“தேநீரின் கடைசிச் சுவையும் நாவில் எஞ்சி இருப்பதுபோல…” என்று கவித்துவமாகத் தொடங்கும் நாவலின் முதல் அத்தியாயம், அந்த வரியின் ஈரம் உலர்வதற்குள், ஒரு பெண்ணின் புன்னகையைச் சொல்லி முடிப்பதற்குள் அவளைச் சதைத்துண்டுகளாகச் சிதறடிக்கிறது.
எந்தவித முன்னறிவிப்புமின்றி, மென்மையையும் வன்முறையையும் ஒரே வரியில் இணைக்கும் இந்தத் தொடக்கமே அனோஜன் பாலகிருஷ்ணனின் தீக்குடுக்கை நாவலின் ஆன்மாவை வரையறுத்துவிடுகிறது. போர்க்காலப் புனைவாக மட்டுமன்றி, நினைவுகளின் வெம்மையில் கனன்று கொண்டிருக்கும் ஒரு மனத்தின் ஒப்புதல் வாக்குமூலமாக என இந்நாவலைக் காணலாம்.
லண்டனில் பிறந்து வளரும் ஆதன் எனும் இளைஞன், “புலம்பெயர்” வாழ்வின் அடையாளச் சிக்கல்களுடன் ஈழத்திற்குப் பயணிக்கிறான். வரலாற்றின் மீதான கேள்விகள் அவனை இறுதிப்போர்க்களத்திற்கு இழுக்கின்றன. போரின் உக்கிரத்தையும் பேரழிவையும் மிக அருகில் சந்திக்கிறான். ஆனால், இறுதியில் தனது பிரிட்டிஷ் குடியுரிமையின் காரணமாக உயிருடன் மீட்கப்பட்டு மீண்டும் லண்டனுக்கே திரும்புகிறான். அவன் காதலி எரிகா ஒரு மீட்பராக அவனைக் கொண்டுசெல்கிறாள். இந்த நாவல், ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்குப் பயணிக்கும் கதையாக அல்லாமல், பாதுகாப்பான வாழ்விலிருந்து குற்றவுணர்வின் ஆழ்வெளிக்குச் செல்லும் ஒரு ஆன்மாவின் பயணமாக விரிகிறது.
வடிவமும் உள்ளடக்கமும்
தீவிரத்தையும் குற்றவுணர்வையும் வாசகருக்குக் கடத்துவதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்திருக்கும் வடிவமே நாவலின் முதல் வெற்றி. சொல்லையும் பொருளையும் பிரிக்கமுடியாதது போல ஒரு நாவலின் வடிவத்திற்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் மிக நெருக்கமான இணைப்புண்டு. இங்கிலாந்தில் ஆதனின் பிறப்பும் வாழ்க்கைச் சித்திரங்களும், அங்குள்ள மற்றவர்களின் கதைகளும் ஆசிரியரின் பார்வையில் – படர்க்கை கூற்றாக – விவரிக்கப்படுகின்றன. ஆதன் ஈழத்தின் போர்க்களத்தில் இருக்கும் பகுதிகள் மட்டும் அவனுடைய பார்வையில், தன்மை கூற்றில் அமைந்திருக்கின்றன.
இந்த வடிவ மாற்றம் வெறும் உத்தி சார்ந்தது மட்டுமன்று; அது ஆதனின் இருத்தலியல் நிலையை உணர்த்தும் ஒன்று. இங்கிலாந்தில் அவன் பிறரால் உற்றுநோக்கப்படும் ஒரு “பொருள்.” அங்கு அவன் ஒரு பிரவுன் தோல் நிறமுள்ள மனிதன்; ஒரு தெற்காசியன். இங்கிலாந்து குடிமையாளராக இருந்தாலும், கடவுச்சீட்டு வைத்திருந்தாலும், அங்குள்ள வெள்ளையர்களின் பார்வையில் அவன் “வேறொருவன்.” அவனது அடையாளம் பிறரால் வரையறுக்கப்படுகிறது. ஆனால், ஈழத்தின் போர்க்களத்திற்குச் சென்றவுடன், அவன் ஒரு “சுயம்” ஆக மாறுகிறான்.
