/

டைனோசர் முட்டை: ஜேகே

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

‘இஞ்ச ஒருக்கா இந்தப் பின்னைக் குத்திவிடுங்கோ’

என் கையில் இரண்டு ஊசிகளைத் திணித்துவிட்டுத் திரும்பிக் கண்ணாடியைப் பார்த்தவாறு அவள் நின்றாள். முகத்தில் பவுண்டேசனைத் சாதுவாகத் தடவிவிட்டு, கண்களின் தாவாரங்களைச் சரி செய்தாள்.

“ஆடாம சும்மா நில்லு”

ஒரு ஊசியை வாயால் பிடித்தபடி, மற்ற ஊசியால் இறுக்கமாக அணிந்திருந்த பிளவுசின் முதுகுப்பகுதியோடு சேலைத்தலைப்பைச் சேர்த்துக் குத்தினேன். பின்னர் மற்றப் பின்னை எடுத்துக் கொஞ்சம் கீழே இறக்கிக் குத்திவிட்டேன்.

“பின் வெளியால தெரியுதா?”

‘இல்லை’ என்றபடி வெளியே நீட்டிக்கொண்டிருந்த பிராவின் ஸ்றப்பையும் பின்னையும் பிளவுசுக்குள்ளே தள்ளிவிட்டேன்.

“கொண்டை சரியாயிருக்கா?”

தூக்கிப்போடப்பட்டிருந்த கொண்டை. நன்றாகவே இருந்தது. உச்சி வடுகிலும் நெற்றியிலும் குங்குமம் இட்டிருந்தாள். புருவங்கள் நடுத்தரவயதை எட்ட ஆரம்பித்துவிட்டன. இமைகளுக்குக் கீழேயும் வீக்கம் விழுந்து கன்னங்களும் உப்பிக்கிடந்தன. கண்ணாடியில் அவளின் மூக்கும் வாயும் எப்போதும்போலவே கோணலாகத் தெரிந்தன. சேலைக்குப் பொருத்தமாக இளஞ்சிவப்பு நிறத்தில் உதட்டுச்சாயம் பூசியிருந்தாள். அவள் அதை உதடுகளால் அப்பிச் சரி செய்தபோது கழுத்து மாரித் தவளையினதைப்போல ஆடியது. கன்னங்கள் முடிந்து கழுத்து எங்கே ஆரம்பிக்கிறது என்ற குழப்பங்கள் இந்த வயதிலேயே தொடங்கிவிட்டிருந்தன. தாலிக்கொடியோடு சேர்த்துச் சின்னதாக ஒரு தங்க நெக்லஸ் அணிந்திருந்தாள். குருத்துப்பச்சை பிளவுஸ். மூன்று குழந்தைகளுக்குத் தாயானவளின் தொங்கும் மார்புகள். அவை முட்டும் வயிறு. அகன்ற இடுப்பை மறைக்க முயலும் சேலைக்கட்டு. இடுப்பில் வெளித்தெரிந்த வயிற்றில் கொழுப்புக்கோடுகள் இரேகைகள்போலப் பரவத் தொடங்கியிருந்தன.  இன்னமும் இரண்டிஞ்சி இறக்கிக் கட்டியிருந்தால் சிசேரியன் தழும்பும் தெரியக்கூடும்.

“நல்லாக் கொழுத்திட்டன் என்ன?”

“சாச்சா … அப்பிடியே இருக்கிறாய்… இப்பவும் வில்லரிட்ட பார்த்த அதே பெட்டைதான்”

“ச்சைக் … பாக்காமலேயே சும்மா சொல்லுறீங்கள்”

000

நான் வில்லரின் கணித வகுப்புக்குப் புதிதாக இணைந்த நாள்.

அன்றுதான் சுவர்ணாவும் தன் சாமத்திய வீட்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து வகுப்புக்குத் திரும்பியிருந்தாள். அன்றைக்கு வகுப்பில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மேனன் அவளைச் சீண்டியபடியே இருந்தான். ‘என்ன நடந்தது சுவர்ணா?’, ‘வீட்டில விசேசம்போல’, ‘எங்களுக்குப் பலகாரம் ஒண்டும் இல்லையா?’ இப்படி அவன் சொல்லிக்கொண்டேயிருக்கப் பக்கத்திலிருந்த பிலிப்பும் அனோமியும் கூடவே சேர்ந்து சிரித்தார்கள். ‘அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’ பாட்டை பிலிப் முணுமுணுத்துக்கொண்டிருந்தான். திடீரென்று அனோமி ‘ஐயோ ரத்தம்’ என்று கத்தினான். ‘என்னடா அங்க சத்தம்’ என்று வில்லர் கரும்பலகையில் எழுதியவாறே கேட்டார். உடனே அனோமி ‘பிலிப் ஆக்கூசியால குத்திட்டான் சேர்’ என்றான்.

அவர்கள் இருந்த வாங்குக்குப் பின்னாலேயே நான் அமர்ந்திருந்தேன். என் கவனம் கரும்பலகைக்கும் சுவர்ணாவுக்குமிடையே மாறிமாறி அலை பாய்ந்துகொண்டிருந்தது. சிவலை. பன்னிரண்டு வயதுக்கும் மீறிய மிதப்பு. இன்னமும் சாமத்திய வீட்டின் ஒப்பனைகள் கலையாத முகம். பளிச்சென்ற கண்கள். காதுகளோரமாகச் சுருண்டு நீண்ட மயிர். நன்றாக மஞ்சள் பூசியதாலோ என்னமோ, முகமே லாவுள் நிறத்தில் ஜொலித்தது. அதில் மெல்லிய இளஞ்சிவப்பு நிற உதடு. கழுத்தில் புதுத் தங்கச் சங்கிலி மின்னியது. அவள் வயதுச் சட்டைக்கு அடங்காத மார்புகள். கைகளின் இள மயிர்களிடையே தங்கக் காப்புகளும் புது மணிக்கூடும் ஜொலித்தன. சாமத்தியவீட்டில் கிடைத்த பரிசுகளாக இருக்க வேண்டும். மரதோண்டி உள்ளங்கைகள். கத்தரிப்பூ நிறத்தில் நகப்பூச்சு. சாமத்தியவீட்டிலும் கத்தரிப்பூ நிறத்திலேயே அவள் சேலை உடுத்தியிருக்கக்கூடும். குனிந்து அவள் கொப்பியில் எதையோ எழுதும்போது ஒற்றைத் தலைப்பின்னல் தெரிந்தது. அது ஆரம்பிக்கும் இடத்தில் இரண்டு நித்தியகல்யாணிகள். அப்படியே சடைநாகம் வைத்துக் கனகாம்பரக் கொண்டையும் வைத்தால் கத்தரிப்பூச் சேலையில் சுவர்ணா அன்று கமறியிருப்பாள். பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை.

‘சுவர்ணா, உம்மட புதுச் சாண்டில்ஸ் மணியா இருக்கு’

மேனன் சொல்லியபோது அவளோடு சேர்த்து மொத்த வாங்குமே வெட்கப்பட்டு வெருண்டது. எனக்கும் அந்தரமாக இருந்தது. கணக்கைக் கொடுத்துவிட்டு வில்லர் ரவுண்ட் வந்தார். இலகுவான வென்வரிப்படக் கேள்வி. நான் உடனே செய்துமுடித்துவிட்டு வாங்குக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சுவர்ணாவின் கால்களைப் பார்த்தேன். பிரவுன் லெதர் சாண்டில்சுக்குள்ளால் வெளித்திருந்த பாதங்களில் மரதோண்டி இன்னமும் மீதமிருந்தது. புழுதியே படாமல் எப்படிப் பார்த்துக்கொள்கிறாள்? நகங்களில் கத்தரிப்பூ கியூடெக்ஸ். கால்களில் மயிர் அடர்த்தியாக வளர்ந்திருந்தது.

வில்லர் எங்களைக் கடந்து அவளிருந்த வாங்கை நெருங்கினார்.

“எங்கை பார்ப்பம் உம்மட தொடையை?”

கேட்டபடியே வில்லர் அவளுடைய கொப்பியை எடுத்துப்பார்த்தார். பின்னர் ‘கெட்டிக்காரி, தொடைக்கணக்கு உனக்கு நல்லா வருது’ என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளிவிட்டார். ‘கொஞ்ச நாளிலயே நல்லா சொக்கு வச்சிட்டு, எங்கை பலகாரம் ஒண்டும் கொண்டுவரேல்லையா?’ என்று அவரும் கேட்டார். அப்போது ‘வில்லர்ட லோங்ஸை பாருடா’ என்று மேனன் அனோமிக்கு இரகசியமாகச் சொன்னது பின் வாங்குவரை கேட்டது. மொத்தப்பேரும் களுக்கென்று சிரித்தோம். வில்லருக்கும் கேட்டிருக்க வேண்டும். அவர் கோபத்தோடு ‘என்னடா சிரிப்பு இங்கை’ என்று எம் பக்கம் வந்தார். ஒவ்வொருவருடைய கொப்பிகளையும் தூக்கிப் பார்த்துவிட்டு ‘ஒரு சனியனும் ஒழுங்காத் தெரியாது, சிரிப்பு வேண்டிக்கிடக்கு என்ன?’ என்றபடி அவற்றை வீசி எறிந்துவிட்டு எம் எல்லோரையும் வெளுவெளுவென வெளுத்தார். ‘நான் இல்லை சேர், மேனன்தான்’ என்று அனோமி கத்தினான். வில்லர் சேர் எங்களை வெளுத்தபோதும் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறியதைக் கவனித்தேன். அப்படியே அவளையும் பார்த்தேன். அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கியிருந்தாற்போல. அல்லது நான் அப்படி எண்ணியிருக்கலாம். வாங்குக்குக் கீழே அவளுடைய தொடைகள் தெரிகிறதா என்று பார்த்தேன். நீளமான சட்டை. மடியில் பாக்கையும் வைத்திருந்தாள். அவளின் வாங்கே சத்தம்போடாமல் கொப்பியோடு ஏதோ மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. வில்லர் வாத்தி இவர்களைப் பதம் பார்த்துவிட்டு அப்படியே அவள் பக்கம் திரும்பாமலேயே கரும்பலகைக்குப் போய் வட்டங்களைக் கீறி அவற்றுக்குள் இலக்கங்களை எழுத ஆரம்பித்தார். இங்காலே பிலிப் மட்டும் வாங்கிய அடியில் அழுதுகொண்டிருந்தான். எனக்கும் கண்கள் முட்டியிருந்தன. ஆனால் மேனனும் அனோமியும் அழவில்லை. கொஞ்ச நேரத்திலேயே மேனன் தொடைப் பகிடிகள் பலவற்றை விட ஆரம்பித்தான். சிலது எனக்குப் புரிந்தமாதிரி இருந்தது. எல்லாமே அவளிருந்த வாங்குக்குப் புரிந்திருக்க வேண்டும். உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். வகுப்பு முடிய வேகமாக அவளும் நண்பிகளும் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு வெளியேறிப்போனார்கள். பின்னாலேயே மேனனும் நண்பர்களும் அவர்களைத் துரத்திச்செல்ல நான் எல்லாவற்றையும் தயக்கத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் வகுப்பில் நான் மேனனுடைய வாங்கிலேயே போய் அமர்ந்துகொண்டேன். அன்றும் அவன் சுவர்ணாவைச் சீண்டிக்கொண்டேயிருந்தான். அவள் இவன் பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்க, ‘சுவர்ணா உம்மளைத்தான்’ என்றான். சுவர்ணா கணக்கே எடுக்கவில்லை. இப்போது அனோமி திரும்பவும் ‘ஐயோ ரத்தம்’ என்று தன் பழைய பாட்டைப் பாட, ‘டேய் இனி ரத்தம் அடுத்த மாசம்தான்’ என்றான் மேனன். ‘பூனா, உனக்கெப்படித் தெரியும்?’ என்று பிலிப் கேட்டான். பிலிப் எப்போதுமே பூனா என்ற அடைமொழியுடனேயே ஆட்களை அழைப்பான். ‘பூனா ஒரு ஒற்றை கிழிச்சுத் தாறியா’, ‘பூனா கொஞ்சம் தள்ளியிரு’, ‘பூனா டேய் அந்த நாலாவது கேள்விக்கு விடையைக் காட்டு’. எனக்கு அதிலிருந்த குதூகலம் பிடித்துக்கொண்டுவிட்டது. நானும் தூசணங்களைப் பயன்படுத்திப் பேசத்தொடங்கினேன். ஒருமுறை மயூரனை அவனுடைய சாதியோடு சேர்த்து நான் தூசணத்தில் கொட்டியபோதுதான் இந்த மூவரும் முதன்முறையாக என் பகடிக்குச் சிரித்தார்கள். அதன்பின்னர் எனக்குச் சுதி ஏறிவிட்டது. பிலிப் வெறும் தூசணங்களைக் கொட்டினான் என்றால் நான் சாதிகளையும் இணைத்துக் கொட்டத்தொடங்கினேன். 

