதும்போது, அவையெல்லாம் சித்தரிக்கப்பட்டவையாக எப்படி மாறிவிடுகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதர்கள் மீது என்னுடைய வழக்கமான கற்பனையைத் திணிக்கிறேனா? அதுதான் என் பிரச்னையா?

போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதைப் பாத்தால், மனிதன் நாகரிகமடைந்துவிட்டான் என்பது ஒரு கற்பிதம்தான் எனத் தோன்றுகிறது. போரின் எதிரொலிகள் நகரத்திலேயும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எரிகுண்டுகள் விழக் கூடும் என எச்சரிக்கும் சைரன் ஒலிகள் எங்கோ தொலைவில் மெலிதாகக் கேட்பதைப் போல அடிக்கடி பிரமை ஏற்படுகிறது. எரிபொருள்கள் தீர்ந்துவருகின்றன. அவற்றை தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டிருக்கும் மக்கள் நாட்களை திகிலுடன் எதிர்கொள்கிறார்கள்; அதையே சிலர் பிளாக் ஹியூமராக வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர். அவற்றைப் பார்க்கும்போது போர் என்பது அவ்வளவு தீவிரமான விஷயம் இல்லையோ என்று கூடத் தோன்றிவிடுகிறது.

என்னால் எழுத முடியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும். இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் இயந்திரகதிக்கு மாறிக் கொண்டிருப்பதால் இருக்குமா? அல்லது இந்த அரசு வேலையை ஒரு இயந்திரம் போல செய்து பழகி நானே ஒரு இயந்திரமாய் மாறிவிட்டேனா? என்னைச் சுற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு இயந்திரத்தனமாய் நடந்து கொள்கிறார்கள் என்பதை தினம் தினம் பார்த்து வரும் நானும் அப்படித்தான் மாறிவிட்டேனா? ஏன் இருக்கக் கூடாது? தங்களுடைய நடவடிக்கைகள் இயந்திரத்தனமாய் மாறிவிட்டன என்று யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? அல்லது யார் தான் உணர்ந்து கொள்ள முடியும்? என்னால் உணர்ந்து கொள்ள முடியாதா? நான் ஒரு எழுத்தாளன் இல்லையா? ஆனால் இப்போது இல்லையே?

மனதின் இந்த உரையாடலுக்குப் பிறகு நான் திகைத்துப் போய்விட்டேன். ஆனால் ஒருவேளை என்னுடைய செயற்கைத் தனத்தை நான் உணர்ந்து கொண்டாலும் அதை என்னால் தவிர்க்க முடியுமா? நான் ஒரு அரசு அதிகாரி அல்லவா? என் மனம் மென்மையாய் சிரித்துக் கொண்டது.

ஒருவேளை ரைட்டர் பிளாக் என்பதை எப்போது நான் கேள்விப்பட்டேனோ அதன் பிறகு அது எனக்கு ஏற்பட்டுவிட்டதாய் உருவகித்துக் கொண்டேனா? அந்த உருவகத்திலிருந்து எப்படி வெளியேறுவது என எனக்குத் தெரியவில்லையா?

இப்படித்தான் நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. என்னைச் சுற்றிலும் உலகம் உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருப்பதை நான் ஒவ்வொரு விநாடியும் உணர்கிறேன். அதை மனதில் தேக்கி வைத்துக் கொள்ள முயல்கிறேன். அதை என் எழுத்துகளில் அப்படியே பிரதிபலிக்க முடியும் என்று நம்புகிறேன். அந்த உற்சாகத்தோடு மடிக்கணினியின் முன் அமர்கிறேன். ஆனால், நான் டைப் செய்ய ஆரம்பித்ததும் வார்த்தைகள் உயிரோட்டத்தை இழந்து வெற்றுத்தனமாக திரையில் ஒளிர்கின்றன. நான் நினைக்கும் அர்த்தம் அந்த வாக்கியங்களில் இருந்து வடிந்து போய் வெறும் சக்கையாய் தட்டையாய் பரவிக் கொண்டு செல்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதைத் தொடர முடியாமல் கைகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. டைப் செய்தவற்றை அழித்துவிட்டு எழுந்துவிடுகிறேன். எழுதியவற்றின் நினைவுகளோடே இனி வாழ்ந்து விட முடியாதா என்ன? விநாடி நேரம் இப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றியதும் சுரீர் என்று நிலைகுலைந்துவிடும் அளவுக்கு எங்கோ தைத்தது. அப்படி வாழ்ந்துவிடுவேனா? அந்த வாழ்க்கையை என்னால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

