/

தாரா ஸ்யாமலீ! இடையில் மூழ்கிய சிங்களச் சொற்கள்: வைதேகி நரேந்திரன்

பண்டுகாபய மன்னனால் நிறுவப்பட்ட அனுராதபுர ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் காவல்தெய்வமாக வழிபடப்பட்ட பத்தினி தெய்வமானது பௌத்தர்களினால் தாராதேவியாக வணங்கப்பட்டது. தாரா, துன்பச்சூழலில் இருந்து தங்களை மீட்பாள் என்பதுவும், அவளால் சந்ததிகள் பெருகும் என்பதுவும் பௌத்தர்களின் நம்பிக்கை. பத்தினித் தெய்வமும் தாராதேவியும் பௌத்த இந்து மார்க்கங்களுக்கு இடையிலான ஊடாட்டத்தின் இன்னுமொரு சான்றாயிருந்ததை இந்தக் கட்டுரைக்கு வெளியே இங்கே கவனித்துக் கொள்ளலாம். தாராதேவியின் சிலை வெண்கலத்தால் வடிக்கப்பட்டிருந்தது. 1815இல் கண்டி இராச்சியம் வீழ்ந்தபோது சிலையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகிறார்கள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1830இல் இலங்கையை நிர்வகித்த பிரிட்டிஷ் ஆளுநர் சேர் ரொபேர்ட் பிரவுண்ட்ரிக், நாலரையடி உயரமான ஒரு வெண்கல பெண் தெய்வச்சிலையை இலங்கையிலிருந்து பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கிறார். சிலையோடு அவர் எழுதி அனுப்பிய குறிப்பு பின்வருமாறு இருந்தது.

“இந்த வெண்கலத்தாலான சிலை மட்டக்களப்புக் கடற்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது”

இதே வெண்கலச் சிலையை ஒருநாள் தற்செயலாக யூரியுப் இணையத்தில் நான் காண நேர்ந்தது. லண்டன் அருங்காட்சியகத்தின் கீழ்த் தளத்தில் ‘ஆசியப்பகுதியில்’ நாலரையடி உயரத்தில், வலது கையில் வரதமுத்திரையோடு, கருணை ததும்பும் கனத்த மார்புகளோடும், வளைந்த இடையுடனும் காட்சியளித்த தாராதேவியின் வெண்கலச் சிலையை சீனர்களும் ஒருசில இலங்கையர்களும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே வெண்கலச் சிலையை இன்னொருநாள் நீலநிற அட்டையிடப்பட்ட ஒரு புத்தகத்தில் கண்டேன். அந்தப் புத்தகம் ‘தாரா மகே தெவ்துவ’ என்ற சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்களத்தில் நிஷ்ஷங்க விஜயமான்ன எழுதியிருந்தார். அவருடைய ‘இரண்டாவது மனைவி’ என்ற ஒரேயொரு சிறுகதையைப் படித்திருக்கிறேன். பெண் ஒருத்தியின் செயலும் நினைவும் வித்தியாசமான நுட்பத்துடனும் மண் வாசனையுடனும் எழுதப்பட்ட சிறுகதை அது. அவருடைய இந்த நாவலை தமிழில் அனுஷா சிவலிங்கம் மொழிபெயர்த்திருந்தார். தமிழில் நாவலுக்கு தாரா ஷியாமலீ குமாரசுவாமி என்று பெயர்.

தாரா ஸ்யாமலீ குமாரசுவாமி

நாவலின் தலைப்பே வாசகர்களுக்கு அதன் மீதான வரலாற்றுத் தேடலை முன்வைக்கின்றது. வரலாற்றில் பௌத்த- இந்து மார்க்கங்களுக்கிடையிலான தொடர்பின் தொன்மச் சான்றாகக் கருதப்படும் தாராதேவி சிலை தொடர்பாக நாவலில் பேசப்படும் சம்பவங்களை குறியீடாக மாற்றீடு செய்ய முடிகின்றமையினால் இந்த நாவலை ஒரு குறியீட்டு தன்மை கொண்டதாகவும் அணுக முடியும்.