இணைந்து மூன்றாவது வாரமே நானும் மேனன் கோஷ்டியோடு வகுப்பு முடிந்ததும் சேர்ந்து திரியத் தொடங்கினேன். நீராவியடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேதான் எங்கள் வகுப்பு. அங்கிருந்து நாங்கள் சுவர்ணாவுக்குப் பின்னாலேயே போவோம். கஸ்தூரியார் வீதியால் போய், சீனியர் லேனுக்குள் நுழைந்து அப்படியே கலட்டி அம்மன் கோவிலடியிலிருக்கும் தன் வீட்டுக்கு அவள் போய்ச்சேரும்வரை எம் சைக்கிள்களும் பின்தொடரும். நண்பிகளின் வருகையைப் பொறுத்து சமயத்தில் ரயில்வே வீதி, லவ்வர்ஸ் லேன், அரசடி றோட்டு என்றும் அவள் பாதை மாறுவதுண்டு. அவர்கள் எந்த வழியால் போனாலும் கத்தினால் கேட்கும் தூரத்தில் நாங்களும் அவள் பின்னாலேயே போவோம். மேனன்தான் ஏதாவது சொல்லிக்கொண்டு வருவான். அனோமியும் பிலிப்பும் ஒத்தூதுவார்கள். நான் ரசிப்பேன். எனக்கு இன்னமுமே சத்தமாக அவளோடு சேட்டை விடும் தைரியம் வந்திருக்கவில்லை. அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் நாமெல்லாம் கலைந்து செல்வோம். நான் திரும்பி அத்தியடி காண சைக்கிள் உழக்கவேண்டியிருக்கும்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த வழமை தொடர்ந்தது. நாங்கள் எல்லோருமே வில்லரிடமே கணிதம் படித்தோம். இந்தக் காலப்பகுதியில் அவள் வாங்கு முழுதும் சாமத்தியப்பட்டுவிட்டது. யார் எப்போது சாமத்தியப்பட்டுத் திரும்பும்போதும் மேனனும் அனோமியும் அதே பகிடிகளை விட்டுக்கொண்டிருந்தார்கள். வில்லரும் அவர்களின் கன்னங்களைத் தட்டுவது, கிள்ளுவது என்று தனகிக்கொள்வார். ஆனாலும் சுவர்ணா எங்களுக்கு வேறு லெவல். அவள் படம் நடிச்சா சுப்பரா இருக்கும் என்று நான் சொல்லிக்கொள்வதுண்டு. சிலுக்குக்கு நடிச்சால் இன்னமும் நல்லா இருக்கும் என்று அனோமி சொல்வான். மேனனும் பிலிப்பும் சிரிப்பார்கள். எனக்கென்றால் நெருப்புக் கோபம் வரும். அவள் நடிக்கவே வேண்டாம் என்று எண்ணிக்கொள்வேன். எங்களில் பிலிப்புக்குத்தான் முதலில் மீசை முளைத்தது. அப்புறம் மேனனுக்கும் எனக்கும். அனோமிக்குத்தான் கடைசி. ஆனால் அவன்தான் முதன்முதலில் கூசிழிவுப் படங்களைக் கொண்டுவந்தான். உடுப்பே போடாமல் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்தபடி கிடக்கும் படங்கள். கொப்பிக்குள் வைத்துத்தான் நாங்கள் படங்களைப் பார்த்தோம். அப்போது மேனன் சுவர்ணாவை வைத்து ஒரு ஊத்தைப் பகிடி விட்டான். பிலிப்பும் அனோமியும் சிரிக்க நான் கதையை மாற்றினேன்.

“விசர்க்கதை கதைக்காம வகுப்பைக் கவனி. வில்லர் பூனாட்ட படம் மாட்டீற்று எண்டால் எல்லாத்தையும் பறிச்சிடுவான்”

மொத்த வாங்கும் களுக்கென்று சிரித்தது.

000

இன்று என் இரண்டாவது மகனுடைய பிறந்தநாள்.

மாலையில் கொண்டாட்டம் ஒன்றை ஒழுங்கு பண்ணியிருந்தோம். அதற்குத் தேவையான வேலைகளை எல்லாம் கவனித்தது அவள்தான். ஆண்களுக்கான வேலைகளை மட்டும் நான் செய்தேன். முற்றத்திலும் பின் வளவிலும் புற்களை வெட்டினேன். சந்தைக்குச் சென்று கொண்டாட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்தேன். தவிர மதுவகைகள், அவற்றுக்கான பைட்ஸ், கூடியிருந்து குடிப்பதற்காகக் கராஜினைத் துப்புரவாக்குதல் என குடி சார்ந்த வேலைகளும் என்னுடையதாகின.

அவளும் மூத்தவளும் அன்றைய கொண்டாட்டத்துக்கான விளையாட்டுகளைத் தயார் செய்துகொண்டிருந்தனர். ஈஸ்டர் பண்டிகையும் நெருங்குவதால் ஈஸ்டர் முட்டைகளை அவள் வாங்கிவைத்திருந்தாள். சின்னதும் பெரிதுமான சொக்கலட் முட்டைகள் பலவித வண்ண உறைகளால் சுற்றிவைக்கப்பட்டிருந்தன. பின்வளவில்தான் அவற்றைக் கொண்டுபோய் ஒளிக்க வேண்டும் என்று அவள் சொன்னாள். ‘ஊந்த லூசு முட்டைகளை ஒளிக்கிறதெல்லாம் ஒரு விளையாட்டா? நீயும் பெட்டையும் பார்த்துக்கொள்ளுங்கோ’ என்று நான் சலித்தபோதும் அவள் என்னை விடவில்லை. மகளும் விளையாட வேண்டும் என்பதால் அவளுக்கும் தெரியாமல் நாம்தாம் கொண்டுபோய் ஒளிக்க வேண்டும், தனியே செய்ய அவகாசம் இல்லை என்று அவள் என்னையும் கூட வரச்சொல்லி அடம்பிடித்தாள். நான் திட்டிக்கொண்டே முட்டைகள் வைத்திருந்த பெட்டியைத் தூக்கினேன். இன்றைக்கு ஆட்கள் வந்து போகும்வரையிலும் இவள் பேச்சைக் கேட்டே ஆக வேண்டும். முகத்தைத் தூக்கிக்கொண்டுபோய்ப் படுத்துவிட்டாள் என்றால் வருபவர்கள் முன்னாலே அசிங்கப்பட வேண்டியிருக்கும்.

என் வீட்டின் பின்வளவு பெரியது. அதில் வேலிக்கரைகள் முழுதும் வாழை, தோடை, அகத்தி, கறிவேப்பிலை, மாமரம் என ஒரு தோட்டத்தையே உருவாக்கியிருந்தோம். மரக்கறியும் வைத்திருந்தோம். நடுவே சிறுவர்கள் விளையாடவெனப் புல்வெளியும் வளர்த்து ஒரு ஊஞ்சலும் பூட்டப்பட்டிருந்தது. எல்லாமே அவளுடைய வேலைதான். திட்டமிடல் தொடங்கி மரங்களை நட்டு, தண்ணியூற்றி, பரமாரிப்பது என எல்லாவற்றையும் அவள் செய்வாள். ஆனால் மாமரம் மாத்திரம் நான் வைத்தது. ஊரிலிருந்து திருட்டுத்தனமாகக் கொண்டுவந்து நட்ட கறுத்தக்கொழும்பான் மரக்கன்று அது. ஐந்து வருடங்களில் நன்றாகவே சடைத்து வளர்ந்துவிட்டிருந்தது. போன வருடத்து வசந்தத்தில் பொய்ப்பூ பூத்து எல்லாமே மழையோடு கொட்டிவிட்டன. இம்முறை இரண்டு காய்கள் அளவுக்கு முன்னேறி அவையும் பின்னே வெம்பி விழுந்துவிட்டன. அடுத்த வருடம் எப்படியும் அது காய்த்துப் பழுக்க வேண்டும். புட்டோடு சம்பலும் கறுத்தக்கொழும்பானும் சாப்பிட்டுக் கொட்டையைச் சூப்ப வேண்டும். 

நாம் முட்டைகளை ஒளிக்க ஆரம்பித்தோம்.

அவள் முட்டைகளை, அவற்றின் அளவுக்கு ஏற்ப மரங்களுக்கடியிலோ, தோட்டத்திலோ, குரோட்டன்களுக்குப் பின்னாலோ ஒளித்தாள். சிலவற்றை இலகுவாகக் கண்டுபிடிக்கும்வண்ணம் புல்வெளியிலேயே தூவினோம். சிலவற்றைப் பத்தியிலிருந்த பாபிகியூ மெசினுக்குப் பின்னாலே ஒளித்தோம். இறுதியாகப் பெட்டியில் பென்னாம்பெரிய ஒரு முட்டை மீதமிருந்தது. டைனோசர் முட்டை. அதனை எங்கே ஒளிப்பது என்று அவளிடம் கேட்டேன். மாமரத்துக்கு மேலே, கிளைகளிடையே கட்டிவிடலாம் என அவள் ஐடியா கொடுத்தாள். எல்லோருமே ஈஸ்டர் முட்டைகளைத் தரையில்தான் தேடுவார்கள். அந்த முட்டைவேறு பச்சைநிற உறையால் சுற்றப்பட்டிருந்ததால் இலைகளுக்கிடையே கவனிப்பது கடினமாகவே இருக்கும். நான் மரத்தின் உள் கொப்பு ஒன்றை வளைத்து அதன் கெவரில் முட்டையைக் கவனமாகச் செருகிவிட்டேன். ஆனாலும் மரத்துக்கு வெளியே வந்து நின்று பார்க்கையில் எனக்கு மட்டும் அந்தப் பச்சை முட்டை தனியாகத் துருத்திக்கொண்டிருந்தது தெரிந்தது. ஆனால் யாருமே கண்டுபிடிக்க மாட்டினம் என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள். நான் போய்ப் பின்வாசலில் நின்று திரும்பி மாமரத்தை மறுபடியும் கவனித்தேன்.

எனக்கென்னவோ அந்த டைனோசர் முட்டை வெயில் பட்டுப் பளிச்சென்று உலகம் தெரிய மின்னிக்கொண்டிருந்ததுபோலத் தோன்றியது.

