திருமதி. பெரேரா விழித்துக் கொண்ட போது விடிந்து விட்டிருந்தது. மின்விசிறியின் காற்றுக்கு நுளம்பு வலை இலேசாக அசைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பறவைகள் கீச்சிடுவது கேட்டது. ஜன்னல் அருகேயிருக்கும் பிச்சிக் கொடியின் கிளைகள் தோற்றுவித்த நிழலானது அறையினுள்ளே ஒரு சுவரில் படிந்து ஆடிக் கொண்டிருந்தது. அலாரம் வைக்காவிட்டாலும் கூட ஏனைய நாட்களிலென்றால் இந் நேரத்தில் திருமதி. பெரேரா விழித்தெழுந்து வீட்டில் நிறைய வேலைகளை செய்து முடித்திருப்பார். இப்போது என்ன நேரமிருக்கும் என்பதை திருமதி. பெரேராவால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஜன்னலின் கண்ணாடி வழியே மிகக் கடுமையான வெயில் உள்ளே பாய்ந்து கொண்டிருந்தது.
திரு. பெரேரா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது முகத்தைத் தெரியவில்லை. எந்தவொரு சலனமும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தார். திருமதி. பெரேரா, தான் படுத்திருந்த பக்கத்தின் நுளம்பு வலையைத் தூக்கிவிட்டு எழுந்து சமையலறைக்குப் போனார். காலையில் எழுந்ததுமே வரும் முதுகு வலியின் காரணத்தால் அவர் சற்று நேரம் கழியும் வரைக்கும் முதுகைக் கொஞ்சம் வளைத்து, குனிந்தவாறுதான் நடப்பார். கேத்தலுக்கு இரண்டு கோப்பைகள் தண்ணீரை அளந்து ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, இரண்டு கோப்பைகளுக்கும் பால்மாவையும், தேயிலையும் அளந்து இட்டார். இருவருமே சீனியைப் பயன்படுத்துவதில்லை. திருமதி. பெரேராவின் சமையலறை எப்போதும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். அங்கு அனைத்தும் இருக்கின்றன. சமையலறை பேன்ட்ரி அலமாரிகள், சிட்டைகள் ஒட்டப்பட்ட மசாலாப் பொருட்கள் அடங்கிய போத்தல்கள், ஒவன், ப்ளெண்டர், ஃபுட் ப்ரொஸெஸர், மைக்ரோவேவ் உள்ளிட்ட அனைத்துமே இருக்கின்றன. அவ்வாறே, திருமதி. பெரேராவும் மிக நேர்த்தியானவர். சமையலறையில் ஒரு துளி அழுக்கு கூட இல்லை.
பூனை வந்து காலை உரசியதுமே திருமதி. பெரேரா தகரப் பேணியிலிருந்த பிஸ்கட்டுகளை எடுத்து அதற்குக் கொடுத்தார். இவை தினந்தோறும் நடைபெறும் காரியங்கள்தாம். நேரம் சற்று முன்னே பின்னே இருக்கலாம் என்றாலும் கூட, பல வருடங்களாக இவ்வாறுதான் நடைபெற்று வருகின்றன. இது இந்த வீட்டின் எத்தனையாவது பூனை என திருமதி. பெரேரா யோசித்துப் பார்த்தார். கறுப்பு வெள்ளைப் பெண் பூனை, முழுதும் கறுப்பு நிறத்தில் ஒரு பெரிய பூனை, உடலில் மண் நிறத்தில் வரிகள் ஓடிய பூனை, ஒரு கண் குருடான வெள்ளைப் பூனை.. அடடா, திருமதி. பெரேராவால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை. திருமதி. பெரேரா திருமணம் முடித்து இந்த வீட்டுக்கு வந்து இந்த வருடத்தோடு முப்பத்தொன்பது வருடங்களாகின்றன. ஒரு மாற்றமுமில்லாமல் ஒரே மாதிரியாகக் கழித்த நாட்கள்தான் எத்தனை? விறகடுப்பு, எரிவாயு அடுப்பாக மாறியது. பலகை அடுக்குகள், பேன்ட்ரி அலமாரிகள் ஆகின. சிவப்புச் சீமெந்திட்ட தரை, பளிங்கு மாபிள் தரை ஓடுகள் பொருத்தப்பட்டதாக மாறியது. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை சுவர்களிலிருந்த வர்ணங்கள் மாறின. எனினும், திருமதி. பெரேராவின் நாட்களில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் இல்லை. மகன் இலங்கையில் வசித்த காலத்தில் என்றால் சற்று வேலை அதிகமாக இருந்ததுதான். எனினும், அந் நாட்களில் ஏதோவொரு சந்தோஷமும் இருந்தது. இப்போதும்கூட தனக்கு கவலைப்பட எவ்விதக் காரணங்களும் இல்லையே என்று திருமதி. பெரேராவுக்கு எப்போதாவது தோன்றத்தான் செய்கிறது.
