/

போதல போதல பத்தல பத்தல – நவபாஷாணம் என்னும்’வெகுஜன’ நீள்கவிதை: ஷங்கர்ராமசுப்ரமணியன்

சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்டராப் இன்று என்ன நாளை என்ன தினசரி அதே காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே அட கெட் அப் அண்ட் டான்ஸ் இதுதான் உன் சான்ஸ் முதல்ல யார் முதல்ல யார் பேட்ட ராப் பேட்ட ராப் ம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட”.

1994-ல் வெளியான காதலன் திரைப்படத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் எழுதிய “பேட்ட ராப்” பாடல்  மிகப் பிரபலமானது. அக்காலத்துக்குப் புதுமையான பாப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியிருந்தார். “விடிய விடிய பேட்ட ராப் வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு புள்ள குட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே” என்று அப்பாடல் தமிழ் வெகுஜனப் பேச்சு, பொது ஏக்கம், ஆசாபாசம், பொன்மொழி, கழிவிரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் மெட்ராஸ் பேச்சுவழக்கில் வெளிப்படுத்தும். “பேட்டராப்” பாடல் ஆரம்பித்து வைத்த வகைமையில் தமிழ் சினிமாவில் “நாக்கு முக்க நாக்கு முக்க” மாதிரி நிறைய வந்துபோய்விட்டன.

“பேட்டராப்” தமிழ் வெகுஜன கலாச்சாரத்தை உள்ளடக்கிய பாப் பாடல் என்றால் விக்கிரமாதித்யனின் “நவபாஷாணம்” நீள்க்கவிதையை நவீன பாப் கவிதை என்று சொல்வேன். தமிழ் நவீன கவிதையில் திருநெல்வேலிப் பின்னணியில் உள்ள பேச்சுமொழி, கண்ணதாசன் பாடல்களின் சந்த இனிமை, தெரு, புழக்கடை, சமையலறை, உள்ளறைப் பேச்சுகள், பழமொழிகள், பொன்மொழிகள் என ஏற்கப்பட்ட வாழ்க்கைக்கும் விலக்கப்பட்டதற்கும்,  கட்டுப்பட்டித்தனத்துக்கும் தட்டுக்கெட்ட தனத்துக்கும், குடும்ப வரம்புக்குள் உள்ள சதுரவாழ்க்கைக்கும் விட்டு விடுதலையாதலுக்கும், ஹராமுக்கும் ஹலாலுக்கும், தெய்வீகத்துக்கும் மானுடத்துக்கும், புனிதத்துக்கும் புனிதமற்றதுக்கும் நடுவே தத்தளிக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தமிழ் வாழ்க்கையின் பிரதான அம்சங்கள் துலங்க முழுமையாக நிகழ்த்தப்பட்ட ஒருநபர் நாடகம் கவிஞர் விக்ரமாதித்யனின் நவபாஷாணம். அந்தவகையில், அதை தமிழின் பூரணமான நவீன பாப் கவிதையாகச் சொல்லலாம்.

நவீன தமிழ் சினிமா பாடலும் நவபாஷாணமும் சமூகப் பொது அம்சங்களை உள்ளடக்கமாகக் கொள்ளும் வகையில் பொதுமை கொள்கிறதே தவிர, சினிமாப் பாடலையும் நவபாஷாணம் போன்ற நவீன கவிதையையும் இணை செய்வதற்கில்லை. சினிமாப் பாடல் மேலோட்டமாக அணுகும் விஷயங்களை கவிதை ஆழமாக விசாரிக்கிறது. தனிமங்கள் இணையும்போது நடைபெறும் வேதிவினையும் வேடிக்கையும் சிருஷ்டிகரமும் களிகூத்தாகிறது நவபாஷாணத்தில். வெகுஜனக்கலையில் கைகூடாத அம்சம் இது.

