சாவு வீடுகளில் பிரேதம் எடுக்கும்போது எழுகின்ற ஒப்பாரி ஒலியைப்போல மழை வீரிட்டுக் கொட்டிக்கொண்டிருந்தது.

கிளிநொச்சி நிலையத்திலிருந்து ரயில் மறுபடியும் புறப்பட்டது. மிருதுளா தன் செல்பேசியிலிருந்த பயண வழிகாட்டியைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். கொடிகாமம் கழிந்தால் அடுத்தது யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வந்து சேர்ந்துவிடும். அவள் தன் கைப்பையினுள் கடவுச்சீட்டு, கடனட்டை, இலங்கை ரூபாய்கள் எல்லாமே பத்திரமாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டாள். யாழ்ப்பாணத்தில் ரயில் எத்தனை நிமிடங்கள் தரித்து நிற்கும் என்பதை ஊகிக்கமுடியவில்லை. முதலில் அந்த நிலையத்தை அவள் தவறவிடாமலிருப்பது முக்கியம். இந்த மழையில் அதன் பெயர்ப்பலகை மறைந்துபோகலாம். ரயிலினுள்ளே ஒலிபரப்பான மும்மொழி அறிவிப்புகளும்கூட எவர் கேட்கப்போகிறார்கள் என்ற உதாசீனத்திலேயே இரைந்துகொண்டிருந்தன. மேலே  வைக்கப்பட்டிருந்த சூட்கேசினை எப்போது இறக்கவேண்டும் என்று அவளுக்குக் குழப்பம் வந்தது. ஓடும் ரயிலில் எழுந்து நின்று அதனைத் தூக்கி எடுக்கும் வலு அவளிடமில்லை. ரயில் பெட்டியின் தரை வேறு ஈரமாக இருந்தது. சறுக்கி விழுந்து இடுப்பை ஒடித்துக்கொண்டால் இந்த ஊரில் அவளைக் கவனிக்கவும் ஆள் இல்லை. பக்கத்திலிருந்தவரிடம் கேட்டுப்பார்க்கலாம்தான். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்கு அவளுக்குக் கூச்சமாக இருந்தது. செல்பேசியில் மொழிபெயர்ப்பு செயலியைத் தரவிறக்கி வைத்திருக்கலாம். மறந்துவிட்டாள். அம்மாவோடு இத்தனை ஆண்டுகள் எப்படித் தமிழில் சமாளித்தாள் என்பதை நினைக்கையில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்போதுகூட யாராவது சற்று இடைவெளி விட்டுப் பேசும்போது நன்றாகவே புரிகிறது. ஆனால் மறுமொழி சொல்லத்தான் வார்த்தைகள் வரமாட்டேன் என்கின்றன. அப்படியே வந்தாலும் அவை  தமிழ்ப்பள்ளியில் படித்த பரிசுத்தமான சொற்களாகவே இருக்கின்றன. அங்கு மாய்ந்து மாய்ந்து மனப்பாடம் செய்த திருக்குறள்களைக்கொண்டு இந்த ஊரில் பக்கத்து இருக்கை பயணியுடன்கூட பேச முடியவில்லை. உள்ளே நுழைய முன்னரே இந்த ஊர் அவளை மிரட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. தனியாகச் சமாளிக்க முடியுமா? உறவுகள், தெரிந்தவர்கள் என எவருமே இல்லாத, அவளுக்குப் பரிச்சயமான மொழியைப் பேசாத, அந்நியப்பட்ட பிறந்த தேசம். முற்றத்துத் திடலில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சின்னஞ் சிறுமியை எங்கிருந்தோ வந்த இராட்சதப் பருந்து ஒன்று தூக்கிச்சென்றபோது  பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த இந்த மண், ஏன் இப்போது மட்டும் ஆசை காட்டி அவளை வரவழைக்கிறது? குற்றவுணர்ச்சியா?

முகமாலை கடக்கும்போது மழை தன் ஒப்பாரியை நிறுத்தி வெறுமனே மூக்கை மாத்திரம் சீந்திக்கொண்டிருந்தது. தூரத்தே தலையற்ற ஒரு தென்னையின் உச்சியில் காகம் ஒன்று தன்னைக் குறுக்கிக்கொண்டு நனைந்தபடி உட்கார்ந்து தன் அலகால் இறக்கைகளுக்கடியே பிறாண்டிக்கொண்டிருந்தது. திடீரென ஒலித்த ரயிலின் ஹோர்ன் சத்தத்துக்குத் திரும்பிப்பார்த்துவிட்டு இறக்கைகளின் ஈரத்தை உதறியபடி அது எழுந்து எங்கோ பறந்துபோனது. அந்தக் காகத்துக்குத் தான் பிறந்த கூடு ஞாபகத்தில் இருக்குமா என்ற எண்ணம் மிருதுளாவுக்கு வந்தது. குஞ்சுகள் பருவமெய்தியதும் தாய்ப்பறவை அவற்றைக் கூட்டிலிருந்து தள்ளிவிடுவதுண்டு. இறுதியில் தானும் அந்தக்  கூட்டினைக் கைவிட்டுவிட்டு எங்கோ பறந்து போய்விடும். அவளும் அப்படித் தள்ளிவிடப்பட்ட ஒரு பறவைக்குஞ்சுதான் என்று மிருதுளா நினைத்துக்கொண்டாள். கிளைகளும் இலைகளுமற்ற ஒரு வெற்று மரத்தின் உச்சியில் தனியாக  உட்கார்ந்து சிறகு பிறாண்டும் பறவைக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ரயில் கொடிகாமத்துக்கு வந்து சேர்ந்தது. மிருதுளா தைரியத்தை வரவழைத்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞனிடம் திரும்பிக் கேட்டாள்.

“தயவுசெய்து மேலிருக்கும் என் சூட்கேசை எடுத்துத் தரமுடியுமா?”

அவள் ஆறுதலாகத்தான் தன் ஆங்கிலத்தை உச்சரித்தாள். ஆனால் அவனுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதைவிட அவள் உடனே அப்படித் திரும்பிக் கேட்பாள் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. அல்லது அவளது உடையாக இருக்கலாம். அவள் மறுபடியும் தன் சூட்கேசைக் காட்டி சைகையும் கலந்து இம்முறை கேட்டாள். அவன் சுதாரித்தவனாய் ‘சொறி’ என்று சொன்னபடி எழுந்து சூட்கேசை எடுத்துக்கொடுத்தான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத் தட்டுத்தடுமாறி சூட்கேசை உருட்டியபடி அவள் கதவருகே நகர்ந்து செல்லவும் ரயில் யாழ்ப்பாண நிலையத்தை வந்தடையவும் சரியாக இருந்தது. மழை இங்கும் நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தது. சூட்கேசோடு சிரமப்பட்டு இறங்கி நடைமேடைக்குள் நுழைவதற்குள்ளாகவே மிருதுளா தெப்பமாக நனைந்துபோயிருந்தாள். அனிச்சையாக அவள் தன் கழுத்தில் கிடந்த சோல் துணியால் ஈரத்தைத் துவட்டிவிட்டுச் சுருட்டிக் கைப்பையினுள் தள்ளியபோது, கடந்து சென்ற பயணிகள் எல்லோரும் அவளை நூதனமாகப் பார்த்ததைக் கவனித்தாள். பரமட்டா பூங்காவில் அவள் காற்சட்டை பனியன் அணிந்து நடைப்பயிற்சி செல்லும்போதும் இப்படித்தான் எதிரே வருகின்ற தமிழ் முகங்கள் அவளை வெறித்துப்பார்ப்பதுண்டு. வெள்ளைக்காரிகளைக்கூட அவர்கள் அப்படிப்பார்ப்பதில்லை. மழைத்தண்ணீர்போல அவர்களது பார்வை அவள் உடலெங்கும் கசிந்து ஒழுகியது. ஐம்பது வயதில் தம் நிறத்துக்காரி ஒருத்தி பனியன், பாவாடையோடு மழையில் நனைந்த கோலத்தில் தனியாக வந்து இறங்குவது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கவேண்டும். மிருதுளாவுக்கு எரிச்சல் வந்தது. திரும்பி அடுத்த ரயிலிலேயே வந்த வழியே போய்விடலாமா என்று கணம் தோன்றியது. வேண்டாம். இதுதான் இறுதிப்பயணம். இரண்டே வாரங்கள். வந்த வேலையை முழுமையாக முடித்துவிட்டால் இனிமேல் இத்திசை நோக்கித் திரும்பவே தேவையிருக்காது.

மிருதுளா தான் அணிந்திருந்த ஈர பனியனை மாற்றி ஒரு கையுள்ள சட்டையை எடுத்து அணியலாம் என்று கழிப்பறையைத் தேடிப்போனாள். அங்கும் உள்ளே நின்ற பெண்கள் எல்லோரும் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். கழிப்பறையின் தரை முழுதும் காலணிகள் கொண்டுவந்து சேர்த்த சேறு கசிந்துகொண்டிருந்தது. இப்போது அங்கே சூட்கேசை வைத்துத் திறந்தால் முப்பது கண்களும் பெட்டிக்குள் இருப்பவற்றையே நோட்டம் பார்க்க ஆரம்பிக்கும். வேண்டாம். அவள் தன் சோலை மறுபடியும் வெளியே எடுத்து நன்றாக உதறிவிட்டு விரித்துத் தோள்களில் போர்த்திக்கொண்டாள். கண்ணாடியில் பார்த்து தன் முகத்து ஈரத்தைத் துடைத்துக்கொண்டாள். மழையில் நனைந்ததில் அவளது ஐதான முடி ஒரு சாயம் போன மெல்லிய கறுப்புத்துணிபோல தலையில் ஒட்டிக்கிடந்தது. முன் மண்டையில் சாதுவான வழுக்கையும் எட்டிப்பார்த்தது. இன்னமும் இரண்டு வருடங்களில் அவளுக்கு வயது ஐம்பதாகிவிடும். உலகின் மிக நீண்ட ஐம்பது வருடங்கள் அவளுடையதாகவே இருக்கும் என்று தோன்றியது. இருபத்து மூன்று வயதில் அவசர அவசரமாக நேதுராமைக் காதலித்தது. இரண்டே மாதங்களில் இருவீட்டார் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்தது. அவசரமாகக் குழந்தை பெற்றுக்கொண்டது. பின்னர் குழந்தையை வளர்ப்பதற்காக வேலைக்குப்போகாமல் வீட்டிலேயே தங்கிவிட்டது. குடும்பக் கணக்கு வழக்குகள் எவற்றிலும் கவனம் செலுத்தாமல் சமையலும் வீட்டுவேலையுமாகவே காலத்தை ஓட்டியது. நேதுராமின் திருட்டுத்தனங்களையும் முதலீடுகளையும் அறியாத ஏமாளியாக வாழ்ந்தது. ச்சீ, எத்தனை பெரிய முட்டாள் அவள்? அவளுக்கென்று அம்மா கொடுத்த நகைகளை அவன் விற்றபோதுகூட ஏன் இவளுக்குச் சந்தேகம் எழவில்லை? மகனும் லண்டனுக்குப் போன பின்னர் நேதுராமை எதிர்க்கும் துணிவு அவளுக்கு எள்ளளவும் எழாமற்போய்விட்டது. நேதுராமைப்போலவே அவனது நோயும் இரகசியமாகவே வந்து இரகசியமாகவே படர்ந்து சில மாதங்களிலேயே அவனைக் காவுகொண்டுவிட்டது. அவள் மூச்சுவிடுவதற்குக்கூட அது அவகாசம் கொடுக்கவில்லை. ஒரு ஆணைக் காதலித்து இருபத்திரண்டு வருடங்கள் குடும்பம் நடத்திய பின்னரும் அவனைப்பற்றிய உருப்படியான ஒரு தருணமேனும் நினைவுக்கு வரவில்லை என்றால் என்னமாதிரியான உறவு அது? அவன் முகம்கூட சரியாக ஞாபகம் வரமாட்டேன் என்கிறது. நேதுராம் என்றாலே ஆஸ்பத்திரி நெடியும் வயிற்றின் முன்னாலே தொங்கும் பிளாத்திக்கு மலப்பையும் முடிகொட்டிய உடலும் எல்லாவற்றுக்கும் விட்டேற்றியாக அவன் அள்ளி எறியும் வார்த்தைகளும்தான் மனதில் நிறைந்து நிற்கிறது. முதன்முதலில் அவர்கள் முத்தம் கொடுத்துக்கொண்ட கணம்கூட ஞாபகத்தில் இல்லை. இது எப்படிச் சாத்தியம்?

சட்டென்று அங்குப் பரவிய குளோரின் நாற்றம் மிருதுளாவை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது.

பணிப்பெண் ஒருத்தி தண்ணீரை வீசியடித்து கழிப்பறையைச் சுத்தம் செய்யத்தொடங்கினாள். பாவாடை சட்டை போட்டு நீண்ட ஒற்றைப்பின்னல் கட்டி, நெற்றியில் ஒரு டொலர் குற்றி அளவுக்குக் குங்குமப்பொட்டும் வீபூதிப்பட்டையும் அந்தப்பெண் அணிந்திருந்தாள். மிருதுளா அவளைப்பார்த்து வணக்கம் சொல்ல, புன்னகைத்தபடியே அவள் ‘சொறி மிஸ்’ என்றாள். இந்த ஊரில் எவருமே மன்னிப்பு கேட்கத் தயங்குவதில்லை என்று அவளுக்குத் தோன்றியது. தவறு ஏதும் செய்யாதபோதிலும் கேட்பவர் மனது குளிரட்டுமே என்றுகூட அவர்கள் மன்னிப்புக் கேட்கலாம். அல்லது நாம் செய்வது எல்லாமே தவறுதான் என்ற முன்முடிவாகவும் இருக்கக்கூடும். மிருதுளாவுக்குத் தானும் மற்றவர்களைப்போல யாழ்ப்பாணத்தில் பொட்டு வைத்தால் என்ன என்ற யோசனை வந்தது. வெறித்துப்பார்க்கும் நாற்பது கண்களில் நான்கைந்தாவது குறையலாம்.

மிருதுளா வெளியே வந்தபோது மனிதர்களும் ரயில்களும் இல்லாமல் நடைமேடைகள் வெறிச்சோடிக்கிடந்தன. மழை இன்னமும் நின்றபாடில்லை. அவள் நிலையத்து வாசலுக்கு வந்து நின்று தன்னுடைய ஆட்டோ டிரைவரைத் தேடினாள். அங்கே ஆட்டோ எதையும் காணவில்லை. சில கார்கள் தரித்து நின்றன. காவலாளியிடம் விசாரிக்கலாம் என்றால் அவன் மழைக்கு ஒதுங்கி வந்து கட்டடத்துக்குள் குறண்டிக்கிடந்த ஒரு குட்டை நாயைத் துரத்துவதில் மும்முரமாக நின்றான். நடேசன் வாகனத்தைப் பதிவு செய்ய மறந்துபோனாரோ என்ற சந்தேகத்தில் வட்ஸப்பில் அவருடைய தகவல்களை மறுபடியும் அவள் வாசித்துப்பார்த்தாள். 

“வணக்கம் மிஸ். நீங்கள்தானே மிருதுளா?”

தனியாக சூட்கேசும் கையுமாக வெள்ளைக்காரிகளின் உடுப்போடு மிரட்சியாக நின்றபோதே அற்புதராணிக்கு விளங்கிவிட்டது. இவள் போய்க் கேட்டதும் மிருதுளா மேலும் மிரண்டதுபோல தோன்றியது. அது அவளது தவறில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை யார்தான் எதிர்பார்ப்பார்கள்? ஆண்கள் என்றால் உடனேயே அசடு வழியப் புன்னகைத்தபடி அவளை ஏற இறங்கப் பார்ப்பார்கள். பெண்கள்தான் தயங்குவார்கள். தனியாகத் திரியும் பெண்கள் எல்லோருக்கும் தம்மை எப்போதும் யாரோ ஒருத்தர் ஏமாற்றுவதற்காகவே சுற்றித் திரிகிறார் என்ற எண்ணம் ஆழப்பதிந்துவிடுகிறது. அதிலும் வெளிநாட்டிலிருந்து வரும் பெண்களுக்கு அந்த அச்சம் விமான நிலையத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.

“நடேசப்பா மாஸ்டர் சொல்லி அனுப்பினவர். அவுஸ்திரேலியாவிலிருந்துதானே வாறிங்கள் மிஸ்? எண்ட பெயர் அற்புதராணி”, அப்போதுதான் மிருதுளாவின் முகத்தில் வெளிச்சம் கொஞ்சம் படர்ந்தது.

“ஓ நீங்கதான் அவரா? எப்படி இருக்கிறீர்கள் அற்புதராணி?”

அற்புதராணி அந்தரத்துடன் சிரித்தாள்.

“நல்லாருக்கிறன் மிஸ். பயணம் ஓகேயா? புது இண்டர்சிட்டி. பிச்சுக்கொண்டு வந்திருக்குமே”

மிருதுளாவுக்கு என்ன பதில் என்று சொல்வது என்று தெரியவில்லை. சாதாரண ரயிலின் வேகத்தில்தான் அது வந்ததுபோல அவளுக்குத் தோன்றியது.

“அற்புதராணி நீங்கள், வாகனம் ஏதும் கொண்டுவரவில்லையா?”

“சொறி மிஸ், நான் போய் ஆட்டோவை எடுத்தோண்டு வாறன். இவங்கள் இஸ்டேசனுக்க ஆட்டோவை விடுறாங்கள் இல்லை. இது ஆடுமாடுகள் எடுபட்டுத் திரிஞ்ச இடம் மிஸ். இப்ப கட்டிக்குடுத்தோன என்ன ஆட்டம் ஆடுதுகள். பெரியாக்களிண்ட வாகனம் எண்டா ரெயினுக்கயே நேரா ஓட்ட விடுவினம். எங்களுக்குத்தான் அவ்வளவு நடப்பும். கழுசறைகள்”

அவள் புறுபுறுத்தபடியே கைகளால் மழைக்குக் குடை பிடித்தபடியே இறங்கி ஓடினாள். மிருதுளா தானும் அவளைப் பின்தொடரவேண்டுமோ என்ற குழப்பத்தில் படிகளால் இறங்க அற்புதராணி திரும்பாமலேயே சொன்னாள்.

“மிஸ் ஒரு நிமிசம்தான். நீங்கள் அங்கேயே நில்லுங்கோ. இந்த மழைக்க இறங்கவேண்டாம்”

இரண்டே நிமிடத்தில் ஆட்டோ ஒன்று சீறிக்கொண்டு வந்து நிலைய வாசலில் நின்றது. அற்புதராணி இறங்கி வந்து மிருதுளா தடுத்தும் கேளாமல் அவளின் சூட்கேசினை எடுத்துக்கொண்டாள். மிருதுளாவை உள்ளே உட்காரச்சொல்லிவிட்டு சூட்கேசை இலாவகமாக பின் சீற்றில் நிமிர்த்தி வைத்தாள். சூட்கேஸ் தன்மீது சரிந்துவிடுமோ என்று மிருதுளா தயக்கத்துடன் அதனைப் பிடித்துக்கொண்டே கவனமாக உட்கார்ந்தாள்.

