/

அழகான பெண்களும் எனது மரணங்களும்: க.கலாமோகன்

பலர் நரைத்த தாடியை இளம் வயதுகளில் தேடுவர். நிச்சயமாக நான் ஒருபோதுமே இதனைத் தேடியது இல்லை. இளம் வயதில் எனக்கு எனது தாடி நரைக்கத் தொடங்கியபோது பலர் என்னைக் கிழவன் என்று கிண்டலடித்தனர்.  இவைகள் இனிப்பான கிண்டல்களே. இப்போது இளசுகள் எனது தாடியைக் கண்டால் கொப்பி அடிக்கின்றனர். அவர்களது போக்கு அது. 

ஒரு போதுமே என்னைப் பெண்கள் கிழவன் எனக் கேட்டதில்லை. அதிகமான பெண்கள் “உங்கள் தாடியில் வெண்ணிறம் பூசுகின்றீர்களா?” எனக் கேட்டு “நான் பூசுவதே இல்லை” எனும் எனது பதிலை அறிந்து அதிர்ச்சி அடைவது உண்டு. பல பெண்கள் தமது கணவன்மார் தமது தாடிகளை வளர்த்து வெண்ணிறம் பூசுவதாகச் சொல்லியுள்ளார்கள். சில பெண்களுக்கு வேறு கவலைகள். சிலர் தமது கணவன்மாருக்குத்  தாடிகளே வளர்வதில்லை எனச் சோகத்துடன் சொல்வதைக் கேட்டுள்ளேன். 

எது எப்படியோ நிறத்தில் நான் ஓர்  கறுவல். எனது தாடியின் நிறமோ  வெள்ளை. கறுவல் என்பதை நான் கறுப்பாகப் பார்த்தாலும் எனது நிறத்தை ஆபிரிக்க ஆண்கள் கறுப்பாகப் பார்க்காது இருப்பது எனக்குள் நிறைய வேதனையைத்தான்  தந்ததுண்டு. இந்த ஆபிரிக்கர்களின் தோல் எனது தோலைப்போல கறுப்பானதில்லை. என்னைக் கறுப்பு என்பதில் அவர்களுக்கு ஓர் வெறுப்பு.

இந்தியன் என்பதே எனக்கு இவர்கள் தரும் நிறம். இவர்களுக்கு எப்படி எனது போக்கில் உண்மைகளைச் சொல்ல?.

“நான் கறுப்பு நிறம்!”

மகமது சிரித்தான். அவனது சிரிப்பு மிகவும் அழகானதாக இருந்தது. பல தடவைகள் அவனது போனில் அவனது மனைவியைப் பார்த்து மயங்கியுள்ளேன். அவளது கறுப்புப் பின்னல் மிகவும் ரசிப்பானது. அவளை நான் பல தடவைகள் எனது கட்டிலில் நான் நினைத்தேன் என்பது அபத்தமா? இந்த நினைப்பை நீதிமன்றங்கள் தெரிந்தால் எனக்குத் தண்டனைகள் தருமா? நிச்சயமாகச்  சவூதி அரேபியாவில் நான் இருந்தால் எனது தலை வெட்டப்பட்டிருக்கும்.

“உனது நிறம் கறுப்பு இல்லை.” என்று  மகமது சொன்னான்.  அவனுக்கு எழுதவும் தெரியாது, வாசிக்கவும் தெரியாது என்பதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. ஆனால் நான் ஏழை, அவன் செல்வன். எனக்கு ஓர் வேலை, அவனுக்கு இரண்டு.  படிப்பும்  வாசிப்பும் என்னை நிச்சயமாகச் செல்வனாக்கவில்லை. 

“மகமது, உனது தேசம் ஆபிரிக்கா, இதன் பின்தான் உள்ளது இந்தியா, இந்தியாவின் பின்தான் உள்ளது இலங்கை…. இதனால்தான் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள பலர் கறுப்பு நிறமாக உள்ளனர்… எனது பூகோள, மனிதவியல்  படிப்பால் நான் என்னை நிச்சயமாக ஆபிரிக்கன் எனச் சொல்ல முடியும்.”

இப்போதும் மகமது சிரிக்கின்றான். 

எனது வேலை சாமான்களை அடுக்குவது, கோப்பைகளைக் கழுவுவது அவனது வேலை.  

“எனது வாட்சப் வேலை செய்யவில்லை… இதனைத் திருத்து…” என்றபடி தனது போனை எனது கையில் வைத்துவிட்டுக்  கழுவல் இடத்தை நோக்கிச் செல்கின்றான்.

அவனது போன் பல வேளைகளில் எனது அலுவலகத்தில்தான் இருக்கும். நான் போன் செயல்பாட்டின் நுட்பன் அல்லன். ஆனால் எனக்கு வாட்சப், விபேர், இமோ, முகப்புத்தகம், டுவிட்டர், டெலிகிராம்   என்று பல இணையச் சந்திப்பு வயல்களின்  செயல்பாடுகள் நிறையத் தெரியும்.

எனது விழிகளிலிருந்து  கண்ணீர்கள் மெல்ல மெல்லமாக வெளியே வருகின்றன. இமோவில் நான் சந்தித்த மடகாஸ்கர் இளம் பெண்ணின் நினைவால்தான். எனது விழிகளை அழ விடுங்கள். இந்தக் கண்ணீர்த் துளிகள் மீது அவளது முகத்தை மங்கலாகக் காண்கின்றேன். 

எனது மனைவியைப் பிரிந்ததும் எனக்கு நிச்சயமாக ஓர் மனைவி தேவைப்படவில்லை. ஓர் கவர்ச்சிகரமான, இளம் பெண் தேவைப்பட்டாள். திருமணம் செய்யாமல் வாழ முடியாதா? சில வேளைகளில் திருமணம் செய்வதால் நமது உரிமைகள் பறிபடும் எனவும் நான் நினைப்பதுண்டு. தனித்து வாழுவதால் சில சிக்கல்கள் இருந்தபோதும் வேறு சுகங்களும் கிடைக்கும்.

பல வேளைகளில் மடகாஸ்கார் பெண்ணை நினைத்து நான் அழுததுண்டு. ஏன் நான் அழுதேன் என்பது எனக்குத் தெரியாது. இமோவில் நான் அவளைக் காணும் வேளைகளில் சிரிப்பாள். ஏன் சிரிக்கின்றாள் என்பதுவும் எனக்குத் தெரியாது. அவளது இளமைக்குள் நான்  தொக்கியிருந்தது எனது கண்ணீர்களுக்குக் காரணமோ? 

அவளது பெயர் புருனெத். அவளுக்கு ஓர் தங்கையும், ஓர் பெரிய சகோதரனும், ஓரு வயது சிறிய சகோதரனும், அம்மாவும், அப்பாவும் உள்ளனர்.

“உனது சிறிய சகோதரனின் படத்தை அனுப்பு…” என நான் அவளை இமோவில் ரசித்துக்கொண்டு கேட்டேன். 

படம் வந்தது. 

சிறிய சகோதரன் அம்மாவின் பாலைக் குடித்தபடி தூங்கிக்கொண்டிருந்தான். அவளது கொஞ்ச முலைகள் வெளியே கவர்ச்சிகரமாகத் தெரிந்தன. சிறிதாகத் திறந்து இருந்தன அவளது விழிகள். நிச்சயமாக அவள் நான் விவாகரத்துச் செய்த மனைவியின் வயதில். 

புருனெத்திடம் நான் தொடக்கத்தில் கேட்ட முதலாவது கேள்வி இது:

“நீ மிகவும் இளையவள். எனது வயது உனக்கு இடைஞ்சலைத்  தருகின்றதா?”

“நிச்சயமாக இல்லை. வயது கூடியவர்களிடம்தான் எனக்கு அன்பு வருகின்றது.”

இந்தப் பதில் எனக்குள் ஓர் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. வறுமை நாடுகளில் வாழும் பெண்களது பதில் இதுவாகத்தான் இருக்கும். 

“உனக்கு இளம் ஆணுடன் தொடர்பு இல்லையா?”

“இருந்தது, அது சிறப்பானதாக இருக்கவில்லை.”

இமோவில் அவள் சிரித்தாள். அவளது சிறிய உதடுகள் எனக்குள் வெறியை ஊட்டின. எனது வயதை மிகவும் இளமைப்படுத்தியது அவளது இமோ முத்தங்கள்.  உருவம் அருகில் தெரிந்தாலும், தொலைவில் தெரிந்தாலும் இது என் முன்னே. விழிகள் ஈட்டிகளே. அவைகள் எங்கும் போவன. கண்டங்களைக் கடந்தும் சுவைகளைத் தேடுவன விழிகள்.