மீட்பு விமானங்கள் நகரத்திலிருந்து எல்லா திசைகளிலும் செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து மக்கள் விமான நிலையங்களில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றனர். எரிபொருளுக்கு மட்டும் இல்லாமல் உணவுப் பொருட்களுக்கு வாகனங்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படுகிறது. இவ்வளவுக்கு இடையேயும் கேளிக்கைகள் வேடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. ஒரே நாளில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துவிட்டதாக போர் செய்திக்குப் பின் வரும் செய்திகளில் சொல்கின்றனர். விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. மக்கள் ஒரே சமயத்தில் நேற்று நடந்த போரைப் பற்றியும் கிரிக்கெட் பற்றியும் பேசுகிறார்கள். போர் நடக்கும் நாடுகளில் இருக்கும் பார்கள் தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்குமா? அங்கேயும் ஒரு சில இடங்களில் அவை திறந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். போர் நாடுகளில் இருந்து திரும்பி வரும் யாரிடமாவது கேட்டுத்தான் இதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இதைப்பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

இன்று காலை எழும்போதே ஊரில் அப்பா இறந்துவிட்டதாக போன் வந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அவர் ஆரோக்கியமாக திடகாத்திரமாகத்ததான் இருந்தார். மனைவியிடமும் மகளிடமும் விஷயத்தைச் சொல்லி அவர்களோடு ஊருக்குக் கிளம்பத் தயாராகிறேன். ஆனால் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கும் மகளை எப்படி அழைத்துப் போக முடியும்? என என் மனைவி கேட்ட போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு தேர்வுதானே வந்து எழுதிக் கொள்ளலாம் என்கிறேன். ஆனால் ஒரு நாளில் எப்படி வர முடியும்? எல்லாத் தேர்வுகளையும் தவிர்க்கும்படி ஆகிவிடும் என்கிறாள். சரி அவளை மட்டும் இங்கே யாருடைய வீடடிலாவது விட்டுவிட்டுப் போகலாம் என்கிறேன். இந்த வயதில் ஒரு பெண்ணை யாராவது ஒருவர் வீட்டில் விட்டுவிட்டுப் போக முடியுமா? என்கிறாள். சரி என்னதான் செய்யலாம் என்கிறேன். அவள் “நீங்க மட்டும் போய்ட்டு வாங்க” என்கிறாள்.

எனக்குத் தெரியும் அவள் அவளுடைய அப்பா இறந்திருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பாள். நான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி ஊருக்குப் போகிறேன்.

ஒருவேளை நானும் வர முடியாத சூழல் கூட ஏற்பட்டிருக்குமா? எரிபொருள் விநியோகம் முற்றிலும் இல்லாமல் போய் இருந்தால் பலநுறு மைல்களுக்கு அப்பால் இருந்து நான் மட்டும் எப்படி வர முடியும்? நினைக்கும் போதே என்னால் வெடித்து வரும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது போன்ற சூழ்நிலையின் போது கூட அதிர்ஷ்டம் இருந்தால் தான் எதுவும் நடக்கும். இப்போது கூட இந்த கார் ஏதாவது விபத்துக்குள்ளாகி எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் எல்லாம் வேறு விதமாக திரும்பிவிடும். ஒவ்வொரு விநாடியும் நல்லபடியாய் கடந்து செல்வதே ஒரு அதிர்ஷ்டம் தான் போல. கற்பனை செய்து பார்க்கவே பெரும் சித்ரவதையாக இருக்கிறது. நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன். என்னுள் இருக்கும் எழுத்தாளன் தான் எல்லா நேரத்திலும் எப்படியெல்லாமோ யோசித்து என்னை இப்படி சித்ரவதைக்கு உள்ளாக்குகிறானா?

வீட்டுக்குப் போகும்போது நான் கொஞ்சம் இயல்பாக ஆகிவிட்டதை நினைத்து எனக்கே வேதனையாக இருந்தது. இந்தக் குறுகிய நேரத்துக்குள் எப்படி அப்பாவின் இழப்பை ஏற்றுக் கொண்டேன்? அம்மா பெரிய அழுகையோடு என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டார். “சந்துரு அப்பா நமமள விட்டுப் போயிட்டாருடா”என்று அலறினார். கொஞ்ச நேரம் அழுதுவிட்டு “எங்க சுலோசனா பவித்ரா எல்லாம் வரலையா?” என்றார். அவர் குரல் இயல்புக்குத் திரும்பி இருந்தது.

“இல்லம்மா பவித்ராவுக்கு பரீட்ச”

“ஆமாம் பத்தாவது பரீட்ச ஆரம்பிச்சிடுச்சி இல்ல?” என்றார். அதற்கு மேல் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை.

