/

முகை: லாவண்யா சுந்தரராஜன்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

“விநாயகனே வினை தீர்ப்பவனே…’’ ஶ்ரீராம் திரையரங்கத்திலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு தா.பேட்டை நெசவாளர் காலனியருகே இருந்த மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளின் கவனத்தை ஈர்த்தது.

“ராம் கொட்டாயில பாட்டு போட்டுட்டான்டி, மணி ஆறேகால் மேல ஆச்சுடி. அம்மா தேடுவாங்க” என்று தன் வீடிருக்கும் குறுக்குச் சந்தைப் பார்த்தாள் மல்லிகா. அவள் அம்மா கூட்டு வீட்டுக்கு வெளியே வந்து தலையை மைதானத்தை நோக்கித் திருப்புவது தெரிந்ததும் வேகமாய் ஓடத்தொடங்கினாள்.

 ஆடிக்கொண்டிருந்த சில்லாங்கல் ஆட்டத்தில் ஜெயிக்கும் நிலையில் இருந்த சுதாவுக்குப் படுகோபம் வந்தது. “இந்த பிள்ள எப்பவும் இப்படி தான் நான் ஜெயிக்கிறத பார்க்க சகிக்காது. நாளைக்கு முத ஆட்டம் நான் ஆடிறேன் பிடிவாதமா சொல்லிடனும்” என்று முணுமுணுத்தபடி ஆட்டத்தை நிறுத்தினாள்.

 ஏற்கெனவே தோற்றுவிட்டு அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாதவி “என்னடி முணுமுணுங்கிற” என்றாள். இருவரும் தத்தம் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

வழியில் தலையாட்டிச் சிரித்துக்கொண்டிருந்த தாத்தாத் தலைப்பூ. மெலிந்து நீண்ட காம்பில் மேலே சிறிய வடிவ சூரிய காந்திபோல மலர்ந்திருந்தது . “ஏ அங்க பாருடி தாத்தா தலைப்பூ” என்ற சுதா அந்தக் கொடிகளைப் பிடுங்கினாள். “தாத்தா தாத்தா காசு குடு தர்லைன்னா உன் தலய வெட்டுவேன்” என்று சொல்லி அந்தப் பூவைத் தட்டினாள். அது வெட்டப்பட்ட தலைபோல உருண்டு ஓடியது. பூத்துச் சிறுசிறு நட்சத்திரப் பஞ்சு போலிருந்த தாத்தாத்தலைப் பூச்செடியைக் கையில் எடுத்தாள் மாதவி.

“அது நல்லா பூத்த தாத்தாத்தலை வெட்டினா விட்டாது”

“இத ஊதி விளையாடலாமே” என்று பழிப்புக் காட்டினாள்.

சுதாவுக்குக் கோபம் வந்தது. சுதா வீட்டுக்கு வரும் வழியில் சின்னஞ்சிறு கற்களை எத்திக்கொண்டே வந்தாள். தெருவில் பாவு போட்டு முடிந்திருந்த அடையாளங்கள் இருந்தன. அங்காங்கே பசை சிந்தியிருந்த வெண்புள்ளிகளில் கால் வைத்து வரைந்து கோலம் போடுவதுபோலச் செய்துகொண்டிருந்தாள் மாதவி. மாதவி வீடும் சுதா வீடும் அருகருகே இருந்தது. மல்லிகா அவர்களைவிட ஒருவயது மூத்தவள் மூவரும் ஒரே பள்ளியில் படித்தனர்.

“ஏய் குட்டி பிசாசே எங்கடி ஊர் சுத்திட்டு வர, ஶ்ரீராம்ல கடைசி பாட்டு போட்டு உள் ரெக்காடு போட்டாங்க, எங்க போன இவ்வளவு நேரம்”

“அய் அக்கா எப்ப வந்த காலேஜ்ல இருந்து”

“ஏய் என்னடி கால்ல ரத்தம்”, என்று கேட்டதும்தான் காலைப் பார்த்தாள் சுதா. “லைட் கம்பத்துல மோதிட்டேன்க்கா” என்று சொல்லிச் சிரித்தாள். பதறிப்போன அக்கா சுதாவின் கையிலிருந்த தாத்தாச் செடியின் தலையைக் கசக்கி அவளுடைய நகத்தில் விட்டாள். கல்லில் அடிபட்டுக் கொஞ்சம் பெயர்த்திருந்திருந்த கால் விரல் நகம் அருகே திகுதிகுவென்று எரிவது போலிருந்தது. நல்லவேளை நான் கல்லெத்தி விளையாடி வந்த தைச் சொன்னா அக்கா நல்லா திட்டிடுவா, ஆனா எப்படிக் காயம் ஆச்சு என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

“என்ன யோசனை, அம்மா பார்த்தா முதுகுல நாலு வைப்பாங்க. ஓடி போய் கால கழுவிட்டு வா.”

வேகமாய் கிணற்றடிக்கு ஓடினாள் சுதா. அம்மா வண்ணாத்தியிடம் சுதாவின் வெள்ளைச் சீருடையைக் காட்டி “என்ன வெள்ளையம்மா என் பிள்ள உடுப்பை ருதுவானங்க வீட்டுக்கு எடுத்துட்டுப்போய்க் கொடுக்காதேன்னு உனக்கு சொல்லியிருக்கேன்ல, இது வெள்ள உடுப்பு வேற. இதுல பொட்டுப்பொட்டா கற பட்டிருக்கு பாரு”

“அய்யா அம்மா உங்கூட்டுத் துணிய தீட்டு வீட்டுக்கெல்லாம் எடுத்துட்டு பொவேனுங்கலா… அதுவும் இது அர பாவாடம்மா. வெள்ளத் துணி வேற அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேனுங்க. பாப்பா பெரிய மனுஷியாவற நேரம் வந்துடுச்சி”

“இந்த வாயக் கழுவு. என்ன வார்த்த சொல்லிட்ட, அதுக்கென்ன இப்ப தான் பன்னெண்டு நடக்குது. விளையாட்டுப் பிள்ள. இன்னும் ரெண்டு வருஷமாவது ஆயிடாது. ஏற்கனவே வயசுக்கு வந்து இருக்கறதோட பொறுப்பே தல மேல கிடக்கு. நீ வேற…”

“நம்ம காலம் மாறி இல்ல தாயி. இப்பல்லாம் பிள்ளஹ பதிமூணு வயசுல ஆயிடாறாங்கம்மா. அதிகம் சாயங்காலமெல்லாம் வெளில அனுப்பாதீங்க. வழியிலயே எங்கேயும் ஆயிட்டா, காத்து கருப்பு அடிச்சிக் கலங்கிப் போயிடும். அப்படித்தான்… கோடி வீட்டு மரகதகத்தம்மா பொண்ணு இல்ல…”

“அய்யோ நீ ஊரு கத, பேய் கத எல்லாம் சொல்லாத. பீதியா இருக்கு.  நான் சொல்லிட்டேதான் இருக்கேன். அதெங்க கேட்குது சாயங்காலமான சில்லாங்கா ஆட போயிட்டு. கொட்டாயில கடைசிப் பாட்டுப் போடும்போதுதான் வருது.”

“பாத்துக்கங்க”

சுதாவுக்குத் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பது புரிந்தது. சாயுங்காலம் இருட்டில் போனா எதுக்குக் காற்றுக்கருப்பு அடிக்குமென்று குழப்பமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. இனிமேல் மல்லிகா வுக்கு முன்னர் கிளம்பி வீட்டுக்கு ஓடி வந்து விட வேண்டுமென்று நினைத்துக் கால் விரல்களைத் தேய்த்துக் கழுவினாள். வரும்போது இனி கல்லெல்லாம் எத்தக்கூடாது. காயம் பெரிதாகப் பட்டு நிறைய ரத்தம் வந்தால் என்று நினைக்கும்போதே பயமாக இருந்தது. காயத்திலிருந்து உதிரம் கசிவது குறைந்திருந்தது. குளிர்ந்த நீர் பட்டதும் சுர்ரென வலித்தது. எப்படி அடிபட்டிருக்கும் என்று மறுபடி யோசித்தாள். அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. அப்போது கிணற்றடிக்கு வந்து முதலில் பயத்தம் பருப்பு மாவில் முகத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டு, பின்னர் லக்‌ஸ் சோப்பு போட்டு அத்தனை முறை முகத்தைத் தேய்க்கும் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு இத்தன வாட்டி முகத்த போட்டு தேய்க்கிறக்கா”

“ஹும் மண்ணாங்கட்டி. உள்ள போய் வீட்டுப்பாடம் எழுதுடி”

அவள் வீட்டுக்குள் போகாமல் அக்காவையே பார்த்துக்கொண்டு நின்றாள். அக்கா மறுபடி மறுபடி முகத்தைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள். இன்னும் எவ்வளவு நேரம்தான் கழுவுவாள் என்று பொறுமை நீங்கி அங்கிருந்து வீட்டுக்குள் நுழையும்போது “ஏய் சாந்தா சோப்ப கரச்சது போதும் சட்டுபுட்டுன்னு மூஞ்சி கழுவிட்டு, தல சீவி விளக்கேத்திட்டு வந்து இந்த வெங்காயத்த உரி” என்றாள் அம்மா.

“ஏய் சுதா, நீ இன்னிக்கி கொஞ்சம் வெங்காயம் அக்காகூட உரி என்ன?”

“வெவ்வெ போ நீ உரி” என்று சொல்லிக்கொண்டே உள்ளே ஓடினாள் சுதா.

“ஏய் நில்லுடி நான் உனக்கு கணக்கு சொல்லிக் குடுக்கறேன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடி”

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “பத்து வெங்காயம்தான் உரிப்பேன். மீதி நீதான் உரிக்கணும்”

“சரி பட்டு… அக்கா தலைவாரிட்டு, துளசிக்கு விளக்கு வைச்சிட்டு வர வரைக்கும் உரிச்சாப் போதும்”

அக்கா இன்னும் முகத்தைக் கழுவி முடிக்காமலே சுதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். நான்காம் முறையாகக் கொஞ்சம் பச்சைப்பயறு மாவைப் பூசிக் கழுவினால், மீண்டும் ஒருமுறை சோப்பைத் தேய்த்தாள். அதற்குள் வாளியில் தண்ணீர் தீர்ந்துபோயிருந்தது, கண்களில் இருந்த சோப்பு நுரையை வழித்து எறிந்தாள், “சுதா, இங்க வந்து கொஞ்சம் தண்ணி எறச்சி குடுடி”

“போக்கா சும்மா சும்மா வேலை வைக்கிற நானே கணக்கு படிச்சிக்கிறேன்”

“ஏய் கையெல்லாம் சோப்புடி, கொஞ்சம் தண்ணி எடுத்து குடி, கண்ணு செல்லமில்ல”

ஏதோ முனகிக்கொண்டே வந்து தண்ணீரை இறைத்துக் கொடுத்து உள்ளே சென்று மறுபடி வெங்காயத்தை உரிக்கத் தொடங்கினாள். அவள் சொன்ன கணக்கும் மேல் வெங்காயத்தை உரித்து முடித்தும் அக்கா இன்னும் தலைவாரிப் பூச்சூடி முடிக்கவில்லை.

“சுதா ஓடிப்போய் பாலு ஸ்டோர்ல கொஞ்சம் கடுகு வாங்கிட்டு வா”

“போம்மா காலைல கல்லுப்பு வாங்கிட்டு வரச் சொன்ன இப்ப கடுகு வாங்கிட்டு வரச் சொல்ற, அக்காவ வாங்கிட்டு வரச் சொல்லு”

“ஏய் அவ கிடக்கிறா சோம்பேறி. நீ சின்னவதானே சிட்டாட்டம் ஓடிட்டு வா”

இந்த அம்மா இப்படித்தான் எப்போது பார்த்தாலும் சுதாவை சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு என்று ஒரு நாளைக்கு நாலு வெளி வேலைகளைக் கொடுப்பாள். வீட்டில் எல்லோரும் எங்காவது ஒன்றாகக் கிளம்பினால் கண்ணுபடுமென்று, சுதாவை முன்னால் ஓடிச் சொல்லிவிட்டு, அக்காவுடன் மட்டும் சிரித்துப் பேசிக்கொண்டு நெருக்கமாக வருவாள். ஆட்டோவில் உட்காரும் போதுகூட நீ சின்னவதானே என்று கம்பியில் அமர வைப்பாள். என்னை ஏன் அக்காவுக்கு முன்னர் பிறக்க வைத்திருக்கக் கூடாது கடவுளே என்று சுதாவுக்கு எப்போது பார்த்தாலும் கோபம் கோபமாக வரும். ஆனாலும் ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் ஒரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக்கொள்ளும் சலுகையிருந்தது. அது ஒன்று அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல். சிறிய ஆரஞ்சுச் சுளை போலவே இருந்த ஆரஞ்சு மிட்டாயை வாயில் அதக்கிக்கொண்டு கோன் வடிவில் காகிதத்தில் சுருட்டிக் கொடுக்கப்பட்ட கடுகுப் பொட்டலத்தைப் பத்திரமாய் பிடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடினாள். வழியில் முதல்நாள் ஒட்டியிருந்த ’அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படச் சுவரொட்டி கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது, அதன்மேல் ’தங்கமகன்’ சுவரொட்டியை ஒட்டியிருந்தார். ஒரு நிமிடம் அந்தச் சுவரொட்டியைப் பார்த்தவள், சட்டெனத் தலையை ஆட்டிக்கொண்டு கடுகுப் பொட்டலத்தை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். தா.பேட்டை நாமக்கல் சாலைக் கடைத் தெருவிலிருந்து வீட்டுக்குப் போகும் சாலை நான்கு முறை ’ட’ வடிவில் மடங்கும். போன முறை அம்மா அவசரமாய் உளுந்து வாங்கி வரச் சொன்னபோது இப்படிச் சுவரொட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தபோது எதிரே வந்த வண்டி மேலே மோதிவிடுமோ என்று பயந்து ஒதுங்கியதில் கல் தடுக்கிக் கீழே விழுந்து உளுத்தம்பருப்பில் பாதியை நிலத்தில் கொட்டிவிட்டாள். வீட்டுக்கு வந்து பாதிப் பொட்டலத்தைக் கொடுத்ததும் இல்லாமல் “கடையில் அவ்வளவுதான் கொடுத்தார்கள்” என்று பொய்யும் சொல்லிவிட்டாள். விறுவிறுவென்று கடைவரை போயவந்த அம்மா அவள் முதுகில் நான்கு அடி போட்டாள். “இனிமே பொய் சொன்ன சூடு போட்டுடுவேன்” என்று மிரட்டினது நினைவுக்கு வந்தது. “அய்யோ இனிமே போஸ்டரே பாக்கமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள்.

வீட்டுக்குக் கடுகைப் பத்திரமாக எடுத்துவந்த சமயம் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு பின் முற்றத்திலிருந்த துளசிமாடத்துக்குச் போனாள் அக்கா. அகல் சுடரில் அவள் முகம் மிக அழகாக இருப்பதுபோலத் தோன்றியது. அக்கா போல நிறைய முறை சோப்பும் பயறுமாவும் தேய்த்தால் தன் முகமும் இப்படி மெருகேறிவிடுமோ என்று நினைத்தாள். ஆனால் அக்கா அளவு பொறுமை அவளுக்கு இருக்காது. அக்கா காது குடைந்தால் ஊக்கு நிறைய குரும்பி வரும். அவள் தினம் காது குடைந்து பார்ப்பாள் ஒருநாளும் அவ்வளவு வரவே வராது. ஊக்கு வளையத்தில் அரக்கு நிறந்தில் மெல்லிய பட்டையாக அப்பியிருக்கும் குரும்பியை அக்காவிடம் காட்டிக் கேட்டால் ‘தினம் குடைஞ்ச எப்படி வரும்.  நானெல்லாம் மாசகணக்கா காதை நோண்டவே மாட்டேன்’ என்பாள். அதெப்படி மாசகணக்காகக் காதைக் குடையாமல் இருக்க முடியும்?

வீட்டுக்குள் வந்ததும் “அக்கா கோவிலுக்கு போகனும்ன்னு சொல்றா, துணைக்குக் கூடப்போயிட்டு வா”

“எனக்கு வீட்டுப்பாடம் எழுதனுமே”

“அவளுக்கு அடுத்த வாரம் முக்கியமான பரிச்சை இருக்காம். நாளைல இருந்து ஐஞ்சாறு நாள் அவளால கோவிலுக்குப் போக முடியாது. இப்ப போயிட்டு வந்துடுங்க”

“ஏன் நாளைக்கு போக முடியாது”

“சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்காத சுதா.”

“அக்கா தனியா போயிட்டு வரட்டுமே. என்னை ஏன் போவ சொல்ற. நான் இப்ப தனியாத்தானே கடைக்கு போனேன்.”

“அவ பெரிய பொண்ணுடி தனியா போக முடியாது. எனக்கு வேலை இருக்கு. வெங்காய சாம்பார் வைச்சி வடம் வறுத்து வைக்கிறேன். சுதாவுக்கு ரொம்ப பிடிக்குமே. வந்ததும் சாப்பிடலாம்”

“அவ கல்லேஜ் போயிட்டா, பெரிய பொண்ணுன்னு ஏன் தனியா போகக் கூடாது”

“அடியேய் கேள்வி கேட்டு நேரத்த ஓட்டாம இப்ப கிளம்பறய இல்ல முதுகுல போடட்டா”

“அம்மா சும்மா இரும்மா. நீ வா செல்லம். கோவிலுக்குப் போனா சாமி நல்ல படிப்பு தருவாரில்ல…”

“குடை எடுத்துகிட்டுப் போங்க. சென்னையில புயல் கர கடக்கும்போது எல்லா எடத்துலையும் மழ வரும்ன்னு சொல்லியிருக்காங்க”

முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அக்காவோடு கிளம்பினாள் சுதா. அவளுடைய குடை வானவில் போல பல நிறப்பட்டைகளோடு இருக்கும். அப்பா அவளுக்குக் கடந்த வருட முழுப்பரீட்சையில் முதல் மதிப்பெண் எடுத்தபோது வாங்கிக்கொடுத்த குட்டிக் குடை. அக்காவுக்கு அதன்மேல் எப்போதுமே கண். அந்தக் குடை வாங்கிவந்த அன்றே “நானும் எத்தன வாட்டி ஃபர்ஸ்ட் வாங்கியிருக்கேன் எனக்கு ஏன் இப்படி எதுவும் வாங்கித் தரல” என்று அப்பாவுடன் சண்டை பிடித்தாள். சுதா வேகமாய் போய் அந்தக் குடையை எடுத்துக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டாள். வீட்டில் பொதுவாய் எல்லோருமே உபயோகப்படுத்தும் கருப்புக் குடைகளில் ஒன்றை அக்கா எடுத்துக்கொண்டாள். கோவில் போகும் வழியில் மழை பிடித்துக்கொண்டது. குடையைத் திறந்த அக்காவுக்கு அந்தக் குடையின் ஒரு கம்பி உடைந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. எதிர் வீட்டு சுரேஷ் அண்ணா வருவது தெரிந்ததும் அவள் முகம் பிரகாசமாகியது. சுதாவின் கையிலிருந்த குடையைப் பிடுங்கி அவள் விரித்துக்கொண்டாள். “இந்தக் குடையில கம்பி உடைஞ்சியிருக்கு நீ சின்னவதானே நீ இத பிடிச்சிக்க” என்று விறுவிறுவென்று கோவிலுக்கு நடந்தாள். வீட்டுக்கு வந்ததும் வராததுமாக “அக்கா என் குடைய பிடுங்கிக் கிட்டா, இதுக்குத்தான் நான் அவகூட போகலன்னு சொன்னேன்ன்னு” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள் சுதா. “அவ பெரிய பொண்ணு டி, இவ்வளவு அழகா ட்ரஸ் பண்ணிட்டு உடைஞ்ச குட பிடிச்சிட்டு இருந்தா நல்லாவ இருக்கும்”  என்று சொல்லிக்கொண்டே, “கிளம்பும்போதே பார்த்து எடுத்துட்டு போயிருக்கலாம் இல்ல தங்கம்” என்று அக்காவைக் கொஞ்சினாள் அம்மா. ‘நான் சின்னப் பொண்ணுன்னா என் கையில மட்டும் உடஞ்ச குட அழகாவா இருக்கும் அம்மா எப்போதுமே அக்காவுக்குத்தான் சப்ப கட்டுவாங்க. அக்கா எப்படி என் குடய பிடிங்கிக்கலாம்” என்று ரொம்ப கோபமாக வந்தது. சின்னவளாக இருப்பது அவமானமாக இருந்தது. மாதவி வீட்டுல எல்லாம் அவ சின்னவ அவ கிட்ட எந்த வம்பும் பண்ணாத என்று அவள் அண்ணனை மாதவியின் அம்மா திட்டுவது சுதாவுக்குத் தெரியும். என் அம்மா மட்டும் ஏன் அக்காவைத் திட்டுவதே இல்லை என்று அழுகையாக வந்தது.

அக்கா வெளியூர் விடுதி ஒன்றில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். அவள் வரும்போதெல்லாம் அம்மா அவளுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும், ஹாஸ்டல்ல பாவம் காய்ஞ்சிதானே போயிருப்பா என்று கவனிக்கும்போது சுதாவுக்கு எரிச்சலாக வரும். அவள் வந்துவிட்டால் சுதாவின் கட்டிலில் அக்காதான் படுத்துக்கொள்வாள். அக்காவுக்கு மூட் நன்றாக இருந்தால் சுதாவை அருகில் படுக்க வைத்துக்கொண்டு கதை சொல்லித் தூக்கவைப்பாள். அப்படியும் விடியும்போது அம்மா அருகில் பாயில் எப்படி கிடக்கிறாள் என்ற மர்மம் சுதாவுக்கு இன்றுவரை தெரியாது. அக்காவிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே “நைட் நீதானே அம்மாகிட்ட போவேன்னு அடம்பிடிச்சே, அப்ப நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைத் தூக்கிக் கொண்டுபோய் அம்மாவிடம் விட்டேன்” என்று சொல்லுவாள்.   சில நாட்கள் போய் அம்மாகிட்ட படுத்துக்கோ என்று விரட்டிவிடுவாள்.

மறுநாள் பள்ளி முடிந்து வந்தவுடன் மல்லிகாவுடன் விளையாட ஓடினாள். மல்லிகா இன்று ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டே மைதானம் வரை சென்றாள், அவள் அங்கேயும் இல்லை. மாதவி மட்டும்தான் இருந்தாள். “வா விளையாடலாம்” என்றபோது “மல்லிகாவுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா போய்ப்பார்க்கலாம் வா” என்று மாதவியை அழைத்தாள். “அவங்க வீட்டுக்கு போனா அம்மா திட்டுவாங்க” என்று சொல்லிப் பயந்துகொண்டே வந்தாள் மாதவி. மல்லிகா வீட்டருகே போனார்கள். அவள் வீட்டில் திண்ணையில் நேற்றுவரை இல்லாத தென்னை ஓலையிலான குடிசை இருந்தது. எதிர்த்திண்ணையில் மல்லிகாவின் பாட்டி அமர்ந்திருந்தாள்.

“மல்லிகா எங்க?”

நமட்டுச் சிரிப்புடன் பாட்டி குடிசையைக் கையைக் காட்டினாள். அதற்குள் சுதாவின் குரல் கேட்டு மல்லிகா எட்டிப் பார்த்தாள். அவள் வழக்கத்துக்கு மாறாக முழுப்பாவாடை அணிந்திருந்தாள். அடர்நீலத்தில் சின்னச்சின்னப் பூக்கள் போட்ட காடாத் துணியால் ஆனது அந்தப் பாவாடை. மேல் சட்டைக்கு மேல் அக்காவைப் போலவே தாவணி அணிந்திருந்தாள். அவள் முகம் அக்காவின் முகம் போலவே பொலிவாக இருப்பது போலிருந்தது என்று சுதாவுக்குத் தோன்றியது. இரண்டு மூன்று முறை சோப்புப் போட்டு முகம் கழுவியிருப்பாள் என்று நினைத்தாள்.

“ஏய் ஏன்டி குடிசைக்குள்ள இருந்து எட்டிப் பாக்கற உள்ள போ” என்று அதட்டினாள் மல்லிகாவின் அம்மா. “என்ன சுதா எங்க இங்க அவ இனிமே விளையாட வரமாட்டா?”

“ஏன்”

“அவ பெரிய பொண்ணாயிட்டா, இனிமே விளையாட எல்லாம் அனுப்ப மாட்டேன்”

“இனிமே வெளிய அனுப்பின தப்பா பேசுவாங்கல்ல” என்றாள் மாதவி.

“நாங்க ஏன் இனி அவள வெளியில அனுப்பப் போறோம்” என்றாள் மல்லிகாவின் பாட்டி.

“கடைக்குக் கூடவா” என்றாள் சுதா.

“அனுப்பமாட்டேன்” என்றாள் மல்லிகாவின் அம்மா

குடிசையுள்ளிருந்து சிணுங்கி அழும் ஓசை கேட்டது. “மல்லிகா அழுவற?”

“ஆமா அவளுக்கு வயிறு வலிக்கிதுன்னு சொல்லிட்டு இருந்தா அதானா இருக்கும்” என்று குடிசை உள்ளே எட்டிப் பார்த்தவள் “சத்தம் வெளில வந்தது அவ்வளவுதான், அதென்ன பாவாடைல கர்மம், நான் தான் பழைய துணி குடுத்தேனே, ஒழுங்க ட்ரஸ் பண்ணிக்கலயா? ஒன்னுக்கு துப்பு கிடையாது”

சரி நாம விளையாட போகலாம் என்று அழைத்த மாதவியிடம் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு, சோகமாய் வீட்டுக்குத் திரும்பி செல்லக் கிளம்பினாள் சுதா. வழக்கமாக அவர்கள் விளையாடும் மைதானம் முழுக்கப் பிள்ளைகளின் சத்தம் நிறைந்திருந்தது. மாதவியும் வேறு வழியில்லாமல் சுதாவுடன் திரும்பினாள். அங்கேயிருந்த கடம்பை மரத்தில் பூப்பந்து போன்ற பூ வளர்ந்திருந்தது. அதை காட்டி “அந்த பூ எவ்வளவு அழகாயிருக்குல்ல” என்று மாதவி சொன்னாள்.  சுதா அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை.

“வயசுக்கு வந்துட்டா ஏன் வீட்டை விட்டு அனுப்பமாட்டாங்க. இவங்க வீட்டுல மட்டுமா யார் வீட்டுலயுமே அனுப்பமாட்டாங்களா?”

“அப்படித்தான் நினைக்கிறேன்”

முன்பொருமுறை மாதவியும் சுதாவும் படிக்கும் வகுப்பில் வேறு ஒரு பெண் திடீரென்று பள்ளிக்கூடத்துக்கு வருவதை நிறுத்தியபோது மல்லிகாதான் அவ வயசுக்கு வந்திருப்பா என்று சொன்னாள். அப்போது மல்லிகாவிடம் “வயசுக்கு வரதுன்னா என்ன?” என்று கேட்டாள் சுதா. “பெரிய பொண்ணாவறது” என்றாள் மல்லிகா.

“பெரிய பொண்ணாவறதுன்னா?”

“பெரிய பொண்ணாவறதுன்ன பெரிய பொண்ணாவறது. எங்க பக்கத்து வீட்டுக்கா வயசுக்கு வந்தப்பறம் அவங்களுக்கு கையெல்லாம் குண்டாயிடுச்சி. முகமெல்லாம் உப்பி கன்னம் மினுமினு ஆயிடுச்சி. மார் எல்லாம் பெரிசாயிடுச்சி” என்று சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. அவள் தீவிரமாய் யோசிப்பதைப் பார்த்த மாதவி,

“என்னடி யோசிட்டே இருக்க, வயசுக்கு வர்த பத்தியா?”

“இல்ல, முன்ன ஒருவாட்டி மல்லிகாபெரிய பொண்ணாயிட்டா கை, கன்னம் எல்லாம் பெரிசாயிடும்ன்னு சொன்னால”

“ஆமா. எனக்கும் அதான்டி சந்தேகம், அவ நேத்து எப்படியிருந்தாளோ அப்படித்தானே இருக்கா, அப்பறம் ஏன் வயசுக்கு வந்துட்டான்னு சொல்றாங்க?”

“எனக்கென்னவோ வேற ஏதோ நடந்திருக்கும்ன்னு தோணுது”

“ஆமாடி மல்லிகா அம்மா சொன்னாங்கல அவளுக்கு வயிறு வலிக்குதுன்னு அழுவுறான்னு”

“எங்கக்கா கூட ஜுரம் வந்து தனியா இருக்கப்ப வயித்த பிடிச்சிட்டு அழுவா”

“பெரிய பொண்ணாயிட்டா வயிறு அடிக்கடி வலிக்குமா?”

“வயிறு மட்டும் வலிக்கும் தோணல, நமக்கு வயிறு வலிச்சா ஜூரம் வந்தா தனியாவா உட்கார சொல்றாங்க. வேற என்னவோ கெட்டது நடக்கும்ன்னு நினைக்கிறேன்”

“அவங்க அம்மா அவளை ஏன் ட்ரஸ் பண்ணிக்கிலயான்னு கேட்டாங்க அவ நல்லாத்தானே ட்ரஸ் பண்ணியிருந்தா”

“ஆமா பழைய துணி குடுத்தேன்னு வேற சொன்னாங்கல. அவ நல்ல ட்ரஸ்தானே போட்டிருந்தா? அவ ட்ரஸ்ல என்ன பிரச்சனை? அவங்க அம்மா ஏன் திட்டினாங்க?”

“அவ பாவடையில ஏதோ தண்ணிபட்டு ஈரமானதுபோல இருந்தது.  அதுக்கா அப்படி திட்டுவாங்க. என்னவோ நடந்திருக்குடி. மல்லிகா முன்ன சொன்னது இல்ல, வேற எதோ அதான் என்னான்னு புரியமாட்டேன்கிது”

சரி வெளிய அனுப்பினா தப்பா பேசுவாங்க உனக்கு எப்படி தெரியும்?”

“போன வாரம் எங்க பக்கத்து வீட்டுக்கா டைலர் மாமா கூட ஓடி போனுச்சில? அப்ப வயசுக்கு வந்த பிள்ளய வீட்டோட வைக்காம வெளிய போக வரன்னு விட்ட, இப்படி நாலு பேர் தப்பா பேசறது போல ஆகும்ன்னு அம்மாகிட்ட நாலாம் நம்பர் வீட்டு பாட்டி சொன்னாங்கடி.” மை

“அப்ப நாம வயசுக்கு வந்துட்டா நம்மலயும் வெளில விட மாட்டாங்கல. விளையாட எல்லாம் முடியாதா” என்று கேட்ட சுதாவின் குரல் நடுங்கியது.

“எனக்கு பயமா இருக்குடி” என்று சொல்லும்போது மாதவி வீட்டு சந்து அருகேயிருக்கும் மருத மரத்திலிருந்து காகம் ஒன்று விர்ரென்று பறந்து வந்து சுதாவின் உச்சந்தலையில் சிறகால் வேகமாக தட்டிவிட்டுப் பறந்தது. பயந்துபோய் வீரிட்டுக் கத்திய சுதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள் மாதவி. மீண்டும் அந்தக் காகம் அவர்களை நோக்கிப் பறந்து வருவது பார்த்தவள், சுதாவை இழுத்துக் கொண்டு ஓடினாள். காகம் அங்கே படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்த நாயைக் கொத்தியது.  அந்த நாய் வினோதமாய் ஊளையிட்டபடி எழுந்து ஓடியது. சுதாவுக்குக் காத்து கருப்பு அடிச்சிட்டா என்று நேற்று வெள்ளையம்மா சொன்னது நினைவுக்கு வரப் பயத்தால் அழுதாள். ”வயசுக்கு வருவது நீ சொல்றது போல ஏதோ கெட்டதுதான் தோணுதுடி நாய் இப்படி சத்தம் போட்டா அம்மா கெட்டதுன்னு சொல்லுவாங்க”

“எனக்கும் ரொம்ப பயமாயிருக்குடி. நாம ரெண்டு பேரும் பெரிய பொண்ணாகவே வேண்டாம்” என்று மாதவி கண்களைத் துடைத்துக் கொண்டு  டாட்டா சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள் மாதவி. கொஞ்ச நேரம் மருதமரத்தையே வெறித்துப் பாத்துக்கொண்டிருந்தாள் சுதா. அவளுக்குள் பயம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. தட்டாம் பூச்சிகள் பறப்பதைப் பார்த்ததும் அதைப் பிடிக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் பெரிய பெண் ஆகிவிட்டால் தட்டான்கூடப் பிடிக்க விடமாட்டோர்களோ என்று குழப்பமாக இருந்தது.  எதையெதையோ யோசித்துக்கொண்டே வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். மண்ணெண்ணெய் கேனோடு வீட்டுக்கு வெளியே வந்த அம்மா “என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட நல்லதா போச்சு… ஓடிப்போய் ரேசன் கடையில சீமெண்ண வாங்கிட்டு வந்துடு” என்றாள்.

“போம்மா அன்னிக்கிக்கூட மாவு மில்லுக்கு டின் குடுத்துட்டு ஸ்கூல்க்கு போவ சொன்ன கை எவ்வளவு வலிச்சது தெரியுமா? நான் போவ மாட்டேன் அக்காவ போ சொல்லு”

“அப்படியே அடி போட்டா பல்லு எகிறிடும். ரேஷன் கடைக்கெல்லாம் வயசுக்கு வந்த பொண்ண அனுப்ப முடியுமாடி கிறுக்கி. முரண்டு பண்ணாம ஓடிட்டு வா. “

“போவ மாட்டேன்”

“வெந்நி அடுப்பு பத்த வைக்க பொட்டு சீமெண்ண கிடையாது. நாளைக்கி உனக்கு வெந்நி கிடையாது. பச்ச தண்ணி தலையோட ஊத்திடுவேன். காய்ச்சல் வந்த நாலு ஊசி போடுங்கன்னு நானே டாக்டர்ட சொல்லுவேன்”

மண்ணெண்ணெய் கேனை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு விறுவிறுவென்று நடந்தால் “நாளைக்கே நான் வயசுக்கு வந்திரனும் சாமி. அப்ப எப்படி என்னை கடைக்கு அனுப்புவாங்க பாக்கறேன்”

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.