நாவலின் முதன்மை பலம் என்ன? ஆதன் போர்க்களத்தில் இருக்கும்போது நாமும் அவன் கூடேயே இருக்கிறோம். ஒரு நெருக்கம் உண்டாகிறது. நாமும் பச்சையுடை அணிகிறோம். நாமும் போர் விமானங்களைப் பார்க்கிறோம். நாமும் பதுங்கு குழியில் மறைந்திருக்கிறோம். நாமும் ஓர் இளம்பெண்ணின் உடல் சிதறுவதைக் காண்கிறோம். வாழ்வின் விளிம்பில், மரணத்தின் நிழலில் நிற்கும்போதுதான் அவனுக்குத் தனது “நான்” என்னும் உணர்வு துலக்கமடைகிறது. இந்த முரண் – அமைதியான நாட்டில் அந்நியனாகவும், எரியும் நாட்டில் சுயம் கொண்டவனாகவும் உணர்வது – நாவலின் பேசுபொருளை வலுவாக்குகிறது.
போர், மனிதர்களை வெறும் இலக்குகளாகப் பார்க்கச் சொல்லி, ஒருவித மனத் தூரத்தை உருவாக்குகிறது. அப்போதுதான் வன்முறை சாத்தியமாகிறது. இலக்கியம் அந்தத் தூரத்தைக் குறைத்து நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நாவலில் வரும் “நான்” என்ற குரல் வாசகரைப் போரின் மையத்திற்கே இழுத்துச் செல்கிறது. இந்த நெருக்கம் வாசகரிடம் கோருவது இரக்கத்தை மட்டுமல்ல; அது ஒரு சங்கடமான கேள்வியையும் எழுப்புகிறது: பாதுகாப்பான தூரத்தில் இருக்கும்வரை மட்டும்தான் நாம் அமைதி-அறம் என்று நிம்மதியாய் இருப்போமா? வன்முறையின் வெப்பம் நம்மைத் தீண்டும் அளவுக்கு அருகில் வரும்போது, தூரத்தில் நின்று நாம் கொள்ளும் நிம்மதி குலைந்து, மறத்தின் அறத்தை நோக்கிச் செல்வோமா?
மேலும் முக்கியமான இரண்டாவது புள்ளி, இந்தக் கூறுமுறை “நான் யார்?” என்ற கேள்வியை, வடிவத்தின் மூலம் ஆராய்கிறது எனலாம். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் போரில் இருக்கும் போது தான், ஆதன் “நான்” என்று முழுமையாக உணர்கிறானா? இங்கிலாந்தில் படிப்பும் பணமும் வேலையும் இருந்தாலும் “நான் யார்?” என்ற கேள்வி அவனைத் துரத்துகிறது. ஆனால், இலங்கை சிறுதீவில் அவன் அச்சுப்பிழையின்றி ஒரு தமிழன். அங்கு வாழ்வதற்கு நெருக்கடி இருக்கலாம், உயிர் விளிம்பில் தொங்கலாம், எனினும் அவன் அடையாளம் தெள்ளத்தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இதை இன்னும் ஆழமாகப் பார்த்தால், அடையாளத் தெளிவு என்பது சுதந்திரத்தின் விளைவு மட்டும் அல்ல; எல்லைகளின் வன்முறையாலும் உருவாகலாம். இங்கிலாந்து பாதுகாப்பைத் தரலாம்; ஆனால் சொந்தம் என்ற ஒன்றைத் தராமல் இருக்கலாம். இலங்கை சொந்தத்தைத் தரலாம்; பாதுகாப்பை மறுக்கலாம். நாவல் இந்த இரண்டு விஷயங்களையும் இரு கைகளில் வைத்துப் பார்க்கச் சொல்கிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, நாவலின் தொடக்கத்திலேயே ஆதனின் ஆங்கில அறிவு போர்க்களத்திலும் அவனுக்கான ஒரு தனிச்சலுகையாக மாறுவதைக் காணமுடிகிறது. அவனது மொழித் திறன் அவனை முன்வரிசைப் போரிலிருந்து பாதுகாத்து, சற்று நேரமாவது, தொழில்நுட்பப் பிரிவுக்கு நகர்த்துகிறது. “மொழி” என்பது இங்கிலாந்தில் அவனுக்கு அந்நியத்தன்மையைக் கொடுத்தது என்றால், இங்கே அதுவே அவனுக்குப் பாதுகாப்பையும், அதிகாரத்தின் நெருக்கத்தையும் தருகிறது.
