/

மாயக்கொந்தளிப்பு: அழகிய மணவாளன்

தோழி, போ

சென்று சொல்

வலியை ஏற்க இனி

காதல் மிச்சமில்லை…..

-சுகதகுமாரி     

வெறுமையில், எதிர்நோக்காத கணத்தில் தீண்டும் கடந்தகால இனிமை. அந்த இனிமையின் துளியை சுவைக்கும்போதே அங்கு மீளமுடியாது என்ற யதார்த்தத்தின் எடையும், பார்த்திருக்கவே அது கரைந்து மறைவதும்… கடந்தகாலமாக ஆகிவிட்ட  இனிமையை  எதிர்கொள்ளும் மனிதமனதில் நிகழும் உணர்வுகளை மையமாக கொண்டது ஜெயமோகனின் ”பொலிவதும் கலைவதும்” சிறுகதை. கேரளத்தின் சடங்கு சார்ந்த கலைவடிவங்களில் ஒன்றான ”களமெழுத்துப்பாட்டு” அந்த சிறுகதையின் மையப்படிமம். களமெழுத்துப்பாட்டு எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதன் மிக விரிவான சித்திரம் ”கலைவதும் பொலிவதும்” சிறுகதையில் உள்ளது. இங்கு அதை சுருக்கமாக அளிக்கிறேன்.

கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும்  உள்ள  பகவதி கோயில்களிலும் , நாட்டார் தெய்வங்களின் கோயில்களிலும்  களமெழுத்துப்பாட்டு என்ற சடங்கு நிகழ்த்தப்படும். பகவதியை குலதெய்வமாக கொண்ட குடும்பங்கள் நேர்ச்சையாக செய்யும் சடங்கு. பகவதி கோயிலின் முன் உள்ள களமெழுத்துப்பாட்டு பத்ரகாளியின் முழுரூபம் வண்ணப்பொடிகளால் மிகமிக தத்ரூபமாக வரையப்படும். களம் வரைவதற்கு வெள்ளை, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு என ஐந்து அடிப்படை வண்ணங்கள் பயன்படுத்தப்படும். சடங்கு தொடங்குவது  அந்தி சாய்ந்த பிறகுதான். ஆனால் மதியமே  தேவியின் முழுரூபத்தை  ஓவியமாக வரைய ஆரம்பித்துவிடுவார்கள். அந்திவரை அங்கம் அங்கமாக மூலவிக்ரகத்தை அலங்காரம் செய்வதுபோல மிக தத்ரூபமாக தேவியின் பூரணரூபம் வரையப்படும். களம் வரைவது தொடங்கி இந்த சடங்கை   நாக வழிபாட்டை அடிப்படையாகக்கொண்ட  ’புள்ளுவர்’ ஜாதியை சேர்ந்த புள்ளுவனும், புள்ளுவத்தியும் நிகழ்த்துவார்கள். (இது தென்கேரள வழக்கம். கேரளத்தின் மற்ற பகுதிகளில் ’வெளிச்சப்பாடு’ என்று குறிப்படப்படும் பகவதியை உபாசனை செய்யும் பூசகர் இந்த சடங்கை நிகழ்த்துவார்.) தேவி மகாத்மியம் “தோற்றம்பாட்டு” என்ற மலையாள வடிவத்தில் பாடப்படும். பின்னணியில் பஞ்சவாத்தியங்கள்.  புள்ளுவத்தி களத்தை சுற்றி வருவாள். பாட்டு வழியாக வெளிப்படும் பல்வேறு உணர்வுநிலைகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப புள்ளுவத்தியின் வேகம் கச்சிதமாக மாறுபட்டபடியே இருக்கும். பின்னிரவு ஆகும்போது புள்ளுவத்திக்கு சன்னதம் வர ஆரம்பிக்கும். பாட்டின் தாளமும், பின்னணியில் இசைக்கப்படும் பஞ்சவாத்தியங்களின்  ஒலியும் அதிகரித்தபடியே வந்து ஒருகட்டத்தில்  வெறியாட்டெழுந்த புள்ளுவத்தி ஒவியத்தை கலைக்க ஆரம்பிப்பாள். அடுத்தநாள் காலை முந்தைய நாளின் அத்தனை அலங்காரங்களும் கொண்ட  தேவியின்  ரூபம்  முழுக்க கலைந்து வெறும் வண்ணக்குழம்பல் மட்டுமாக எஞ்சும்.

இந்த சிறுகதையில் களமெழுத்துப்பாட்டு ஒரு படிமம் என்பதால் அந்த படிமம் அளித்த உணர்வுகளுக்கு தொடர்புள்ளதும், தொடர்புள்ளது என்று மயங்கச்செய்யும் விஷயங்களும் மனதில் தோன்றியபடியே இருந்தன. எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது குழந்தை கட்டும் மணல்வீடுதான்.  மிகமிக விரிவான கற்பனைகளுடன், கனவுகளுடன்  தனக்குள் பேசிக்கொண்டே  கட்டும் மணல்வீடு.  கட்டி முடித்தவுடன்  ஒரு கணத்தின் ஏதோ ஒரு விசையில் அதை ஒட்டுமொத்தமாக கலைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.  

