பேனாவை இறுகப் பற்றிக்கொண்ட அதீதமாகச் சுருக்கம் விழுந்த விரல்கள். உள்ளங்கைச் சுருக்கமும் மிக ஆழமாக அதிகமாக. நிர்க்கதியாக நிற்கும் ஒருவன் எதையாவது பற்றிக்கொள்ள வேண்டுமெனத் தேடி எதுவுமில்லாமல் தன் உள்ளங்கையையே பொத்தி இறுக்கிப் பிடித்துக்கொண்டதுபோல. மோசமான இந்தப் பூமிக்கு வந்துவிடவே கூடாது, அம்மா வயிற்றிலேயே பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் என்று வைராக்கியமாக உள்ளங்கையைப் பொத்தி இறுக மூடிக்கொண்டு சுருண்டிருந்தவன் போலத் தோன்றினான் செந்தில். வளர்ந்த பிறகுதான் அப்படியெல்லாம் தோன்றினான். அப்போது, அந்தப் பத்து வயதில் அவ்வளவு யோசிக்கவெல்லாம் தெரியவில்லை. ஏன் நாற்பது வயதான எங்கள் ஆசிரியருக்கே யோசிக்கத் தெரிந்திருக்கவில்லை.   

ஒருமுறை விளையாட்டுத்தனமாக அவன் கையிலிருந்து பேனாவைப் பிடுங்க முயன்றிருக்கிறேன். அவன் உறுதியான பிடி அப்போதுதான் தெரிந்தது. எதையாவது பற்றிக்கொண்டு மீள எத்தனிக்கும் வாழ்வின் கடைசி நம்பிக்கையைப்போல இறுக்கிக்கொண்டு தர மறுத்து அடம்பிடித்தான். இருவரது முனைப்பும் அதிகமாகி, மூர்க்கத்தனமாக இழுத்தபோது மண்ணில் இறுகியிருந்த செடியொன்றை இழுத்தைப்போல அவனிடமிருந்து சிறு முனகலுடன் பிடுங்கிக்கொண்டு வந்தது. பேனாவில் எப்போதும் கசிந்துகொண்டிருக்கும் அவன் கை ஈரம் படிந்திருந்தது. இயலாமையுடன் சிரித்தான். அப்பொழுதும் அவன் இருந்த இடத்தைவிட்டு வரவில்லை. பேனாவை அவனிடம் திருப்பிக்கொடுத்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடிவிட்டேன். அவனை எப்படியாவது வெளியே விளையாட அழைத்துச் செல்லும் முயற்சி அப்பொழுதும் தோல்வி கண்டிருந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த தயா என்னைப் பார்த்து சிரித்தான்.  அவன் பார்வை விட்டுவிடு என்பதாய்த்தான் இருந்தது. அவன் வாயைத்திறந்து எதுவும் சொன்னதில்லை. சிரிப்பு! சமாளித்துச் செல்லும் சமன்செய்துகொள்ளும் சிரிப்பு. தன் குழந்தையை இம்சை செய்யும் இன்னொரு உறவுக்காரக் குழந்தையைக் கண்டிக்கவும் முடியாமல், பொறுத்துக்க கொள்ளவும் முடியாமல் மற்றவர் முன்னிலையில் வெளிக்காட்டும் அவஸ்தையுடன் கூடிய அம்மாச்சிரிப்பு! பார்வையில் சிறு எரிச்சலோ, முறைப்போ இருக்காது. கண்களில் சிறு இறைஞ்சல் தென்படுவதுண்டு. போய்விடு என்பதாக. அவன் எப்போதும் செந்திலுடன்தான் இருப்பான். வகுப்பில் அவன் பக்கத்தில். பாடசாலைக்கு வரும்போதும், வீடு செல்லும்போதும் ஒன்றாகவே நடந்து செல்வார்கள். பக்கத்து வீடாக இருக்கலாம். அல்லது உறவினனாக இருக்கலாம். அப்படிச் செல்லும் வேளையில் நான் எதிர்ப்படும் பொழுதெல்லாம் அவன் என்னிடமிருந்து செந்திலைக் காப்பவன் போல புன்னகையுடன் எப்போதும் குறுக்கே மறிக்கத்தயாராவது போன்ற உடல்மொழியுடன் நின்றிருப்பான்.