சன்னலிலிருந்து வானம்
நாவலின் எழுத்துநடை குறித்துப் பேசும்போது, ஒவ்வொரு வாக்கியமும் மிகத் தெளிவாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தேவையில்லாத திருகலுமின்றி, என்ன உணர்வை, என்ன செய்தியை, என்ன நிகழ்வைச் சொல்லவேண்டுமோ அவற்றைச் சிக்கலில்லாமல் சொல்கிறது. இதை ஒருவித நிதானம் என்று வரையறுக்கலாம். ஆனால், அதே நேரத்தில் இதில் எவ்விதத் தொய்வும் இல்லை. மிகக் கச்சிதமாக வடிவமைத்து கட்டப்பட்ட வீடு போல இது இருக்கிறது. திறந்தால் கீறல் சத்தம் போடாத கதவு; வழுக்கவும் செய்யாத, கடுகடுக்கவும் செய்யாத தரை.
எல்லாமும் கச்சிதமாக இருக்கும் அந்த வீட்டில், ஏதோ ஒரு இடத்தில் சுவரில் கம்பியில்லாமல், ஓரச்செதுக்கல்கள் இல்லாமல், வெறுமே சுவரில் சதுர வெற்றிடங்கள் போன்று திறந்திருக்கும் சன்னல்கள் போல, அங்கங்கே சில மௌனங்கள் விடப்பட்டுள்ளன. இந்த மௌன இடைவெளிகளில்தான் வாசகர் உள்ளே நுழைகிறார். சொல்லப்படாத அந்தச் “சதுர இடைவெளி”களை, வாசகர் தன் சொந்த அனுபவத்தையும் கற்பனையையும் கொண்டு நிரப்பும்போதுதான் இந்த வாசிப்பு முழுமையடைகிறது.
இதற்குச் சிறந்த உதாரணமாக ஆதன் போருக்குச் செல்ல முடிவெடுக்கும் தருணத்தைச் சொல்லலாம். ஆதன் ஏன் இலங்கைக்குச் செல்ல, போருக்குச் செல்ல முடிவெடுக்கிறான்? இங்கிலாந்தில் அடையாளப் பிரச்சனை இருக்கிறது. பெற்றோர் பயந்து ஓடிவந்து விட்டார்கள் என்று எண்ணி அவன் அவமானம் கொண்டிருக்கலாம். அல்லது வரலாற்றைப் படித்து, ஒடுக்குமுறையை உணர்ந்து, தான் தமிழன் என்று உணர்ந்து ரத்தம் கொதித்துச் சென்றிருக்கலாம். இங்கிலாந்திலிருந்தபடியே தொடர்புகள் மூலம், ஆதன் வீடியோ காலில் புலிகளிடம் பேசுகிறான். ஆனால், அவன் போருக்குச் செல்ல தீர்க்கமான முடிவெதுவும் எடுக்கவில்லை. அந்த வீடியோ கால் இப்படிச் செல்கிறது:
“… நீர் ஈழத்துக்கு போகணும் என்று நினைக்கிறீராமே?” என்று ஆறுமுகம் கேட்டார்.
