/

படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது விமர்சகர்கள் முன்வரவில்லை: தெளிவத்தை ஜோசப்

நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறுகளில் நிறையச் சந்தர்ப்பங்களில் மற்ற மற்றப் பிரதேச இலக்கியங்கள் விடுபட்டுப் போவதுபற்றி நான் சில சமயங்களில் கோபமாகச் சொல்வதுண்டு. சிவத்தம்பி அவர்கள் ஓரிடத்தில் சொல்லியிருக்கின்றார். ‘தெளிவத்தையின் கோபம் நியாயமானதுதான். ஏனென்றால் நாங்கள் ஈழத்து இலக்கியம் என்று தலைப்பிட்டுவிட்டு யாழ்ப்பாணத்து இலக்கியத்தை மட்டும்தான் பேசியிருக்கின்றோம்’ என்று.

இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி என்று ‘தெளிவத்தை ஜோசப்பை’ தயக்கமின்றிச் சொல்லலாம். மலையக மக்களின் வாழ்வியலை பிரச்சாரம் இன்றி முற்போக்கு அம்சத்துடன் எழுதியவர் அவர். மலையக சமூகத்தில் ஊடுருவியிருந்த சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவரது புனைவுலகத்தின் அடிநாதமாக ஒலித்தன.   அவரது காதாமந்தர்கள் பெரும் தத்தளிப்பு சிக்கல் கொண்டவர்கள் அல்ல. மாறாக எளிய அன்றாட பிரச்சினைகளில் சிக்கி அழுத்தப்படுபவர்கள். தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம் என்பது எளிய மனிதர்களின் அன்றாடச் சுமையின் துயரம்தான். சிலசமயம் அந்தத் துயரில் ஒளி ஒரு கீற்றாக வெளிப்படுகிறது. எந்தவித கட்சி சார்போ, கோட்பாடு சார்ந்தோ இயங்காத படைப்புலகம் அவருடயது. அதனாலேயே மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை பல கோணங்களில் தயக்கமில்லாமல் அவரால் நோக்க முடிந்தது.

தெளிவத்தை ஜோசப் அவர்களுடனான இந்த நீண்ட நேர்காணல் தொலைபேசி உரையாடல் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

தெளிவத்தை ஜோசப்

மலையக மண்ணின்  நினைவுகளோடும் அங்கே உங்களுடைய தாய் தந்தையரின் அனுபவங்களோடும் இந்த நேர்காணலைத் தொடங்குவோம். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியுமா.. 

மலையகம் நான் பிறந்த மண். பிறந்த மண் என்ற உணா்வு எல்லோருக்கும் இருக்கும்.  எனது அப்பாவை கத்தோலிக்க முறைப்படி ‘ஆஞா’ என்றே அழைப்போம். ஆஞா என்றால் தமிழ் அகராதி ‘அப்பா’ என்று அா்த்தம் கூறுகிறது.  அப்பா திருச்சியிலிருந்து உத்தியோகத்துக்காக மலையகத்துக்கு வந்து சோ்ந்தவர். அங்கே தோட்டத்து ஆசிரியா் வேலையை பொறுப்பேற்று இரண்டு மூன்று மாதங்களின் பின் மீண்டும் இந்தியா சென்று அம்மாவைத் திருமணம் செய்து திரும்பி வந்திருக்கிறார். எமது குடும்பத்தின் மூத்த பிள்ளை எனது அண்ணா ஞானப்பிரகாசம். இரண்டாவது பிள்ளை ஜோசப் என்கிற நான். பிறகு எங்கள் குடும்பத்தில் ஐந்து ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும். ஊவாக் கட்டவளை என்ற தேயிலைத்தோட்டம் பதுளையிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் இருக்கின்றது. அந்த தோட்டத்திலே தான்  அப்பா ஆசிரியா் வேலைக்காக வந்திருந்தார்.

திருச்சி ரயில் நிலையத்தில் ஆசிரியர் வேலைக்கு விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நேரம் தோட்டத்தில் ஆசிரியருக்கென்று ஒரு வீடு கிடைக்கும் என்று சொல்லப்பட்டதாம். ஆனாலும் எனது தந்தை வேலைக்கு வந்தபோது அவருக்கு வீடு இருக்கவில்லை. ஆகவே அவா் ஆங்கிலேய தோட்ட உரிமையாளரிடம்  தான் எங்கே தங்குவதென்று கேட்டிருக்கின்றார். அப்போது அந்த தோட்ட உரிமையாளா் பாடசாலைக்கு அருகில் ஒரு வெற்று நிலத்தைக் காட்டி இந்த இடத்தில் ஒரு அழகான வீடு கட்டித்தருகின்றேன். தற்சமயம் நான் காட்டும் இடத்தில் இருங்கள் என்று பாடசாலைக்கு பக்கத்தில் இருக்கும் தொழிலாளா்களுக்கான அந்த குடியிருப்பு லயத்தில் முதல் இரண்டு அறைகளையும் எங்கள் தந்தைக்கு கொடுத்தார். தற்சமயம் இதிலே இருங்கள். நாங்கள் இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் திருமணம் செய்து வரும் சமயம் உங்களுக்கு வீடு கட்டித்தருவோம் என்றும் கூறியுள்ளார்.

அந்தக் காலத்தில் தோட்டத்து ஆசிரியா் என்பவா் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவதில்லை. அந்தப் பிள்ளைகளை ஒரு சிறிய மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பார். அதற்காகத்தான் ஆங்கிலேயர்கள் ஆசிரியா்களை நியமித்திருந்தார்கள். ஆனால் எங்களுடைய தந்தையைப் பொறுத்தவரையில் அவர் அதற்கு நேர்மாறாக இருந்தார். அதாவது படிக்க வரும் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேண்டும் என்று அவா் செயற்பட்டார். நானும் எனது அண்ணாவும் அவரிடம் தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம்.

எனது தந்தை தனியாக ஒரு வீட்டில் இல்லாமல் தொழிலாளா்கள் வசிக்கும் அந்த லயத்தின் முதல் இரண்டு அறைகளில் இருந்ததால் அந்த லயத்துத் தொழிலாளா்களுடைய  பிள்ளைகளுடன் பழகவும், விளையாடவும்  எனக்குச் சந்தா்ப்பம் கிடைத்து. அதனால் அவா்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. இவா்களுக்குத்தான் தோட்ட லயத்தில் இடம் கொடுத்துவிட்டோமே. இனி எதற்கு அவா்களுக்கு தனியாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஆங்கிலேய தோட்ட முதலாளி தனது செலவைக் குறைத்துக்கொண்டுவிட்டார்.

தந்தையிடம் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பிறகு ஆறாம் வகுப்பு படிப்பதற்கு அங்கே வகுப்பு இல்லை. இடைநிலை கல்வி கற்பதற்கு மலையக நகரங்களுக்குச் செல்லவேண்டும். ஆனால் நகரப்பகுதிக்கு போவதற்கு பஸ் வசதிகள் இல்லை. ஆகவே என்னையும் அண்ணாவையும் கும்பகோணத்தில் அம்மாவின் உறவினா்களிடம் படிப்பதற்காக விட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.

ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் எப்படி சம்பந்தப்பட்ட மக்களை கலந்து கொள்ளாமல் தலைவா்களாக முடிவெடுத்து இந்தியாவிற்கு அனுப்பினார்களோ அதே போல எங்கள் அம்மாவும் ஆஞாவும் எங்களைக் கேட்காமலேயே இந்தியாவில் கொண்டு போய் விட்டுட்டு வந்தார்கள்.

நாங்கள் இந்தியாவில் கும்பகோணம் லிட்டில் ப்ளவர் ஹை ஸ்கூல் என்றும் பாடசாலையில் படித்தோம். கும்பகோணத்தைப் பற்றி பின்னர் நான் விரிவாக எழுதியிருக்கின்றேன்.  மௌனி, குபாரா போன்ற இலக்கியவாதிகள்  உலவிய  வீதிகள் நிறைந்த ஊர் அது. அந்த சின்ன வயதில் எனக்கு அதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் தன்னுடைய போக்குவரத்து சேவைகளை விஸ்தரித்தது. கட்டவளை வரை பஸ் ஓடியது. இப்போது பஸ்ஸில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாம் என்ற நிலைமை வந்ததும் எங்களை இந்தியாவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். இங்கு நான் சென்.பீட்டர்ஸ் கல்லூரி, பதுளையில் கல்வி கற்றேன். அந்தப்பாடசாலை கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் ஒரு பாடசாலை. அந்த பாடசாலையில்தான் நான் மறுபடியும் 4ம் வகுப்பில் சேர்ந்தேன். 4ம் வகுப்பை மூன்று தடவைகள் படித்திருக்கிறேன். அப்பாவிடம் 5 ம் வகுப்பு வரை படித்துவிட்டு இந்தியாவுக்கு போனால் அங்கே 4ம் வகுப்பில் சோ்த்தார்கள். பிறகு அங்கு 6ம் வகுப்பு படித்துவிட்டு இங்கு திரும்பி வந்ததும் இங்கேயும் 4ம் வகுப்பில் தான் சோ்த்தார்கள். இரண்டு வருடங்கள் 4ம் வகுப்பு படித்து இரட்டை வகுப்பேற்றம் எல்லாம் எடுத்து பின்னா் அதே பாடசாலையில் தான் நான் SSC  எழுதினேன். SSC என்பது Senior school certificate. அந்த நாளைய உயா்கல்வி சான்றிதழ் அது. 8ம் வகுப்பு படித்து முடித்த பின்னா் JSC என்ற சான்றிதழ் கொடுப்பார்கள். அதாவது Junior school ceritificate. அந்த Junior school ceritificate இருந்தால் தோட்டங்களில் உத்தியோகங்களில் சேரலாம். எனது அண்ணா அந்த JSC உடன் படிப்பை இடை நிறுத்திவிட்டார். அண்ணாவை தோட்டத்து ஆபிஸில் வேலை பழக இடம் கொடுத்தார் தோட்டத்துரை. அவர் கிளார்க் வேலை பழகிக்கொண்டிருந்தார்.

நான் இரண்டு வருடம் SSC படித்துக்கொண்டிருந்தேன். அதற்கான அரச பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த நேரத்தில், எங்களுடைய பாடசாலை அதிபா், Brother Casion  சொன்னார் “ஜோசப் நீ Result வரும்வரை வீட்டில் இருக்காதே. தினமும் பாடசாலை வா” என்றார். அதற்கு நான் ஏன் என்று கேட்டேன். அப்போது “பாடசாலை ஆபிஸில் கொஞ்சம் வேலைகள் இருக்கின்றன, அதனால் நீ வந்து அந்த வேலைகளை செய்து தா. உனக்கு சம்பளம் தர என்னால் முடியாது. வேண்டுமானால் Pocket Money தருவேன்” என்று சொன்னார். அதை  நான் ஒரு கௌரவமாக கருதினேன்.

இந்தியாவில் தமிழ் இலக்கியம் என்றதும் மனதில் எழும் பெயர்கள் புதுமைப்பித்தன், கு.பே.ரா, மௌனி என்று தொடங்கும். ஆனால் இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பி தான். இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்மந்தன் என்றோ டானியல், கணேசலிங்கன், அரசரத்தினம் என்றோ வருவதில்லை.