எல்லாவற்றுக்குமே ஒரு குறிப்பிட்ட நேரமும், செய்நேர்த்தியும் இருந்தன. அவை அனைத்துமே ஓர் ஒழுங்கில் நடந்தன. நேரத்துக்கு தேனீர், நேரத்துக்கு சாப்பாடு, கூட்டிப் பெருக்குதல், தூசி தட்டுதல், துணிகளைக் கழுவி, காய்த்து, மடித்து நேர்த்தியாக அலமாரியில் வைத்தல், சாரங்கள் தனியாக, சட்டைகள் தனியாக, களிசான்கள் தனியாக, உள்ளாடைகள் தனியாக.. இப்படி. திருமதி. பெரேரா சில சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களைச் செய்த போதும், தவிடு நீக்காத சிவப்புச் சோறு, சீனி போடாத தேனீர் போன்ற பெரிய பெரிய தீர்மானங்களை எப்போதும் எடுப்பது திரு. பெரேராதான். இவை அனைத்துக்கும் மத்தியில், திரு. பெரேரா மாலை வேளையில் கொஞ்சம் மதுபானம் அருந்துவார். திருமதி. பெரேராவுக்கு அதுவும் இல்லை. பெண்கள் குடிக்க மாட்டார்கள், இல்லையா?. திருமதி. பெரேரா அந் நேரத்தில் தொடர் நாடகங்கள் பார்ப்பார். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பிக்கும் நாட்களில் அதுவும் கிடையாது.
தேனீரை எடுத்துச் செல்லும்போதும், திரு. பெரேரா முன்பு போலவே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். எவ்வித அசைவும் இல்லை. எட்டு மணியாக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. திருமதி. பெரேராவுக்கு பயமாகவும் இருந்தது. ஏனைய நாட்களில் இந் நேரத்திற்கு திரு. பெரேரா பத்திரிகையை வாங்கிக் கொண்டு வந்து வாசிக்கத் தொடங்கி விடுவார். திருமதி. பெரேராவைப் போல விடியற்காலையிலேயே எழுந்து கொள்ளாவிட்டாலும், திரு. பெரேரா ஆறரை, ஏழு மணியாகும்போது எழுந்து பத்திரிகை வாங்கி வரவென கடைக்குப் போவார். திருமதி. பெரேரா தேனீரை ஒரு தட்டால் மூடி கண்ணாடி மேசை மீது வைத்துவிட்டு, நுளம்பு வலையைச் சுருட்டி முடிச்சிட்டார். திரு. பெரேராவிடம் எவ்வித அசைவுகளும் இல்லை. திருமதி. பெரேராவுக்கு உடலில் கையை வைத்து அசைத்து எழுப்பிப் பார்க்கத் தோன்றிய போதும், திரும்பவும் தனது கையை இழுத்துக் கொண்டார். திருமதி. பெரேரா, கண்ணாடி மேசை மீது வைக்கப்பட்டிருந்த கோயா முகப் பவுடர் பேணியை ஒரு கையால் தட்டி தரையில் விழச் செய்தார். ம்ஹும்… இல்லை, திரு. பெரேராவிடம் எவ்வித அசைவுகளும் இல்லை.
பல்லியொன்று அதனை விடப் பெரிய வண்ணத்துப் பூச்சியொன்றைப் பிடித்து விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அது இடைக்கிடையே வண்ணத்துப் பூச்சியை சுவரில் அடித்தது. தனது கீழுதடுகள் துடிப்பதை திருமதி. பெரேரா உணர்ந்தார். முந்தைய தினம் இரவில் சமையல் பாத்திரங்களையும், தட்டுகளையும் கழுவி வைத்து விட்டு, நாய்க்கும் சோறிட்டுவிட்டு படுக்கைக்கு வந்தபோது மணி இரவு ஒன்பதரை போல ஆகிவிட்டிருந்தது. அப்போதும் கூட திரு. பெரேரா இவ்வாறேதான் உறங்கிக் கொண்டிருந்தார். நுளம்பு வலையையும் திருமதி. பெரேராதான் விரித்தார். ஒவ்வொரு நாளும் அவ்வாறுதானே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் வழமைக்கு மாறாக இந்த ஆள் இன்று எழுந்து கொள்ளவில்லையே. திருமதி. பெரேரா ஒரு சுற்று சுற்றிச் சென்று திரு. பெரேராவின் முகத்தைப் பார்க்க முயற்சித்தும் கூட, பார்க்க முடியவில்லை. முகம் கீழ் நோக்கியிருந்தது. முதுகு உயர்ந்து தாழ்கின்ற அசைவும் இல்லை.
