/

தண்டவாளம்: காஞ்சனா பிரியகாந்த

தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா - ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

சரியாகச் சொல்வதென்றால் ‘நாம் இருவரும்  இரண்டு தண்டவாளங்களைப் போல என்று நீ சொன்னபோது அதை நான் வெகு சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். “அப்படியென்றால் சத்தியமாக நாங்கள் ஒன்றாகச் சேர்வதும்  உறுதி” என்று தேவைக்கு அதிகமாகவே உருகிக் கொண்டு சொன்னேன்.

ஆனால்,  நீயோ உலகத்தில் உள்ள ஏதோ ஒரு மோசமான காரியத்தை நான் கதைத்துவிட்டதைப்போல உனது  உருளைக் கண்களைப் பெரிதாக்கி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய். அந்தப் பார்வை யாருமற்ற பஸ்ஸில் கடைசி ஆசனத்தில் உட்கார்ந்து செல்லும்போது உருவாகும் திடுக்கிடலான உணர்வைத் தந்தது என்றாலும், நீ தண்டவாளங்களைப் பற்றிச் சொன்னது, மனதிலிருந்த ஒரு பெருஞ்சுமையை இறக்கியிருந்தது. நான் ஒரு வண்டைப் போல சுற்றி சுழன்றபடி கடல் அலைகளில் கால்களை நனைக்க  சென்றேன். ‘இவளுக்குப் பித்து பிடித்து விட்டதோ?’ என்ற மாதிரி நீ என்னை அத்தருணத்தில் பார்த்துக் கொண்டிருந்தாய்.

“ரங்க… ரங்கநாத்த… வாங்களேன், இந்த அலைகளில் கால்களை நனைத்துக் கொள்வோம்…” நான் அலைகளில் நனைந்துக் கொண்டே உன்னை அழைத்தேன். “இந்தக் கடல் நீர் மிகவும் சுகமாக இருக்கின்றது.”

‘உப்பு நீரில் என்ன சுகமிருக்கப் போகின்றது பெண்ணே என்பதைப் போல் நீ உன் வாயை ஒரு பக்கம் சுளித்துக் கொண்டது வேதனையாக இருந்தது.

“ஐயோ… ரங்க வாங்களேன்…” நான் மீண்டும் அழைத்தேன். கடல் காற்றுக்கு இழுபடும்  பாவாடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். மேலே காற்றில் எழும் வெளிப் பாவாடையை விட  நிறம் மங்கிப்போய் தெரியும்  உள்பாவாடையை யாரும் பார்த்து விட்டால் அது வெட்கக்கேடு. இந்த மாதம் சம்பளம் எடுத்தவுடனாவது புதிய உள்பாவாடைக்கு துணி எடுத்து தைத்துக் கொள்ள வேண்டும்.

ரங்க, நீ வரவே இல்லை.  பாவாடையைப் போல  காற்சட்டையும் நனைந்து விடுமோ என்று உனக்கப் பயமாக இருந்திருக்கலாம். ‘ஐயோ பயந்தாங்கொள்ளி.’ உன் மீது கோபம் வந்து பின் மெல்ல மெல்ல தணிய ஆரம்பித்தது.

‘ஐயோ, நீயெல்லாம் ஒரு  பெரிய கவிஞன்…? கடல் அலைகளில் கால் நனைப்பதற்குக் கூட விருப்பமில்லாதவன். பரவாயில்லை. உனக்கு வேண்டுமென்றால் நீ எங்கேயோ பார்த்துக் கொண்டு இரு. நான் விரும்பிய வரைக்கும் அலைகளில் கால்களை நனைத்துக் கொண்டிருப்பேன்.’

உன்னைப் பார்க்காமலேயே கடல் அலைகளுடன் விளையாட ஆரம்பித்தேன். திரைப்படங்களில் காட்டுவதைப் போல நீ பின்புறமாக வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து காதல் பாடல் ஒன்று பாடுவாய் என்று அரைக்கால்வாசி ஆசையொன்று இருந்ததுதான். ஆனால் நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா, இல்லையா என்றுகூட உன்னை அவதானிக்க நான் விரும்பவில்லை.