“பயப்பிடாதீங்க மிஸ். இது ராணிண்ட தேர். குலுங்காம நலுங்காம நைஸா போகும்”

சொல்லியபடியே அற்புதராணி ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்து மேல் முகப்பில் ஒட்டியிருந்த அடைக்கலமாதா படத்தைத் தொட்டு சிலுவைக்குறி இட்டுக்கொண்டாள். ஆட்டோவை மூன்று இழுவையில் இயக்கிவிட்டு மிருதுளாவிடம் திரும்பி ‘எங்கை போகோணும் மிஸ்?’ என்றாள். ‘இந்த முகவரிதான்’ என்று மிருதுளா தன்னுடைய செல்பேசித் திரையைக் காட்ட அதனை ராணி கண்களைக் குறுக்கி வாசிக்க முயன்றாள். சரியாக விளங்கவில்லை. ஆட்டோவை நிறுத்திவிட்டு அவள் அந்தச் செல்பேசியை வாங்கி ஆங்கிலத்திலிருந்த முகவரியை  ஆறுதலாக எழுத்துக்கூட்டி உச்சரித்தாள்.

“47 அம்..பல..வாணர் ரோட்..அத்..அட அம்பலவாணர் ரோட்டு, எங்கட அத்தியடி மிஸ். உதிலதான் இருக்கு”

ஆட்டோ மறுபடியும் உறுமியது.

“ஹோலி பமிலி கொன்வண்டில படிச்சனான் மிஸ். வலு பேமசான இங்கிலிஷ் இஸ்கூல். எனக்குத்தான் சவம் படிப்பு ஏறேல்ல. பதினெட்டு வயசிலேயே கலியாணத்தைக் கட்டி சீரழிஞ்சிட்டன். ‘குளோரி டு கோட் எலோன்’ எண்டதுதான் எங்கடை பள்ளிக்கூடத்திண்ட வாசகம். அதான் மிஸ் ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’.”

மிருதுளா சிநேகமாகச் சிரித்தாள். அவளுக்கு அற்புதராணியின் மொழி புரிந்தும் புரியாமலுமிருந்தது. அற்புதராணி வேகமாக யூ டேர்ன் அடித்துக்கொண்டு, வழியில் நின்ற ஆட்டோக்காரருக்கு ஏதோ சொல்லியபடி, ஸ்டேசன் ரோட்டால் வண்டியை விட்டாள்.

“மிஸ் இது ஜெட்விங் ஓட்டல்… அவ்வளவு வெள்ளையளும் இஞ்சைதான் வந்து தங்குறவை”

மிருதுளா ‘பார்டன்?’ என்று வெடுக்கனக் கேட்டவள் பின்னர் உணர்ந்தவளாய் ‘தமிழ் கொஞ்சம் கொஞ்சம். சொறி, மழைச்சத்தத்தில் கேட்கவில்லை’ என்றாள். அம்மா பேசிய, அவுஸ்திரேலியாவில் ஏனைய தமிழர்கள் பேசுகின்ற தமிழுக்கும் யாழ்ப்பாணத்தில் மனிதர்கள் பேசும் தமிழுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. இங்கே எல்லோருமே மிக வேகமாக மொழியைப் பேசுவதுபோல தோன்றியது. அவர்கள் வசனங்களின் இறுதி வார்த்தைகளை விழுங்கினார்கள். மற்றவர்கள் பேசும் முதல் வார்த்தையிலேயே மொத்தத்தையும் முன்முடிபு செய்தார்கள்.

“ஓகே மிஸ். திஸ் ஹோட்டல் ஜெட்விங். வெரி குட். ஒரு நிமிசம். பெற்றோல் அடிக்கோணும்”

அருகிலிருந்த பெற்றோல் செற்றில் ஆயிரம் ரூபாய்க்கு அற்புதராணி பெற்றோல் அடித்தாள். காசைத் தானே கொடுக்கவேண்டுமோ என்று மிருதுளாவுக்குக் குழப்பம் வந்தது. நேதுராமுடன் ஹைதரபாத் போகும்போதெல்லாம் அவர்கள்தான் வாடகை வாகனங்களின் எரிபொருளுக்குக் காசு கொடுப்பதுண்டு. அவள் தன் கைப்பையில் இலங்கை நோட்டுகளில் ஆயிரம் எது என்று ஆராயத்தொடங்கினாள். இதற்கிடையில் பெற்றோல் நிரப்பி காசையும் கொடுத்துவிட்டுத் திரும்பிவந்த அற்புதராணி ஆட்டோவை மறுபடியும் இயக்கினாள்.

“ரெடி மிஸ் … போற வழியில சுப்பர் மார்க்கட் எதிலயும் நிக்கோணுமா?”

மிருதுளா வேண்டாம் என்று சொல்ல ஆட்டோ அடுத்த மூன்றே நிமிடங்களில் அத்தியடியை வந்து சேர்ந்தது. அற்புதராணிக்கு வீட்டைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை. நாற்பத்தேழாம் இலக்க வீடு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலேயே இருந்தது. மிருதுளாவுக்குத்தான் குழப்பமாக இருந்தது. பலமுறை கூகிள் வரைபடத்திலும் காணியின் உறுதியிலும் நடேசன் அனுப்பிய படங்களிலும் பார்த்ததுதான். ஆனால் நேரிலே அது வேறு ஒன்றாகத் தெரிந்தது. காணிக்குள்ளிருந்த வீட்டை மறைத்தபடி பெரிய மாமரம் ஒன்று சடைத்து வளர்ந்திருந்தது. முற்றம் முழுதையும் விறகுகள் நிறைத்திருந்தன. ஆங்காங்கே பெரிய மரக்குற்றிகள். சில வேலையாட்கள் தூறும் மழையிலும் விறகு கொத்திக்கொண்டு நின்றார்கள். நிலமெங்கும் விறகுச் சுள்ளிகள் இரைந்து கிடந்தன. இவர்களின் ஆட்டோ வந்து நின்றபோது உள்ளிருந்து இரண்டு குழந்தைகள் ஓடிவந்தன. அவர்களுடைய வெற்றுக்கால்கள் மிதித்த தடங்களில் சுள்ளிகளோடு மழைச்சேறும் சேர்ந்து பறந்தது.

சூட்கேசை இறக்கிவைத்தவாறே அற்புதராணி கேட்டாள்.

“இது எங்கடை சிறி அண்ணரிண்ட விறகுக்காலை. நீங்கள் அவர்ட சொந்தக்காரரா மிஸ்?”

மிருதுளா தயங்கினாள். இது அவளின் சொந்த வீடு என்று எப்படிச் சொல்வது? நினைவு தெரிந்து ஒரு நாளேனும் அவள் காலடி எடுத்து வைக்காத வீடு. மிருதுளா கொழும்பில் பிறந்தவள். எழுபத்தேழாம் ஆண்டு அங்கு தமிழர்கள் தாக்கப்பட்டுத் துரத்தப்பட்டதில் அவளது குடும்பம் யாழ்ப்பாணத்துக்குத் தப்பிவந்து இந்த வீட்டில்தான் தங்கியிருந்ததாம். ஆனால் அடுத்த வருடமே அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஓடிவந்துவிட்டார்கள்.

“இல்லை … இது என் அம்மாவின் வீடு. மிஸ்டர் சிறிதரன் இங்கே வாடகைக்கு இருக்கிறார்.”

“ஓ … நான் இது அவர்ட வீடெண்டுதான் நினைச்சுக்கொண்டிருந்தன். நானும் இந்தப்பக்கம்தான் மிஸ். பேக்கரி லேன்ல இருக்கிறன். மிஸ் யாப்பாணத்துக்கு அடிக்கடி வருவீங்களா?”

“இல்லை. ஐந்து வயதிலேயே ஒஸ்ரேலியாக்குப் போய்விட்டோம். நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் வருகிறேன். இங்கே எல்லாமே எனக்குப் புதுசு.”

“அதுதான் மிஸ் எங்கடை ஊர். வாழைக்கிழங்குமாதிரி. எவ்வளவு கிண்டி அகத்தினாலும் அடுத்த கிழமையே புதுசா ஒரு முளை வந்து ஜம்மெண்டு நிக்கும். ஊரை சுத்திப்பாக்கவா வந்திங்கள்? நானே காட்டுறன். மட்டக்கிளப்புவரைக்கும் ராணிண்ட ஆட்டோவிலேயே போலாம்.”

மிருதுளா தயங்கினாள். அற்புதராணியிடம் சொல்லலாமா வேண்டாமா? சொல்வதில் நட்டமில்லை. யார் கண்டார்? அவளே வாங்குபவரைக் கூட்டி வரலாம். அல்லது முடிந்தால் அவளே வீட்டை வாங்கிக்கொள்ளவுங்கூடும். அவுஸ்திரேலியாவில் வாடகை டக்ஸி ஓட்டும் சீக்கியர்கள் எல்லோரும் குறைந்தது மூன்று வீடுகளேனும் வைத்திருப்பதுண்டு. மிருதுளாவுக்குத் தான் எந்தக்காலத்திலும் சொந்த வீட்டில் வசிக்கவேயில்லை என்பதை நினைக்க மலைப்பாக இருந்தது. அப்பாவுக்கு ஏனோ அவுஸ்திரேலியாவில் வீடு வாங்கவேண்டும் என்ற ஆசையே இருக்கவில்லை. எப்படியோ ஊருக்குத் திரும்பப்போகிறோம், எதற்காகக் கொள்ளையாகக் காசை அந்த நாட்டில் கொட்டவேண்டும் என்று சொல்லிச்சொல்லியே அவரது வாழ்வு மறைந்துபோனது. திருமணத்துக்குப் பின்னர் பெயருக்குச் சொந்த வீட்டில் வாழ்ந்திருந்தாலும், வீடு எப்போதும் வங்கிக்கடனில் தத்தளித்து கணவனின் மரணத்தோடு அப்படியே மூழ்கிப்போனது.

“இல்லை. வீட்டை விற்கப்போகிறேன். பூர்வீகச் சொத்து, விற்கக்கூடாது என்றுதான் இருந்தோம். சென்ற வருடம் அம்மாவும் இறந்துபோனார். நானும் இனி இங்கு வரப்போவதில்லை. அவசரமாகப் பணத்தேவையும் இருகிறது…அதுதான்”

“ஓ விக்கப்போறிங்களா மிஸ்… ஆருக்கு குடுக்கிறதெண்டு முடிவெடுத்திட்டிங்களா? இந்த ஏரிய நல்ல விலை போகும். டவுனுக்குக் கிட்ட. கொன்வண்டு பள்ளிக்கூடமும் பக்கத்திலதான்.”

“எனக்கு எதுவுமே தெரியாது. நடேசன்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார். உங்களுக்கும் தெரிந்தவர் யாரும் இருந்தால் சொல்லிவையுங்கள்.”

மிருதுளாவுக்கு அற்புதராணியின் பெயர் உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சேர்ட்டை அவசரமாக அணிந்துகொண்டு ஒரு நடுத்தர வயதுக்காரர் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். கையோடு தான் கொண்டுவந்திருந்த குடையை விரித்து மிருதுளாவிடம் கொடுத்தார். அவரும் அற்புதராணியும் மழையில் நனைந்தபடி நிற்க தான் மட்டும் குடைபிடிப்பதா என்று மிருதுளா சங்கடப்பட்டாள்.

“வாங்கோ மிருதுளா மிஸ். நாந்தான் சிறி. நடேசப்பா சொன்னவர். சொறி. எனக்கு ஒரு லோடு பறிக்கக்கிடந்தது. இல்லாட்டி இஸ்டேசனுக்கு வந்திருப்பன்.”

மிருதுளா புன்னகைத்தபடியே ‘பரவாயில்லை’ என்றாள். அதுவரை தூரத்தே நின்று புதினம் பார்த்த அந்த இரு குழந்தைகளும் இப்போது சிறியின் கால்களுடன் வந்து உரசிக்கொண்டு நின்று அவளை விடுப்புப் பார்த்தன. ‘எண்ட பிள்ளையள் மிஸ்’ என்று அவர் அறிமுகப்படுத்த மிருதுளா அவர்களைப் பார்த்து ‘ஹாய்’ என்று சிரித்தாள். சிறி அற்புதராணியிடமிருந்து சூட்கேசை வாங்கிக்கொண்டார். மிருதுளா அற்புதராணியிடன் ஆட்டோ கட்டணம் எவ்வளவு என்று கேட்க, அவள் வெயிட்டிங் சார்ஜும் சேர்த்து இருநூறு ரூபா என்று சொன்னாள். மிருதுளா தன் கைப்பையிலிருந்து இலங்கை நோட்டுகளைத் துலாவத் தொடங்கினாள்.

“அதான் மிஸ். சிவப்புத்தாள். நூறு ரூபா”, அற்புதராணி கைகாட்ட மிருதுளா சிரித்தபடி மூன்று நோட்டுகளை எடுத்துக்கொடுத்தாள். முந்நூறு ரூபாய் என்றால் இரண்டு அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகின்றன. அவுஸ்திரேலியாவில் என்றால் இருபது டொலர்களாவது அறவிட்டிருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. இரண்டாயிரத்துச் சொச்சம் ரூபாய்.

“ஒரு நான்கு மணி நேரம் கழித்து வரமுடியுமா? நான் குளித்துத் தயாராகிவிடுவேன். மிஸ்டர் கேசவன் என்பவரிடம் செல்லவேண்டும். காணிப்பதிவாளர். தெரியுமா? கல்விய…”, மிருதுளா தன் செல்பேசியிலிருந்த முகவரியைச் சிரமப்பட்டு வாசித்தாள்.

“கல்வியங்காடு மிஸ். புரொக்டர் கேசவன். இஞ்ச எல்லாருக்கும் தெரியும். நான் ஒரு நாலரைபோல வாறன். மிஸ் வந்ததுக்கு சாப்பிடேல்ல. ஏதும் வாங்கியோண்டு வரட்டா?”

“இல்லை வேண்டாம். நீ போய்ட்டுப் பேந்து வா. அவவுக்கு எங்கட வீட்டிலதான் சாப்பாடு. எல்லாம் ரெடியாக இருக்கு. நீங்க வாங்கோ மிஸ். வந்து உங்கட வீட்டை வடிவா சுத்திப்பாருங்கோ… சுள்ளியள் ஏறிடும். கவனமா நடவுங்கோ.”

சிறி சேறு படாதவாறு சூட்கேசை உயர்த்தித் தூக்கிக்கொண்டு முன்னே நடந்தார். அவரின் இரு குழந்தைகளும் தாமும் அதைத் தூக்கவேண்டும் என்று சூட்கேசை எட்டித்தொட்டபடி கூடவே இழுபட்டுப்போய்க்கொண்டிருந்தன. மிருதுளா அந்தச் சகதிக்குள் தடுக்கி விழாதவண்ணம் மிகக் கவனமாக நடந்துபோனாள்.

திருவிழாச் சாமி இருப்புக்குத் திரும்புவதைப்போலப் போய்க்கொண்டிருந்த அந்தக் குட்டி ஊர்வலத்தை அற்புதராணி சில கணங்கள் பார்த்துக்கொண்டேயிருந்தாள். என்றைக்காவது ஒருநாள் தனக்கும் எங்காவது அப்படி ஒரு வரவேற்பு கிடைக்காதா என்று அவளுக்கு ஆயாசம் ஏற்பட்டது. கடந்த மாதம் அவளது கருப்பையை அகற்றவேண்டிவந்தது. சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியிலிருந்து துண்டு வெட்டியபின்னர் அவளது கணவன்தான் தன் ஆட்டோவில் வந்து அவளைக் கூட்டிக்கொண்டு போனான். அன்றைய தினத்துக்கான அவர்களது மதிய உணவினை அவன் கடையிலிருந்து வாங்கி வைத்திருந்தான். மாலை சிறு தூக்கம் போட்டு எழுந்து இரவு உணவை அவளே சமைக்கவேண்டியிருந்தது. குழந்தைகளுக்கோ தம் தாய்க்காரி ஆஸ்பத்திரி போனதோ, கருப்பையை அகற்றியதோ, திரும்பி வந்ததோ எந்தச் சலனத்தையும் கொடுக்கவில்லை. இரண்டே நாட்களில் அவள் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துவிட்டாள். உலகத்தின் ஏனைய மனிதர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகளே இருப்பதில்லை என்று தோன்றியது. எல்லோருக்கும் சொந்தமும் சுற்றமும் சொத்தும் சூழ்ந்து கிடக்கிறது. அவளுக்குத்தான் எப்பனும் இல்லை. அவள் ஊர் ஊராய் ஆட்களை அழைத்துச்செல்கிறாள். அவளது ஆட்டோவில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா என அத்தனை கண்டங்களும் ஏறி ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டன. ஆனால் அவளால் பக்கத்திலிருக்கும் மடுக்கோயிலுக்குக் குடும்பத்தோடு போய்வரமுடியாமலிருக்கிறது. என்ன வாழ்க்கை இது? ஒருத்தி நாள் முழுதும் ஆட்டோவும் ஓட்டி, வீட்டையும் பராமரித்து, குழந்தைகளையும் கவனித்தபடி குண்டுக்கட்டாய்த் திரிகிறாள். சதா இரத்தப்போக்கும் வலியும் தாங்காமல் ஒருநாள் தன் கருப்பையை அறுத்தெறிந்துவிட்டு ஒரு மனுசி வீட்டில் வந்து நிற்கிறது. ஆனால் இவ்விடம் ஒரு சலனமுமில்லை. வீட்டு மனிதர்களைப் பொறுத்தவரையில் அவள் ஒரு அருவம்தான். அவள் தன் வேலைகளை நியமமாகச் செய்துகொண்டிருக்கும்வரை அவளை எவருமே ஏறெடுத்துப்பார்க்கப்போவதில்லை. கணக்கு இல்லை. ஒருநாள் கண்ணை மூடி நடுவீட்டில் பிரேதமாய்க் கிடக்கும்போதுதான் சனியனுகளுக்கு இந்த அருவம் உருவமாகத் தெரிய ஆரம்பிக்கும்.