துஷ்டன் ஒருவனிடமிருந்து காப்பாற்றும் பக்குவமான பெரிய மனுஷத்தனம் ஒன்று அவனிடம் வந்துவிடும். ”செந்தில் டேய்” என நான் உற்சாகமாகக் குரல் கொடுக்கும்போதே தயா பெரிய மனுஷனின் பக்குவத்தோடு புன்னகைத்து நிற்பான். இதைக்கூட என்னால் பின்னாட்களில்தான் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அப்போது தெரியவில்லை. புரிந்துகொள்ள முடிந்திருந்தால், நான் அவனைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு அருகில் செல்லவில்லை என்று சொல்லியிருப்பேன். வகுப்பறையில் ஓரிருமுறை அவனை வெளியே விளையாட அழைத்துச் செல்ல செய்த முயற்சிகள் என்னைப்பற்றி அப்படி எண்ண வைத்துவிட்டது. உண்மையில் அவனை இம்சிக்கும் எண்ணம் துளியும் இருந்ததில்லை. அவன் ஏன் சாதாரணமாக பழகுகிறான் இல்லை? ஏன் சகஜமாக வெளியே வந்து பழகுகிறான் இல்லை என்கிற குழப்பம். ‘டேய் நீ என்ன பெரிய ஆளா? வாடா வெளில உன்ர இடத்தை விட்டு வரமாட்டியா?’ என்று கேட்டிருக்கிறேன். அவன் சிரித்துக்கொள்வான்.

பின்னாளில் யோசித்தால் அந்தச்சிரிப்பே மிக மன உளைச்சல் தருவதாயிருந்தது. அது ஒரு இயலாமைச் சிரிப்பு. சிரிப்பு என்றுகூடச் சொல்லலாமா தெரியவில்லை. வேறுவழியேயில்லாத ஒருவனின் எதிர்வினைச் சிரிப்பு. இயலாமையில் வேதனையில் முகத்தசையைச் சுருக்கிக் கொள்கிற, உதடுகள் இழுபட்டு கீழ்வாய்க் கொடுப்புப் பல்லொன்று தெரியும்படியான சிரிப்பு. அவன் அப்படித்தான் சிரித்துக்கொள்வான். அவனைத் திடீரென்று யாராவது, ‘தாத்தா டேய்’, ‘டேய் கிழவா’ என்று அழைப்பார்கள். அப்போதெல்லாம் கூட அப்படித்தான் சிரிப்பான். அவன் நெற்றியில் ஆழமான மூன்று கோடுகள் தவிர, முகத்தில் சுருக்கமிருந்ததில்லை. கழுத்தில் தசை இழுபட்டு சுருங்கி இருந்தது. ஒரு வயோதிகச் சுருக்கம் போல. கைவிரல்களில் ஆழமான கோடுகளாக சுருக்கமிருந்தன. யாரும் கூப்பிட்டால் மெதுவாக திரும்பினான். மிக மெதுவாக, கட்டம் கட்டமாகத் திரும்பிப் பார்த்து மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பேசுவான். கொஞ்சமாகவே பேசினான். அல்லது பேச முடிந்திருக்க வேண்டும். அவசரமாகவோ எப்போதாவது மிக அரிதாகப் பொறுமையிழக்கும் சமயங்களிலோ வார்த்தைகள் சிக்கிக்கொண்டு பேச்சு குழறலாகும். ழீ, ழூ, ஙி வரிசையில் வார்த்தைகள் புழங்கின. அவன் எழுத்திலும் அப்படித்தான்.