“சாருலதா, போவோமா?  எனக்கு நண்பர்கள் சிலருடன் சந்திப்பொன்று இருக்கின்றது.   இன்னும் தாமதிக்க இயலாது.”

இதோ நீ அருகில் வந்துவிட்டாய். இவ்வளவு நேரம் கடந்தும் உனது முகத்திலிருந்த எரிச்சல் கொஞ்சமேனும் குறையவில்லை. ஆனாலும் பபா நாடகத்தில் வரும் உபேக்ஷாவையும் அமிலவையும் போல உனது குச்சியான  கரங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கடற்கரையில் சுற்றிக் கொண்டிருக்க நான் ஆசைப்பட்டேன். திடீரென கடல் நீரை கைகளில் அள்ளி பகிடியாக உன் மீது வீசியெறிந்தேன்.

“உனக்கு மண்டைப் பிழையா ஓய்…? நான் எப்படி இப்படியே றோட்டில் போவது? மூளை இல்லையா? விசரி. நீ வேண்டிய வரை இங்கேயே இரு. நான் போகின்றேன்.” என்றவாறே நீ தனியாக சென்று கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு வந்த சிரிப்பினை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

“ரங்க… கவிஞர்களுக்குக் கோபம் வரக் கூடாது.” பின்னாலேயே உரக்கக் கத்தினேன்.

நீயொரு பல்கலைக் கழக மாணவனாக இருந்தாலும், மனச்சாட்சியே இல்லாமல் ஒருத்தியைத் தனியே விட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கடற்கரையென்பது நல்ல இடமல்ல என்று உனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் வயதானவளும் அல்ல. ஓர் இளம் பெண். உனக்கது தெரியும். அதனாலென்ன.. கடற்கரை, நான் காணாமற்போய்விடுவேனோ என்று அஞ்சுகின்ற ஓர் இடமே அல்ல.

ரங்க, உனக்குத் தெரியாது.  நாங்கள் வளர்ந்ததே கடலோடுதான். எங்கள் வீடு எகொட உயன ஸ்டேஷனுடன் இணைந்தே இருந்தது. கடலுக்கும் தண்டவாளத்திற்கும் நடுவில்தான் வளர்ந்து பெரியவர்களானோம். அந்தக் கடற்கரைதான் விளையாட்டு மைதானமாக இருந்தது. காதுகளுக்குப் பக்கத்திலேயே ரயில் சென்றாலும் எங்களுடைய கண்கள் விழித்துக் கொள்ளாத அளவுக்கு ரயில்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டிருக்கின்றோம்.

கடற்கரை விளையாட்டு சலித்ததும்,  நாங்கள் தண்டவாளத்தின் மீது தாவி  விளையாடத் தொடங்குவோம். நீண்ட தூரத்திற்குத் தண்டவாளத்தில் தடுமாறி விழாமல் நடப்பவர்கள்தான் வெற்றியாளர்கள். குச்சிகளைத் தாண்டுவதற்கு பதில் நாங்கள் பெரிய சிலிப்பர் கட்டைகளைத் தாண்டினோம். ஒரு கட்டையை விட்டு அடுத்த கட்டையில் பாய்வது ஒன்றும் இலகுவானதல்ல. ஆனால் எங்களுக்கு அது தான் சிறப்பான விளையாட்டு. அந்த விளையாட்டுக்கள் அனைத்திலும் வெற்றிப் பெறுபவளும் நான் தான்.

சில நாட்களில் நாங்கள் அந்த தண்டவாளங்களின் மீது உட்கார்ந்துதான் பாடங்களைப் படிப்போம். அதனால்தான் தண்டவாளம் என்று நீ உன்னையும் என்னையும் விபரித்தபோது சந்தோஷமாக இருந்தது.