“சவங்கள்”

மரத்து இலையொன்றில் முகிழ்ந்து சளிந்த பெரும் மழைத்துளி ஒன்று ஈட்டிபோல அற்புதராணியின் கன்னத்தில் குத்தி வழிந்தது. அவள் ஒரு பழைய துணியால் ஆட்டோவின் பின் இருக்கையில் சிதறிக்கிடந்த மழை நீரையும் சூட்கேஸ் சேற்றையும் மிருதுளாவின் ஈரத்தடத்தையும் சுத்தமாகத் துடைத்துவிட்டுத் தன் இருக்கைக்கு வந்தாள். மிருதுளாவின் ஊர்வலம் இப்போது வசந்தமண்டபத்தை எட்டிவிட்டிருந்தது. வீட்டுப் போர்ட்டிகோவின் விளிம்பில் நின்று மிருதுளா குடையை மடித்து உதறுவது தெரிந்தது. மிருதுளாவுக்கும் அவளின் வயதுதான் இருக்கலாம். பருத்திப்பாவாடை. மேலே பனியன். பனியன் நிறத்துக்கு உறுத்தாமல் வெளித்தெரியும் பிரா ஸ்றாப்புகள். கொஞ்சங்கூட சள்ளையில்லாத இடுப்பு. வீதியான நீட்டுப் பாவாடை. எப்படி இவர்களால் இந்த வயதிலும் சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள முடிகிறது? தன்னால் இப்படி ஒருநாளாவது உடையணிந்து இந்த நகரத்தில் உலாவ முடியுமா? வீட்டு முற்றத்தில்கூட நடமாட இயலாது. எத்தனை பார்வைகள். எத்தனை கேள்விகள். அவள் கணவனே காறித்துப்பி வீட்டைவிட்டுத் துரத்தக்கூடும். அற்புதராணி ஆட்டோ முன் மேற் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். நனைந்தும் அடங்காமல் அவளது அடர்த்தியான மயிர் சிலிர்த்துக்கிடந்தது. மிருதுளாவைவிட அவள் சிவலைதான். படிக்கும் காலத்தில் அவள் பின்னால் திரிந்த ஆண்கள் எல்லோரும் ஞாபகத்துக்கு வந்தார்கள்.

ராதாரமணன் ஞாபகத்துக்கு வந்தான்.

இருவருமே கொழும்புத்துறைதான். பத்தாம் வகுப்பிலிருந்தே அவனுக்கு அவள்மீது ஒரு கண் இருந்தது. ஆனால் கேட்பதற்குத் தைரியமில்லை. அவளுக்குமே கொஞ்சம் ஆசையிருந்தாலும் விட்டுப்பிடித்தாள். படிக்கும் காலத்தில் அவளுக்காக ஒரு தேவகுமாரன் வானத்திலிருந்து குதித்து வந்து முன்னால் நிற்பான் என்று மடத்தனமாக நினைத்துக்கொண்டிருந்தாள். ராதாரமணனிடம் அவளே போய்ப் பேசியிருக்கலாம். ஆனால், தொடர்ந்து அலைகிறான், கேட்கிறான் என்பதற்காக யார் என்றே அறியாத ஒருத்தனோடு பேச்சுக்கொடுத்தது தப்பாகிப்போய்விட்டது. அவள் காதலிக்கத்தொடங்கி ஆறாம் மாதம்தான் ராதாரமணனுக்குத் தைரியம் வந்திருந்தது. அதுவும் கனடாவின் குடியுரிமை கொடுத்த தைரியம். அவனது கடிதம் அவளை வந்து எட்டியபோது இவர்களின் காதல் ஆறு கடந்து கடந்து மலையும் ஏறிவிட்டது. அப்போதுகூட அவள் மனதை மாற்றியிருக்கலாம்தான். ஏனோ ஒரு பிடிவாதக்குணத்தில் இன்று வாழ்க்கை பரிசு கெட்டுவிட்டது.. அற்புதராணி மனதுள் எழுந்த எண்ணத்தை அக்கணமே எச்சிலை விழுங்கிப் புதைத்துக்கொண்டாள். திருமணமாகி, குழந்தைகளும் பாடசாலைக்குப் போகின்ற காலத்தில் அவளுக்கு ஏன் இப்படியான எண்ணங்கள் வருகின்றன? அவள் முடிவுகளுக்கு அவளே பொறுப்பு எடுக்கவேண்டும். ஆட்டோ ஓட்டிப்பிழைக்கும் பஞ்சப்பாட்டு வாழ்க்கை என்பது அவளது தெரிவு. அதை நொந்து பயனில்லை. ராதாரமணன் என்பது அவளது வாழ்க்கையில் நிகழ மறுத்த அதிசயம். அவளுக்குள்ளேயே எங்கோ ஒரு குச்சொழுங்கையின் கரையோரத்து அறுகம்புற் புதருக்குள் வீசியெறியப்பட்ட மக்கிய செப்பு நாணயம் அது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ராதாரமணன் அவள் வீட்டுக்குத் தேடிவந்தபோதுதான் அந்த நாணயம் மீண்டும் காலிடுக்கில் இடறியது. அவன் இன்று கனடாவில் இரண்டு சுப்பர்மார்க்கட்டுகளுக்குச் சொந்தக்காரனாம். காணி, வீடு, கார் என்று வசதியாக வாழ்கிறான். அழகான மனைவி. இரண்டு குழந்தைகள். அவன் தன் குடும்பத்தோடுதான் அவளது வீட்டுக்கு வந்தான். மனைவியை அறிமுகப்படுத்திவைத்தான். கணவனோடு இயல்பாகப் பழகினான். தேநீர் குடித்துவிட்டுப் போகும்போது அவனது மனைவி அற்புதராணியின் மூத்த மகளின் கைகளுக்குள் ஐம்பதினாயிரம் ரூபாய்கள் அடைத்த கடித உறையைத் திணித்துவிட்டுச் சென்றாள். அவள் கணவனுக்கு சேர்ட்டும், பிள்ளைகளுக்கு சொக்கிலேட்டுகளும் அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். அற்புதராணிக்கு ஒரு செண்டுப் போத்தில் கிடைத்தது. அதனைத் திறந்தாலே வாசம் எட்டூருக்கும் பரவியது. அவள் தட்டிக்கழித்த வாழ்க்கையின் வாசம். மிக எளிதாக, ஆதரவான புன்னகையோடு, யாரோ ஒரு ஏழை வீட்டின் சிறுமியின் கையில் ஐம்பதினாயிரம் ரூபாயைத் திணிக்கக்கூடிய அற்புதராணியிடமிருந்து வந்திருக்கவேண்டிய வாசம். கட்டில் காலைத் தெரியாமல் உதைத்த காற் சின்னி விரலைப்போல அற்புதராணியின் உடலெல்லாம் வலியெடுத்தது. ஏன் இந்த நாசங்கெட்ட சீவியம் அவளுக்கு வந்து சேர்ந்தது? அவள் தன் முகத்தை ஆட்டோவின் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேயிருந்தாள். இந்த முகத்துக்காக ராதாரமணன் அடைக்கலமாதா கோயில் முன்றிலில் வந்து தவம் கிடந்த காலங்கள் ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அவளுக்கு முகமெல்லாம் ஊதி கட்குழியில் வேறு ஊஞ்சல் விழுந்துவிட்டது. தாடையில் அரிசி மூட்டை தொங்குகிறது. ஒரு உதவாக்கரை மண்ணில், உருப்படாத இனத்தில், அதற்குள்ளும் ஒடுக்கப்பட்ட சாதியில் ஏழையாகப் பிறக்கின்ற விதி எவருக்கும் வேண்டாம். அவளுக்கு மிருதுளாவை நினைக்கப் பொறாமையாக இருந்தது. எவ்வளவு தைரியமான பெண் அவள். யாருக்கும் தலை குனியாமல், எடுப்பாக, இந்த வயதிலும் இளமையாக, நுனி நாக்கில் கரையும் தமிழோடு, வெறுமனே ஒரு பாவாடை பனியனோடு, விட்டால் ஆயிரம் ராதாரமணன்களை இன்னமும் அலைய வைக்கக்கூடிய அழகோடு எப்படி இவளால் இருக்கமுடிகிறது? இருவரும் ஒரே ஊரில்தானே பிறந்தோம்? ஆனால் அவளுக்கு ஒரு குபேர வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த அடைக்கலமாதா எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்தாள்? அவளைத் தங்கப்பேழையில் சுருட்டிச் செல்வந்த தேசத்துக்கு வழியனுப்பி வைத்துவிட்டு என்னை மட்டும் ஏன் நாதியற்றவளாய் வீதியோரத்தில் வீசியெறிந்தாள்? தான் அறியாத, வளராத, நாற்பது வருடங்களாக எட்டியே பார்க்காத நகரத்தில் மிருதுளாவுக்கு என்று பெருங் காணியும் வீடும் காத்துக்கிடக்கிறது. ஆனால் இங்கேயே அடிபட்டு, சீரழிந்து, அன்றாடச் சீவியத்துக்கும் அடுத்தவேளை சோற்றுக்கும் திணறிக்கழிக்கும் எனக்கு மட்டும் ஏன் என் சொந்த மண்ணில் சிறு துண்டு நிலம்கூடக் கிடையாமற்போனது? இளமையில் அவள் புறந்தள்ளிய ஆணின் மனைவியிடமே கை நீட்டிப் பணம் வாங்கும் இழிவு எப்படி அவளை வந்தடைந்தது? எம்மைக் காலடியில் போட்டு மிதித்துக்கொண்டு பாவிகளையும் பணக்காரர்களையும் மன்னித்து அடைக்கலம் கொடுப்பதுதான் அடைக்கலமாதாவா? கிடையாது. இவள் ஒரு அரக்கி. வழி தவறி ஒதுங்கிய ஏழைக் குழந்தைகளைக் கூட்டுக்குள் அடைத்து தன் வயிற்றுப்பாட்டுக்காக வளர்த்துக்கொள்ளும் சூனியக்காரி.

அற்புதராணியின் செல்பேசி அலறியபடியே அவள் கணவனின் முகத்தைக் காட்டியது.

“ராணி … காக்கைதீவு அயர் ஒண்டு வந்துது. அப்பிடியே வாற வழியில அஞ்சு திரளிய வாங்கியொண்டு வந்தனான். அது நாறிப்போகமுதல் அடுப்புல ஏத்திவிடு. நான் உலையை வச்சிட்டு வெளிக்கிடுறன். இன்னொரு அயர் ஒண்டுக்கு அவசரமாப் போகோணும்”

அற்புதராணிக்கு எரிச்சல் வந்தது. மீன் என்றாலும் அவளுக்கு வாய்ப்பது என்னவோ திரளிதான். அதுவும் நாறிய சல்லித் திரளி.

“மூதேசி. எனக்குப் பள்ளிக்கூட அயர் இருக்கெண்டு தெரியாதா? இரண்டு மணிக்கு ஏத்தப்போகோணும். அதுக்குள்ள எப்பிடி சமைக்கிறது? ஏன் இப்ப அந்த நாறலை வாங்கினனி?”

“சரி சரி .. கத்தாதை… அயரை முடிச்சிட்டுப் போய் கறியை வை. பத்தியமா வை. பாவம் இரண்டாவது பெரிசாகி ஒரு மாசங்கூட ஆகேல்ல. அதுக்கு ஆன தீன்கூடக் குடுக்காம நாம ஓடித்திரியிறம்”

அற்புதராணி விசனத்தோடு அழைப்பைத் துண்டித்தாள். மழை மறுபடியும் தூற ஆரம்பித்திருந்தது. ஈரத்தில் தோய்ந்திருந்த அவளது காக்கிச்சட்டையின் நெடி மூக்கில் அடித்தது. முதலில்போய் இந்தச் சனியனைத் தோய்த்துப்போடவேண்டும். சமைப்பதற்கு நேரம் இல்லை. அந்தத் தரித்திரம் பிடித்த திரளியை அவித்து வைத்துவிட்டு பாடசாலை அயர்களை முடிக்கவேண்டும். அது முடிய அவளது பிள்ளைகளையும் போய்க் கூட்டிவரவேண்டும். பின்னர் அவசரமாக ஒரு கறியை வைத்து இறக்கி அதுகளுக்கு சாப்பாடு கொடுக்கலாம். நான்கு மணிக்கு சுதர்சனுடைய சீட்டு ஏலம் இருப்பதும் ஞாபகம் வந்தது. கோதாரிபிடிச்சவங்கள், அவள் போகாவிட்டால் தமக்குள்ளேயே கூறி முடித்துவிடுவார்கள். அங்கு முகத்தைக் காட்டிவிட்டுத்தான் மறுபடியும் மிருதுளாவிடம் வரவேண்டும்.

சர்க்கென்று அற்புதராணிக்கு செருப்பினடியில் ஏறியிருந்த முள்ளொன்று பாதத்தைக் குத்தினாற்போலத் தோன்றியது .

மிருதுளாவின் வீட்டினை அவர்களே வாங்கினால் என்ன?

முதலில் தனக்கு மண்டைப்பிழை என்று அந்த நினைப்பை அவள் அடித்து விரட்டினாள். ஆனால் போகப்போக முள் தொடர்ந்து நெருட ஆரம்பித்தது. அந்த வீட்டின் விலை ஒரு கோடிவரைக்கும் போகக்கூடும். அதற்கு மேலாகவும் செல்லலாம். இரண்டு பரப்புகளுக்குக் குறையாத காணி. நகரத்துக்கு அருகிலேயே என்பதால் ஒன்றரைக்கோடிக்கு வாங்குவதற்கும் ஆட்கள் வருவார்கள். ஒன்றரைக்கோடி என்றால் நூற்றைம்பது இலட்சங்கள் அல்லவா? ஒரு இலட்சத்தைப் புரட்டவே அவர்களுக்கு மூச்சு முட்டிவிடுமே. சவம் வேண்டாம். சற்று நேரம் வீடு வாங்கும் எண்ணத்தை விரட்டிவிட்டு அற்புதராணி ஆட்டோவைக் கவனித்து ஓட்டுவாள். அடுத்த கணமே முள்ளு பாதத்தினைத் தனக ஆரம்பித்துவிடும். அதற்குத்தானே சீட்டு பிடிக்கிறார்கள்? ஏனைய தவணைக்காரர்களிடம் பேசி, அதிகம் கழிவில்லாமல் கூற முடிந்தால் சீட்டுக்காசு பத்து இலட்சங்கள்வரை தேறலாம். அப்புறம் இரண்டு ஆட்டோக்களில் ஒன்றை விற்றால் ஐந்து இலட்சங்கள் வந்துவிடும். நகைகள் எல்லாமே ஏலவே அடமானம் வைக்கப்பட்டிருந்தன. நோர்வேயில் வாழும் சித்தியின் மகளான நேசமலரிடம் கேட்டுப்பார்க்கலாம். கணவனின் குடும்பத்திலும் ஓரிரு மச்சான்மார்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அங்கும் ஒரு பத்து இலட்சத்தை உருட்டிவிட்டால் மொத்தமாக நாற்பது இலட்சங்கள் கையில் வந்துவிடும். நாற்பது இலட்சங்கள் எங்கே? நூற்றைம்பது இலட்சங்கள் எங்கே? அவளுக்கு மூச்சு முட்டியது. சனியன். ஒரு தாலி அறுந்த வீட்டுக்காக மீளாக்கடனில் மூழ்கி அவர்களது வாழ்க்கையையே நரகமாக்கவேண்டாம்.

பாதம் இப்போது முள்ளிருக்கும் ரப்பர் பகுதியை மிதிக்காமல் தவிர்த்து நடக்க ஆரம்பித்தது. அற்புதராணி வழியில் மறித்த சவாரிகளைக் கவனியாதவளாய் வீட்டை நோக்கி வேகமாக விரைந்தாள். மறுபடியும் முள்ளு ஆழமாகக் குத்தி சீவனைத் தின்றது. நாற்பது இலட்சங்களைப் புரட்டி மிருதுளாவிடம் முன்பணமாகக் கொடுத்து மீதியை அப்புறம் மாதாமாதம் தருவதாகக் கேட்டுப்பார்க்கலாம். அவள் அதனை மறுக்கமுடியாது. ஓசியாகக் கிடைத்த வீடு அல்லவா? அதில் எப்படி அவள் கொள்ளை இலாபம் பார்க்கலாம்? இந்த மண்ணின்மேல் சவாரிசெய்துதானே அவர்கள் தமது இராஜபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்? கொஞ்சம் இளகிப்போனால் என்ன? அவள் ஒன்றும் இலவசமாகக் கேட்கவில்லையே? அவகாசம்தானே கேட்கிறாள்? அப்படியும் மறுத்தால் ஏதாவது ஒரு வங்கியில் லோன் கேட்கவேண்டும். முகப்புக்கு ஒரு வங்கி முளைத்து நிற்கிறது. அதில் ஒன்று கூடவா அவளுக்குக் கடன் தராமற்போகும்? முள்ளு இப்போது ஆழமாகப் பாதத்தினுள் ஏறியது. வலியில் அலறியபடியே அவள் தான் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி வீசிவிட்டு வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தாள்.