மொழியும் கவிஞன் தொடர்புறுத்த விழையும் அர்த்தமும் அபூர்வத்தில் அகாலத்தில் முயங்கும்போது பிறப்பதுதான் கவிதை என்று நவபாஷாணத்தை வாசிக்கும்போது உறுதிப்படுகிறது. மேலாகப் பார்க்கும்போது தொடர்பு அதிகம் இல்லாத பேச்சுத்தொடர்கள்போல ஒலிக்கும் குறும்வாக்கியங்கள்தாம்; முணங்கும் சத்தம்,  நிராசையின் பெருமூச்சின் ஒலி, ம், க்கும், ஆ, ஓ, அச்சோ, அச்சச்சோ, போச்சு, போயே போச் எல்லாமே கவிதையின் அங்கங்களாகத் தொனிக்கின்றன. வெறும் பெயர்சொற்கள், உணவுப்பட்டியல், கிழமைகள்,  நல்ல நாட்கள், பத்திரிகைகள், பல்பொடியின் பெயர், ஆட்டோவில் காணும் பொன்மொழிகள், உபதேசங்கள் என எல்லாமும் அங்கதம், அபத்தமாக கவிஞனின் உத்தேசத்துக்கேற்றாற்போல ஆடுகின்றன. இங்கே எல்லாமும் கவிதையாக, ஒரு காலகட்டத்திய தமிழ் வாழ்வு என்னும் பின்னணிச் சீலையின் வழியாக அர்த்தமாகியிருக்கின்றன.   ஆனால், நவபாஷாணம் நீள்கவிதையின் ஒட்டுமொத்தத்தையும் சமத்காரமும், விஸ்தாரமும், செய்நயமும்தான் சேர்ந்திணைக்கின்றன; மகத்துவமும் சாதாரணமும் மேலும் கீழும் எதிர்எதிராக நல்லதும் கெட்டதுமாக வைக்கப்படும் அனுபவங்கள் நம்பிக்கைகளின் முரண்களும்தான்.

விக்ரமாதித்யனின் கவிதைகளோடு பரிச்சயமானவர்களுக்கு நெருக்கமான கோயில் புராணிகத்திலிருந்துதான் எளிமையாகக் கவிதை தொடங்குகிறது.

குற்றால நாதருக்கு / ஓயாத மண்டையிடி / சுக்கு வென்னீர் குடித்தால் / சொஸ்தப்படுமா / அருவிக் கரையிலிருந்து / அவன் காலி பண்ணினாலென்ன

திருக்குற்றாலநாதர், கோயிலில் அருவியின் கீழேயிருப்பதால் முதல் காலத்தில் பிரசாதமாகப் படைக்கப்படும் சுக்கு நீர் தரும் ஐதீகம் இன்னமும் அங்கே தொடர்கிறது. இப்படியாக கடவுளான குற்றாலநாதரை தரையிறக்கம் செய்துவிடுகிறார்,கவிதையின் துவக்கத்திலேயே. இந்தக் கடவுளோ துதி இல்லாமல் நவீன கவிதையில் மானுடனாகத் தரையிறங்கி குற்றாலத்தின் பஜார் ஊடாகப் பேருந்து நிலையத்துக்கு இழுத்து வரப்பட்டுவிடுகிறார்.

விக்ரமாதித்யன் என்ற கவியின் சொந்த வாழ்க்கையும் இதனுள் இருக்கிறது. குற்றாலாத்துக்கு அருகில் உள்ள சிறுநகரமான தென்காசியில் குடும்பத்தை வைத்துக்கொண்டு பிழைப்புக்காக சென்னைக்கு வந்துபோய் பல ஆண்டுகள் அல்லல்பட்டவர் அவர். அருவிக் கரையிலிருந்து அவன் காலி பண்ணினாலென்ன? என்பதில் அதன் ஏக்கமும் நாடகமாகத் தொனிக்கிறது.“தலைவலிக்காரனோடு எப்படித்தான் காலம்/ தள்ளுகிறாளோ குழல்வாய்மொழி? ” என்று அம்பாளையும் கூடவே தரையிறக்கம் செய்வது நிகழ்ந்துவிடுகிறது.

அம்பாளை அடுத்து கன்னியாகுமரியில் வைத்துப் பார்க்கிறான் கவிஞன். சமுத்ரக் கரையோரம் சிவப்புக்கல் மூக்குத்து மினுங்க / அன்று கண்டமேனி அழியாது”. கவிதையில்இதுவரைதான் நேர்கோட்டுத்தன்மை தொடர்கிறது. அதற்குப் பிறகு“தக் தகிட தக்தகிட தகிட தக்.. தகிட தகிட தக்தகிட தகிட தக்” என்ற இசைமையில் சமத்காரத்தில் நிலையழிவின் நடனத்தைக் கோர்க்கத் தொடங்குகிறார்.