அண்ணா வேலை பழகி முடிந்ததும் தெளிவத்தை தோட்டத்தில் வேலை கிடைக்க அங்கே சென்றுவிட்டார். புதிய இடத்தில அவருக்கு தனி பங்களா, அலுவலகத்தில் உத்தியோகம், கிளார்க் வேலை. தெளிவத்தை என்பது ஒரு பெரிய எஸ்டேட். எங்களுடைய  கட்டவளைத் தோட்டத்தைவிட  நான்கு மடங்கு பெரியது. தெளிவத்தையில் வேலை செய்வது பெரிய கௌரவமாக கருதப்பட்டது. அங்கு எங்கள் அண்ணா போன பிறகு “அண்ணா தனியாகத் தானே இருக்கின்றார். நீ அவருடன் போய் இரு” என்று அம்மா கூற நான் அண்ணாவுக்கு துணையாகவும் அவருக்கு சமையல் செய்வதற்குமாக தெளிவத்தைக்கு வந்து சோ்ந்தேன். தெளிவத்தை என்னுடைய பெயரில் இடம்பிடித்தது இப்படித்தான்.

எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எப்படி ஏற்பட்டது?

எழுத்து என்பது எங்களுடைய வாழ்விலிருந்தே வருகின்றது. எங்களுடைய வாழ்வு, எங்களுடைய மண், இன்னொன்று எழுத்தாளனுடைய கவனம்.. இவைதானே தீர்மானிக்கின்றன. என்னைச் சுற்றியிருக்கும் நான்கு அல்லது ஐந்து போ் கதைத்துக்கொண்டிருந்தாலும் யார் யார் என்னென்ன கதைக்கின்றார்கள் என்பதை எனது காதுகள் உள்வாங்கிக்கொண்டிருக்கும். அந்த அவதானிப்பு எனது சிறுவயதிலிருந்தே இருந்திருக்கின்றது என்று இப்பொழுது யோசிக்கின்றேன். 

நான் ஊவாகட்டவளையில் இருந்தபோது எமது தந்தை வெறும் தோட்டத்து ஆசிரியா். தோட்டத்து ஆசிரியா் என்றால் தோட்டத்தில் ஒன்றுமே இல்லாதவர் என்று அர்த்தம். மேல்நிலைத் தோட்டத்து உத்தியோகத்தர்களுடனும் இணைக்கப்படாமல் அடிநிலை தொழிலாளர்களுடனும் சேர்க்கப்படாது ஒரு ரெண்டும் கெட்டான் நிலை அவர்களுடையது. எங்கள் ஆஞாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு பதுளையில் ஆசிரியா் சங்க கூட்டம் இருக்கின்றது நான் வெளியே போய் வருகின்றேன் என்று கிளம்பிவிடுவார். போய் திரும்பி வரும்போது வீரகேசரி, பேசும்படம் என்று ஏதாவது புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அந்தப் புத்தகங்களை எல்லாம் நான் விடாமல் வாசித்திருக்கிறேன். முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை வாசிப்பேன். என்னுடைய அம்மா பொறுமையிழந்து “அடேய் சாப்பிடவா என்ன புத்தகத்துடனேயே அமா்ந்திருக்கின்றாய்” என்று ஏசுவார். இப்போதும் நான் என்னுடைய எழுத்தை எனது வாசிப்பின் பலமாகத் தான் கருதுகின்றேன். அக்காலத்தில்தான் ‘பால்கார பையன்’ என்கிற முதல் கதையையும் எழுதி கல்கண்டுவுக்கும் அனுப்பினேன். அது வெளிவரவில்லை.

தெளிவத்தைக்கு வந்தபின்னர் என்னுடைய அண்ணாவுக்கு காலையில் தேநீர் கொடுத்து அனுப்பிவிட்டு மதிய சாப்பாட்டை அவருடைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதற்குப்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதுகள் இருண்டு கிடக்கும். “சோம்பல் உற்றிருக்கும் ஒரு மனிதனின் மனம் என்பது சாத்தானின் வசிப்பிடம்” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கின்றது. என்னுடைய இந்த வாசிப்பும் எழுத வேண்டும் என்ற ஆா்வமும் என்னுடைய மனதை சோம்பல் நிலையிலிருந்து மீட்டு எடுத்திருக்கிறது. வாசிப்பு என்பது எனக்கு கிடைத்த வரம். சோம்பேறியாக இருக்காமல் வாசிப்பிலும் எழுதுவதிலும் எனது பொழுதுகளைப் பயனுள்ளதாக்கிக் கொண்டேன்.

நீங்கள் சொன்ன உங்களுடைய  வாழ்வனுபவங்கள் எழுத்தில் எவ்வாறு எதிரொலித்தது..

மலையத்திலே அந்த மக்களுடன் மக்களாக நான் வாழ்ந்திருக்கின்றேன் அவற்றையெல்லாம்தான் எழுதியுமிருக்கிறேன். எங்களுடைய ஆஞா ரொம்ப கண்டிப்பானவா். என்னையெல்லாம் பிரம்பெடுத்து அடிக்க தொடங்கினார் என்றால் அப்படி அடி விழும். தடுக்க வரும் அம்மாவும் அடி வாக்கியிருக்கின்றார். அவா் தண்டனை எப்படி கொடுப்பார் என்றால் லயத்துக்கு வெளியில் எங்களை முழங்காலில் அமா்ந்திருக்க வைத்துவிட்டு கையில் அம்மி குளவியை கொடுத்துவிட்டு பள்ளிக்கூடம் போய் விடுவார். குத்தும் மண்ணில் வெறும் முழங்காலுடன் கையில் குளவியை வைத்திக்கொண்டு  அமர்ந்திருப்போம்.       

அதே நேரத்தில் அவர் மிகவும் அன்பானவர். அப்படி கண்டித்து வளர்த்ததால்தான், இன்றைய எனது 86 வயதிலும் நான் ஒரு  சாய்வு நாற்காலியில் படுத்திருக்காமல் அமர்ந்திருந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன் அதற்கான தைரியத்தை அப்பாவின் வளா்ப்பு எனக்கு கொடுத்திருக்கின்றது. என்னை ஒரு எழுத்தாளனாக இயக்கியதும் என்னுடைய ஆஞா தான் என்று நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கின்றேன். ‘சுந்தர ராமசாமியின்’ புளியமரத்தின் கதை நாவல் வாசித்தபோதும், ‘ஜெயமோகனின்’ டார்த்தீனியம் குறுநாவல் வாசித்தபோதும் என்னுடைய ஆஞாவை அப்படைப்புகளில் கண்டிருக்கின்றேன்.

உங்கள் படைப்புகளில் வரும் தாய் தந்தையர் எல்லோரும் மிகக் கனிவானவர்கள், நிஜ வாழ்கையின் பாதிப்பா அது?

ஒரு கலைஞனை அல்லது ஒரு இலக்கியவாதியை உருவாக்குவதற்கான வித்தையை அறிந்திருக்கின்றார் என்னுடைய ஆஞா அறிந்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அவர் உபதேசம் செய்வதில்லை. ஒரு மனிதன் இப்படித் தான் வாழ வேண்டும் என அவருடைய வாழ்க்கையினூடாக எனக்கு வாழ்ந்து காட்டியவர். இப்போது நீங்கள் என் கதையில் வரும் அப்பா அம்மா கனிவாக இருப்பதாக சொன்னீா்களே, அது தான் யதார்த்த நிலைமை. அப்படித்தான் அவர்கள் என்னை வளர்த்தார்கள். அது என் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான்.

எழுத ஆரம்பித்தபோது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சூழலும், பிரசுர சூழலும் எவ்வாறு இருந்தன?

தெளிவத்தையில் ஒரு ஆசிரியா் வேலை நிரப்பபட வேண்டி இருந்தது. 1956இல் பண்டாரநாயக்கா ஆட்சிக்குப் பிறகு இலங்கையில் இருக்கும் Temporary Permit ஆட்களை அனுப்பி விட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள் அல்லவா.. இலங்கையில் இருப்பவா்களுக்கே உத்தியோகம் இல்லாதபோது ஏன் அவா்களை இங்கு கொண்டு வந்து தற்காலிக பிரஜைகளாக வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அவர்களை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். தெளிவத்தையில் இருந்த ஒரு பாடசாலை ஆசிரியருக்கும்  அரசாங்கத்திடமிருந்து நோட்டிஸ்  அனுப்பப்பட்டுவிட்டது. Send him immediately என்று. அவரை அனுப்பியாச்சு. திடீரென ஒரு ஆசிரியரை அனுப்பிவிட்டதால் அந்த பாடசாலைக்கு ஆசிரியா் வேலைக்கு என்ன செய்வதென்று தெரியாமல்  துரை இப்போது தடுமாறுகின்றார்.

அதற்கிடையில் என்னுடைய அண்ணனுடைய நண்பர்கள் எல்லோரும் எனக்கும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.  இப்படி ஒரு வேலை நிரப்பப்படாமல் இருப்பதால் அவா்கள் “ஜோ உங்களிடம் SSC சான்றிதழ் இருக்கின்றதா” என்று கேட்டார்கள். அதைக் கொண்டு வரச்சொல்லி அந்தத் தோட்டத்திலே அந்த ஆசிரியர் வேலைக்கு என்னை சேர்த்துவிட்டார்கள். எங்கள் ஆஞா பார்த்த அதே வேலை.

தெளிவத்தையிலிருந்துதான் நான் கதை எழுதத் தொடங்கினேன். தெளிவத்தையில் ஆசிரியர் வேலை கிடைத்த பிறகு எனக்கு மாதத்துக்கு நிரந்தரமான சம்பளம் வருமல்லவா.. ஏதோ ஒரு சம்பளம் வரும். நான் உடனடியாக பதுளைக்குப் போய் மீனாம்பிகா, கே அன்ட் கே போன்ற புத்தகக் கடைகளில் பத்திரிகைகளுக்கு ஓடர் கொடுத்தேன். ஆனந்தவிகடன் அனுப்புங்கள், குமுதம் அனுப்புங்கள், கலைமகள்  அனுப்புங்கள் என்று புதிதாக வந்த இதழ்கள் எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தன. இப்படி இந்த இதழ்களை வாசித்து வாசித்து எனக்கு எழுதுவதற்கான உந்துதல் வந்தது. ஆனாலும் ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் கதை படித்துக் கதை எழுத வந்தவர்கள் என்னும் கைலாசபதியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையானவை எனது படைப்புக்கள்.

அப்போது தான் வீரகேசரி மலையகப்பகுதி எழுத்தாளர்களுக்காக தோட்ட மஞ்சரி எனும் ஒரு பகுதியைத் தொடங்கியிருந்தது. அதில் மலையகம் சம்பந்தமான எது வேண்டுமானால் எழுதலாம். ஆனால் சிறுகதைகள் எழுத முடியாது. ஏனென்றால் ஒரு பக்கமோ ஒன்றரை பக்கமோ தான் வீரகேசரி அந்த தோட்ட மஞ்சரிக்கு கொடுத்திருந்தது. அப்படி இருந்தும் நான் சின்னதாக ஒரு கதை எழுதியிருந்தேன். ‘படிப்பு’ என்ற பெயரில். அது தான் என்னுடைய முதல் படைப்பு என்று சொல்வேன். தோட்டத்திலுள்ள மக்களின் கல்வியறிவு எந்தளவில் இருக்கின்றது என்பதைப்பற்றிய கதை. ‘படிப்பு’ என்று போடாமல் ‘படிப்பூ’ என்றுதான் தலைப்பிட்டிருந்தேன்.