திருமதி. பெரேரா கண்ணாடி மேசையிலிருந்து சீப்பை எடுத்து வேகமாக தலைமயிரை வாரிக் கொண்டார். முன்பு இடுப்புக்குக் கீழே வரையும் அடர்த்தியாக இருந்த கூந்தல் இப்போது குரங்கு வால் போல ஆகி விட்டிருந்தது. அடுத்து என்ன செய்வது என்று திருமதி. பெரேராவுக்குத் தோன்றவில்லை. நேற்றிரவு நாயும் ஊளையிட்டுக் குரைத்ததுதானே என்ற நினைவு அவருக்குத் திடீரெனத் தோன்றியது. கண்ணாடியில் தென்பட்ட தனது முகத்தைக் கண்டதும் திடுக்கிட்டார். என்ன நடந்தாலும், நடப்பது ஒழுங்காக நடக்கும்வரை அமைதியாக இருக்க தீர்மானித்துக் கொண்டார். கடவுளே… பல வருடங்களாக தான் காத்திருந்த, எதிர்கொள்ளத் தயாராக இருந்த ஒன்றுதானே நடந்து கொண்டிருக்கிறது எனத் தோன்றிய போது, தனது முகத்தில் எழுந்த சிரிப்பைக் கண்ணாடியில் கண்டதும் திருமதி. பெரேராவுக்கு அச்சம் பீடித்துக் கொண்டது. அவர் அழுமூஞ்சியொன்றைத் தோற்றுவித்துக் கொண்டார்.
பல வருடங்களாக ஒழுங்காக அழுதோ, சிரித்தோ இருக்காத திருமதி. பெரேரா கண்ணாடிக்குப் பழித்துக் காட்டியவாறு பலவிதமான முகத் தோற்றங்களைச் செய்து பார்த்தார். விழிகளை விரித்துப் பார்த்தார். பல தடவைகள் திரும்பத் திரும்ப திரு. பெரேரா அருகில் போய்ப் பார்த்தார். மகனைத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்ல நினைத்தும், இன்னும் அதற்கு நேரமிருக்கிறது என்று அவருக்குத் தோன்றிற்று. இந்தத் தகவலை யாரிடம் முதலில் சொல்வது என யோசித்துக் கொண்டே சமையலறைக்குப் போன திருமதி. பெரேரா மதியத்துக்கும் சேர்த்து இருவருக்குத் தேவையான அளவு சிவப்பரிசியை அளந்து, கழுவி ரைஸ் குக்கரில் இட்டார். இரவு மீதமான பலாப்பிஞ்சுக் கறியை சூடு பண்ணவென அடுப்பில் வைத்து விட்டு, குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பாதித் தேங்காயை வெளியே எடுத்துக் கொண்டு வந்து, பருப்புக் குழம்பு வைப்பதற்காக துருவத் தொடங்கினார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் திரு. சில்வா இரண்டு தடவைகள் நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருக்கிறார். அதனால், திருமதி. பெரேரா எவ்விதத்திலும் பதற்றப்படாமல் தேங்காயைத் துருவினார். என்றாலும் இடையிடையே கீழுதடுகள் துடிப்பதை அவரால் நிறுத்த முடியாதிருந்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக திருமதி. பெரேரா இந்த வீட்டில் சமையல் செய்து வருகிறார். வீடு வாசலைப் பெருக்கித் துடைக்கிறார். துணி கழுவுகிறார். நாயைக் குளிப்பாட்டுகிறார். தூசி தட்டுகிறார். இப்போது முன்பு போல இல்லை என்றாலும் கட்டிலில் வைத்து நெருங்கி வா, அந்தப் பக்கமாகத் திரும்பு, இப்படிக் குனி, காலை விலக்கு போன்ற கட்டளைகள் பிறப்பிக்கப்படும் போது அவற்றையும் செய்கிறார்.