“ஏழு குதிரை பூட்டிய தேரில் வருகிறான் / எங்கள் சூரிய தேவன்/ எனக்கோ அட்டவணைப்படுத்தப்பட்ட பொழுதுகள்/ உலகத்தின் துக்கத்தை/ ஒரு வரியில் எழுத முடியுமா / எழுதுவதற்குத்தானே /யோசித்துக் கொண்டிருக்கிறேன்/ பன்னாடையறியுமோ/ பதநீர் ருசி.

நடுவில் அலுப்பாகி அடுத்து எழுந்து முதல் பகுதி உச்சத்தில் முடிகிறது. பன்னாடைக்கும் பதநீருக்கும் உள்ள இடைவெளிதான் மொழிக்கும் அர்த்தத்துக்கும் உள்ளது போல. வாழ்வுக்கும் ஏக்கத்துக்கும் போல. வளமைக்கும் வறுமைக்கும் போல.

000

“நான் / சாமி / எப்படித் /தெரியுமா / நான் / நெப்போலியன் / எப்போது / புரியுமா /
போச்சுடா/ சரியாப் / போச்சு”


இப்படி விக்ரமாதித்யனின் குதிரை தட் தட் தடதடவென்று ஓடத்தொடங்குகிறது.

“பச்சைச் செடிகள் வாசம்போல / பெண்ணுடம்பு / பச்சைக் கொடிகள் பின்னல்போல / பெண் மனசு / பச்சை மரங்கள் ஆயுசுபோல / பெண் வாழ்வு / பச்சையோ பச்சைதானே /பெண் / பச்சையைப்பற்றி இன்னமும் எழுத/ பைத்யக்காரனா என்ன நான்

பச்சைப் பசுமை வெளிறி வறண்ட நிலங்கள் வெடித்த காலத்தில் பச்சை பச்சை என்று பைத்திய உச்சாடனத்தில் பேசத்தொடங்குகிறது நவபாஷாணத்தின் கவிக்குரல். நிலத்தை மொழி கனவு காண்பது போல. அந்த உச்சாடன கதியில் உயரத்தில் பறக்கிறது.

“கிளிகள் அழகு/ கிளிகள் அழகு / கதிர்கள் இழப்பு / கதிர்கள் இழப்பு / கிளிகளை விரட்டு / கிளிகளை விரட்டு / கதிர்களைக் காப்பாற்று / கதிர்களைக் காப்பாற்று / ச்சோ ச்சோ ச்சோ ச்சோ ச்சோ ச்சோ / தம்பதி சமேதராக வாழ்வது யோகம் / தனித்து வாழ நேர்வது பாவம்”

ஆமாம். கிளிகளை அழகு என்று சொல்வது யார்?
கிளிகளை விரட்டி கதிர்களைக் காப்பாற்று என்று சொல்வது யார்?
அந்த ச்சோச்சோச்சோ விரட்டிய கிளிகளுக்கா, காப்பாற்றப்பட்ட கதிர்களுக்கா?
கிளிகள், யார் தாம்பத்யத்தின், எந்தக் கூடலின் மஞ்சத்திலிருந்து பறக்கின்றன நம்பி?
அவை எங்கே பறந்து போயின விக்கி?

000

கடவுளைப் பாடிவிட்டான், வளமையைப் பாடிவிட்டான், அடுத்து நிலத்தை எல்லைகளை வரைய வேண்டுமல்லவா விக்ரமாதித்யன்? அவன் சங்க கவிஞனின் தொடர்ச்சி அல்லவா?

இமயமலை / விந்திய சாத்பூரா / மலைத்தொடர் / மேற்குத் தொடர்ச்சிமலை / கங்கை நதி / காவிரியாறு / தாம்ரவருணித் / தண்ணீர் / அரபிக்கடல் / வங்காளவிரிகுடா / இந்து மகாசமுத்ரம் / செம்மண் / பூமி / கரிசல் /காடு / தீரவாசம் / தாய் / நாடு / மக்கள் / தலைவர்/ இனவுணர்வு / மொழிப்பற்று / ஏக இந்தியா / ஜனநாயக சோசலிஸம்

இப்படி நிலத்திலிருந்து சமகாலப் பண்பாட்டுக்கு அரசியலுக்கு இறங்கும் விக்ரமாதித்யன் இன்று இதை எழுதியிருந்தால் ஜனநாயக பாசிசம் என்று எழுத வாய்ப்பேற்பட்டிருக்கும்.