ஆதன் அப்படி நினைக்கவே இல்லை. ஆனால் அவர் அப்படிக் கேட்டவுடன், உள்ளூர அதைத்தான் விரும்பிக்கொண்டிருந்தேன் என்று அவனை எண்ண வைத்தது.
இங்குள்ள ஒரு முக்கியமான இருத்தலியல் கேள்வி, நம் உண்மையான விருப்பம் என ஒன்று உள்ளதா என்ன? மனிதரின் அடிப்படை புலன்களுக்கு அப்பாலுள்ள நம் விருப்பங்களைச் சமூகமும், புறச் சூழ்நிலையும், வரலாறும் தான் வடிவமைக்கிறதா?
நாவல் இந்த நிகழ்வை எப்படிப் பார்க்கிறது? ஆதன் ஒரு புரட்சியாளனாக மாறுவது அவனது தனிப்பட்ட தேர்வல்ல; அது ஒரு வரலாற்றின் எதிர்பார்ப்பு. இங்கே நாவல் மிக நுட்பமான ஒன்றைச் செய்கிறது: அது ஆதனின் முடிவை கொண்டாடவுமில்லை, கண்டிக்கவுமில்லை. மாறாக, “தேர்வு” என்ற கருத்தாக்கமே எவ்வளவு சிக்கலானது என்பதைக் காட்டுகிறது.
இதை வேறு விதமாகப் பார்த்தால், ஆதனின் “அதுதான் நான் செய்ய வேண்டியது என்று நினைக்கிறேன்” என்பது கடமை நோக்கிய ஒப்புதலா அல்லது அடக்கி வைக்கப்பட்ட விருப்பத்தின் வெளிப்பாடா? நாவல் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க அனுமதிக்கிறது. பல பெரிய முடிவுகள் வீர உரைகளாகப் பிறப்பதில்லை. உரையாடலின் நடுவில், காரணங்கள் வருவதற்கு முன், ஒரு சிறிய “ஆம்” ஆகவே பிறக்கிறது. ஆனால் அந்த “ஆம்” உச்சரிக்கப்பட்டபின், அதன் எடை மாறுகிறது. அது பின்னோக்கி அர்த்தம் பெறுகிறது. அந்தச் சதுர சன்னலின் வெற்றுவெளியிலிருந்து வானத்தை நோக்கி விரித்துக் கொள்ளவேண்டிய அழகியலை நாவல் இவ்வாறு கொண்டிருக்கிறது.

இரண்டு தட்டிக் கொடுத்தல்கள்
நாவலின் தொடக்கத்திலும் முடிவிலும் வரும் இரு வேறு “தோள் தட்டிக் கொடுத்தல்”கள் நாவலின் ஆன்மாவை இணைக்கும் மிக முக்கியமான கண்ணிகள்.
முதல் அத்தியாயத்தில், ஆதன் குண்டுகளை வீசும் தொழில்நுட்பத்தை வடிவமைத்ததற்காக, இயக்கத்தின் மூத்த தளபதியால் பாராட்டப்படுகிறான். “அவர் விடைபெறும்போது என் தோள்மூட்டுக்களை அழுத்தித் தட்டிக்கொடுத்தார். அவர் விலகிச் சென்றதும் என் தோள்மூட்டைச் சட்டென்று அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.” என்று ஆதன் விவரிக்கிறான். அது வன்முறையை வடிவமைத்ததற்கான அங்கீகாரம்.
நாவலின் இறுதியில், நீதிமன்றத்தில் அதே ஆதனின் தோள்மூட்டுகளை அவனது தந்தை தட்டிக் கொடுக்கிறார். “வழக்கத்துக்கு மாறாக அப்பா நெகிழ்ச்சியுடன் இருந்தார்… என் தோள்மூட்டுகளைத் தட்டிக் கொடுத்தார்.”
