/

உயிர்த்தெழல்: ஐ.கிருத்திகா

பண்டாரவடையார் வீடு தெருவில் தனியாக இருக்கும். நெருக்கமாக நாலைந்து வீடுகள் எதிரும், புதிருமாக நின்றிருக்கும். அதிலிருந்து இருபதடி தள்ளி பண்டாரவடையார் வீடு தனித்திருக்கும். மூங்கில் பிளாச்சுகளால் செய்த தட்டியால் திண்ணையை மறைத்திருப்பார்கள்

திண்ணைகள் உயரமானவை. அதன் கீழே சிறு ஓட்டம் போலிருக்கும். திண்ணையைத் தாண்டி உள்ளே போனால் நான்கு தாழ்வாரங்களுடன் கூடிய தொட்டி முற்றம். முற்றத்தைக் கம்பிவலையால் மூடியிருப்பார்கள். முற்றத்தில் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து மீனாட்சியக்கா ஒயர்கூடை பின்னிக் கொண்டிருப்பாள்.

நடுத்தர நிறத்தில் தெற்றுப்பல் தெரிய சிரிப்பாள். வழுவழுவென்று எண்ணெய் தடவி பிசிறில்லாமல் சடை பின்னியிருப்பாள். அவள் வலது கால் விரல்கள் முற்றத்தில் தாளமிட்டபடி இருக்கும். அதனால் உண்டாகும் மெட்டி சத்தத்தைத் தவிர வீட்டில் ஈங்குருவி சத்தமிருக்காது.

கமலி அடிக்கடி போவாள். அளவான உயரம், அளந்தெடுத்த வடிவம், ததும்பி நிற்கும் பெண்மையோடு தளர, தளர சடை பின்னி அழகாய் சிரிக்கும் மீனாட்சியக்காவை அவளுக்கு நிரம்பப் பிடிக்கும். அவ்வளவு பெரிய ஓட்டு வீட்டில் அவளும், பண்டாரவடையாரும் மட்டும் தனித்திருந்தனர்.

பண்டாரவடையிலிருந்து இரண்டுதலைமுறைகளுக்கு முன் குடி பெயர்ந்த குடும்பம் அது. அதனால் அவருடன் அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டது. பண்டாரவடையார் எப்போதும் அறையை விட்டு வெளியே வரமாட்டார். வயலுக்குப்  போய்விட்டு வந்ததும் அறைக்குள் புகுந்து கொள்வார். அதனால் கமலி தைரியமாக நினைத்தபோது போய்வருவாள்.

மீனாட்சியக்காநன்றாகப் பேசுவாள். அவள் பேசும்போது தலை இசைவாய்

அசையும். ஒரு குழந்தையிடம் பேசுவது போலிருக்கும் அவள் தோரணை. கமலிக்கு ஒரு சொல் சொல்ல வார்த்தை வராது. அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருப்பாள்.

தெய்வத்தின் முன்பு பக்தன் நின்றிருப்பது போல நினைத்துக்கொள்வாள். நீள,நீள விரல்களை அசைத்து பேசும் மீனாட்சியக்காவுக்கு நேர்த்தியான உருவாம்சம் அமைந்ததையும், அதை ஆரத் தழுவிக் கொள்ளும் பண்டாரவடையாரின் விரல்களுக்குக் கிடைத்த பாக்கியத்தையும் எண்ணி கமலி பூரிப்பாள்.

மீனாட்சியக்காவுக்கு பகலில் டிவி பார்க்கும் பழக்கமில்லை. கூடத்தில் டிவி

வெறுமனே அதுவும் ஒரு பொருளாய் டேபிள் மேல் வீற்றிருக்கும். வெயிலேறிய பகல் பொழுதில் சமையல் முடிந்த கையோடு அவள் வந்து முற்றக் குறட்டில் அமர்ந்துவிடுவாள். கைக்கு அடக்கமான டிரான்சிஸ்டர் ரேடியோ அவளருகில் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும்.