நான் எழுதிய முதல் கதையே மலையகத்தின் கல்வி சம்பந்தமான கதையாக அமைந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இந்தச் சூழலில்தான் பிரபல்யமாக பேசப்பட்ட “பாட்டி சொன்ன கதை” சிறுகதையை எழுதினீர்களா?

அறுபதுகளின் ஆரம்பத்தில், வீரகேசரி மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி நடாத்தியது. அந்தப் போட்டிக்கு நான் ஆறு கதைகளை அனுப்பியிருந்தேன். அவற்றில் ஒன்றுதான் முதல் பரிசு பெற்ற எனது “பாட்டி சொன்ன கதை” வீரகேசரி போன்றதொரு முக்கியமான பத்திரிகையில் முதல் பரிசு பெற்றிருந்தால் எனக்கு ஒரு கவனம் கிடைத்தது. 

“பாட்டி சொன்ன கதை” 1963இல் பிரசுரமாகியிருந்தது. என்றாலும் இன்று வரையும் பேசப்படும் கதையாக அமைந்துவிட்டது. இந்தியா, இலங்கை மற்றும் புலம்பெயர் இதழ்களில் பலமுறை மீள் பிரசுரம் பெற்ற கதை அது.

பாட்டி சொன்ன கதை பாராட்டப்பட்ட அளவு பரவலாக எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டது அல்லவா?

இளம் வயதில் கெட்டுப்போன தனது மகளின் கதையை அவளுடைய மகளான பேத்திக்கு பாட்டி சொல்கின்றாள். தன்னுடைய கதையைத்தான் பாட்டி சொல்கின்றாள் என்பது அவளுக்கு தெரியவரும் போதுதான் அவளுக்கு விழிப்புணர்வு வருகின்றது. பாட்டி சொன்ன மாதிரி, என்னுடைய அம்மா கெட்ட மாதிரி நானும் கெட்டிருப்பேனா என்று விழிப்புணா்வு பெறுகின்றாள். இதுவே பாட்டி சொன்ன கதையின் கரு.

இதை “சின்னப் பிள்ளைகளுக்கு சொல்லும் கதையா இது” என்றெல்லாம் கேட்டார்கள். ‘வேண்டாத பொண்டாட்டி  கை பட்டால் குற்றம் என்பது’ போல் ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, சின்னப்பிள்ளைகளுக்கு சொல்லும் கதையா இது என்று கேட்டார்கள். அதற்கு நான் பதிலும் சொல்லியிருக்கின்றேன். கதையைப் பற்றி பேசுபவர்களுக்கே இவ்வளவு தெரியும் என்றால் கதையை எழுதவந்த எனக்கு எவ்வளவு தெரியும். பேத்தியைப்பற்றிய கதை வரும் போது சிறுசுகள் எல்லாம் நித்திரையாகிவிட்டன என்றும் பேத்தி மாத்திரமே விழித்திருந்தாள் என்றும் எழுதியுள்ளேன். அதையும் வாசித்துப் பாருங்கள் என்று அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். இப்போது 50 அல்லது 60 வருடங்களுக்கு பிறகு கூட அந்தக் கதையைப் பற்றி பேசுகின்றார்கள், எழுதுகிறார்கள் என்றால் அது என்னுடைய எழுத்தின் வலிமை.

இந்த நிலம்தான் எங்களுடைய நாடு என்பதை உணரத்தொடங்கிய பருவம் நினைவில் இருக்கிறதா? ஏனெனில் இது என்னுடைய நாடு இல்லை, இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் என்று உங்களுக்கோ உங்கள் தலைமுறையினருக்கோ என்றைக்காவது தோன்றியிருக்கிறதா என்பதை அறிவதற்காக கேட்கிறேன்.

மலையகத்தை, குறிப்பாக தொழிலாளர்களை வழி நடத்துபவா்களாக தலைவர்கள் சிலர் இருக்கின்றார்கள்தானே. தொழிற்சங்க தலைவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் போகத் தேவையில்லை. என்னுடைய செருப்பை அங்கே வைத்தால் அதற்கும் ஓட்டுப் போட்டுவிட்டு போவர்கள் என்று பேசுகின்ற தலைமைகள் எங்களுக்கு தேவையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். இவர்கள் என்றைக்குமே இந்த மக்களுக்கு இது உங்கள் நாடு என்று உணரச்செய்யவில்லை. நீங்கள் இங்கே வந்து உழைத்து காடாக இருந்த இந்த நாட்டை உயிர்ப்பலி கொடுத்து பல தியாகங்கள் செய்து செழிப்பாக உருவாக்கியிருக்கின்றீர்கள், இது தான் உங்கள் நாடு என்று சொல்லிவைக்கவில்லை.

நான் கதைகளில் அதை உணர்த்தியிருக்கிறேன். என்னுடைய கதையில் வரும் பாத்திரங்கள் அந்த மண்ணின் ஜீவன்களாக இருப்பார்களே தவிர இந்த மண் உங்கள் மண் என்று சொல்லும் உபதேசிகளாக இருக்க மாட்டார்கள். அந்த மையக்கருவைக் கண்டுபிடிக்க வேண்டும். தெளிவத்தை என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

1963ல் மலைமுரசு என்ற கண்டியிலிருந்து வெளிவந்த பத்திரிகையில் நான் ஒரு கதை எழுதியிருக்கின்றேன். அந்த கதையின் தலைப்பு ‘நாம் இருக்கும் நாடு’ நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிவோம். இது நமக்கே உரிமையாம் என்பது அறிவோம். அக்கதையில் ஒரு வயதானவர் தள்ளாத வயதில் மரக்கறி சந்தைக்குப் போய் கோவா இலை மற்றும் ஏனைய இலைகளை பொறுக்கி சுமக்க முடியாமல் சுமந்து பன்றி வளர்க்கும் ஒரு முதலாளியிடம் கொடுத்து விட்டு அவர் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இப்படித்தான் நான் அந்தக் கதையை தொடங்கிறேன்.

அன்றொருநாள் இவன் இளைஞனாக இருந்தவேளை நண்பன் ஒருவன் கூறுவான். ‘இந்த இடத்தில் ஒரு நிலம் இருக்கு. வாங்கிப்போடு. தங்கத்தை விதைத்தா தங்கமாக விளையும் இது. கொட்டைப் பாக்கை வைத்து தட்டுவதற்கு ஒரு பொட்டுக் கல் கூட இல்லாத மண் இது. வாங்கிப் போடுப்பா இலகுவாக இருக்கும்.’ என்று. அதற்கு இவன் என்ன பதில் சொல்கின்றான் என்று பாருங்கள். ‘இந்த சிங்களவன் நாட்டில் நான் நிலம் வாங்குவனா. நான் இந்தியாவில் கடல் போன்ற அந்தப் பூமியில் நிலம் வாங்கக் காசு அனுப்பிக்கொண்டிருக்கின்றேன்’ என்கிறான். இவன் அனுப்பின காசு அங்கே போய் சோ்ந்ததா, அவன் நிலம் வாங்கினானா.. என்றால் இல்லை. இப்போது ஒன்றும் இல்லாமல் இறக்கின்ற காலத்தில் இலை பொறுக்கி முதலாளியிடம் கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றான். நாம் இருக்கின்ற நாடு நம்முடையது என்ற உணர்வு அவனுக்கு இருந்திருந்தால் அப்பவே அந்த நிலத்தை வாங்கியிருப்பான்தானே. அதில் ஒரு குடிசை கட்டியிருப்பான்தானே. அதெல்லாம் என்னுடைய கதைகள் எழுப்புகின்ற நுண்ணிய கேள்விகள் சிந்தனைகள்.  ஆனால் அதை ஒருவரும் பார்க்கமாட்டார்கள். தெளிவத்தை என்ன சொல்கின்றார். இந்தியாவுக்கு காசு அனுப்பி ஒருவன் வீணாகப் போய் விட்டான் என்று சொல்கின்றாரா என்று கேட்பார்கள். ஒரு மரம் இருக்கின்றது. பல பேருக்கு அது மரம் என்று தெரியும். சில பேருக்கு அந்த மரத்திலேயும் அந்த இலைகளுக்கு நடுவில் ஒளிந்து இருக்கும் காய்கள் தெரியும். இன்னும் சில பேருக்கு அந்த காய்கள் பழுத்திருப்பது தெரியும். இன்னும் சில கெட்டிக்காரர்களுக்கு அந்த பழத்துக்குள் விதை இருப்பது தெரியும். ஆனால் அந்த விதைக்குள் இன்னொரு மரம் இருக்கின்றது என்பது யாருக்கு தெரிகிறதோ அவன் தான் உண்மையான விமர்சகனாக இருக்கமுடியும்.

‘கத்தியின்றி இரத்தமின்றி’ சிறுகதையில் மலையாக தமிழர்கள் காந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் புகைப்படத்தை வீட்டில் வைத்திருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த தலைவர்களின் புகைப்படத்தை வைக்க மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அன்றைய சமூக யதார்த்தத்தை அது பிரதிபலித்தது என்பதாக உணர முடிகிறது. அதன் பின்புலம் பற்றிச் சொல்லுங்கள்.

கதையின்படி அந்தத் தோட்டத்தில் ஒரு டொக்டர் இருக்கின்றார். அந்த வைத்தியர் இங்கே இருக்கும் இந்தியத் தமிழர்கள் எல்லோரையும் விரட்டிவிட வேண்டும் என்று நினைக்கின்றார். துட்டகைமுனு சொன்னது சரிதான். இவர்கள் எல்லோரும் போனால்தான் எங்களுக்கு கால் நீட்டி படுக்க இடம் கிடைக்கும் என்கின்ற பேரினவாதி. அவரின் செயல்களும் பேச்சுக்களும் அவ்வாறே இருக்கும். அவர் ஒரு பாய்த் தொப்பியை தலையில் அணிந்தவாறு தடியை வீசிக்கொண்டு நடந்து போகையில் தோட்டத்தில் உள்ள நாய்கள் அவரை விரட்டிக்கொண்டு செல்லும். அப்போது அவர் தோட்டக்காட்டு நாய் என்னை விரட்டுகின்றாயா என்று சொல்லிவிட்டுத்தான் போவார். நாயைக்கூட தோட்டக்காட்டு நாய் என்று நினைக்கும்போது அங்குள்ள மனிதர்களையும் தோட்டக்காட்டான்கள்  என்று தான் நினைப்பார். அவர் போய்க்கொண்டு இருக்கும்போது தோட்டத்துக்கு தலைவர் என்று ஒருவர் இருப்பார்தானே. அவரைப் பார்த்துக் கேட்கிறார். “என்ன தலைவர் இன்றைக்கு லீவா..  வேலைக்கு போகவில்லையா?” என்றவர், காந்தியின் படத்தைக்காட்டி “என்ன தலைவர்.. மாலையெல்லாம் போடுகின்றீர்கள். யார் இவர்?” என்று கேட்கின்றார். அப்போது தலைவர் “இவரைத் தெரியவில்லையா உங்களுக்கு? ஒருவன் தனது நாட்டை நேசிக்கின்றான் என்றால் மற்றவர்களுடைய நாட்டை  வெறுக்கின்றான் என்று அர்த்தமில்லை என்று சொன்ன மகாத்மா காந்தி இவர். இவரைத் தெரியாதா உங்களுக்கு?” என்று சொல்கிறார்.