பென்சிலில் எழுத ஆரம்பித்து, இரண்டாம் வகுப்பில் எல்லோரும் பேனாவுக்குப் புரமோஷன் பெற்றபின்பும் இன்னமும் பென்சிலோடு மல்லுக் கட்டிக்கொண்டிருந்த செந்திலுக்கு போனால் போகுதென்று பேனாவைப் பயான்படுத்த அனுமதித்திருந்தார் ஆசிரியர். குமிழ் முனைப் பேனா அவனுக்கு பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்திருக்க வேண்டும். பென்சிலால் எழுதுவது அவனை இன்னும் இம்சித்திருந்தது. ஒவ்வொரு கோடும் அவன் எண்ணப்படி இல்லாமல் அதனதன் போக்குக்கு அவன்கையை இழுத்தன. முகத்தைச் சுழித்து ஊன்றி எழுத, விரல் கசிந்து தாளை ஈரமாக்க, கரி பூசியும், அழுக்கடைந்தும் கிழிந்தும் தோற்றமளிக்கும் அவன் அப்பியாசப் புத்தகம், ஆசிரியருக்கு அவ்வப்போது மிகுந்த உற்சாகம் கொள்ள வைத்தது.

சொந்தப் பிரச்சினைகள், பொருளாதாரக் சிக்கல்கள் சார்ந்த மன அழுத்தம், காலையில் மனைவியிடம் வாங்கி கட்டிக் கொண்டது, புத்திர பாக்கியங்களின் பிடுங்கல்கள், நேற்றிரவு மனைவியுடன் கிடைக்காத புணர்ச்சி என எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு நல்லாசிரியன் தான் கற்பிக்கும் குழந்தைகளிடமிருந்தானே ஆறுதலையும், மீளப் புத்துணர்ச்சியையும் அடைந்துகொள்ள முடியும். அப்படியே காலங்காலகமாகப் பழகியிருந்தார்கள். எங்கள் ஆசிரியரும் அதற்காக விதவிதமான பொறிமுறைகளைக் கையாண்டு வந்தார். துரதிருஷ்டவசமாக எல்லாப் பொறிமுறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளும் ஒருவனாக செந்தில் இருந்தான்.

தும்புத்தடி ஒன்றின் கனத்துக்கு அரைப்பங்கு இருக்கக்கூடிய தடியொன்றை வைத்திருந்தார். அது அதிவிசேட பாவனைக்கானது. சாதாரண குற்றங்களுக்கு பெரிய பிரம்பும் இருந்தது. வீட்டு வேலை செய்யாமை, பயிற்சிப் புத்தகம் கொண்டுவராமை போன்ற சிறு குற்றங்களுக்கு பிரம்பும், பெரிய குழப்படிகளுக்கு மற்றும் மாத – தவணைப் பரீட்சைகளில் தமிழ், கணித பாடங்களில் எழுபத்தைந்து புள்ளிகளுக்கு குறையுமாயின் தும்புத்தடியடி என்கிற வழக்கத்தையும் கடைப்பிடித்து வந்தார். தமிழ், கணிதத்துக்கு எழுபத்தைந்துக்கு மேல் பெற்றால் ஸ்கொலர்ஷிப் பரீட்சையில் சித்தியடைந்து விடலாம் என்பது ஒரு கணக்கு. நாலாம் வகுப்புப் பிள்ளைகளின் பெற்றோரைப் பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கியிருந்தது ஸ்கொலர்ஷிப் பரீட்சை. அதில் சித்தியடையத் தவறும் பட்சத்தில் குறித்த பிள்ளையின் தாய்,தந்தையரை  இந்தப் பூமிக்கிரகத்திலிருந்து பிரித்து வேறு கிரகத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் என அஞ்சினார்கள்.