மீனாட்சியக்கா பாட்டு கேட்டபடியே ஒயர்கூடை பின்னுவாள். கூடை பின்னுவது காசு சம்பாதிக்க அல்ல. பொழுது போக. அவள் கூடைகளுக்கு உள்ளூரில் மட்டுமல்லாது பக்கத்து டவுனிலும் நல்ல கிராக்கியிருந்தது. பிளாஸ்டிக் பைகள் அதிகம் வராத காலம். சாமான்கள் வாங்கவும், பள்ளிக்குப் புத்தகம் எடுத்துச் செல்லவும் கூடைகள் அதிக புழக்கத்திலிருந்தன.

கமலிக்கும் இனாமாக ஒரு கூடை கிடைத்தது. அம்மா காசு தந்தபோது மீனாட்சியக்கா மறுத்துவிட்டாள். இளஞ்சிவப்பு நிற ஒயரில் பச்சை வண்ண ஒயர் ஊடாக ஓடி கூடைக்குப் பளிச்சென்ற தோற்றத்தைக் கொடுத்திருந்தது . அதைப் பின்னும்போது கமலி கண்கள் மின்னப் பார்த்தவாறிருந்தாள். ஆர்வம் உந்தித் தள்ள ஒருவித குறுகுறுப்போடு கூடையை உன்னித்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று அவள் கையில் அதைத் தந்து அந்தப் பரவசத்தைப் பறித்து வைத்துக் கொள்ளலாம் போலிருந்தது மீனாட்சியக்காவுக்கு. கமலி காலைத் தொங்கவிட்டு குறட்டில் கைகளை அழுந்த ஊன்றி உடலை லேசாக முன்னுக்குச் சாய்த்து கூடையில் கண்களைப் பதித்திருந்தாள். அவள் நிழல் கூட குழைந்திருந்தது போல மீனாட்சியக்காவுக்குத் தோன்றிற்று.

பூரான் சடை போன்ற கைப்பிடியை முடித்து அடியில் குமிழிகள்பொருத்திக்

கூடையை அவள் கையில் தந்தபோது கமலி எழுந்து நின்றுவிட்டாள். பேச்சற்று வாய் பிளந்திருந்தது.

“உனக்குத்தான்… வச்சிக்கோ. பணமெல்லாம் வேணாம்.”

 கைகள் அனிச்சையாக கூடையை அணைத்துக்கொண்டன. வேண்டிய வரம் கிடைத்துவிட்டதுபோல் முகம் கனிந்து போயிற்று. சாதாரணமாகவே மீனாட்சியக்காவை அவளுக்கு நிரம்பப் பிடிக்கும். அதன்பிறகு கையைக் குழித்து ஊற்றி, ஊற்றி குடிக்கும் ரசம் அளவுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது.

“உனக்கு ரசம்னா உசிராமே…உங்கம்மா சொன்னாங்க. அப்படியா…?”

மீனாட்சியக்கா கேட்டபோது கமலியின் தலை வெகுவாக அசைந்தது. பொன்திரவம் போல பளபளக்கும் ரசத்தில் மிதக்கும் தக்காளி போல அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயின.

இருபதின் தொடக்கத்தில் இருந்தவள் ஒருவித மயக்கத்தில் திளைத்து கனவுகள் கண்டு கொண்டிருந்த காலம். அன்றொருநாள் பகல் பதினொன்றிருக்கும். வீட்டில் பொழுதுபோகாமல் மீனாட்சியக்காவைப் பார்க்க வந்திருந்தாள். மூங்கில் தட்டி லேசாக திறந்திருந்தது. அது வழியாக நுழைந்தவள் இடது பக்க அறையிலிருந்து ஏதோ சத்தம் வர திண்ணைக்குக் கீழிருந்த ஓட்டத்தில் நடந்து அறை சன்னலுக்கருகில் போனாள்.

சன்னல் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. உள்ளிருந்து கசிந்த குண்டு பல்பு வெளிச்சம் அனிச்சையாக எட்டிப்பார்க்க வைத்தது. மெல்ல பார்வையை உள்ளே செலுத்தியவளுக்கு அடிவயிறு சிலீரிட்டது. விறுவிறுவென்று ரத்தம் எங்கெல்லாமோ பாய்ந்தது. கண்ட காட்சி, பேழைக்குள் பத்திரப்படுத்தப்பட்ட சித்திரம் போல கண்களுக்குள் தங்கிப்போனது.