ராதாரமணனிடம்தான் கேட்கவேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். மூன்றாவதும் தயாராக நிற்கிறது. எதற்காக அவளுக்கு இந்த வீம்புப் பிடிவாதம்? கேட்பதில் தவறில்லை. கடனாகத்தானே. ராதாரமணன் மறுக்கமாட்டான். அவன் ஒரு முப்பது இலட்சங்கள்வரை தந்தான் என்றால் எழுபது இலட்சங்கள் ஆகிவிடும். மிருதுளாவின் வீடு பழையது. அதற்கு மதிப்பில்லை. அம்பலவாணர் வீதியில் வெறுங்காணிக்கு ஒன்றரைக்கோடியை யார் அழப்போகிறார்கள்? ஒரு கோடிக்குப் போனாலே அதிசயம்தான். மிருதுளாவும் அவசரமாக விற்பதற்காகத்தானே வந்திருக்கிறாள்?தொண்ணூறு இலட்சங்கள்வரை கேட்டுப்பார்க்கலாம். நடேசப்பாவிடம் பேசிப்பார்க்கவேண்டும். ராதாரமணனே ஒரு வட்ஸப் அழைப்பு எடுத்துச்சொன்னால் அவர் கேட்பார். அவன் மட்டும் சாட்சிக் கையெழுத்து போட்டான் என்றால் காரியம் ஆகிவிடும். எப்போதோ சிறு வயதில் காதலித்த பெண் என்பதற்காக அவ்வளவு பெரிய பணத்தைத் தூக்கிக் கொடுப்பானா? அற்புதராணிக்கு சிரிப்பு வந்தது. காதலித்த பெண்ணா? முறையாக அவர்கள் ஒரு வார்த்தை பேசியிருப்பார்களா? கேவலம்தான். ஆனால் ராதாரமணன் மறுக்கமாட்டான் என்றே தோன்றியது.  கேட்கின்ற காசை மொத்தமாக ஐம்பது இலட்சங்களாகக் கேட்டுவிட்டால் அந்தப் பழைய வீட்டைக் கொஞ்சம் திருத்திவிடலாம். ஐம்பதினாயிரம் ரூபாய்களை ஒரு குழந்தை கையில் எதேச்சையாகத் திணிப்பவர்களுக்கு ஐம்பது இலட்சம் பெரிய தொகையாக இருக்கப்போவதில்லை. வீட்டோடு சொந்தமாக ஒரு வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டால் இப்படி ஆட்டோவில் ஊரெல்லாம் அலைந்து கண்டது நிண்டதுகளைக் ஏற்றிக்கொண்டு திரியத்தேவையில்லை. ராதாரமணனுக்கு அவள் மனதார நன்றி சொன்னாள். அவன் மட்டும் இல்லை என்றால் வீடு வாங்குவதுபற்றி அவள் நினைத்தே பார்க்கமுடியாது. எல்லாம் நல்லபடியாக முடிந்தால் அவன் ஊருக்கு வரும்போது ஆடு ஒன்றை அடித்து அவன் குடும்பத்துக்குத் தடபுடலாக விருந்து படைக்கவேண்டும். அவள் கணவனை அன்றைக்காவது குடிக்காமல் இருக்கச்சொல்லவேண்டும். ஒழுங்காக ஒரு சேர்ட்டும் ஜீன்சும் வாங்கிக்கொடுத்து முகத்தைச் சவரம் செய்யவைத்து மனுசன்போல அவனை மாற்றவேண்டும். அவள் கணவன் நல்லவன்தான். ஆனால் அப்பாவி. இந்தப் பூமியில் வந்தோம், பெற்றோம், வாழ்ந்தோம், போனோம் என்று கவலைகள் இன்றி வாழும் பிறவி. அந்தச் சூனியக்காரி போடும் உணவினை உண்டு களித்து அவள் சொல்லும்போது சந்தோசமாகக் கொதி பாத்திரத்துக்குள் ஏறிக்குதிக்கத் தயாராக இருக்கும் ஒரு பாவப்பட்ட சீவன். குழந்தைகள் விளையாடும் கிளே களிபோல எப்படி வேண்டுமானாலும் அதனைப் பிசைந்து உருமாற்றிக்கொள்ளமுடியும். பணம் ஒன்றுதான் அவர்களது பிரச்சனை. பணம் வந்துவிட்டால் அப்புறம் வாழ்வு எவருக்குமே சொர்க்கமாகிவிடுகிறது. புதுவீட்டுக்குப் போய்ச் செட்டிலானபின்னர் எல்லோரும் குடும்பமாக வேளாங்கண்ணிக்குக்கு சென்று மரியம்மாவுக்கு ஒரு மெழுகுதிரி கொளுத்தவேண்டும்.

மெல்லிய குளிர்காற்றில் ஈரச்சட்டை அவள் உடல் முழுதையும் கூச்செறிய வைத்தது.

000

“போகலாமா?”

இரண்டாம் தடவையும் மிருதுளா சத்தமாகக் கூப்பிட்டபின்னர்தான் அற்புதராணி சுயநினைவுக்கே வந்தாள்.  அவளைப் பார்த்து ‘சொறி மிஸ், ஏதோ யோசனை’ என்றவாறு ஆட்டோவை இயக்கினாள். மிருதுளா வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்த கேசவனுக்கு கை அசைத்து நன்றி சொல்லிவிட்டு, மெதுவாக ஆட்டோவுக்குள் ஏறி உட்கார்ந்தாள். ஈரக் குடையை வெளியே பிடித்து மடித்து உதறிவிட்டுத் தன் காலடியில் போட்டாள். ஒரு பிருமாண்டமான சாண்டிலியர் விளக்கு நொருங்கி விழுவதுபோல மழைத்துளிகள் கண்ணாடிச்சிமிழ்களாய்ச் சிதறிக்கொண்டிருந்தன. ஆனாலும் மிருதுளாவுக்கு வேர்த்தது. கேசவன் வீட்டில் கொடுத்த சூடான தேநீர் அவளது நாக்கினை அவித்துவிட்டிருந்தது. கொழும்பில் அவசரமாக வாங்கிய சல்வாரின் கைகளும் இடுப்பும் இறுக்கித்தள்ளின. சமையலறை ஈரத்துணியைச் சுருட்டிவைத்ததுபோல கமக்கட்டு கசகசத்துக்கொண்டிருந்தது. பேசாமல் அவள் சட்டையையே அணிந்து புறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. நெகிழிப் பையினால் சுற்றப்பட்டிருந்த தன் கைப்பையை அவள் ஈரம் தட்டிவிட்டு மடியில் வைத்தாள். உள்ளே அவளது வீட்டினது உறுதிப்பத்திரங்கள் இருந்தன. முகம் அறிந்திராத அவளது தாத்தா கட்டிய வீட்டினது பத்திரங்கள். வெறும் ஐயாயிரம் இலங்கை ரூபாய்களுக்கு வாங்கிய காணி அது. அவர் மரணத்துக்குப் பின்னர் அவளது அம்மாவுக்கும் இப்போது அம்மாவின் மரணத்துக்குப் பின்னர் அவளுக்கும் வந்து சேர்ந்திருக்கிறது.

சந்தையொன்று கடந்துபோனது. எங்கிருந்தோ வந்த புதுப் புண்ணாக்கின் வாசம் மிருதுளாவின் நாசியை நிறைத்தது.

“செக்கு மிஸ். மாடு பூட்டி இழுக்கிறினம். அசல் நல்லெண்ணெய். ஆனா மரண விலை. வெளிநாட்டுக்காரர்தான் வாங்கிறது. நாம தொடேலாது”

மழைக்கு மத்தியிலும் கடையில் கூட்டம் முண்டியடித்தது. பல காற்சட்டைகள். பிரபல பிராண்டுகள். இந்த ஊரில் யார் உள்ளூர் யார் வெளிநாட்டார் என்பதை மிருதுளாவால் அனுமானிக்கமுடியவில்லை. அரைக்கை சேர்ட்டுப்போட்டவர்கள் எல்லோரும் உள்ளூராக இருக்கவேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். வரிசையைத் தொலைத்த எறும்புகள்போல நாலாபுறமும் மோட்டார் சைக்கிள்கள் பறந்து திரிந்தன. பூட்டிக்கிடந்த கடையொன்றின் தாழ்வாரத்தடியில் சோடி ஒன்று தம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கியிருந்தது. அந்த ஆணுக்கு ஐம்பது வயது இருக்கலாம். தலை மயிர் கொஞ்சம் நரைத்திருந்தது. அவன் தன் தொப்பையைப் பொருட்படுத்தாமல் இறுக்கமாக சேர்ட்டு ஒன்றை இன் பண்ணியிருந்தான். அந்தப் பெண் மெல்லிய நைலக்ஸ் சேலை கட்டியிருந்தாள். அவளும் தொப்பையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சேறு படாதவாறு அவன் தன் ஜீன்சை உருட்டி முழங்கால்வரை விட்டிருந்தான். அவளும் சேலையை நன்றாக உயர்த்திக் கிளிப் போட்டிருந்தாள். அவுஸ்திரேலியாவில் சேலைகளைக் கொண்டாட்டங்களின்போது மாத்திரம் வெகு ஆடம்பர உடையாக அணிந்து பார்த்தவளுக்கு அந்தக் காட்சி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவருமே தத்தமது செல்பேசிகளில் ஆழ்ந்திருந்தார்கள். கண நேரம் மாத்திரம் தெரிந்த காட்சி அது. அடுத்த காட்சியில் ஒரு வயதான ஐயா தன் சைக்கிள் கரியரில் காஸ் சிலிண்டர் ஒன்றைக் கையால் பிடித்துக்கொண்டு மழையில் தெப்பமாக நனைந்து சென்றுகொண்டிருந்தார். வீடு ஒன்றின் வாசலில் முதற்படியில் உட்கார்ந்திருந்த தாய்க்காரி இரண்டாம்படியில் அமர்ந்திருந்த மகளின் தலைமுடியைச் சீவிப் பின்னல் கட்டிக்கொண்டிருந்தாள். சில வீடுகளிலிருந்த புகைக்கூண்டுகளிலிருந்து கரும்புகை வெளிவந்து மழையில் கரைந்துகொண்டிருந்தது.

ஒரு வயதான நாய் தன் முதுகுப் புண்ணை நக்கிவிடுவதைப்போல மழை தன் பாட்டுக்குப் பசுந்தாய்ப் பெய்துகொண்டிருந்தது.

இந்த ஊரைப் பார்க்கையில் ஏன் எரிச்சல் வருகிறது என்பதை மிருதுளாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இங்கே எல்லா மனிதர்களுக்கும் எப்போதும் யாரோ ஒருவர் துணையாக இருக்கிறார். எல்லோரும் யாருக்காகவோ ஓடிக்கொண்டிருக்கிறார்கள். திரும்பிப்போவதற்கு எல்லோருக்குமே வீடு இருக்கிறது. இவர்கள் தொலைப்பேசியில் பேசும்போது யாரோ ஒரு உறவு அந்தப்பக்கம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. போர் என்ற ஒன்று மாத்திரம் இந்த ஊரில் புகுந்திராவிட்டால் அவளும் அம்மாவின் வீட்டிலேயே வளர்ந்திருப்பாள். இங்கேயே படித்து, வளர்ந்து, காதலித்துத் திருமணம் முடித்திருப்பாள். அல்லது நல்லதொரு கணவனை அவளது பெற்றோரே காட்டியிருப்பார்கள். நேதுராமைவிட நல்லவனாய். நீண்ட ஆயுசுடன். அவளுக்கும் இரண்டு மூன்று பிள்ளைகள் ஆகியிருக்கலாம். அவளும் ஒரு சிதிலமடைந்த கடை வாசலில் தன் கணவனோடு மழைக்கு ஒதுங்கி நின்றிருக்கக்கூடும். உயர்த்திச் செருகிய சேலையோடு. தொப்பை தெரிகிறதே என்ற பிரக்ஞைகள் இன்றி. மழை நாட்களில் அவளும் வீட்டுப்படிக்கட்டில் அமர்ந்திருந்து தன் மகளுக்கு இரட்டைப் பின்னல் போட்டுவிட்டிருப்பாள். இந்த அற்புதராணிபோல ஆட்டோ ஓட்டித் திரிந்திருப்பாள். எத்தனை சுதந்திரமான வாழ்க்கை இது. அற்புதராணிக்கு வாழ்க்கை அவள் கையிலேயே இருக்கிறது. நினைத்த நேரம் ஆட்டோவில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். வேலை நேரம் என்று ஒன்றில்லை. யாரும் அவளைக் கேள்வி கேட்கமுடியாது. மிருதுளாவுக்குத் தன் சபிக்கப்பட்ட வாழ்க்கையை நினைக்க மேலும் எரிச்சல் வந்தது. நேதுராமுக்கும் மகனுக்கும் சமைத்துப்போடுவதிலேயே அவளது இருபதுகளும் முப்பதுகளும் சீரழிந்துபோய்விட்டன. மலை அட்டையைப்போல அந்த ஆண்கள் இருவரும் அவளது இளமையை மொத்தமாக உறிஞ்சி, வெறும் சக்கையை மாத்திரம் விட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டார்கள். அவளுக்கென்று இருந்த ஒரே அம்மாவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நிலமும் போரும்தானே. இந்த நிலத்துக்கு ஏன் அவளைப்பிடிக்காமல் போனது? பாரதக்கதையில் குந்திதேவி தன் புதல்வனைப் பேழையில் சுற்றி ஆற்றில் விட்டதுபோல இந்த நிலமும் ஏனோ அவளைக் கைகழுவிவிட்டது. ஆனால் இங்கு திரியும் அத்தனை மனிதர்களையும் அது தானே சீராட்டி வளர்த்துக்கொண்டது. ஏன் இந்த ஓர வஞ்சனை? அவள் யார், அவள் மொழி என்ன, யார் யாரெல்லாம் உறவுகள் என்ற எதுவுமே புரியாமல், திருவிழாக்கூட்டத்தில் தொலைந்துபோன சிறுமியைப்போல அலறித் திரிந்து, அணைத்துக்கொண்ட அனைவரையும் உறவுகளாக்கி, ஏமாற்றிய அனைவரையும் எதிரிகளாக வரித்து, பிறிதொரு மொழியை அவள் மொழியாக்கி, அவள் நிறத்திலேயே இருக்கிறான் என்று நேதுராம் என்ற அந்நியனிடம் ஏமாந்து, அவள் வயிற்றில் பிறந்த குழந்தையாலேயே ஏறி மிதிக்கப்பட்டு, அம்மாவின் மரணத்தாலும் கைவிடப்பட்டு, ஒரு மனிசி ஐம்பது வயதுக்குள் எவ்வளவு துன்பங்களைத்தான் தாங்கிக்கொள்ளமுடியும்? எப்போதெல்லாம் பேழை தட்டுத்தடுமாறி கரையைப் போய் அடைகிறதோ அப்போதெல்லாம் யாரோ ஒருவர் அதனைத் திறந்து, உள்ளிருக்கும் மாணிக்கக்கல் ஒன்றைப் பிடுங்கி எடுத்துவிட்டு, மீண்டும் அதை ஆற்றிலேயே மிதக்கவிடும் மர்மம்தான் என்ன? அவளுக்கென்று பேழையில் எஞ்சியிருக்கும் ஒன்றே ஒன்று இந்த வீட்டுப்பத்திரங்கள்தான் என்று தோன்றியது. அவளது பூர்வீகச் சொத்து. அதையும் இது அவளது வீடு இல்லை, அவளுக்கு இந்த மண்ணில் எந்த உரிமையும் கிடையாது என்று எவர் பிடுங்கப்போகிறார்களோ?

“என்ன மிஸ். ஒரே யோசினை. வந்த வேலை முடிஞ்சுதா?”

“ஆ அதுவா? வீட்டுப் பத்திரங்களில் பிரச்சனை இல்லையாம். நான் இங்கேயே பிறந்தவள் என்பதால் சிக்கல்கள் ஏதும் இருக்காதாம்.”

சொல்லும்போதே மிருதுளாவுக்குத் தன்மேலே பரிகாசம் எழுந்தது. அவளுக்கென்று ஒரு வீட்டை மாத்திரம் ஏன் இந்த நிலம் விட்டுவைத்தது? அவள் எப்போதாவது இப்படிக் கேவலம் கெட்டுத் தன்னிடம் திரும்பி வருவாள் என்பதற்காகவா? அவளிடமிருந்து பறிக்கப்பட்ட, அவள் வாழாத வாழ்வை அனுபவிக்கும் மற்றவர்களைப்பார்த்துப் பொறாமைப்படவேண்டும் என்றா?

“நல்லது மிஸ். வீட்டை ஆருக்கு விக்கிறது என்று முடிவு எடுத்திட்டிங்களா?”

“நடேசன்தான் அந்தப் பொறுப்பை எடுத்திருக்கிறார். யார் வாங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு. இலாபம் எதுவும் பெரிதாக வேண்டாம். யாராவது சந்தை விலையில் கேட்டால் கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறேன்”

அற்புதராணி சற்றுத் தயங்கிவிட்டு மெதுவாகக் கேட்டாள்.

“எங்கள மாதிரி ஆக்களுக்கும் விப்பிங்களா மிஸ்?”

மிருதுளாவுக்கு அற்புதராணியின் கேள்விக்குள் புதைந்திருந்த சந்தேகம் ஏன் என்று புரியவேயில்லை.

“ஆகா, அதுக்கென்ன? நீங்களே வாங்கிவிடுங்களேன். எனக்கும் வந்த முதல்நாளே வேலை முடிந்தது.”

முத்திரைச்சந்தியில் வேகமாக ஒரு ஒம்னி பஸ் குறுக்கே வெள்ள நீரை சிதறியடித்தபடி தாண்டிப்போனது. அற்புதராணி ஆட்டோவின் வேகத்தைக் குறைத்தாள்.

“மிஸ் … எவ்வளவுக்கு விப்பியள்?”

மிருதுளாவுக்கு நடேசன் சொல்லிவைத்திருந்த வீட்டு விலை உடனே ஞாபகத்திற்கு வரவில்லை. அவுஸ்திரேலியப் பெறுமதிக்கு எழுபத்தையாயிரம் டொலர்கள்வரை போகலாம் என்று அவளிடம் ஒரு மனக்கணக்கு இருந்தது. உடனே இலங்கை நாணயத்துக்கு மாற்றமுடியவில்லை.

“நான் நடேசனிடம் கேட்டுச்சொல்லவா? மறந்துபோய்விட்டது”

“ஓகே மிஸ். நீங்கள் கேட்டுச்சொல்லுங்கோ. நான் வீட்டிலும் கதைச்சிட்டு காசுக்கு அரேஞ் பண்ணுறன்”

அற்புதராணியின் ஆட்டோ சீறிக்கொண்டு வந்து மிருதுளாவின் வீட்டின் முன்னே நின்றது. இருவரும் ஏக சமயத்தில் அந்த வீட்டையும் காணியையும் திரும்பிப்பார்த்தார்கள். அக்கணம் இருவருமே சோட்டியை அணிந்தவர்களாய் முன் குந்தில் உட்கார்ந்திருந்து மழைப்பொழுதில் தாம் சுடச்சுடத் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததை உணர்ந்தார்கள்.

“நாளைக்குக் காலையில் வரமுடியுமா ராணி? மாவட்ட அலுவகத்துக்குப் போகவேண்டும். இடம் தெரியுமா?”

“எங்கை வேணுமெண்டாலும் அற்புதராணியின் தேர் போகும் மிஸ். அதுக்கு யாழ்ப்பாணத்திண்ட மூலை முடுக்கெல்லாம் தெரியும்”

மிருதுளா சிரித்தாள்.

“அதென்ன மிஸ்? உங்கள் வயதுதான் எனக்கும் இருக்கும். மிருதுளா என்றே கூப்பிடுங்கள்.”

அற்புதராணி தயங்கினாள். சுற்றுலா வருகின்ற வெள்ளைக்காரர்கள் அவளைப் பெயர் சொல்லி அழைக்க வற்புறுத்துவதுண்டு. ஆனால் தமிழர்கள் அப்படி வலியுறுத்துவதில்லை.

“இல்லை மிஸ்… அது மரியாதை இல்லை”

“மிருதுளா போதும். நீங்கள் மிஸ் என்னும்போது திடீரென்று கிழவியாகிவிட்டேனோ என்ற சந்தேகம் வருகிறது.”

இருவருமே சிரித்தார்கள். மழை சற்று ஓய்ந்திருந்தது. அற்புதராணிக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மிருதுளா விடைபெற்றுக்கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.