பானுக பண்டார இலக்கிய ரசனையும் தொன்மங்கள் சார்ந்த தேடலும் உடையவன். நாவலின் முதற் பாதியில் அவன் தன்னோடு பாடசாலையில் கூடப்படிக்கும் தாரா என்கிற தமிழ்ப்பெண்ணை நேசிக்கின்றான். பிற்பகுதியில் தாராதேவி தெய்வத்தின் சிலையைத் தேடி அலைந்தபடியே இருக்கின்றான். சிலை பௌத்த-இந்து ஊடாட்டத்தைச் சுட்டும் படிமமாக இருக்கின்றது. அந்த படிமம் இரு இனங்களை சேர்ந்த இருவருக்கிடையிலான சாதாரண காதல் கதையை தமிழ் – சிங்கள அரசியலை நோக்கியும் பௌத்த சிங்கள ஆதிக்க மனநிலையை நோக்கியும் நகர்த்துகின்றது. அதுவே நாவலின் ஆழமும் அழுத்தமும் ஆகிறது.

இந்த நாவலில் இரண்டு பாத்திரங்கள் பேசுகின்றன. இதுவே நாவலுக்கு இயல்பான ஓர் இருமுகத் தன்மையை அளிக்கின்றது. பானுக – தாரா என்ற இரண்டு பாத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று துல்லியமாக வேறுபட்ட, இணையான முக்கியத்துவம் உள்ளவர்களாக செயல்படுன்றனர். எதிர் எதிர் இயக்கம் கொண்டவர்களாக இவர்கள் இருவரும் இருந்த போதிலும் அந்த முரண் நாவலில் போதியளவு விரிவடையவில்லை.

மலையகத்தை சேர்ந்த “ஹன்ச பதன” என்ற அமைப்பின் கூட்டம் ஒன்றிற்கு பானுக மாயாதுன்ன என்ற பேச்சாளர் வருகின்றார். அவருடைய சிங்கள கவிதை ஒன்று கீழ்வருமாறு அமைந்திருக்கின்றது.

கலா வெவே வத்துற ரசாய்
ஆடி லிந்தே வத்துற தரம்
தல் ஹகுறு அரங்
உதுருகறேன் அபி எனவா
பெலபீய கன்ன அம்மே

பானுகவின் மேற்சொன்ன கவிதை பின்வருமாறு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கூட்டத்தில் வாசிக்கப்படுகின்றது.

வற்றாத கிணற்று நீரின் ருசி
கலா ஓயா நீரளவு
அம்மா
தேங்காய் வழுக்கையுடன்
தெற்கில் இருந்து
நாங்கள்
பனங்கட்டி சாப்பிட வாறோம்

சிங்கள கவிதை தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் போது அதன் அர்த்தமும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பானுக தெரிந்து கொள்கின்றான். சிங்கள கவிதையில் கலா வாவியின் நீரின் சுவை பிரதானப்படுத்தப்பட்டு தமிழரின் சிறுகிணற்று நீர் அப்படியல்ல என்ற அர்த்தம் தொனிக்கின்றது. ஆனால், சிங்கள கவிதையில் ஒளிந்திருக்கும் ஆதிக்க நுண்ணரசியலை உணர்ந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் வற்றாத கிணற்று நீரின் சுவையை பிரதானப்படுத்தி மொழிபெயர்ப்பை செய்திருக்கின்றார் என பானுக அறிந்து கொள்ள நேரிடுகின்றது. அந்த கவிதையை தமிழில் மொழிபெயர்த்தது ஒருகாலத்தில் தன்னுடைய பால்யவயதில் ஒருதலையாகக் காதலித்த தாரா ஷியாமலீ குமாரசாமி என்பதையும் தெரிந்து கொள்கிறான்.

நீண்ட காலமாக தொடர்பு இல்லாமலிருந்த பானுவும் தாராவும் அந்த கூட்டத்தின் முடிவில் சந்தித்துக்கொள்கின்றனர். பானுக மீதான தன்னுடைய விருப்பையும் பட்சத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதிப்பேணும் தாரா அத்தனை நீண்ட வருடங்களுக்கு பிறகு அதை பானுகவிடம் வாசிக்க கொடுக்கின்றாள்.