கமலி சட்டென கண்களை இறுக மூடிக்கொண்டாள். நொடிகள் கரைந்தன. அது உள்ளிருக்கும் இருவருக்குமான தன்முனைப்பு போராட்டத்தில் தோற்கவும், ஜெயிக்கவும் உருவாக்கப்பட்ட நொடிகள். இருவரையும் புத்தம்புதிதாய் வார்த்தெடுக்கும் நிகழ்வு. குண்டுபல்பு வெளிச்சம் பொங்கி வழிந்த அறைக்குள் மீனாட்சியக்கா தங்கக்குழைவாய் பளபளத்தாள்.

நீர்விட்டு துடைத்தெடுத்த சிற்பம் போல மினுங்கினாள். விரைவாய் அந்த இடத்தைவிட்டு அகன்று விடவேண்டுமென்று தோன்றினாலும் கமலியால் கால்களைப் பெயர்க்க முடியவில்லை. இன்னொருமுறை மீனாட்சியக்காவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. படபடவென்று அடித்துக் கொண்ட இதயத்தோடு கதவிடுக்கில் கண் பதித்து உள்ளே பார்த்தாள்.

இப்போது பண்டாரவடையாரைக் காணவில்லை. அக்கா மட்டும் வயிற்றில் கைகளைக் கோர்த்துப் பதித்து கண்கள் மூடிப் படுத்துக் கிடந்தாள். இதழ்கள் கோடிழுத்ததுபோல நீண்டிருந்தன. கடவுள் காட்சி போல கமலி அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட அடம்பிடிக்கும்  குழந்தையை சமாதானப்படுத்தி முழுக் கிண்ணத்தையும் காலி செய்துவிட்டபிறகு கிடைக்கும் நிறைவு போல ஏதோ ஒன்று உள்ளே உண்டாயிற்று.

சன்னல் கம்பிகளை அழுந்தப் பற்றியிருந்த விரல்களை அகற்றிக்கொள்ள மனசேயில்லை.கண்களை அவள் மேலேயே பதித்துக்கொள்ள ஆசையாயிருந்தது. பெண்ணுடல் இவ்வளவு அற்புதமான ஒன்று என்று சத்தம் போட்டு சொல்லவேண்டும் போலிருந்தது. மீனாட்சியக்காவின் முழு நிர்வாணத்தில் ஆபாசமில்லாத அழகு சொட்டிற்று. ஆடை, ஆபரணங்களற்ற நிர்வாணம் அருவருக்கவில்லை.

களங்கமற்ற அழகு செடியிலிருக்கும் பூப்போல, மயிலின் வண்ணக்கழுத்து போல, சரிகையிழையையொத்த மஞ்சள் வெயில் போல, சிலீரென்று கொட்டும் மழைத்துளி போல, மண்வாசம் போல அவ்வளவு அழகாயிருந்தது. இதமாயிருந்தது. அந்த கனத்த முலைகள் பேரழகு. கோவில் சிலைக்கு அமைந்திருப்பது போல அவ்வளவு வடிவாம்சம்.

கைகளும், கால்களும் கூட அப்படித்தான். மீனாட்சியக்காவின் உடலமைப்பு அவள் குணத்துக்கு ஏக பொருத்தம். கமலி படியிறங்கி வீட்டுக்கு வந்துவிட்டாள். மறுநாள் சென்றபோது மீனாட்சியக்கா முற்றத்தில் நின்று தலையை சிக்கலெடுத்துக் கொண்டிருந்தாள்.

“வா கமலி…”

சிரித்தபடி வரவேற்றாள். கரும்பச்சையில் வெள்ளைப்பூக்கள் சிதறிய சேலையும், அதற்குப் பொருத்தமான வெள்ளை ரவிக்கையும்  அணிந்திருந்தாள். கமலி எதார்த்தமாக அமர்ந்துகொண்டாள்.

“நேத்திக்கு வந்திருந்த போல…”

இந்தக் கேள்வியில் கமலியின் கன்னங்கள் குபீரென சிவந்துவிட்டன. அக்காவைப் பார்க்கத் தயங்கி கண்கள் தரை நோக்கின. அக்கா என்ன சொல்வாளோ என்கிற பதைபதைப்பில் உடலில் மெல்லிய நடுக்கம் பரவிற்று.