“தாங்யூ மிருதுளா”

அற்புதராணி சன்னமாகச் சொல்லியபோது மிருதுளா வீட்டுக்குள்ளே போய்விட்டிருந்தாள். அவளைக்கண்டதும் முன் குந்தில் உட்கார்ந்திருந்த சிறியின் மனைவி எழுந்து நின்று ஏதோ சொல்லியது தெரிந்தது. காணிக்குள் இரண்டு விறகுவெட்டிகள் பறிக்கப்பட்டிருந்த தூக்குகளைக் கொத்திக்கொண்டிருந்தார்கள். பச்சைப் புளியம் விறகின் வாசம் மழை கழுவிவிட்டிருந்த காற்றினூடாக வந்து நாசியை நிறைத்தது. அற்புதராணி சற்று நேரம் அங்கேயே ஆட்டோவில் உட்கார்ந்திருந்தாள். தன் செல்பேசியில் அந்த வளவையும் வீட்டையும் படம் பிடித்தாள். வட்ஸப்பைத் திறந்து ராதாரமணனின் பெயரைத் தேடினாள். அவர்கள் இருவரது குடும்பங்களும் சேர்ந்து நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை அவன் கனடா திரும்பிய கையோடு அவளுக்கு அனுப்பியிருந்தான். மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அவள்தான் பதிலளிக்கவில்லை. புகைப்படத்தில் குழந்தைகள் எல்லோரும் முன்னே உட்கார்ந்திருந்தார்கள். ராதாரமணனும் மனைவியும் நடுவில் நிற்க அற்புதராணியும் அவள் கணவனும் இரண்டு கரைகளிலும் நின்றிருந்தார்கள். ராதாரமணனின் மனைவி அபிராவைவிடத் தான் அழகாகவே இருந்தாற்போல அற்புதராணிக்குத் தோன்றியது. வெறும் வீட்டுச்சட்டைதான். ஆனால் அபிராவின் கையற்ற சல்வாரைவிட நன்றாக இருந்தது. அற்புதராணியின் கணவனுமே அழகாகத்தான் தெரிந்தான். வழமைபோல சவரம் செய்யாத முகம். சட்டை மேல் பட்டினை பூட்டாமல் விட்டிருந்தான். செல்பேசியை மேல் பொக்கட்டுக்குள் போடவேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்பதில்லை. ராதாரமணன் சிக்கென்று டிசேர்ட், டெனிம் அணிந்து இளந்தாரிப்பெடியன்போலவே இன்னமும் இருந்தான். அற்புதராணி அந்தப்படத்தை அழுத்தி ஒரு லைக் போட்டாள். பின்னர் ‘நைஸ்’ என்று பதில் போட்டாள். கனடாவில் இப்போது என்ன நேரமாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியவில்லை. பின்னர் ‘என்ன விழல் வேலை பார்க்கிறேன்’ என்று எண்ணியபடி செல்பேசியை வைத்துவிட்டு ஆட்டோவை இயக்கி வேகம் பிடித்தாள். ஆட்டோ ஸ்டான்லி வீதிக்குள் இடதுபுறமாகத் திரும்பிப் பறக்க ஆரம்பித்தது. இராசாவின் தோட்டம் வீதிக்குள் நுழைவதற்குள் அற்புதராணிக்கு வாட்சப்பிலிருந்து அழைப்பு வந்தது. ராதாரமணன்தான். அவள் ஆட்டோவை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கையில் மின்னும் செல்பேசியைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அந்த அழைப்பு தானாக நின்றுவிடாதா என்ற ஏக்கமும் நின்றுவிடப்போகிறதே என்கின்ற பதட்டமும் அவளை ஏக சமயத்தில் அலைக்கழித்தது. சில கணங்கள் தாமதித்து அவள் அதை எடுத்து ஹலோ சொன்னாள். அந்தப்பக்கம் ராதாரமணன் தண்ணீர் தாங்கிக்குள் அமர்ந்திருந்து குசுகுசுப்பதுபோல பேசினான்.

“ஹலோ அற்புதா, எப்பிடி இருக்கிறீர்?”

இது ஒரு புதுப்பழக்கம். அவளை அற்புதா என்று எவருமே அழைப்பதில்லை. ராதாரமணன் நிச்சயமாக அழைத்ததில்லை. ஆனால் சென்ற முறை சந்தித்ததிலிருந்து இப்படி அழைக்க ஆரம்பித்திருந்தான்.

“இருக்கிறம். ஆட்டோவும் வீடுமாப்போகுது. உங்கட பாடுகள் எப்பிடி? அபிரா எப்பிடி இருக்கிறா?”

“இருக்கினம். இருக்கினம். இஞ்ச நடுச்சாமம். எல்லாரும் நல்ல நித்திரை. நான் உம்மட மெசேஜ் சத்தத்துக்கு எழும்பிட்டன். என்ன இப்பத்தான் அந்த போட்டோவைப் பாத்தனீர்போல. அப்பிடியே பள்ளிக்கூடப் பிள்ளையள்போலத்தான் இன்னமும் தெரியிறம் என்ன?”

பெரிய டிராக்டர் வண்டி ஒன்று சத்தம் எழுப்பியபடி வீதியைக் கடந்துபோனது. எதிர்ப்பட்ட சுவரில் கட்சிச் சின்னத்துடன் பெண் வேட்பாளர் ஒருவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. நடு இரவில் ராதாரமணன் அவளோடு பேசிக்கொண்டிருப்பது அபிராவுக்குத் தெரிந்தால் தவறாக ஏதும் நினைத்துவிடப்போகிறாள் என்ற எண்ணம் அற்புதராணிக்கு வந்தது.

“ஆ… அது சும்மா தட்டுப்பட்டுது. அதான். உங்கட நித்திரையை நான் குழப்பேல்ல. நாங்கள் பிறகு கதைப்பம்”

“அட நீர் ஓடாதேயும். நித்திரை வரும் போகும். ஆனா அற்புதா அப்பிடியா?”

கூரை ஒழுக்குக்கு வைத்த சில்வர் பாத்திரத்தில் விழுகின்ற மழைத் துளிகளைப்போல ராதாரமணின் ஒவ்வொரு வார்த்தைகளும் டொக் டொக் என்று அவளது அடிவயிற்றில் சத்தம் எழுப்பியவாறு விழுந்து சிதறிக்கொண்டிருந்தன. 

“அடுத்தமுறை வரேக்க ஏலுமெண்டா இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு டிரிப் போகோணும். உங்கட ஆட்டோவிலேயே போலாம். எண்ட சின்னனுகளுக்கு ஆட்டோ எண்டாப் பைத்தியம்”

“ம்ம்ம் போகலாம். நீங்கள் எப்ப வாறிங்கள்?”

“எப்ப வேண்டுமெண்டாலும் வரலாம். டிக்கட்டை போட்டா பிளேன் தூக்கிக்கொண்டுவந்து இறக்கப்போகுது. நீர்தான் மனசு வைக்கோணும். ”

ராதாரமணன் சிரித்தான். பாத்திரத்தில் கொஞ்சம் நீர் நிறைந்தபின்னர் அந்தச் சத்தம் அதிகம் மிரட்டாமல் இசைவாக்கமடைந்துவிடுகிறது. எப்போதோ ஒரு தருணத்தில் அது நிறைந்து யாரும் கவனிக்காத பொழுதில் தரையெல்லாம் வழிந்து ஓடத்தொடங்கும். அற்புதராணிக்கு ராதாரமணனிடம் இப்போதே கேட்கலாமா என்று மனம் உன்னியது. கேட்டால் இதற்காகத்தான் படத்தினை லைக் பண்ணியதாக அவன் எண்ணக்கூடும். ஆனால் அவளாக இனிமேல் அழைப்பெடுத்துக் கேட்பது என்பது கொல்லக்கொண்டுபோவதுபோல. நீட்டி முழக்கி இதனைக் கையாள அவளுக்கும் அவகாசமில்லை. பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டுவிடலாம். மறுத்தால் மறுக்கட்டும். இத்தோடு இந்தப் பெட்டைக்கள்ளனுடைய சகவாசம் ஒழிந்தது என்று அவன் இலக்கத்தையே தலை முழுகிவிடலாம்.

“நான் ஒண்டு கேட்டால் குறை நினைக்கமாட்டிங்களா ரமணன்?”

“இல்ல, சொல்லும்”

“என்னெண்டா பக்கத்தில அம்பலவாணர் வீதில ஒரு வீடு வளவு விலைக்கு வருது. வெளிநாட்டு பொம்பிளை ஒராளிண்ட. தனக்குத் தேவையில்லை எண்டு விக்கிறதுக்கு வந்து நிக்கிறா. எங்களுக்கும் ஒரு ஆன வீடு இருக்கிறதுக்கு இல்ல. அதான் வாங்கலாம் எண்டா.. காசு கொஞ்சம்…”

“அதுக்கென்ன வாங்கிவிட்டிட்டம் எண்டா போச்சு. அற்புதாக்கு இல்லாத வீடா?”

ஒரு தேர்ந்த சுழியோடியைப்போல நீர்த்துளிகள் பாத்திரத்தில் சலனமே இன்றி விழுந்து அமுங்க ஆரம்பித்திருந்தன. அற்புதராணி எச்சிலை விழுங்கியவாறே தொடர்ந்தாள்.

“நீங்கள் வாங்கவேண்டாம். நாங்களே காசைப் புரட்டி வாங்கலாம் எண்டு இருக்கிறம்… என்ன, கொஞ்சம் கடனா தந்தியள் எண்டால் … ரெண்டு வருசத்தில எப்பிடியும் திருப்பிடுவம்”

இரண்டு வருடங்கள் அவள் வாங்குகின்ற கடனில் கால்வாசியைக்கூட அடைக்கமுடியாது என்று தெரியும். ஆனால் கடனை வாங்கும் சமயத்தில் அதனை அடைப்பதைப்பற்றிக் கவலைப்பட்டால் உலகில் எவருமே கடனாளியாக முடியாது.

“ஏன் இப்ப நான் நீர் எண்டு பிரிச்சுப்பாக்கிறீர். காணியை அவுத்துடுவம். எவ்வளவு காசு உடனடிக்குத் தேவைப்படும்?”

“ஒரு அம்பது இலட்சமாவது தேவைப்படும்”

“அம்பதா?”

ராதாரமணன் முதற்தடவையாகத் தயங்கினாற்போலத் தோன்றியது. அற்புதராணி அவமானத்தில் நெளிந்தாள். செல்பேசியைப் பேசாமல் வைத்துவிடலாமா? யாருக்கு வேண்டும் அந்த அறுந்த வீடும் வாசலும்.

“சொறி அற்புதா… நான் இங்க டொலரில கணக்குப் போட்டுப்பார்த்தன். முப்பத்தையாயிரம் டொலர்தான் வருது. சின்னப்பிரச்சனை. ஒரு கடையைத் திருப்பி அடகு வச்சாப் பிரட்டிடலாம். அபிராக்குத் தெரிஞ்சாத்தான் துள்ளுவாள். இப்பத்தான் எங்கட வைரவர் கோயிலுக்கு சின்னத் தேர் ஒண்டுக்கு ஸ்பொன்சர் பண்ணினம்.”

“இல்ல அப்படீண்டா வேண்டாம். நாங்கள் வேற இடத்தில…”

“லூசு மாதிரி கதைக்காதீம். விசயத்தை என்னட்ட விடும். நானும் நீரும் அந்தக் காணியை வாங்குறம். அவ்வளவுதான் கத”

குதத்துக்குள் யாரோ பனங்கருக்கைச் செருகியதுபோல அற்புதராணி துடித்தாள். ஆனாலும் அவன் பேரத்தை மறுக்கமுடியவில்லை. சொந்த வீடு என்பது அவளுக்கென்றில்லை, அவளது குடும்பத்தின் முந்தைய தலைமுறை அனைத்துக்குமே வெறும் கனவான ஒரு விசயம். இப்போதுதான் அது ஓரளவுக்குச் சாத்தியமாகிறது. அவள் வீணாக ரோசம் பார்த்துப் பல தலைமுறையின் கனவைக் கலைப்பது நியாயம் இல்லை என்று தோன்றியது. ராதாரமணன் மோசமானவன் கிடையாது. என்ன ஒன்று. அவளைக்கண்டால் பலவீனமடைகிறேன். எப்போதோ தான் காதலித்த பெண்ணைக் காணும்போதுதான் யார்தான் சலனம் அடையமாட்டார்கள்? அத்தோடு ராதாரமணனுக்குப் பேசிப்பழகவும் தெரியாது. அவள் கணவனும் அப்படித்தானே. குப்பைக் கடகத்தைக் கவிழுத்துக் கொட்டுவதுபோலத்தான் அவள் கணவனது பேச்சு இருக்கும். ஆனாலும் உள்ளுக்குள்ளே நல்லவன் அல்லவா. வீடு வாங்கும் செய்தி அறிந்தால் அவன் சந்தோசத்தில் துள்ளிக்குதிப்பான் அல்லவா? இன்று ஆறுமணிக்கு மேலே எந்த அயரும் செய்யக்கூடாது. அவனும்தான். எல்லோரும் குளித்து வெளிக்கிட்டு ஒன்றாக அடைக்கலமாதா கோயில்வரைக்கும் போய் வரவேண்டும். முடிந்தால் மனுசனுக்கும் பிள்ளைகளுக்கும் குழல் புட்டை அவித்து மீனும் முட்டையும் வாங்கிப் பொரித்துக்கொடுக்கலாம். அதுகள் ஒழுங்கான சாப்பாடு கண்டு மாசக்கணக்கு ஆகிவிட்டது. ஆட்டோ ஓட்ட ஆரம்பித்ததுமுதல் அவர்களது வாழ்க்கையில் தேக்கமும் வெறுப்பும் சூழ்ந்துகொண்டது இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. கடைசியாகக் கணவனோடு எப்போது மனமாறக் கூடினோம் என்பதுகூட ஞாபகத்தில் இல்லை. அவரவர் அவசரத்திற்கு நடு இராத்திரிகளில் அரைத்தூக்கத்திலேயே பிணைந்துவிட்டு, அப்படியே சரிந்து படுப்பதுதான் வருடக்கணக்காக நிகழ்கிறது. ‘வரட்டும் சிங்கன் இண்டைக்கு’ என்று அற்புதராணி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“என்ன அற்புதா யோசிக்கிறீர். ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு சொல்லுறன். அம்பதைவிட அதிகமாகத் தேவை எண்டாலும் சொல்லும். இதுகூடச் செய்யாட்டி என்ன ஊரவன் நான்”

அற்புதராணி ராதாரமணனுக்குக் குதூகலமாக நன்றி சொன்னாள். தொடர்ந்து பேச்சை இழுக்காமல் அவனைப்போய்ப் படுக்குமாறு வலியுறுத்தினாள். செல்பேசியை வைத்துவிட்டு ஆட்டோவை இயக்கியபோது அதுவும் வழமைக்கு மாறாக உற்சாகத்தில் உறுமினாற்போல தோன்றியது. முதலில் அந்தக் காணிக்குள் கிடக்கும் விறகுச்சுள்ளிகளைப் பொறுக்கி எரித்துவிடவேண்டும். வெறுங்காலுடன் நடந்தால் அத்தனையும் பாதத்தில் ஏறிவிடும். கேற்றிலிருந்து வீடு வரைக்கும் சீமெந்துப் பாதை போடலாம். மல்லிக்கைப் பந்தலில் வளைவு கோபுரம் அமைந்து, இரண்டு புறமும் ரோசாச்செடிகளை நட்டு, அற்புதராணிக்கு அவள் கற்பனையை நினைக்கவே சிரிப்பு வந்தது. கணவனிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரு கையால் செல்பேசியை அழுத்தி, அவன் என்ன சொல்கிறான் என்பதையே கவனிக்காமல் இவள் கத்தினாள்.

“வையனை… இந்தா வீட்டடிக்கு வந்திட்டன். எங்கேயும் ஓடிடாதை”

000

ஆட்டோவிற்காக மிருதுளா வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தாள்.

தொடர்ச்சியான மழையினால் நிலம் கசிந்துகொண்டிருந்தது. ஐம்பது வருடங்களுக்குமேல் திருத்தாமல் கிடந்தாலும் இந்த வீடு எப்படி நிலை குலையாமல் நிற்கிறது என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுவர்களில் எங்குப் பார்த்தாலும் நாட்காட்டிகளும் படங்களும்தான் தொங்கின. நடிகர்கள். இறந்தவர்கள். கடவுள்கள். சிலது பாதி உரிக்கப்பட்ட நிலையில் குற்றுயிராய் ஒட்டிக்கிடந்தன. தாத்தா இந்த வீட்டைக் கட்டி முதன்முறையாக குடி புகுந்தபோது எத்தனை குதூகலமாக இருந்திருப்பார் என்று மிருதுளா நினைத்துப்பார்த்தாள். அன்றைக்குப் பாட்டி புதுச்சேலை, தாலிக்கொடி, நகை என எல்லாவற்றையும் அணிந்து சுற்றிச் சுற்றி வந்திருப்பாரல்லவா? அம்மாவுக்கு ஐந்து வயது இருந்திருக்குமா? இந்தச் சிறுவர்களைப்போலவே அவரும் மாமாவும் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்திருப்பார்கள். அன்றைக்கும் இந்த மழை பெய்திருக்கும் அல்லவா?

ஊடல் கொண்ட கணவனின் கோபத்தைப்போல மழை விடாமல் இன்னமும் தூறிக்கொண்டிருந்தது. நேதுராமும் அவளும் அயர்லாந்தின் லிஸ்பேர்ன் நகரில் கழித்த தேனிலவு நாட்கள் மிருதுளாவுக்கு நினைவில் வந்தது. சோடியாக அவர்கள் செய்த முதல் வெளியூர்ப் பயணம் அது. லிஸ்பேர்னில் இரவு பகல் என்றின்றி எந்நேரமும் மழை பெய்தபடியே இருக்கும். தூறலில் நனைதல் என்பது அங்கு வெகு இயல்பான ஒன்று. நேதுராம் அவளுக்குப் பிடித்தவனாக இருந்த நாட்கள் அவை. தான் நனைவதைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறிய பச்சை நிறக்குடையை அவன் அவளுக்குப் பிடித்தபடியே கதீடறல்களைச் சுற்றிவந்ததை எப்படி மறக்க முடியும்? எத்தனை அழகான துளிகள் அவை. செரி புளொசம் மொட்டுக்களை மூட்டை மூட்டையாக யாரோ மேலிருந்து கொட்டிக்கொண்டிருப்பதைப்போல. அந்த நாட்களை அவள் சாசுவதம் என்று நம்பியது எத்தனை முட்டாள்தனம் என்பதை இப்போது நினைக்கையில் சிரிப்புதான் வந்தது. லிஸ்பேர்னைப்போலவே யாழ்ப்பாணத்திலும் மழை விடாமல் பொழிகிறது. மனிதர்கள் எல்லோரும் புன்னகையோடும் அன்போடும் பழகிக்கொள்கிறார்கள். இதனை ஒரு போர் தின்ற நிலம் என்று சொன்னால் யார் நம்பக்கூடும்? எப்போதுமே பயணிகளுக்கு ஊர்கள் எல்லாம் அழகாகவே தெரிகின்றன. வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கிடைக்கும் தடபுடலான வரவேற்பினைப்போலவே ஊர்களும் அவர்களை வரவேற்கின்றன. தமக்குள் இருக்கும் அழுக்கினையும் துன்பத்தினையும் கொல்லைப்புறத்தில் குவித்து பழைய துணியால் போர்த்தி மறைத்துவிடுகின்றன. யாழ்ப்பாணம் அவளுக்காகத்தான் தன்னை மழைகொண்டு கழுவுகிறதோ என்ற சந்தேகம் அவளுக்கு எழுந்தது.