புருனெத் மீது ஓர் கவிதை எழுதினேன். இது எனக்கானது. இந்தக் கவிதையை நானும் புருனெத்தும்தான் வாசிப்போம். நாம் தவிர வேறு வாசகர்கள் இந்தக் கவிதைக்கு ஒருபோதுமே இருக்கமாட்டார்கள் என்பது எனக்கும் அவளுக்குமே தெரியும். 

இன்று வேலை குறைவாக இருந்ததால் மகமதுவின் போனை எடுத்தேன். அவனது போனில் வாட்ஸப்பை இயங்கவிடவேண்டும். நான் அதனது பச்சை நிறத்தில் விரலை வைத்தேன். உடனையாகத் திறப்பட்டது. திருத்தவும் தேவை இல்லை. எப்படி அவன் தனது வாட்ஸப்பைப் பயன்படுத்துகின்றான் என நான் வியந்துகொண்டேன்.  எப்படி அவனால் அதனைத்  திறக்கமுடியாமல் இருந்தது ? 

அட, அவனது வாட்ஸாப்பில்  நிறையப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு படத்தையும் ரசித்தேன். பல பெண்களில் எனக்கு விருப்பம் வந்தது. இந்த அழகிய பெண்கள் நிச்சயமாக அழகிய ஆண்களுடன் வாழலாம்.  ஆனால் அவள்களில் எனக்கு விருப்பம் வந்தது. பலர் என்னைப் பெண் வெறியன் என நினைக்கலாம். எனக்குள் உள்ளது வெறியல்ல, விருப்புத்தான்.

இந்தப் பெண்களுக்கும் மகமதுவுக்கும் என்ன உறவுகள் இருந்தன? இவள்கள் அவனது காதலிகளா? எனது விசாரணை தவறு எனத் தெரிந்தும் அவன் மீது சிறிய ஓர் வெறுப்பு எழுந்து பின்பு அழிந்துவிட்டது. 

அனைத்துப் பெண்களுடனும் அவன் எழுத்துத் தொடர்பு கொள்ளவில்லை. அவனுக்கு எழுதுவது தெரியாது. பேச, என்னை விட அழகாகவும், கவித்துவமாகவும், பெண்கள் ரசிக்கும் விதத்திலும் பேசத் தெரியும். அவன் பேசுவதுபோல நான் எப்படிப் பேசாது உள்ளேன் என்பதற்காக நான் பல தடவைகளில் வருந்தியுள்ளேன்.

என் முன் அவனது ஓடியோ செய்திகள்.

அவனுக்கு பெண்களிடம் இருந்து வந்த சில ஓடியோக்கள் அவனது ஓடியோக்களுக்கு இடையில் கிடந்தன.

ஒன்றை அமத்தினேன். 

அவளது குரல் வந்தது. ஆம் செக்ஸியான குரல்தான். விளங்கவே இல்லை. தலை வெடித்தது. வோலோவ்  (Wolof) மொழியைக் எப்படியும் கற்பது என முடிவெடுத்து மீண்டும் அழுதேன்.

பல படங்களில், மார்புகள் சட்டைகளால் மூடப்பட்டு இருந்தாலும் முலைகளது துடிப்புகள் எனக்குத் தெரிந்து, அவைகளை ஏங்கி ஏங்கி நான் அழுதேன்.  

சில ஆபிரிக்க, அரபுப் பாடல்களும், சில குடும்பப் படங்களும் அவனது வாட்ஸப்பில்  இருந்தன. சில வேளைகளில் அவனது குடும்ப உறவின் பெண்களாக இருக்கலாம். அவள்கள் பெண்கள் அல்ல, தேவதைகள். தேவதைகளைத் தியானிப்பது தண்டனைக்கு உள்ளாவதா? இல்லை என்பதை என் இதயம் சொல்கின்றது. ஆண்கள் தேவர்களே அல்லர், பெண்களே தேவதைகள் எனது சிறிய மூளை சொல்லியது. 

இப்போது என் முன் முக்காடு.

முக்காடு மீது என் சிறிய குறிப்பை இங்கு எழுதுவதால் எனது கதையைச் சிலர் கதை எனச் சொல்லாமலும் விடலாம்…. நான் இஸ்லாமியராகி நான்கு பெண்களை மனைவியாகக் கொள்ளும் எண்ணத்தோடு உள்ளேன் எனவும் நினைக்கலாம் … என்னை ஓர் இஸ்லாமியப் பயங்கரவாதியாகவும் கருதலாம் …  கவலை இல்லை…. சொல்கின்றேன் ….  இது முக்காடு மீதே.

யஸ்மீன் ஓர் வெண்புறா. காரணம் கல்லூரியின் கட்டளையால். ஆனால் அவள் வெள்ளையாகவும் இருந்தாள். நான் விரும்பினேன். ஒருபோதுமே அது  அவளுக்குத் தெரியாது. சோனகத் தெருவால் எனது பள்ளிக்கூடத்துக்குப் போவது தூரமானதே. இலகுவான பாதைகளும் உள்ளன. ஆனால் தூரமே எனது தெரிவானது. ஆம், அவளது முக்காட்டின் பசுமையை எனது விழிகள் ரசிக்கும் நோக்கில். 

இந்த ரசிப்பு நீடிக்குமா? தொழில் காரணமாகக் கொழும்பு சென்று,  ஒரு வருடத்தின் பின் விடுமுறைக்குத் திரும்பிவந்தபோது  நான் இந்த முக்காட்டைத் தேடினேன். கண்டு பிடிக்கவே இல்லை. பல தினங்கள் சோனகத் தெரிவின் வீதிகளில் எனது விழிகள் அவளைத் தேடின. அதன்  பின்பு நான் அவளை ஒருபோதுமே காணவில்லை. எனக்குள் இப்போதும் பாதுகாப்பாக இந்த  முக்காடு உள்ளது. இதில் எனது கண்ணீர்கள் இப்போதும் காயாமல் உள்ளன.   

மகமதுவின் வாட்ஸாப்பில் நான் ஆயிசாவைக் கண்டேன். அவளது நிறையப் படங்கள் இருந்தன. மிகவும் கவர்ச்சிகரமாக அவள் முக்காட்டைக் கட்டியிருந்தாள். ஓர் படத்தில் அவள் நீளக் கூந்தலோடு. நிச்சயமாக அது போலிக் கூந்தலே. ஆனால் அவள் என்னை மயக்கினாள். வேறு ஓர் படத்தில் கிராமியப் பெண்ணாக. பசுவில் பால் பிழிந்துகொண்டிருந்தாள். நிறையப் படங்கள். எனக்குள் நிறையக் கனவுகள் புகுந்தன. ஓர் கனவில் அவள் என்னோடு சமையல் அறையில். தொடையைத் தட்டியபோது “விடுங்கள்! ஜன்னல் கதவு திறந்து உள்ளது.” என்று செக்ஸியாகச் சொன்னாள். 

நான் ஆயிசாவைக் காதலித்தேன். அவளது கறுப்பு உடல் நிர்வாணமாக எனக்குமுன்.  அவளுக்கும் எனக்கும் பெரிய வயது வித்தியாசம். காதலில் வயது எதற்காம்? இந்த இரவில் அவள்தான் எனது கட்டிலில் கிடப்பாள் என்று மயங்கிக்கொண்டு இருந்தபோது மகமது என்முன் திடீரென நின்றான்.

அழகிய சிரிப்பு. 

“வாட்ஸப் வேலை செய்கின்றதா?”

“அது வேலை செய்யவில்லை.”

அவனது விழிகளில் கலக்கம்.

“ஏன் பதறுகின்றாய்?”

“எப்படி எனது மனைவிக்குப் போன் பண்ணுவது?”

அவனது மனைவி? நிச்சயமாக நான் அவளது உருவத்தைப் பார்த்தது இல்லை. 

“நிச்சயமாக நான் 30 நிமிடத்தில் திருத்தித் தருவேன். திருத்தியபின் உனது சார்பில் நான் அவளுக்கு வணக்கம் சொல்வேன். சரி அவளது பெயர் எது?”

“ஆயிசா.”

அவன் என்னை விட்டு மறைந்தபோது எனக்கு மயக்கம் வந்தது. 

ஆயிசா அவனது மனைவியா? அவளை எப்படி எப்படிச் சுவைத்திருப்பான்! மீண்டும் பசியுடன் அவளது படங்களைப் புசித்தேன்.

ஆ வில் ஓர் ஆயிசா இல்லை, பல ஆயிசாக்கள் இருந்தனர். 

ஒருத்தி மகமதுவின் அம்மம்மா போல. 

வேறு ஒருத்தி சிறுமி.