‘அடுத்தவங்க அந்தரங்கத்தப் பாக்கலாமா… இது தப்பில்லையா…?’ என்று அக்கா கேட்கும்பட்சத்தில் என்ன பதில் சொல்வதென்று கமலி திகைத்தாள். இங்கு வந்திருக்கவே கூடாதென்று தோன்றிற்று.

அவள் தன்னைக் கவனித்திருக்க மாட்டாள் என்றுதான் கமலி நினைத்திருந்தாள். அந்த நினைப்பு தந்த தைரியத்திலேயே அவள் எப்போதும் போல இயல்பாக வந்தாள். மீனாட்சியக்கா கண்களை மூடிக்கிடந்த நிலையிலேயே தன்னை கவனித்திருக்கிறாள் என்பது கமலிக்கு அதிர்ச்சியாக இருந்தது. விருட்டென்று எழுந்து ஓடிவிடலாமா என்றுகூட எண்ணிவிட்டாள்.

மீனாட்சியக்கா கூந்தல் நுனியில் முடிச்சிட்டுக்கொண்டு அவளருகில் அமர்ந்தாள். புடவைக்குப் பொருத்தமாக கையில் அணிந்திருந்த பச்சைக் கண்ணாடி வளையல்கள் கலகலத்தன. கமலிக்குத் தரிக்கவில்லை.

“அக்கா, மன்னிச்சிடுங்க…”

குரல் கரகரத்தது. மீனாட்சியக்கா அவளுடைய வலது கையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள். ஒருநொடி முழுதாய் கரைந்திருந்ததில் கமலிக்குத் தவிப்பாக இருந்தது.

கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. நாக்கு வரளவில்லை. இருந்தும் ஒரு ஆசுவாசத்துக்காக தண்ணீர் கேட்டாள். நிலைமையை எப்படி சமாளிப்பதென திகைத்து விழிக்கும் அவளுடைய அப்பாவித்தனம் மீனாட்சியக்காவுக்கு சிரிப்பை வரவழைத்தது.

சமையலறை நிலைப்படியருகில் வைக்கப்பட்டிருந்த பானையைக் கைக்காட்டினாள். கமலி இமைப்பொழுதும் தாமதிக்காது எழுந்து வந்துவிட்டாள். அகல வட்டிலில் மணல் நிரப்பப்பட்டு அதன் மேலே பானை வைக்கப்பட்டிருந்தது.

தண்ணீர் குளிர்ச்சியாயிருந்தது. உதட்டுக்குக் கீழே தாடையில் வழிந்த நீர் கீழிறங்கி மார்பை சில்லிட வைத்தது. கமலி தம்ளரை மூடியில் கவிழ்த்து வைத்தாள். சிறிதுநேரம் இரு கைகளையும் பானையில் பதித்துக்கொண்டாள். உக்கிர வெயிலுக்கு அதன் சில்லிப்பு அவ்வளவு இதமாயிருந்தது. கொஞ்சம் ஆறுதலாகவுமிருந்தது.

சொரசொரத்த வயிற்றில் ஐஸ்கட்டி விரல்களை வைத்துக்கொள்ளலாமா என்று நினைத்தவள் தாவணியை விலக்கி கைகளை வயிற்றில் வைத்துக்கொள்வதை மீனாட்சியக்கா பார்த்தால் தவறாக நினைக்கக்கூடும் என்றெண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

“தண்ணி குடிச்சாச்சா…?”

அக்கா கேட்டாள். கமலி தட்டுத்தடுமாறி வந்தமர்ந்தாள்.

“பயமா இருக்கா…?”

பட்டென்று அப்படிக் கேட்பாளென்று அவள் எதிர்பார்க்கவில்லை. தலைகுனிந்து கொண்டாள். திரண்ட நீர், விழி விளிம்பில் இரு சொட்டுகள் அளவு மினுங்கிற்று.

“கதவை மூடாம விட்டது என் தப்பு. எப்படி மறந்தேன்னு தெரியல. “

மீனாட்சியக்கா எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

“மன்னிச்சிடுங்கக்கா…”

இது இரண்டாவதுமுறை.