குறிப்பேடு வாசிக்கப்படும் போது நினைவுகள் இறந்த காலத்தை நோக்கி நகர்கின்றன. நாவல் நேர்கோடற்ற காலக்கோட்டில் பயணிக்கத் தொடங்குகிறது. இருவரும் மற்றவரைபற்றி எழுதும் குறிப்புகள் நாவலில் வாசிக்கப்படுவதன் மூலம் காலம் முன்னும் பின்னுமாக நகர்கின்றது. நாவலைச் செறிவாக்கும் உத்தியாகவும் அது இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் குமாரசாமி, மனைவி இறந்ததும் தன்னுடைய ஒரு வயது ஆண்குழந்தை கோவிந்த மித்ர குமாரசாமியுடன் மாத்தளையில் இருக்கும் தன்னுடைய தமக்கையுடன் வாழச் செல்கின்றார். அங்கு தன்னுடைய சிங்கள மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு தாரா ஷியாமலீ பிறக்கின்றாள். அவளுடைய அண்ணன் மித்ர தன்னுடைய இருபத்தோராவது வயதில் தனக்குள் ஓடுவது நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் இரத்தம் என்று கூறி 1983 கலவரத்திற்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிப்போகின்றான்.

தமிழ் தந்தைக்கும் சிங்கள தாய்க்கும் பிறந்த தாரா சிங்கள சூழலிலே வளர்கின்றாள். அந்தச் சூழலிலேதான் கல்வி கற்கின்றாள். அவளோடு வகுப்பில் கற்கும் பானுகவின் அணுக்கம் காரணமாக பாடாசாலை நாட்கள் மிக அழகாகத் தோன்றுகிறது. ஆனால், பாடசாலையில் தாராவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவளை “பறதெமழு” என சிங்கள மாணவர்கள் திட்டும் போதும் “இந்தியாவில் இருந்து வந்த பறதெமழு இந்தியாவிற்கே அனுப்ப வேணும்” என்ற விவாதங்கள் மூலம் முதன்முதலாக அருவருப்பான இனபேதத்தின் கோர முகத்தை தாரா எதிர் கொள்கின்றாள். அந்தக் கோரமுகம் நாவல் முழுமைக்கும் தொடர்கின்றது.

மொனராகலை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த பானுக அறிவுக்கூர்மையும் இலக்கிய வாசிப்பும் கொண்ட மாணவனாக ஆசிரியர் குமாரசாமியின் நன்மதிப்பை பெறுகின்றான். இருப்பினும் சிங்கள பௌத்த தீவிரவாத மனப்பான்மையை அவன் அகவயமாகக் கொண்டிருப்பது அவ்வப்போது வெளிப்படுகின்றது. என்றாலும் அவனுடைய புறவயச்செயற்பாடுகளில் அவை வெளிப்பட்டிருக்கவில்லை.

ஒரு தலையாக தாராவை காதலிக்கும் பானுக தன்னுடைய காதலை அவளிடம் தெரிவிக்கத் தயங்குவது அந்தஸ்து, பொருளாதாரம் போன்றவை சார்ந்த தாழ்வுச்சிக்கலினாலா அல்லது அவளது தமிழ் அடையாளமா என்பதை வாசகர்களே உணர்ந்தறிய விடப்பட்டுள்ளது. அவன் பாடசாலையை விட்டு நீங்கியதும் தாராவின் தொடர்பும் அற்றுப்போகிறது.

1983 இல் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ட் பதவியை பெறுகின்ற அவன் பின்னர் அப்பதவியை துறந்து 1983இல் இலங்கையின் சிங்கள-தமிழ் இனக்கலவரத்தைத் தூண்டும் சக்திகளோடு சேர்ந்து இயங்குகிறான். இறுதியில் தொல்பொருள் ஆராச்சியாளராகி அகழ்வுகளில் தாராதேவியின் சிலையினை தேடிக்கொண்டிருக்கும் காலத்தில் தாராவை மீண்டும் சந்திக்கின்றான்.

நாவலில் ஓரிடத்தில் 83 கலவரத்தின் போது தாராவின் குடும்பம் பதுளையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். பஸ்ஸை வழிமறித்த சிங்கள இளைஞர்கள் தமிழர்களை வேறாக்கி தாக்குதலை மேற்கொள்கிறார்கள். தாராவின் குடும்பத்தினருடைய மத அடையாளத்தை உறுதி செய்ய, அச்சப்படும்போது பௌத்தர்கள் சொல்லும் சுலோகத்தை கூறச்சொல்லி அவ் இளைஞர்கள் கேட்கின்றனர்.

