1
மழையில்
ஒரு தீக்குச்சி
நடக்கிறது
ஜெகஜ் ஜோதியாய்
ஜெகஜ் ஜோதியாய்
நடக்க
ஒளிர வேண்டும்
என்ற
எந்த
அவசியமுமில்லை
2
சஜ்தாவில் குழந்தை
தொழத் தெரியாத குழந்தை
தொழுகையாளிகளின்
வரிசையில்
நிற்கிறது
தக்பீர் கட்டுகிறது
சூரா ஓதுகிறது
கேட்பதைச் சொல்லி
செய்வதைப் பார்த்து
தொழுகை முடிந்து
உருகி அழுகும்
ஈமான் தாரியின் கண்ணீரை
அதற்கு நடிக்கத் தெரியவில்லை
3
மச்லி
மச்லி
அது இறந்துபோன புலி
அதைப் போலத்தான்
இறக்க வேண்டும்
என்று அவன் சொன்னபோது
நான் விளங்கிக்கொண்டேன்
அதைப் போலத்தான்
வாழவேண்டும் என்பதை
மச்லி
அது ஒரு வாழும் புலி
அப்படித்தான்
வாழ வேண்டும்
என்று அவன் சொன்னான்
மச்லிக்கு
மரணமில்லை
மச்லி
இன்னும் பிறக்கவில்லை
(‘வேங்கைவனம்’ எம்.கோபாலகிருஷ்ணனுக்கு)
4
ஒருவன் பல இடங்களுக்கு போனான்
தாகத்தின் உச்சியில்
நிற்பவனுக்கு
நிழல் – நீர்
சமயங்களில் நதி
சிலசமயம் அருவி
நதியில் விழுகிறது
ஒரு இலை
ஆடாமல் அசையாமல்
அப்படியே கிடக்கிறது
நீரோட்டம் காற்றென நகர
அது பறக்கிறது நதிக்கு மேல்
வேர்மீன் அதுவும்
ஆடாமல் அசையாமல் கிடக்க
நதியடியில்
மூழ்கவந்தவன்
தோலகற்றி
எலும்புக் குளியல்
போட்டான்
அருவிக் கரையிலோ
விழுது நீர் விழுந்து
குளித்துக் கிடக்கிறான்
தாகத்தின் உச்சாணிக்கொம்புக்காரன்
அவனே
வெயிலில் மடி இருத்தி
நிழலில் கால் நீட்டி
அலைக்குக் காத்திருப்பவன்
வெறுமனே
நிழலிலமர்ந்து
மழையில் நனைபவன்
5
ஒரு ஒரு வரி
ஒரு ஒரு வரியால்
ஒரு ஒரு
வரியால்
ஒரு
ஒரு
வரியால்
ஒரு ஒரு வரியில்
6
துண்டு துண்டாகக்
கிழித்து போடுகிறான்
பரோட்டாவை
பழைய காதலியின் காதல் கடிதம் போல்
சுக்குநூறாகக் கிழிக்கிறான்
ஊட்டியும் விடுகிறான்
மனைவியோ
மென்று
தின்னுகிறாள் வாயெங்கும் நிறைய
அவனோ
ஆவேசமாகக் கொடுக்கிறான்
வழக்கமில்லாத ஒரு முத்தத்தை
7
ஒரு மீன்
ஒரு கணம் நின்றது
ஒரு சொல்லானது
அது அசைந்து நிற்கவே
ஒரு வார்த்தையானது
நீந்தி நீந்தி
நீண்ட சொற்றொடரானது
சொற்களின் பெருக்கமானது
பூரணமானது
அடுத்த ஓர் அசைவில்
அது மீண்டும்
ஒரே சொல்லானது
மறு அசைவில்
அதுவொரு மீனானது
மதார்
மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். அரசியல் தீவிரம், மனிதர்களின் துயரம், கசப்பு ஆகியவற்றிலிருந்து விலகி குழந்தைகளின் கள்ளமின்மை நோக்கி தன் கவிதைகளை விரித்தவர்.
சிறிய வரிகள், பெரிய செய்திகள். கவிதை நடையின் போக்கு மிகவும் காத்திரமானது.
மீண்டும் சிறப்பு !
அருமை
மதாரின் ’சஜ்தாவில் குழந்தை’ கவிதை சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமானது. ஒருவன் பல இடங்களுக்குப் போனான் கவிதையும். சஜ்தாவில் குழந்தை இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல் பின்னணியிலும் கூடுதல் வாசிப்புக்கு இடமளிப்பது. மதாரின் கண்கள் இந்த இடத்தை நோக்கி நகர்ந்திருப்பது ஒரு திருப்பம்.
வெறும் நிழலில் நதியை உருவாக்கி வியர்க்க வைக்கும் மதாரின் ஒரு ஒரு வரியும் இன்னொரு உலகத்திற்க்கு அழைத்துச் செல்கிறது..வாழ்த்துக்கள் மதார்🥰