ஓர் ஆயிசா தனது நாக்கினை நீட்டிக்கொண்டிருந்தாள். நிச்சயமாக அவள் தபால் ஆபிஸில் வேலை செய்வதில்லை என நினைத்துக்கொண்டேன். அவளின் உதடுகள் பால் போல இருந்தன. நான் அவளைப் பலதடவைகள் பார்த்தேன். 

ஆனால் எனது மனதுக்குள் ஓர் பெரிய கேள்வி.

மகமதுவின் ஆயிசா யார்? 

அவனிடம் நான் கேட்பதில் தவறு இல்லை. நிச்சயமாக அவன் சொல்லுவான். நான் பார்த்த ஆயிசா அவனது மனைவியாக இருக்கக்கூடாது என நினைத்தேன்.  

பலர் எனக்கு வயதாகிவிட்டது எனச் சொல்வார்கள். நிச்சயமாக எனது மூளை இளசு என்பது இவர்களுக்குத் தெரியாது. 

சரி எனது மனைவி, விவாகரத்து எடுத்த அவள்  மீது ஓர் குறிப்பு: இவள் நிச்சயமாகப் பாட்டி அல்லள். “இவள் உங்கள் மகளைப் போல” எனச் சிலர் நினைப்பர், ஆனால் சொல்லமாட்டார்கள். ஓர் கண்காட்சியில், எனக்கு அறிமுகமான ஓர் பிரெஞ்சுப் பேராசிரியர் “உங்களது மகள் அழகி!” என்று சொன்னபோது, “மன்னிக்கவும், மகள் அல்லள், மனைவி.” எனச் சொன்னதும்… அவர்  “இந்த ஓவியங்களில் 2 ஓவியங்கள்தாம் எனக்குப் பிடித்திருக்கு….” எனச் சொன்னார்.

எனது திருமணத்தின் கதையை நான் சொல்ல மாட்டேன். ஆனால் எனது மனைவியுடன் ஓர் பிரிவு தொடங்கியதைச் சொல்ல முடியும். நிச்சயமாகக் காரணம் அவளது அம்மாதான். அம்மாவும்  ஓர் பாட்டியல்லள் . நான் எனது மனைவியுடனும், அவளது அம்மாவுடனும் வெளியே சென்றால் என்னைக் காணுபவர்கள் அவளது அம்மாவையே எனது மனைவியாக நினைப்பர். இந்த நினைப்புகளை சில வேளைகளில் நான்  வெறுத்தாலும் அவளை ரகசியமாக வாசித்தேன். நிறையக் கவிதைகளை எழுதினேன் அவளுக்காக. அவைகளை எனது வேலைத்தளத்தில் மறைவாக வைத்துள்ளேன்.

நீல நிறத்தில் எனக்குப் பிரியம். அவளது  அம்மாவின் நிறமும் நீலமாக இருந்தது. விஷ்ணுவின் நிறமுமாக இருக்கலாம்.  சரி, நான் அவரைப் பார்த்ததில்லை.  அவளைப் பார்க்கின்றேன், பல தடவைகள் அவளை நான் மறைமுகமாக ரசித்துள்ளேன். எனது விழிகளது மறைவான வாசிப்புகள் அவளுக்குத் தெரியுமா?

ஒருநாள், எமது வீட்டுக்குள்  நானும் அவளும் .

“எனது விழிகள் குருடாகவேண்டும்.” கத்தினாள்.

“உங்களுக்கு விழிகளில் நோவா? நிச்சயமாக ஓர் விழிசோதனை  டாக்டரிடம் செல்லவேண்டும்.”

“எனக்கு விழிகளில் நோவு. ஆனால் டாக்டர் தேவையில்லை. நீதான் தேவை. எனது டாக்டர் நீயே.”

“நான் மருத்துவம் தெரியாதவன் ……..”

“வா!” எனக் கத்தினாள்.

அவளது கத்தல் ஓர் கட்டளையாக இருந்தது. கட்டுப்படுதலை வேண்டியது எனது உடல். நான் அவளது விழிகளைப் பார்த்தேன். பின் நான் அவளுள்.  எமது உடல்கள் மோதி மோதிக் கத்தின. அங்கு விழித்தன  காமக் கவிதைகளே. திடீரென இவைகள் உடைந்தன… எனது மனைவியின் திடீர் வருகையால்தான்…..

மனவியைப் பிரிந்து சில மாதங்கள் தனித்து வாழ்ந்தபோது, ஓர் சிறையில் வாழ்வது போல எனக்குப்பட்டது. நிறைய வைன், விஸ்கிப் போத்தல்கள் எனது அறைக்குள் வெறுமையாகின. சிலருடன் போனில் கதைப்பேன். பல வேளைகளில் எனது அறையின் சுவர்களே எனக்கு நெருக்கமாக. நான் அவைகளுடனும் சம்பாசித்தேன்.

தொடக்கத்தில் “நான் தனிமையில் வாழ்வது உவாதம்!” என அவைகளுக்குச் சொன்னபோது, அவைகள் அழுதன.

“அழ வேண்டாம். எனது வாழ்க்கை இப்படி…” எனச் சொன்னேன்.

“உனக்காக அழவில்லை.” எனச் சுவர்கள் சொல்லின.

“என்னை விட்டுப் பிரிந்த மனைவிக்காகவா?”

“இல்லை, இல்லை. அவளுக்காகவும் இல்லை.”

“ஏன் அழுகின்றீர்கள்?”

“எமக்காகவே. நாம் எப்போதும் தனிமையிலேயே உள்ளோம்.”

“இங்கு நான்கு சுவர்கள் உள்ளன. நீங்கள் காதலிக்கலாமே?”

“ஓர் சுவரும் ஆணாக இல்லை.”

இப்போதுதான் நான் பெண் சுவர்களுள் வாழுகின்றேன் என்பது எனக்குத் தெரிந்தது. இந்தச்  சுவர் பெண்களுக்கு ஆண் சுவர்கள்  தேவை, எனக்குத் தேவையானது பெண்களே.

சில மலர்களை எனது மனதின் முன் கொண்டுவர நினைத்தேன். ஆம்! மல்லிகைப் பூக்கள். நான் சிறுவனாகக் குளித்தபோது, மல்லிகைப் பூக்களையே வாசித்தேன். இந்த வாசிப்பு என்னுள் குவிந்தபோது எனது பள்ளியில் எனக்குக் கணக்கு மறந்து இலக்கியம் புகுந்தது. நான் படித்த புத்தகங்களில் நிறைய மல்லிகை வாசங்கள்.

இப்போது வாட்ஸாப்பிலும், இமோவிலும், விபேரிலும் மல்லிகைப் பூக்களது  வாசங்கள் வந்ததால், இந்த இணைய வாசிப்பு வீடுகளின் அருகில் கிணறுகள் தோன்றின. அவைகளில் குளித்தல் இனிமையானதாக இருந்தது. இந்தக் கிணறுகளின் அருகில்தான் நிறையக் குமரிகளையும், நிறையக் கிழவிகளையும் கண்டேன்.

விபேர் சத்தம் போட்டது. அது ஜாக்கிலினது செய்தி. சொல்கள் இல்லை. எமோடிக்கோமாக ஓர் சாம்பெயின் போத்தல் இருந்தது. இந்தப் போத்தல் ஓர் செய்தியின் குறியீடு. சில வேளைகளில் முத்தச் செய்திகளும், கோபச் செய்திகளும் பல வடிவங்களாக வரும். நான் மெல்லியவனாக இருப்பினும்,  பல வேளைகளில் ஓர் கம்பீர முக எமோடிக்கோமைச்  சிலருக்கு வழங்குவேன்.

மீண்டும் விபேர் கத்தியது. பல சாம்பெயின் போத்தல்கள். அவளது துடிப்பு எனக்கு விளங்கியது. 

உண்மையைச் சொன்னால் ஜாக்லின் கவர்ச்சியானவள். ஆனால் அவள் எனக்கு உடல் வெறியைத் தந்ததில்லை. இப்போதும் அவள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கின்றாள். ஓர் கட்சியின் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்தான் நான் அவளைச் சந்தித்தேன்.

நிச்சயமாக நான் ஓர் கட்சிப் பிடிப்பில் அந்த ஆர்ப்பாட்டத்துக்குச் சென்றதில்லை. தனிமை வருத்தியது. சுவர்களையே பார்த்துக் கொண்டு இருப்பதா? சில பியர்களை எடுத்துக்கொண்டு நான் அங்கு சென்றேன். 

நிறையப் பெண்கள் செங்கொடிகளோடு நின்றதுதான் எனது கவனத்தை ஈர்த்தது. பல  வெள்ளைப் பெண்கள். “புரட்சி! புரட்சி!” என அவள்கள் கத்தியபோது சிற்பங்கள் ஆடியதுபோல இருந்தன. எனது விழிகள் இந்த உடல்களது தியானிப்புகளில் இருந்தபோதுதான்… 

“தோழர்!”