“தேத்தண்ணி ஊத்தினான். உங்களுக்கும் ஒரு கப் தரவா அக்கா?”

சிறியின் மனைவி வந்து கேட்டபோது மிருதுளா புன்னகைத்தபடியே சரி என்று சொன்னாள். கைப்பிடியற்ற எவர்சில்வர் டம்ளரில் கொடுக்கப்பட்ட தேநீரை எப்படிப் பிடித்துக் குடிப்பது என்று மிருதுளா தடுமாறினாள். அதிகம் சாயம் ஊறிய, நிறைய சீனி போட்ட தேநீர். மழைக்கு இதமாகவே இருந்தது. அப்பா இருந்த காலத்தில் காலை வேளைகளில் இப்படித் தேநீர் ஊற்றித்தருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் நேதுராம் வெறுமனே சூடான பால்தான் குடிப்பதுண்டு. அப்பாவின் தேநீருக்குப் பின்னே ஒரு ஊரினதும் காலத்தினதும் சுவை ஓளிந்திருக்கவேண்டும். மிருதுளா சிறியின் மனைவியைப் பார்த்து ‘நன்றாக இருக்கிறது’ என்றபோது அவள் வெட்கத்தில் சிரித்தாள்.

“மத்தியானம் உங்களுக்கும் சேர்த்து சமைக்கவா?”

மிருதுளா தான் திரும்புவதற்குத் தாமதமாகும் என்று சொல்ல, சரி என்றபடி சிறியின் மனைவி சமையலறையை நோக்கித் திரும்பி நடந்தாள். நடக்கும்போது அவள் அணிந்திருந்த புதுச்சோட்டி மடமடத்தது. அதிகாலையே குளித்து, சாமி கும்பிட்டு, கொண்டையை உயர்த்திப்போட்டு, மினுங்க மினுங்கத் தாலிக்கொடியை மாட்டிக்கொண்டு, சமையலையும் செய்து, குழந்தைகளையும் பராமரித்து, எல்லோருக்கும் இரண்டாவது தேநீரும் ஊற்றுவதற்கு அவளுக்கு எங்கிருந்து வலு கிடைக்கிறது? காலை ஒன்பது மணிக்கே மதியம் என்ன சமைக்கவேண்டும் என்ற திட்டங்களையும் அவள் தீட்ட ஆரம்பிக்கிறாள். மிருதுளா முற்றத்தை நோக்கித் திரும்பியபோது தாழ்வாரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறியின் குழந்தைகள் அவள் தேநீர் குடிப்பதையே இரகசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவள் சிரித்தபடியே விறகுக்காலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

யாரோ அதிகாலையிலேயே வந்து விறகு வாங்கிக்கொண்டிருந்தார்கள். பென்னம்பெரிய தராசு ஒன்றில் இராட்சத எடைகளுக்கு நிகராக விறகைப் போட்டு சிறி நிறுத்துக்கொண்டிருந்தார். விறகை எவ்வளவு உயரத்துக்கு அடுக்கினாலும் எடைகளின் பாரத்துக்கு அதனால் ஈடு கொடுக்கமுடியவில்லை. ஒரு தொழிலாளி புதிதாக விறகைக் கொத்தித் தராசில் போட்டபடியே இருந்தார். விறகு மரங்களின் பெயர்களை மிருதுளாவால் இனங்கண்டுகொள்ளமுடியவில்லை. அவுஸ்திரேலியாவில் மனிதர்கள்தான் பலதரப்பட்ட நிறங்களிலும் குணங்களிலும் இருப்பார்கள். ஆனால் மரங்களைப்பொறுத்தவரையில் எங்குப் பார்த்தாலும் யூகலிப்டஸ்தான் சடைத்து வளர்ந்து நிற்கும். இந்த நிலத்திலோ மனிதர்கள் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மரங்களில் மாத்திரம் ஊருப்பட்ட வகைகள் வளர்ந்து நிற்கின்றன. இந்த விறகுக் குற்றிகளை இவர்கள் எங்கிருந்து எடுத்துவருவார்கள் என்று மிருதுளா யோசித்தாள். எங்கேனும் காட்டுப்பகுதியிலிருந்து கொண்டுவந்திருக்கலாம். எங்கோ முளைத்து, வளர்ந்து, கிளை பரப்பி விருட்சமாகி நின்ற மரங்கள். ஏராளம் பறவைகளின் தலைமுறைகள் அவற்றிலே கூடுகட்டி, பிறந்து, வளர்ந்து, பறந்து திரிந்திருக்கும். எத்தனை குரங்கினங்கள். பூச்சிகள். வண்டுகள். ஈற்றில் அந்த மரங்களும் தறிக்கப்படுகிறது. அல்லது பெரும் சூறாவளியால் புரட்டப்படுகிறது. அதுவரை  அவற்றை அண்டி வாழ்ந்திருந்த உயிரினங்கள் எல்லாம் வேறு மரங்களை நோக்கிப் போய்விடுகின்றன. ஒரு பிரியாவிடையைக்கூட அவை கொடுப்பதில்லை. யாரோ சிலர் அவற்றை வெட்டி, நாட்டுக்குள் கொண்டுவந்து கூறுபோட்டு விற்கும்வரையிலும் அந்த மரங்களின் தடங்களே மனிதக் குலத்துக்குத் தெரிவதில்லை. அப்பெரும் விருட்சங்கள், கேவலம், சில இரும்பு எடைகளுக்கு ஈடு கொடுக்கமாட்டாமல் தடுமாறுகிறது. கொத்தி, எடை போட்டுப் பிரிக்கப்பட்டு, நாளை இந்த ஊரில் நாலாபுறமும் எழுந்து நிற்கும் புகைக்கூண்டுகள் வழியே கரும் புகையாய் அவை காற்றில் உருத்தெரியாமல் கரைந்துபோகும். அவள் அம்மாவைப்போல. அவளைப்போல.

வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.

“சொறி மிஸ்… நேரம் போயிட்டுது … ஓ சொறி… மிருதுளா”

அற்புதராணி தயங்கியபடி சொல்ல மிருதுளா ‘தட்ஸ் குட்’ என்று சிரித்தாள்.

“கச்சேரிதானே மிருதுளா?”

“மாவட்ட செயலாளர் அலுவலகம் என்று இருக்கிறது…”, மிருதுளா ஆங்கிலத்திலிருந்த முகவரியை அற்புதராணியிடம் நீட்டினாள்.

“தமிழில கச்சேரிதான் மிஸ். இதிலதான் இருக்கு. அஞ்சு நிமிசத்தில பறந்திடலாம்”

“பறக்க எல்லாம் வேண்டாம். மெதுவாகவே போகலாம்”

மிருதுளா சொல்ல அற்புதராணி அடக்கமாட்டாமல் சிரித்தாள். நேற்றிலிருந்து இப்படித்தான் அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள். பல நாள் உப்பிக்கிடக்கும் வயிறு ஒரு நாள் செரிப்பதுபோல அவளது சந்தோசம் அடங்கவே மாட்டேன் என்றது. முந்தைய இரவு முழுதும் வீடு பற்றிய கனவுகளே அவளுக்குள்ளே நிறைந்திருந்தது. கணவனுக்குச் சொல்லி உடனேயே அவனது உறவுகளுடன் பேசவைத்தாள். அவளும் தன் சொந்தங்களுடன் பேசினாள். சேர்ச்சில் சிஸ்டருக்குச் சொன்னபோது அவரும் ஊக்கப்படுத்தி ஆசீர்வதித்திருந்தார். ராதாரமணன் மறுபடியும் அழைப்பெடுத்து புது வீட்டின் விலையை மதிப்பிட முகவரியை வாங்கியிருந்தான். பணத்தை ஒழுங்கு செய்வது அவ்வளவு கடினமில்லை என்று உறுதி கொடுத்தான். ஒருநாளும் இல்லாத திருநாளாய் அவள் கணவனும் அந்த உற்சாகத்தில் இணைந்திருந்தான். அன்றிரவு அவன் குடிக்கவில்லை. யாரிடமெல்லாம் கைமாற்று கேட்கலாம் என்று யோசித்தபடியே இருந்தான். அவன் தினமும் அயருக்கு ஏற்றிச்செல்லும் நுண்கடன் வங்கி முகாமையாளர் ஒருவரது அலுவலகத்துக்குக் காலையில் செல்லப்போவதாக சொன்னான். அவர்களது திருமணநாளின்போதுகூட இத்தனை சந்தோசமாக இருந்திருக்கமாட்டார்கள் என்று தோன்றியது. மிக நீண்ட காலத்துக்குப்பிறகு அவள் அடங்கும்வரைக்கும் அவன் உயிர்த்திருந்தான்.

“என்ன ராணி, வந்ததுமுதல் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். என்ன விசயம்?”

“அது ஓண்டுமில்ல, நாங்களும் விரும்பினா வீட்ட வாங்கலாம் எண்டு சொன்னீங்கள்தானே. அதான். கொஞ்சக் காசு பிரட்ட வேண்டியிருந்தது. எல்லாமே சரிவரும்போல இருக்கு… நான் நடேசப்பாவுடன் நாளைக்கே பேசக்கூடியதாக இருக்கும்”

“அப்படியா… அவர் காலையில் என்னோடு பேசினார். நூற்றியிருபது இலட்சங்கள்வரை போகும் என்றார். நான் நூறு இலட்சம் என்றாலும் பரவாயில்லை. கடை முதலாளிகளுக்குக் கொடுக்காமல் யாரும் குடும்பமாகத் தங்கக்கூடியவர்களுக்குக் கொடுக்கச்சொல்லிவிட்டேன். உங்களைப்பற்றியும் சொன்னேன். தாத்தாவின் வீடு…வெறும் பொதிகளைச் சுமக்காமல் உங்களை மாதிரி மனுசர் வாழும் வீடாக இருந்தால் நல்லதல்லவா?”

“அதெண்டா மெய்தான் மிஸ். நாங்கள் வாங்கிறம். ஒரு கோடி எண்டால் படிஞ்சுவரும். முன்ன பின்ன இருந்தாலும் கோவிக்கமாட்டீங்கள்தானே மிஸ்?”

“இல்லை. ஆனால் இப்படியே மிஸ் என்று சொல்லிக்கொண்டிருந்தால் கோபம் வரும். நடேசனிடம் சீக்கிரம் பேசுங்கள். இன்னொரு பார்ட்டியும் ஆர்வத்துடன் நேற்று இரவு பேசியதாக அவர் சொன்னார்”

அற்புதராணிக்கு திடுக்கென்றது. இன்னொருவர் ஏற்கனவே பேசியிருக்கிறாரா? இரண்டு நாட்களில் எப்படியாவது முன்பணத்தை ராதாரமணனிடம் கேட்டு வாங்கி இவர்களிடம் கொடுத்துவிடவேண்டும்.  மிருதுளாவைச் சமாளிப்பது எளிது. ஆனால் நடேசப்பாவை நம்ப முடியாது. சாமிகளை யார் யாரெல்லாம் தொட்டுக்கும்பிடலாம் என்பதை இந்தவகைப் பூசாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அற்புதராணிகள் அத்தியடியில் பெரும் வீடு வாசலுடன் வாழ்வதை நடேசப்பாக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மிருதுளாவை முன்னாலே வைத்துக்கொண்டே நடேசப்பாவுடன் பேசவேண்டும். முடிந்தால் இன்றைக்கே.

“மிஸ்… சொறி… மிருதுளா… நாங்கள் இரண்டு நாட்களில் முன்பணத்தைக் கட்டிவிடுகிறோம். வீட்டை இன்னொருவருக்கு அவசரப்பட்டுக் கொடுக்கவேண்டாம். நடேசப்பாவிடமும் சொல்லிவிடுங்கள். பிளீஸ்.”

“அவரும் இன்று கச்சேரிக்கு வருவதாகச் சொன்னார். நான் சொல்லிவைக்கிறேன். எனக்கு அற்புதராணி இந்த வீட்டில் வாழ்ந்தால் சந்தோசம்தான். எப்போதாவது நான் ஊருக்கு வரும்போது எட்டிப்பார்க்கலாம் அல்லவா?”

“எட்டிப்பார்க்கிறதென்ன? இங்கேயே தங்கலாம் மிருதுளா. நாங்கள் வாங்கினாலும் இது உங்கட வீடுதான்”

மிருதுளா எதற்கோ தயங்கியதுபோல தெரிந்தது. அதற்கிடையில் கச்சேரி வாசலில் வந்து ஆட்டோ நின்றது. அவள் இறங்கிவந்து அற்புதராணிக்கு அருகே நின்றாள்.

“எனக்கு அந்த வீட்டில் தங்குவது சற்று கடினமாக இருக்கிறது ராணி. கழிப்பறையில் கொமேட் இல்லை. என் அறைக்கும் தாழ்ப்பாள் இல்லாததால் உடை மாற்றும்போது யாராவது திடீரென்று உள்ளே நுழைந்துவிடுவார்களோ என்று சங்கடமாக இருக்கிறது. யன்னலையும் பூட்ட முடியவில்லை. பாத்ரூம்வேறு கிணற்றடியில் இருக்கிறது. காலையில் குளிக்கும்போது காகம் ஒன்று கிறில் ஓட்டையில் வந்து நின்றது. சுவருக்கு அந்தப்பக்கம் ஒருவர் விறகு கொத்திக்கொண்டு நிற்கும்போது ஒரு பெண் எப்படி அதற்குள்ளிருந்து குளிப்பது?”

மிருதுளா படபடவென்று சொல்லிக்கொண்டுபோனாள்.

“விளங்குது மிருதுளா… வேலையாக்கள் எப்பவும் திரியேக்க அந்தரம்தான். நீங்க வேணுமெண்டா எங்கட வீட்ட வந்து குளிக்கப்போறீங்களா? வசதிகுறைவுதான் ஆனா…”

அற்புதராணி எப்படி மிருதுளாவுக்கு பதில் சொல்வது என்று குழம்பினாள்.

“அதெல்லாம் வேண்டாம். நீங்கள் ஏதோ ஒரு ஹோட்டல் சொன்னீர்கள் அல்லவா?”

“ஜெட்விங் மிஸ்”

“ஆ … இன்று எங்கள் வேலைகளை முடித்துவிட்டு அந்த ஹோட்டலுக்கே அறை எடுத்துப் போய்விடலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் ஒரு நல்ல அறையாகப் பார்த்துப் பதிவு செய்யமுடியுமா? வைபைஃ இருக்கிறமாதிரி”

“ஓகே மிஸ்… அதுவும் நல்லதுதான். நான் ஹோட்டலுக்கு கோல் பண்ணி பதிஞ்சு விடுறன்”

“நன்றி ராணி. சிறி விசாரித்தால் எனக்கு இண்டநெட் வசதி வேண்டுமென்பதற்காகத்தான் போகிறேன் என்று சொல்லிவிடுங்கள். அல்லது தவறாக நினைப்பார்கள்”

“விளங்குது மிஸ். அது கொஞ்சம் பழைய வீடு. இதுகள் வேறை விறகைக்கொண்டுவந்து போட்டு வீட்டைப் பழுதாக்கிப்போட்டுதுகள். நாங்கள் அதைத் திருத்தி இண்டநெட்டும் பூட்டி தாஜ்மகால்போல மாத்துவம்.”

“தாஜ்மகால் எல்லாம் வேண்டாம். நீங்கள் அங்கே சந்தோசமாக வாழ்ந்தாலே போதும்”

மிருதுளா அற்புதராணியின் தோளைச் சிநேகமாகத் தட்டிவிட்டு உள்ளே போனாள். அலுவலக வாசலில் நின்ற காவலாளியிடம் அவள் எதையோ கேட்கவும் அவன் உடனே எழுந்து நின்று பேசத்தொடங்கினான்.  மிருதுளாவின் ஆங்கிலமும் தமிழும் கலந்த மொழி அவனை எழ வைத்திருக்கவேண்டும். அவன் அவளிடமிருந்து நனைந்த குடையை வாங்கி மடித்து உதறிவிட்டுத் தன் அருகே வைத்துக்கொண்டான். அற்புதராணி ஆட்டோவைத் திருப்பிக்கொண்டுவந்து கச்சேரி நல்லூர் வீதியிலிருந்த ஆலமரத்தடியில் நிறுத்தினாள். தன் செல்பேசியில் ஜெட்விங் ஹோட்டல் இலக்கத்தைத் தேடிப்பிடித்து அழைப்பெடுத்தாள். இணைய வசதியுடனான ஒரு அறைக்கு நாளொன்றுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய்கள் என்றபோது பிரமிப்பாக இருந்தது. அது அவர்களது குடும்பம் தற்போது கொடுக்கும் இரண்டு மாதங்களுக்கான வாடகையைவிட அதிகம். அற்புதராணிக்கு சின்னதாக எரிச்சல் ஏற்பட்டது. தன் தாத்தா கட்டி இலவசமாகக் கொடுத்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்குவதற்குக்கூட இவர்களுக்கு எப்படி மனமின்றிப்போனது என்று அற்புதராணி யோசித்தாள். கக்கூசில் முழங்காலை மடித்துக் குந்தியிருந்தால் இவர்களுக்கெல்லாம் மலம் கழியாதா? எல்லாமே காசு செய்கின்ற கூத்து அன்றி வேறேது? பணம் என்ற பேயும் தன் குணத்துக்குரிய மனிதர்களையே தேடிப்போகிறது. அவர்களின் தலை உச்சியில் ஏறி நின்று உலகத்தைப் பார்த்து எகத்தாளம் போடுகிறது. மிருதுளாவிடம் இனிமேல் ஆட்டோவுக்கு வெறும் நூறு இருநூறாக வாங்கக்கூடாது என்று அற்புதராணி எண்ணிக்கொண்டாள். வாங்கினால் ஐந்நூறுதான். ஆட்டோ வாடகை நூறு. வெளிநாட்டவர்கள் எங்கள் நிலத்தை விற்றுக் காசு எடுப்பதற்கான வரியாக நானூறு.

அற்புதராணி யோசித்துக்கொண்டிருக்கும்போதே ராதாரமணனிடமிருந்து வாட்சப்பில் தகவல் வந்திருந்தது.

