/

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

பற்றியெரியும் பறவைக் கூடுகள் வேர்களும் தூர்ந்து உடல் நில்லாது மரங்கள் முறியும் ஓசை கேட்டு விண்ணெங்கும் சிதறிய பறவைகள் என்பிலே தோல் போர்த்த விலங்குகள் ரேகைகளாய் வெடித்திருந்த நிலத்தில் சுருண்டு விழுந்து இறந்து போன விலங்குகளின் உடலிலிருந்து வழிந்து உறைந்து போயிருந்த இரத்தம் எலும்பாக மட்டுமே எஞ்சிய பாம்புகள் அசையும் கருந்திட்டுக்களாக உடல்களை மொய்த்திருந்த ஈக்கள் பொசுங்கும் வாடை எரிந்து புகையாகும் புதர்கள் நீங்காதிருந்த வெய்யில் பகலைப் போலவே கொதித்த இரவு இவைதான் நாங்கள் வசித்திருந்த நிலத்தின் கடைசி நினைவுகளாக எஞ்சியிருக்க முன்னே சென்றவர்களின் குருதித் தடத்தைப் பின் தொடர்ந்தே நான் நெடுந்தொலைவு அடைந்தேன்.  உலகே ஊணற்றுப் போயிருந்தது.

ஒன்றுக்கொன்று நெருக்கமாக கற்களை அடுக்கி நாணல் புற்களை மரக்கிளைகளைப் போர்த்திருந்த அவற்றை அவர்கள் வீடுகள் என்றும் வீடுகளின் தொகுப்பை ஊர் என்றும் அழைத்தார்கள்.  குழந்தைகள் பெண்கள் ஆண்களென ஒன்றாக வீடுகளில் வாழ்வதை குடும்பம் என்று அழைத்தார்கள்.  அவர்கள் அந்தரங்கத்தை விரும்பினாலும் தனிமையை விரும்பவில்லை என்பதை வீடுகளின் நெருக்கமே சொல்லியது.  மனிதர்கள் சொல்லும் கதைகளை வீடுகள் கேட்க வீடுகள் சொல்லும் கதைகளைக்  கேட்டுத் தலைகிறுகிறுக்கும் காற்று சுற்றிச் சுழல்வதை வேடிக்கை பார்க்கவே குனிந்து நிலம் பொறுக்குபவர்களும் தலை நிமிர்வார்கள்.  இவர்கள்தான் வீட்டிலே வசிக்கும் ஆடையணிந்த இந்த மனிதர்களே எனக்கு உணவளித்தார்கள்.