நில எல்லைகளிலிருந்து அடுத்து வீட்டைக் கட்டுகிறான் விக்ரமாதித்யன். கடைசிவரை வீட்டை நோக்கி அலைந்து திரிந்தாலும் வீடு என்ற ஒன்று உண்டு என்பதை பிரமிள் போலவே நம்பி அலைகிறவவன் அவன்.

“அங்கணக்குழி / நிலைவாசல் / படி சத்திரத்துச்/ சோறு / சினிமாப்பாட்டு / மேடைப்பேச்சு/ சமயபுரம்/ மேல்மருவத்தூர்/ கொல்லூர் / திருப்பதி / திருத்தணி / காசி / ராமேஸ்வரம் / இன்னும் என்ன வேண்டும் இந்த சோகைத் தமிழருக்கு?”

அலுப்பில் சலித்த தமிழன் சவடாலில் இறங்குகிறான்.

“சிங்கத்தை / சுண்டெலிபோல நடத்தாதீர் / தங்கத்தை / தரையில் வீசியெறியாதீர்? “

“திராவிட பாரம்பர்யம் / திசை மாறிய பரிதாபம் / வார்த்தைகளில் வாழும் ஜாதி / ஓலைக் குடிசைகளில் / ஒளியும் காற்றும் தாராளம் / வளர்ந்த பீஹாரி வயிறு பிழைக்க / வருகிறான் கல்கத்தாவுக்கு / ஏழைப் பிள்ளைமார் வீடுகளில் / ஏகமாய் மூட்டைப்பூச்சிகள்”

வளர்ந்த பீஹாரி தென்காசி தாண்டி செங்கோட்டைவரை வந்துவிட்டான் இன்று. அடுத்து மீண்டும் சமத்காரம், சவடால் என எழுந்து நிற்க முயல்கிறான் நவபாஷாணத்தின் நாடகக்காரன்.

“போய்ச்சேர்ந்தான்/ புதுமைப்பித்தன் / வந்துநிற்கிறான் / விக்ரமாதித்யன்.

நவபாஷாணத்தின் வழியாக தனது கவிதை வெளிப்பாட்டில் நவீன கவிதை வரலாற்றில் ஒரு உச்சத்தை எட்டிய விக்ரமாதித்யன், இந்த இடத்தில் தனது சிலுவைக்கான மரத்தையும் ஆணிகளையும் தேர்ந்துவிட்டார் என்று சொல்வேன். திண்ணை, தெரு, வீட்டின் உள்ளறைகள் விளையாட்டு எனப் பேசிப்பேசித் துலங்கிய தமிழ் வெளிப்பாடு நவபாஷாணத்தில் சேர்ந்து களிகொண்டு ஆடத்தொடங்குகிறது.

“கும்மியடி / கோலாட்டம் போடு / குலவையிடு / குரங்காட்டம் ஆடு. / பந்தலிலே படருதடி/ பாகற்காய் / அறுசுவை / நவரசம் / வகைப்படுத்தி வைத்தபடியே / வாழ்கிறார் மக்கள் / சீட்டுக்கட்டு / மேளதாளம் / பன்னீர் செம்பு / சந்தனப் பேளா / குத்து விளக்கு / மஞ்சள் கிழங்கு / ஜெகதலப்பிரதாபன்/ மதன காமராஜன் / மாங்காய் மடையன்/ தேங்காய் திருடன் / சொன்னானே சும்மா இரு என்று/ சொன்னானே நாதன்”

தரிகிடத்தோம், தரிகிடத்தோம் என்று திரும்பச் சுழல்கிறான் நாடகக்காரன்.

“எதையும் தாங்கும் / இதயம் வேண்டும் / நானே வழியும் சத்யமும் / ஜீவனுமாக இருக்கிறேன் / தென்னாடுடைய சிவனே போற்றி / எந்நாட்டவருக்கு இறைவா போற்றி / உன்மத்தம் கொண்ட ஓரி / உருக்குலைஞ்சு போச்சு சாரி.