பலாப்பிஞ்சுக் கறி அடிப் பிடிக்கும் வாசனைக்கு திடுக்கிட்டுப் போன திருமதி. பெரேரா உடனடியாக அடுப்பை அணைத்தார். தலைவிரி கோலமாக, ஒப்பாரி வைத்து அலறிக்கொண்டு தான் முதலில் போக வேண்டியது, வேலியோடு ஒட்டியிருந்த திரு. சில்வாவின் வீட்டுக்குத்தான். அதற்குப் பிறகு இது பலரும் நடிக்கக் கூடிய நாடகம் ஆகி விடும். திரு. பெரேராவின் இரண்டு தங்கைகளைக் குறித்துத்தான் திருமதி. பெரேராவின் மனதில் பெரும் அச்சம் தோன்றியது. மகனும் கூட வெளிநாட்டிலிருந்து வந்து ஏழு நாட்களில் திரும்பிச் சென்று விடுவான். எப்படியும் அவன் இலங்கைக்குக் குடியிருக்க வரவோ, அப்பாவின் ஓய்வூதியப் பணத்தைக் கேட்கவோ மாட்டான் என்பதில் திருமதி. பெரேராவுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. அவனது ஜீவிதம் அங்கேயேதான். இந்த வீடு மகனின் பெயருக்கு எழுதப்பட்டிருப்பதால், திரு. பெரேராவின் தங்கைகள் எப்படிக் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டு வந்தாலும் கூட ஒன்றும் ஆகப் போவதில்லை. எப்படியும், மூன்று மாதங்கள் கழியும் வரைக்கும் எதுவும் இலகுவாக இருக்காது. பல காலங்களாக திருமதி. பெரேரா வாங்கிச் சேகரித்து வைத்த வெள்ளை நிறப் பாவாடைகள், சட்டைகள் ஏராளமிருக்கின்றன. திரு. பெரேரா என்றைக்கும் சாப்பாட்டிலோ, உடுதுணி, ஆபரணங்களிலோ திருமதி. பெரேராவுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. திரு. பெரேரா அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தார். உணவு, பானங்கள், ஆடை, ஆபரணங்கள், வருடத்துக்கு ஒரு தடவை ஒரு சுற்றுப் பயணம், நல்லதொரு வீடு, மின்சார சாதனங்கள். இவையெல்லாம் இருந்தால் அனைத்தும் சம்பூரணமாகி விடும். உண்மையில், ஒரு பெண்ணுக்கு இவை தவிர இன்னும் வேறு என்னதான் வேண்டும் என திருமதி. பெரேரா யோசித்துப் பார்த்த போது சடுதியாக அவருக்கு அந்த வீட்டிலிருந்த பெண் பூனையான ப்ளாக்கியின் நினைவு வந்தது. ப்ளாக்கிக்கு நேரத்துக்கு ஊசி மருந்து ஏற்றப்படுகிறது. வாலை மீனைச் சோற்றோடு பிசைந்து ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் வழங்கப்படுகின்றன. கிழமைக்கு ஒரு தடவை குளிப்பாட்டப்படுகிறது. பிரதான நுழைவாயிற்கதவை மூடி வைத்து விட்டு, கூட்டின் கதவைத் திறந்து விட்டு வீடு முழுவதும் இஷ்டம் போல நடமாடித் திரிய அனுமதிக்கப்படுகிறது. ஒரு பெண் பூனைக்கு இன்னும் வேறு என்னதான் வேண்டும்?
பருப்பைக் கழுவி, மசாலாக்களைத் தூவி, தண்ணீர் கலந்த தேங்காய்ப் பாலை அவற்றின் மீது ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்த திருமதி. பெரேரா மீண்டும் அறைக்குள் எட்டிப் பார்த்து, முன்பு போலவே படுத்திருக்கும் திரு. பெரேராவை உற்று நோக்கினார். பின்னர் திரும்பவும் சமையலறைக்குப் போகும் வழியில், விறாந்தையில் தொங்க விடப்பட்டிருந்த தனது திருமணப் புகைப்படத்தை, அப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பதைப் போல நின்று பார்த்தார். இருவரும் நிமிர்ந்து நின்றவாறு, முகங்களில் எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் நேராகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கறுப்பு வெள்ளைப் புகைப்படம் பல வர்ணங்களைச் சூடிக் கொண்டது போல திருமதி. பெரேராவுக்கு தென்படத் தொடங்கியது. இந்தப் புகைப்படத்தை எடுத்து முடித்ததும், புறப்படத் தயாரான வேளையில் எவ்வளவு அழுதேன்? அம்மா, அப்பாவைப் பிரிந்து செல்லும் துயரத்தில் அழுவதாகத்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால், அப்போது அழுதது பயத்தினாலும், செனரத் ஞாபகம் வந்ததால் எழுந்த துக்கத்தினாலும்தான்.
குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன என்ற முழுப் பெயரைக் கொண்டவர், திருமதி. பெரேரா ஆன போது அவருக்கு வயது இருபத்தொன்று. கல்யாணத் தரகர் ஒருவர் தேடித் தந்த கார்தியவசம் அமரபந்து பெரேரா என்ற பெயரைக் கொண்ட, முப்பது வயதான, அரசாங்க உத்தியோகத்தர் பதவியைக் கொண்டிருந்த நபரின் ஜாதகம்தான், குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன எனும் பெண்ணின் ஜாதத்தோடு மிகவும் ஏற்றதாகப் பொருந்தி வந்தது.
திருமதி. பெரேராவாக ஆனதற்குப் பிறகும் கூட பல வருடங்கள் கழியும் வரைக்கும் ஸ்ரியானியின் கனவுகளில், மீசை வைத்திருந்த செனரத் வந்து போனார். இப்போதும் கூட அவரை ஞாபகம் வரும்போது திருமதி. பெரேராவுக்கு அழுகை வருகிறது. இப்போது முப்பத்தொன்பது வருடங்களின் பிறகு அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது கூட திருமதி. பெரேராவுக்குத் தெரியாது. திருமணம் முடித்த பிறகு திருமதி. பெரேராவுக்கு செய்வதற்கு முடிவேயில்லாமல் ஏராளமான வேலைகள் இருந்தன. திரு. பெரேராவின் பெற்றோருக்குரிய பணிவிடைகள், குழந்தை பிறந்ததற்குப் பிறகு அதனுடைய வேலைகள், மரண வீடுகள், தான வீடுகள், இப்படிப் பலவும். முப்பத்தொன்பது வருடங்கள் எவ்வாறு கடந்து போயின என்பதை திருமதி. பெரேராவால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அடுப்பிலிருந்த பருப்புக் குழம்புக்கு கெட்டித் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கிளறிய திருமதி. பெரேரா, பின்னர் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வாலை மீன்களை வெளியே எடுத்து வந்து சுத்தம் செய்தார். அவற்றின் செதில்களை அகற்றிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ பூனை முனகிக் கொண்டு வந்தது. வாலை மீன்களின் தலைகளை சிரட்டையொன்றில் இட்டு சமையலறை வெளித் திண்ணையில் வைத்து விட்டு, பருப்புக் குழம்பை அடுப்பிலிருந்து இறக்கி வைத்த திருமதி. பெரேரா, இரவு மீதமான சோற்றோடு பிசைந்து பூனைக்குக் கொடுக்கலாம் என வாலை மீன்களை அடுப்பில் வேக வைத்தார். ஒழுங்காக தேனீர் கூட போடத் தெரியாமல் அந்த வீட்டுக்கு வந்த ஸ்ரியானி, திருமதி. பெரேரா ஆனதன் பிறகு சோறு கறிகள், உறைப்பு இனிப்புகள் என அனைத்தையும் சமைக்க படிப்படியாகக் கற்றுக் கொண்டார். உணவோ, பானமோ சுவையாக இல்லாவிட்டால் தேனீர்க் கோப்பைகளையோ, உணவுத் தட்டுகளையோ தரையில் வீசியெறிந்து திட்டும் பழக்கம் திரு. பெரேராவுக்கு இருக்கவில்லை. அவர் சாப்பாட்டைப் பிசைந்துவிட்டு சாப்பிடாமலேயே எழுந்து கொண்டாரானால், உணவு சுவையாக இல்லை என்று அர்த்தம். போகப் போக திருமதி. பெரேரா, திரு. பெரேராவின் நாவுக்குச் சுவையாக சமைக்கக் கற்றுக் கொண்டார். திரு. பெரேரா, எப்போதும் தனக்குப் பிடித்தமான காய்கறி, மீன்களைத்தான் வாங்கிக் கொண்டு வந்தார். தனது தாய்வீட்டில் ஸ்ரியானி சூரை மீன், கீரி மீன் போன்றவற்றைச் சாப்பிடுவதில்லை. வஞ்சிரம், பாரை போன்ற உஷ்ணம் குறைந்த மீன்களைத்தான் சாப்பிடுவார். எனினும் இப்போது திருமதி. பெரேரா சூரை மீன், கீரி மீன்களைக் கூட மிகச் சுவையாக உறைப்புக் கறியாகவும், புளிக் கறியாகவும் விதவிதமாகச் சமைத்து வருகிறார்.
