1
போர்வீரன் கண் விழிக்கிறான்
போர்வீரன்
கண் விழிக்கிறான்
நூற்றாண்டுகள் கழித்து
போர்வீரர்கள்
விநோதரக ஊர்திகளில்
அமர்ந்திருக்கின்றனர்
கம்பித் தடுப்பு
இரண்டு படைகளையும்
பிரித்திருக்கிறது
வீரன் விழிக்கிறான்
முழக்கமும்
விநோதமாக இருப்பதைக் கேட்டு
கருப்புப் பெட்டிகளின் வரிசை
அவர்களைக் கடந்து போகிறது
கம்பித் தடுப்பு திறக்கிறது
வீரன் ஆயத்தமாகிறான்
படைகள் ஒன்றுக்கொன்று
சண்டையிடாமல்
வேறேதோ போருக்காய்
பிரிந்து செல்கின்றன
2
நானொரு மணல் ஓவியன்
அப்பாவைப்
பார்க்க முடியாதுதான்
ஆனால்
நானொரு மணல் ஓவியன்
அப்பாவை என்னால்
வரைய முடியும்
அப்படியே
வரைய முடியும்
வெறும் கைகளால்
வரைந்துவிடுவேன்
வரைந்ததும்
அப்பாவின் வட்டக் கண்களில் மட்டும்
தடித்த கருப்பு எறும்புகளை
வட்டமிட விடுவேன்
சில நிமிடங்களுக்கு
அப்பா என்னைப் பார்ப்பார்
எறும்புகள் மூக்கிற்கு இறங்கும்
அப்பா என்னை முகர்வார்
உதடுகளுக்கு இறங்கும்
அப்போது நான்
வீட்டிற்குத் திரும்பியிருப்பேன்
3
மாயப் பாறை
அருகருகே
நாமமர்ந்து
தூண்டிலிட்டோம்
உன் புழுவைத்
தின்ற மீன்
என் புழுவையும்
தின்றது.
புழு
ஒவ்வொன்றாய்
குறைந்தது.
குறைந்து
குறைந்து
கடைசிப் புழுவை
நீ எடுக்க
முதல் மீனை
நான் பிடித்தேன்.
4
பூமியில்
நான் ஒரு குழந்தை
எனக்குக்
கல்யாணம்
செய்தார்கள்
மணமுடித்த மனைவி
எனக்குமேல் குழந்தை
குழந்தையைப்
பார்த்துக்கொள்ள
நான் கொஞ்சம்
முதிர்ந்தேன்
வயதுயர்த்தி
மனைவிக்குழந்தை
அவளுக்கொரு குழந்தை
அது அவளுக்குமேல் குழந்தை
குழந்தையைப்
பார்த்துக்கொள்ள
அவளும்
முதிர்ந்தாள்
இதுதான்
சாக்கென்று
நானென்
வய
து
திர்த்
தேன்
_______
5
அமர்விடம்
நான் அமரச்சென்ற
நாற்காலியில்
ஒரு கத்தரி நிறப் பூ
இந்த மண்டபத்தில்
பூ போட்டு
சீட் பிடித்தவர்
யார்?
நான் அமரச் சென்ற
பேருந்து இருக்கையில்
மழையின் சில துளி
யாராக இருக்கும்?
நான் ஓய்வெனத்
திரும்பிய
மைதான மதிலெங்கும்
காக்கை எச்சம்
ஏன் இந்த
வேண்டாத வேலை?
கரையிலோ
சிறுமி
கட்டிய வீடு
கடலிலோ
நங்கூரப் படகின்
நடுங்கும் உறுமல்
வெற்றுத் தரையில்
மணலைப் போட்டு
மலை
மதார்
மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். அரசியல் தீவிரம், மனிதர்களின் துயரம், கசப்பு ஆகியவற்றிலிருந்து விலகி குழந்தைகளின் கள்ளமின்மை நோக்கி தன் கவிதைகளை விரித்தவர்.
ஆஹா.. அருமை
Very beautiful and unique poems. Madar is one of the best tamil poets of our times.