இவரைத் தெரியும் தெரியும். நீங்கள் காந்திக்கும், நேருவுக்கும், சுபாஸ் சந்திரபோசுக்கும்தான் மாலை போடுவீர்கள் என்கிறார்.

இந்த நாட்டிலிருந்து  எங்களை அடித்து விரட்டுவோம் என்று சொல்கின்ற பண்டாரநாயக்காவுக்கும் சேனநாயக்காவுக்கும் நாங்கள் மாலை போடவேண்டுமா? அந்த உணர்வு எப்படி எங்களுக்கு வரும் என்பதுதான் கத்தியின்றி இரத்தமின்றி கதை. அதே நேரத்தில் எவ்வளவு தான் கத்தியின்றி இரத்தமின்றி என்று அகிம்சை பேசினாலும் தோட்டத்து மக்களுக்கு விரோதமாக செயற்படும் கணக்காளரையோ அல்லது பெரிய கண்காணியையோ தலைவர் வெட்டுகின்றார். அந்தக் கத்தியில் வழியும் இரத்தம் கூட அவனை ஒரு மாதிரி பார்க்கின்றது. இதுதான் கதை.

சோதனை என்ற கதையில் யாழ்ப்பாணத்திலிருந்து மலையக பாடசாலைகளுக்கு கற்பிக்க வரும் ஆசிரியர்கள் பற்றி எதிர்மறையான பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். அதற்காக கைலாசபதி  ‘யாழ்ப்பாணத்து வாத்தி தெளிவத்தைக்கு வில்லன்’ என்றுகூட சொன்னார் அல்லவா. அதன் பின்னணி என்ன?

இப்போது கூட ‘மலையக சிறுகதைகளில் கல்வி உரிமைகள் பற்றிய கரிசனம்’ என்று கல்வியாளர் முரளிதரன் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கின்றார். அதில் அவா் ‘கல்விக்கான உரிமையை குறித்து போராடுதலும் பின் காலனித்துவ இலக்கியத்தின் பண்புகளில் ஒன்றே என கூறவேண்டும். அப்படிச் சொல்லுகின்ற ஒரு முழுமையான கதையாக தெளிவத்தை ஜோசப்பின் சோதனை கதை அமைகின்றது’ என்று சொல்கின்றார். சோதனை கதையில் ஒரு யாழ்ப்பாணத்து ஆசிரியர் தோட்டத்துப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி்க்கொடுக்கின்றார். அவருடைய குறிக்கோள் என்னவென்றால் இப்போது 50 ஆக இருக்கும் இந்த பிள்ளைகளை 100 ஆக்கிக் கொண்டால்  100 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் போதாது இன்னொரு உதவியாளரை போடுங்கள் என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வீட்டில் சும்மா இருக்கும் தனது மனைவியையும் கூப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றார். அதன் நோக்கம் மனைவியையும் கூட்டிக்கொண்டு வந்து பதவியில் அமர்த்துவதே தவிர கூடுதலான பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்பதல்ல. ஒரு சமுதாயத்தின் கல்விக் கண்களை சின்ன வயதிலேயே குத்திவிடும் ஒரு பெருங் கைங்கரியத்தை இவர்கள் செய்கின்றார்கள் என்பதை அக்கதையின் ஊடகச் சொன்னேன். இதைத் தான் கைலாசபதி தூக்கிப் பிடித்துக் கொண்டார். யாழ்ப்பாணத்து வாத்தி தெளிவத்தைக்கு வில்லன் என்றார்.

பிற்காலத்தில் ‘யார் இந்த யாழ்ப்பாணத்தான்’ என்று ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரையை சிவத்தம்பி எழுதினார் . அதில் மலையக மக்கள் இந்த யாழ்ப்பாணத்தானைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதற்கு தெளிவத்தை ஜோசப்பின் இந்த வரிகளை நான் உங்களுக்கு சமர்ப்பணிக்கிறேன் என்று கதையில் வருகின்ற சில வரிகளையும்  குறிப்பிட்டிருக்கின்றார்.

அன்றைய காலத்தில் உங்களுடைய படைப்புகள் எப்படி எதிர்கொள்ளப்பட்டன.. ஆரம்பத்தில் மு.நித்தியானந்தன், கைலாசபதி ஆகியோர் கதைகளை நிராகரித்ததாக அறிந்திருந்திருக்கிறோம்…

அவர்கள் நிராகரித்தது மட்டுமல்ல.. இவர் ஏன் எழுதுகிறார் என்று கேட்டார்கள் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் லெனின் மதிவாணன், இன்னுமொரு புதிய எழுத்தாளர், அவருடைய பெயர் எனக்கு நினைவில்லை. அவர்கள் ‘தெளிவத்தை ஜோசப்பும் கைலாசபதியும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார்கள். அதில் ‘தெளிவத்தை ஜோசப், கைலாசபதி தன்னுடைய கதைகளைப் பற்றி பேசவில்லை என்று சொல்கின்றார். அதை ஒதுக்கி வைப்பதற்கான காரணம் இவருடைய கதைகளில் பாலியல் இருந்தது தான்” என்று குறிப்பிடுகிறார்கள். என்னுடைய படைப்புக்களை எவர் ஆராய்ந்து இருக்கின்றார்கள். எந்தக் கதையில் பாலியல் இருக்கின்றது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நான் என்ன எஸ்.பொ வா..? இல்லையே. இவர்கள் அப்படி அர்த்தம் கற்பிக்க முயன்றவர்கள். முயல்பவர்கள்.

பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜெயசீலன் ஜீவநதியில் எழுதிய கட்டுரையில் “தெளிவத்தை ஜோசப் ஒரு முற்போக்கான எழுத்தாளர். ஆனால் இந்த மாக்ஸிச கோட்பாடுகளை தன்னுடைய பாத்திரங்கள் மூலமாக வெளிக்கொண்டுவரும் தன்மை அவரிடம் இல்லாததால்தான் இவர்கள் அவரை கவனத்தில் எடுக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார். அதுதான் உண்மை. அதனால்தான் ஏசினார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. நான் மரியாதையாக இருக்க விரும்புகிறவன். எழுத வந்த இடத்தில் ஏன் இவர்களிடம் ஏச்சு வாங்க வேண்டும் என்ற காரணத்தாலேயே ஒரு பத்து வருடங்கள் பேனாவை கீழே வைத்துவிட்டேன்.

அதே மு.நித்தியானந்தன் பின்னர் நாமிருக்கும் நாடே என்ற உங்களது முதலாவது சிறுகதை தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டார் அல்லவா?

எழுபதுகளின் பிற்கூறுகளில் அது நிகழ்ந்தது. அதை ஒரு மனந்திருந்தலாகவே நான் கருதினேன். மார்க்சிய முற்போக்கு அணியினரின் பிரச்சாரகராகவும் குறிப்பாக பேராசிரியர் கைலாசபதியின் வலதுகரமாகவும் திகழ்ந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் என்னைத் தேடி கொழும்பில் நான் உத்தியோகம் பார்த்த அலுவலகம் வந்தார். வைகறை என்ற பதிப்பகத்தை நண்பர்கள் சிலருடன் இணைந்து தொடங்கி இருப்பதாகவும் முதல் நூலாக என்னுடைய சிறுகதைத் தொகுதியைப் போடவே விரும்புவதாகவும் என்னுடைய ஒப்புதல் கேட்கவே வந்ததாகவும் கூறினார். 1979 டிசம்பரில் ‘நாமிருக்கும் நாடே‘ வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட முதல் மலையகத் தொகுதி என்னும் பெருமையுடன் யாழ் ரிம்மர் மண்டபத்தில் அதே 1979 டிசம்பரில் வெளியீட்டு விழாவும் நடந்தது.

மு.நித்தியானந்தன், தெளிவத்தை ஜோசப், பத்மநாப ஐயர்

எழுதத் தொடங்கி ஒரு கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த எனது முதல் நூல் அது. எனக்கு, மலையகத்துக்கு ஓர் அரச சாகித்திய விருதிகைப் பெற்றுக்கொடுத்த முதல் நூல் அது. 60களில் கதைகள் எழுதப்போய் நான் சுமந்த அத்தனை சிலுவைகளையும் அதற்குக் கூடுதலான சிலுவைகளையும் என்னுடைய நூலை வெளியிடப்போய் 80களில் சுமந்தவர் நித்தியானந்தன்.

எழுத்தின் மூலமாக சமுதாயத்தை திருத்துதல் என்பதெல்லாம் மந்திரத்தால் செய்யும் வேலை இல்லை.

முற்போக்குப் பெரியவர்களால் அடக்கி ஒடுக்கி உட்கார்த்தி வைக்கப்பட்ட என்னை, ‘தெளிவத்தைக்கு ஈடாக எழுதக்கூடியவர்களாக இலங்கையில் இரண்டு மூன்று பெயர்களையே குறிப்பிட முடியும்’ என்ற முன்னுரையுடன் அலங்காரமாகத் தூக்கி நிறுத்தியவர் நித்தி.

கண்டன விமர்சனங்களுக்கான எதிர் விமர்சனப் பதில்களின் மூலம் அவர்களை வாய் மூடச்செய்தவர் அவர். விமர்சனங்களுக்குப் பயப்படாமல் அவற்றை எதிர்கொள்ளும் மனப்பலத்தை இந்த நூல் வெளியீட்டின் மூலம் எனக்குத் தந்தவர் அவர். 83களுக்குப் பின்னான நாட்களில் அவர் இலங்கையிலிருந்தே காணாமலாக்கப்பட்டதற்கான வேர்கள் இதிலிருந்தும் வளர்ந்தவைகள்தான்.  

தொழிற்சங்கத்துடன் அல்லது கட்சிகளுடன்  இணைந்து செயற்படாதது.. அல்லது அவற்றை எழுத்துக்களில் விமர்சித்தது.. இவைதான்  நீங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமா..?

அப்படியும் இருக்கலாம். ஆனால் முக்கியமான காரணம் அவர்களுடைய முற்போக்கு அணியில் நான் ஓடிப்போய் இணைந்துகொள்ளாததுதான். அமைப்பு ரீதியான இயக்கங்களை தெளிவத்தை கிண்டல் செய்வார் என்று கைலாசபதி சொல்லியிருக்கின்றார். பிறகு எழுத வந்த எழுத்தாளர்களுக்கு ஆதர்சனமான எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என்று சொல்லிவிட்டு ஆனால் மக்களுடைய போராட்டங்கள் அவருடைய கதைகளில் இருக்காது என்றும்  சொல்கின்றார்.

இதுவரை யாழ்ப்பாணம் வராத தெளிவத்தை எப்படி யாழ்ப்பாணத்து ஆசிரியரைப் பற்றியும் யாழ்ப்பாணத்து பெண்ணைப் பற்றியும் எழுதுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மலையக தோட்டங்களுக்கு வந்த யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் நான் எழுதினேன். இவர்கள் என்னை யாழ்ப்பாணத்து விரோதியாகக் காட்ட, முத்திரை குத்த முயன்றார்கள்.