என்முன் ஓர் இளம் பெண். அவள்தான் ஜாக்லின். கூந்தல் மீது சிவப்பு நிறம். 

ஓர் நோட்டிஸ் தந்தாள். சிவப்பு நோட்டிஸ். வலது பக்கத்தில் மார்க்ஸும் இடது பக்கத்தில் லெனினும், நடுவில் மாஓ வும்… கீழே ட்ரொட்ஸ்கியும். 

“உங்களது கட்சி எது?”

எனக்குள் நடுக்கம். ஒருபோதுமே  நான் ஓர் கட்சியில் இருந்தவன் அல்லன்.

“மன்னிக்கவும்! இப்போதுதான் எனக்கு ஓர் கட்சியில் போகும் நினைப்பு… .”

“இந்தியர்களது கட்சிகள் இங்கு இல்லையா?”

“இருக்கும்… நான் எனது விவாகரத்தால் அரசியலை மறந்துவிட்டேன்.”

“அரசியல் முக்கியம் …..” என்றபடி ஓர் படிவத்தை எனக்குக் கொடுத்து நிரப்பச் சொன்னாள். மறு கேள்வி கேட்காமல்  நிரப்பினேன். உடனைடியாகவே  நான் அவளது கட்சிக்குள். சரி,  எப்போது அவளது கட்டிலுக்குப் போவதாம்?

ஆர்ப்பாட்டம் முடியும் தறுவாயில் தனது வீட்டுக்கு அழைத்தாள். ஏன் இந்த அழைப்பு? அவளுக்கு எனது அவதியின் மறைவான துடிப்புகள் தெரிந்திருக்கும் என நான் நினைத்தேன்.

அவளது வீடு சிவப்பு வீடாக இருந்தது. நிலங்களிலே நோட்டீசுகள். உலகைச் சிவப்பாக்கத் துடித்த தோழர்களது படங்கள் சுவர்களில். மார்க்ஸினைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஏழ்மையை வாழ்ந்து முதலாளித்துவத்தைக் கிழி கிழி என்று கிழித்தவர். பாட்டாளி வாழ்வை வாழ்ந்தவர் எனவும் சொல்லலாம். இப்போது பல சிந்தனைவாதிகளின் கைதியாக அவர். பல ஆண்டுகள் என்னிடம் இருந்தது அவரது தாடி. ஓர் உணவக முதலாளி “நீ, வேலை செய்வது திறமையாக உள்ளது. தாடியை வெட்டினால்தான் உனக்கு நிரந்தர வேலை கொடுப்பேன்.” என்று இனிய சிரிப்பால் வெருட்டியபோது வெட்டிவிட்டேன்.

“நான் ஒருபோதுமே இந்தியன் ஒருவனுடன் கிடந்ததில்லை….” என்றபடி சில பியர் போத்தல்களை மேசையில் லெனினது சிறிய சிலைக்கு முன் வைத்தாள். அது மிகவும் அழகிய சிலை.

“இதை  நான் ரஷ்யாவில் வாங்கினேன்.”

நிச்சயமாக அவள் ஓர் ரஷ்யனுடன் கிடந்தாள் எனும் நினைப்பு எனக்குள் வந்ததால் எனது இதயம் கலங்கியது. பின் நான் ஓர் பிலாஸ்டிக் மரத்தின் தூசி படிந்த   இலைகளை நக்கிக் கொண்டிருந்தபோது ஜாக்லின் தனது வெள்ளை முலைகளைக் காட்டினாள்.

அழகிய சொல்கள் முலையும் முலைகளும். எனது அனைத்துப் பூகோள அசைவுகளிலும் முலைகளை நான் ரசித்தேன், விரும்பினேன், வருந்தினேன். பல தடவைகளில் சாவு என்னைத் தழுவியது.  என்னை வருத்திய அனைத்துப் பெண்களும் இதனைக்  கண்டதில்லை.

பிற முலைகளுக்காக நான் கதறினேன். புற்று நோயால் பிடிபட்டவை. எனது நண்பிகளில் சிலர் வெட்டப்பட்ட முலைகளோடு. எமது உடல்கள் நம்மை நடத்தும் முதலாளித்துவ கலாசாரக்  கொடுமைகளால் முடமாக்கப்படுகின்றன  எனும் சிந்தனை எப்போதுமே எனக்குள்.

இப்போது இவளது முலைகள். மிகவும் சிவப்பாக. முனைப்பு கறுப்பு நிறத்தில். ஆனால் அவைகள் களைத்துப்போயிருந்தன. ஆம், கட்சி ஆர்ப்பாட்டங்களால் களைத்துப் போன முலைகள். 

எமது கட்டிலுக்கு முன் லெனினின் பெரிய படம் இருந்தது. பின்னாலே மாஓ. நான் அவளது முலைகளைத் தொட்டபோது அவைகள் துடித்து எழுந்தன. 

“வா!” என்று கத்தினாள்.

எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தினார் மாஓ .

அவரை மறந்து நான் அவள் மீது. நானும் அவளும் எவைகளைச் செய்தோம் என்பதை விளக்கத் தேவையில்லை என நினைக்கின்றேன்.  சுவையை விழுங்கியபின் தூங்கினோம். நடு இரவில் நான் வெறிப்புடன் விழித்து அவளது தூக்கத்தை முறித்தபோது, “இந்த இரவில் என்னை எழுப்பியதற்காக நன்றி….” என்றபடி தனது நிர்வாண உடலுடன் கதிரையில் இருந்து எழுதத் தொடங்கினாள். 

அவளுக்கு நிச்சயமாக எனது வெறி தெரியவில்லை. 

“நாளை ஓர் நிறுவனத்தில் வேலை நிறுத்தம்… நீ வந்ததால் இதற்கான நோட்டீசை எழுத மறந்துவிட்டேன். எழுப்பியதற்கு நன்றி.”

அவள் எழுதத் தொடங்கினாள். 

நான் மெத்தையால் என்னை மூடி எனது வெறியை எரித்தேன்.

ஓர் காப்பிக் கடையில் ஓர் வைனை அருந்திக் கொண்டிருந்தபோது ஜாக்லினது நினைவு வந்தது. அவளது பச்சை விழிகளை நான் நிறைய ரசித்தேன்.  அந்த விழிகள் மர்மமானவை. ஓர் தடவை நான் அவளிடம் “நான் உனது பச்சை விழிகளின் அடிமை….” எனச் சொன்னபோது , “நீ நிச்சயமாக  எனது விழிகளின் அடிமை அல்ல. எனக்குச் சிவப்பு விழிகள் தேவை.” என்றாள். 

சொல்ல மறந்துவிட்டேன். அவளது கட்டிலில் உள்ளது சிவப்பு மெத்தையே.  நான் அந்த மெத்தைக்குள் தனிமையாக இருந்து அழுதேன். எனது கண்ணீர்கள் மெத்தையை இலகுவாக நனைத்தன. இந்த நனைப்புகள் ஜாக்லினுக்குத் தெரியுமா? 

இரண்டாவது இன்பம் கிடைக்காமல் விட்டாலும் கிடைத்த ஓர் இன்பம் களிப்பானது, அங்கு கிடைத்த காம இசைகள் எப்போதும் எனது காதிற்குள். உடல்களது மோதல்களின் பின் பல வேளைகளில்  நான் ரகசியமாக அழுதேன். இந்த மோதல்களில் அனைத்து மொழிகளும், அனைத்து அரசியல் ஆர்ப்பாட்டங்களும், அனைத்துத் தேசிய வெறிகளும் உடைக்கின்றன என்பது  எனது நினைப்பு. 

தொடக்கத்தில், விவாதங்களுக்கு மத்தியிலும் ஜாக்லினினது உடல் எனக்கு இன்பத்தைத் தந்தது. நிச்சயமாக நான் அவளுடன்  மட்டும்தான் போகின்றேன் என்பதில்லை.  ஓர் 5 பிள்ளைகளைக் கொண்ட அழகிய பெண்ணோடும் போகின்றேன். ஆனால் கட்டில் சுகம் அவளுடன்  இப்போதும் கிடைத்ததில்லை. சில பொதுத் தோட்டங்களுக்குப் போகின்றோம். அங்கு காதல் பேசுவதும், சில தடவல்களை நடத்துவதுமே இப்போதைக்கு எமது செக்ஸ். 