காலத்துக்குக் காலம் திருமதி. பெரேராவுக்கு வெவ்வேறு பொழுதுபோக்குகளில் வெறித்தனமான ஈடுபாடு வரும். தோட்டத்தில் காய்கறிகளை நட்டு வளர்த்தார். ஒரு காலம் பைத்தியம் பிடித்தவர் போல குரோட்டன் செடிகளைத் தேடித் தேடி வளர்த்தார். பிறகு பிகோனியாஸை வளர்த்தார். சங்கிலித் தையல், ஒட்டுத் தையல் என காலத்துக்குக் காலம் திருமதி. பெரேராவுக்கு ஒவ்வொன்றிலும் வெறித்தனமான பிடிப்புத் தோன்றும். தனக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடிக்காதிருக்கத்தானா இவ்வாறான ஒவ்வொரு பைத்தியக்காரத்தனங்களையும் உருவாக்கிக் கொள்கிறேன் என தனியாக இருக்கும்போது தோன்றும். உண்மையில் தனக்கு என்னதான் வேண்டும் என யோசித்துப் பார்க்கையில் அவருக்கு அழுகை வரும். வாழ்க்கையைத் திரும்பவும் மறுபக்கமாகப் புரட்டி வாழ முடியாது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு செய்யக் கூடிய வேலைகளை தொலைக்காட்சியின் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் கற்றுத் தருகின்றன. சமையல், பூச்செடிகள் வளர்த்தல், கைப்பணிகள் செய்தல், தையல் போன்றவை அவை. அடுத்தவர்களின் வாழ்க்கையை எட்டிப் பார்க்கவென இரவுகளில் வேண்டிய மட்டும் தொடர் நாடகங்கள் இருக்கின்றன.
வாலை மீன்களை இறக்கி வைத்து விட்டு, துவாலையை எடுத்துக் கொண்ட திருமதி. பெரேரா குளியலறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார். உடுத்திருந்த ஆடைகளைக் கழற்றி விட்டு, பற்களைத் தேய்த்துக் கொண்டே பூந்துவலைக்குக் கீழே நின்று, இன்றைக்கும் நாளைக்கும் தேவைப்படக் கூடிய பணத்தைக் குறித்து யோசித்துப் பார்த்தார். திரு. பெரேராவின் பணம் முழுதும் வங்கியில்தான் இருக்கிறது. அட்டை மூலமாகக் காசு எடுக்கக் கூட, அதன் இரகசிய இலக்கத்தை திருமதி. பெரேரா அறிந்திருக்கவில்லை. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூட திரு. பெரேரா சொல்லித் தந்திருக்கவில்லை. தங்க நகைகளை வங்கியில் அடகு வைக்கவும் திருமதி. பெரேராவுக்கு மனம் இடந்தரவில்லை. ஓய்வூதியத்தை திருமதி. பெரேராவின் பெயருக்கு மாற்றிக் கொள்ளவும் சில மாதங்கள் வரை செல்லும். வீட்டின் அனைத்து இடங்களிலும், இண்டு இடுக்குகளிலெல்லாம் தேடிப் பார்த்தாலும் கூட பத்து, பதினைந்தாயிரத்துக் கூடுதலாக இருக்காது. திரு. பெரேரா, வீட்டில் அவ்வளவாக பணம் வைத்துக் கொள்வதில்லை. வருவதற்கு முகம் கொடுப்போம். திரு. பெரேராவின் பணக்காரத் தங்கைகள் இரண்டு பேரும் வருவார்கள்தானே என திருமதி. பெரேரா தீர்மானித்துக் கொண்டார்.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் எப்படியும் நாளை மறுநாளே இறுதிக்கிரியைகளைச் செய்ய வேண்டியிருக்கும். மகன் வரத் தாமதமானால் மாத்திரம் இன்னும் நாட்கள் நீடிக்கப்படக் கூடும். எப்படியும் மகன் தனியாகத்தான் வருவான். அவன், தான் காதலித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணையும் கூட்டிக் கொண்டு வருவான் என்று எதிர்பார்க்க முடியாது. மகனை நினைத்துப் பார்த்த போது திருமதி. பெரேராவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அவன் எப்போதும் தன்பாட்டில் வேலைகளைச் செய்து