இரண்டு கதாபாத்திரங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு என்னை யாழ்பபாணத்துக்கு எதிரானவனாகச் சொன்னால் அந்தக் கூற்றில் ஏதோ சூதுள்ளது என்று சொல்லியிருக்கின்றேன். காரணம் அதுவல்ல. வேறு ஏதோ இருக்கின்றது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இவனை அடக்கி வைக்க வேண்டும் என்பதே குறி.

நான் தொழிற்சங்கங்களில் இயங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. முற்போக்கு அணியில் இருந்திருக்க வேண்டும். அப்போது இப்படி விமர்சித்திருக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை எந்த அணியிலும் இருந்து கொண்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் என்னைச் சட்டம் போட்டு மாட்டுவதை நான் விரும்பவில்லை.

இப்படியான காரணங்களால் இவர்களிடம் கூடுதலாக ஏச்சு வாங்கிய ஒருவன் நான். அதை  வசைபாடல் என்றுதான் சொல்லுவேன்.  ‘லில்லி’ என்று  ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு மாட்டைப் பற்றிய கதை. ‘அது’ என்று ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு குரங்கைப் பற்றிய கதை. சுந்தர ராமசாமியின் கிடாரிக்கு ஈடானது என்று பேசப்பட்டது. இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதை அந்த ‘அது’. கலைமகளில் வந்தது. இங்கே மனிதர்கள் சாகின்றார்கள், இவர் மாட்டைப் பற்றியும் குரங்கைப்பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார் என்று விமர்சனம் வைத்தார்கள்.

கடுமையான வசைகளை வாங்கியதால் பத்துவருடம் எழுதாமல் இருந்தீர்கள் என்று சொல்கிறீர்கள். இலக்கியம் தேவையில்லை. இதனை தவிர்ப்போம் என்று நிரந்தரமாக முடிவு செய்தீர்களா..

அப்படிக் கூறிவிட முடியாது. ஒரு விமர்சகன் எழுத்தாளனை நெறிப்படுத்தவேண்டும். வேறு வேறு காரணங்களுக்காக அவனை வசைபாடி வசைபாடி அவனை முடக்கிவிடக் கூடாது. எழுதவரும் அனைவருமே சமூகத்திற்குத் தேவையானவர்கள் என்றார் மு.தளையசிங்கம். அவரும் இவர்களால் மறுக்கப்பட்டவரே.

இன்று திரும்பிப் பார்க்கும்போது ஒரு தாசாப்தம் எழுதாமல் விட்டுவிட்டேன் என்பது இழப்பாகத் தோன்றவில்லையா?

எழுதாத அந்தக் காலத்தில் நான் கூடுதலான ஒரு வாசகனாக இருந்தேன். அப்போது தெரிவு செய்து வாசிக்கப்பழகிக்கொண்டேன். நாடகங்கள் பார்த்தேன்.

பாலேந்திராவின் நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள் அதன் பின் எழுதியவைதான். அதற்கு முந்தைய காலத்தில் சிறுகதை எழுதாதவர்கள் எழுத்தாளர்கள் இல்லை என்ற குறுகிய சிந்தனையுடன் நான் இருந்திருக்கின்றேன். மு. நித்தியானந்தன் “நாமிருக்கும் நாடே” தொகுதியைப் பதிப்பித்து வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தியபின் இந்த விமர்சகர்களுக்கு பதில் சொல்கின்ற ஒரு தைரியம் எனக்கு வந்தது.  புதுமைப்பித்தன் சொன்னார் “உங்களுடைய விமர்சனங்களால் உங்களை நீங்கள் அளந்து கொள்கிறீர்கள்” என்று. அவர்கள் நீதிபதிகளும் இல்லை. நான் குற்றவாளியும் இல்லை என்னும் சிந்தனையெல்லாம் எனக்குள் அந்த 10 வருட இடைவெளியில் ஏற்பட்டவைதான்.

அன்றைக்கு உங்களுக்கு கிடைத்ததைப்போலவே கடுமையான வசைகளை  எதிர்கொள்ளும் இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு உங்களுடைய அனுபவத்தின்படி என்ன ஆலோசனையை கூறுவீர்கள்?

இப்போது அந்த மாதிரி விமர்சிக்க யாரும் இல்லை. நான் இந்த விமர்சனங்களால் அடிபட்டதால்தான் என்னால் இன்றும் நிலைத்து நிற்க முடிகின்றது. என்னுடைய எழுத்தின் ஆளுமையால் தான் இவர்களுக்கு அடங்கிப் போக முடியவில்லை என்பது எனது நம்பிக்கை. “எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆளத்தெரிந்தவனாக இருக்க வேண்டும்” இப்போதைய நம் தலைமுறையினர் எந்த ஒரு எழுத்தாளருடைய தனிப்படைப்பை பற்றியும் பேசுவது இல்லை. விமர்சன ரீதியாக ஆராய்வதில்லை. இந்தியாவில் அப்படி இல்லை. அங்கே விமர்சனங்கள் மூலமாகவும் ஆய்வு மூலமாகவும்தான் அவர்கள் ஒரு எழுத்தாளனை பரவலாக கவனப்படுத்துகிறார்கள். நம்மிடையே அவை அறவே இல்லை.

ஈழத்தில் இன்று விமர்சன மரபே இல்லை என்கிறீர்களா?

ஈழத்தில் ஒரு காத்திரமான விமர்சனமுறை இல்லை. ஒரு எழுத்தாளன் நெறி கொள்ளும் அளவுக்கு யாரும் விமர்சனம் செய்வதில்லை. நூல் அறிமுகங்களே கூடுதலாகவும் கூடுமானவர்களாலும் செய்யப்படுகின்றன. படைப்பாளிகளை விடவும் விமர்சகர்களே கூடுதல் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது இலங்கை. இந்தியாவில் தமிழ் இலக்கியம் என்றதும் மனதில் எழும் பெயர்கள் புதுமைப்பித்தன், கு.பே.ரா, மௌனி என்று தொடங்கும். ஆனால் இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பிதான். இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்மந்தன் என்றோ டானியல், கணேசலிங்கன், அரசரத்தினம் என்றோ வருவதில்லை.

படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது முன்னோடி விமர்சகர்கள் முன்வரவில்லை. தங்களுக்கான உச்ச இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றார்களே தவிர ஒரு விமர்சனப் பரம்பரையை உருவாக்க முயலவில்லை என்பதே உண்மை. ஆனால் படைப்பாளிகள் முன்பைவிடவும் தீவிரமாக உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 

உங்களுடைய எழுத்துலகத்திற்கான முன்னோடி என்று யாரையும் கருதுகிறீர்களா?

எழுத ஆரம்பித்த போது நானாகத்தான் எழுதினேன். “தானே பாதையும் வெட்டி பயணமும் செய்த தெளிவத்தை சாதனையாளரே” என்று மு.நித்தியானந்தன் சொல்லியிருக்கின்றார். நாங்களெல்லாம் இலக்கியம் தெரிந்தவர்களாக இலக்கியம் படித்தவர்களாக எழுந்துவந்த பிறகு எங்களுடைய முன்னோடிகளைப் பேண வேண்டும் என்று  நடேச ஐயர், மீனாட்சி அம்மாள், கே.கணேஷ், சி.வி.வேலுப்பிள்ளை, கிருஷ்ணசாமி போன்றவர்களைத் தேடித் தேடி எடுத்தோம். மலையக இலக்கியம் 1960 க்கு பின்னர்தான் எழுச்சி பெற்றது என்றாலும், அதற்கான பாதை 1930 களிளேயே போடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாதையிலேதான் இந்த எழுச்சி நடந்தது என்கிற மயக்கம் யாருக்கும் தேவையில்லை என்று இன்றைக்கும் நான் சொல்வேன்.

அசோகமித்திரனை உங்களது எழுத்துக்கு ஓரளவு நெருக்கமானவர் என்று சொல்லலாம். வடிவ அம்சம், சொற்சிக்கனம், நடுத்தர வாழ்க்கை சார்ந்த லௌகீக பார்வை போன்றன அதற்கான காரணங்கள். உங்கள் மீது அவர் தாக்கம் செலுத்தி இருக்கிறாரா?

மனம் திறந்து சொல்வதென்றால் நான் அசோக மித்திரன் கதைகளை அப்போது வாசித்தது கிடையாது. பின்னர் ஓரளவு வாசித்த பின்பும் அசோகமித்திரன் நல்ல ஒரு எழுத்தாளன் என்ற நினைப்பில் மாற்றமில்லை. He is a great writer. ஆனால் நான் இரசித்து படித்தவர் என்று சொன்னால் அது இந்திரா பார்த்தசாரதிதான். அவருடைய  தந்திரபூமி, அதனுடைய எழுத்து நடை அதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்திரா பார்த்தசாரதியினுடைய நாவல் “தந்திரபூமி” தீபத்தில் தொடராக வந்த  என்.எஸ்.எம்.ராமையா என்னிடம் கேட்டார் “ஜோ தந்திரபூமி வாசிக்கின்றீர்களா?” என்று. அதற்கு நான் “பார்த்தசாரதிகளை எல்லாம் நான் வாசிப்பதில்லை” என்று சொன்னேன். இந்திரா பார்த்தசாரதி என்றால் நா.பார்த்தசாரதி தான் ‘இந்திரா’ என்று முன்னால் போட்டுக்கொண்டு எழுதுகின்றார் என்று அப்போது நினைத்திருந்தேன். பார்த்தசாரதி நல்ல பத்திரிகையாளர், ஒரு இலக்கிய செயற்பாட்டாளர் என்று ஒத்துக்கொண்டாலும் அவர் ஒரு படைப்பாளி என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.  அவர் அகிலனின் பாணிதான். அகிலன் கல்கி, உண்டாக்கிய பரம்பரை. அப்போது என் எஸ் எம் சொன்னார் “சீச்சீ பார்த்தசாரதி இல்லை. இந்திரா பார்த்தசாரதி. வாசிக்க வேண்டியவர். நீங்க கட்டாயம் வாசியுங்கள்” என்று. அந்த மாதிரி எழுத்தாளர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நான் அப்படி நிறைய செய்திருக்கின்றேன். நான் வழிகாட்டுகின்றேன் என்று சொல்லாமலேயே மற்றைய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டல்களைச் செய்திருக்கின்றேன். அதன் பிறகு ஆரம்பத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கினால் எனக்கு இந்திரா பார்த்தசாரதி மீது ஒரு லயிப்பு வந்தது.

நான் ஆரம்பத்தில் கதை எழுதும் போது கொஞ்சம் கூடுதலாக வாசித்த எழுத்தாளர் என்றால் ஜெயகாந்தனை சொல்லலாம். உங்கள் எழுத்தில் நான் ஜெயகாந்தனை காண்கின்றேன் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள் . ‘அழகு தெரிந்தது’ என்றொரு கதை எழுதியிருந்தேன். அந்தக் கதை வந்த அடுத்த வாரம் எனக்கு இரண்டு கடிதங்கள் வந்தன. ஒரு கடிதம் எழுதியது செந்தூரன். அக்கடிதத்தில் “கதையை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து கடைசி பந்தி வரும் வரை உங்களை அறைய வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அந்தக் கடைசி பந்தி இருக்கின்றதே! இன்றைக்கும் அந்தக் கதையை வாசித்தால் அந்தக் கடைசி பந்தியை வாசிக்கும் போது எனக்கு குரல் அடைக்கும்.  அந்தக் கடைசி பந்தியை வாசிக்கும் போது எங்களிடமும் ஒரு ஜெயகாந்தன் இருக்கின்றான் என்கிற எண்ணம் எனக்கு வந்தது” என்று எழுதியிருந்தார். மற்றைய கடிதம் சாரல்நாடான் எழுதியது. “ஜோ உங்களுடைய அழகு தெரிந்தது கதையை வாசித்தேன். கதையின் முழு சாராம்சத்தையும் கடைசி வரியில் அல்லது கடைசி பந்தியில் வைப்பது “ஓ.ஹென்றியின்” பாணி என்று அவர் எழுதினார். நான் ஓ.ஹென்றி எல்லாம் நான் வாசித்தது கிடையாது.