காப்புசின். இது அவளது பெயர். காப்புசினோ என்பது ஓர் பாலில் கரைத்த கோப்பியின் பெயர் என்பதும் எனக்குத் தெரியும். இது சுவையானது. காப்புசின் ஓர் காப்புசினோ கோப்பியைப் போல, இல்லை… கோப்பியை விடவும் சுவையானவள் என்பது எனது நினைப்பு. அவளுக்கு நிறைய வயது. ஆனால் அவள் மிகவும் கவர்ச்சியானவள். எனது அம்மாவுக்கும் அம்மம்மாவுக்கும் இடையிலான வயது. ஓர் பங்களாதேஷ் அவதிச் சாப்பாட்டுக் கடையில் நான் அவளைக் கண்டபோது ஓர் அப்போதைய  அனுராதாவைக் கண்டதுபோல் இருந்தது. இப்போதைய அனுராதா…  நிச்சயமாக எனது செக்ஸ் துடிப்புகளை உடைத்து …. என்னை ஆசிரமம் போக வைப்பவள் எனலாம். அவள் இப்போது ஓர் ஆசிரமத்தில் இருக்கின்றாளோ?

பல தடவைகள் நான் அனுராதாவை நினைத்து அழுதது உண்டு. இப்போது தனது மொட்டைத் தலையுடன் உள்ள அவளுக்கு இது  தெரியுமா? ஆம்! இப்போது பல பெண்கள் ஆண்கள் ஆகுகின்றனர். இந்தப் பெண்களுடன் நான் கிடப்பது ஓர் ஆணுடன் கிடக்கும் இருப்பு ஆகாதா? இந்தச் செய்தியால் பலர் பெண்ணிலைவாத எதிரி என என்னைக்  கணித்துக் கொள்ளுதலும் தகும். சில ஆண்களும் நான் ஆண்களது காதலை மறுக்கின்றேன் எனக் கத்துவர்.  ஆனால் எப்போதும் “இரண்டாவது செக்ஸ்” இனை மதிப்பவன் என்பது பலருக்கும் தெரியுமா? நான் மிசெல் பூக்கோவின் நிரந்தர வாசகன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?  சிமோன் து போபுவார், சார்த்திரின் உடலை விரும்பவில்லை, தத்துவ எழுத்துகளை விரும்பினார் எனத்தான் நினைக்கின்றேன். இவர்கள் ஒவ்வொரு இரவிலும் காமசூத்திரம் செய்தார்கள் என்பது எனது நினைப்புமல்ல.

மோகம்தான் எனது இருப்பின் முன் தொடங்கிய பெரிய வசீகரமான படம். 

எனது விழிகளின் முன் தோன்றிய  அசைவுகளில் எவைகள் காம நினைவுகளால் பிடிபட்டவைகளோ அவைகள்தாம்   எனக்குள் சுவைகளைத் தந்தன. பள்ளி ஆசிரியர்கள்  எனக்கு விருப்பைத் தரவில்லை. சில ஆசிரியைகளே. இந்த இனிய பெண்கள் கரும்பலகையில் எழுதியபோது, எழுதப்பட்டவைகள் எனக்குத் தெரியவே இல்லை. அவள்களது அசைவுகள்தாம் தெரிந்தன. இந்த அசைவுகளே எனது ஆழமான வாசிப்புகள். எனது அனைத்து அறிவு நிலைகளையும் உடைத்தன பெண்களின் அசைவுகள். இந்த அசைவுகளை ரசிக்கச்  சித்தாத்தங்கள்  தேவையா?

நீண்ட காலத்தின் முன்னர் ஓர் மத்திய வயதுப் பெண்ணை வெண் கூந்தலோடு சுரங்கரயிலில் கண்டேன். நிச்சயமாக அவள் மீது எனக்கு இச்சை வந்தது. அப்போது நான் சரளமாகப் பிரெஞ்சு பேசுபவன் அல்லன். அவள் இறங்கியபோது நான் அவளின் அருகில் சென்று மெதுவாகச் சொன்னேன் “நீங்கள் அழகி!” என்று.

“நன்றி.”

“உங்களுக்கு நேரமிருந்தால், சம்மதம் இருந்தால் நான் உங்களை ஏதாவது குடிப்பதற்கு அழைக்கின்றேன்.”

“நீங்கள் இந்தியரா?”

“நான் இலங்கையில் பிறந்தவன்.”

“உங்களது நாட்டில் நடக்கும் இனக் கலவரம் கொடூரமானது.”

“அனைத்து அரசியலுக்கும் அன்பு, காதல் என்பன தெரியாததால் இந்தக் கலவரங்கள் எனது தேசத்தில் மட்டுமல்ல பல தேசங்களிலும் நடக்கின்றன என நான் கருதுகின்றேன்.”

அவள் தனது வெண் கூந்தலைத் தடவிக்கொண்டாள்….அவளின் முகம் என்னை ஈர்த்தது.

“நீங்கள் சொல்வது சரி. உங்களுக்கு அரசியல் நிறையத் தெரியும் என நான் நினைக்கின்றேன். நான் ஓர் அநார்சிஸ்ட். இந்த அரசியல் போக்குக்காக இப்போதும் இயங்குபவள்.”

“நிச்சயமாக எனக்கு அரசியல் எதுவும் தெரியாது. நிறைய அநீதிகளால் நிறைய மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்.”

நாம் ஓர் காப்பிக் கடையுள்.

சேவகர் வருகின்றார். அவள் தனக்கு ஓர் தோடம்பழச் சாற்றைக் கேட்கின்றாள். எனக்கு பியரில் விருப்பு இருந்தும் “காப்பி” எனச் சொல்கின்றேன்.

“உங்களில் எனக்கு விருப்பம். நீங்கள் அதிக கவர்ச்சி கொண்டவள்.”

“நன்றி.”

“உங்களுக்கு நீங்கள் கவர்ச்சி என்பது தெரியுமா?”

“நிச்சயமாக.”

“உங்களை உங்களது தோழர்கள் கட்டிலுக்கு அழைத்திருப்பார்களே?”

“இல்லை, அவர்களுக்கு நான் திருமணம் செய்தவள் என்பது தெரியும்.”

“திருமணம் உங்களது உடலைக் காப்பதா?”

“எனது உடல் ஓர் சிறைச்சாலையில் இருப்பது இல்லை.”

“உங்களது உடலை நான் ஓர் கட்டிலில் பார்க்க விரும்புகின்றேன்.”

“நானும் உனது உடலை எனது உடலின் அருகில் இருந்து பார்க்க விரும்புகின்றேன்.”

தோடம்பழம் அவளது செம்மண் நிற உதடுகளைத் தழுவியது. அவளும் ஜாக்லின் மாதிரி இருப்பாளோ எனும் கேள்வி எனக்குள். நான் அவளது கட்டிலுக்குப் போகாது விட்டாலும் எனக்குள் இந்தக் கேள்வி எழுந்தது. 

“உங்களுக்கு நாளை மாலை  நேரம் உள்ளதா?” என அவள் கேட்டாள்.

தொழில் இல்லாதவனுக்கு எப்போதும் நேரம் உள்ளது என்பதைச் சொல்லாமல் “ஆம்” என்றேன்.

“நாளை ஓர் நீச்சல் தடாகத்தில் சந்தித்து நாம் இருவரும் நீந்துவோம்.”

எனக்குள் நடுக்கம் ஏற்பட்டது. 

நான் ஒருபோதுமே நீந்தியதில்லை. நீருக்குப் பயம் இல்லாதபோதும், நீரின் அருகில் பிறந்தபோதும் நீச்சல் எனக்குத் தூரமானது. 

“மன்னிக்கவும் எலிசபெத்…”

“ஏன் நான் உங்களை மன்னிக்கவேண்டும்?”

“எனக்கு நீந்தத் தெரியாது.”

“இலங்கை ஓர் தீவு. உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பது எனக்கு வித்தியாசமாக இருக்கின்றது…..”

“கடல்களுக்கு அருகில் வாழ்பவர்கள் நீந்தத் தெரியாமலும், நீச்சல் தடாகங்களுக்கு அருகில் இருப்பவர்கள் நீந்தத் தெரிந்தவர்களாகவும் உள்ளனர் பல வேளைகளில்…. “

“உங்களது குறிப்பு சரிதான்… நான் ஒருபோதுமே கடலைக் கண்டது இல்லை. ஆனால் எனக்கு அதிகமாக நீந்தத் தெரியும்….. சரி நாளை நீச்சல் தடாகத்தின் முன் சந்திப்போம்…” என்றபடி அது எங்கு இருக்கும் என்ற முகவரியைத் தந்தாள்.

அவளுடனான அன்றைய பிரிவு எனக்குள் ஓர் தீயை  மூட்டியதாக  இருந்தது. நீச்சல் தடாகத்தில் அவள் எப்படி அணிந்திருப்பாள் எனும் நினைவுகள் எனக்குள்  வந்தன. சின்ன பிறேசியரும், சிறிய ஸ்லிப்பும். அவளது உடலைத் தரிசிக்கும் தருணத்தை ஏங்கினேன்.