பேயாட்டத்தில் சிவனும் கிறிஸ்துவும் பேயும் உருக்குலைந்த சேலையாக மாறுகிறார்கள். புராணிகத்தில், சைவத்தில் நம்பிக்கைக் கொண்டவனாக கருதப்படும் கவிஞன், சிவனை இந்தக் கவிதையின் ரங்கராட்டினத்தில் எங்கு சுழற்றுகிறான் பாருங்கள்!

“எல்லாம் நன்மைக்கே
நல்ல புடுங்கி தத்துவம்டா மச்சான்
.

பேட்டை ராப் பாடலில் பத்தல பத்தல கொஞ்சம்கூட பத்தலை என்ற ஆவலாதி உள்ளது. நவபாஷாணத்திலும் அந்த பத்தாத வெறுமை ஆவலாதி ஆகிறது. பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல என்று சமீபத்தில் வந்த விக்ரம்-2 படப் பாடலும் இதே ஆவலாதியைத் தொடருகிறது. சினிமா பாடல் பகல் கனவின் அம்சங்களைக் கொண்டது என்றால், நவீன கவிதை பண்பாட்டின் ஆழ்கனவாக இருக்கிறது. அதனால்தான் ஒன்றுக்கொன்று முரண்களைக் கோர்த்து ஒரு பார்வையை, ஒரு தர்க்கத்தை, ஒரு விழைவை இன்னொரு பார்வையும் இன்னொரு தர்க்கமும் இன்னொரு விழைவும் இல்லாமல் ஆக்கும், ஊடறுக்கும் அனுபவம் நமக்கு நவபாஷாணமாக நிகழ்கிறது.

“முடிந்ததா பாரதம் / தொடருது துன்ப துன்பமாய் / ஒண்ணும் இல்ல / ஒண்ணும் இல்ல / எல்லாம் இருக்கு / எல்லாம் இருக்கு / என்ன செய்ய / என்ன செய்ய / சாவு சாவு / சுயத்தைக் காப்பாற்றித் தொலை”

000

இம்மைக்கும் மறுமைக்கும் லௌகீக கோரிக்கைகளுக்கும் கவிதையைத் தேர்ந்து கொண்டவர் விக்கிரமாதித்யன். வறிய வாழ்க்கைக்கும் வார்த்தைகளே தேவைப்படாத நடைமுறை வாழ்க்கைக்கும், வார்த்தைகளோடு போராடும் எழுத்துப் பணிக்கும்  இடையே ஒரு யுத்தத்தை அவர் விதி போலத் தேர்ந்துகொண்டார். வாழ்க்கையின் பெரும்பகுதியை “மகிமை கிடையாது, யுத்தம் உண்டு” என்று உணர்ந்து அறிந்து வேறு வழியில்லாமல் ஏற்று அதில் தன்னைக் கழித்த அபூர்வக் கலைஞர்களில் ஒருவர். அவரது போராட்டத்தில் மொழியும் அர்த்தமும் பிரமாண்டமாகக்கூடிய ஒரு பெரும் படைப்பு நவபாஷாணம்.

ந. பிச்சமூர்த்தியின் “காட்டுவாத்து”,  சி. மணியின் “வரும்போகும்”,  நகுலனின் “அஞ்சலி”,  “மழை மரம் காற்று”, கலாப்ரியாவின் “எட்டயபுரம்” போன்ற வெற்றிகரமான நீள்கவிதைப் படைப்புகளில் தனி அடையாளத்தோடு திகழ்கிறது‘நவபாஷாணம்’. சி.மணியின் “வரும்போகும்”, கலாப்ரியாவின் “எட்டயபுரம்” இரண்டும் சமூகத்தில் ஒரு காலகட்டத்தின் சப்தங்களைப் பிரதிபலிக்க முயன்ற நீள்கவிதைப் படைப்புகள் எனலாம். நவபாஷாணம் ஒரு சமூகத்தின் அத்தனை கனவுகளையும் திரட்டிய பொதுக்குரல். ஒரு கூருணர்வு கொண்ட பண்பாட்டில் நவபாஷாணம் போன்ற கவிதை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டிய பிரதி. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சீண்டுவார் இல்லாமல் இருக்கிறது. மண்ணுளிப் பாம்பின் ஜிம்னாஸ்டிக் பயிற்சியிலிருந்து,  நிமிர்ந்து புத்தகங்களை படிக்கவும் வேண்டுமல்லவா?