மறுநாளே காரியம் வைத்திருந்தார்கள். காலம் இல்லாத காலத்தில் புயல் உருவாகி, மழை கொட்டத் துவங்கியது. நகரத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் மேக மூட்டமும் லேசான மழையுமாக சூழல் ரம்யமாக இருந்தது. ஆனால் நகரில் மழை விடாமல் கொட்டிக் கொண்டே இருப்பதாக சுலோசனா போன் செய்து சொன்னாள். “நாளைக்கு நடக்கும் பரிட்சைக்கு எப்படிப் போறதுன்னே தெரியல. ரோடெல்லாம் தண்ணி இப்பவே வெள்ளமா ஓடுது. இன்னும் நாளைக்கும் மழை இருக்கும்னு சொல்றாங்க” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஸ்கூல் பக்கத்தில தானே எப்படியாவது கொஞ்சம் கூட்டிகிட்டுப் போயிடு”{ என்றேன்.

காரியம் முடிந்து மறுநாள் சில சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பத் தயாரானேன். அம்மா “ஏம்ப்பா வெளிநாட்லயெல்லாம் ஒரே சண்டையா இருக்காமே? இங்க கூட டவுன் மேலயெல்லாம் குண்டு போட்ருவாங்கன்னு பேசிக்கிறாங்க. நெசமாப்பா?” என்றாள்.

“நான் அப்படியெல்லாம் இல்லம்மா இங்கயெல்லாம் குண்டு போட மாட்டாங்க.” என்றேன். நான் போன பிறகு அம்மா இங்கே தனியாகத்தானே இருக்க வேண்டும் என யோசித்தவனாய், “இங்க என்ன பண்ணப் போற எங்கூட வந்துரும்மா” என்றேன். “வேணாம்பா இங்க உங்க அப்பா இருந்த இந்த வீட்லயே இன்னும் கொஞ்சநாளைக்கி இருக்கறேன்” என்றார்.” ஏம்மா டவுன்ல குண்டு போட்ருவாங்கன்னு பயப்படறியா?” “இனிமே நான் பயந்திருந்து என்னத்த சாதிக்கப் போறேன்பா. அப்படியெல்லாம் இல்ல. ஏம்பா நீயும் இங்கியே வந்துடேன். அந்த வேலைய இங்கிருந்தே பாக்க முடியாதா?” அப்படியெல்லாம் பாக்க முடியாதும்மா. சரி நான் ஒருநாளைக்கு சுலோசனாவையும் பவித்ராவையும் கூட்டிகிட்டு வர்றேன்” என்று கிளம்பினேன்.

நகரத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் தேங்கி இருந்தது. வீட்டிலும் கார் நிறுத்தும் இடம் வரை தண்ணீர் இன்னும் தேங்கி இருந்தது. சுலோசனா அப்பாவோட காரியமெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? என்றாள். நான் அதைப் பற்றி சுருக்கமாக சொன்னேன். அவள் மேற்கொண்டு அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. அதற்கு மேல் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லையா? அல்லது மழையின் பாதிப்புகள் அவள் மனதைவிட்டு நீங்காததுதான் காரணமா தெரியவில்லை. நாங்கள் ஏற்கனவே இருந்த நகரத்தில் இப்படியெல்லாம் மழை பெய்ததில்லை. சுலோசனாவின் ஊரும் கடல் பகுதியில் இருந்து வெகு தூரத்தில் இருந்ததால் இப்படிப் பெய்யும் மழையை அவள் நேரில் பார்த்ததில்லை. மழை எப்படிப் பெய்து கொண்டே இருந்தது. பவித்ராவும் இவளும் எப்படிப் பயந்தார்கள் மறுநாள் கொட்டும் மழையில் பள்ளிக்குப் போகும் சாகசப் பயணத்தை இருவரும் எப்படி மேற்கொண்டார்கள் என்பதை மணிக்கணக்காக சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய பேச்சின் உள்ளோட்டமாக உங்களுக்கென்ன நீங்க இதுலயெல்லாம் சிக்காம ஊருக்குப் போயிட்டீங்க என்ற தொனி மறைந்திருப்பதைப் போலத் தோன்றியது. நான் ஒன்னும் டூர் போகல அப்பா இறந்ததுக்குப் போயிருந்தேன். என்கிற பதிலை தொடர்ந்து கண்கள் வழியே சொல்லிக் கொண்டே அவள் சொல்வதை கவனித்தபடி இருந்தேன்.