000

அது ஒரு ஏப்ரல் முட்டாள் தினம்.

நாங்கள் காண்பவர் எல்லோருக்கும் மை அடித்து விளையாடிக்கொண்டிருந்தோம். தண்ணீர்த் துவக்குக்குள் சிவப்பு நீலமென பேனா மையை ஊற்றி எல்லோரையும் சுட்டுத்தள்ளினோம். பெண்கள்தான் எங்களுடைய இலக்காக இருந்தார்கள். சைக்கிளில், ஸ்கூட்டியில் சேலை கட்டிச்செல்லும் ஆசிரியைகளையும் அலுவலக உத்தியோகத்தர்களையும் மை அடிப்பது என்பது எப்போதுமே சுவாரசியமான ஒரு விளையாட்டு. வாகனத்தில் ஓடிக்கொண்டிருக்கையில், நாம் மை தெளிக்கப்போகிறோம் என்று உணர்ந்ததும் அந்தப் பதற்றத்திலேயே அவர்கள் சமநிலை குழம்பித் தடுமாறிவிடுவார்கள். சைக்கிளையாவது நிறுத்துவது இலகு, ஆனால் ஸ்கூட்டியில் செல்பவர்கள் வேகத்தைக் கூட்டி, கிடங்குகளில் சறுக்கி விழுந்த சம்பவங்களும் உண்டு. அப்படியான சமயங்களில் அவர்களையும் ஸ்கூட்டியையும் தூக்கிவிட்டுப் பின்னர் மையடித்து ஏப்ரல் பூல் என்று கோசமிடுவோம்.  கூழ்முட்டை கையிலிருந்தால் அதனை அவர்களது தலையில் தட்டி உடைத்து மயிரை அரியண்டம் செய்வதிலும் ஒரு சந்தோசம்.

அன்றும் சில கூழ்முட்டைகளைச் சேகரித்துவந்து நான் மேனனிடமும் பிலிப்பிடமும் கொடுத்திருந்தேன். வழமைபோல வகுப்பு முடிந்ததும் சுவர்ணாவைப் பின்தொடர்ந்து நாங்கள் போனோம். முட்டாள் தினமென்பதை மறந்ததாலோ என்னவோ அன்று அவள் வெள்ளைநிற பிளவுசும் பாவாடையும் அணிந்துவந்திருந்தாள். ஏற்கனவே அவள் சட்டையில் மைக்கறைகளைக் காணக்கிடைத்தது. நண்பிகள் தமக்குள் அடித்துக்கொண்ட மையாக இருக்க வேண்டும். அவள் நாங்கள் துரத்துகிறோம் என்று தெரிந்து மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தாள். நானும் வேகமாகப் பின்னாலே போய் ஒரு கூழ் முட்டையை எடுத்து அவளை நோக்கி வீசினேன். முட்டை போய் அவளது பின் சில்லுக்குள் விழுந்து சிதறியது. அவள் திரும்பியே பார்க்காமல் மேலும் வேகமாகச் சைக்கிளை மிதித்தாள். இப்போது மேனன் ஒரு முட்டையை எறிந்தான். அது அவளது பின் கரியரிலிருந்த புத்தகப்பை மேலே விழுந்து சிதைந்தது. ஆனால் பிலிப் எறிந்தது நேரே அவளது பிடறியில் போய்ப் பட்டுவிட்டது. வான்கோழி பீய்ச்சியதுபோல அவள் பிடறியில் முட்டை உடைந்து தலைமயிரில் வடிந்தது. அவள் உடனே பயத்தில் சைக்கிளை நிறுத்த முயன்றது தெரிந்தது. உடனே நானும் மேனனும் பக்கத்திலிருந்த ஒழுங்கைக்குள் பாய்ந்துவிட்டோம். வசமாக அகப்பட்டது பிலிப் மட்டும்தான். அவள் அழுதபடியே அவனை ஏசத் தொடங்கினாள். ‘உண்ட அம்மாக்கு இப்பிடி எறிவியா?’, ‘அக்கா தங்கச்சியோடு நீ பிறக்கேல்லையா?’ என்றெல்லாம் திட்டினாள். பெண்கள் பேசாமலிருக்கும்போதுதான் கோபம் வருமேயொழிய அவர்கள் திட்டும்போது எமக்கு எதுவுமே தோன்றுவதில்லை. ஒரு ஆணை எப்படிக் கோபம் வரும்படித் திட்ட வேண்டும் என்று எந்தப் பெண்ணுக்கும் தெரிவதில்லை. அதிலும் பிலிப் ஒரு விறுமம் பிடித்தவன். அவள் ஏசிக்கொண்டிருக்கும்போதே அவன் கிட்டே போய் அவளுடைய மார்பில் உடைத்த முட்டை ஒன்றை அவள் சுதாகரிக்கும் முன்னரே எறிந்துவிட்டான். பின்னர் ‘கூழ் முட்டை சுவர்ணாக்கு ஏப்ரல் பூல்’ என்று கத்தியபடி சைக்கிளில் பறந்துவிட்டான். அவள் தன் தலையிலும் மார்பிலும் வடியும் கூழ்முட்டையை லேஞ்சியால் துடைத்துவிட்டபடி விம்மியபடியே சைக்கிளை உருட்டிக்கொண்டே நடக்கத் தொடங்கினாள்.

இவற்றையெல்லாம் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த நாம் சற்று இடைவெளி விட்டு மீண்டும் அவளைப் பின்தொடர ஆரம்பித்தோம். அப்போது இயக்கத்தின் மோட்டர் சைக்கிள் ஒன்று எம்மைக் கடந்துபோனது. அது இயக்க அக்காமாரின் மோட்டர் சைக்கிள். அவர்கள் அழுதுகொண்டே நடந்து சென்ற சுவர்ணாவைக் கவனித்ததும் நின்று என்ன ஏது என்று விசாரித்தார்கள். நாங்கள் உடனே திறந்துகிடந்த வீட்டு வளவொன்றுக்குள் சைக்கிளை விட்டு, உள்ளிருந்து மதிலால் எட்டி நிகழ்வதைக் கவனிக்கத்தொடங்கினோம். சுவர்ணா நாங்கள் வந்த திசையையும் காட்டி பிலிப் போன வழியையும் காட்டி அழுதபடியே நடந்ததை விளக்குவது தெரிந்தது. அவர்கள் உடனே மோட்டர் சைக்கிளில் வேகமாகச் சென்று பிலிப்பைத் துரத்திப் பிடித்து இழுத்துவந்தார்கள். இப்போது பிலிப் ஒரு பெட்டையைப்போல அழுதுகொண்டிருந்தான். அவர்கள் சுவர்ணாவிற்கு முன்னாலே அவனை நிறுத்திக் காலில் விழச்செய்தார்கள். பின்னர் வீதியின் நடுவே அவனை நிறுத்தி, அவன் தலையில் அவன் கையாலேயே நாய்ப்பீயை எடுத்துப் அப்பச் செய்தார்கள். ராம்போ படத்தில் நாயகன் சேற்றை எடுத்து முகத்தில் பூசியதுபோல இவனும் நாய்ப்பீயை எடுத்து முகமெல்லாம் பூசினான்.  அதனைப்பார்த்து அந்த இரண்டு அக்காமாரும் கைகொட்டிச் சிரித்தார்கள். சுவர்ணாவும் சிரித்தாள். எனக்கும் அழுதுகொண்டு நின்ற நாய்ப்பீ ராம்போவைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. நான் மெதுவாக ‘நாய்ப்பூனா பிலிப்’ என்று அவனுடைய சாதியையும் சேர்த்துச் சொல்ல மேனன் அடங்கமாட்டாமல் சிரித்தான்.

இது நிகழ்ந்தபின்னர் நான் பிலிப்போடு வகுப்பில் சேர்ந்து அமருவதைத் தவிர்க்கத் தொடங்கினேன். மேனனிடமும் சொல்லி பிலிப்போடு இனிமேல் நாம் சேராமல் இருப்பதே நல்லது என்றேன். ஒருநாள் அவனாகவே வந்து எம் அருகே அமர முயன்றபோது ‘நாப்பீ நாறுது, அங்கால போடா’ என்று நான் அவனை நக்கலடித்தேன். அவன் என்னை அடிக்க வந்தபோது நானும் மேனனும் அனோமியும் சேர்ந்து அவனைத் துவைத்து எடுத்தோம். மீண்டும் நான் பிலிப்பின் சாதியோடு பூனாவைச் சேர்த்துத் திட்டினேன். ‘உனக்கெப்படி அவனுடைய சாதி தெரியும்?’ என்று கேட்ட அனோமியிடம் அவனுடைய சாதியையும் சொல்லி ஆச்சரியப்படுத்தினேன். 

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் வகுப்புக்கு வருவதையே பிலிப் நிறுத்திவிட்டான். நாமும் அவன் எங்கு போனான் என்று தேட முயலவில்லை. பின்னர் பதினெட்டு வருடங்கள் கழித்து, இறுதி யுத்தமும் முடிந்து, கதிர்காமர் முகாமில் இருக்கும்போதுதான் அவன் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினான். எப்படி என் இலக்கம் அவனுக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை. நான் சுவர்ணாவைத் திருமணம் செய்தது இவனுக்குத் தெரியுமோ என்னவோ? ஆனால் அவன் பேசும்போது பாவமாக இருந்தது. தாயும் அண்ணனும் கடைசிக் குழந்தையும் போரில் இறந்துபோயிருந்தார்கள். இவனுக்கும் காலில் காயம். மூளையில்வேறு குண்டுத் துகள் ஒன்று அகற்றப்படாமல் இருந்தது.

“மச்சான் கொஞ்சம் காசு அனுப்பிறியா? இதுக்கயிருந்து உச்சிட்டம் எண்டா உன்னைமாதிரியே அங்காலப்பக்கம் வந்து சேர்ந்திடலாம்”

எனக்கு அதைக்கேட்கக் கோபம் வந்தது. நான் படித்து டொக்டராகி மைகிரேட் பண்ணி வந்தேனே ஒழிய கள்ள அகதியாக வரவில்லை என்று அவனுக்குச் சொல்ல வேண்டும்போல மனம் உந்தியது. தவிர்த்தேன். அவன் அழாக்குறையாகக் கெஞ்சியபோது அந்த நாய்ப்பீ சம்பவமே எனக்கு ஞாபகம் வந்து சிரிப்பை மூட்டியது. என்னிடம் பணம் இருந்தது. ஆனால் அப்போதுதான் நான் வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தேன். இவர் பூனாவிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது? நானா இவையளைப் போய்ச் சண்டைபிடிக்கச் சொன்னனான்? அதையும் ஒழுங்காச் செய்தாங்களா? கொடுத்த காசையெல்லாம் கரியாக்கியதுதான் மிச்சம்.

“இப்பத்தாண்டா ஒண்டவிட்ட அண்ணரிண்ட மகன் ஒருத்தனை மலேசியாக்கு எடுப்பிச்சனான். அவன் கடல்புலித் தளபதியா இருந்தவன். அதில எல்லாக்காசும் போயிட்டுது. உனக்கு ஒரு இருபதாயிரத்தை எங்கையாவது புரட்டி அனுப்பிறன்”

இருபதாயிரம் என்றால் எண்பது பவுண்ட்ஸ் வந்துதில்லை. புளூ லேபிள் விஸ்கிகூட வாங்கமுடியாது. நான் சொன்னது பொய் என்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை.