முதலில் அவர்கள் அளித்த உணவு எனக்கு குமட்டியது.  உணவை அவர்கள் சமைத்தார்கள்.  குடலைப் புரட்டும் உணவிற்குப் பழகாத நாட்களில் அரைப்பட்டினியோடு நாங்கள் ஆடிய கடைசி வேட்டையை நினைத்துக் கொள்வேன்.  புலிகள் சிங்கங்கள் யானைகள் என நாங்கள் அஞ்சிய விலங்குகள் எவையுமே உண்ணத்தக்கவை அல்ல.  எங்கள் கடைசி வேட்டை ஒரு மான்.  நாங்கள் கொன்றிருக்கவில்லை என்றால் கொஞ்ச நேரத்தில் அதுவாகவே விழுந்து செத்திருக்கும்.  வெறும் எலும்பும் தோலும்.  நாங்கள் கூர் தீட்டி வைத்திருந்த மரக்கிளை உடலில் சொருகியதும் விடுதலையை எதிர்பார்த்து நெடுநாட்கள் காத்திருந்த இரத்தம் பீய்ச்சியடித்தது.  விடுதலை என்பது என்னவென்றும், இரத்தம் குருதி, உறக்கம் தூக்கம், ஊண் இறைச்சி, உடை ஆடை, இவை போன்ற சொற்களை எங்கே பயன்படுத்த வேண்டுமென்றும் பின்னாட்களில் ஒரு பெண் கற்றுக் கொடுத்தாள்.  அவள் நாடோடியாகத் திரிபவளென்றும் பூட்டிய அறைக்குள்ளாகவே உண்மைகளைக் கண்டவள் என்றும் சொல்பவர்கள் உண்டு.  தோலை உரித்துப் பார்த்து நாங்கள் ஏமாந்து போனோம்.  கைக்குக் கிடைத்ததை எல்லோரும் பற்றியிழுத்து எடுத்துப் போனார்கள். எனக்கு ஈரல் மட்டுமே கிடைத்தது.  விலங்குகள் அருகிப் போகத் துவங்கியிருந்ததால் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறைச்சியைச் சேமிக்கப் பழகியிருந்தார்கள்.   ஆனால் இறைச்சியைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பது எப்படியென்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால் அழுகிப் போன இறைச்சியின் நாற்றத்தால் எங்களுக்கு மயக்கமே வந்தது.  ஊணற்ற எலும்புகளை தரையில் தட்டியும் உறிஞ்சியும் பார்த்து ஏமாந்தவர்கள் எலும்பின் ஒரு முனையில் கண் வைத்துப் பார்த்தார்கள்.  என் கையிலிருந்த ஈரலை நான் நெருப்பில் சுடுவதற்கு முன்பே தட்டிப் பறித்தவன் வெறும் எலும்பைக் கொடுத்தான்.  நான் அதன் ஒரு முனையில் கண் வைத்துப் பார்த்தேன்.   விண்மீன்கள் தெரிந்தன.  நான் எடுத்து வந்த ஈரலைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டபோது என்னிடமிருந்து அதனைத் தட்டிப் பறித்தவன் என் கன்னத்தில் அறைந்தான்.  அன்றுதான் அந்த அறைக்குப் பிறகு அவர்கள் ஒருநாள் என்னையும் கொன்று தின்றுவிடுவார்கள் என்று அஞ்சியே நான் அவர்களை நீங்கினேன். 

உடல் வற்றி கண்களில் நிரம்பியிருந்த அரையிருட்டோடு கூரை வேய்ந்த வீடுகள் இருந்த நிலத்தை அடைந்தேன்.   என்னைக் கண்டு நீரும் கூழும் அளித்தவர்களில் ஒருவன் சொன்னான். ‘இவன் இப்போதுதான் காட்டில் காலத்திலிருந்து வந்திருக்கிறான்.  இவன் கடக்க வேண்டிய காலம்தான் இன்னும் எவ்வளவு’.

அவர்களில்  ஒருவன் இடுப்பில் கட்டிக் கொள்ள கோவணம் ஒன்றை அளித்தான்.  வேட்டையின் போது குதித்து ஓடுவதற்கு இடைஞ்சலாக இருப்பதாலும் துள்ளித் துள்ளிக் குதித்து வலியெடுத்து விடுவதாலும் எங்கள் குறிகளை நாரால் இழுத்துக் கட்டிக் கொள்வதுண்டு.   இங்கே விலங்குகளைக் கொல்பவர்கள் இருந்தாலும் வேட்டையாடிகள் யாரும் இல்லை எனினும் அவர்கள் இடைப்பகுதியில் உடையணிந்திருந்தார்கள்.  நான் ஆடையணிந்தவன் ஆனேன்.  என் உடல் வலுப்பெறும் வரை அவர்கள் தொடர்ந்து இறைச்சியும், தாவரங்களில் விளைந்தவற்றையும் உணவாகக் கொடுத்தார்கள்.   அவர்கள் கொடுத்த உணவை கையால் தொடுவதும் நாக்கில் வைப்பதுமே எனக்கு வெறுப்பாக இருந்தது.  அவற்றின் மணமும், வழுவழுப்பும் அருவெறுப்பாக இருந்தன. மெதுவாக நான் சமைத்த உணவிற்குப் பழகினேன்.  சுட்டுத் தின்பதற்கு மாறாக இறைச்சியை வேக வைக்கப் பழகியிருந்தார்கள்.  சமைப்பதற்குத் தேவையான சட்டிகளையும் செய்திருந்தார்கள். 

