இருளும் பன்னீர் ரோஜாக்களும்
இருண்ட தாழ்வாரங்களில்
அலைகிறேன்,
என் மனதின் ஆழத்தில்
ஒரு வினோதமான எதிரொலி
உடைந்த துணுக்குகளில்
தொலைத்த
அடையாளம்
ஒவ்வொரு திருப்பமும்
ஒரு முட்புதர்,
கானல் நீர்
அற்புத விளக்கு
எண்ணங்களின் வனாந்தரத்தில்
கடலில் தொலைந்த கப்பலைப் போல
என் ஆன்மா அலைகிறது.
அலைகளில் பயணம் செய்கிறேன்,
அங்கும் இருள் அலைகிறது.
கண்ணாடியைக் கொண்டு வாருங்கள்
சுயமிழந்த வெறும் விம்பம்
ஆன்மாவின் விலகல்.
வெளியே பார்க்கிறேன்
உலகம்
வெறித்தனமாகச் சுழல்கிறது.
உள்ளிறங்கிப் பார்க்கிறேன்.
பன்னீர் ரோஜாக்களின்
மறக்கப்பட்ட போதை தரும் வாசம்.
மீட்டெடுக்கவும் மீண்டும் அடையவும்
நான் இருளை மீண்டும் மீண்டும்
தழுவுவேன்
முழுசாக இழப்பது
பெறுவதற்கு மிக அருகில் இருக்கிறது.
வழிதவறும் பொன் சிறகு
தேவதாரு மரங்களின் மெல்லிய நடனத்தில்
நாம்
மெதுவாக வழிதவறுகிறோம்,
சூரிய ஒளி விரைந்தோடிச்சாயும்
புல்வெளிகளில்
உன் சிறுகை கோர்த்து
ஆடுகிறோம்.
ஆதி மரங்களின் அடித்தண்டில்
சாய்ந்து
அவை கிசுகிசுக்கும் கதைகளை
கேட்கிறோம்
மேகம் கவிழும் மங்கல் நாட்களில்
நாம் ஜன்னலில் வெளியே
மழைத்தூரல் ஆகின்றோம்.
காலத்தின் இந்த நாடா
வானவில்லால் நெய்யப்பட்டிருக்கிறது..
ஏரியில் கனவுகள் மிதக்கின்றன.
நாம்
மயில்நீலக் கழுத்து வாத்துக்களாகிறோம்.
என் பொன் வண்டே
சந்தேகமில்லாது சொல்கிறேன்…
மரிக்கொழுந்து மொக்கு
மெதுவாக துளிர்த்தெழுவதன்
அதிசயம் போலவே
நீ வளர்கிறாய்…
என்னையும் வளர்க்கிறாய்.
ஷமீலா யூசுப் அலி
‘ஷமீலா யூசுப் அலி’ தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். கவிதைகள், ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர். FemAsia இணைய இதழின் ஆசிரியர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது சிறு கவிதை துணுக்குகளை உங்கள் சஞ்சிகை யில் பதிவிட முடியுமா.?