“சரி நன்றி மச்சான், சுவர்ணாவையும் கேட்டதாச் சொல்லு”

000

ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

பலரும் என் பாடசாலை காலத்து நண்பர்கள். சில மருத்துவபீடத்து நண்பர்கள். இப்போது பணிபுரியும் ஆஸ்பத்திரியின் வைத்தியர்கள். இரு இந்தியர்களைத்தவிர மீதி எல்லோருமே யாழ்ப்பாணத்தவர்கள். ஆண்கள். படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு அவளைத் தவிர வேறு பெண் நண்பிகள் எவரும் அமையவில்லை. ஆனால் அவளுக்குப் போகுமிடமெல்லாம் எல்லாவிதமான நண்பர்களும் அமைந்தார்கள். வெருளிபோல எல்லோருடனும் பழகுவாள். இன்றைய கொண்டாட்டத்துக்கும் சிங்களவர்கள், வெள்ளைக்காரர்கள் எனப் பலரை அழைத்திருந்தாள். ஆட்கள் வந்துவிட்டால் போதும். எல்லோரையும் விழுந்துவிழுந்து கவனிப்பாள். அந்தப் பென்னாம்பெரிய உடலை இழுத்துக்கொண்டு அரக்கியரக்கி நடந்து, எல்லோருக்கும் கேக், பற்றிஸ், சோடா என்று கொடுத்து, வீட்டைச் சுற்றிக்காட்டி, குழந்தைகளைப் பின்தோட்டத்துப் புல்வெளியில் விளையாடவிட்டு என ஒரு பம்பரம்போலச் சுழன்றுகொண்டிருந்தாள். சேலை கட்டிய ஒரு குண்டுப் பம்பரம்.

மேனன் தன் குடும்பத்தோடு வந்திறங்கியபோது நான்தான் ஓடிப்போய்த் திறந்தேன். அவர்களோடு அனோமியும் கூடவே வந்திருந்தான். எல்லோரும் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொண்டோம். அவளைப் பார்த்து மேனன் ‘என்ன வர வர இளைச்சுக்கொண்டே போறியள்’ என்று சொல்ல அவள் திருப்பி ‘நீரும்தான் புதுசா வண்டி வாங்கியிருக்கிறீர்போல, சொல்லவேயில்லை’ என்று மேனனின் தொந்தியை நக்கலடித்தாள். அனோமி பெரிதாக ஒன்றும் பேசாமலேயே உள்ளே நுழைந்தான். அவனுக்கு வயது நாற்பதாகியும் இன்னமும் திருமணமாகவில்லை. வரும் குறிப்புகள் எல்லாவற்றையும் வடிவில்லை என்று சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டிருந்தான். எல்லாமே கறுப்பாக இருக்கின்றனவாம். அருமையாக வரும் வெள்ளைகளும் பூசணிக்காய்க் குண்டாக இருக்கின்றன. நான் என்னதான் செய்யிறது என்பான். அவனுக்கு வயதாக வயதாக இன்னமும் மோசமான குண்டுகள்தான் வந்துசேரும் என்பேன் நான். ‘இல்ல மச்சான், கட்டினாப் பயங்கரச் சரக்காத்தான் பார்த்துக் கட்டுறது, இல்லாட்டி வேணாம்’ என்று  அனோமி உறுதியாகச் சொல்ல நான் ‘கைவீசம்மா கைவீசு’ என்று தாலாட்டுப் பாடி அவனை நக்கலடிப்பேன். ‘எல்லாம் இரண்டு நாள் வேலை குடுத்தாப்பிறகு தெரியாமலேயே போயிடும்’ என்பான் மேனன். ‘உனக்கென்னடா, நீ நல்லாச் சொல்லுவாய்’ என்று அனோமி மேனனைப் பார்த்துப் பொறாமையாய்ச் சொல்லுவான். காரணம் மேனனின் மனைவி ஒரு பயங்கர வடிவு. மேனனையும்விட அவளுக்குப் பத்து வயது குறைவு. லண்டனிலேயே படித்து வளர்ந்தவள். அதற்கேற்ப உடலையும் உடுப்பையும் எடுப்பாக வைத்திருந்தாள்.  இன்றுகூட கையற்ற சல்வார் அணிந்து படு எடுப்பாக வந்திருந்தாள். 

நான் அவசரப்பட்டுத் திருமணம் முடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு. ஒரு டொக்டருக்கு இன்னமும் அழகான இளவயதுப்பெண் கிடைக்காமலா போயிருக்கும்? நான் என் கனிஷ்ட மருத்துவர்களுக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரையும் அதுதான். அவசரப்பட்டுக் காதலித்துவிடாதீர்கள். உங்கள் வகுப்பு நண்பி, தாதி, சக மருத்துவர் என எவரையும் ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். அத்தனைத் தமிழர்களும் சீதனத்துடன் அழகான பெண்களை வளர்த்துவைத்து எம்மைப்போன்ற வைத்தியர்களிடம் கொடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள். பெண்ணையும் கொடுத்து காசையும் கொடுக்கும் அதிசயமெல்லாம் பிரபஞ்சத்தில் வேறு எங்குமே நிகழாத ஒன்று. ஏன் அவசரப்படுவான்? பூதத்துக்குத் தீவனம் கொண்டுபோன பீமன்போல ஒவ்வொரு சீதனம் நிரம்பிய வண்டில்களில் ஒவ்வொரு அழகி உட்கார்ந்திருக்கிறாள். தெரிவு செய்து உண்பது மாத்திரம் உங்கள் வேலை. தீவனம் முடிய முடிய சமைத்துப்போடக்கூடியவள் என்றால் இன்னமும் திறம்.

ஆண்கள் எல்லோரும் கராஜுக்குள் நுழைந்தோம். அங்குதான் தண்ணிப்பார்ட்டி நடந்தது. குழந்தைகள் பெண்களுக்கு முன்னால் நாங்கள் மது அருந்துவதில்லை. தவிர இந்தமாதிரியான ஆண்களின் கதைகளைப் பெண்களை வைத்துக்கொண்டு பேசவும் முடியாது. அவர்கள் சும்மா சீரியல் கதைகளையும் சட்டை பஞ்சாபிக் கதைகளையுமே பேசிக்கொள்வார்கள். ஆனால் அவளின் சிங்கள நண்பர்களும் வெள்ளைக்காரர்களும் ஹோலுக்குள்ளேயே அமர்ந்திருந்தார்கள். அவர்களையும் எம்மோடு வந்து மது அருந்துமாறு கேட்டேன். ‘நோ, இட்ஸ் ஓகே’ என்றார்கள். சரி பிள்ளைகளுக்கு விளையாட்டுக்காட்டவும் ஆள்வேணும்தானே என்று நானும் விட்டுவிட்டேன்.

அன்றைக்குப் பார்ட்டிக்கு நான் கிரீன் லேபிள் விஸ்கி ஒன்றை வாங்கி வைத்திருந்தேன். குடிக்கும்போது பிலிப்பின் பேச்சு வந்தது. பிலிப் வெளிநாடு போக முயற்சித்து, அது சரிவராமல் இப்போது யாழ்ப்பாணத்தில் செட்டில் ஆகிவிட்டான். என் இருபதாயிரத்தை அவன் திருப்பித் தரவில்லை. நானும் கேட்கவில்லை. பாவம் அவன் செய்வது கூலிவேலைதான். மேனன் அவனுக்கு அவ்வப்போது காசு அனுப்புவதுண்டு. அதையும் அவன் குடித்து நாசமாக்குவான் என்று நான் மேனனுக்குச் சொன்னேன். யாழ்ப்பாணத்தில் கஞ்சாப் புழக்கம்வேறு அதிகமாகிவிட்டது. பிலிப்புக்கு வீணாகக் காசு அனுப்பாமல் கோழியோ ஆடோ வாங்கிக்குடுத்தால் நல்லம் என்றேன். உடனே அனோமி பாடசாலைக் காலத்துக் கோழிப் பகிடி ஒன்றை விட பேச்சு அந்தக்காலத்துக்குத் திரும்பியது. பழைய கதைகளுக்குப் போகும்போது அவளையோ, அவளுக்குப் பின்னால் நாம் திரிந்த கதையையோ பேசினால் எனக்குக் கோபம் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். நாங்கள் வேறு பெட்டைகளைப் பற்றியும் வாத்திமார்களைப் பற்றியுமே பேசுவோம். சீவரத்தினம் மிஸ்ஸைப் பற்றிய இரகசியம் ஒன்றை அனோமி சொல்லிக்கொண்டிருக்கும்போது அவள் கராஜ் கதவைத் திறந்துகொண்டு வந்தாள். நாங்கள் சட்டென்று அமைதியானோம்.

“ஈஸ்டர் எக் விளையாடப்போறம், வாறிங்களா எல்லாரும்?”

000

உயர்தரம் படிக்கும்போது எங்கள் சேர்க்கைகள் மொத்தமாக மாறிவிட்டிருந்தன.

மேனனும் அனோமியும் யாழ்ப்பாணத்திலேயே படித்தார்கள். சுவர்ணாவின் குடும்பமும் என் குடும்பமும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டது. உயிரியல் படித்ததால் நானும் சுவர்ணாவும் ஒரே  டியூசனுக்கே சென்றோம். கொழும்பில் சுவர்ணாவின் நடை உடை பாவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கின. அவள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் டிசேர்ட் அணிந்து வர ஆரம்பித்தாள். நல்ல நாள், கொண்டாட்டம் என்றால் கோயிலுக்குச் சேலை கட்டி வருவாள். தலைமயிரையும் ஸ்டைலாக வளைத்துத் தளையவிட்டாள். காலி முகத்திடலுக்கு நண்பிகளோடு போகும்போது முழங்கால் தெரியக் காற்சட்டை அணிந்தாள். சென் பீற்றர்ஸ் தடாகத்தில் நீச்சல் ரியூசனுக்கும் போனாள். நீந்தும்போது எப்படிப்பட்ட உடை அணிவாள் என்பதை ஊகிக்கமுடியாமல் இருந்தது. ஆண்கள் அங்கு உள்ளே போகமுடியாது. அதனால் ஒருவருமே பார்க்கமாட்டார்கள் என்பதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.  நான் யாழ்ப்பாணத்தில் செய்ததுபோலவே கொழும்பிலும் அவளை எல்லாவிடமும் பின்தொடர்ந்துகொண்டிருந்தேன். முன்னர் சைக்கிளில் என்றால் இப்போது பஸ்ஸில். என் கொழும்பு நண்பர்களிடமும் சுவர்ணா ‘என்ர சரக்கு’ என்று சொல்லி வைத்திருந்தேன். யாழ்ப்பாணத்திலேயே அவளைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன் என்றேன். என்றாலும் வேறு சிலருக்கும் அவள்மீது கண் இருப்பதைக் கவனித்தே இருந்தேன். உயர்தரம் இரண்டாம் வருடம் அவள் கொழும்பு மருத்துவபீட அண்ணர் ஒருவரிடம் தனியாக டியூசன் போக ஆரம்பித்ததும் நானும் அதே அண்ணரிடம் தனியே படிக்க ஆரம்பித்தேன். பின்னர் அவர் எங்கள் இரண்டுபேரையும் சேர்த்து ஒன்றாகப் படிப்பிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் சுவர்ணாவோடு எனக்கு நெருக்கம் ஆரம்பித்தது.