மிக நேரிடையாக எளிமையாக எழுதுகிறீர்கள். அப்படியொரு கொள்கையால் அவ்வாறு எழுதுகிறீர்களா? அல்லது அது உங்கள் இயல்பா?

இயல்பாகவே எனது எழுத்து அமைவது அப்படித் தான். நான் என்னுடைய படைப்பின் உரையாடல்களுக்காக சொற்களைத் தேடுவதில்லை. என்னுடைய பாத்திரம் எதுவோ அது எப்படிப் கதைத்திருக்கும் என்பது மட்டும்தான் என்னுடைய கவனம்.

உங்களுடைய எழுத்துகளில் காட்சி சித்தரிப்புகள் குறைவானவை. மலையக நிலப்பரப்பை நுட்பமாக பார்க்க முடிவதில்லை. அப்படி சித்தரிக்கும் சில இடங்களில் கூட அதிகம் சிரத்தை எடுப்பதில்லை. திரைப்பட கேமரா ஷொட்போல சில சட்டகங்களை மட்டும் காட்டுகிறீர்கள். படிம அம்சங்கள் உங்கள் கதைகளில் வருவதில்லை. இதனை உங்களுடைய கலை குறைபாடாக சொல்லலாமா?

அப்படிக் கூறிவிடவும் முடியாது. கைலாசபதி கூட ஓரிடத்தில் சொல்லியிருக்கின்றார் தெளிவத்தையின் கதையில் வரும் பாத்திரங்கள் அந்தக் காட்சியின் ஊடாக மேல் எழும்புகின்றன. மலையகம் என்பதை தனியாக வர்ணிக்காமல் அந்தப் பாத்திரத்தின் ஊடாக வர்ணிப்பவர் தெளிவத்தை என்றும் சொல்லியிருக்கின்றார். அதேபோல நெல்லை கா பேரன் ஒரு நாள் ஹட்டன் போய் வந்தாராம். ‘இது தான் என்னுடைய முதல் மலையக பயணம். ஆனாலும் ஏற்கனவே வந்து போன ஒரு உணர்வு எனக்கு இருந்தது. அந்த உணர்வு தெளிவத்தையின் கதைகளால் எனக்கு வந்தது என்பதை பிறகு உணர்ந்தேன்” என்று குறிபிட்டிருக்கிறார்.

அமரர் கே.டானியலும் ‘பிரதேசங்களைப் படம் பிடித்துக்காட்டுவதில் இவர் வெற்றிபெற்றுள்ளார். நான் இதுவரை வாசித்த மலைப் பிரதேசங்களைக் களமாகக்கொண்ட படைப்புக்களில் காணமுடியாத மலையடிவாரங்களை தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் தரிசிக்கின்ற அனுபவம் அருமையானது’ என்று குறித்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரை அந்நியமாக்கப்பட்டு அநாமதேயர்களாக விடப்பட்ட இந்த மக்களையும் உயிர்த்தியாகம் செய்து அவர்கள் உருவாக்கிய இந்த மண்ணையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும் . வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களே எனது படைப்புக்கள் என்பேன்.

மலைய மண்ணைச் சேர்ந்த ஒருவரை சித்தரிப்பதன் ஊடாக அவனுக்குள் ஆழ்ந்திருக்கும் ஆழ்மன இயல்புகளை, புறவய இடர்களை படைப்பில் கொண்டுவரவே விரும்பி இருக்கிறீர்கள் இல்லையா?

ஆம். ஏனென்றால் என்னைச் சுற்றி வாழ்ந்த இந்த மலையக மக்களைப் பற்றிய கதைகள் நிறைய இருந்தன. அவர்களின் ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு  வாழ்க்கையும், அவர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் கதைகள் தான். வாழ்வியல். அதனால் என்னுடைய எழுத்தை அதற்கான ஒரு அரங்கமாக அல்லது ஒரு மேடையாக நான் ஆக்கிக்கொண்டேன். பேராசிரியர் சிவத்தம்பியின் குறிப்பு இவ்விடத்திற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். ‘தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையக மக்களின் வாழ்க்கை பற்றிய எமது அறிவு குறைப்பட்டதாகவே இருக்கும். உண்மையில் அவருடைய மிக முக்கியமான சாதனை சராசரி மலையகத் தமிழன் ஒருவரின் உளப்பாங்கையும் கண்ணோட்டத்தையும் சித்தரிப்பதாகும். இதனால் இவருடைய எழுத்துக்களில் அகநிலை எதார்த்தமும் புறநிலை பார்வைத்தெளிவும் காணப்படுகின்றன’

உங்களுடைய கதை மாந்தர்களுக்குப் பெரும் தத்துவ சிக்கல்கள் என எதுவும் இருப்பதில்லை. அவர்கள் அன்றாட நெருக்கடிகளில் அழுத்தப்பட்டு அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்கள். இந்த எல்லையை நீங்கள் திட்டமிட்டு உருவாகியதா?

இல்லை. நான் திட்டமிட்டு எனது படைப்புக்களை ஆக்குவதில்லை. என்னை பொருத்தவரையில் எங்களுக்கு தெரிந்த மக்கள், எங்களுக்கு தெரிந்த வாழ்வு அதையே இன்னும் எழுதி முடிக்கவில்லை. எனக்கு 86 வயது என்றவுடன் ஒரு பயம் வருகின்றது. மரணத்துக்கான பயம் அல்ல. இந்த மக்களைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற பயம்.

மலையகத்திற்கு தனித்துவமான நாட்டார் வழக்கும் பண்பாடும் உண்டு. உங்களுக்கு அவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டா? ஏனென்றால் உங்களது கதைகளில் அவற்றைப் பெருமளவுக்கு காணமுடியவில்லை.

ஏடேறாத பாடல்கள் என்றுதான் இவற்றை சொல்வார்கள்.  அந்த  நாட்டார் பாடல்கள் என்னும் மண்ணிலிருந்துதான் இந்த மலைய இலக்கியம் என்னும் பயிர் முளைத்து வளர்ந்து வந்தருக்கின்றது. இந்த மலையக நாட்டார் பாடல்களைத் தேடிச் சேகரித்த பெருமை சி.வி.வேலுப்பிள்ளைக்கானது. எனது கதை மாந்தர்களை உயிர்ப்பிக்க நாட்டார் பாடல்களின் துணை எனக்கு வேண்டியிருக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம். என்றாலும் இடத்துக்கு ஏற்றாற்போல குறுநாவலான பாலாயி போன்ற சில படைப்புக்களில் இப்பாடல்கள் இடம்பெற்றும் உள்ளன. 

இப்போது புனைவு பரப்பில் என்ன எழுதிக்கொண்டு உள்ளீர்கள்?

நான் கடைசியாக ஒரு கதை எழுதி ஏறக்குறைய 6 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன். “வேடிக்கை மனிதர்கள் அல்ல.” என்ற அந்தக் கதை என்னுடைய ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகளில்’ இருக்கின்றது. அதற்குப் பிறகு நான் எழுதவில்லை. அட்டவணை போட்டுக் கதை எழுத என்னால் முடிவதில்லை.

இப்போது ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அந்தக் கதையின் சாராம்சத்தை மாத்திரம் சொல்கிறேன். கொழும்பில் நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ஒரு சிங்களவர். இலக்கிய வாசகர். அவர் அகாலமாக இறந்து விட்டதால் அவருடைய மனைவி அந்த வீட்டை எங்களிடம் வாடகைக்குக் கொடுத்துவிட்டு செல்லும்போது வீட்டில் நிறைய சிங்களப் புத்தகங்கள் இருந்தன. அவருடைய புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு அலுமாரியில் போட்டு “இது இருக்கட்டும். இது என்னுடைய கணவருடைய விருப்பம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு அவர் போய் விட்டார்.

எவ்வளவு நாள் புத்தகங்கள் அலுமாரியில் இருக்கும்? ஒரு நாள் அலுமாரி உடைந்து விழுந்தது அப்போது நான் அவருடைய மனைவியைக் கூப்பிட்டு கேட்டேன். அதையெல்லாம் எடுத்து ஒரு பக்கம் அடுக்கி வைத்துவிட்டு கரையான் அரித்ததை எல்லாம் எரித்து விடுங்கள் என்று சொன்னார். கரையான் அரித்த புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கூட்டி எரிக்கும் போது அவ்வளவும் மார்ட்டின் விக்கிரமசிங்கவுடைய நாவல்கள் என்பதைப் பார்த்தேன். அவ்வளவு புத்தகங்களையும் நான் அங்கு போட்டு எரிக்கும் போது, 1981 ஜுனில் எரிக்கப்பட்ட யாழப்பாண நூலகம் என்னுடைய நினைவில் வந்து வந்து போனது. ஆனால் நான் வேண்டுமென்று இந்த சிங்கள நூல்களை எரிக்கவில்லை. ஆனால் தமிழ் நூல்கள் கொழுத்தப்பட்ட அந்தத் துயர்…. அதனை மையமாகக்கொண்டு கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

உங்களது படைப்புகளில் முற்போக்கு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வெற்றுப் பிரச்சாரமாக அல்லாமல் கலையாக ஒலிக்கிறது. இலக்கியம் சமூக மாற்றத்திற்கான கருவி என்று கருதுகிறீர்களா?

இலக்கியம் மனித வரலாற்றின் பதிவாக இருக்கும். நான் 1960 களில் எழுதிய கதைகளைப்பற்றி இப்பொழுது பேசுகின்றவர்கள் 1960களில் மலையகம் எப்படி இருந்தது, மலையக தோட்டத்தின் நிர்வாகம் எப்படி இருந்தது, மலையகத் தோட்டம் எவ்வாறு இருந்தது, இவர்கள் எப்படி கொழுந்தை அருந்தும் பானமாக்கினார்கள் என்று படிக்கின்றபோது தெளிவத்தை ஜோசப் அந்தப் பிரதேசத்தின் அடையாளமான, அதன் முக்கியமான எழுத்தாளர் என்று என்னைச் சொல்லுகின்றார்கள்.