“இதிபிசோ (அச்சப்படும் போது பௌத்தர்கள் சொல்லும் சுலோகம்) இல்லை. துன்சூத்றையவே (பௌத்தர்கள் சொல்லும் சுலோகம்) சொன்னாலும் நான் சிங்களம் ஆவேனா?” என்று தாராவின் தந்தை குமாரசாமி அந்த சிங்கள இளைஞர்களைப் பார்த்துக் கேட்கின்றார்.

“இவன் தமிழன் ” என ஆவேசப்படும் இளைஞர்களை “அவர் மேல் கை வைக்க வேண்டாம்” என குழுவிலிருந்த ஒருவன் கூறுகின்றான். அவன் பானுகவின் நண்பன். தாராவுடன் கூடப்படித்தவன். அந்தப்பயணம் முழுவதும் அந்தக் குடும்பத்துக்கு காவலாக இருக்கின்றான் என்பதாக அந்தப்பகுதி இருக்கும்.

Thara Mage Dewduwa

சிங்கள -தமிழ் இனமுரண்பாடு காலங்களில் சிங்களப்பிரதேசங்களில் வாழ்ந்த தமிழருக்கு சிங்களக் காடையர்களால் நேர்ந்த அவலங்களையும் அவர்களின் எதிர்வினைகளையும் ஒரு சிங்கள நாவலாசிரியர் தன்னுடைய எழுத்தில் முன்வைப்பதை தற்காலத்தின் ஒரு தேவையாக நான் பார்க்கிறேன். அப்படி எல்லாத் தரப்பினரும் முன்வைக்க வேண்டும்.

நாவலில், தாயார் சிங்களப்பெண்ணாக இருந்தாலும்கூட தாராவை பாடசாலை மாணவர்களில் சிலர் நீ ஒரு தமிழச்சி என வேறுபடுத்துவதும் அவள் மீது வன்மம் கொள்வதும் சிறிய சிறிய சம்பவங்கள், உரையாடல்கள் மூலம் உணர்த்தப்படுகின்றது. சிங்களவர்களுக்கு எல்லாத்தமிழருமே இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்ற பொதுவான கருத்தொன்று இருக்கின்றது என்பது “இந்தியாவில் இருந்து வந்த பறதெமழு இந்தியாவிற்கே அனுப்ப வேணும்” என்ற பாடசாலை விவாத தலையங்கத்தின் மூலம் தெரிகின்றது.

ஆதியிலே நெருக்கமாகவும் முரண்பாடற்றும் இருந்த சிங்கள- தமிழ் உறவு பின்னர் மண்ணுக்குள் புதையுண்டு புலப்படாத தொல்பொருள் ஆகி விடுகின்றது. அந்த தொல்பொருளை அகழ்ந்தெடுப்பதென்பதும் அதனை உயர்பீடத்தில் வைத்து மதிப்பளிப்பதென்பதும் நம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாக இருக்கலாம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் நம்மிடையே இருக்கவும் கூடும் என்பதைத்தான் இந்த நாவலின் உட்பொருளென மொழிபெயர்ப்பின் வழியாக அல்லாமல் என்னுடைய நுண்ணுணர்வின் வழியாக நான் கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மொழிபெயர்ப்பின் வழியாக அல்லாமல் என்று அழுத்திச் சொல்வதற்குக் காரணம் உண்டு. குறியீடுகள் மூலம் அனுபவத்தை வாசகர்களுக்குக் கடத்துகின்ற நுட்பமான பிரதியாகிய இந்த நாவல் அதன் முழுமையான தரிசனத்தைத் தராதவகையிலே் – வாசிப்பின் பசுந்தான போக்கைத் திருகித் திருகி துன்பமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தவகையிலே – மொழிபெயர்ப்பு வெறும் தட்டையாக அமைந்துவிட்டது மிகவும் துரதிஷ்டவசமானது.

மொழிபெயர்ப்பாளர் ஒரு படகோட்டி போல.. ஒரு கரையிலுள்ள சொற்களின் அர்த்தத்தை மறுகரையின் சொற்களிடம் கொண்டு சேர்ப்பவர் என்றொரு கூற்று உண்டு. ஆனால் இந்நாவலின் சிங்களச் சொற்களில் இருந்து புறப்பட்ட அர்த்தங்கள் பல, தமிழ்ச்சொற்களை வந்தடைய முன்னரே நடுக்கடலில் மூழ்கிவிட்ட உணர்வையே தமிழ்மொழிபெயர்ப்பு தருகின்றது. அர்த்தங்களின் பூரணமின்மையை கொண்டே இந்த ஐயப்பாடு என்னிடம் எழுகின்றது.