அதன்பொருட்டு நடுத்தர வர்க்க அப்பாக்கள் மகன்களிடம் டீல் பேச ஆரம்பிப்பார்கள். ஸ்கொலர்ஷிப் பாஸ் பாண்ணினால்தான் புதுச் சைக்கிள் வாங்கித்தரலாம். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும் இந்த டீலால் கலங்கிப் போய்விடுவார்கள். எனக்கெல்லாம் பெருங்கலக்கமாக இருந்தது. ஒருவேளை ஃபெயில் விட்டால் சைக்கிளுக்கு என்ன செய்வது? சைக்கிள் அத்தியாவசியப் பொருள். ஆடம்பரப் பொருளுக்கு வேண்டுமானால் டீல் பேசலாம். அத்தியாவசியப் பொருளுக்கு பேசக்கூடாது என்பதெல்லாம் எனக்குப் புரிந்தது. அப்பாக்களுக்குப் புரியாது. அரசாங்க உத்தியோகம் பார்க்கும் நடுத்தர வர்க்கத்து அப்பாக்களுக்கு அத்தியாவசியங்கள் கூட ஆடம்பரம்தான். சாப்பாட்டையும் பாடப் புத்தகங்களையும் தவிர, எல்லாமே ஆடம்பரம்தானே. இதனைப் பேசிப் புரிய வைக்கவும் முடியாது. பிறகு, ‘நாங்கள் அந்தக்காலத்தில செருப்புப் போடாமல் பள்ளிக்கூடத்துக்கு..’ கதையை மீண்டுமொரு தடவை கேட்க நேரிடலாம். பாடசாலைக்குச் சப்பாத்து வாங்கிக் கொடுப்பதையே பெரும் மனச் சுணக்கத்தோடுதான் செய்கிறார்கள் என்கிற உண்மையை எத்தனைதரம்தான் தெரிந்து கொள்வது? அதுகூடப் பரவாயில்லை. இந்த அப்பாக்களில் பலர் ஆசிரியர்களாகவும், அவர்களை நண்பராகவும் கொண்டவர்களாக இருந்தார்கள். மேற்கொண்டு யோசிக்க வேண்டியதில்லை.

நாங்கள் ஸ்கொலர்ஷிப் பரீட்சசைக்கு தயாராகிக்கொண்டிருந்தோம். அதற்கென்றே சிறப்புத் தேர்ச்சி கொண்ட எங்கள் ஆசிரியர் ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்து எங்களை வழிநடாத்தும் உறுதிகொண்டார். நல்ல மேய்ப்பனுக்கு முதலில் என்ன தேவை? நல்ல உறுதியான பிரம்பு. அவர் மானசீகமாகக் கையில் பிரம்பை எடுத்துக்கொண்டதுமே அவர் கண்களுக்கு மெதுவாகக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளை ஆட்டு மந்தைகளாகவே தெரிந்தார்கள். வெள்ளைச்சட்டை, நீல காற்சட்டை அணிந்த ஆட்டுக்குட்டிகள். அப்படியே பார்க்கப் பழகிக்கொண்டார். எந்த ஆடும் வழி தவறிப் போய்விடக் கூடாதென்பதில் மிகக் கவனமாக இருந்தார். விடைத்தாள்கள் திருத்தி புள்ளிகள் வழங்கும் நாள் ஆசிரியருக்கு கொண்டாட்டம். பீதியுடன் எல்லாரும் விழித்துக்கொண்டிருக்க சிலர் எப்போதுமே வெற்றிகரமாகத் தப்பித்து விடுவார்கள். சிலர் எப்போதுமே மாட்டிக்கொள்வார்கள். செந்திலுக்கு வேறு வழியேயில்லை.