000

ஞானக்கூத்தன்,  சி. மணி, ஆத்மாநாம், கலாப்ரியா, விக்ரமாதித்யன், சுகுமாரன், செல்வி சிவரமணி, சு.வில்வரத்தினம் முதலியோரில் திரண்ட ஒரு பொதுக்குரல் தொனி நவீன கவிதையில் 90-களில் தொடங்கி படிப்படியாக விடுபட்டுவிட்டது. இந்த விடுபடலை ஆராய்ந்து பார்ப்பதற்கும்‘நவபாஷாணம்’ ஒரு சந்தர்ப்பத்தைத் தருகிறது. தமிழ்க் கவிதை பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் அடைந்த காலகட்டத்தில் அது தனிக்குரல்களின் பன்மையாகவே மாறியிருக்கிறது.

“இந்தச் செருப்பைப் போல எத்தனை பேர் தேய்கிறார்களோ, இந்தக் கைக்குட்டையைப் போல எத்தனை பேர் கசங்குகிறார்களோ” என்று ஆத்மநாமில் தொனித்த பொதுக்குரல் ஏன் சமீபகாலமாக தமிழ் நவீன கவிதையில் கேட்கவில்லை? மார்க்சிய உள்ளடக்கம் கொண்ட யவனிகா ஸ்ரீராமிடமும் இளங்கோ கிருஷ்ணனிடமும் இசையிடமும் பொதுக்குரல் தொனிக்காதது அவர்களது கவிதை உள்ளடக்கம் சார்ந்த விஷயம் மட்டும்தானா?

இசையின் சிறந்த அடையாளக் கவிதைகளில் ஒன்றான “லட்சுமி டாக்கீஸ்” கவிதை வழியாக அதில் தொனிக்கும் சிறப்பான பொதுக்குரலை உதாரணமாக இங்கே பார்க்கலாம். அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்று இது.

லட்சுமிடாக்கீஸ்
ஐம்பது வருட பழமையுடைய
திரையரங்கை இடித்து ஒரு தொழிற்கூடம் கட்டினார்கள்
ஆலை சங்கு கூவுவதற்குப் பதிலாகப் பாட்டொன்றைப் பாடியது
யாரோ ஒரு காதலன்
யாரோ ஒரு காதலியைக்
கூடம் முழுக்கத் துரத்திக் கொண்டிருக்கிறான்
யாரோ ஒருத்தி ஓயாது விசும்பிக் கொண்டிருக்கிறாள்
யாரோ இருவர் அனல் பறக்கச் சண்டையிட்டனர்
சில சமயங்களில் பெரும் போர் மூண்டது
இயந்திரங்களில் இருந்து அவ்வப்போது
விரக முனகல்கள் கேட்ட
சில நேர்மையான போலீஸ்காரர்கள்
விடிய விடிய ரோந்து வந்தனர்
அர்த்த ராத்திரியில் வெள்ளுருவொன்று
நறுங்குழல் விரித்து கொலுசதிர நடந்தது
(அப்போது அதன் பின்னணியில் ஓநாய்கள் ஊளையிட்டன)
ஒரு சிம்மக்குரல் அடிக்கடி அடிக்கடி
பாஸ்டார்ட் பாஸ்டார்ட் என்று கத்துகிறது
அதன் உரிமையாளர் கொஞ்சம் கண்ணயரும்போதெல்லாம்
இந்த மண்டபமே இடிந்து தூள்தூளாகட்டும் என்று
பத்தினி ஒருத்தி இடிக்குரலால் ஆணையிடுகிறாள்
பாவம், இத்தனை இத்தனை
பேய்களை எப்படி விரட்டுவார் அவர்.

