மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வுபற்றி சிங்களத்தில் வெளியான முதலாவது நாவலான ‘தித்த கஹட்ட’ – கசந்த சாயம் என்ற நாவலின் ஆசிரியரான கே.சுனில்ஷாந்தவுடன் பிரியன்ஜித் ஆலோக்கபண்டார நடாத்திய உரையாடலின் தமிழ் வடிவம் இது.
உங்கள் முதல் நாவலிலும், ‘தித்த கஹட்ட‘ நாவலிலும் அடிப்படையாக உள்ளது விளிம்பு நிலை மனித வாழ்வு…
நான் சிறுவயது முதல் வளர்ந்தது பதுளையில். எமது வீட்டுக்கு அப்பால் உள்ள காணிகளில் தோட்டத்தொழிலாளர்கள் கூலி வேலை செய்வதனை நான் பார்த்திருக்கின்றேன். மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவர்கள் வேலை செய்வதனை நாம் பார்த்திருக்கின்றோம். விவசாயம் செய்த சிங்கள மக்களை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருந்ததனை பார்த்திருக்கின்றோம். ஏன் அவ்வாறு நடைபெறுகின்றது என்ற வினா சிறு வயது முதலே எம்மிடம் காணப்பட்டது. இதில் பாரியதொரு அரசியல் இருக்கின்றது என்ற விடயம் வயது முதிர்ச்சியுடன் தான் தெரிய வருகின்றது. இந்த அரை நூற்றாண்டுகளில் அவர்களின் வாழ்க்கையானது சிறியளவில் தான் உயர்ந்திருக்கின்றது. பிற்காலத்தில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்தவுடன்தான் இடதுசாரி கண்ணோட்டத்தில் இலங்கைத் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினையை நோக்க நாம் பழக்கப்பட்டோம். இந்த நூலை எழுதுவதற்கு இவ்விடயங்கள் அனைத்தும் உத்வேகம் தந்திருக்கக் கூடும்.
இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களாக சேவையைப் பெற்றுக்கொள்ள இந்திய தமிழர்களை இங்கு அழைத்து வந்தமை மற்றும் 1930 வரை அவர்களின் வாழ்க்கை என்பனவற்றை பிரதிபலிக்கவே ‘தித்த கஹட்ட’ ஊடாக முயற்சித்துள்ளேன். தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்தான நாவல் சிங்கள மொழியில் முன்னர் எழுதப்பட்டிருக்கவே இல்லை. இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் பற்றி எழுதப்பட்ட முதலாவது நாவலாக இந்த நாவலைக் கருத முடியும் என்று இந்த நூலை வாசித்த பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி குறிப்பிட்டிருந்தார்.
தித்த கஹட்டவுக்கு அடிப்படையாக அமைவது வரலாற்று விடயங்கள். அதற்காக நீங்கள் மேற்கொண்ட ஆய்வு எவ்வாறானது?
கலாநிதி குமாரி ஜயவர்தனவின் நூல்கள் சிலவற்றை வாசித்தேன். இலங்கையின் தொழிலாளர் இயக்கங்கள் பற்றி அவர் எழுதிய நூல்களில் ஓரளவுக்கு தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் வரலாறு தொடர்பான விடயங்களை பகரும் ஆவணங்கள் பலவற்றை ஆய்வு செய்தேன். தோட்டத்தொழிலாளர்களின் வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் ஒன்று நாவலப்பிட்டியவில் அமைந்துள்ளது. இந்திய தமிழர்கள் இங்கு வரும் பொழுது எடுத்து வந்த பொருட்கள் மற்றும் அவர்களின் வருகை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இயலுமானவரை ஆராய்ந்துப் பார்க்க முடிந்தது. தகவல்களை மீள உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். இவ்வாறு பெறப்பட்ட வரலாற்றுத் தகவல்கள தான் ‘தித்த கஹட்ட’ நாவலை எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
நாவல் போன்றதொரு படைப்பிலக்கியத்தினை ஏன் தெரிவு செய்தீர்கள்?
கல்விசார் ஆவணங்களை மிக சொற்பமானவர்களே வாசிக்கின்றனர். பல்கலைக்கழக மட்டத்திலான அறிவுடன் ஊடாடும் மிகவும் சொற்ப அளவினரே அவ்வாறான ஆவணங்களை வாசிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் நாவல்களை அதிகளவானவர்கள் வாசித்து மகிழ்கின்றனர். சிங்கள சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தோட்டத்தொழிலாளர்களின வரலாற்றுக் கதையை அறிந்துகொள்ள வேண்டும் என்று கருதினேன். தற்போது இந்த ‘தித்த கஹட்ட’ நாவலை தமிழில் மொழிப்பெயர்ப்பதற்கு தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்கள் மூவர் கேட்டிருக்கின்றனர்.
சிங்கள மக்களைப் போன்று மலையகத் தமிழ் மக்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு தொடர்பில் மிகவும் குறைந்தளவு புரிதல் தான் உள்ளதல்லவா?