ஆனாலும் முற்போக்குவாதிகளினுடைய கோட்பாட்டு ரீதியிலான கருத்துக்கள் என்னுடைய கதைகளில் இல்லை என்பதனால்தான் எனக்கு பிரச்சினை வந்தது. போர்வாளை விட கூர்மையானது எழுத்து என்று சொல்லிக்கொள்கின்றோம். அந்த ஆதி நாளில் இருந்து இன்று வரைக்கும் எழுத்தாளர்கள் மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் என்பவற்றை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இருந்தும் எந்தப் பிரச்சினையாவது தீர்ந்திருக்கின்றதா இன்றைய மனிதர்களுக்கு? இல்லை தானே. என்னுடைய ‘காலங்கள் சாவதில்லை’ நாவலை முற்போக்கு எழுத்தாளர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்கள். கூடுதலான விமர்சனத்துக்கு உள்ளான நாவல் என்பதால்தான் மறுபதிப்பு போட்டிருக்கின்றார் குமரன். அந்த நாவலைப் பற்றி பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் அமரர் கா.அருணாசலம் தெளிவத்தை பிரச்சினைகளைச் சொல்கின்றார், ஆனால் அதற்கான தீ்ர்வைச் சொல்கின்றார் இல்லை என்று முற்போக்காளர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், காலம் காலமாக பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் சொன்னவர்கள் எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இப்போது ஒரு மாதத்துக்கு முன்னர் கூட ஒருவர் ‘பிரச்சினைகள் மாத்திரம் தான் பேசப்பட்டிருக்கின்றது  தீர்வு எதுவும் இல்லையே என்று என்னிடம் கேட்டார். அப்போது நான் அவருக்குச் சொன்னேன். முதலாவது பிரச்சினை என்னவென்று தெரிய வேண்டும். மலையகத்தின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதவர்கள் போய் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பதால் தான்  இந்த மக்களுக்கு விடிவில்லை. விடிவுக்கான தீர்வை தேடுவதற்கு முதலில் பிரச்சினை என்னவென்று தெரிய வேண்டும். முதலில் இந்த மக்களுடைய பிரச்சினை என்ன, அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

எழுத்தின் மூலமாக சமுதாயத்தை திருத்துதல் என்பதெல்லாம் மந்திரத்தால் செய்யும் வேலை இல்லை. நான்கு கதைகளை எழுதிவிட்டு நாளைக்கு சரியாகிவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம். குறிப்பாக அந்தந்த மக்களுக்கு அவர்களுடைய பிரச்சினை தெரியத்தொடங்கினால் அதிலிருந்து வெளியேற சிந்திப்பார்கள். பாரதிதாசன் சொல்கின்றார். “கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்ற அறிவுமிலார்” என்று. முதலாவது அந்த அறிவு வர வேண்டும். எங்களுக்கு குடிப்பதற்கு கஞ்சி இல்லை என்பதற்குரிய காரணம் என்னவென்று அறியும் அறிவு முதலில் வேண்டும். என்னுடைய படைப்புகள் அதைத் தான் செய்கின்றன. குறிப்பாக இலக்கியம் அதைத் தான் செய்யும் என்று நான் நினைக்கின்றேன்.

திலகர் இறுதியாக வெளியிட்ட “மலைகளைப் பேசவிடுங்கள்” புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். “எழுத்தும் இலக்கிய மொழியும் எதிர்த்துத் தாக்கும் போர்க்கருவி போன்றது. அதன் கூர்மையும் வேகமும் அதன் பேசு பொருளை மையமாகக் கொண்டவை. அவை இன்றும், நாளையும், நாளை மறுதினமும் என்ற எதிர்காலத்தைச் சேர்ந்தவை. அரசும் அதன் அதிகாரங்களும் அரசின் தந்துவங்களும் நெறிமுறைகளும் நேற்றை சார்ந்தவை; பழையவை” என்று ரஷ்ய கவிஞர் ‘ஜோசப் பிராஸ்கி’ சொல்லியிருக்கின்றார். இந்தக் கவிதையுடன் நான் என்னுடைய முன்னுரையை முடிக்கின்றேன் என்று எழுத்தியிருந்தேன். எழுத்தும் அதனுடைய மொழியும் கூர்மையானவை பலம் வாய்ந்தவை. இன்றைக்கானவை, நாளைக்கானவை, நாளை மறுதினத்துக்கானவை.

எழுத்துக்களுக்கு ஊடாக தீர்வு கேட்பவர்கள்,  அன்றைய மாக்ஸிச எழுத்தாளர்களில் இருந்து இன்றைய வரைக்கும் எந்தத் தீர்வை மக்களுக்குத் தேடிக் கொடுத்திருக்கின்றார்கள். அப்படி என்றால் ஏன் நாங்கள் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி இன்றைக்கும் எழுதிக்கொண்டிருக்கிறோம்..

உங்கள் படைப்பின் வழியே அந்தரங்கமாக நீங்கள் தேடும் கேள்வி என்று ஏதும் உண்டா?

படைப்பின் வழியாக நான் நிலை நிறுத்த நினைப்பது ‘அறம்’ அப்படி என்று ஒன்று இருக்கின்றது என்பதைத்தான். “அறம் இதென்றும் மறம் இதென்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். மனித நேய உணர்வுடன் ஆதிக்க உணர்வுகளை அழிக்க முயலவேண்டும். மனித வாழ்வின் அறம் தேடும் முயல்வினை படைப்பின் வழியே தொடர்கிறேன்

தெளிவத்தை ஜோசப், மனைவி ருபல்லா பிலோமினாவுடன்

யதார்த்தவாத கதைகளை அதிகம் எழுதி இருக்கிறீர்கள். இன்று திரும்பிப் பார்க்கும் போது யதார்த்தவாத கதைகளின் போதாமை என்று எதையாவது நினைக்கிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் மனித வாழ்வு என்பது அந்த யதார்த்தத்தின் மேல் வீடு கட்டி கூரை போட்டு இருக்கின்ற வாழ்க்கை முறை. அதை நாம் பதிந்து வைக்கின்றபோது அந்த வாழ்க்கையை  மற்றவர்களுக்கு எவ்வளவு அழகாக சொல்கின்றோம் என்பதில் தான் தனித்தன்மை இருக்கின்றது. இப்படி யதார்த்தக் கதைகள் சில எடுபடாமல் போவதற்கான முக்கிய காரணம்  வறட்டுத்தனமான எழுத்து.

பெரும்பாலான இன்றைய படைப்புக்கள் உடனடி துதிபாடுதல்கள் மூலம் முன்னிறுத்தப்படுபவை. அவை எல்லாம் வெறும் சலசலப்புக்களாக மட்டுமே இருக்கும். எவ்வளவு நாட்கள் அதைப் பற்றி பேசுவார்கள் என்பதெல்லாம் தெரியாது. சி.சு.செல்லப்பாவின் வாடி வாசலை இன்றும் பேசுகின்றோம். புதுமைப்பித்தன் அந்தக்காலத்தில் எழுதியவற்றை இன்றும் பேசுகின்றோம். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் அதற்கான மதிப்பு இப்போதும் இருக்கின்றது. அவை எல்லாம் யதார்த்தவாத கதைகள் தானே. போதாமை எங்கிருக்கிறது என்பது புரிகிறதுதானே..

மலையக தேசியம் இன்று ஓர் அரசியல் கருத்தியலாக வளர்ந்து நிற்கிறது. பொதுவாகவே தேசிய உருவாக்கத்தில் இலக்கியங்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. மலையக தேசியக் கட்டுமானத்தில் உங்களுடைய எழுத்துகளுக்கும் வகிபாகம் உண்டென்று நினைக்கிறீர்களா? இப்படியொரு தேசிய சிந்தனைக்கும் எழுத்துக்குமான உறவில் உடன்படுகிறீர்களா அல்லது முரண்படுகிறீர்களா?

மலையக தேசியம் என்கிற குரல்கள் அண்மையில்தான் எழுந்து வருகின்றன. இருப்பினும் அதற்கு முன்னைய படைப்புகளில் இருந்து அந்த தேசியத்துக்கான குரலை அவர்கள் தேடி எடுத்துக் கொள்கின்றார்கள். என்னுடையை படைப்புகளும் அப்படி பங்களித்துள்ளன என்றே நினைக்கின்றேன். ‘நாம் இருக்கும் நாடு நமதென்பதறிவோம்’ என்று சொல்வதிலேயே இந்த தேசியம் வருகின்றது. ஆனால் இந்த தேசியத்துக்காக நான் அந்தக் கதையை அறுபதுகளில் எழுதவில்லை. அது தான் இலக்கியம். இந்த வீட்டு திட்டங்கள் எல்லாம் வந்த நேரம் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலகர் மேடையில் பேசும்போது “ஒவ்வொருவருக்கும் தனியாக வீடு வேண்டும் என்ற உணர்வு எனக்கு வந்தது தெளிவத்தையின் மீன்கள் சிறுகதையை நான் வாசித்த பிறகு தான்” என்று கூறியுள்ளார். அதே ‘மீன்கள்’ சிறுகதையை ஜெயமோகன் தமிழில் வெளிவந்த நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். இதையெல்லாம் எதிர்பார்த்து நான் அந்தக் கதையை எழுதவில்லை. “இந்த மலையக தேசியம், அவர்களுக்கான தனி வீடு அப்படி என்ற உணர்வு எல்லாம் இந்த இலக்கியத்தினூடாகத் தான் அரசியல்வாதிகளுக்கு வந்து சேர்கின்றதே தவிர தொழிற்சங்கத்தினூடாக அல்ல” என்றும் திலகர் குறிப்பிடுகிறார். அதை மனதில் வைத்துக்கொண்டு நான் எழுதவில்லை. ஒரு அறைக்குள் ஒரு கணவனும் மனைவியும் நான்கு பிள்ளைகளை வைத்துக் கொண்டு தாம்பத்திய உறவு கொண்டு அடுத்த பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் கொடுமை அந்தக் கதையில் வருகின்றது.  இலக்கியம் நேற்றைக்கானது, இன்றைக்கானது, நாளைக்குமானது என்று அந்த ரஷ்ய கவிஞன் சொன்னது உண்மை தானே. இன்றைக்கு என்று வரும்போது அது தேசிய உருவாக்கத்திலும் பங்கு வகிக்கிறது.

கடந்த காலங்களில் ஈழம் என்ற சொல் இன்றைக்கு அதன் அரசியல் அர்த்தத்தில் வடக்கு கிழக்கை மட்டும் சுட்டுவதாக சுருங்கியிருக்கிறது. ஈழ இலக்கியம் என்ற சொல்லாடல் மலையக இலக்கியத்தை அதற்குள் வைத்து நோக்குவதற்கு இடைஞ்சலாக இருக்கிறதா..?

மலையகத் தமிழ் இலக்கியம் என்று தனியாகப் பேசப்படும் அளவுக்கு இந்த உழைக்கும் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியம் முதன்மை பெற்றிருக்கின்றது. பேராசிரியர் சிவத்தம்பி சொல்கிறார். ‘ஈழத்து இலக்கியம் என்று சொன்னால் வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை முஸ்லீம்களின் இலக்கியமும், மலையகம் சார்ந்த எழுத்துக்களும் வரும்’ என்று. மலையக சிறுகதை வரலாறு என்ற நூலுக்கு சம்பந்தன் விருது கிடைத்தது. சாகித்திய மண்டல விருதை விடவும்  சம்பந்தன் விருதுதான் பெரிதாகப்படுவதாக நான் சொல்லியிருக்கின்றேன். ஏனென்றால் என்னை எப்படி ஒரு சாரார் யாழ்ப்பாணத்துக்கு எதிரானவன்  என்று முத்திரை குத்த முயற்சித்தார்களோ அதே யாழ்ப்பாணத்திலிருந்து தெளிவத்தைக்கு வந்த விருது இது. நான் யாழ்ப்பாணத்திற்கு எதிரானவன் இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் வந்த விருது இது.