இசையின் லட்சுமி திரையரங்கம் வெறும் திரையரங்கம் மட்டுமா? ஒரு சமூகத்தின் கனவை அல்லவா கண்டுகொண்டிருக்கிறது லட்சுமி தியேட்டர் கவிதை. இது தமிழ் பண்பாட்டின் பிரத்யேகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் எந்த மூலையில் நிகழும் பண்பாடும் அடையாளம் காணக்கூடிய பொதுக்கூறையும் கொண்டதல்லவா?

பொதுக்குரல் என்ற கோரிக்கையை தர்க்கத்தை, கவிதையின் அன்றாடத்தன்மை, உள்ளடக்க வளமை, அடையாளங்கள், பல தரப்புகளை உள்ளடக்கியதன்மை, கூடுதல் வாசக கவனம், சுவாரசியம் என்ற அடிப்படையிலிருந்து சுட்டவில்லை. ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள், தோல்விகள், வெற்றிகள், நம்பிக்கைகள், மகிமைகள், மகிமை இழந்து நிற்றல், குற்றவுணர்ச்சிகள் ஆகியவற்றோடு அது சேர்ந்து காணும் கனவின் சாயல்களை உள்ளடக்கிய போஷாக்கான குரலையே பொதுக்குரல் என்று கருதுகிறேன். அந்தப் பொதுக்குரலை எல்லாக் கவிஞர்களுக்குமான அத்தியாவசியமான தகுதியாகவும் நான் முன்வைக்கவில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றோ இரண்டோ பொதுக்குரல்கள் ஆத்மாநாம் போல, கலாப்ரியா போல, சுகுமாரன் போல எழும். 

அப்படியான ஒரு பொதுக்குரல் கவிதை போன்ற கலை வடிவத்தில் உருவாவதற்கு கவிஞர்கள் மட்டுமே பொறுப்பாக இயலாதென்ற புரிதலில் ஒரு கேள்வியாக, ஒரு பரிசீலனையாகவே இந்தக் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டம், தலைகீழாக மாறிவிட்ட நடத்தைகள், உலகப் பார்வை, விழுமியங்களின் நுண்ணுயிர் தாக்குதலுக்கு கவிஞர்களும் கவிதைகளும் மேலும் ஆழமாக ஆட்படுபவர்,  ஆட்படுபவைதானே.

குழூஉக்குறியாக, பரிபாஷையாக, தனிப் புராணிகங்களாக, பிரத்யேக முணுமுணுப்புடன், தினுசுதினுசான அடையாளங்களுடன் பெரும்பான்மையான நவீன கவிதைகள் வெளிப்படும் வேளையில் சென்ற நூற்றாண்டில் செயல்பட்ட ‘பழைய’ பொதுக்குரல்களைக் கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்.

அடையாள அரசியலும் அடையாளம் அது சார்ந்த அழுத்தங்களும் ஒரு பொதுக்குரலை உருவகிக்க முடியாமல் செய்கிறதா? முழுமையாக துருவப்படுத்தப்பட்ட தரப்புகள் ஓங்கி வெளியே ஒலித்துக்கொண்டிருக்கும் இடத்தில் கவிதை, அந்தரங்கப் புழுக்கத்தில் அழுந்தி பொதுக்குரலை வெளியிட இயலாமல் கிடக்கிறதோ?

எழுத்துகளிலும் கலை,  இலக்கியச் செயல்பாடுகளிலும் பொதுக்குரலாக, குறைந்தபட்ச அறத்துடன் சுயபரிசீலனை செய்துகொண்ட,  மற்றதை, மற்றவற்றின் துயரங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்க இயலக்கூடிய நடுத்தரவர்க்கம், நுகர்வும் தாராளமயமும் அதிகரித்துவிட்ட சூழலில் தனது ‘பழைய’ தார்மிக உள்ளடக்கத்தை அல்லது பழைய ‘முகமூடியை’ அவிழ்த்துக் காற்றாடும் அளவுக்குத் திவாலாகிவிட்டதா?

கலை,  இலக்கியம், அரசியல் எல்லாம் தனிமனித சாதனை, தொழில் முனைவு என்றாகிவிட்ட நிலையில் பொதுக்குரல் என்ற ஒன்று உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லையா?

இந்தக் கேள்விகளை எல்லாம் நாம் எழுப்ப வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கும் ‘நவபாஷாணம்’ உதவக்கூடும்.  

நவபாஷாணம் கவிதை இணைப்பு இங்கே.

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.