மாட்டை அடிப்பதுபோல என்று சொல்வது தேய்வழக்காக இருந்தாலும் யாரும் சிங்கத்தையோ, புலியையோ அப்படி அடிப்பதில்லை என்பதால் மாட்டை அடிப்பதுதான் சரியாக வரும். கரும்பலகையைப் பார்க்க நிறுத்தி வைத்து, இடது முழங்கையை இடக்கையால் பிடித்துக்கொண்டு, பிருஷ்டத்தில் பிரம்பின் நுனியை உன்னி மேலே ஓங்கி உயர்த்தி, ‘ப்ளடி ஃபூல்’ என்று வாய்க்குள்ளேயே அடித்தொண்டையில் உறுமியபடி வேகமாக நான்கைந்து அடி. செந்தில் துடித்துப் போய்விடுவான். கைகளை உதறி, சிலசமயம் விரல்களிலும் அடிபட்டு மேலும் அழுவான். அப்போது ஏதோ சொல்ல விழைவதுபோல பதட்டமாக குழறலாக மனிதர்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஒலியாக அந்தச் சத்தமிருக்கும். அவன் அடிவாங்கி அழுதுகொண்டு வருவதை செய்வதறியயாமல் சோகமாகப் பார்த்துக்கொண்டிருப்பான் தயா. அவனும் அடிவாங்கியிருப்பான்தான். ஆனாலும் அது ஒருபோதும் அவனுக்கு வலிப்பதில்லை.

செந்திலின் எழுத்து தமிழ்தான் என்பதில் யாருக்கும் குழப்பமில்லை. ஆனால் அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதில் எல்லோருக்கும் குழப்பமாயிருந்தது. அது வட்டெழுத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கலாம் எனப் பின்னாளில் அனுமானித்தேன். எங்கள் நல்லாசிரியர் அதிகம் சிரமப்படவில்லை. உண்மையில் ஆசிரியர்கள் எந்த முடிவையும் யோசித்துச் சிரமப்படாமல் எடுத்துக்கொள்வது அந்தச் சின்ன வயதிலேயே எங்களைப் பலமுறை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் அவன் எழுத்தை ‘சோழர்காலக் கல்வெட்டு’ என இலகுவாக வகைபிரித்தார். ‘டேய்  சோழர் காலம்’ என ஆசிரியர் அழைக்கும்போது மற்றவர்கள் சிரிக்க, செந்திலும் சிரித்துக்கொள்வான். இயலாமையுடன் கூடிய அந்தச் சிரிப்பு இப்போது நினைத்தால் மிக்க துயரைத் தருவதாயிருக்கிறது. ‘அந்தக் கல்வெட்டை எடுத்துக்கொண்டு வா’ , என்று அவர் அழைக்கும்போதே நடுங்கிக்கொண்டு எழுந்துகொள்வான். பதட்டத்தில் தடுமாறிக்கொண்டே செல்லும் அவனை உறுக்கி, பேச்சிலேயே அழவைத்துவிடும் திறமை அவருக்கிருந்தது. ஒருமுறை அவன் எழுத்தை இன்னும் ஒழுங்காக்கவில்லை எனக்குற்றம் கண்டு, அவன் கையைப் பிடித்து புறவளமாகத் திரும்பி அவன் விரல் மொழிகளில் அடிமட்டத்தால் அடித்தபோதுதான் அவன் அதிகபட்சமாகத் துடித்தழுதான்.