வழமையான உரையாடல்கள்தான். பாடம் சம்பந்தமான சந்தேகங்கள். வகுப்பு நேர மாற்றங்களை அறிவதற்காகத் தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம். அண்ணர் வகுப்புக்குத் தாமதமானாலோ, வரத் தவறினாலோ நாங்களே சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். இந்த நாட்களில் சுவர்ணா கொஞ்சம் படிப்பைத் தாண்டியும் பேச ஆரம்பித்தாள். பாடல்கள், திரைப்படங்கள் என்று பலவகைப்பட்ட விசயங்கள். அவள் புதிதாக ஒரு மோட்டர் ரோலா செல்பேசி வாங்கியிருந்தாள். அதில் எப்படி பாம்பு கேம் விளையாடுவது என்று நான் சொல்லிக்கொடுத்துப் பின்னர் அவளுக்கு அந்த விளையாட்டே போதையாகிப்போனது. ஓரிருமுறை தைரியத்தை வரவழைத்து சுவர்ணாவிடம் நான் என் காதலைச் சொன்னபோது ஏசிக் கலைத்துவிட்டாள். என் நட்பு வட்டாரம் சரியில்லை, அந்த மேனன்மாதிரியான கொசப்புகளோடு நான் திரிந்ததை மறக்கமுடியாது என்றாள். இப்போது நான் திருந்திவிட்டேன், கொழும்பில் வளர்ந்து சோசியலாக மாறிவிட்டேன் என்பதை அவள் கேட்பதாகவே இல்லை. ‘படிக்கும்போது காதல் வேண்டாம்’ என்றாள். அவளுக்கு வேறு யாரோடும் காதல் இருக்கிறதா என்று ஆராய்ந்துபார்த்தேன். அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் டியூசன்போகும் அண்ணரில் மாத்திரம் ஒரு கண் வைத்திருந்தேன். படிப்பிக்கும்போது அவருடைய ஜீன்ஸ் எழும்பியிருக்கிறதா என்று கவனிப்பேன். அப்போது வாத்திமார்கள் படிப்பிக்கிற பெட்டைகளைக் காதலிக்கும் ஒரு சீசன் ஓடிக்கொண்டிருந்தது. எவரையும் நம்பமுடியாது. ஒரு கட்டத்தில் நானும் சுவர்ணாவும் காதலிக்கிறோம் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். பல விசயங்களைப்போல இதுவும் சுவர்ணாவுக்கு இன்றுவரையிலும் தெரியாது. சுவர்ணாவைப்போல ஒரு சரக்கை இலகுவாக விழுத்தமுடியாது என்று எனக்குத் தெரியும். அதற்காகவே நான் நன்றாகப் படித்தேன். நான் தாமதிக்கத் தாமதிக்க சுவர்ணா வேறு யாருக்காவது சம்மதம் சொல்லிவிடுவாளோ என்ற பதற்றத்திலேயே படித்தேன்.

உயர்தரத்தில் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் எனக்கு மருத்துவபீட அனுமதி கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆரம்பித்த பின்னரும் அவள் பின்னாலேயே திரிந்தேன். அவள் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குப் போகும்போதெல்லாம் அவளோடு சேர்ந்துபோவது, அவள் திரும்பும்போது பத்திரமாக வீடுவரைக்கும் கூட்டிவந்து விடுவது என்று பல்கலைக்கழக இறுதி ஆண்டுவரை இக்கதை தொடர்ந்தது. கடைசியாக நவலோகாவில் பயிற்சியிலிருக்கும் காலத்தில்தான் அவள் எனக்குச் சம்மதம் சொன்னாள். இதுதான் தருணம் என்று சொல்லமுடியாமலேயே எம் காதல் ஒன்றுசேர்ந்தது. சில நாட்கள் பஸ்ஸில் காணும்போது சிரித்தாள். அருகில் போய் அமர்ந்தால் இடம் விட்டு ஒதுங்கி உட்கார்ந்தாள். பஸ் வேகமாகத் திரும்பும்போது முட்டுப்பட்டால் முறைத்தாள். பின்னர் சிரித்தாள். எனக்காவே காலி சீற்றுகள் கிடைக்கும்வரைக்கும் காத்திருந்து பஸ் ஏறினாள். பேசத் தொடங்கினாள்.

சுவர்ணாவுக்குச் சாப்பாடு என்றால் போதும். கே.எப்.சி. சிக்கினையும் டொமினோஸ் பிஸ்ஸாவையும் ஒவ்வொரு வார இறுதியிலும் வாங்கிச் சாப்பிட்ட ஒரே கொழும்புவாசி அவளாகத்தான் இருக்கும். அத்தோடு ஐஸ்கிரீமும் அள்ளுகொள்ளையாகக் குடிப்பாள். அவளோடு சாப்பாட்டுக்கடைகளுக்கு நானும் சேர்ந்து போகத்தொடங்கினேன். எனக்கு அண்ணா லண்டனிலிருந்து காசு அனுப்பிக்கொண்டிருந்ததால் வங்கி அட்டையில் எப்போதும் என்னிடம் பணம் இருக்கும். அதனால் சொகுசு உணவகங்களுக்கெல்லாம் நாங்கள் போக ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை முன்னேற்றம் காணத் தொடங்கியது. முதலில் பாதசாரிக் கடவைகளில் கையைப் பிடிக்கும்போது அனுமதித்தாள். பின்னர் விடாமல் அப்படியே வைத்திருக்கவும் பேசாமலிருந்தாள். சில்மிசங்கள் செய்யும்போது முறைத்தாலும் தடுக்காமலிருந்தாள். காலி முகத்திடலில் முதல் முத்தம் கொடுத்தபோது கண்களை மூடினாள். நுவரேலியாவிற்கு இரண்டு நாள் ட்றிப் போவோமா என்று கேட்டதற்குக் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டுச் சரி சொன்னாள். எல்லாமே இலகுவாக நிகழ்ந்தது. நுவரேலியா ஹோட்டல் அறையில் நான் ஆணுறையை எடுத்தபோது, தேவையில்லை திகதிகள் சரியாக இருக்கும் என்றாள். எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. ‘வீட்டில என்ன விசேசம்’ என்று மேனன் நக்கலடித்தபோது வெட்கப்பட்ட சுவர்ணாதானா இவள்? நான் கேட்டது எல்லாத்துக்கும் எந்த மறுப்புமில்லாமல் சரி சொன்னது இடறியது. அவளிடம் கூச்சமே இருக்கவில்லை. எனக்குள் ஒரு ஊசி ஒன்று குத்திக்கொண்டேயிருந்தது. நிலச்சரிவுபோலக் கடகடவென ஒருத்தி என்னை நம்பிச் சரிந்து விழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவள் அலங்கோலமாகக் கட்டிலில் கிடந்ததைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. எத்தனை வருடங்கள் இவளின் பின்னால் திரிந்திருப்பேன். எத்தனை கனவுகள்? இவளெல்லாம் எனக்கு எப்படி மாட்டினாள்? நான் மருத்துவராகப்போகிறேன் என்று தெரிந்ததாலேயே அவள் அப்படி இசைந்துபோனாள் என்பதில் எனக்கு என்றைக்குமே சந்தேகம் இருந்ததில்லை. அவள் எனக்குச் சம்மதம் சொல்லுமுன்னர் வீட்டில் அவளுக்குத் திருமணத்துக்கெனப் பொருத்தங்கள் தேடியது எனக்குத் தெரியும். வைத்தியரான பெண்ணைச் சீதனம் இல்லாமல் முடிப்பதற்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிது. அதிலும் அவளுடைய சாதியில் படித்த மாப்பிள்ளைகளே இல்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு ஆசிரியரோ அல்லது விதானையோதான் அமையும். அதனாலேயே புத்திசாலித்தனமாக அவள் எனக்குச் சம்மதம் சொன்னாள் என்பதை நான் அறிவேன். உயர் சாதியில் ஒரு மாப்பிள்ளை. அதுவும் வைத்தியன் என்றால் யார் வேண்டாமென்பார்கள். இப்படி ஒரு மாப்பிள்ளையை எவள் விடுவாள்?

நான் யன்னலைத் திறந்தபோது நுவரேலியாக் குளிர் முகத்தில் அடித்தது. அவள் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அடுத்தபக்கம் புரண்டு படுத்தபோது அவளது வெற்று முதுகில் பிரா ஸ்டிறப் அண்டிய தடம் அப்படியே தெரிந்தது. கூடவே வியர்வைப் பொருக்குகள். நான் குனிந்து மெல்ல அவள் முள்ளந்தண்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு ‘ஐ லவ் யூ சுவர்ணா’ என்றேன். அவள் கண்களைத் திறக்காமல் ‘ம்ம்ம்’ என்றாள். யன்னலடிக்கு வந்து நான் ஒரு சிகரட்டைப் பற்றவைத்தபடி கீழே நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளைக்காரிகளை நோட்டம் விட ஆரம்பித்தேன்.

000

நாங்கள் முட்டைகளைத் தேடத்தொடங்கினோம்.

சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோரும் ஆர்வமாக முட்டைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருமுறையும் யாராவது முட்டையைக் கண்டெடுக்கும்போது இவள்தான் சின்னப்பிள்ளையைப்போலத் துள்ளிக்குதித்தாள். இப்படித்தான் இங்கிதம் இல்லாமல் உரத்த குரலில் சிரிப்பதும் கூச்சலிடுவதும் இவள் பழக்கமாகிப்போய்விட்டது. மூன்று குழந்தைகளுக்கு அம்மா ஆனதே அவளுக்கு அடிக்கடி மறந்துவிடுவதுண்டு. அவள் எங்கிருந்தாலும் அவளைச்சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடும். ஆண்களும் பெண்களும் அவள் கதைகளை ஆவென்று கேட்டபடி இருப்பார்கள். அவளுக்கும் கதை சொல்லுவதென்றால் போதும். உடல் முழுதையும் அசைத்து அசைத்து உணர்ச்சிபூர்வமாகவே கதை சொல்வாள். அப்போது அவளுடைய சட்டையோ சேலையோ அங்கிங்கே விலகுவதை அவள் கவனிப்பதில்லை. அவள் முகத்திலிருக்கும் குழந்தைச்சிரிப்பு ஆரம்பத்தில் என்னவோ எனக்குப் பிடித்திருந்தது உண்மைதான். ஆனால் ஆண்கள் குழந்தைச்சிரிப்பை குழந்தைகளிடம் மாத்திரமே ரசிப்பவர்கள் என்று எனக்குத் தெரியும். அவளை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை எடைபோடுவது எனக்கு அவ்வளவு கடினமாக இருப்பதில்லை. அதுவும் மேனன் என்னவெல்லாம் பேசினவன், அவளை நினைத்து என்னெல்லாம் வீட்டில் செய்தேன் என்று வீம்பாகச் சொன்னவன், இப்போது என்ன யோசிப்பான் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவனாவது பரவாயில்லை. அனோமி மேனனிலும் மோசமானவன். இவர்களாவது என் நண்பர்கள். அவள் கூட்டிவந்த நண்பர்கள் பலரின் முழியே தவறாக இருந்தது.

நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது கூச்சல் ஒன்று பின்வளவையே திரும்பிப்பார்க்க வைத்தது.

“வாவ் எவ்வளவு பெரிய முட்டை”

மேனனின் மனைவி ஒரு நீலநிற ஈஸ்டர் முட்டையைக் கண்டெடுத்துவிட்டாள். அதற்குத்தான் அத்தனை கூச்சல். அந்த முட்டை ஒரு தீக்கோழியின் முட்டையளவுக்குப் பெரிதாக இருந்தது. எல்லோரும் தேடுவதை நிறுத்திவிட்டு மேனனின் மனைவியைப் பார்த்து ‘யேய்’ என்று பாராட்டினார்கள். இவள் அதைப் புகைப்படம் எடுத்தாள். மேனனின் மனைவி முட்டையை உயர்த்திப்பிடித்து எல்லோருக்கும் சுழற்றிக்காட்டினாள். அவள் அப்படித் தூக்கிக் காட்டியபோது அவளின் கமர்கட்டு மழிக்கப்பட்டிருந்ததைக் கவனித்தேன்.