தமது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து கப்பல்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும், அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்று மட்டுமே இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட தற்கால மலையகத் தமிழ் சந்ததியினர் அறிந்து வைத்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து வரும் வழியில் அவர்கள் எதிர்கொண்ட துயரங்கள், மரண அனுபவங்கள், மிகவும் கொடூரமான துன்பங்கள் பற்றி அவர்களுக்கு தெரியாது. இந்த பயணத்தின் போது அம்மை நோய் மற்றும் கொலரா தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது பற்றியும் அவர்களுக்கு தெரியாது.
தற்போது உள்ள தொழிற்சங்கங்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நேர்மையாக எந்தவிதமான முயற்சிகளையும் எடுப்பதில்லை. அப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தமக்கென ஓர் அடையாளம் என்பது இல்லாமல் போய்விடும் என்பதனை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். தோட்டத்தொழிலாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வுகளை முன்வைத்துக் கொண்டு இந்த நிலைமையை தொடர்ச்சியாக பேணிக்கொள்ளவே அவர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் தான் தாமாக சுயமாக அணிதிரண்டு ஒன்றுப்பட்டு முன்னெடுக்கும் அரசியல் போராட்டத்தினூடாக மட்டுமே தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற யோசனையை ‘தித்த கஹட்ட’ மூலம் கூற முயன்றிருக்கின்றேன்.
வரலாற்று நிகழ்வொன்றினை கதையாக எழுதும் போது, உண்மையான வரலாற்றுக் கதாப்பாத்திரங்களை உள்ளடக்க நேருகின்றது அல்லவா?
இந்த நூலில் வரும் மீனாட்சி, கோபால் மற்றும் கணேஷ் ஆகிய கதாபாத்திரங்களும், தோட்டத்தொழிலாளர்களுக்காக முன்னின்று போராடிய ஆங்கிலேயரான தோட்ட முகாமையாளர் பிரெஸ்கர்டல் என்பவரும் உண்மையான கதாப்பாத்திரங்களாகும். இந்தியாவிலிருந்து வந்த நடேச ஐயர் என்ற பத்திரிகையாளர்தான் இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களை முதன்முதல் ஒன்றுப்படுத்தி அணிதிரட்டினார். அவரின் கீழ் அவர்கள் ஒன்றுசேர்ந்து அடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரெஸ்கர்டெலின் அலுவலகத்திற்கு சென்றனர். அன்று தொடக்கம் அவர்கள் இலங்கையின் இடதுசாரி இயக்கத்துடன் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணைந்தனர். அத்துடன் நாவலும் முற்றுப் பெறுகின்றது.
இலங்கை வரலாற்றில் போராட்ட குணம் மிக்க பெண் கதாப்பாத்திரங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. ஆரி, தலைவாக்கலை எட்லின் நோனா, கணேஷன் போன்றவர்கள் இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கவர்கள். என்.எம், கமலாதேவி பட்டோபாத்ய போன்ற கதாப்பத்திரங்களை நான் இந்த கதைக்குள் அழைத்து வந்துள்ளேன். அன்றைய காலத்தில் இருந்த பொலிஸ் மா அதிபர், ஆளுநர் போன்ற உண்மையான கதாப்பத்திரங்களும் இந்த கதையில் வருகின்றனர். காலப்பகுதிகளும், திகதிகளும் வரலாற்று ரீதியானவை. பழமையான போராட்டக் குணத்தின் தன்மை குறித்தும் ஓரளவு புரிதலை தற்கால வாசகர்களுக்கு ஏற்படுத்தவும் ‘தித்த கஹட்ட’ நூலில் முயற்சி எடுத்திருக்கின்றேன்.
தோட்டத்தொழிலாளர்களின் அரசியல் வரலாற்றினை எவ்வாறு வகுத்துக் கொண்டீர்கள்?
இலங்கையில் தற்போது வரையிலான மலையக தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்றினை மூன்று பகுதிகளாக வகுத்துக் கொள்ள முடியும். 1830லிருந்துதான் தோட்டத்தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரும் செயற்பாடு ஆரம்பமானது. 1865ம் ஆண்டளவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். 1865ல் தோட்டத்தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கென சட்ட விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை அவர்களை நிர்வகிப்பதற்கு சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. 1865ல் கொண்டு வரப்பட்ட சட்ட விதிமுறையானது மிகவும் கொடூரமான மனிதாபிமானமற்ற விதிமுறையாகும். உதாரணமாக அந்த சட்டத்தில் கங்காணி மற்றும் தோட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக அகம்பாவம் காட்டினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்படுகின்றது. கங்காணி ஒருவர் பெண் தோட்டத் தொழிலாளியுடன் உறவு கொள்ள விரும்பி அவரை அழைக்கும் போது அப்பெண் அதற்கு உடன்பட மறுத்தால் ‘அந்தப் பெண் எனக்கு எதிராக அகம்பாவம் காட்டினாள்’ என்று மறுநாள் முறைப்பாடு செய்ய முடியும். அந்த குற்றத்திற்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை கிடைக்கும். அல்லது தண்டப்பணம் அறவிடப்படும்.