அன்று தூங்குவது இலகுவானதாகப் படவில்லை. என்முன் நின்றது நாளைதான். எலிசபெத் அநார்சிஸ்ட்டாக இருந்தாலும் என்னிடம் தனது அரசியல் நிலைகளைக்  கதைக்கவில்லை. நான் அவளது அழகு மீது விதந்தபோது மகிழ்ந்தாள் என்பதை அவளது உதடுகள் காட்டின. ஓர் முதலாவது சந்திப்பிலேயே என்னை அவள் நீச்சல் தடாகத்துக்கு அழைத்திருக்கின்றாள். எனது கட்டில் நனைந்தது. காலையில் எழுந்தபோது நான் நிர்வாணமாக இருந்தேன்.

இந்தக் காலையில் ஓர் இனிய செய்தி. தொழில் இல்லாது இருப்போருக்கான அரச உதவிப் பணம் 2 நாள்களின் முன் வங்கியில்  வந்ததை ஓர் தபால் காட்டியது. எலிசபெத்துக்காக எந்தப் பரிசை வாங்கலாம்? பூக்களை வாங்கினால் அவள் விரும்புவாளா? அல்லது அவளை இந்தியச் சாப்பாட்டகத்துக்கு அழைப்பதா? அவளின் முன் நின்றபோது ஓர் இனிய வாசம் வந்தது… ஹ்ம்ம் …. பிரான்சிய வாசனைத் திரவிய வாசம்…. அனைத்துப் பெண்களும் வாசனைத் திரவியங்களின் அடிமைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பல வாசனைகள்…  தமக்கு எது தோது என்பது பெண்களுக்குத்தான் தெரியும். பெண்கள் தமக்கு வழங்கப்படும் பரிசுகளில் இன்பம் கொள்வர் என்பதைப் பல ஆண்கள் அறிவர். 

பரிசு மீது பேசும் வேளையில் ஜோசியான் எனும் கறுப்புத் தேவதையின்  நினைவு என்  முன்.  நான் அவளிடம் முதலாவது தடவையாக “வணக்கம்” சொன்னபோது “எனக்குப் பசிக்கின்றது.” எனச் சொன்னாள். 

அந்த வேளையில் எனக்கும் பசித்தது. 

அருகில் ஓர் இந்திய உணவகம். நான் அவளை அங்கு அழைத்தேன். 

“ஆட்டுத் தலை அங்கு இருக்குமா?” எனக் கேட்டாள்.

இலங்கையில் இருந்தபோது நான் ஆடுகளின் தலைகளையும் மாடுகளின் தலைகளையும் உறைப்புக் குழம்புடன் சுவைத்துள்ளேன். பாரிஸில் இந்திய உணவகங்களில் இந்தத் தலைகளை ஒருபோதுமே கண்டதில்லை.

“எமது உணவகங்களில் இவைகளை நான் கண்டதில்லை …” என அவளிடம் சொன்னேன். 

“ஆபிரிக்க உணவகங்களில் இருக்கும் …  அங்கு போவோம்.”

நான் அவளின் பின்னே. அவளது பொய்க் கூந்தல்  மெய்க் கூந்தலைக்  காட்டிலும்  அழகியதாக இருந்தது. எனக்குள் சிறிய வெறியைத் தந்தது அவளது கறுப்பு நிறத்திலான செருப்புகள். மெல்லிய இடை. அதனது நிறத்தை நான் சுவாசித்தேன். 

“நான் உன்னை ஓர்  ஆபிரிக்க  உணவகத்துக்குக் கூட்டிச் செல்லவில்லை.”

“ஏன்?”

“நான் உன்னைக் கூட்டிச் செல்வது ஆபிரிக்கர்கள் காலையும் மாலையும் சாப்பிடும் மிகவும் மலிவான ஹாஷ்டல் உணவகம்தான்.”   

“அங்கே மாட்டுத் தலை இருக்குமா?”

“இல்லை அங்கே மீன்களது தலைகளும், ஆடுகளது தலைகளும் இருக்கும்.”

ஜோசியானின்  தலையில் ஓர் வித்தியாசமான அழகு இருந்தது. அது மீன் தலை போல. விழிகள் நீளமாக இருந்தன. அவள் ஓர் மீனவப்பெண் போல எனக்குப் பட்டாள். நீண்டே இருந்த இமைகளை மையால் மீண்டும்  நீட்டியிருந்ததால் அவைகள் மிகவும் கவர்ச்சியாக இருந்தன.

ஹாஸ்டலின்  முன் நிறைய ஆபிரிக்கர்கள். அவர்களது தொகையைக்  காண்கையில் நான் ஆபிரிக்காவில் இருப்பது போலவே உணர்ந்தேன். உள்ளே நுழைந்தபோது ஓர் கூடம். சிலர் மேசையில் இறைச்சிகளை விற்பதைக் கண்டேன். மணம் சுகமாக இருந்தது.

“ஹ்ம்ம், “ என்றேன்.

“இது கடை இறைச்சி அல்ல. இஸ்லாமிய முறைப்படி கொல்லப்பட்ட இறைச்சி… மிகவும் சுவையானது. எனது அப்பா இத்தகைய ஹாஸ்டல்களில் விற்கும் இறைச்சிகளையே வாங்கி வருவார்.”

அவள்  சொன்னதில்  ஓர் குறிப்பு என்னை வருத்தியது.

நான் மதம் இல்லாதவன். அவள் இஸ்லாம். சில வேளைகளில் என்னிடம் அவள் எனது மதத்தைக் கேட்கும்போது நான் மதம் இல்லாதவன் எனச் சொல்வதா? இப்படிச் சொல்லின் எமது காதல் வளருமா அல்லது இது வளர நான் இஸ்லாமியனாக வரும் தொல்லை இருக்குமா? 

அவளது சிறிய, அழகிய, கறுப்புத் தொடைகளை விடிய விடிய ரசிக்க நான் அவள் எந்த மதத்தில் இருந்தாலும் மாறுதல் எனும்  சிந்தனை  சரியானதா? காதல் விதிகளை உடைப்பது என்று அப்போது  நினைத்துக் கொண்டேன். 

நாம் உணவகத்துள் நுழைந்தோம். பல வாசனைகள் எனது மூக்கினைத் தட்டி  சாப்பிடு விருப்பைத்  தூண்டின.  சமையல் செய்யப்படும் இடத்தில் ஓர் கிடாரத்தில்  இறைச்சிக்  கறியை அழகாகக் கிளறிக்கொண்டிருந்தாள் நீளமான ஓர் பெண். மலிவான அரிசியின் அவியல் மணம் உணவகம் முழுவதும் பரவியது. வேகமான சேர்விஸ். சில கறுப்புப் பெண்கள்  சமையலைப்  பசித்தோருக்கு வழங்குவதில் இருந்தனர். ஓர் பெண் எனக்கு “வணக்கம்” சொன்னாள். வட்டமான முகம். அது எனக்குள் இன்ப வேதனையைத் தந்தது. 

ஜோசியான்  என்னிடம்  “ஆடு தின்ன விருப்பமா?” எனக் கேட்டாள். “மீன்.” என அமைதியாகச் சொன்னேன்.

“ஓர் ஆட்டுத்   தலை, ஓர் மீன்.” இது அவள்.

“சோறுடனா  அல்லது உருளைக் கிழங்குப் பொரியலுடனா?”

அவள் என்னைப் பார்த்தாள்.

“உன் தெரிவே என் தெரிவு.”

அவள் ஆட்டுத் தலையையையும், நான் மீன் தலையையையும் உருளைக் கிழங்குப் பொரியலுடன் வாங்கி வந்து இருக்கைகளைத் தேடினோம். 

அங்கு நிறையப் பேர் புசித்துக்கொண்டு இருந்தனர். எமக்கான தனி இருக்கைகள் நிச்சயமாக இல்லை. ஆறு கதிரைகளுக்குள்  இரண்டு கதிரைகள் விடுதலையாக இருந்தன. நாம் அருகில் அல்ல, முன்னும் பின்னும்.  நான்கு கதிரைகளில் இருந்த இருவர் தமது இஸ்லாமிய  மாலைகளின் முத்துகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

எனது கதிரையின் ஊடாக  ஓர் பதுமமான நறுமணம் என்னை இலகுவாகக் கடித்தது. அந்த இருக்கையில்  வாசனைத் திரவியம் பூசிய  ஓர் அழகிய கறுப்புப் பெண் இருந்திருக்கலாம் எனக் கருதியது  எனது இதயம். 