புகைப்படம் எடுக்கும்போது இவளின் பிளவுஸ் கமர்கட்டில் வியர்வை கசிந்திருந்தது தெரிந்தது.

000

எங்கள் திருமணம் கலதாரி ஹோட்டல் மண்டபத்தில் வெகு விமரிசையாக நிகழ்ந்தது.

இரண்டு பேரினதும் மருத்துவப்பீடத்து நண்பர்களும் வந்தார்கள். ஊரிலிருந்து மேனனும் அனோமியும்கூட வந்திருந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் என்னை அதிஷ்டக்காரன் என்று சொல்லி வாழ்த்தினார்கள். ‘உனக்கு அவள் விழுவாள் எண்டு நான் கனவுலயும் நினைக்கேல்ல மச்சான்’ என்று மேனன் நான் வெளிக்கிடும்போது நெற்றியில் திருநீற்றுப் பூச்சைக் கீறியபடியே சொன்னான். ‘இரவுக்கு எல்லாம் ரெடியா?’ என்று அனோமி கேட்டான். அவன் கேட்டபோது குரலில் ஒரு பொறாமை தெறித்ததை உணர்ந்தேன். ‘எல்லாம் முதலே முடிஞ்சிருக்கும்’ என்று மேனன் சொன்னபோது நான் சிரிக்கவில்லை. இரவு நாம் செய்யப்போவதை அனோமி யோசித்துப் பார்ப்பான் என்று நினைக்கையில் விசர் பிடித்தது. ‘டேய் பூனாக்களே சாமியறைக்குள்ள நிண்டு கதைக்கிற கதையா’ என்று நான் அவர்களை அடக்கினேன்.

மாலை ரிஷப்சனில் சுவர்ணா சேலை அணியாமல் வட இந்தியப் பாவாடை தாவணி ஒன்றை மினுங்க மினுங்க அணிந்திருந்தாள். அதுபற்றி அவள் எதையும் எனக்குச் சொல்லியிருக்கவில்லை. அந்த உடையில் அவள் அழகாகவே இருந்தாள். ஆனால் கண்ணறையான சோல் அணிந்திருந்ததில் பிளவுசினூடாக அவள் மார்புகளின் மேற் பிளவு பட்டையாகத் தெரிந்தது. எனக்கு அது படு அந்தரமாகப் போய்விட்டது. ரிஷப்சனுக்குப் பெரும்பாலும் சிங்கள நண்பர்களே வந்திருந்தது நிம்மதியைக் கொடுத்தது. அதிலும் அவளுடைய வைத்தியசாலை நண்பர்கள்தான் ஏராளம். அவளின் பெண் மருத்துவ நண்பிகள் எல்லோருமே கவர்ச்சியாகவே வந்திருந்தார்கள். பளிச்சான நிறத்தில் முழங்காலுக்கு மேலேயே நின்றுவிட்ட சட்டைகள். எல்லோருமே மார்பின் மேல்வெட்டு தெரியும் வண்ணமே ஆடை உடுத்தியிருந்தார்கள். சிங்கள ஆண்கள் எல்லோரும் அதனைப் பெரிதாகச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அல்லது செய்யாததுபோல நடித்திருக்கக்கூடும். நாகரிகம் தெரியாதவர்கள். நல்ல காலத்துக்கு மேனனும் அனோமியும் மாலையே யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்கள். அல்லது அந்த நாய்கள் அத்தனை பெண்களையும் கனவிலேயே கட்டிலில் சரித்திருப்பார்கள்.

இந்த உடைப் பிரச்சனை கொஞ்சநாளிலேயே எமக்குள் பெரிதாக வெடிக்க ஆரம்பித்தது. அவள் ஜீன்ஸ் அணிவதிலோ டிசேர்ட் அணிவதிலோ எனக்குப் பிரச்சனையில்லை. நானும் கொழும்பில் படித்தவன்தான். ஆனால் முழங்கால் தெரியக் காற்சட்டை போடுவதும், தொளதொளவென டிசேர்ட் போட்டு அடிக்கடி இழுத்துவிடுவதும் கையில்லாத சட்டை அணிவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. மார்பு உப்பியபடி இறுக்கமாகச் சட்டை போட்டாலும் பிடிக்காது. அவள் தன் நண்பர்களோடு சென்பீற்றர்சுக்கு நீச்சல் தடாகத்துக்குப் போவதில் இம்மியளவிலும் சம்மதமில்லை. அதிலும் சமயத்தில் குடும்பத்துடன் போகிறோம் என்று என்னையும் அழைத்துச்செல்வாள். அங்கே ஏனைய சிங்கள ஆண்களும் மனைவிமாரோடு வருவார்கள். எனக்கென்னவோ எல்லோரும் சேர்ந்து நீந்துவது அரியண்டமாகவே இருக்கும். அவள் தொடையை மறைக்கும் நீச்சல் உடைதான் அணிவதுண்டு. ஆனாலும் உடல் ஒட்டியிருக்கும் அல்லவா. தொடர்ச்சியான பட்மிண்டன் விளையாட்டும் நீச்சலும் அவளுக்கு  வாளிப்பான நீண்ட மெல்லிய கால்களையும் இடுப்பையும் கொடுத்திருந்தன. உடலில் எப்பன் சள்ளை கிடையாது. நீந்தும்போது அத்தனை சிங்களக் கண்களும் அவளையே மேய்வதைக் கவனித்திருக்கிறேன்.  திருமணமானாலும் கவர்ச்சி கவர்ச்சிதானே.

இதை இப்படியே நீடிக்க விடக்கூடாது என்று தீர்மானித்தேன்.

நாங்கள் பம்பலப்பிட்டியவில் பிளாட் ஒன்றை வாங்கியிருந்தோம். அது எனக்கு வசதியாகப்போய்விட்டது. பம்பலப்பிட்டியவில் ஒரு தொகை உணவு விடுதிகள் இருந்தன. சீனத்து உணவு, சிங்கள உணவு, ஐரோப்பிய உணவு, தமிழ் உணவு என விதம்விதமான உணவு வகைகள். தவிர கே.எப்.சி, மக்டொனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் போன்றவையும் அருகிலேயே இருந்தன. நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு காரணம் காட்டி அவளை உணவகங்களுக்கு அழைத்துப்போகத் தொடங்கினேன். காலையிலேயே பேக்கன் சாண்ட்விச் வாங்கிக்கொடுத்தேன். மதியம் என்றால் பிரைட் ரைஸும் சிக்கின் பொரியலும். இரவு உணவின்போது எண்ணெயும் இறைச்சியும் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். வீட்டில் சமைப்பதே இல்லை. அவளுக்கு விதம்விதமான ஐஸ்கிரீமுகளையும் கேக்குகளையும் பொம்பே ஸ்வீட்டில் தொதல், மஸ்கட் எனப் பலவற்றையும் வாங்கிக்கொடுத்தேன். மாதவிடாய்க் காலம் என்றால் என் வேலை இன்னமும் இலகுவாகும். அவள் குழப்பத்திலும் எரிச்சலிலும் இருக்கும்போது சாப்பாட்டை வகைதொகையில்லாமல் உட்கொள்ளத் தொடங்கினாள். என்னோடு சின்னதாகச் சண்டை பிடித்தால் போதும். பிரிட்ஜில் கிடப்பதை எல்லாம் அவள் வயிற்றுள் போட்டுக்கொள்வாள். அவள் சாப்பிடச் சாப்பிட நானும் உணவுப் பண்டங்களை வாங்கிக் குவித்துக்கொண்டேயிருந்தேன்.

உலகின் அத்தனை போதைமருந்துகளைவிடவும் நாக்கின் சுவையே மோசமான போதை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஒருமுறை அடிமையாகிவிட்டால் பின்னர் மீளமுடியாது. ஒருமுறை வயிறு விரிந்துவிட்டால் மேலும் மேலும் உள்ளே போடவே அது உங்களைத் தூண்டும்.  சுவர்ணா திருமணமாகி இரண்டே மாதங்களில் சாப்பாடே கதியாகிக் கிடந்தாள். நான் வாங்கிக்கொடுக்காதபோது டிரைவரிடம் சொல்லிச் சாப்பாட்டுப் பார்சல்களை எடுப்பித்து வீட்டிலிருந்தே வயிற்றுக்குள் கொட்ட ஆரம்பித்தாள். ஒரே மாதத்திலேயே பிள்ளைத்தாச்சிப் பெண்ணைப்போல அவள் வயிறும் கால்களும் விரிந்துகொண்டு செல்வதைக் கவனித்தேன். வைத்திருந்த உடைகள் எதுவும் அளவு இல்லாமற்போகவே நான் புதிதாக அவளுக்குப் பெரிய சைஸில் உடைகள் வாங்கிக்கொடுத்தேன். வீட்டில் அவளுக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகளும் ஐஸ்கிரீமுகளும் எந்நேரமும் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். உடல் வீக்கத்தினால் வந்த வெட்கம் காரணமாகவோ அல்லது உணவின் போதை காரணமாகவோ அவள் இப்போதெல்லாம் நீச்சலுக்கோ பட்மிண்டனுக்கோ செல்லாமல் தவிர்த்ததைச் சந்தோசத்துடன் ரசித்தேன். நண்பர்களோடு பழகுவதையும் அவள் குறைத்துக்கொண்டாள். மதியம் சாப்பிட்டு இரண்டு மணிக்கே பின்னேரச் சிற்றுண்டி பற்றியும் இரவு உணவுபற்றியும் உரையாட ஆரம்பித்தாள். சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு. சமயங்களில் கிளினிக்குக்கும் போகாமல் வீட்டிலிருந்து நாள் முழுதும் சாப்பிட்டபடி டிவி பார்க்கத்தொடங்கினாள். அப்போது நான் வேண்டுமென்றே ‘பிசாசுமாதிரிச் சாப்பிடாதே’ என்று தூண்டிவிட்டால் விறுமத்தில் முன்னிலும் ஆக்ரோசத்துடன் ஐஸ்கிரீமுகளை என் நெஞ்சு குளிரத் தின்னுவாள்.

எல்லாமே திட்டமிட்டபடி நிகழும்போது சந்தோசமே வந்தது. ஆனாலும் உள்ளூர ஒரு பயமும் இருந்தது. அவளும் ஒரு வைத்தியர்தானே. எந்த நேரத்திலும் சுதாகரித்து, பழைய சுவர்ணாவாக ஆகி உடலைத் தேற்றிக்கொண்டுவிடுவாளோ என்ற அச்சம் அவ்வப்போது எழுந்து மறைந்தது. அதிகம் சாப்பிட்டுக் குண்டாகிறவர்கள் திடீரென டயட் என்று ஆரம்பித்துச் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது இயல்பான ஒன்றல்லவா. இவளும் ஒருநாள் அதை ஆரம்பிக்கக்கூடும். விடக்கூடாது.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு வேண்டும்.