தண்டவாளங்கள் சிலிப்பர் கட்டைகளினால் இணைக்கப்பட்டிருக்கின்றன. சிலிப்பர் கட்டைதான் தண்டவாளத்தின் கரங்கள்.  நான் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் ஸ்டேஷனில் நடந்து கொண்டிருந்தபோது ஒன்றாக சேர்த்து அருகாமையில் இணைக்கப்பட்டிருந்த இரண்டு தண்டவாளப் பாதைகளைப் பார்த்தேன். அன்றுதான் தண்டவாளங்களும் இணைகின்றன என்று முதன்முதல் அறிந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன் என்பதை உனக்குச் சொல்ல விரும்புகிறேன். அதனால் நாங்கள் இருவரும் ஒன்றிணைவது நிச்சயம்.

நான் கடல் அலையில் கால்களை நனைப்பதனை நிறுத்திவிட்டு தண்டவாளத்தின் மீது பெரும் நிம்மதியுடன் தாவினேன். நீ இருந்திருந்தால் கைகளைக் கோர்த்துக் கொண்டு தண்டவாளத்தின் இரு மருங்கிலும் நடந்திருக்கலாம் என்ற நினைப்பு வந்தது. ரங்க, நீ கவிஞன்தான் என்றாலும், அழகுணர்ச்சி இல்லாதவன். ஒரு நாள் இதைச் சொன்னதும் ஏதோ உன்னைத் தண்டவாளத்தில் கழுத்தை வைக்க வா என்று கூப்பிட்டது போல என்னைப் பார்த்தாய்.

நீ ஒரு கவிஞன் என்று தெரிந்ததும் எனது நண்பிகள் எல்லோருமாகச் சேர்ந்து, ஆகக் குறைந்தது நீ எனக்கு ஒரு காதல் கவிதையாவது எழுதியிருக்கிறாயா என்று கேட்டு கேலி பேசினர். எங்கே சொல் பார்ப்போம் ரங்க, எனக்காக ஒரு கவிதையாவது நீ எழுதியிருக்கின்றாயா? யுத்தம் பற்றித்தான் எழுதுகிறாய். பிரபாகரனின் மரணத்திற்காக ஏன் நீ இவ்வளவு தூரம் அதிர்ந்து போயிருக்கின்றாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

தமிழ் மக்களுக்கு அநீதி நடக்கின்றது என்று தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதுகின்றாய். யுத்தத்தினால் எல்லோருக்கும் தானே அநீதி நடக்கின்றது என்று நான் முட்டாள்தனமாகக் கேட்ட கேள்விக்கு உனக்கே கூடச் சரியாக விளங்காத வார்த்தைகளுடன் மிக நீளமான பதிலை எனக்குச் சொன்னாய். இனவாதி ஆகாதே என்று  அச்சுறுத்தினாய்.

நீ ஒரு வீரனைப் போலத்தான் எனக்கு தெரிந்தாய். நானும் பிரபாகரன் சரியானவர் என்று எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தேன்.  வெள்ளவத்தைக் குண்டுவெடிப்பில் இறந்த ஒரு தம்பியின் தாயார் எனது பகுதியிலேயே வசிக்கின்றார். நீ எனக்குச் சொன்னவற்றை அவருக்கு நானே கூறுவது போல சொன்னேன். எனது கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அவர் என் அம்மாவை ஞாபகப்படுத்தி நல்லவிதமாக நாலு வார்த்தை சொன்னார்.  நான் அவரை இனவாதி என்று கூறி விட்டு வந்தேன்.

ரங்க,  நீ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு முரண்பாடான கதைகளைச் சொல்கிறாய். இனவாதி என்றால் என்ன என்று புரியாததால் உன்னிடம் அது பற்றிக் கேட்டேன். தன்னுடைய இனம்தான் சிறந்தது என்று கூறுபவர்கள் இனவாதிகள் என்று கூறினாய். பிறகு, தனது இனம் சிறந்தது என்று கூறுவதற்காக ஒருவரை இனவாதி ஆக்கிவிட முடியாது, என்றாலும் தனது இனத்தைத் தலை மீது வைத்துக் கொண்டு மற்ற இனங்களை விமரிசிப்பவர்கள் இனவாதிகள் என்று சொன்னாய். என்னிடமோ கேட்பதற்குப் பல கேள்விகள் இருந்தன. நீ கெட்டிக்காரன். எனது கவிக் குஞ்சுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்.  

“இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி உனக்கு புரியாது.” நீ உனது மெலிந்த முகத்த்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கூறினாய்.

“எதுவானாலும் ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் யுத்தம்  நடந்தது.” நான் வெளிப்படையாகக் கூறினேன்.

“இது என்ன விசர்க்கதை?” என்னை ஒரு பைத்தியக்காரியைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே கேட்டாய்.

“உன்னைக் கவிஞனாக்கியது யுத்தம் தானே…”

இதை ஒரு பெரும்குற்றமாக எடுத்துக்கொண்டு என்னுடன் மேலும் ஒரு வாரம் கோபித்துக் கொண்டாய்.

‘ரங்க, எப்பொழுதும் ஒரே விடயத்தைப் பற்றி எழுதிக்கொண்டிருக்காமல் இந்தத் தண்டவாளங்கள் பற்றியும் அழகிய கவிதையொன்றை எழுதேன்.’ என்று உன்னைப் பார்த்து சொல்லத் தோன்றியது. சிலிப்பர் கட்டைகளும் கவிதை எழுத பொருத்தமான தலைப்புத்தான். பாதங்களின் அடியில் படிந்திருந்த கடல் மண்ணை சிலிப்பர் கட்டைகளின் மீது தட்டிக்கொண்டே நினைத்துக் கொண்டேன்.

நீ மீண்டும் கவிஞனாகி விட்டாய். இதோ நீ இப்பொழுது பெண்களுக்காக கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டாய். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவை பெண்களின் தன்மானத்தினை பாதுகாக்க நீ எழுதும் கவிதைகள். அவற்றை நான் மிகவும் நேசிக்கின்றேன். நீ எனது காதலன். எனக்கு பெருமையாக இருக்கின்றது ரங்க.

உனது கவிதைகளில் நான் மயங்கியிருந்தேன். ‘நானும் கவிதைகளை எழுத வேண்டும்.’ உன்னைக் காணும் ஒவ்வொரு வேளைகளிலும்  நான் அப்படி நினைத்துக் கொள்வேன்.

பிறகு ஒரு நாள் நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அன்றைய தினம் புது உள்பாவாடையை அணிந்திருந்தேன்.

“சாரு, உன்னுடன் தனியாகப் பேச ஆசையாக இருக்கின்றது.”

அன்றுதான் நீ என்னிடம் ஒரு கவிஞனாக, கருணையுடன் பேசியிருந்தாய். ஆனால் கடவுளே இனியும் தனியாகப் பேச என்ன இருக்கின்றது?

“இன்று வரை  நாம் இருவரும்  தனியாகத் தானே பேசிக் கொண்டிருக்கின்றோம்.”

“இல்லை சாரு செல்லம்,  யாருமில்லாத இடத்திற்கு…  அங்கு நாம் செய்கிற காரியங்களும் பேசுகிற விடயங்களும் யாருக்கும் தெரியாது.”

(எப்படியும் நாம் இருவரும் ஸ்பீக்கர் போட்டு கதைக்காததினால் நாம் கதைக்கும் விடயங்கள் எவருக்கும் தெரியாது தான்.)

நீ உனது முகத்தை எனது முகத்திற்குள் பதித்துக் கொண்டு கேட்டாய்.

உண்மையைச் சொன்னால் உன் வாய் நாற்றத்தில் திக்குமுக்காடித் தான் போனேன். நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீயோ நான் வெட்கத்தில்தான் அப்படி செய்கின்றேன் என்று நினைத்துக்கொண்டாய். மீண்டும் எனது முகத்தை உன் பக்கம் திருப்பிக் கொண்டாய்.

“என்ன சொல்கிறாய் சாரு..?”

எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

“நீ காலையில் ஒன்றும் சாப்பிடவில்லை தானே..?”

கவலைப்படுவதைப் போல முகத்தை அடுத்த பக்கம் திருப்பிக் கொண்டேன். ஆனால் என் உள் மனது நீ பல் துலக்கவில்லை என்று கூறிக்கொண்டிருந்தது.