எப்படி அடித்துத் துவைப்பதற்கும் ஆசிரியருக்கு முழுச்சுதந்திரம் இருந்ததாக எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம். பிள்ளை கெட்டுப் போகாமல் நல்வழியை போதிக்கும் ஒரு நல்லாசிரியனுக்கு இதற்குக்கூட உரிமை இல்லாவிட்டால் பிறகெப்பிடித்தான் படித்த சமூகத்தை உருவாக்குவது? இப்படியெல்லாம் கறார் பேர்வழியாக இருந்த ஆசிரியரின் சொந்த புத்திரன் எங்கள் வகுப்புதான். இன்னொரு டிவிஷனில் படித்துக்கொண்டிருந்தான். அவன் வகுப்பாசிரியை அடிக்கடி அவனை எங்கள் வகுப்புக்கு அழைத்து வருவார். நேரடியாகத் தந்தையிடமே அழைத்து வந்து புகார் அளிப்பார். வீட்டு வேலை செய்வதில்லை, ஒழுங்காகப் புத்தகங்கள் கொண்டுவருவதில்லை போன்ற பாரிய குற்றங்கள். ஆசிரியை தான் அவனை அடிக்காமல் ஏன் கூட்டிக்கொண்டு வருகிறார் என்று தோன்றும். எங்கள் ஆசிரியர் அவனை உறுத்துப் பார்ப்பார். சத்தமே வாராமல் மெதுவான குரலில் கேள்வி கேட்பார். அவன் பயமே இல்லாமல் நெளிந்துகொண்டு சிரித்துச் சிரித்துப் பதில் சொல்லும் தோரணையைப் பார்த்தால் எங்களுக்கே  அந்தப் பிரம்பை எடுத்துச் சுழலச் சுழல சாத்தவேண்டும் போலிருக்கும். ஆனால் ஆசிரியர் பேச்சுவார்த்தையிலேயே சுமுகமாக முடித்துவிடுவார். மெதுவான குரலில் கண்டித்து அனுப்பிவைப்பார்.

எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகவும் புதிராகவுமிருக்கும். சிலவருடங்களின் பின் நண்பன் ஒருவன் சொன்னான். எங்கள் ஆசிரியரின் மூத்தமகன் இயக்கத்திற்கு போயிருந்தானாம். அந்த விரக்தியில் ஏற்பட்ட வக்கிர புத்தியில்தான் குழந்தைகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் எல்லா ஆசிரியர்களும் அப்படித்தானே இருந்தார்கள். குழந்தையையே இல்லாத, கல்யாணமே செய்துகொள்ளாத ஆசிரியர்கள்கூட. ஆனால் எங்கள் ஆசிரியர் தன் மகனை மிக மென்மையாகக் கடிந்துகொண்டதற்கு காரணம்,  எங்கே அடித்தால் அவன் இயக்கத்துக்குப் போய்விடுவானோ என்கிற பயம்தான். ஒரு காலத்தில் இது ஒரு நல்ல அருமையான பயமாக இருந்தது. மகன் இயக்கத்துக்குப் போய்விடுவானோ என்ற பயம் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், சலுகைகளைக் கொடுத்தது. விரும்பியதை, தேவையானதை தேவையே இல்லாதைதை எல்லாம் வாங்கிக்கொடுத்தது. பின்னாட்களில் பரிணாம வளர்ச்சியடைந்து கேட்டவுடன் பள்சர் மோட்டார் சைக்கிள்கூட கிடைத்தது. என்ன எல்லாமே வசதிபடைத்த போற்றோரைப் பெற்ற பிள்ளைகளுக்குத்தான். அல்லது ஏழையானாலும் உதவி செய்யும் வெளிநாட்டு உறவுகளைக் கொண்டர்வர்களுக்கு. மற்றைய ஏழைப் பிள்ளைகளுக்கு இதனால் எந்த நன்மையையும் கிடைக்கவில்லை. ஆக, போராட்டத்தால் எப்போதுமே ஏழைப்பிள்ளைகள் எந்தவித பயனையும் பெற்றதில்லை என்றே சொல்லலாம்.  