அப்பாவின் உணர்வுகள், நெகிழ்ச்சி-வயது-தட்டிக்கொடுத்தல் என மிகக் குறைந்த சொற்களில் விவரிக்கப்படுகின்றன. போரிலிருந்து ஓடி, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த மனிதர். தன் மகனுக்குத் தன்னுடைய வரலாற்றின் வாசம் எதுவும் அண்டாமல் பார்த்து வளர்ந்த மனிதர். இதோ இந்தக் கணத்தில் அவனை மெச்சிப் பெருமை கொள்கிறாரா? தன்னால் முடியாததை, போரில் பங்கேற்றமுடியாததை, தன் மகன் செய்திருக்கிறான் என்று உச்சிமுகர்கிறாரா? தன் குற்றவுணர்வுக்குப் பரிகாரமாக மகன் வளர்ந்து நிற்கிறான் என்று அவன் தோளைத் தட்டிக்கொள்கிறாரா? அறியாமலேயே, முதல் அத்தியாயத்தில் தளபதி தொட்ட அதே இடத்தை, வன்முறைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட அதே தோளைத் தந்தையும் தொடுகிறார்.
மீட்பும் குற்றவுணர்வும்
நாவலின் இறுதி, அதுவரை இருந்த தத்துவார்த்தமான விசாரணையைத் தாண்டி, மிகக் கறாரான ஒரு சுயவிமர்சனத்தை முன்வைக்கிறது. ஆதன் போரிலிருந்து தப்பித்தது அவனது வீரத்தாலோ சாதுர்யத்தாலோ அன்று; அவனிடம் இருந்த பிரிட்டிஷ் கடவுச்சீட்டு என்னும் ஆயுதத்தால். அவன் விடுதலையானதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “வெள்ளை மேலாதிக்க வாதம் எனக்குக் கொடுத்த பிச்சை” என்று தன்னைத்தானே வடுவாகக் கீறிக்கொள்கிறான். ஆயிரக்கணக்கான போராளிகள் மடிந்த மண்ணில், தான் மட்டும் பிழைத்திருப்பது ஒரு வரம் அல்ல, அது ஒரு சாபம் என உணர்கிறான். விடுதலையின் பின்னும் தொடரும் சிறை இது.
எரிகாவுடனான உறவும் இறுதியில் ஒரு கேள்விக்குறியாகிறது. “நம் குழந்தை கருத்தரித்து இருக்காவிட்டால், நீ என்னைத் தேடி வந்திருக்க வாய்ப்பு குறைவுதானே?” என்று ஆதன் கேட்கும் கேள்விக்கு எரிகாவிடம் பதிலில்லை.
இந்த மௌனம் குறிப்பிடத்தக்கது. ஆதனின் மீட்பு – உடலளவில் நிகழ்ந்தாலும் – உணர்வளவில் முழுமையடையவில்லை. எரிகா அவனை மீட்டாள்; எனினும் அந்த மீட்பு அன்பிலிருந்து வந்ததா அல்லது பொறுப்பிலிருந்து வந்ததா என்ற சந்தேகம் அவனை வாட்டுகிறது. இந்தக் கேள்வி உண்மையில் எரிகாவைப் பற்றியதன்று; அது ஆதனின் சுய-மதிப்பீட்டைப் பற்றியது. “நான் காப்பாற்றப்படத் தகுதியானவனா?” என்ற ஆழமான கேள்வி இதில் ஒளிந்திருக்கிறது.
“நிச்சயம் வந்திருக்க மாட்டாள் என்று எனது ஆழ் மனம் அறிந்திருந்தது” என்று அவன் சொல்லிக்கொள்ளும்போது, அது எரிகாவின் உண்மையான நோக்கத்தைப் பற்றிய தீர்ப்பல்ல; அது அவனுடைய குற்றவுணர்வின் குரல். தான் மட்டும் தப்பித்ததை நியாயப்படுத்த முடியாத ஒரு மனம், காதலைக்கூட ஒரு சுமையாக, ஒரு கடமையாக மாற்றிப் பார்க்கிறது.