போர் முடிவுக்கு வருவதைப் போலத் தெரியவில்லை. நகரங்களின் இடிபாடுகளை டிவியில் தினமும் காட்டுகிறார்கள். பள்ளிகளில், மருத்துவமனைகளில் கூட தாக்குதல்கள் நடக்கின்றன. எண்ணெய் கிணறுகள் பற்றி எறிகின்றன. இதெல்லாம் சரியாகி உலகம் அமைதியாக இயங்குமா? அல்லது போரும் சகஜமாகிவிடுமா? அப்படி சகஜமாகிவிட்டால் உலகம் அழிவு திசையில் போய்விடாதா? அப்படி திசைமாறும்போது எல்லோரும் சட்டென நிறுத்திவிடுவார்கள். பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவதாக சொல்வார்கள். சமாதானம் என்பார்கள். அமைதி என்பார்கள். ஆனால் இப்போதே இதைப் பற்றி சிந்திக்க இந்தத் தலைவர்களை அதிபர்களை தடுத்துக் கொண்டிருப்பது எது?

சுற்றியுள்ள அண்டை நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. எல்லா பெட்ரோல் நிலையங்கள் முன்பும் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இனி இங்கேயும் இதுதான் நிலைமை என மக்களிடையே பேச்சு பரவுகிறது . எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிக்கை வெளியிடுகிறது. ஆனால் அதெல்லாம் மக்களைக் கலவரப்படுத்த வேண்டாம் என்பதற்காக அரசு செய்யும் உத்தி என்றும் உண்மையில் எரிபொருள் தீர்ந்துகொண்டு வருவதாகவும் வலைப் பதிவுகளில் பாய்ந்து செல்லும் செய்திகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. எரிபொருள் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது.

எழுதுவதைப் பற்றி சிந்திக்கவே எண்ணால் முடியவில்லை. இப்படியான உலக இருப்பின் நடுவே நான் கதைகள் எழுதிக் கொண்டிருப்பது சரிதானா? என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். நம்மைவிட மேம்பட்ட நிலையில் உள்ளள ஒரு வேற்று கிரகத்தில் நாடுகளுக்கிடையே மூளும் போரினால் அந்த கிரகமே எப்படி அழிந்தது என உருவகமாய் ஒரு நாவல் எழுதலாமா என யோசிக்கிறேன். ஆனால் வேற்று கிரகம் அதில் போர் என்று போகும்போதே வாசகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் அல்லவா? கண்டுபிடிக்கட்டுமே அதையும் மீறி நாவலை எப்படி சுவாரஸ்யமாக கொண்டு போக முடியும் என்பதை முயற்சிக்க வேண்டும்.

நேற்று அலுவலகம் விட்டு வரும்போது, தெரியாத எண்ணில் இருந்து போன் வந்தது. நான் டைரக்டர் சும்சுதீன் என்று அறிமுகம் செய்து கொண்டார். சும்சுதீனை நான் அறிவேன். அவர் இரண்டு படங்கள் இயக்கி இருக்கிறார். இரண்டுமே பரவலாக கவனிக்கப்பட்டவை. அவர் அடுத்து என்னுடைய கதை ஒன்றை படமாக எடுக்க முடிவு செய்துள்ளாதாக சொன்னார்.

கண்டிப்பாக செய்யலாம். நீங்கள் என்னுடைய கதையை படமாக எடுக்க முடிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றேன். உண்மையாகவே மகிழ்ச்சியடைந்தேன். அது என்னுடைய பேச்சிலும் வெளிப்பட்டது.

வீட்டுக்கு வந்தபின், ஒரு கதை படமாக மாறினால் அது சினிமாவாக ஒன்றாகவும், கதையாக ஒன்றாகவும் இரட்டைப் பிறவி அடைந்துவிடுமா? என்று குழப்பமாய் இருந்தது. ஆனால் உலகத்தில் எழுதப்படும் எல்லாப் புகழ்பெற்ற கதைகளும் அல்லது புகழ்பெறாத கதைகளும் சினிமாவாக உருமாறிக் கொண்டே தானே இருக்கின்றன. நானும் கூட சில கதைகள் திரண்டு வரும்போது அதை மனத்திரையில் ஒரு சினிமாவைப் போல ஓடுவதைப் பார்த்திருக்கிறேனே? அப்படியென்றால் ஒவ்வொரு கதையும் சினிமாவாக மாறக் காத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா? நீ ஒரு தீவிர இலக்கியவாதி என்கிற தர்க்கத்தை என்னிடம் நிறுவ வேண்டுமா? உன் கதை படமாவதால் இப்போது என்ன பிரச்னையாகி விடும் என்று நினைக்கிறாய்?