செந்திலுக்கு ஒழுங்காகப் பேசவே வரவில்லை. அவன் மற்றவர்களை போலில்லை. அவனால் வேகமாக இயங்கவோ, துணையில்லாமல் நடமாடித்திரியவோ முடியாது என்பதை சிறுவர்களான எங்களுக்கே  சில நாட்களில் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிந்த போது ஏன் நம் ஆசிரியரால் முடியவில்லை? அவன் எழுத்துவதற்கே மிகுந்த பிரயத்தனப்பட்டு சிரமப்படுவதை பார்க்கவில்லையா? அவனிடம் போய் எழுத்து நன்றாக இல்லை என்று அடிக்குமளவிற்கு ஏன் யோசிக்கத் தெரியவில்லை? பள்ளிக்கூடத்தை விட்டுச் சென்று இவ்வளவு வருடங்கள் கடந்த பின்பு ஏன் செந்தில் ஞாபகம் வரவேண்டும்? குழப்பமாக இருந்தது. ஒரு வகையில் நானும் அவனை இம்சித்திருக்கிறேன். அப்படி ஒரு எண்ணமில்லாமலே. அவனும் எங்களுடன் சகஜமாக பேச வேண்டும், விளையாட வேண்டும், வெளியில் வரவேண்டும் என்று முயற்சித்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு கஷ்டம்தான். ஒரு குழந்தையின் காலில் விரல்களால் குறுகுறுப்பை ஏற்படுத்திச் சிரிக்க வைத்த நண்பனை ஒருமுறை கடிந்துகொண்டிருக்கிறேன். குழந்தைக்குச் சிறு இம்சையைத்தன்னும் கொடுக்கும் எதுவுமே விளையாட்டில் சேர்த்தியில்லை என்று. அப்படியானால் செந்தில்? புதிதாக அந்த வகுப்பில் இணைந்த நான் மட்டுமே அப்படி இருந்திருக்கிறேன். பின்பு சில நாட்களிலேயே உண்மை புரிந்து அந்த முயற்சியைக் கைவிட்டிருக்கிறேன். இந்த நினைப்பே எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. அவனிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவேண்டும் எனது தோன்றியது. அவன் இப்போது எங்கே இருப்பான்? எப்போதும் அவனுடனேயே இருந்த தயா என்ன செய்துகொண்டிருப்பான்? அந்த வயதிலேயே அவ்வளவு பக்குவமும் பொறுப்புணர்வும் எப்படி அவனுக்கு வந்தது?

பின்பு மனம் விபரீதமாக யோசிக்க ஆரம்பித்தது. செந்தில் இப்போது இருக்க மாட்டான் என்று மனம் எண்ண ஆரம்பித்தது கண்டு ஆச்சரியமடைந்தேன். ஏன் இப்படி? பின்பு யோசித்தால், இந்த உலகில் அவனால் எப்படி வாழ முடியும்? கொடுமையல்லவா? யார் அவனைக் கூடவே இருந்து பார்த்துக் கொள்வார்கள்? அவனால் தனித்தியங்க முடியுமா? இந்த உலகின் கொடூர முகத்தை எதிர்கொள்ள நேரிடும் வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கலாம். ஒருவேளை அவன் இல்லாதிருந்தால்? நான் மன்னிப்புக் கேட்க முடியாதே? ஆனாலும் அதுதான் சரியானது அவனுக்கு நன்மையானது என்ற எண்ணம் தோன்றியபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவனுக்கு அதுதான் நன்மையென்று நான் எப்படித் தீர்மானிக்க முடியும்? என்ன மாதிரியான ஃபாசிச மனநிலை இது?

பின்பொருநாளில் நான் அவனைத் திடீரெனப் பார்த்தேன். அப்போது என் மனதில் தோன்றிய உணர்வை பிரித்தறிய முடியவில்லை. துக்கமா? வெறுமையான? சற்றே மன நிம்மதியா தெரியவில்லை. உண்மையில் நான் பார்த்தது அவனைத்தானா? இல்லை, சரியாகச் சொன்னால் அது ஒரு கை. குண்டு வீச்சில் சிதைந்து போன ஒரு பதுங்கு குழியின் இடிபாடுகளிலிருந்து அந்தக் கை எதையோ பற்றிப் பிடித்திருந்தது. இறுகப் பற்றிக்கொண்ட அதீதமாகச் சுருக்கம் விழுந்ததொரு கை!

உமாஜி

உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.

1 Comment

  1. உண்மையில் அருமையான எழுத்து நடை, எதிரில் ஒருவர் இருந்து கதை சொல்லியது போல் இருந்தது உங்கள் எழுத்தின் சுவை.

உரையாடலுக்கு

Your email address will not be published.