வரும் அமைதியான பையன். முதல் நாள் வெள்ளை நிறத்தில் பட்டர் சில்க் பாவாடையும், சட்டையும் அணிந்து கொண்டிருந்து விட்டு, இரண்டாம் நாள் வெள்ளை நிறத்தில் கைத்தறிச் சேலையொன்றை அணிந்து கொள்ளலாம் என்று திருமதி. பெரேரா நினைத்துக் கொண்டார். அழுகையென்றால் தன்பாட்டில் வந்து விடும். தன்னைக் குறித்தே தொடர்ந்தும் யோசித்துப் பார்க்கும்போதெல்லாம் திருமதி. பெரேராவுக்கு கண்ணீரை நிறுத்தவே முடியாது. திரு. பெரேரா கறுப்பு கோட் சூட் அணிந்து பெட்டியில் படுத்திருக்கும் விதத்தை திருமதி. பெரேரா கற்பனை செய்து பார்த்தார். என்னதான் இருந்தாலும் பல வருடக்கணக்கில் தன்னுடைய உடலில் ஒரு பாகம் போல இருந்த மனித ஜீவியல்லவா எனத் தோன்றும்போது கவலை வருகிறதுதான். முன்பிருந்த பூனைகள், நாய்கள் மரித்துப் போன போதெல்லாம் திருமதி. பெரேராவுக்கு அழுகை அழுகையாக வந்தது. என்றாலும், தனது கடைசி காலத்திலாவது தனக்குப் பிடித்தமான முறையில் வாழவே திருமதி. பெரேரா விரும்பினார். நெடுங்காலமாக செய்ய நினைத்துக் கொண்டிருந்த திட்டங்கள் பலவும் திருமதி. பெரேராவின் சிந்தனையில் இருந்தது.
திரு. பெரேராவின் அலுவலகத்தில் கிளார்க்காகப் பணி புரிந்த, இன்னும் திருமணம் முடிக்காதிருந்த ஸ்டெல்லாவும் கூட தகவல் கிடைத்தால் வராமல் இருக்க மாட்டாள். அக் காலத்தில் திருமதி. பெரேரா, ஸ்டெல்லாவுக்கு செய்வினை சூனியம் செய்துவிட்டு வரவென அளுத்கமை வரை கூட, போயிருக்கிறார். போகப் போக அனைத்துமே திருமதி. பெரேராவுக்கு கண்டுகொள்ளத் தேவையற்றவையாகிப் போயின. மகன் இருந்தான். அடுத்தது, திரு. பெரேராவுடன் சண்டை போட்டுவிட்டு எங்கேயென்றுதான் போவது? இருக்க ஒரு இடம், தொழில் ஒன்று இரண்டுமே இல்லாத பெண்ணொருத்தி பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்வது? என்னதான் இருந்தாலும் திரு. பெரேராவின் திருமதி. பெரேரா. திரு. பெரேரா செத்துப் போனாலும் கூட அது மாறாது.
மகன் படித்த பாடசாலையின் கணக்கு வாத்தியார், மகனின் வகுப்பிலிருந்த ஸிரந்தவின் அப்பா, தோட்டத்தைத் துப்புரவாக்கவென வந்து அடிக்கடி தன்னிடம் தேனீர் கேட்ட கட்டுமஸ்தான தமிழ் ஆள் போன்ற ஒரு சிலர் திருமதி. பெரேராவின் மனதை காலத்துக்குக் காலம் சலனப்படுத்திப் பார்த்த போதிலும், அவர்கள் எவரும் மனதில் நிலைத்திருக்கவில்லை. பெண்களை விடவும் ஆண்கள் மிகவும் பயந்தவர்கள் என்பதை திருமதி. பெரேரா அனுபவத்தில் அறிவார். இப்போது திருமதி. பெரேராவின் நினைவுகளில் அவ்வாறான ஆண்கள் இல்லை எனினும், மூடத்தனம்தான் என்று நன்கறிந்த போதிலும் செனரத் குறித்த மெல்லிய எதிர்பார்ப்பொன்று இப்போதும் இல்லாமல் இல்லை. இன்னும் எத்தனை விடயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. திரும்பவும் ஒரு தடவை அறையில் எட்டிப் பார்த்து விட்டு ஆடையொன்றை அணிந்து கொண்டு திரு. சில்வா வீட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்த திருமதி. பெரேரா, குளித்து முடித்து விட்டு பெரிய துவாலையை உடலில் சுற்றிக் கொண்டு, சிறிய துவாலையால் கூந்தலில் அடித்து ஈரத்தைத் துடைத்தவாறே வெளியே வந்தார்.