எந்தெந்த இடங்களில் எந்தெந்தச் சொற்களை, சொல்லாட்சிகளைப் பயன்படுத்துகின்றோம் என்ற விழிப்புணர்வு இந்த நாவலின் மொழிப்பெயர்ப்பாளரிடம் பற்றாக்குறையாக இருக்கின்றமை சொற்களை மீள மீளப் பயன்படுத்துவதிலும், ஒன்றுக்கொன்று முரணான சொல்லாட்சிகளைப் பாவிப்பதிலும் உணரக்கூடியதாக இருக்கின்றது. இது இலக்கிய வாசிப்புப் போதாமையின் ஒரு விளைவு.

புனைவிலக்கிய மொழிபெயர்ப்புக்களைச் செய்பவர் தேர்ந்த இலக்கிய வாசிப்பும் – பரிச்சயமும் உள்ளவராக இருந்தால் மட்டுமே மூலமொழி, இலக்குமொழி இரண்டிலும் மொழியாளுமையோடு இருக்க முடியும். அதுவே ஒரு புனைவிலக்கியத்தின் மொழிபெயர்ப்பைப் பூரணத்துவப்படுத்தும். அதுவே மூல எழுத்தின் ஆசிரியரை பக்குவத்தோடு இன்னொரு மொழி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

வார்த்தைக்கு வார்த்தை பிரதியிடப்படும் அகராதி தரும் உயிரற்ற அர்த்தங்கள் எந்தவிதமான மொழிப்பிரக்ஞையும் இன்றி நாவலின் பக்கங்களை நிரப்புகின்றமைக்கு கீழ்வருகின்ற பந்தி ஓர் உதாரணம்.

//நான் இந்த சிறிய பந்தியை ஒதுக்குவது உங்களை பற்றி அல்லது அவரை பற்றி எழுதுவதற்கு, இல்லை என்றால் என் பிடிவாத ஒப்பீட்டை வெளிக்காட்டுவதற்கு. அவர் என்று நான் சொன்னது புயலடித்து வந்த பையன். இப்போது நான் எழுதுவது பயனற்றதானாலும், இதை சொல்வதால் எந்த பயனும் இல்லாமல் இருந்தாலும், நான் எவ்வளவு வருத்தத்துடன் இருக்கிறேன் என்பதையும் அதன் ஆழத்தையும் உணர பயனுள்ளதாக இருக்கும்.// ( பக்கம் 57)

இன்னுமோர் உதாரணம்.

//பின்னல் கலைந்த தலை முடியுடனும் கசங்கிய சட்டையுடனும் உயர்தர மாணவன் அளவிற்கு முதிர்ச்சியடையாத அந்த மாணவன் எழும்போது தாரா மட்டுமின்றி அனைவரும் அவன் பக்கம் திரும்பினார்கள்// ( பக்கம் 44)

மாணவனுடைய பின்னல் கலைவதை தமிழ் வாசக மனது எவ்வாறு உள்வாங்கும்..? நேரடியான அர்த்தத்தில் வெறுமனே அகராதியின் துணையோடு சொற்களை மொழிபெயர்க்கும் போது நாவலின் அழகியற்பெறுமதி (Artistic value) கெட்டுப்போய் நாவல் நாராசாரமானதாகிவிடுகின்றது.