இறுதியில் ஆதன் காணும் கனவு, ஒட்டுமொத்த நாவலின் ஆன்மாவாக அமைகிறது.
“என் கனவுகளில், அடிக்கடி நான் ஒரு மாட்டைக் கண்டேன். … அது நொண்டி நொண்டி வெற்றுச் சன்னங்கள் சிதறிய வெறுமையான நிலத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. …”
“வெற்றுச் சன்னங்கள்” என்ற வெடித்துத் தீர்ந்த தோட்டாக்களின் உறைகள் என இந்தப் படிமம் மிக வலுவானது. விமானத்திலிருந்து பார்த்தபோது அழகாகத் தெரிந்த நீலத் தீவு, தரையிறங்கிய பின் வெறும் வெற்றுத் தோட்டாக்களால் நிரப்பப்பட்ட ஒரு சுடுகாடாக மாறுகிறது. அந்தக் குருட்டு மாடு எது? திக்குத் தெரியாமல் அலையும் ஈழத்து வாழ்க்கையா? அல்லது குற்றவுணர்வில், எங்கும் செல்ல முடியாமல், ஆனால் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆதனின் மனசாட்சியா? வெற்றுச் சன்னங்கள் சிதறிய நிலம் என்பது போர் முடிந்துவிட்ட அமைதிக்கும், வன்முறை நிகழ்ந்து முடிந்ததன் சாட்சியங்களுக்கும் மத்தியில் நிற்கிறது.
தீக்குடுக்கையும் நீலப்புள்ளியும்
நாவலின் தலைப்பான “தீக்குடுக்கை”, இரண்டு தளங்களில் இயங்குகிறது. நாவலின் முதல் அத்தியாயத்தில், வானிலிருந்து வீசப்படும் குண்டுகளைத் தளபதி தீக்குடுக்கை என்று அழைக்கிறார். அழிவின் வடிவமாக அது அறிமுகமாகிறது. ஆனால் நாவலின் முடிவில் அதன் பொருள், நெருப்பை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பயன்படும் சுரைக்குடுவையாக மாறுகிறது. உள்ளே கனல் இருக்கும், எனினும் வெளியிலிருந்து பார்க்கும்போது அது அமைதியான பாத்திரமாகத் தெரியும்.
ஆதன் ஒரு தீக்குடுக்கை. அவன் வெறும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டு அல்லன்; அவன் ஒரு வரலாற்றின் கனலை, அணையாத நினைவுகளைத் தனக்குள் பாதுகாத்துச் சுமக்கும் ஒரு பாத்திரம். வெப்பத்தையும் சாம்பலையும் வைத்துக் காத்திருக்கும் ஒரு பாத்திரம்.
ஆதன் இலங்கையிலிருந்து விமானத்தில் இங்கிலாந்திற்கு அனுப்பப்படுகிறான். “… எம்பிப் பறந்து உயர்ந்து உயர்ந்து செல்ல, இலங்கை என்ற சிறிய தீவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். … இந்தக் குட்டித் தீவில் எத்தனை குழப்பங்கள், எத்தனை மானுட வன்முறைகள். …” நீலநீர் சூழ்ந்துள்ள இலங்கையென்னும் பச்சைத் தீவு – எத்தனை சண்டைகள்! இங்கிலாந்தும் அதுவே; நீலநீர் சூழ்ந்துள்ள மற்றொரு பச்சைத் தீவு. இதே போலொரு சண்டைக்கான எல்லா சாத்தியங்களும் உள்ளதாக நாவல் காட்டுகிறது. அதே சமயம் எரிகா போன்றவர்கள் மூலம் அது சமன்படுமா என்று நாமே கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்வி.