1870, 75களில் இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பு காட்டத் தொடங்கினர். 1890களில் இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்தது. தோட்ட கங்காணிகள் மீது கல்லெறியப்பட்டது. அவர்கள் கொலை செய்யப்பட்டனர். தாக்கப்பட்டனர். சிலர் தோட்டங்களிலிருந்து தப்பி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றனர். 1925ல் நடேச ஐயர் இலங்கைக்கு வந்தார். பிரெஸ்கர்டல் இலங்கைக்கு வந்தார். சமசமாஜக் கட்சி தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மந்திரிகள் சபையில் குரல்கொடுத்திருந்தது.
தொண்டமான் அதற்குப் பின்னரா வருகை தந்தார்?
சௌமியமூர்த்தி தொண்டமான் 1958ல் இலங்கைக்கு வந்தார். அவர் அதிகளவு பணத்துடன் இனவெறி சிந்தனையையும் எடுத்துக் கொண்டு இங்கு வந்திருந்தார். தொண்டமான் முதன்முதலாக சமசமாஜக் கட்சியிலிருந்து பிரித்தெடுத்து தமிழ் தலைமை ஒன்றின் கீழ் தோட்டத்தொழிலாளர்களை கொண்டு வந்தார். 1958ல் ஆரம்பமான தொண்டமான் யுகம் இன்று வரை மலையக தோட்டப் பகுதியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை தொண்டமான் தரப்பில் ஒருவரே பாராளுமன்றம் சென்றனர். மற்ற பாராளுமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியலில் தெரிவானார். அதனால் அவரின் பலம் குறைந்து புதிய அணி உருவாகியுள்ளது. திகாம்பரம் உட்பட மற்றும் சிறிய அமைப்பினர் மலையகத்தில் பலம் பெற்று கொண்டிருக்கின்றனர். தோட்டப்பகுதிகளிலிருந்து சென்று கொழும்பில் பணியாற்றி வருகின்ற தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளே 1000 ரூபா போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தனர். இது புதியதொரு போக்காகும்.
வரலாற்று துல்லியம் அவ்வாறு உள்ள நிலையில் அதற்கான இலக்கிய அம்சம் குறித்து எவ்வாறு சிந்திக்க தலைப்பட்டீர்கள்?
நான் ஒரு சிறந்த படைப்பாளி என்று என்னைக் கருதவில்லை. நான் எழுதிய நாவல்கள் இரண்டும் யதார்த்தவாத விதிக்குட்பட்டது. எனது அறிவுக்கு எட்டியவாறு இலக்கியம் சார்ந்து சில உபாயங்களை பயன்படுத்தியுள்ளேன். உதாரணமாக அந்த காலக்கட்டத்திற்கு பொருந்தும் வகையில் சிந்தித்துப் பார்த்து கடிதப் பரிமாற்றம் போன்ற சில உபாயங்களை இங்கு பயன்படுத்தியிருக்கின்றேன். நவீன இலக்கிய நுட்பங்களை இந்த படைப்பில் பயன்படுத்தவில்லை. அது பற்றி எனக்கு போதியளவு புரிதலும் இல்லை. ஓர் இலக்கியப் படைப்பாக இந்நூலை அதிகப்பட்சம் உருவாக்க முயற்சித்தேன். இவ்விடயம் தொடர்பான விபரங்களை தேடிக் கொண்டு செல்லும் போது அவ்விபரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான நூல் ஒன்றை எழுதினால் அது மிகப் பெரியதொரு நூலாகி விடும் என்று கருதினேன். எனவே இந்த வரலாற்றுக் கதையின் முக்கியமானதொரு பகுதியினை எனது நாவலுக்காக தெரிவு செய்துகொண்டேன். தோட்டத்தொழிலாளர்களின் போராட்டங்களின் தொடக்கத்துடன் நான் இந்த நூலை நிறைவு செய்திருக்கின்றேன். அப்படி பார்க்கும் போது இந்த நாவல் மற்றுமொரு நாவலுக்கான முன்னுரை என்றே கூற விரும்புகின்றேன். எதிர்வரும் காலங்களில் சிங்கள அல்லது தமிழ் படைப்பாளி ஒருவர் மீதமுள்ளதனை செய்து முடிப்பார் என்று கருதுகின்றேன்.
ஆசிரியர் குறிப்பு: இந்த உரையாடலின் ஓரிடத்தில் ‘சௌமியமூர்த்தி தொண்டமான் 1958ல் இலங்கைக்கு வந்தார்.’ என்று உரையாடப்படுகிறது. இது தகவல் பிழையானது. எனினும் மூல ஆசிரியரின் கருத்தாக அவ்வாறே அனுமதிக்கப்படுகிறது.
பிரியதர்ஷினி சிவராஜா
சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.