000

நான் அவர்களுடைய விளையாட்டில் பங்கெடுக்காமல் மாமரத்தடியிலேயே ஒரு பியர் போத்தலோடு நின்றுகொண்டிருந்தேன். எல்லோரும் சிறுவர்களைப்போல முட்டைகளைத் தேடி எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. மேனன் கை நிறைய முட்டைகளை வைத்தபடி வெற்றிக்கோசம் போட்டுக்கொண்டிருந்தான். அனோமிக்கு இரண்டு தீக்கோழி முட்டைகள் கிடைத்திருந்தன. எல்லோருமே ஆளுக்கு ஐந்தாறு முட்டைகள் வைத்திருந்தார்கள். திடலின் நடுவே அவள் நிற்க அத்தனைபேரும் அவளைச் சூழ்ந்திருந்தார்கள். அவள் கைகளை விசுக்கி விசுக்கி பெரும் ஆர்ப்பாட்டத்தோடு விதிகளை விளக்கிக்கொண்டிருந்தாள். செல்போனில் ஒவ்வொருவருடைய பெயரையும் எழுதி அவர்கள் எடுத்த முட்டைகளின் எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டாள். முட்டைகளுக்கு அவற்றின் அளவுக்கு ஏற்பப் புள்ளிகளும் இருந்தன. பல்லி முட்டைகளுக்கு ஒரு புள்ளி. கோழி முட்டைகளுக்கு ஐந்து. வாத்து முட்டைகளுக்கு எட்டு. தீக்கோழி முட்டைகள் என்றால் பத்து. அந்த டைனோசர் முட்டைக்கு மாத்திரம் நூறு புள்ளிகள். அதை இன்னமும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.

புள்ளிகளிடிப்படையில் அனோமி தனக்குத்தான் வெற்றி என்று சொல்ல, அவள் இல்லை என்று மறுத்துச் சண்டை போட்டாள். ஓரிரு வெள்ளைக்காரர்கள் பல்லி முட்டைகளைத்தான் தேடிக் கண்டுபிடிப்பது கடினம், அதனால் அவற்றுக்கே அதிக புள்ளிகள் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். சின்ன விளையாட்டுத்தான் என்றாலும் ஒவ்வொருவரும் வேறுவேறான விதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவள் அத்தனைபேரையும் ஒரு இராணிபோலச் சமாளித்தாள். அவளின் சொல்லுக்குக் கூட்டமே கட்டுப்பட்டது. சத்தம்போட்டவர்களிடம் எல்லாரும் ஒரே நேரத்தில் கதைத்தால் ஒருத்தருக்கும் விளங்காது என்று அவள் அதட்ட, கூட்டம் அமைதியானது. ஆங்கிலம் அவளுக்குச் சரளமாக வந்தது. இங்கிலாந்து வந்து எம்.ஆர்.சி.பி படித்துக்கொண்டிருக்கும்போதே அவள் இந்த உச்சரிப்பைப் பிடித்துக்கொண்டுவிட்டாள். சேலையின் தலைப்பை இடுப்பில் சுற்றிச் செருகி, சண்டைக்குப் போகிறவள்போல அவள் நிற்பதைத் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். மேனன் இன்னமும் முட்டைப் பிரச்சனையில் அவளோடு வாதம் செய்துகொண்டிருந்தான். இதுதான் சாட்டு என்று அனோமி இங்கிதமில்லாமல் மேனனின் மனைவியோடு வழிந்துகொண்டிருந்தான். அவளின் வெள்ளைக்கார நட்பு ஒன்று ஈஸ்டர் முட்டையை உரித்துச் சாப்பிட ஆரம்பித்திருந்தது. கதையின் சுதியில் அவளுக்குத் தன் பிளவுஸ் முதுகுக்குள்ளாலிருந்து பிராவின் ஸ்றப் வெளியே எட்டிப்பார்க்கிறது என்ற பிரக்ஞையே இருக்கவில்லை. நான் குத்திவிட்டிருந்த பின்னும்தான் கூடவே நீட்டிக்கொண்டிருந்தது. அவள் சொன்ன பகிடிக்கு இன்னொரு வெள்ளை அளவுக்கு அதிகமாகச் சிரித்தது. கையில் ஒரு கூழ்முட்டை கிடைத்தால் அந்த வெள்ளையின் மூஞ்சியிலேயே விட்டெறியலாம்.

எனக்கு அவள்மீதுதான் பெரும் எரிச்சலாக இருந்தது. மூன்று பிள்ளைகள் பெற்று அறம்புறமாகக் குண்டாகியிருந்தாலும் எப்படியோ இந்த வெளிச்சம் ஈசல்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது. இந்த இராணிக்குக் குடம் குடமாகத் தேன் எடுத்துவர ஏராளம் தேனிகள் இன்னமும் தயாராகவே இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் இராணியும் தேனிகளும் மாத்திரம்தான். இராணியின் கணவனை யாரும் சட்டை செய்வதில்லை.

000

ஒரே வழி அடுத்தடுத்துக் குழந்தைகளைப் பெற்றுவிடுவதுதான்.

இப்போதைக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று அவள் சொன்னதுமே என் முடிவில் நான் உறுதியாகிவிட்டேன். அப்படி ஒன்றும் குழந்தைகள் என்றால் எனக்கு உயிர் என்று சொல்லமுடியாது. சொல்லப்போனால் அவை உபத்திரவமே ஒழிய வேறொன்றுமில்லை. ஆனால் அவளைக் கட்டுக்குள் கொண்டுவர இதுவே நிரந்தரமான வழி என்று எனக்குத் தெரிந்தது. உடனேயே பெற்றுவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அவளுக்கு லண்டன் சென்று எம்.ஆர்.சி.பி செய்ய வேண்டும் என்ற அவா இருந்தது. ஆனால் சாதாரண எம்.பி.பி.எஸ் படிப்போடு அவளை நிறுத்திவிடச் சொல்லிவிட்டேன். நான் ஒருவனே ஆஸ்பத்திரியும் சத்திர சிகிச்சையும் வீடுமாக அலைவது போதும். சின்னதாக ஒரு ஜி.பி கிளினிக் வைத்து அளவாகக் காய்ச்சல் தடிமனுக்கு வைத்தியம் செய்துவிட்டுக் குழந்தைகளைப் பார்ப்பதே நல்லது என்றேன்.  அதுவும் கடினம் என்றால் அவள் வீட்டிலேயே இருக்கலாம். வசதிக்கா குறை? ஆனால் அது ஒரு காரியக்காரச் சனியன் என்பது, நான் எப்.ஆர்.சி.எஸ் படிப்புக்கு லண்டன் தயாராகையில், அதுவும் நுழைவு அனுமதியோடு வந்தபோது தெரிந்தது.

அழகான மனைவியைப் பெற்றவர்கள் உடனேயே குழந்தையைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் நான் எல்லா ஆண்களுக்கும் சொல்லிக்கொள்ளக்கூடிய அறிவுரை. மனைவியான பின்னர் மற்றவர்களுக்கு நெருங்குவது இலகுவாகிறது. அதிலும் மோசமான நண்பர்களைப் பெற்றவர்கள் யோசிக்கவே கூடாது. இங்கே சாதாரண மங்கிய குமிழ்களையே ஈசல்கள் தேடிவரும்போது சாண்டிலியர் விளக்குகளை அவை விட்டுவைக்குமா என்ன?

லண்டன் போகமுதலே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. என் பிள்ளை வெளிநாட்டில் பிறக்கக்கூடாது, என் தாய்நாட்டில்தான் அதுவும் பிறக்க வேண்டும் என்று அடம்பிடித்தேன். போய்ப் படிப்பு முடிந்து திரும்பியதும் பார்க்கலாம் என்று அவள் சொன்னாள். அதிலும் எனக்குச் சம்மதமில்லை. எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். ஆனால் குழந்தைகள் அப்படியில்லை. அவளுக்கு வேறு வயதாகிறது. முப்பதுகளுக்குப் பிறகு கருத்தரிப்பது எத்தனை கடினமானது என்பது அவள் அறியாதது அல்ல. ஆனாலும் அவள் அடம் பிடித்தாள். தன் திகதிகளில் அவள் எப்பொழுதுமே கவனமாக இருப்பாள். திருமணமாகி மூன்று மாதங்களில் எந்தப் புதினமும் இல்லை என்றவுடன் உறவினர் எல்லோரிடமும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. போகும் இடங்களிலெல்லாம் அதுதான் கேள்வி. ‘டொக்டர்மாருக்கே சொல்ல வேண்டுமா?’, ‘படித்த பெண்கள் அப்படித்தான் சொல்வார்கள், நீதான் விடக்கூடாது’ என்று பலரும் சொன்னது எனக்கும் சரியென்றே பட்டது. நான்காம் மாதத்திலிருந்தே நான் அவளை அரியண்டம் செய்ய ஆரம்பித்தேன். குழந்தைகளை நானே பார்ப்பேன். அவள் எதுவுமே செய்யத் தேவையில்லை. பம்பர்ஸ் மாற்றுவதிலிருந்து இரவில் அழுதால் எழுந்து பால் கரைத்துக் கொடுப்பதுவரை எல்லாமே நானே செய்வேன் என்று கெஞ்சிப்பார்த்தேன். அவள் சம்மதிக்கவேயில்லை. இரவானால் தினமும் சண்டைதான். நாளடைவில் என் உபத்திரம் தாங்காமல் அவள் பக்கத்து அறையில் போய்ப் படுக்கத்தொடங்கினாள்.

ஒருநாள் சண்டை முற்றிவிட்டது. அன்று நான் குடித்து நிறைவெறியில் வீட்டுக்கு வந்திருந்தேன். அவள் சைனீஸ் டிராகனில் வாங்கிய கணவாய்ப் பொறியலைத் தனியே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். வழமைபோலச் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல், சண்டையாகத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆக்ரோசமாக உருவெடுக்க ஆரம்பித்தது.

‘ஆருக்கடி இந்த உடம்பை இப்பிடி வச்சிருக்கிறாய், சாப்பாட்டுத் தின்னி’

நான் அவளைத் திட்டினேன். அவள் உடனே என்னைப் பார்த்து ‘யூ பக்கிங் டோக்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பார்சலை என்மீது வீசி எறிந்தாள். அவளது சரளமான ஆங்கிலத் தூஷணம் என் கோபத்தைக் கிளறிவிட்டது. எனக்குத் தலை கால் புரியவில்லை. வேகமாகச் சென்று அவளின் தலைமயிரைப் பிடித்து அப்படியே தூக்கினேன். அவளை முதுகிலும் தலையிலும் பலமாக வெளுத்து அங்கேயே தள்ளி விழுத்தினேன். ‘என்னையா பக்கிங் டோக் எண்டாய் பூனா ’ என்று அவள் சாதியையும் சொல்லிக் கத்தியபடி உடைகளை இழுத்து எறிந்து அவளை ஆவேசமாகப் புணர்ந்தேன். அவள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அகங்காரி எனக்குப் பலமாக எதிர்ப்புக் காட்டுவாள் என்று நினைத்தேன். ஆனால் முதலில் திமிறியவள் பின்னர் ஏனோ விட்டுவிட்டாள். அவள் அப்படி எதுவுமே செய்யாதது ஏமாற்றமாக இருந்தது. செத்த பிணம்போல அவள் அன்று செற்றியில் பரவிக்கிடந்தாள். ஆனால் நான் விடவில்லை. நுவரேலியாவில் திரைப்படத்துக் காதல் காட்சிபோலத் தோன்றிய முதல் அனுபவம் இம்முறை அதே திரைப்படத்தின் இறுதி வன்முறைக் காட்சியாக மாறியிருந்தது. இவளின் வாய்க்கு இப்படிச் செய்தால்தான் தகும் என்று பட்டது. சனியன். அவள் சற்றுநேரம் சீலிங்கை வெறித்துப்பார்த்துக்கொண்டு அப்படியே கிடந்தவள் மெதுவாகத் தடுமாறி எழுந்தாள். பின்னர் பிரிட்ஜுக்குள் கிடந்த ஒரு சீஸ் பக்கற்றையும் எடுத்துக்கொண்டு அறைக்குள்போய்க் கதவைப் பூட்டிக்கொண்டாள். நான் சிகரட் ஒன்றை எடுத்து வீட்டுக்குள்ளேயே புகைக்க ஆரம்பித்தேன்.