மறுநாள் மாலை சும்சுதீன் வீட்டுக்கு வருவதாக போன் செய்தார். கதைகள் சினிமாக்களாய் மாறும்போது ஏற்படும் அபத்தங்கள் பற்றி ஏதாவது பேசிவிடுவேனோ என்று பதட்டமாய் இருந்தது.

சும்சுதீன் இளம் வயதினராய் இருந்தார். படம் இயக்குவதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்த என்னுடைய அந்தக் குறிப்பிட்ட கதையைப் பற்றிப் பேசினார். நான் பிறந்தது ஒரு கிராமம் என்றாலும், பள்ளிக் காலங்களில் இருந்தே நான் நகர வாழ்க்கையைத்தான் கவனித்து வருகிறேன். கல்லூரி முடித்ததும் தேர்வு எழுதி வேலையோடு நகரத்திற்க இடம் பெயர்ந்துவிட்டேன். என்னுடைய கதைகள் இது போல ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலும் நகரம் சார்ந்தவைதான். சும்சுதீனின் இரண்டு படங்களுமே கூட நகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். அப்படியிருக்க ஏன் அவர் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தார் என எனக்குக் குழப்பமாக இருந்தது.

“ஒரே மாதிரி சிட்டி லைப்பையே திரும்பவும் பண்ண வேண்டாம்னு தோனுச்சி. உங்களோட இந்தக் கதையை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். நான் டைரக்டர் ஆகும்போது இந்தக் கதைகளையெல்லாம் எடுப்பேன்னு முடிவு செஞ்சி வச்சிருந்த கதைகள்ல உங்களோட இந்தக் கதையும் ஒன்னு” என்றார். அரைமணி நேர சம்பிரதாயமான உரையாடலுக்குப் பின் கிளம்பிச் சென்றுவிட்டார். சம்பிரதாயமான பேச்சு என்றாலும் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் எவ்வளவு புரிந்து கொள்கிறோம். எங்களுடைய எண்ண அலைவரிசைகள் எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன எனக் காட்டிக் கொள்வதில் கவனமாய் இருந்தோம். இது தேவையில்லாதது என்று தெரிந்தாலும், நாங்கள் ஒரு ஒத்திசைவுக்காக இதைச் செய்கிறோம் என இருவருக்குமே புரிந்தாலும், எங்களுடைய பேச்சின் தொணியை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதுதான் நாகரீகமாய் இருக்கக் கூடும். எனக்கு அப்பா இருக்கும்போது, இந்தப் போர்ச் சூழல் இல்லாதபோது இது நடந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று தோன்றியது. அதே சமயம் அப்பாவின் இருப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றும் தோன்றாமல் இல்லை. அவர் போன பின்னும் அந்தக் கதை எனக்குள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. முன்பு அதை எனக்குள் நிகழ்த்திய மனிதர்கள் காணாமல் போய்விட்டார்கள். சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சிலர் அந்தப் பாத்திரங்களாக மாறிவிட்டிருந்தனர்.

சும்சுதீன் வந்துவிட்டுப்போய் பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டன. திடீரென ஒருநாள் போன் செய்து “சார் அந்தக் கதையை இப்போ எடுக்க முடியாது போலிருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தில கண்டிப்பா பண்ணுவோம் சார்” என்றார். நான் பரவாயில்லை சும்சுதீன் என்றேன்.

வழக்கம்போல அலுவலகத்திற்குப் போய் வந்து கொண்டு, போர் பற்றிய செய்திகளை டிவியில் பார்த்துக் கொண்டு, அந்த வேற்று கிரகத்தில் நடக்கும் போர் பற்றிய நாவலை எப்படி எழுதுவது எனத் திட்டமிட்டுக் கொண்டும் இருந்தேன். அந்த ரைட்டர் பிளாக் என்னிடம் இருந்து போய் விட்டது என இப்போது மனம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தது. எப்போது ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தது என்று தெரியவில்லை. (வேற்றுக் கிரக) போரை மையமாகக் கொண்டு நான் யோசித்திருந்த நாவலை, உட்கார்ந்து டைப் செய்ய ஆரம்பித்தேன். சில பக்கங்களை வெற்றிகிரமாக எழுதிவிட்டேன். உற்சாகமாய் இருந்தது. அடுத்தநாள் அதைத் தொடர்ந்து எழுத உட்காந்தபோது, ஏற்கனவே எழுதி இருந்தது எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. நான் அதை மொத்தமாக டெலிட் செய்துவிட்டு எழுந்தேன்.

000

குமாரநந்தன்

குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss