/

வெம்மை: உமாஜி

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

அவள் கைகோர்த்து நடந்துகொண்டிருந்தேன். இல்லை, அவள்தான் என் கையைப் பற்றிக் கோர்த்துக்கொண்டாள். திண்மையும் மென்மையும் ஒருங்கே கொண்ட விரல்கள். மிருதுவாகவும் அழுத்தமாகவும் பற்றிக்கொள்ளும்போது எப்போதுமே இளஞ்சூடாக இருக்கும். அது முன்னெப்போதோ நானிருந்த பாதுகாப்பான வெம்மையை உணரச்செய்கிறது. இப்போதும். இந்த வேளையில் அவள் குறித்து நான் எதையுமே நினைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன். 

நான் கிண்டலாக எதையாவது நினைத்துவிட்டால் போதும். அவள் ஒரு பிசாசு. உடனே தெரிந்து கொண்டுவிடுவாள். ஒருவேளை கோபித்துக்கொண்டு போய்விட்டால் அவ்வளவுதான். சமாதானப்படுத்துவது மிகக்கடினம். சற்று முன்பும்கூட அப்படித்தான் மிகுந்த பிரயத்தனத்தின் பின்னரே அழைத்து வந்திருந்தேன். அவள் குறித்து எப்போதுமே நான் நல்லதாக நினைத்துக்கொள்ளும் எதுவுமே அவளுக்குத் தெரிவதில்லை. என் நேசம் புரிந்துகொள்ளப்படுவதில்லை. கிட்டத்தட்ட வாய்மொழி மூலமான நீண்ட விளக்கங்கள், அறிக்கைகள் கொடுத்துத்தான் தெரிவிக்கவேண்டியிருந்தது. ஆனால் கிண்டல் மட்டும், கொடுமையைப் பாருங்கள். காதலியை மனதுக்குள்கூட கிண்டல்செய்ய முடியாவிட்டால் காதலன்கள் நிலை என்னவாகும். பைத்தியம் பிடித்துவிடாதா?

அவள் கோபத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியும். அவள் பயந்து பதட்டமாகி அதிர்ச்சியடைவதுதான் மிகுந்த துயர் கொள்ளவைப்பது. பேச்சை நிறுத்திவிடுவாள். தூரத்தில் பார்வை நிலைகுத்தி, அசைவற்று நின்றுகொள்வாள். வெளிர் மஞ்சள் நிற முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டிக்கொள்ளாது வெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்பாள். இடது கண்ணுக்கு மேலே ஒன்று, வலக்கன்னத்தில் ஒன்று என எப்போதும் தெரியும் மிக மெல்லிய இரு பச்சை நரம்புகள் அப்போது இன்னும் தெளிவாகப் பச்சையேறித் தெரியும். இரு கண்மணிகளும் இலக்கின்றி வேகமாக அசைந்துகொண்டிருக்கும். அந்த ஒவ்வொரு நொடியும் சட்டகம் சட்டகமாக என்மனதில் பதிந்துபோய்விடுகிறது.  

அப்போது நானும் அவளுடன் சேர்ந்து செயலற்று நின்றுவிடுகிறேன். அந்தக்கணத்தில் அவள் கையைப் பற்றிக்கொள்ளவோ, மெலிதாகத் தோளோடு அணைத்துக்கொள்ளவோ ஒருபோதும் தோன்றியதில்லை. ஒவ்வொருமுறையும் தவறவிட்டிருக்கிறேன். பின்பு அந்தக் காட்சி தனிமையில் தோன்றித் தொடர்ந்து என்னை அலைக்கழிக்கும். ஒவ்வொரு நொடியும் திரும்பத் திரும்பத் தீராத வாதையாக! உறைந்து நிற்கும் தருணங்களில் அவள் இந்த உலகின் அதிகூடிய துயரத்தை ஏற்றுக்கொண்ட ஒருத்தி போலத் தோன்றுவாள். அவளின் அப்போதைய தோற்றத்துக்கு உள்ளே ஓடும் உணர்வை நானே தேடிக் கண்டுகொள்ள விழைகிறேன். அது என்னை மேலும் குழப்பிவிடுவதாக அமைந்துவிடும். அப்போதெல்லாம் மிகுந்த துயர் நிறைந்தவனாகிவிடுகிறேன்.  

அவள் அத்தனை துன்பத்தையும் ஏற்று வாங்கிக்கொண்டது போல பாரமாகிவிடுகிறேன். ஸ்தம்பித்து நிற்கும் தருணங்களில் அவள் முகம் எந்த உணர்வையும் காட்டாது என்று சொன்னேனில்லையா? உண்மைதான். ஆனாலும் அவள் இதழ்க்கோடியில் சிறு புன்னகையின் கீற்றொன்று. அவளின் அத்தனை துயரத்தையும் கசப்பையும் சரிசெய்ய முயல்வதுபோல, அவளையும் அறியாமல் உறைந்து போயிருக்கும். அவள் புன்னகைக்குப் பழகியிருந்தாள். தன் அத்தனை வலிகளையும், துயரையும் புன்னகைக்குப் பழக்கியிருந்தாள். நான் முற்றுமுழுதாக உடைந்து நொறுங்கிவிட அந்தப் புன்னகை மட்டுமே போதுமானதாயிருக்கிறது.

வீதியில் திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒரு கரையில் வடிகால் அமைக்கப் பெரிதாகத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஏதேதோ குழிகள். அதற்காக நடு வீதியிலா மண்ணைக் குவித்துவைப்பார்கள்? குண்டும் குழியுமாக இருந்த வீதியில் இருவரும் கவனமாக நடந்துகொண்டிருந்தோம். எதிரில் சற்றுத்தள்ளி சோதனைச் சாவடியா அது? நெருங்கிச் செல்கிறோம். 

“வாருங்கள்” வீதிக்கு வந்த மருத்துவர் ஒருவர் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்பது போல அழைத்தார். ஏற்கனவே எனக்குப் பரிச்சயமானவர்போலத் தெரிந்தார். தொற்று நோய் பரவிக்கொண்டிருக்கும் சூழ்நிலை. தடுப்பூசி போடவேண்டும் என்று அவர்தான் என்னை அழைத்திருந்தது ஞாபகம் வந்தது.

கேற்றினூடு உள்ளே சென்றபோது, பாரியளவிலான தற்காலிக கொட்டகையாக இருந்தது. உள்ளே பலர்; வளர்ந்த மனிதர்கள், பெரியவர்கள். பாலர் பாடசாலைக் காலத்தில் அணிந்த ரன்னிங் ஷோர்ட்ஸ் அணிந்து கொண்டு  அங்குமிங்கும் நின்றிருந்தார்கள். காற்று புகுத்தியதுபோலப் பொம்மிக்கொண்டு நிற்குமே அதுதான். அதுவும் மஞ்சள் நிறத்தில்! ‘இதென்ன பைத்தியக்காரத்தனம்?’ எனத் தோன்றியது. ஒரு பணியாளர் என்னிடம் வந்து அப்படியொரு உடையைத் தந்து அணிந்துகொள்ளச் சொன்னார்.

ஏதோ உறுத்தலாகத் தெரிந்தது. என்னை அழைத்த மருத்துவரைத் தேடினேன். காணவில்லை.

“ஊசி போட வேண்டும் எங்கே அவர்?”.

எதிரில் இருந்த ஊழியர் தேர்ந்த அரச பணியாளராகப் பதில் சொல்லவில்லை. சத்தமாக மீண்டும் மீண்டும் கேட்கிறேன். பதிலில்லை. அசட்டையாக இருப்பவரை நோக்கிக் கோபத்தோடு கத்துகிறேன். பொறுமையிழந்து தாக்க விழைகிறேன். யாரோ என்னைத் தடுக்க முற்படுகிறார்கள். மீறித் திமிறிக்கொண்டு முன்னேறுகிறேன். எதிரே நின்றிருந்த சனக்கூட்டத்திலிருந்து அந்த மருத்துவர் நழுவிச் செல்வதைக் கண்டு துரத்த ஆரம்பிக்கிறேன்.

ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் மட்டுமே ஓடுகிறேன். மருத்துவரைக் காணவில்லை. இப்போதுதான் கவனிக்கிறேன். மருத்துவமனைக் கட்டடத்துக்குள் யாருமேயில்லை. இங்கே யாரைத் துரத்துகிறேன்? இல்லை தேடுகிறேன். மருத்துவரையா? குழப்பமாயிருந்தது. அப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அவள் எங்கே? என்னைவிட்டுப் போய்விட்டாள். மருத்துவர் என்னிடம் வந்து பேசியவுடன் கோபித்துக்கொண்டு போய்விட்டாளா? எப்போது? அநேகமாக நான் வீதியிலிருந்து இங்கே நுழைந்த பொழுதில். இல்லை, அவளிடமிருந்து என்கவனம் மருத்துவரை நோக்கித் திரும்பிய அந்தக்கணமே மாயமாக மறைந்துவிட்டாள் என்பது உறைத்தது. அப்படியானால் நான் இப்போது அவளைத்தான் இங்கே தேடிக்கொண்டிருக்கிறேன்.

அவள் எப்படி இங்கே இருப்பாள்? அவள்தான் உள்ளே வரவேயில்லையே! என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்? இந்த எண்ணமே மனத்தைத் துவளச் செய்தது. இது என்ன இடம்? பைத்தியக்கார விடுதியா?  மருத்துவர் என்னை ஏன் அழைத்தார்? அவளைப் பார்த்திருப்பாரா? பார்க்க முடிந்திருக்குமா? அவளால் நினைத்தவுடன் மறைந்துவிட எல்லாம் முடிகிறது. ஆனால் குண்டும் குழியுமான வீதியில் நான்தான் கையைப் பிடித்து அவளைப் பத்திரமாகப் பார்த்து பார்த்து அழைத்துவர வேண்டியிருந்தது. ஒருவேளை அந்தக்காட்சியை மருத்துவர் பார்த்திருப்பார். நிச்சயமாக மருத்துவரால் அவளைப் பார்க்க முடிந்திருக்காது. அவள் என் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறாள்!

அவள் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களும் அவளைப் பார்க்கிறார்கள். இப்போதுகூட அவர்களிடமிருந்துதான் அவளை அழைத்து வந்திருந்தேன் என்பது மெல்லப் புரிகிறது. அப்படியானால் அவர்கள் யார்? மேலும் குழப்பமாயிருந்தது. அவள் குறித்து எனக்கு எந்தக் குழப்பமுமில்லை. அவள் ஒரு பிசாசு என்று சொன்னேனில்லையா? அவள் இறந்து போன ஒருத்தி என்பது நிச்சயமாகத் தெரியும். ஆவியாக என்னைச் சுற்றுகிறாள். தொடுவுணர்வு இருக்கிறது. சற்றுமுன்புவரை என்கை கோர்த்திருந்தவளின் வெம்மை இப்போதும் மிச்சமிருக்கிறது.

எங்கே போய்த் தேடுவது? உண்மையில் என்னால் அவளைத் தேடித் கண்டடைய முடியாது என்கிற உண்மை சோர்வடையச் செய்கிறது. எப்போதும் என்னால அவளை அழைத்துவர முடிந்ததில்லை. அவளாகவேதான் வந்தாக வேண்டும். இருந்தபோதும் திரும்ப வேகமாக ஓட  ஆரம்பிக்கிறேன். இதுவே இறுதிமுறை. இனிமேல் அவளை பார்க்கவே முடியாது என்கிற எண்ணம் சடுதியாகத் தோன்ற, இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். விஸ்தாரமான பெரிய அறைகள். உள்ளே யாருமேயில்லாத அசௌகரிய மருத்துவமனை மௌனத்தைக் கலைத்து எதிரொலிக்கிறது என் மூச்சு. வெண்மையான படுக்கை விரிப்புகளுடன் தூங்கும் வெறுமையான கட்டில்கள். நீண்டு கிடந்த கட்டடத்தின் ஒவ்வொரு அறையாக நுழைந்து பார்த்துக்கொண்டு ஓடுகிறேன். ஏனோ இனி ஒருபோதும் அவளைப் பார்க்கவே முடியாது எனத் தோன்றுகிறது. கேவலுடன் களைத்து விழுகிறேன். ஆற்றாமையும் பதட்டமுமாகச் சில கணங்கள். பெருங்குரல் எடுத்துச் சத்தமாக அழைக்க முயல்கிறேன். முடியவில்லை. அவஸ்தையுடன் திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறேன்.

கண்களைத் திறக்க முயலவில்லை. அந்தக் கனவை மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர விரும்புகிறேன். முடியவில்லை. முற்றாகக் களைப்படைந்திருந்தேன். என் அறைக்குள் யாரோ இருப்பதுபோல உள்ளுணர்வு. அவள்தான்! இங்கேதான் வந்து நிற்கிறாள். துணுக்குற்று எழ முயற்சிக்கிறேன். கண்களைச் சரியாகத் திறக்க முடியாமல் எரிச்சல். லைட்டைப் போடுகிறேன். நேரம் ஒன்றரை. குழப்பம். மனம் சஞ்சலமாகவே இருக்கிறது. அனிச்சையாகக் கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்துக்கொண்டேன். என்ன இது? ஏனிப்படி நடந்துகொள்கிறேன்? எனத் தோன்றுகிறது. கையில் கன்னத்தைப் பதித்துக்கொண்டேன். இதமான வெம்மையில் அப்படியே மெல்லத் தூங்க ஆரம்பித்தேன்.

உமாஜி

உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.

5 Comments

  1. மிக அருமையான நகர்வு. விழிகளை எடுக்க முடியாத வகையில் கதையோட்டம். தேர்ந்தெடுத்த கச்சிதமான சொற்கள. வாழ்த்துகள் உமா ஜீ

  2. ஒவ்வொரு வசனங்களும் பிசாசு போல உயிரோட்டமானவை. புதிய சொற்கள் வெகுவாக கவர்கின்றன.
    வாழ்த்துக்கள் உமாஜீ

  3. வாழ்த்துகள் உமா. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சுவாரசியமாக இருந்தது.

  4. அந்தச் சோதனைச்சாவடியைக் கடந்த வேளையில் தான் அது நடந்தது. அவளை அங்கேதான் தொலைத்தீர்கள். நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு செல்ல வேண்டாமென்று உங்களிருவரையும் சுற்றிச் சுற்றி வந்து கதறினேன். உங்களுக்கு அது கேட்கவில்லை. வெளியில் வரும்போது நீங்கள்
    மட்டும்தான் இருந்தீர்கள்.கவலை வேண்டாம். அவள் மீண்டும் மீண்டும் உங்களிடம் வருவாள்,
    தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு.

  5. உணர்வுபூர்வமான கரு – உயிரோட்டமான நடை! அருமை உமாஜி !!

உரையாடலுக்கு

Your email address will not be published.