மலையக சிறுகதை வரலாறை நான் எழுதத் தொடங்கிய சமயம் செங்கை ஆழியான் என்னிடம் கேட்டார். மலையக சிறுகதை வரலாறு என்று எழுதுவது பிரதேசவாதம் அல்லவா என்று . அதற்கு நான் சொன்னேன் புவியியல் ரீதியாக இது பிரதேசமாக இருக்கலாம். ஆனால் ஒரு உழைக்கும் மக்களின் படைப்புக்கள் பற்றிய வரலாறையே இது சொல்ல வருகின்றது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் யாழ்ப்பாணச் சிறுகதை வரலாறு என்று எழுத வேண்டும். அதே போல் திருகோணமலை, மட்டக்களப்பில் இருப்பவர்கள் கிழக்கு இலங்கை சிறுகதை வரலாறு ஒன்று எழுத வேண்டும்.  கொழும்பை சுற்றி வாழ்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களுடைய சிறுகதை வரலாற்றை எழுத வேண்டும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்ததுதான் ஈழத்து சிறுகதை வரலாறாக முழுமை பெறும். இதில் பிரதேச வாதம் எதுவும் இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன். இது நூலாக வெளிவந்த பிறகு இதற்கு சம்பந்தன் விருது கொடுக்க வேண்டும் என்று தெரிவு செய்தவரும் அவரேதான்.

“ஈழ இலக்கியம்” என்று ஜெயமோகன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நான் அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது “ஈழ இலக்கியம் என்று ஜெயமோகன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்தானே. அதில் உங்களுடைய இலக்கியத்தைப் பற்றி குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி ஒன்றும் இல்லையே” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன். ஈழம் என்பது தமிழ்மொழி பேசும் பல பிரதேசங்களைக்கொண்டது. அந்த நாட்டினுடைய இலக்கியத்தைப் பற்றி சொல்லுகின்ற அவருடைய முதல் நூல் இது. அடுத்தடுத்த நூல்களில் அவர் மலையக இலக்கியம் எழுதுவார் என்று அவருக்குக் கூறினேன்.

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறுகளில் நிறையச் சந்தர்ப்பங்களில் மற்ற மற்றப் பிரதேச இலக்கியங்கள் விடுபட்டுப் போவதுபற்றி நான் சில சமயங்களில் கோபமாகச் சொல்வதுண்டு. சிவத்தம்பி அவர்கள் ஓரிடத்தில் சொல்லியிருக்கின்றார். தெளிவத்தையின் கோபம் நியாயமானதுதான். ஏனென்றால் நாங்கள் ஈழத்து இலக்கியம் என்று தலைப்பிட்டுவிட்டு யாழ்ப்பாணத்து இலக்கியத்தை மட்டும் தான் பேசியிருக்கின்றோம் என்று. உங்கள் கேள்விக்குரிய காரணமும் சிவத்தம்பியினுடைய பதிலும் ஒன்றாகவே இருக்கின்றது.

ஈழத்து இலக்கியம் என்று பேசப்படும்போது எல்லா இலக்கியங்களைப்பற்றியும் பேசினால் அந்தப் பெயர் ஒரு பிரச்சனையே இல்லை.

“1983 அல்லது நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்” என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறீர்கள். அது 1983-ஆம் ஆண்டு தமிழர்கள் மீது இடம்பெற்ற இன ஒடுக்குமுறையை மையப்படுத்தியது. அந்த நாவல் உங்களது சொந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதா? இனப்பிரச்சனைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர், அது மலையக தமிழர்களை எப்படியெல்லாம் பாதித்தது என்பதை உங்கள் அனுபவத்தின் ஊடாக பார்க்கிறீர்கள்? 

மலையகத்தில் இருப்பவர்கள் ஆயுத போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பொதுவாக சிலரால் சொல்லபட்டாலும், அந்த போரில் இறந்தவர்கள் மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்து வன்னியில் குடியேறி வசித்தவர்கள் என்று பத்திநாதன் தமிழகத்தில் ஈழ அகதிகள் என்ற ஈழ அகதிகளைப் பற்றிய வரலாற்று நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

குடைநிழல் நாவலில் நானும் எழுதியிருக்கின்றேன்.. அமிர்தலிங்கமாக இருந்தாலும் சரி, ஆனந்தசங்கரியாக இருந்தாலும் சரி.. தொண்டைமானாக இருந்தாலும் சரி, செல்லச்சாமியாக இருந்தாலும் சரி துப்பாக்கிகளோடு வரும் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் இவர்கள் எல்லோரும் புலிகள் தான். அவர்களுக்கு இந்த பிரதேச வித்தியாசம் எல்லாம் தெரியாது, யார் சண்டைக்கு போனார்கள் என்பதெல்லாம் தெரியாது. தமிழில் கதைக்கின்றானா? அது போதும். அரசுக்கு எதிராக கிளம்பியவர்கள் தமிழர்களாக இருந்தது தான் எங்களுக்குள்ள பிரச்சினை

1983  நாவல்  என்னுடைய அனுபவத்தின் மூலமாகத்தான்  வருகின்றது. அந்நேரத்தில் நான் என்னுடைய அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். என்னுடைய மனைவி வீட்டில். மட்டக்குளி மிகவும் மோசமாக தாக்கப்பட்ட இடம். வீட்டில் என்னுடைய மனைவி இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டங்கள் எல்லாம் அந்த நாவலில் இருக்கின்றது. என் அலுவலகத்திலிருந்து நான் வெளியே ஓடி வருவது. அருகில் இருந்த தியேட்டரில் அடைக்கலம் புகுந்தது. பிறகு அவர்கள் கொண்டுவந்து என்னை வீட்டில் விட்டது எல்லாம் ஓரளவுக்கு நிஜம்.

சமகாலத்தில் அச்சு இதழ்கள், இணைய இதழ்கள் நிறைய வெளியாகின்றன. அவற்றை பின்தொடர்கிறீர்களா?

நல்ல எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய கதைகளை நான் வாசிப்பதுண்டு. அவர்கள் புத்தகம் எழுதினால் அதைப்பற்றி நான் எழுதுவதுண்டு. இணைய ஊடகங்கள் பக்கம் போவதில்லை. இந்த முகப்புத்தகப் பக்கம் போகாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கின்றேன். நாங்களே எழுதுகின்றோம். நாங்களே முகப்புத்தகத்தில் போட்டுக்கொள்கின்றோம். நாங்களே Like போடுகிறோம். எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகிவிடும் என்னும் மாயையின் உருவாக்கம். முகப்புத்தகம் பார்க்காத ஒரு எழுத்தாளர் தெளிவத்தை என்று நண்பர்கள் கூறுவதுண்டு.

நிறைய இலக்கிய பத்திகள் செய்திருக்கின்றேன். கலைமுகம், ஞானம், மல்லிகை போன்ற இதழ்களிலும், வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் இலக்கிய பகுதிகளில் பத்திகள் எழுதியிருக்கின்றேன். நூல் அறிமுகங்கள், இலக்கியத்துக்காக பாடுபட்டவர்களின் வரலாறுகள், குறிப்புகள் போன்றவை. இதை நான் தொடர்ந்து செய்வதன் ஊடாக என்னுடைய வாசிப்பை மீளமைத்துக் கொள்கின்றேன்.

என்னுடைய மனைவி என்னை அடிக்கடி கோவித்துக்கொள்வதுண்டு. எழுத என்று ஆரம்பித்தால் எழுத மாட்டீர்கள். இருந்து தேடிக்கொண்டிருப்பீர்கள் என்று. கோவை ஞானி இறந்ததிலிருந்து இன்று வரை தேடிக்கொண்டிருக்கின்றேன் அந்த ஞானியைப் பற்றி நான் எழுதத் தொடங்கியதால் அந்த ஞானியை வாசிக்கின்ற ஒரு உந்துதல் எனக்கு வருகின்றது. என்னுடைய பத்தி எழுத்துக்களை என்னுடைய வாசிப்பின் மீள் வரவாக கருதுகின்றேன். எழுத்து இல்லாவிட்டால்  வாசிப்பதை மறந்துவிட்டிருப்பேனோ தெரியவில்லை.  இப்போது ஜெயகாந்தன் புத்தகத்தை எடுத்து வாசித்தாலும் நன்றாக இல்லை. ஈர்ப்பதில்லை புனைவுகளை விட வரலாறுகள் வாசிக்கலாம்போல் இருக்கின்றது. கூடுதலாக அச்சில் வரும் புத்தகங்கள் இதழ்களைத்தான் வசிக்கிறேன். புதுப்புது எழுத்தாளர்கள் எழுதினாலும் அவற்றையும் நான் வாசிக்கின்றேன்.

நீங்கள் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்குகிற முன்னுரைகளைப் பற்றிய கேள்வியோடு நேர்காணலை நிறைவு செய்வோம். அந்த முன்னுரைகளில் அவர்களுடைய  படைப்புகள்பற்றி கறாரான, இறுக்கமான மதிப்பீடுகளை முன் வைக்காமல், ஊக்கப்படுத்தல் என்ற முறையில் எழுத்துகளின் தகுதியையும் மீறி அனைவரையும் பாராட்டுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை உங்கள் முன் வைத்தால் உங்களுடைய பதில் என்ன? இந்த சமரசம் தேவைதானா..?

யாரையாவது பாராட்டுகின்றேன் என்றால் அதன் மூலமாக எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அப்படியாகிலும் இவர் ஒரு நல்ல எழுத்தாளராக வரமாட்டாரா என்னும் ஆதங்கம் தான் (சிரிக்கிறார்). மற்றையது நான் எழுதும் போது வாங்கிய ஏச்சுக்களினால் புதிதாக எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

அனைவரையும் என்பதை என்னைத் தேடி வருபவர்கள் என்று கொண்டால் அவர்களிடம் ஓர் இலக்கிய உணர்வு, இலக்கிய அக்கறை இருப்பதாக நான் நினைப்பதிலும் அவர்களை ஊக்குவிக்க முயல்வதிலும் குற்றம் இருப்பதாகத் தெரியவில்லை அல்லவா..? மு. தளையசிங்கம் ஓரிடத்தில் கூறுகிறார். ‘எழுத்தாளன் என்று எப்போது ஒருவன் பேனாவைத் தூக்கிக்கொண்டு கிளம்புகிறானோ அவன் சமூகத்துக்குத் தேவையானவன்’ என்று.

அவனை நெறிப்படுத்தி மனித சமூகத்துக்கானவனாக மாற்றும் எனது சிறு முயல்வே இவைகள். 

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

3 Comments

  1. ஐயா, உங்கள் கேள்விகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. தெளிவத்தை ஜோஸப் ஐயா பற்றி மேலும் பல செய்திகளை அறிய இந்த நேர்காணல் உதவியாக இருந்தது. நன்றி

  2. ஐயா, உங்கள் கேள்விகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. தெளிவத்தை ஜோஸப் ஐயா பற்றி மேலும் பல செய்திகளை அறிய முடிந்தது. மேலும்”நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983 என்ற புதினத்தை ஆய்வு செய்ய உதவியாக இருந்தது. நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.