“விடு பாத்ததையே நெனச்சிக்கிட்டிருக்காத. இது எல்லார் வீட்லயும் நடக்கிறதுதான். உனக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன். இல்லையா…?”

“தெ… தெரியும்.”

கமலி குழறிக் குழறி கூறினாள். அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

முற்றத்து கம்பி வலையை பிரதியெடுத்து வெயில் கீழே விரித்து விட்டிருந்தது. மிளகாய் வற்றலும், கொத்தமல்லி விதையும் தனித்தனி முறங்களில் காய்ந்து கொண்டிருந்தன. சாத்தூர் மிளகாய்க்கு தனி காரமுண்டு. நிறமும் செக்கச் செவேலென்றிருக்கும்.

முறத்தில் நிரவலாகக் கிடந்த மிளகாய்கள் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டங்கள் போல கிடந்தன. மீனாட்சியக்கா எழுந்து மிளகாயைத் திராவி விட்டு கை கழுவி வந்தாள். அந்த இடைவெளி கமலிக்குச் சற்று ஆசுவாசத்தைத் தந்தது. அக்கா புடவையில் கையைத் துடைத்துக்கொண்டு மெலிதான குரலில் சொன்னாள்.

“இவ்வளவு பெரிய வீட்டுல பத்து வருஷமா தனியா இருக்கேன். அவருக்கு சம்பா, குறுவை, தாளடின்னு தன்னை ஈடுபடுத்திக்க நிறைய இருக்கு. எனக்கு அப்படியில்ல. சமைச்சு, கூடை பின்னி, பாட்டு கேட்டு கொஞ்சநேரம் போகும். மத்த நேரங்கள்ல கூடமும், தாழ்வாரமும் வெறுமையோட அமைதியா கிடக்கறப்ப ஒரு ஆசுவாசம் கிடைச்சா தேவலாம் போலிருக்கும். அவர் அதைப் புரிஞ்சிக்குவார். நேத்திக்குக்கூட அப்படித்தான். மனசு எதையெதையோ யோசிச்சிக்கிட்டு தவிப்பா தவிச்சிது. அவர் என் முகத்தைப் பாத்ததும் ஒருநொடியில அனுமானிச்சிட்டார். உடனே கையசைச்சி கூப்பிட்டாரா, தன்னை மறந்து ஓடிட்டேன். அவருக்கு, நான் முகம் சுணங்கி இருக்கக்கூடாது. இருந்தா கைவேலையை விட்டுடுவார். இந்த அனுசரணையை அவருக்கும் நான் தரணும்னு ஆசைப்படுவேன். என்னிக்காவது அவர் சோர்ந்திருந்தா நான் முந்திக்குவேன். இந்த வீட்டுல திண்ணை, சாமி ரூம் தவிர ஆளோடி, கூடம், தாழ்வாரம், முற்றம், சமையக்கட்டு உட்பட எல்லா இடமும் எங்களுக்கு ஏத்த இடம்தான். “

மீனாட்சியக்கா கண்ணடித்து சிரித்தாள்.

“நீ வர்றதுகூட எனக்கு ஆசுவாசம்தான். நான், உன்னை தினமும் எதிர்பாத்துக்கிட்டேயிருப்பேன்.”

அவளின் குரல் இழைந்தது.

குளிர் மார்கழியில் கொல்லையில் பூக்கும் டிசம்பர் பூக்களைப் பறித்து மீனாட்சியக்கா ஒரு கையகலத்துக்கு நெருக்க கட்டி வைத்திருப்பாள். ஓட்டிலிருந்து முற்றத்தில் சொட்டும் பனி நீர்த்துளியில் நனைந்தது போல அப்போது அவள் முகம் பளீரென்று மின்னும். டிசம்பர் சரத்தை வாங்கிக்கொள்ள கை நீட்டும்போது எப்போதாவது அவளுடைய சில்லிடும் விரல்கள் மேலே படும். தேன்குழல் போன்ற அந்த விரல்களில் நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் பளிச்சிடும். மோதிரவிரலில் வங்கி மோதிரம் அணிந்திருப்பாள். நடுநாயகமாக நீல கல்லும் ஓரங்களில் வெள்ளைக் கற்களும் பதித்த வங்கி மோதிரம்.