//மொளிபெயர்ப்பாளரின் அனுமதி அன்றி இப் புத்தகத்தை பிரசுரம் செய்வது குற்றமாகும்.// என்ற முன்பக்க அறிவுத்தலுடன் தொடங்கும் இந்நாவலை பிரதிமேம்படுத்துனர், ஒப்புநோக்குனர் என்ற எவருமே இல்லாமல் அஹச மீடியா வர்க்ஸ் வெளியிட்டுள்ளது. எழுத்துப் பிழைகளுடனும் இலக்கணப்பெரும்பிழைகளுடனும் வெளிவந்த இந்நாவலுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் விருது கிடைத்தமை ஈழத்தின் இலக்கிய மொழிபெயர்ப்பு வரட்சியையும் இலக்கிய வாசிப்புள்ள மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இலங்கையில் யுத்தத்திற்குப் பிறகு இன, மொழி, பண்பாட்டுத் தளங்களில் விலகியிருப்பவர்கள் தமக்குள் உரையாடவும், தம்மைப் பகிர்ந்துகொள்வதற்குமான காலமாக இக்காலத்தை நாம் பயன்படுத்தமுடியும். இதனை இன நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான உறவு என்றெல்லாம் பெரிய வார்த்தைகளால் அடையாளப்படுத்தத் தேவையில்லை. ஆனாலும் இவை பரஸ்பரமான பகிர்வுகள். இது எங்களுடைய கதை. இப்போது உங்களுடைய கதையைச் சொல்லுங்கள் என்று உட்கார்ந்திருந்து பேசுகின்ற உரையாடல்கள்.

இந்த உரையாடல் சரியாக நிகழ இலக்கியப் பிரதிகளுடைய பரிமாற்றமும் அர்ப்பணிப்பான மொழிபெயர்ப்புகளும் அவசியமாகின்றன.

தாரா ஷியாமலீ குமாரசுவாமி நாவலைப் படித்துமுடித்த பிறகு தோன்றிய பல்வேறு எண்ண அலைகளில் கீழ்வருவதும் ஒன்று.

நிஷ்ஷங்க விஜயமான்ன தமிழில் இந்தமாதிரி அறிமுகமாகியிருக்கக் கூடாது

வைதேகி நரேந்திரன்

இலக்கிய வாசிப்பிலும், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்வதிலும் தொடர்ச்சியான ஈடுபாடு உள்ளவர். ஐக்கிய நாடுகள், அபிவிருத்தித் திட்ட அலுவலராக கிளிநொச்சியில் பணியாற்றுகிறார்.

1 Comment

  1. தாரா ஷியாமலீ குமாரசுவாமி நாவல் பற்றிய வைதேகி நரேந்திரன் எழுதியுள்ள அவரது கருத்துக்களில் சில இடங்களில் இணங்கிப் போனாலும் பல இடங்களில் பிணங்க வேண்டியுள்ளது.

    அதற்கமைய எனது இப்பதிவு……

    /பின்னல் கலைந்த தலை முடியுடனும் கசங்கிய சட்டையுடனும் உயர்தர மாணவன் அளவிற்கு முதிர்ச்சியடையாத அந்த மாணவன் எழும்போது தாரா மட்டுமின்றி அனைவரும் அவன் பக்கம் திரும்பினார்கள்// ( பக்கம் 44)

    ஆணை சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் பெண் சித்ததரிக்கப்படுகிறாள் என்பது மொழிபெயர்ப்பின் பெரும் குற்றமல்ல. பால் நிலை மாற்றமே என்பதை எண்ணுக.
    அது மட்டுமல்லாது அந்த நாவல் ரசித்துப் படிக்கக் கூடயதாகவும் இருக்கின்றது.

    விமர்சனங்கள் எப்போதும் ஒருவரின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி அவரை எழுப்பி விடவேண்டுமே தவிர சுத்தமாக மட்டந்தட்டி வீழ்த்துவதற்கல்ல என்பதில் கவனமாய் இருக்க வேண்டும். தங்களது இப்பதிவிலும் பல எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் தேவையற்ற சொற்களின் சேர்க்கைகளையும் சுட்டிக் காட்டலாம் சகோதரி.

    மொழிபெயர்ப்பென்பது பக்குவமாக பல கட்டுக்கோப்புகளுக்கு மத்தியில் இருந்து கொண்டு செய்தாலும் மூலப்பிரதியோடு அதே அச்சொட்டாக இரண்டாமவரால் கொடுக்க முடியாது என்பதை பரிச்சயம் வாயந்த மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தெரியும்.

    ஆகவே வளர்ந்து வரும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களது முயற்சிகளைத் திருத்த வேண்டிய இடங்களில் சுட்டிக் காட்டி அவர்களைத் தட்டிக் கொடுப்போம். எதிர்காலத்தில் இவர்கள் போன்றோர் சிறந்த படைப்பாளிகளாக வருவார்க்ள்.

    Zameena Saheed
    Sworn Translator Sinhala/Tamil & Translate Reviewer

உரையாடலுக்கு

Your email address will not be published.