விமானத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையம், அங்கிருந்து மேலும் மேலும் விலகி விலகிச் சென்றால், நாம் காண்பது கருவெளி சூழ்ந்துள்ள பூமி. ஒவ்வொரு கோளும் ஒரு தீக்குடுக்கை. ஏதோவொன்று கனன்றுகொண்டே இருக்கிறது. ஆனால், நம்முடையது நீல பூமி. கார்ல் சாகன் சொன்னது போல, இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தில் நாம் மங்கிய நீலப்புள்ளி. எரிகா போன்றவர்களின் வடிவாக நீலம் இருக்கும் வரை ஈரம் இருக்கும்.
நாவலின் முடிவு நம்மை அந்த ஆசுவாசத்தில் இளைப்பாற விடவில்லை. “ஈரம் இருக்கிறது, ஆனால் அது போதுமா?” என்ற கேள்வியுடன், வெற்றுச் சன்னங்கள் சிதறிய நிலத்தில் ஓடும் அந்தக் குருட்டு மாட்டின் குளம்பொலியுடன் நம்மைத் தனியே விட்டுவிடுகிறது. இந்த நாவலின் சாதனை, புத்தகத்தை மூடிவைத்த பிறகும், நம் கைகளில் உள்ள வெப்பத்தைக் கவனிக்க வைக்கிறது; நாம் எதைச் சுமக்கிறோம், எதை அணைக்கிறோம் என்று கேட்க வைக்கிறது.
000
நூல்: தீக்குடுக்கை (நாவல்)
ஆசிரியர்: அனோஜன் பாலகிருஷ்ணன்
வெளியீடு: சால்ட் (2024)

விஜய் ரெங்கராஜன்
விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















சிறப்பான விமர்சனம் விஜய் ரெங்கராஜன். அனோஜனை பாண்டிசேரி பல்கலைக்கழத்தில் ஆற்றிய உரையின் பின்னரே அவரது பேரீச்சை தொகுப்பைப் படித்தேன். உதிரம், யானை கதைகள் அதிகம் பாதித்தன. சமீபத்தில் தான் தீக்குடுக்கை படித்தேன். பேரீச்சை தொகுப்புக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை. இது வேறுமாதிரி இருந்தது, ஒரே மூச்சில் தடையில்லாமல் படிக்கக் கூடியதாக இருந்தது. நீங்கள் எழுதியது போல மிக சிறப்பான எழுத்து நடை, ஒருவரது டயரியை படிப்பது போலவே இருந்தது. இந்த நாவலில் வரும் மடகஸ்கர் மல்லிகைச் செடி சிறப்பான உருவகம்; காலனிய காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்லாயிரம் மரங்கள்,செடிகள் செயற்கையாக அய்ரோப்பிய குளிர்காலப் பகுதிகளில் உயிர்வாழும்படி மாற்றப்பட்டன என்பது வரலாறு. அந்த மரங்களின் வேர்கள் இந்த நாட்டில் முளைவிட்டாலும், அது இந்த நிலத்திற்கு சொந்தமில்லை, ஆதன் போலவே. உங்கள் விமர்சனம் நாவலை திரும்ப வாசிக்க தூண்டுகிறது. மீண்டும் வாசிக்கிறேன். நன்றி.
மிக்க நன்றி பிரவீன். நீங்கள் சொன்ன மடகஸ்கர் மல்லிகைச் செடி போன்று பல உள்ளுறை உவமங்கள் இந்த நாவலில் இருக்கின்றன. நாவல் ஆரம்பிக்கும் தேநீரே கூட வெளியிலிருந்து வந்தது தான்; அதன் மூலம் தேயிலைத் தோட்ட காலனியம் என நாம் இன்னொரு திரி இழுத்துக்கொள்ள முடியும். நாம் அறியாத பல “வெளியிலிருந்து” கொடண்டுவரப்பட்டிருக்கலாம். ஆனால், “சொந்தம்” என்றால் என்ன “மற்றவை” என்றால் என்ன என்பவை வாசகரே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்.