அவர் அறையில் நுழைந்த போது திரு. பெரேரா கட்டிலின் மீது அமர்ந்திருந்து தேனீரைப் பருகிக் கொண்டிருந்தார். திருமதி. பெரேரா சிறிய துவாலையைக் கூந்தலிலிருந்து அகற்றி விட்டு, பெரிய பற்களைக் கொண்ட சீப்பினால் சிக்குகளை அகற்றத் தொடங்கினார். கண்ணாடியில் தென்பட்ட திருமதி. பெரேராவின் முகம் ஈரமாக இருந்தது.
“தேத்தண்ணி ஆறிப் போச்சுது. இன்னுமொரு தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வா…” என்று திரு. பெரேரா உத்தரவிட்டதுமே திருமதி. பெரேரா எழுந்து நின்றார்.
திருமதி பெரராவின் வழமையான செயல்பாடுகளும் இடையிடையே, ஒரு மனைவியாக வாழநேர்ந்த வாழ்க்கை குறித்த அளவான மனவோட்டமும் மிகச் சிறந்த முறையில் எழுதிச் செல்லும் ஆசிரியர், இவ்வாறு ஏன் கதையை முடிக்க வேண்டும்? எழுத்தாளர் தனக்குத் தரப்பட்டுள்ள பூரண சுதந்திரத்தை புனைவில் துணிந்து நிகழ்த்த வேண்டும். மிக அழகான கதை. ஆனால் தவறான முடிவு. ஒரு சிறுகதையில் படைப்பாளி தனது படைப்புத் திறனை நிறுவ வேண்டிய தருணம் என்பது இக்கதையில் முடிப்பாக இருக்கிறது.
மொழிபெயர்ப்பு அருமை. புனைவு மொழிபெயர்ப்பில் ஒரு தொனியை உருவாக்கும் சவாலில் ரிஷான் வெற்றி பெற்றுள்ளார். 👍
செனரத்துடன் முடிந்த தன் காதலை மறக்கமுடியாமல் திருமதி பெரேரா திருமணம் ஆன நாளில் இருந்து தன் கணவர் திரு.பெரேரா இறந்து விட்டதாக நம்பி தனது கணவர் இறப்புக்குப் பின் வாழப் போகும் வாழ்க்கையில் கூட செனரத்துக்கு தன் மனதில் இடம் வைத்திருக்கும் பெண்ணின் உணர்வுகளை எளிமையான அழகியலுடன் சொல்லிக்கொண்டே வந்ததைப் பார்த்து பிரமிக்க வைக்கும் அந்த கதைப் போக்கிற்காக கதாசிரியரை பாராட்ட வேண்டும் என்று நினைக்கும்போது வழமையான ஓ ஹென்றி ட்விஸ்ட் கணவர் இறக்கவில்லை என்று.
காசு, பணம், சொத்து, ஆடை, ஆபரணம், அலங்காரப் பொருட்கள் , கணவன், பிள்ளைகள், சுவையான உணவு, . . . இவைகளைத் தவிர வேறு ஒன்றும் பெண்களுக்குத் தேவை . அதனை தேடி உலகில் உள்ள அத்துணை திருமதி. பெரேராக்களும் போய்கொண்டுதான் இருப்பார்கள். திருமதி. பெரேராக்கள் தங்கள் கணவர்களின் இறப்பிற்காக காலத்திடம் கையேந்தி நிற்கிறார்கள். ஆயிரம் ஆண்கள் திருமதி பெரேராக்களை சலனப்படுத்தி சீண்டினாலும் அவர்கள் செருப்பின்கீழ் படிந்திருக்கும் சிறு துகள்கள்தான் நிலைக்கப்போவதில்லை உதிர்ந்துதான்போவார்கள் . என்னதான் ஆண்கள் வீரம் செறிந்தவர்களாக காட்டிகொண்டாளும் பெண்களைவிட ஆண்கள் மிகவும் பயந்தவர்கள் என்பதை பெரேராக்கள் நன்கு உணர்ந்தவர்கள். காலம் முழுவதும் பெரேராக்களின் “மனசு” செனரத்துகளுக்காக ஏங்கிகொண்டே இருக்கும் . பெரேராக்களின் “மனசுகளில்” உள்ள வெற்றிடங்களையும் , எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் வேறு யாராலும் நிரப்ப முடியாது அது அவர்களால் மட்டுமே சாத்தியப்படும் . பெரேராக்களின் கொதிநிலை “மனசு” ஜீரோ டிகிரிக்கு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் . அவர்களின் நியாயங்களை நம் “மனசு” ஏற்றுதான் ஆகவேண்டும்.