“நீ இன்னும் ஒன்றும் சாப்பிடவில்லையென்றால்  சைவ கடைக்கு சென்று உளுந்துவடை சாப்பிடுவோமா? எனக்கு நேற்று சம்பளம் கிடைத்துவிட்டது..” நானே யோசனை ஒன்றை முன்வைத்தேன். ஒரு போதுமே நீ நிராகரிக்காத யோசனை அது என்று எனக்கு தெரியும்.

“ரங்க, கவிதை எழுதுபவர்கள் எல்லோருமே  உன்னைப் போல தான் இருப்பார்களா?’

“கவிதை எழுதுபவர்களும் மனிதர்கள் தானே சாருலதா..”

“ஐயோ ரங்க,  இந்த வசனமும் ஒரு கவிதையைப் போல் அல்லவா இருக்கின்றது…”

“வேலை ஒன்றைத் தேடிக் கொள்ள வேண்டும்…”

“எங்கே? பேப்பரிலா?”

“இல்லை..”

“அப்போ…?”

“எங்கேயாவது, கெம்பஸிலிருந்து வெளியேறும் வரை செய்வதற்கு”

“அப்போ கவிதை எழுத மாட்டியா…?”

“கவிதை எழுதவும் உயிர் வாழ்ந்திருக்க வேண்டுமே?”

“நீ எங்கேயோ போவோம் என்று என்னை அழைத்தாய் தானே…?”

“ம்ம்.. உனக்கு நேற்று சம்பளம் கிடைத்ததாகக் கூறினாய் அல்லவா..?”

“அதை விடு,  நான் ஒரு கவிதை எழுதியிருக்கின்றேன்..”

“எனக்கு தெரிந்த இடம் ஒன்று இருக்கின்றது. அவ்வளவு விலையும் இல்லை..”

“ஒவ்வொரு இடங்களுக்கும் என்னால் வர முடியாது! இங்கே கேளேன்,  நான் ஒரு கவிதை எழுதியிருக்கின்றேன்..”

உனது முகம் கறுத்துப் போய்விட்டது.

“நான் கவிதை ஒன்று எழுதியிருக்கின்றேன்..”

அந்தக் கவிதையை உனக்குக் காட்ட விரும்பினேன்.  அன்றைக்கு முதல் நாள் தான் தண்டவாளத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

“உனது விசர்க் கவிதையை எங்கேயாவது தூக்கி எறி.”

நீ எனது முகத்தில் கொடிய விஷ வாயுவைப் பாய்ச்சினாய். யார் என்ன சொன்னாலும்  ஒரு கவிதாயினி ஆக வேண்டும் என்ற முடிவில்  நான் அப்பொழுதும் உறுதியாக இருந்தேன்.

நீ செய்த வேலை என்னைக் கடுமையாகக் கோபப்படுத்தியது. எனக்கும் கோபம் வரும் என்பதனை நீ தெரிந்து கொள்ள வேண்டும் ரங்க.

“நீ சொன்னது சரி… நாம் இருவரும், சரியாக சொன்னால் தண்டவாளம் போல தான்.”

“சாரு, கோபமா..?”

சைவக் கடை அருகாமையில் வந்துவிட்டது. ஆனால் உனக்கு சாப்பிட எதுவும் நான் வாங்கித் தரப் போவதில்லை.

“எனக்கு சாப்பாடும் தேவையில்லை. பசியும் இல்லை. நான் போகிறேன். எனக்கு லேட் ஆகுது..”

“எங்கே போகிறாய்..?”

“ரயில் வருகுது… தள்ளிப் போ”

“சாருலதா..”

ரயில் சென்று விட்டது.

நானும் ரங்கவும் அதற்கு பிறகு ஒருபோதும் பேசிக் கொள்ளவே இல்லை.

காஞ்சனா பிரியகாந்த

சிங்கள மொழியில் அறியப்பட்ட இளம் எழுத்தாளர். சிங்களம், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். KSP பதிப்பகத்தினை நிறுவி நடாத்தி வருகிறார்.

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. எளிய சாதாரண கதை ஆனால் மனதை தொடும் கதை, இறுதி முடிச்சு மரணமா? இல்லையா? என யோசிக்க வைக்கிறது.மொழி பெயர்ப்பு அருமை. இருவருக்கும் வாழ்த்துகள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.