“ஹாய் அற்புதா. நல்ல செய்தி. அந்த வீட்டைப்பற்றி விசாரித்தேன். ஒருகோடிவரை தேறும் என்கிறார்கள். நாங்கள் வாங்கிடலாம்”

“நல்லது ரமணன். கொஞ்சம் அட்வான்ஸ் குடுத்து வச்சிட்டமெண்டால் நல்லது. வேறு யாரோ ஒரு பார்ட்டியும் பேசியிருக்கிறார்களாம்”

“மெய்தான். உடனே ஒரு பத்து ரூவாயை பிரட்டிக் கொடுத்துவிடுவோம்”

அப்போதும் அவன் தன்னையும் உள்ளடக்கிப் பேசியது அற்புதராணிக்கு உறுத்தலாக இருந்தது. அந்த வீடு அவளும் அவள் கணவனும் வாங்கும் வீடாக மாத்திரம் அமையவேண்டும் என்று அவள் விரும்பினாள். வெளிநாட்டவர்கள் கடனோ இனாமோ கொடுக்கலாம். உதவி செய்யலாம். ஆனால் இந்த மண்ணை சொந்தம் கொண்டாட முடியாது அல்லவா?

“அதுபோதும். வீட்டுக்கார மனுசி நல்லமாதிரி. நான் பேசுகிறேன். புரோக்கர்தான் கள்ளன். கரைச்சல் குடுப்பான். அவனோடும் பேசவேண்டும்”

“காசைக் காட்டினா அத்தினை பேரும் பல்லை இளிச்சுக்கொண்டு வருவினம் அற்புதா. நீர் கவலைப்படாதீம். நான் எங்கட வீட்டுக் குடிபூரலுக்கும் வரலாம் எண்டிருக்கிறன். எப்பிடி?”

“முதலில் வீடு கையில வரட்டும் ரமணன்”

அற்புதராணி புன்னகை ஸ்மைலியைத் தேடி எடுத்து அனுப்பினாள். ரமணனும் பதில் புன்னகை போட அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அற்புதராணி உடனேயே நடேசப்பாவுக்கு அழைப்பெடுத்தாள்.

“வணக்கம் நடேசப்பா அண்ணை, எப்பிடி இருக்கிறியள்?”

“ஆ ராணி … நான் இங்கை கச்சேரிலதான். நீங்கள் எல்லாம் இப்ப பெரியாக்கள் ஆயிட்டியள் என்ன? எங்களை எல்லாம் ஆட்டோவில இனி ஏத்துவியளோ தெரியேல்ல”

“ஏன் அண்ணை அப்பிடிப் பேசிறிங்கள்?”

“மிருதுளா சொன்னா. வீட்ட நீ வாங்கப்போறன் எண்டியாம். அதை நீ என்னோடையல்லா கதைச்சிருக்கோணும்?”

“அதுதான் இப்ப எடுத்தனான் அண்ணை. நாங்களும் எவ்வளவு காலம்தான் வாடகை வீட்டில இருக்கிறது? நீங்கதான் எப்பிடியாவது இத முடிச்சுக் குடுக்கோணும்”

“அதுக்கென்ன? ராணிக்கு இல்லாத மாளிகையா?”

“ஒரு கோடிவரைக்கும் போகும் எண்டு மிருதுளா சொன்னா?”

“அப்பிடியா சொன்னவா? அவவுக்கு இந்தியாக்காசுக்கும் இலங்கைக்காசுக்குமே வித்தியாசம் தெரியாது. இது ஒண்டரைக்கோடிவரைக்கும் போகும். ஒரு பார்ட்டி நல்லூர்த் திருவிழாவுக்கு வந்து நிக்கவெண்டு வீடு தேடுது. இன்னொருத்தன் பக்கத்துக் காணியையும் வாங்கி ஏதோ சேர்க்கஸ் கட்டப்போறானாம். ஒரு கொழும்பு டாக்குத்தர் இங்கை கிளினிக் திறக்கிறதுக்குத் துடிக்கிறார்.”

“என்னண்ணை இப்பிடிச் சொல்லுறியள்?”

“நான் என்ன செய்ய? வாங்கிறதுக்கு ஆக்கள் லைனில இருக்கினம். நீ பேசாம உங்கட ஆக்கள் இருக்கிற ஏரியாப்பக்கம் பாரன்? உந்தக்காசுக்கு அங்கனை பெரிய வீடா நானே அவுத்துத்தருவன்”

அற்புதராணிக்கு நடேசப்பாவின் நாக்கைச் சத்தகத்தால் அந்தர் அறுப்பதுபோல அறுத்தெறியத் தோன்றியது. காரியம் ஆகவேண்டும். அதுவரை இந்த நாய்க்கதைகளைக் கேட்டுத்தான் தீரவேண்டும்.

“மிருதுளாவுக்கு நாங்கள் குடும்பமாக வீட்டில இருப்பம் எண்டது பிடிச்சிருக்கு. அவவோட கதைச்சுப்பாருங்களேன். ஒண்டு பத்துவரைக்குமே நாங்கள் போகலாம்”

அற்புதராணி தன்னை அறியாமலேயே இத்தனை இலட்சங்களை ஒரே கணத்தில் கூட்டிவிட்டதை எண்ணிப் பிரமித்தாள். நடேசப்பா அவளோடு விளையாடுவது தெளிவாகத் தெரிந்தது. இந்த ஆட்டம் எங்கு போய் முடியப்போகிறது?

“ஒண்டு பத்துக்குச் சரிவராது ராணி. ஒண்டு இருபதுக்கு நான் அவவிட்ட கேட்டுப்பாக்கிறன். ஆனா நீ எப்பிடி உந்தக் காசை சரிக்கட்டுவாய்? உண்ட ஆட்டாவோ வித்தா? பத்து ரூவா கூடத் தேறாதே?”

“அதப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுறியள்? நாங்கள் இரண்டு நாளில அட்வான்ஸ் தாறம். உங்களுக்கும் பார்த்துப் போடுறம். முடிச்சுக்குடுங்கோ”

“சரி சரி வை. நான் கதைக்கிறன். அவா வெளிய வாறா. இஞ்ச கச்சேரில வெளிநாட்டாக்களைக் கண்டோன எல்லாரும் கறக்கிறதுக்கு நிக்கிறாங்கள். நான் இல்லாட்டி இவையளிண்ட கதை சரி”

நடேசப்பா அவள் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தார். நிறைமாசத்துக் கரு கலையும்போது வழியும் திரவம்போல மழை ஆட்டோவின் முன் பீலிகளில் வடிந்து ஓடிக்கொண்டிருந்தது. அற்புதராணி தன்னையறியாமலேயே அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டாள். அவசரமாக வட்சப்பைத் திறந்து, ராதாரமணனிடம் முன்பணத்தை இன்றே கொடுக்கமுடியுமா என்று கேட்டு அனுப்பினாள். கனடாவில் இப்போது காலை மூன்றரை இருக்கலாம் என்று தோன்றியது. அவனது விரல்களின் சலனம் திரையில் தெரிகிறதா என்று சில நிமிடங்கள் காத்திருந்தாள்.

கச்சேரியின் பின் காணியில் பல மாடிக்கட்டடம் ஒன்று எழும்பிக்கொண்டிருந்தது. தொழிலாளிகள் மழையைப் பொருட்படுத்தாது வேலை செய்துகொண்டிருந்தார்கள். சாரைப்பாம்புகள் பிணைந்துகிடப்பதுபோல சகதி நிலத்தில் மோட்டார் சைக்கிள்களின் டயர் தடங்கள் மண்டிக்கிடந்தது. காணிக்கு வெளியேயும் அந்தப் பாம்புகள் நெளிந்து ஊர் முழுதும் விரைந்துகொண்டிருந்தன. மழை அடித்து ஊற்ற ஆரம்பித்தது. கருநீலக் கட்டுவிரியன் பாம்புகளைப்போல மழைநீர் அந்த ஆலமரத்தின் பெரு விழுதுகளைப்பிடித்து ஊர்ந்து நிலத்தில் வழிந்து சாரைத் தடங்களைத் தொடர ஆரம்பித்தன.

திரையில் ராதாரமணனின் அழைப்பு மின்னியது.

000

வாசற்படியில் உட்கார்ந்திருந்த அற்புதராணியிடம் அவள் கணவன் சுடச்சுட பிளேன்ரீயைக் கொண்டுவந்து நீட்டினான்.

‘அதுக்குள்ள ஊத்திட்டியா?’ என்று புன்னகையுடன் அதனை வாங்கியபடி அவள் அவனையும் அருகில் அமரச்சொன்னாள். இருவரும் படிக்கட்டில் உட்கார்ந்து முன்னே போர்ட்டிகோவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தம் ஆட்டோக்களைப் பார்த்துப் பெருமிதப்பட்டார்கள்.

“கடைசில ஒரு ஆட்டோக்காரக் குடும்பம் அத்தியடியில வீடு வாங்குது என்ன?”

அற்புதராணி  பெருமையுடன் முணுமுணுக்க அவளது கணவன் ஆதரவாகக் கையை அவளது தோளில் போட்டான். கடந்த மூன்று நாட்களும் அவர்கள் ஆட்டோ அயர்களை நிறுத்திவிட்டு வீடு வாங்கும் விசயத்திலேயே கவனத்தைச் செலுத்தியிருந்தார்கள். மிருதுளாவுக்கும் தொடர்ந்து மழையில் நனைந்து திரிந்ததில் தடிமன் பிடித்துவிட்டதால், தனக்கு இனி பெரிதாக வேலை ஒன்றுமில்லை என்று ஓட்டல் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டுவிட்டாள். அற்புதராணிக்கு பணத்தைப் புரட்டுவது அவள் நினைத்ததைவிட இலகுவாக இருந்தது. ராதாரமணன் வேறு எவரிடமும் பணம் கேட்கவேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஒரு நில அளவையாளரைக்கொண்டு அந்தக் காணியை அளக்கும்படியும், உறுதியின் நகல்களைக் கொண்டுசென்று புரக்டரிடம் சரிபார்க்குமாறும் அவன் அறிவுறுத்தினான். நடேசப்பாவோடு பேசி ஒன்று பதினைந்துக்கு வீட்டையும் காணியும் அவனே தீர்த்தும் விட்டான்.

எல்லாமே சரியாகவே போனதால் காலையில் அவர்கள் நேர்த்திக்கடன் கழிக்கவென பிள்ளைகளோடு மடுவரைக்கும் போய்விட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார்கள். கணவனோடு ஆட்டோவில் பயணம் செய்வதை அற்புதராணி எப்போதும் விரும்புவதுண்டு. இளையமகளை முன்னாலே தனக்கருகில் வைத்துக்கொண்டு அவன் ஆட்டோவை ஓட்டுவான். மற்ற இருவரும் அற்புதராணியும் பின்னால் அமர்ந்திருப்பார்கள். ஒரு ஆர்வத்தில் அவள் அன்று சேலை கட்டி, காப்புகளும் நகைகளும் அணிந்திருந்தாள். எல்லாமே கவரிங்தான். ஆனாலும் ஆட்டோ பின் சீற்றில் ஜம்மென்று உட்கார்ந்து போகும்போது அவள் தன்னை நிஜமாகவே ஒரு ராணியாட்டம் உணர்வதுண்டு. அன்று மழைக்காக ஆட்டோவின் இரு பக்கத்துத் தோல் உறைகளையும் இறக்கிவிட்டுப் பயணிக்கும்போது அற்புதராணி தானொரு பல்லக்கில் போவதுபோலவே உணர்ந்தாள். அவர்கள் மாதா கோயிலில் இருந்த ஆளுயர மெழுகுதிரியை ஏற்றி ஆசிபெற்றுவிட்டு, வெளியே உள்ள திடலில் அமர்ந்து கட்டிக் கொண்டுபோயிருந்த சோறு கறியைச் சாப்பிட்டார்கள். மாலையில் ஊர் திரும்பும்போது முதலில் புது வீட்டுக்குத்தான் சென்றார்கள். அங்கு வாசலில் நின்று சில கணங்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அற்புதராணி செபம் செய்தாள். புதினமாக அவள் கணவனும் ஆட்டோவிலிருந்து இறங்கி கைகட்டி அவளோடு கூடவே நின்றான். வீட்டுக்குத் திரும்பியதும் அயர்ச்சியில் உடைமாற்றக்கூட வலுவின்றி கட்டிய சேலையோடே வாசற்படியில் அவள் அப்படியே குந்திவிட்டாள்.

“ஒரு வீடு வாங்கிறதுக்குள்ள பெண்டு கழண்டிடும்போல”

நீண்ட ஒப்பாரிக்குப்பின்னர் இளைப்பாறும் கிழவிகளைப்போல வெளியே மழை மூசிக்கொண்டிருந்தது. அற்புதராணியின் இளையமகள் அவளது சேலை மடிக்குள் வந்து குறண்டிக்கொண்டாள்.

“கங்காருக்குட்டியும் இப்பிடித்தான் அம்மாண்ட மடிக்குள்ள பூந்து கிடக்குமாம். மிருதுளா சொன்னா”

அற்புதராணி சொல்லிக்கொண்டிருக்கையில் செல்பேசி அலறியது. ஆயுசு நூறு. மிருதுளாதான்.

“வாழ்த்துகள் அற்புதராணி. சொன்னபடியே சாதித்துவிட்டீர்கள்”

“என்ன சொல்லுறீங்கள் மிருதுளா?”

“இவ்வளவு விரைவில் வீட்டு விசயம் முடிந்து விடும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. நடேசன் இப்பத்தான் எல்லாவற்றையும் சொன்னார். முன்பணம் கட்டியாயிற்றாம். நாளைக்குக் காலையிலேயே செட்டில்மெண்ட் செய்துவிடலாம் என்றும் சொன்னார்”

“நாளைக்குக் காலையிலா? என்ன சொல்லுறிங்கள் மிருதுளா?”, பதட்டத்தில் அற்புதராணியின் கையிலிருந்த பிளேன்ரீ டம்ளர் தடுமாறி நழுவியது. மொத்த வெந்நீரும் அவள் மார்புக் குழியை எரித்துக்கொண்டு வழிந்து ஓடி மடியிலிருந்த மகளில் தலையிலும் தெறித்தது. அவள் ‘அம்மா’ என்று வீறிட்டாள்.

“அற்புதராணி… ஆர் யூ ஓகே”

“ஓமோம் … தேத்தண்ணியை ஊத்திட்டன். ஒரு நிமிசம். நான் திருப்பி அடிக்கிறன்.”, அற்புதராணி அழுதுகொண்டிருந்த மகளைக் கணவனின் கையில் கொடுத்து அவளைக் கவனிக்கச் சொன்னாள். கொதி வலி தாங்காமல் குனிந்து மார்புப்பகுதியை சற்று ஊதிக்கொண்டே அவசரமாக நடேசப்பாவுக்கு அழைப்பெடுத்தாள்.

“ஹலோ ராணி … என்ன அங்காலை ஒரே அழுகைச் சத்தமா இருக்கு?”

“அதொண்டுமில்லை. இவள் சின்னவளுக்குத் தேத்தண்ணி ஊத்திட்டு … என்ன நடக்குது உங்கை?”

“ஆ… இப்ப உனக்கு அடிக்கோணும் எண்டு போனை எடுக்க நினைக்க நீயே அடிக்கிறாய். கடைசில வெண்டு காட்டிட்டாய் என்ன? வாழ்த்துகள்”

“எனக்கு ஒரு அறுப்பும் விளங்கேல்ல நடேசப்பா… ஆராவது விளக்கமாச் சொல்லுங்களேன்?”

“உன்ர பார்ட்டி ராதாரமணன் நேத்தே அரைவாசிக்காசை மாத்திட்டார். நாளைக்கு செட்டில்மெண்ட். அவர்ட பெயரிலதான் வீட்டை எழுதுறம். இப்போதைக்கு அவர்ட அக்காவை பவர் ஓப் அட்டர்னியா போட்டிருக்கிறார். அடுத்த மாசமே தான் வந்து மிச்ச வேலையைப் பாக்கிறதா சொல்லியிருக்கிறார். மிருதுளாவுக்கும் எல்லாம் நல்லா முடிஞ்சதில பயங்கர சந்தோசம். எனக்கும் சோலி முடிஞ்சுது. உனக்கும் இருக்கிறதுக்கு வீடு வந்திட்டுது.”

“என்ன விசர்க்கதையள் கதைக்கிறியள்?”

அற்புதராணி நடேசப்பாவைத் துண்டித்துவிட்டு ராதாரமணனுக்கு உடனேயே அழைப்பு எடுத்தாள். அவன் எடுக்கவில்லை. நான்கைந்து தடவைகள் அடித்துப்பார்த்துவிட்டு ‘அவசரம், அழைப்பு எடுக்கவும்’ என்று தகவல் அனுப்பினாள். அழுதுகொண்டிருந்த இளையமகளுக்கு அவளது கணவன் தலையில் மஞ்சளைத் தடவிக்கொண்டிருந்தான். அற்புதராணிக்கு கண்ணெல்லாம் நீர் முட்டிவிட்டது.

“எங்கை நெஞ்சைக்காட்டு… எல்லாம் அவிஞ்சு போயிட்டு… வா பக்கெண்டு ஆஸ்பத்திரிக்குப் போவம்”

“அத விடு சனியன். இஞ்ச துலைவார் எல்லாம் சேர்ந்து எங்களை மோசம் செஞ்சிட்டாங்கள்”

அவள் முற்றத்துக்கு வந்து ஆட்டோவிலேறி சடுதியாக அதனை இயக்கினாள்.

“இந்தச் சனியன் சொல்வழி கேக்காது. இப்ப மழைக்க எங்கை அந்தரிச்சுக்கொண்டு ஓடுறாய். என்ன பிரச்சனை?”

“அந்த அறுவான் தன்ர குணத்தைக் காட்டிட்டான்”

அவள் அழுதுகொண்டே மிருதுளா தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி வேகமாக ஆட்டோவை விரட்டினாள்.  அரைவழி தூரம் கடந்திருப்பாள். ராதாரமணனின் அழைப்பு வந்தது.

“என்ன அற்புதா… நடுச்சாமத்தில என்ன அவசரம்? … கனடாவில நேரம் காலம் பார்த்து கோல் பண்ண மாட்டீரோ?”

“அவசரம்தான். வீடு உம்மட பெயரில வாங்கினதா நடேசப்பா சொன்னார். என்ன நடக்குது?”

“ஆ அதுவா… எண்ட பெயர் எண்டா என்ன, உம்மட பெயர் எண்டா என்ன… எங்களுக்குத்தானே வாங்கினது?”