‘இவன் இன்னும் சுட்டுத் தின்னும் இறைச்சியின் காலத்தில் வாழ்கிறான்.  எப்போதுதான் அடுப்பின் காலத்திற்கு வருவானோ’.  தலையலடித்துச் சென்றவனின் குரல் அடுப்பில் எரிந்த விறகில் விழுந்து சடசடத்தது.

ஆனால் வெகு விரைவாக நான் அடுப்பின் காலத்திற்கு வந்துவிட்டேன்.  அப்போதும் அவர்கள் என்னை அவர்களில் ஒருவனாக மதித்திருக்கவில்லை.  ஒரு கல்லைச் சுற்றி பூக்களைச் சொரிந்து அதனைத் தெய்வமென்று அவர்கள் வழிபடும் நாட்களில் குறிப்பாக விண்ணில் தோன்றும் அவர்களால் பெயர் வைக்கப்பட்டிருந்த விண்மீன்களைக் கணக்கிட்டு விளக்குகள் ஏற்றும் நாட்களிலும் அவர்கள் பலியிட்டுச் சமைத்த உணவில் எஞ்சும் எலும்புகளையே எனக்குத் தந்தார்கள்.   ஒருவன் பூச்சுற்றியிருந்த கல்லை வணங்கச் சொன்னான்.  நான் வணங்க முற்படும்போது, கூட்டத்தில் ஒருவன் சொன்னான், ‘இவன் இன்னும் தெய்வமற்ற காலத்திலே வாழ்பவன்.  நம்முடைய தெய்வத்தை இவன் வணங்கத் தேவையில்லை.  நமது தெய்வம் நம்மை மட்டுமே அறிந்திருக்கும்’.   கூட்டம் அவன் பேச்சைக் கேட்டு என்னை நெட்டித் தள்ளியது.  தெய்வத்தை இழந்ததால் அல்ல, கூட்டத்தில் இடிபட்டு என் கையிலிருந்த எலும்பை இழந்ததை நினைத்தே நான் சோர்வடைந்தேன்.  ஒரேயொருவன் பேசும் பேச்சை ஏன் அவர்கள் எல்லோரும் கேட்கிறார்களோ.  அதன் ஆபத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

 மழைக்காலம் முடிந்து அவரவர் வரப்பிட்டிருந்த நிலத்தில் உழத் துவங்கினர்.  உழுவது,  விதைகளைச் சேகரித்து வைத்திருப்பவர்களிடம் கடன் பெற்று வந்து விதைத்தனர்.  அவர்கள் ஓய்வு கொள்வதற்கு மலைகளின் பின்னே சூரியன் மறைய வேண்டியிருந்தது.   நான் மழைக்காலத்தில் அரைப்பட்டினியாகக் கிடந்தேன்.  விதைக்கிற காலத்தில் முக்கால் பட்டினி.  எனக்குக் கிடைத்த எந்த உணவுமே நான் செய்த வேலைக்கான ஆற்றலைப் பெறுவதற்குப் போதுமானதாக இருந்திருக்கவில்லை.   எப்போதும் பசியோடே இருந்தேன், எனது இரவுகளும் மெல்லத் தழுவிச் செல்லும் காற்றில் என் காதுபட பசி பசியென்றே கூவின.  தெளிவாகத் தெரிந்த விண்ணில், மீன்களும், நிலவும், அலையும் மேகக் கூட்டங்களும், சில சமயம கைக்கெட்டுகிற தூரத்தில், தூரத்தில் நிற்கும் மலை உச்சியை அடைந்து விட்டால் அடுத்த அடி நிலவில் வைத்து விடலாம் என்கிற தூரத்தில் நிலவும் தெரிந்தாலும், அவை எவையுமே பசியாற்றாது என்பதால் மிச்சமிருக்கும் ஆற்றலை நிலவைத் தொடுவதற்காக இழப்பதென்பது அறிவீனம் என்பதை ஒருவாறு புரிந்திருந்தேன்.   எப்போதும் உணவைத் தேடு, உடலில் ஒட்டியிருக்கும் ஆற்றல் தீரும் போதும் கூட என்பதைத் தவிர அவர்களைப் போன்று பெண்களை அழைத்துக் கொண்டு மறைப்புகளின் பின்னே செல்லவோ, குழந்தைகளைக் குளிக்க வைப்பதையோ நான் விரும்பியதில்லை. 