பெண்கள் மீது சொல்லும்போது நான் அழகு, அழகு  என்றுதான் சொல்லிக்கொண்டுள்ளேன் என்பதால் எனக்கு ஓர் வியாதி இருப்பதாக எண்ணவேண்டாம்.  அனைத்துப் பெண்களும்  அழகின் விதைகளைக் கொண்ட வயல்களே. சில பெண்கள் ஆண்களாக மாறினாலும் அவர்களும் வயல்கள் என என் மனது சொல்கின்றது. 

 ஜோசியான்  இப்போது என்னைப் பார்க்கவில்லை. விழிகள் ஆட்டுத் தலைமீது.  நான் அவளையே பார்த்தேன். என் முன் இருந்த மீன் இல்லாது போனது போன்ற உணர்வு என்னிடம். அவள் ஆட்டின்  தலையை வெட்டத்  தனது கத்தியை எடுக்கவில்லை. இரண்டு கைகளாலும் தலையை எடுத்தாள். அவள் சாப்பிடும்போது அவளது கறுப்பு இதழ்கள் ஓர் சொர்க்க வாசலை எனக்குக் காட்டியபோதும் என்னிடம் அவளது திறப்பு இல்லை, அது  அவளிடமே இருந்தது. அருகில் இருந்த வயோதிபர் என்னை நோக்கிச் சிரித்தார். அவரது பல்கள் வெள்ளை நிறத்தின் அப்பட்டமான அர்த்தமாக இருந்தன.

அரைவாசித் தலை உள்ளே போனதும் அவள் என்னை நோக்கிப் பதட்டம் அடைந்தாள். 

“உங்களுக்கு மீனில் விருப்பம் இல்லையா?” 

“விருப்பம்.”

“உங்களது தட்டைப் பாருங்கள்…..”

பார்த்தேன். மீன் தனது சூட்டை இழந்து  இருந்தது. விழிகள் மிகவும் பொரிக்கப்பட்டு நடுக்கம் தருவதாக  இருந்தன. 

“உனது முகத்தைப் பார்த்ததால் நான் மீனை மறந்து விட்டேன்….” என்றபடி மீனைக் கையால் எடுத்துக் கடித்தேன்.

“இது சுவையானது. ஆபிரிக்காவின் செனெகல் நாட்டின்  கடலில் வளர்ந்த மீன். எனக்கும் சிறு துண்டு தருவாயா?”

“ஆம், மிகவும் சுவையானது.” என்று அவளிடம் தலையைக் கொடுத்தேன்.

அவள் சாப்பிடும்போது பல கலைத்துவங்கள் அவளது முகத்தில் வெளியாகின. அவைகளை எனது இதயத்தில் படமாக்கிக் கொண்டேன். நான் அவளைப் பார்ப்பது எப்படி அவளுக்குத் தெரியும்? அவள் ஆட்டுத் தலையின்  சுவையில் மயங்கி இருந்தாள். நான் அவளை வெறித்தேன். இனித்தலே வெறித்தலில் உள்ளது என்பது எனது அகராதியில். 

ஜோசியான்  என் அறையில் இருந்தால் நான் என்ன செய்வேன்? முதலில் அவளது அழகிய சப்பாத்துக்களை முத்தமிடுவேன்… பின் அவைகளைக் கழட்டி ‘உனது பாதங்களை நான் முத்தமிடலாமா?’ என எனது உதடுகள் கேட்கும்.

“அணை!” கத்தினாள்.

நான் அவளை அணைக்கத் தொடங்கியபோது நினைவு அவளது குரலால் உடைந்தது. 

“ஆட்டுத் தலைக்கு மிகவும் நன்றி.”

“ஒவ்வொரு நாளும் நாம் இங்கு வருவோம்… “ எனச் சொன்னேன். 

வெளியே போகும்போகும் அவளது கறுப்புத் தொடைகள் எனது விழிகளைக் கடித்தன.

“எனது வீட்டுக்குப் போவோம்….” என நான் சொன்னபோது …. “மன்னிக்கவும்… இன்று நான் எனது அம்மாவின் வீட்டுக்குப் போகவேண்டும்…. “

எனது தலை வெடித்தது. 

“நாளை சந்திப்போமா?” 

“ஆம்!”

அவள் தந்த போன் இலக்கத்தைத் தெளிவாக எழுதிய பின் அவள் தனது வீட்டுக்குப் போக பஸ் எடுத்ததைக் கவலையுடன் பார்த்து அழுதேன்.

விபச்சாரிகளுடன் காதல் சில நிமிடங்களிலேயே தொடங்கும், அது சில நிமிடங்களின் காதலே. ஜோசியான் ஓர் விபச்சாரியல்ல என்பதை ஏன் நினைத்தேன் என்பது எனக்குத் தெரியாது…. இந்தக் கணத்தில் ஓர் விபச்சாரியுடன் எனக்கு ஓர் நிமிடக் காதல் அல்ல, ஓர் உண்மையான காதல் தொடங்கியது இப்போது நினைவுக்கு வருகின்றது.

அவளது பெயர் அக்கூஸ். கானாவிலிருந்து விபச்சாரியாக காமத் தரகர்களால்  இங்கு கொண்டுவரப்பட்டவள்.  பாரிஸினது ஓர் பிரபல விபச்சார வீதியான புடாபெஸ்ட் வீதியில்  நான் அவளைக் கண்டு உண்மையான காதல் கொண்டேன். அவளுடன் அறைக்குள் செக்ஸ் செய்ய  நுழைந்தபோதும், அங்கு சென்றதும் எனது அந்த விருப்பம் அழிந்தது. பணத்தைக் கொடுத்தபின்னர் அவள் தன்னை நிர்வாணமாகியபோது  

“எனக்கு இப்போது செக்ஸ் வேண்டாம்” என்றேன். வேண்டிய பணத்தை என்முன் நீட்டினாள்.

“வேண்டாம்”

“ஏன், இது உனது பணம். நீ என்னுடன் கிடக்கவில்லை. எடு.”

“அது உனக்கே, நான் உன்னை விரும்புகின்றேன்.”

“எனக்கும் உன்னில் விருப்பம்.” என அவள் வெட்கத்துடன் சொன்னாள்.

“இந்தத் தொழிலை விட்டு நாம் ஒன்றாக வாழ்வோமா.”

“எனது விருப்பமும் அது, நீங்கள் உண்மையாக என்னை விரும்பினால் ….”

அவள் இலக்கம் தந்தாள்.  றூம் திரும்பியபின் பல தடவைகள் நான் அவளுடன் எனது மோசமான ஆங்கிலத்தால் பேசினேன். பின்பு அவளது தொலைபேசி வேலை செய்யவே இல்லை. விபச்சார வீதிக்கு அவளைத் தேடிச் சென்றேன். பிடிபடவே இல்லை. அவளுடன் அருகில் நின்ற சில விபச்சாரிகளிடம் கேட்டேன். ஓர் விபரமும் கிடைக்கவேயில்லை.

அன்று, ஓர் விஸ்கிப் போத்தலை வெறுமையாக்கியபின் Saint Lazare ரயில் நிலையத்தின் முன்னர் மயங்கிய நிலையில் இருந்து அழுதேன்.  பலதடவைகள், பல பாரிஸ் வீதிகளிலும் தேடிய அக்கூஸ் எனக்குக் கிடைக்கவில்லை. இப்போதும் அவள் எங்கே  எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.

எமது அனைத்து வீதிகளிலும் காதலின் பாதங்கள் உள்ளன எனச் சொல்லுவது என் விருப்பு. எனது நடை பதுமமானது, இந்த அழகிய பாதங்களை உடைக்காமல் இருப்பதற்காக. காலையில் இந்த வீதிகளில் நடந்தால் காதல் கவிதைளைக் கேட்க முடியும். எனது  மிருதுவான கால் பதிவுகளால் இந்தப் பாதங்களை நான் முத்தமிடுகின்றேன் என எங்கும் சொல்வது தவறா? 

இந்தப் பாத நினைவுகளில் இருந்தபோது… அது இரவாக இருந்தது…

அந்த இரவில் எனக்கு ஜோசியானின்  முகமே என் முன் வந்தது. இந்த முகத்தில் எனக்குத் தெரிந்தது கவிதையும் காதலும் காமமுமே. பகல்களிலே எனக்கு ஒருபோதுமே விருப்பம் இல்லை. இரவுகள்தாம் எனது சுவையான கவிதைகள்.  இந்த இரவுகள்தாம் எமது பகல் கண்ணீர்களை நீக்குவனவோ?

காலையில் நான் ஓர் பியர் குடிக்கவில்லை, காப்பி குடித்தேன். நேரம் காலை  6 மணியாக இருந்தது. இந்த நேரத்தில் அவளுக்குப் போன் பண்ணுவதா?  ஏன் இந்த நேரத்தில் எழும்பினேன் என்பது எனக்குத் தெரியாது. குறைவான ஜின்னை தோடம்பழச் சாறில் கலந்து குடித்தேன். ஜோசியானின்  முகம் பல வடிவங்களில் எனது முகத்தின் முன்னே வந்தது. மீண்டும் ஜின்னை அதனது போத்தலில் இருந்து குடித்தேன். 