“நீங்க பாதி வச்சிக்குங்கக்கா…”

 கமலி தினமும் இதைக் கூறுவாள்.

“சின்னப்பிள்ளைக வச்சிக்கறது. நான் வச்சிக்கிட்டா சகிக்காது.”

சிரித்தபடி கூறும் மீனாட்சியக்கா பூக்காரம்மாவிடம் செவ்வாய், வெள்ளி மல்லிகை வாங்கி வைத்துக்கொள்வாள். தலையில் பூவோடு அவளைப் பார்க்க கமலிக்குப் நிரம்பப் பிடிக்கும். பளிச்சிடும் தோற்றத்தில் கசங்கிய வாயில் புடவையில் அக்கா ஒளி வரைந்த ஓவியம் போல் நின்றிருப்பாள். அந்திமஞ்சள் வெயிலின் கிரணங்கள் எழுதிய ஓவியம். பிசிறுகளற்று சீரான வளைவு கோடுகளால் கடவுளின் அதியற்புத கற்பனையில் வரையப்பட்ட ஓவியம். கமலிக்கு பலவாறு எண்ணத் தோன்றும்.

பண்டாரவடையார் உயரமாக, தாட்டியமாக இருப்பார். அவருக்கு அக்கா தோளளவு வருவாள். அவர்களுடைய திருமணப்புகைப்படம் கூடத்தில் மாட்டியிருக்கும். பண்டாரவடையாரும், அக்காவும் தோளுரச சிரித்தபடி நின்றிருப்பார்கள். மார்பளவு புடைப்படம் அது. அதில் அக்கா இளையவளாக சற்றே மெலிந்த தோற்றத்திலிருப்பாள்.

கமலி உள்ளே நுழைந்ததும் முதலில் அதைத்தான் பார்ப்பாள். தாழ்வாரத்தில் விழும் வெளிச்சம் கூடத்தில் விழுவதில்லை இருளடைந்த கூடம் அது. ஓட்டில் பதிக்கப்பட்டிருந்த சதுரக்கண்ணாடி வழியாக துளி வெளிச்சம் விள்ளலாக விழுந்து கிடக்கும். அந்த வெளிச்சத்துக்கு நேர்மேலே சுவரில் புடைப்படம் தொங்கும். கீழே கிடக்கும் ஒளியை அள்ளிப் பருகியவள் போல மீனாட்சியக்கா சுடர் விட்டுக் ஜொலிப்பாள்.

தெற்றுப்பல் சிரிப்பு மின்னல் தெறிப்பு போன்ற சாயல் கொண்டிருக்கும். தாலிக்கட்டி முடித்த கையோடு எடுக்கப்பட்ட புகைப்படம் அது. இளசான கீரைத்தண்டு கொல்லையில் செழித்திருக்கும். ஆறுமாதத்தண்டு என்பாள் அம்மா. அக்காவை அப்படித்தான் கமலிக்கு எண்ணத் தோன்றிற்று. குழம்பில் வெந்த அடித் தண்டை எடுத்துக் கடித்தால் மாவு போலக் கரையும்.

அக்காவைப் பண்டாரவடையாரும் அப்படித்தான் ரசித்து சுவைக்கிறார் என்று கமலி அடிக்கடி நினைத்துக்கொள்வாள். விழிகளை மலர்த்திக்கொண்டு, தோளில் மாலையோடு பண்டாரவடையாரை இடித்தபடி அக்கா நின்றிருப்பதை எத்தனைதரம் பார்த்தாலும் அவளுக்கு அலுப்பதில்லை.

குங்கும நிறத்தில் பட்டுப்புடவை. கையில் சரிகை வைத்து தைத்த சட்டை. புடவைக்குப் பொருத்தமாக சிவப்புக்கல் நெக்லஸ். நெற்றியில் கருஞ்சிசிவப்பு ஸ்டிக்கர். மேலே லேசான குங்கும தீற்றல். பார்வையை அகற்ற மனசே வராது.

“உனக்கு வேற வேலையே இல்லடி. எப்பப் பாத்தாலும் இதையே பாத்துக்கிட்டு….” என்று மீனாட்சியக்கா சலித்துக்கொள்வாள்.