’இவன் இன்னும் குடும்பமற்ற காலத்திலே வாழ்கிறான்.  எப்போதுதான் மனைவி என்பவளின் வாசனையை பெண்களின் கூட்டத்திலிருந்து தனித்து அறிவானோ!’.

இலைகள் பழுத்து நிறம் மாறி உதிர்ந்து புத்திலைகள் தழைத்து நாட்கள் பல சென்றதும் அவரவருக்கென்று பிரித்து வைத்திருந்த பயிரிடும் நிலங்களுக்கு அருகே எனக்கு ஒரு துண்டு நிலத்தைக் கொடுத்தார்கள்.  அவர்களது நிலத்தில் உழைத்த நேரம் போக எனது நிலத்தில் (இதைச் சொல்வதற்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது) கல்லைப் பொறுக்கி, களைகளை நீக்கி, வரிவரியாக உழுது விதைக்கத் துவங்கினேன்.  எனது கையும் ஏரும் வரைந்த கோடுகளின் நேர்த்தியால் கண் விரிந்தவர்கள் பலர்.   விதைகளை கடன் பெற்று வந்து விதைத்து, பயிர் வளர்த்து அறுவடை செய்த நாட்களில் அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை.   என்னுடைய நிலத்திலே விளைந்தவற்றை மொத்த விளைச்சலோடு சேர்த்துப் பங்கிட்டுப் பிரித்தார்கள்.  எனக்கு வழங்கப்பட்ட பங்கு மழைக்காலத்திலும் கழுத்து வரை தின்பதற்குப் போதுமானதாக இருந்தது.

இலைகள் பழுத்து நிறம் மாறி உதிர்ந்து புத்திலைகள் தழைத்து நாட்கள் பல சென்றதும் அங்கிருந்த பெண்களின் நடுவே உடலில் மேடுகள் முளைக்கத் துவங்கியிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன்.   நிலத்தில் உழைத்திருந்த அவள் உடலெங்கும் மண் ஒட்டி பழுப்பாகத் தெரிந்தாலும் எப்போது என்னைப் பார்த்தாலும் அவள் கண்களால் புன்னகைத்து உதடுகளைச் சுழிப்பாள்.  நான் நீர் தளும்பும் குளமாக என்னை உணர்ந்தேன்.  பலநாட்கள் நாங்கள் மரங்களில் ஏறி அடர்ந்திருக்கும் கிளைகளின் நடுவே மறைந்து தனித்திருந்தோம்.   அவளுடைய வாசனையைத் தனித்து அறியும் அளவிற்கு நான் பெண்களின் வாசனையை முகர்ந்ததில்லை.  அவளுடைய வாசனை புத்திலைகளைக் கைககளில் கசக்கி முகர்வதைப் போலிருந்தது.  ஒரு கூட்டம் வழங்கும் அனுமதிகளுக்கும் எல்லையுண்டு என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.  அதை அறிந்தே இருந்தாலும் ஒரு பெண்ணின் வாசனையில் கட்டுண்டவனால் அந்தக் கட்டிலிருந்து மீண்டு கண் திறந்து அனுமதிகளின் எல்லைகளைப் பார்த்திருக்கவும் முடியாது. 

இலைகள் பழுத்து நிறம் மாறி உதிர்ந்த காலத்தில் மரங்களும் மறைப்பற்று இருந்தன. வீடுகளையும் நிலங்களையும் விட்டு தொலைவாக வந்துவிட்டோம்.  விரல்களாக விரிந்திருந்த அகலமான கிளையொன்றில் அமர்ந்து அந்தப் பெண்ணை முத்தமிட நெருங்கும் போது ஊரையே அழைத்து வந்த ஓசையைக் கேட்டு நாங்கள் கலைவதற்கு முன்பாக அம்பு  ஒன்று அவள் மார்பைத் துளைத்தது.  எனக்குக் குறி வைக்கப்பட்டிருக்கலாம்.  அவளைப் பிடிப்பதற்குள்ளாக மரத்திலிருந்து கீழே விழுந்தாள்.  கீழே விழுந்து அவள் உடல் முறிந்த ஓசை எங்கள் நிலத்தில் முறிந்து விழுந்த மரங்களின் ஓசையைப் போன்றிருந்தது. அவள் இறந்ததைத் தொடர்ந்து, என்னை அடித்துத் துன்புறுத்தி, நிலத்தை உழுவதற்கான கலப்பையைப் பிடுங்கியதோடு அவர்கள் கூரை வேய்ந்திருந்த நிலத்தை விட்டே என்னை விரட்டினர்.  வலி தாங்க முடியாத போதும் உரத்துச் சொன்னேன்:

’இது நிலம், நீ என்றும் நான் என்றும் ஒரு வேறுபாட்டையும் அறியாததது.  இங்கே நீ விதைத்தாலும் விளையும், நான் விளைத்தாலும் விளையும்.  அது விதையையும், விண்ணிலிருந்து வருகிற மழையையும், வெய்யிலையும் காற்றையும் பொறுத்தது.  இவை நான்குமே கூட நீ என்றும் நான் என்றும் ஒரு வேறுபாட்டையும் அறியாததது’. 

அவர்களில் ஒருவன், தெய்வத்திற்குப் பலிகொடுக்கும் நாளில் மொத்தக் கூட்டமும் யாருடைய பேச்சைக் கேட்டுத் தலையசைத்ததோ அவன், என்னுடைய வாயில் ஒரு குத்து விட்டான். 

‘இவன் பேசுகிற காலத்தையும் கடந்து, சிந்திக்கிற காலத்தையும் நமக்கு முன்னே எட்டியிருக்கிறானே!’

ஊரின் எல்லை வரை என்னை விரட்டிக் கொண்டே வந்தவர்கள் திரும்பிப் போயினர்.  அவர்களின் குழப்பமான பேச்சுக்களையும் கடந்து சற்று நேரத்திற்கு முன்பாக அந்தப் பெண்ணின் உடல் முறிந்து எழுந்த ஓசையே எனது காதுகளில் கேட்டது.  வழிநெடுக வாயிலிருந்து மார்பின் மீது வழிந்து உறைந்து கறுத்திருந்த இரத்ததோடு வெகு தொலைவு நடந்தேன்.  நீர்நிலைகளைக் கண்ட போதும் இரத்தம் கசிந்த எனது உடலைக் கழுவத் தோன்றவில்லை.  அப்போதும் அந்தப் பெண்ணின் விரல்கள் என் உடலைத் தடவிவிடுவதாக நினைத்தேன்.  அவள் திரும்ப வந்து உறைந்த இரத்ததைக் கழுவித் துடைத்து, பிறகு எனக்கும் அவளுக்குமாக ஒரு வீட்டை எழுப்புவோம் என்றும் நம்பினேன். 

இரவும், பகலும் மாறி மாறி பல நாட்கள் வெய்யிலும், மழையும், காற்றும், பனியும் மாறி மாறி பல நாட்கள்.  அப்போது கூந்தலால் தன் உடலைப் போர்த்தியிருந்த ஒரு பெண்ணை வழியிலே கண்டேன்.  அவளை ஒரு நாடோடியென்றும், பூட்டிய அறைக்குள் உண்மையைக் கண்டவள் என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.  அவளிடம் இரத்தம் வழியும் என்னுடைய கதையை சொன்னேன்.  வலியும், கண்ணீரும் பொங்க நான் சொன்ன கதையைக் கேட்டவள்:

‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்றாள்.

‘நீ யார்?’

மனித உடலில் மயிர் அடர்ந்திருந்த காலத்திலிருந்தே இதை அறிந்தவர்களின் வழிவந்தவள் என்றாள்.

‘ஆனால் அந்தப் பெண்?’

‘அவள் உடல் விழுந்து முறிந்து எழுந்த ஓசையே உனது பாடல்களின் சந்தம்’.

அதைக் கேட்ட உடனே நான் பாடல்களின் காலத்தில் நுழைந்துவிட்டேன்.

பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தமிழில் எழுதிவரும்  எழுத்தாளர். “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை” என்ற  சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.பெங்களூரில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.