எழுந்தபோது  எனது உடல் நடுங்கியது. 12 மணி. ஆனால் இரவு 12 மணியல்ல. போதை எனது உடலைச் சுழட்டியபோதும் அவளது முகம் என் முன்.

போன் பண்ணினேன் அவளது கவர்ச்சிகரமான குரலைக் கேட்க.

“வணக்கம் ஜோசியான் ?”

“மன்னிக்கவும் நான் மூஸா.”

“ஜோசியான்  உங்கள் தங்கையா? அல்லது உறவினரான?”

“எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியாது.”

“அவள்தான் இந்த இலக்கத்தை என்னிடம் தந்தாள்.”

“எனது இலக்கம் இதுதான், அவளது இலக்கம் எனது இலக்கம் இல்லை.”

“அவளது தேசம் செனெகல்…”

“எனது தேசம் மாலி.”

தொடர்பு அறுந்தது.

மூஸா எனக்குப் பொய் சொல்கின்றானா ? என்னுள் எழுந்த முதலாவது கேள்வி இது. அவன் அவளுடன் களவாகக் கிடக்கின்றான் என நான் நினைக்கலாமா? கிடப்புத் தத்துவத்தில் நிறையப் பொறாமைகள் இருக்கும். எனக்கு மனைவி இருந்தால் அவள் என்னைச் சந்தேகப்படுவதுபோல, நான் அவளை சந்தேகப்படுவேன். இந்த சந்தேகங்கள் மறைவாகவே இருக்கும்.

வெளியில் வந்தால் விவாகரத்து எனும் கதைகள் தொடங்குவதை நான் பல வேளைகளில் கண்டுள்ளேன். 

சில நிமிடங்களில் நான் போன் செய்தபோது ஓர் இலக்கத்தை மாறி அமத்தினேனோ எனும் கேள்வி வந்தது. மீண்டும் இலக்கங்களை எனது மயங்கும் விழிகளால் பார்த்தேன். சில இலக்கங்கள் ஆடின. 6 ஒரு வேளையில் 9 ஆகவும், பின் 9 என்பது 6 ஆகவும். மூஸாவை தப்பாக நினைத்தது கொடூரமாகப் பட்டது.

பல நிமிடங்களில் இலக்கங்கள் என்னைப்போல ஆடியதால் நான் ஜோசியானுக்காக   அழுதேன். அவளே எனது காதலி என உரத்துக் கத்தியது எவருக்கும் கேட்காது என்பது என் நினைப்பு. மீண்டும் கத்தினேன்.

எனது கதவு தட்டப்பட்டது. 

தட்டுவது யார்?  

ஒருவேளை ஜோசியானா? 

எனது இடம் நிச்சயமாக அவளுக்குத் தெரியாது, அவளது இடத்தையும் நான் கண்டதில்லை. நண்பர்களாக இருக்கமுடியாது. எனக்கு அவர்கள் குறைவிலும் குறைவே. பெண்களில் ஒருவராக இருக்கமுடியும். ஆனால் எந்தப் பெண்? நிச்சயமாக இப்போது என் நினைவில் கத்தியாகக் குத்தி நிற்பது ஜோசியான் . ஆனால் கதவு மிகவும் பலமாகத் தட்டப்பட்டது.

காது வெடிக்குமோ எனும் அச்சத்தால் கதவைத் திறந்தேன். 

ஓர் கிழவர் கொடூரமான கோப முகத்தோடு  நின்றார்.

“ஏன் கதவைத் தட்டினீர்கள்? எனக்கு உங்களைத் தெரியாதே?”

“எனது மனைவி உனது வீட்டுக்குள் உள்ளாள். அவளை வெளியால் விடு.”

அவருக்கு 80 வயது போல இருந்தது. அவரது மனைவிக்கு? சரி, அவரது மனைவி கிழவி என நான் எப்படிக் கருதமுடியும்? பல கிழவர்கள் இளம் பெண்களுடன் வாழும் உலகம் அல்லவா எமது உலகம். 

“உங்களை எனக்குத் தெரியாது, உங்கள் மனைவி எனது வீட்டுக்கு வரவில்லை. நான் தனிமையிலேயே வாழ்பவன்.”

“நீ பொய் சொல்கின்றாய்? அவள் உனது வீட்டுக்குள்தான் உள்ளாள்.”

“சரி அவளது வயது என்ன?”

“எனது வயதைக் காட்டிலும் 10 வயது அதிகம்.”

“எனது அம்மம்மாவைப் போல….”

“அவளுக்கு வயது கூடியபோதும் அவள் கிழவியல்லள்.”

“எனது ரூமுக்குள் நீங்கள் வந்து பார்த்தால் உண்மை தெரியும்…….” என அவரை எனது விழிகளால் அழைத்தேன். 

உள்ளே வந்தார். இரண்டு அறைகள். படுக்கும் அறைக்குள் போனார். கட்டிலின் கீழ் அவரது விழிகள் ஓடின. மறு அறை சாப்பாட்டு அறையாகவும் சமையல் அறையாகவும். படுக்கும் அறைக்குள் அருகில் இருந்த டொய்லட்டுக்குள் போனார். 

இருபது நிமிடங்கள்.  வெளியே வரவேயில்லை. சரி வயது போனவர் அவர் என்பதால் நேரம் அதிகம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் ஜோசியானைத்  தொடர்பு கொள்ளும் வெறி எனக்குள்.

33 நிமிடங்கள். சரி, கொஞ்சம் காத்திருப்போம்.

58 நிமிடங்கள். 

அவர் எந்த நிலையில் இருப்பார் என எனக்குள்  நடுக்கம் வந்தது. ஓர் வேளை அவர் மரணமானால் நிச்சயமாக நானே கொலையாளி எனப் போலீசார் முதலில் சந்தேகிப்பர். நான் ஒருபோதும் ஓர் இலையானையே கொல்லவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா? மீண்டும் எனது வலது காதினை கதவுக்கு  மிகவும் அருகில் நெருக்கினேன். ஓர் சத்தமும் இல்லை.

தட்டினேன்.

கத்தியபடி வெளியே வந்தார். 

“நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். உனக்கு சிந்தனையில் விருப்பம் இல்லையா?”

“உங்களது மனைவி இங்கே இல்லை. நீங்கள் மிகவும் விரைவாக வெளியே போவது நல்லது.”

“சரி, உங்களது மனைவி எங்கே?”

நான் கதவைத் திறந்தேன். என்னைக் கோபத்தோடு பார்த்துவிட்டு வெளியே போனார். 

நேரம் 13 மணியாக இருந்தது.

இப்போது ஜின்னை பச்சையாகக்    குடித்துவிட்டு ஜோசியானின் இலக்கங்களைத் தட்டினேன்.

“வணக்கம்.” என்று ஓர் பெண் குரல் கேட்டது.

“ஜோசியான், பிந்திப் போன் செய்வதற்காக மன்னிக்கவும்…. “

“மன்னிக்கவும் அது எனது பெயர்  இல்லை…”

“நீங்கள் செனெகல் நாட்டின் பெண் இல்லையா? “

“இல்லை, எனது நாடு கமெரூன். எனது வயது 21…”

“மன்னிக்கவும்… “

“ஏன் மன்னிப்பு? உங்களது இனம் எது?”

“இலங்கை.”

“நான் ஒருபோதுமே ஓர் இலங்கையுடன் கிடந்ததில்லை… இன்று மாலை என் வீடு வருவீர்களா?”

கமெரூன். ஆபிரிக்க நாடு. 21 வயது. ஏன் இல்லை என்பது?

“வருவேன்.”

“நன்றி… ஒரு மணித்தியாலத்துக்கு 200 ஈரோ. 3 மணித்தியாலங்களுக்கு 500.”

தொடர்பு நின்றது. 

நான் எனது ஜின் போத்தலோடு வெளியால் இறங்கினேன். எனக்கு முன் எனது அனைத்துப் பெண்களும் வந்தனர். 

ஆம்! நான் அவர்களுக்காக அழுதேன்.

(பல பெண்கள் மீது மீண்டும் எழுதலாம். இவைகளை எழுதினால் எனது எழுத்து நாவல் கோலம் கொள்ளும் எனும் அபாயத்தால் நிறுத்துகின்றேன். இரவு 21.45. நான்காம் மாதம் 5 ஆம் திகதி 2019. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தாலும் எனது உடலைக் குளிர் தடவுகின்றது. இந்தத் தடவல் சில பெண்களின் தடவல்களைப் போல எனச் சொல்லலாம்.)

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.