கமலிக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. அக்கா பெரிதாய் சந்தோஷப்பட்டாள்.

“கல்யாணமாயிப் போனதும் இந்த அக்காவை மறந்துடக்கூடாது.”

கண்டிப்புடன் கூறினாள்.

“கல்யாணமாகறவரைக்கும் கமலியை தெனமும் வீட்டுக்கு அனுப்பணும்.”

கமலியின் அம்மாவிடம் உரிமையோடு சொன்னாள்.

மழைகொட்டும் நாட்களிலும் கமலி, மீனாட்சியக்கா வீட்டில்தான் கிடப்பாள். திண்ணையில், விரித்த குடையை நீர் சொட்ட அமர்த்திவிட்டு உள்ளே வருபவளுக்கு அக்கா கொறிப்பதற்கு சூடாக ஏதும் தருவாள்.

“திங்கிறதுக்காகவே அங்கப் போற…” என்று அம்மா கிண்டலடிப்பாள்.

முற்றம் முக்கால்வாசி நிறைந்து ஓடும். அதைப் பார்த்துக்கொண்டே கொறிப்பது சுகமாயிருக்கும். மீனாட்சியக்காவுக்கு நல்ல கைப்பக்குவம். உப்பு, உறைப்பை அளந்து போட்டிருப்பாள்.

அன்று பிடி கொழுக்கட்டை தந்தாள். கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கொட்டி தேங்காய் சேர்த்து செய்த கொழுக்கட்டை .

அக்காவின் முகத்தில் எண்ணெய் மினுமினுப்பு. மேலுதட்டில் வியர்வை அரும்பியிருந்தது.

“அடுப்படியில நின்னது…”

முந்தானையில் துடைத்துக்கொண்டாள். கண்களில் மினுக்கட்டாம்பூச்சிகள் ஒளிர்ந்தன.

“இன்னும் சாப்புடு…”

வலுக்கட்டாயமாக இரண்டைத் தட்டில் வைத்தாள். அறைக்கு தட்டு நிறைய கொழுக்கட்டைப் போயிற்று. அவள் நடையில் துள்ளல் தெரிந்தது. தலைக்கு நீரூற்றி நுனியில் முடிச்சிட்டிருந்தாள். காதோரம் கிருதா மயிர் சரிந்து வழிந்தது. தனக்கும் ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்தமர்ந்தாள்.

“சொல்லணும் போல இருக்கு… இரண்டாவது தடவையா தலைக்குக் குளிக்கும்படியா ஆயிடுச்சு. கொட்டற மழைக்கு ஒரு இதம். தாழ்வாரத்துல கால்வாசி நனைஞ்சிடுச்சு. அதுகூட தெரியாம……. சலேர், சலேர்ன்னு அடிக்கிற சாரலுக்கு அவ்ளோ வீச்சு கூடாது. ஊசிமாதிரி உடம்பைக் குத்துது. இருந்தாலும் அது ஒரு பொருட்டா தெரியல. ஒரு ஆவேசம், ஒரு ஆசுவாசம் ரெண்டும் ஒரே நேரத்துல உண்டாயி, தணியிறப்ப சட்டுன்னு ஒரு நிறைவு. அகல் விளக்கு சுடர் மாதிரி பொட்டு வெளிச்சம் தொலக்கமா மனசுல மின்னுச்சி… இதையெல்லாம் உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன், சொல்லு.”

அக்கா மெதுவாக கேட்டாள்.

மழையின் தாரைகள் விடாது கொட்டிக்கொண்டேயிருந்தன. திடுமென அதிர்ந்த இடியோசையில் மின்சாரம் தடைபட்டுப்போனது. அடுத்த இடியை அறிவிப்பது போல பளீரென மின்னல் வெட்டியது. அதன் வெளிச்சத்தில் மீனாட்சியக்கா சிமிழ் போல சிரித்தபடி அமர்ந்திருப்பதைப் பார்க்க கமலிக்கு ஆசையாக இருந்தது.

ஐ. கிருத்திகா

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் வசிக்கிறார். இருபது வருடங்களாக சிறுகதைகள் எழுதிவரும் இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.