“உந்த சேட்டைக்கதையளை என்னோட விட வேண்டாம். வீடு நானும் எண்ட புருசனும் சொந்தமா வாங்கிறது என்று முடிவானது. உம்மளிட்ட கடன்தானே கேட்டம். நீர் இப்பிடிக் கழுத்தறிப்பீர் எண்டு எதிர்பாக்கேல்ல”

“பொறும் அற்புதா. இப்பிடி டென்சன் ஆகிற அளவுக்கு என்ன நடந்திட்டுது? இப்பவும் அந்த வீட்டில நீர்தான் இருக்கப்போறீர். எங்களுக்கு வாடகைகூடத் தேவையில்லை”

“எங்களுக்கு எண்டா? யார் அந்த ‘எங்கள்’, நீயும் உண்ட கொக்காவுமா? இல்லாட்டி உண்ட மனிசியும் இதில கூட்டா?”

“மரியாதையாக் கதைக்கோணும் அற்புதா. வீணா அபிராவை இதுக்குள்ள இழுக்கவேண்டாம். பாங்கில லோன் எடுக்கிற ஈசிக்குத்தான் வீட்ட எங்கட பெயரில வாங்கினான். அது விளங்காமக் கதைக்கவேண்டாம்”

“பேக்காட்ட வேண்டாம். பவர் ஓப் அட்டர்னி அக்காக்கு குடுத்ததா கேள்விப்பட்டன்.”

“அது அவவிண்டயும் ஊர் வாயையும் அடக்க. யோசிச்சுப்பாரும் அற்புதா, உமக்கு பவர் அட்டர்னி குடுத்திருந்தா எங்கடை சிநேகிதத்தை எல்லாரும் பிழையா கதைச்சிருப்பினம் அல்லோ? ஆனா நான் திரும்பவும் சொல்லுறன். இது எங்களுடைய வீடுதான். நீர் வாழ்நாள்பூரா அங்கைதான் இருப்பீர்.”

“கள்ள நாய்ப்பயலே வையடா போனை”, அற்புதராணி அந்தக்கணமே ராதாரமணின் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

ஒரு கொடிய வேட்டை மிருகம் தன் நகங்களால் கீறிக்கிழிப்பதுபோல மழை ஆட்டோவின் கூரையை பிறாண்ட ஆரம்பித்தது. அற்புதராணிக்கு கைகால்கள் எல்லாம் உதறலெடுக்க ஆரம்பித்தன. எப்படி அவள் இந்த மிருகத்தின்மீது நம்பிக்கை வைத்தாள். இனி இந்த மிருகம் வெள்ளித்தட்டிலே வாடகை ஒப்பந்தத்தை வைத்து அவள் கையில் கொடுக்கக்கூடும். சீவியம் முழுதும் அந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று உறுதி கொடுக்கும். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி அது ஊருக்கு வந்துபோகும். அந்த வீட்டிலேயே ஒரு அறையில் தங்கி, அவளோடு பேசிப்பழகி, சிரித்து, அவள் அறைக்குள் தற்செயலாக உள்ளே வந்து, அவள் குளிக்கும் சமயத்தில் கிணற்றடியில் கொடியில் உடுப்பு விரித்து, அவளது இயலாமைகளும் பலவீனங்களும் எந்த எல்லைவரை செல்லக்கூடும் என்று பரிசோதித்துப் பார்க்கும். எப்போதாவது கூட்டத்திலிருந்து தனித்து நிற்கும்போது அது அவளை வேட்டையாடவும் தயங்காது. இதனை இப்படியே விடப்போவதில்லை. இப்போதே போய் மிருதுளாவுக்கு நிகழ்ந்ததைச் சொல்லவேண்டும். அவள் புரிந்துகொள்வாள். ஒரு ஆணின் நரிக்குணத்தை உலகில் எங்கு வாழ்ந்திருந்தாலும் சக மனுசி ஒருத்தியால் நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும்.

அற்புதராணி தன் ஆட்டோவை படு வேகமாகச் செலுத்த ஆரம்பிக்க, ஈசல்களைப்போல மழைத்துளிகள் வேகமாக ஆட்டோ முன் கண்ணாடியில் விழுந்த சிதற ஆரம்பித்தன.

000

மிருதுளா வீதியில் நிற்பதைப்பார்த்து உள்ளிருந்து வந்த காவலாளி சொன்னான்.

“ஏன் மிஸ் வெயிலில நிக்கிறியள்? உள்ளுக்க வாங்கோ”

அவள் ‘பரவாயில்லை’ என்று அவனுக்குப் புன்னகைத்துவிட்டு மறுபடியும் வீதியைப் பராக்குப்பார்த்தாள். யாழ்ப்பாணத்தில் அவள் தங்கி நின்ற காலம் முழுதும் மழையைக் கொட்டோ  கொட்டெனக் கொட்டிவிட்டு அவள் புறப்படும்போதுதான் வானம் வெளித்திருந்தது. வெள்ளமும் சகதியும் அடங்கிப்போய் பளிச்சென்று, அப்போதுதான் குளிப்பாட்டித் துவாலையால் துடைக்கப்பட்ட குழந்தையின் உடலைப்போல ஊர் தெளிந்துகிடந்தது. முதன்முதலாக அந்த ஊரில் மழையின் இரைச்சலுக்குப் பதிலாக வாகனங்களும் மனிதக்குரல்களும் காகங்களும் எழுப்பும் சத்தங்கள் மிருதுளாவுக்குக் கேட்டன. ஐந்து நிமிடத்திலேயே கழுத்து வியர்த்துவிட்டது. மிருதுளா அற்புதராணியின் பச்சை ஆட்டோ தூரத்தில் தெரிகிறதா என்று எட்டிப்பார்த்தாள்.

“எல்லாரும் சேந்து ஏமாத்திட்டினம் மிஸ்”

அன்று அற்புதராணி வந்து நின்று புலம்பியபோது மிருதுளாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அற்புதராணிக்குத்தான் வீட்டை விற்பதாக நடேசன் சொன்ன பின்னர் அவள் அந்த விசயத்தில் பெரிதாகத் தலையைக் கொடுக்கவில்லை. ராதாரமணன் என்பவர் வெறுமனே உத்தரவாதம் கொடுப்பதாகத்தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் முன்பணத்தையும் வாங்கி, ஒப்பந்தத்தையும் எழுதியபின்னர் நிலைமை கைமீறிப்போன ஒன்றாகவே அவளுக்குத் தோன்றியது. அற்புதராணிக்கு அவள் உதவ நினைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் கையெழுத்தும் போட்ட பின்னர் ஒப்பந்தத்தை முறித்து, இன்னொரு இரண்டு வாரங்கள் நின்று, வழக்குகளை எதிர்கொண்டு, அற்புதராணிக்கு வீட்டை மாற்றிக்கொடுக்கத்தான் வேண்டுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.

“அற்புதராணி … நான் பேசிப்பார்க்கிறேன். ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? அந்த ஒப்பந்தத்தை நான் இரத்துச் செய்தால் அடுத்த வாரமே உங்களால் அந்த வீட்டை வாங்கமுடியுமா? அதற்குரிய பணம் உங்களிடம் உள்ளதா? குறைந்தது அரைவாசிப் பணத்தையாவது புரட்டமுடியுமா? முடியாவிட்டால் இதைச் செய்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது?”

அற்புதராணி எதுவுமே பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். ராதாரமணனின் உதவியின்றி அந்த வீட்டினை வாங்குவது சாத்தியமில்லை என்பது அவளுக்குத் தெரிந்த ஒன்றுதான். மிருதுளாவுக்கு அவளை நினைக்கப் பாவமாக இருந்தது. நேதுராம்கூட ஒருவகையில் ராதாரமணனின் இன்னொரு அவதாரம்தான். அவளுக்குத் தெரியாமல் அத்தனை சொத்துகளையும் அவன் பெயரிலும் அவனது குடும்பத்தின் பெயரிலும் நேதுராம் வாங்கிப்போட்டான். ஈற்றில் அவளும் இப்படித்தான் ஏமாறித் தலை குனிந்து நின்றது ஞாபகம் வந்தது. அந்தக் கணத்தில் பேசாமல் வீட்டை அற்புதராணிக்கே எழுதிவைத்துவிடலாமா என்றுகூட அவளுக்குத் தோன்றியது. ஆனால் பின்னர் அவள் எப்படி வாழ்வதாம்? அவளுக்கென்று இருக்கும் ஒரே சொத்து இந்த வீடுதான். அதையும் விற்று, வங்கியிலும் கொஞ்சம் கடன் எடுத்தால்தான் ஒரு சிறிய அபார்ட்மெண்டையாவது அவள் வாங்கலாம். அவளுக்கும் இன்னொரு இருபது, இருபத்தைந்து வருட வாழ்க்கை இருக்கிறதல்லவா? அதைச் சென்ற வாரம் அறிமுகமான ஒரு ஆட்டோ டிரைவருக்காகத் தாரை வார்ப்பதா?

தூரத்தில் அற்புதராணியின் பச்சை ஆட்டோ புலப்பட்டது. அவள் உள்ளே வைத்திருந்த சூட்கேசுகளை போய் இழுத்துவர ஆட்டோவும் வந்து நிற்கச் சரியாக இருந்தது.

“குட்மோர்னிங் மிஸ்”

சிரித்தபடியே அற்புதராணி இறங்கிவந்து சூட்கேசைத் தூக்கினாள். அவளது முகம் சற்றுத் தெளிந்திருந்தது. வழக்கம்போல நன்றாகப் பவுடர் போட்டு, தலைமயிர் இழுத்து கிளிப் மாட்டியிருந்தாள். சூட்கேசுகளை இலாவகமாக நிமிர்த்தி வைத்துவிட்டு மிருதுளாவை உட்காரச்சொன்னாள்.

“ஸ்டேசனுக்குத்தானே மிஸ்?”, மிஸ் என்பதை அவள் சற்று அழுத்தமாகவே உச்சரித்தாள்.

“ம்ம்ம் … வந்து … போகிற வழியில் வீட்டைக் கடைசியாக ஒருமுறை எட்டிப்பார்க்க முடியுமா?”

“அதுக்கென்ன மிஸ்? எங்க கேட்டாலும் இந்த ராணிண்ட தேர் கொண்டுபோகும்”

ஆட்டோ அம்பலவாணர் வீதிக்குப் போனது. காலையிலேயே விறகுக்காலையில் வேலையை ஆரம்பித்திருந்தார்கள். இவர்களைக் கண்டதுமே சிறியும் குழந்தைகளும் ஓடிவந்தார்கள். மிருதுளா கொடுத்த சொக்கலேட் பக்கற்றுகளை அந்தக் குழந்தைகள் உற்சாகமாக வாங்கிக்கொண்டன. பின்னாலே மெதுவாக வந்து நின்ற சிறியின் மனைவியிடம் ஒரு ஹாண்ட் பாக்கை அவள் நீட்டினாள் .

“புது ஓனர் கதைச்சவர் மிஸ். இப்போதைக்கு எங்களையே இருக்கட்டாம். அசல் வீடு. வசதியிருந்தால் நாங்களே வாங்கியிருக்கவேண்டியது. இனி எப்ப ஊர்ப்பக்கம் வந்தாலும் வீட்டையும் எட்டிப்பார்க்கோணும் மிஸ்”

மிருதுளா புன்னகைத்தபடியே விடை பெற்றாள். மறுபடியும் வீட்டின் வாசலையும் மாமரங்களையும் வேலிப் பூவரசுகளையும் ஆழமாகப் பார்த்தாள். எத்தனை கனவுகளோடு அந்த வீட்டைத் தாத்தா கட்டியிருக்கக்கூடும். முற்றத்து மாமரத்தை பாட்டிதான் நட்டிருக்கவேண்டும். என்றாவது ஒருநாள் தன் பேத்தியும் பூட்டனும் அதன் கனிகளைச் சுவைப்பார்கள் என்று அந்த இளம்பெண் எண்ணியிருப்பாள் அல்லவா? மிருதுளா முதற்தடவையாக தான் ஏதோ ஒரு தவறைச் செய்துவிட்டதாக உணர்ந்தாள். அவளுக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்த வீட்டில் எப்படி ஒரு இரவுகூட அவளால் தங்கமுடியாமற் போனது? எப்போதுமே பிரிதலின்போதுதான் இருத்தலின் இன்பத்தை உணரமுடிகிறது.

“மிஸ் … டிரெயினுக்கு நேரமாகுது”

அற்புதராணி கூப்பிட மிருதுளா ஆட்டோவுக்குத் திரும்பி வந்தாள். மிருதுளாவின் கண்கள் கலங்கியிருந்தாற்போல அற்புதராணிக்குத் தோன்றியது. அற்புதராணி அந்த வீட்டுப்பக்கமே திரும்பிப்பார்க்கக்கூடாது என்ற முடிவில் இருந்தாள். வெறுஞ் சவம் அந்த வீடு. அது எப்படி அவளைச் சிப்பிலி ஆட்டித் தீர்த்துவிட்டது? காதலித்து மோசம் செய்யும் ஆணைவிடக் கேவலமாக. ஒரு வாரத்துக்கு முன்னம்வரைக்கும் அவளது வாழ்க்கை எவ்வளவு இலகுவானதாக இருந்தது. இந்த நாசமறுந்த வீடு அவளது இல்லாமைகளையெல்லாம் ரங்குப்பெட்டியிலிருந்து வெளியே இழுத்து நடு முற்றத்தில் கொண்டுவந்துபோட்டுப் பரிகாசம் செய்கிறது. ஏன் இந்த எளிய வாழ்க்கை அவளுக்கு அமையவேண்டும்? உலகம் முழுதையும் ஆட்டோவில் சுமந்து செல்லும் அவள் மட்டும் ஏன் ஓலைக்குடிசைக்கே எப்போதும் திரும்பி வருகிறாள்? அதுவும் கேவலம், ஒரு வாடகைக் குடிசில்.

ஆட்டோவில் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. நிலையத்தை அடைந்தபோது ரயில் இன்னமும் நடைமேடைக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அற்புதராணி சூட்கேசினை இறக்கிவைத்துவிட்டு மிருதுளாவிடம் வந்தாள்.

“ஓகே மிஸ். கவனமாப் போய்ட்டுவாங்கோ. எங்களை எல்லாம் மறக்கவேண்டாம். நேரம் கிடைக்கேக்க வாட்சப்பில மெசேஜ் பண்ணுங்கோ”

“எல்லாத்துக்கும் நன்றி அற்புதராணி. இந்த ஒரு கிழமையில் எவ்வளவோ நடந்துவிட்டது. நான் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்”

மிருதுளா அற்புதராணியைக் கட்டியணைத்துவிட்டு அவளது கையில் ஒரு கடித உறையைத் திணித்தாள். ‘இது என்ன மிஸ்?’ என்றவாறு அற்புதராணி உறையைத் திறந்துபார்த்தவள் உள்ளே கற்றையாய்ப் பணம் இருப்பதைப்பார்த்ததும் அதிர்ந்தாள். ஏனோ முன்னர் ராதாரமணனின் மனைவி அபிரா அவள் குழந்தையின் கையில் திணித்த கடித உறை ஞாபகத்தில் வந்து தொலைத்தது.

“நான் ஒரு ஆட்டோக்காரி மிஸ். கூலியை மட்டும் குடுத்தாப்போதும். இதெல்லாம் வேண்டாம்.”, அவள் மறுபடியும் மிருதுளாவிடம் அதை நீட்டினாள்.

“இல்லை. எனக்காக வாங்கிக்கொள்ளுங்கள். நான் உங்கள் குழந்தைகளுக்கும் எதுவும் வாங்கிக்கொடுக்கவில்லை. கணவரையும் சந்திக்கவில்லை. பிளீஸ்.”

அற்புதராணி கடும்பிடியாக மறுக்க மிருதுளா வலுக்கட்டாயமாக அவள் கைகளில் அதைத் திணித்தாள். அற்புதராணி சொல்வதறியாமல் ‘ஓகே மிஸ், தாங்க்யூ’ என்று அதை வாங்கி சட்டைப் பொக்கற்றினுள் வைத்தாள். தூரத்தே ரயிலின் ஹோர்ன் ஒலி கேட்டது. ‘நான் வருகிறேன்’ என்று சொல்லியபடி மிருதுளா சூட்கேசினை இழுத்துக்கொண்டு நடைமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கொண்டு அற்புதராணி நின்றாள். அக்கணம் அந்த சூட்கேசினை இழுத்துக்கொண்டு நடப்பது தானாக இருந்தால் வாழ்வு எத்தனை இனிதாக இருக்கும் என்று அற்புதராணிக்குத் தோன்றியது. 

“என்ன கனவு கண்டுகொண்டு நிக்கிறாய். ஆட்டோவை எடுத்தோண்டு அங்காலை போ”

நிலையக் காவலாளி வந்து விரட்டும்போதுதான் அற்புதராணி சுய நினைவுக்கு வந்தாள். அவள் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வெளிவீதியில் நின்ற ஆட்டோக்களின் வரிசையில் கடைசியாகப் போய் தரித்து நிறுத்தினாள். மிருதுளா கொடுத்த கடித உறையைத் திறந்து பார்த்தால் உள்ளே இருபதாயிரம் ரூபாய்கள் இருந்தன. நான்கு நாட்களுக்கு முன்னம்தான் நூற்றியிருபது இலட்சங்களுக்கு வீடு வாங்கவென்று அவள் ஓடித்திரிந்தாள். மடுவரைக்கும்போய் செபம் செய்தாள். இன்று கேவலம் இருபதாயிரத்தைப் பார்க்கும்போது பரவசம் வருகிறது. இந்தக்காசில் பிள்ளைகளுக்கு ஆன சப்பாத்துகள் வாங்கிக்கொடுக்கலாம். முடிந்தால் கணவனுக்கு ஒரு டிசேர்ட்டும் எடுக்கவேண்டும். பாவம். அந்த மனுசன் ஒண்டுமே சொல்லாமல் என்னோடு எல்லா விசயத்திலும் இழுபட்டு ஓடித்திரிந்தது. அற்புதராணி செல்பேசியில் அவர்களது குடும்பப் புகைப்படங்களைப் பார்த்தபடி தன் அடுத்த அயருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

மழை தின்ற நிலத்தை மதிய வெயில் நாகதாளி முட்களைப்போலக் குத்த ஆரம்பித்தது.

ஜே.கே

அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.

1 Comment

  1. என் மனதை தொட்ட கதை.
    சுய நலம் பிடித்த narcistic எவ்வாறு மற்றவர்களிடம் காரியம் சாதித்துக்கொள்கிறான் என்பதை , அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள் .

    உரையாடல்கள் மூலம் சுலபமாக சொல்லியிருக்கக் கூடிய கதையை சிக்கலான வடிவத்தில் களத்தை விவரித்து வாசகனை உள்ளே இழுத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்

    ஸ்ரீராம்

உரையாடலுக்கு

Your email address will not be published.