அன்றைக்கு அவளிடமிருந்து ஏதோ ஒன்று பிரிந்து என்னைத் தாண்டிச்சென்றதை நான் உணர்ந்தேன். எதுவென்று எனக்குத் தெரியவில்லை. எனினும் அது எப்போதுமே என்னோடு கூட இருந்ததில்லை என்பது மட்டும் விளங்கியது. அது எனக்கு வசதியாகவே அமைந்தது. அதன்பின்னர் எனக்கு உந்தும்போதெல்லாம் கேட்டுக்கேள்வியின்றி அவளைப் புணர ஆரம்பித்தேன். அவள் ஒன்றுமே சொல்லாமல் அத்தனைக்கும் இசைந்துபோனாள். சின்ன எரிச்சல்கூடக் காட்டுவதில்லை. வழமைபோலவே பேசுவாள். சமைப்பாள். பிசாசுபோலச் சாப்பிடுவாள். நான் வீடு திரும்பும் நேரமும் தாமதமாகத் தொடங்கியது. ஒன்று பிரைவேட் பிரக்டீஸ் இருக்கும். அல்லது நண்பர்களோடு பட்மிண்டன் விளையாடப் போவேன். வெள்ளியானால் கல்கிசைக் கரைக்கு நண்பர்கள் எல்லோரும் சென்று கடலில் நீச்சலடித்துக் குளித்துவிட்டு அங்குள்ள உணவகத்தில் சேர்ந்து குடிப்போம். சிலவேளைகளில் கிளப்புக்கும் செல்வதுண்டு. நான் திரும்பும்போது அவள் தூங்கியிருப்பாள். அவள் உலகமே தனியாக மாறிவிட்டிருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து ஆறு மணியளவிலேயே அவள் வீடு திரும்பிவிடுவாள். பின்னர் எதையாவது சமைப்பாள். அல்லது வாங்கிச்சாப்பிடுவாள். விஜய் டீவியில் சுப்பர் சிங்கர் பார்த்தாள். அவளுக்கென்றிருந்த நண்பர்கள் எல்லோரையும் விலத்திவிட்டிருந்தாள். புதிதாக நண்பர்கள் எவரும் வாய்த்ததாகவும் தெரியவில்லை. செல்பேசி பில்லில் எல்லாமே தெரிந்த இலக்கங்களாக இருந்தன. வீட்டுக்கும் எவரும் வருவதில்லை. சுவரில் மாட்டியிருக்கும் எங்கள் திருமணப்படத்தில் கமரா ஒன்றை நான் இரகசியமாக ஒளித்துவைத்திருந்தேன். அதுதான் பாதுகாப்பானது. என்மீது உள்ள எரிச்சலில் அவள் அந்தப் படத்தையே திரும்பிப்பார்க்கமாட்டாள் என்று தெரியும். வீட்டைத் துப்புரவாக்க அடிக்கடி ஒரு மனிசி வருவது அதில் தெரியும். அப்புறம் அவளுக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுக்கும் டிரைவர் வாசலிலேயே நின்றுவிடுவான். எப்போதாவது பக்கத்து பிளாட் சிறுமி வந்து தட்டிக் கேக் கொடுப்பாள்.  எந்நேரமும் சாப்பாடுதான். என்னைத் தவிர வேறு எந்த ஆணும் அவள் உலகத்தில் நுழையாதவரை எதையும் சாப்பிட்டுத் தொலையட்டும். அவள் வயிற்றில் அந்தப்பேய் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டது. ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டால் போதும். எல்லாமே சுபம்.

முதல்முறையாக அவள் கர்ப்பமானதையும் இரண்டே மாதங்களில் அது சிதைந்துபோனதையும் அவள் எனக்குச் சொல்லவேயில்லை. அவள் தன்னுடைய வைத்தியருடன் தொடர்புகொண்ட ஈமெயில்களினூடாகவே அதனை அறிந்துகொண்டேன். பின்னர் லண்டன் வந்து கொஞ்ச நாட்களிலேயே அவள் மீண்டும் கருவுற்றாள். இம்முறையும் மிகத்தாமதமாகவே அதனை அறிந்துகொண்டேன். மூத்தவள் பிறந்தபின்னாடியும் அவள் போக்கு மாறாமலேயே இருந்தது. மூன்றாவதும் பிறந்த பிற்பாடுதான் கொஞ்சம் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தாள். அவளாகப் பேச ஆரம்பித்தாள். அப்போதுமே ஒரு சாலையோரப் பாதசாரியிடம் காட்டும் அணுக்கமே அவளிடமிருந்தது. இரண்டு பெண்களை நான் இக்காலங்களில் உணர ஆரம்பித்தேன். எனக்கும் குழந்தைகளுக்கும் இவ்வளவே அதிகம் என்று தோரணையில் அளந்து உறவாடும் ஒருத்தி. நான் இல்லாத தருணங்களில் வெடித்துச் சிரிக்கும் சந்தோசங்களோடும் ஆழமான சிந்தனைகளோடும் இரகசியங்களோடும் உறுத்தல்களோடும் தனக்கேயான உலகத்தில் தன்னோடு தானே மல்லுக்கட்டிச் சாகும் இன்னொருத்தி. எனக்கும் அளவோடு பழகும் அந்த ஒருத்தியே போதுமாக இருந்தது. என் தேவைகளுக்கு அவள் போதும். வீட்டுக்கு வரும்போது ஒரு பெண் வேண்டும். சமைத்து, வீட்டு வேலைகளைக் கவனித்து, குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு என எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்து, விருந்துகளுக்கும் அடுத்தவர்களுக்கும் என் மறுபாதியாகத் தோற்றமளித்து, இரவில் என் அவசரங்களுக்கு இடமளிப்பவளைவிட வேறு எந்தச்சனியன் வாழ்க்கையில் வேண்டும்? அவளின் மற்றவள் என்னிடம் நெருங்கினால் நான் சின்னி விரலின் நக இடுக்கில் குத்தி நிற்கும் முள்ளைவிடச் சிறியனாக என்னை உணரத் தொடங்கிவிடுவேன் என்று தெரியும். அதுபற்றி யோசிக்கும்போதே முள்ளு இடற ஆரம்பித்துவிடுகிறது. அது சனியன் எக்கேடு கெட்டாவது போகட்டும். தனியே இருந்து அரற்றட்டும்.

என்னோடு முண்டாதவரைக்கும் என் வாழ்க்கை இதம்.

000

அந்த டைனோசர் முட்டையை எல்லோரும் ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தார்கள். அதைக் கண்டுபிடித்தால்தான் வெற்றியும் பரிசும் என்று அவள் அறிவித்துவிட்டாள். எல்லோரும் முட்டையை நிலத்திலேயே தேடினார்கள். கிடங்குகளிலும் செடிகளுக்கிடையேயும் ஊஞ்சலுக்கடியிலும் என்று எல்லாவிடங்களிலும் புகுந்து பார்த்தார்கள். ‘இன்னமும் ஐந்தே நிமிடங்கள்தான், அந்த டைனோசர் முட்டையைக் கண்டு எடுத்தவருக்கு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது’ என்று அவள் கத்தவும் தேடலில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. தரையில் தேடிக்களைத்த சிலர் இப்போது வீட்டுக்கூரைக்கு மேலேயும் வேலிக்கு அப்பாலும் எட்டிப்பார்த்தார்கள். மேனனும் அனோமியும் நான் நின்ற மரத்தடிக்கு வந்து என்னைப் புதினமாகப் பார்த்தபடியே சுற்றிச்சுற்றித் தேடினார்கள். மேனன் மரத்துக்கு மேலேயும் துலாவிப்பார்த்தான். ம்ஹூம். டைனோசர் முட்டை எங்கேயும் கிடைக்கவில்லை. ‘இந்தா இவந்தான் அந்த டைனோசர், முட்டையை உடைச்சுக்கொண்டு வெளிய வந்திட்டான்’ என்று மேனன் நக்கலடிக்க நான் அவனை முறைத்தேன். ‘உங்கட விளையாட்டில என்னைச் சேர்க்காதிங்கடா’ என்றேன். எங்கே தேடினாலும் அந்த முட்டை கிடைக்கவேயில்லை. இறுதியில் நேரம் முடியவும் எல்லோரும் களைத்துப்போய் முடியாது என்று சொல்லித் திடலடியில் கூடினார்கள்.

‘ஐயோ ஷேம் ஷேம், அவ்வளவு பெரிய டைனோசர் முட்டையைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? இப்ப நான் காட்டுகிறேன்’

என்றபடியே அவள் மரத்தடியை நோக்கி நடந்துவந்தாள். மொத்தக்கூட்டமும் எலிகள்போல அவள் பின்னால் வந்தது. வந்தவள் ‘இங்கேயிருக்கிறது’ என்று சொல்லி மாமரத்துக்குக் கீழே நின்று தலையை உயர்த்திப் பார்த்தாள். அப்போது அவளின் முகம் முற்றாகக் கோணியது. டைனோசர் முட்டையை அங்கே காணவில்லை. ‘இங்கேதானே வைத்தோம்’ என்றபடி கிளைகளை அசைத்தும் விலத்தியும் பார்த்தாள். முட்டை எங்கேயும் இல்லை. வந்திருந்த இரண்டு வெள்ளைகள் ‘பூ’ என்றன. ‘நான்தானே சொன்னேன், முட்டை பொரிச்சு இஞ்ச நிக்குது’ என்று என்னைச் சுட்டிக்காட்டினான் மேனன். அவள் முகம் தொங்கிப்போனது. எல்லோருக்கும் இப்போது விளையாட்டின் சுவாரசியம் குறைந்துபோனது. பசிக்கிறது, குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் என்று ஆளாளுக்கு வீட்டுக்குள்ளே திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர். மேனனும் அனோமியும் கராஜுக்குத் திரும்பினார்கள்.  சிறுவர்களும் உள்ளே தொலைக்காட்சி பார்க்க ஓடிவிட்டார்கள். சில நிமிடங்களிலேயே அந்தப் புல்வெளி வெறிச்சோடிப்போனது.

அவள் இன்னமும் நம்பமாட்டாமல் தொடர்ந்து மாமரக் கொப்புகளை விலத்தி அந்த டைனோசர் முட்டையைத் தேடிக்கொண்டேயிருந்தாள். பின்னர் விளங்கிக்கொண்டவளாய் திரும்பி நாயிலும் கேவலமாக என்னை முறைத்தாள். நான் அருகிலிருந்த குப்பைத்தொட்டியை நோக்கிக் கண்ணைக் காட்ட ஓடிப்போய் அதைத் திறந்துபார்த்தாள். அதற்குள் அந்த டைனோசர் முட்டை உடைத்து நசுக்கப்பட்டு பச்சை நிற உறைக்குள் சுருட்டி எறியப்பட்டிருந்ததைக் கண்டவள், என்னைத் திரும்பியே பார்க்காமல் அயர்ச்சியோடு வீட்டுக்குள் சென்றாள்.

ஒரு இராட்சதப் பிடியானையைச் சுழற்றி வீசிவிட்டுப் பிளிறும் ஒரு டைனோசரின் உற்சாகத்தை அப்போது நான் அடைந்தேன்.

ஜே.கே

அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.

4 Comments

  1. முதல் முதலாக ஜே. கே வை படிக்கிறேன். எழுத்து நடை, கதையை சொல்லிய விதம் எல்லாமே பிரமாதம் ❤️

உரையாடலுக்கு

Your email address will not be published.