களமெழுத்துப்பாட்டு என்ற படிமம்   ‘நரகாசுரவதம்’ கதகளியையும்,  அதில் உள்ள நக்ரதுண்டி என்ற பெண் கதாப்பாத்திரத்தையும் நினைவுபடுத்தியது. நக்ரதுண்டி நரகாசுரனின் அரக்கர் நிரையில் உள்ள ஒரு அரக்கி. நரகாசுரவதம் கதகளி  அவள் காதல் வழியாக என்னென்னவெல்லாம் ஆகிறாள் என்பதைப் பற்றியது.  கதகளி என்ற செவ்வியல் கலையைப்பற்றிய பொதுவான அறிமுகத்தை இங்கு அளிக்கிறேன்.

கேரளத்தில் உத்தேசமாக பதினேழாம் நூற்றாண்டில் கதகளி என்ற நிகழ்த்துகலை உருவானது. அடிப்படையில் செவ்வியல் கலை என்றாலும் கதகளி வலுவான நாட்டார் அம்சங்களையும்  கொண்டது. கேரளத்தின் அனுஷ்டான கலையான தெய்யம், சம்ஸ்கிருத செவ்வியல் நாடகவடிவமான கூடியாட்டம், பாகவத்தை அடிப்படையாகக்கொண்ட கிருஷ்ணனாட்டம், ராமாயணக்கதையை அடிப்படையாகக்கொண்ட ராமானாட்டம் போன்ற கலைகளிலிருந்து கதகளி உருவாகியிருக்கிறது. கதகளியை உருவாக்கியவர் கேரளத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த அரசர் கோட்டயம் தம்புரான் (கிபி 1665- 1725). கதகளியின் பல கதைவடிவங்களை அவர்தான் எழுதியிருக்கிறார்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் பாகவதம், தேவிபாகவதம் போன்ற புராணங்களிலிருந்தும் கதகளி தனக்கான கதைவடிவத்தை உருவாக்கிக்கொள்கிறது, அந்த கதைவடிவத்தின் பெயர் ஆட்டக்கதை. ஆட்டக்கதை சம்ஸ்கிருத சொற்கள் அதிகம் கொண்ட மலையாள மொழியில் இருக்கும். கதகளியின் கவித்துவமும், நாடகீயமும், கதாப்பாத்திரங்களின் உணர்வுநிலைகளும், பரிணாமங்களும் “ஆட்டக்கதை”யில் எழுத்துவடிவில் இருக்கிறது. அடிப்படையில் ஆட்டக்கதை ஓரளவுக்கு இலக்கியப்பிரதிக்கு நெருக்கமானதுதான் என்றாலும் அது கதகளியின் உத்தேச வடிவம் மட்டும்தான். அந்த எழுத்துவடிவத்தின் ஒவ்வொரு வர்ணனையையும், உரையாடலையும், அவற்றின் கற்பனை சாத்தியங்களையும் விரிவுபடுத்தி அரங்கில் நிகழ்த்துவது வழியாகத்தான் கதகளி செயல்படுகிறது. ஆட்டக்கதை பாடல் வடிவத்தில் இருக்கும். அந்த பாடல்வடிவம் கர்நாடக சங்கீதத்தின் இசை இலக்கணத்தை அடிப்படையாக வைத்து ஸ்வரப்படுத்தப்பட்ட வடிவம் கொண்டது. கதகளி கர்நாடக சங்கீதத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை. அதில் சில வேறுபாடுகளுடன் கதகளி தனக்கான இசையை உருவாக்கிக்கொள்கிறது.

ஆட்டக்கதையின் ஒவ்வொரு வரியும் கதகளி கலைஞனின் முகஃபாவம், நடனம், கைமுத்திரைகள் வழியாகவும்; கதகளி பாடகரின் பாடல் வழியாகவும் நிகழ்த்தப்படும். செண்டை, மத்தளம் போன்ற இசைக்கருவிகள் கலைஞனின் அபிநயத்திற்கும்; பாடகரின் ஃபாவத்திற்கும் வலு சேர்ப்பவை. முதலில் ஆட்டக்கதையை கதகளி பாடகர் பாட ஆரம்பிப்பார். அந்த பாடல்வரியை பாடப்படும்போதே கதகளி கலைஞர் தன் கைமுத்திரைகள் வழியாகவும், முகஃபாவம் வழியாகவும், உடல்மொழி வழியாகவும் அதை நிகழ்த்துவார். சில வரிகள் அதன் கற்பனை சாத்தியம் காரணமாக மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும். வரிவரியாக ஆட்டக்கதை நிகழ்த்தப்படும்போதே இடைவெளியில் எந்த பாடல்வரிகள் அற்ற கதகளி கலைஞனின் அபிநயம் வழியாக மட்டுமே (கைமுத்திரை, முகஃபாவம்) நிகழ்த்தப்படும் பகுதிகள் உண்டு. “தன்றேடாட்டம்”(ஒரு கதாப்பாத்திரம் தன் கடந்த காலத்தை நினைத்துப்பார்க்கும் பகுதி), விரிவாக நடிக்கப்பட வேண்டிய நிகழ்வுகள் (துரியோதனன் அரக்கு மாளிகையில் வழுக்கி விழுவது), இயற்கை வர்ணனை போன்ற பகுதிகள் கதகளி கலைஞனின் அபிநயத்தால் மட்டுமே நிகழ்த்தப்படும். அதற்கு துணையாக செண்டை, மத்தளம் இசைக்கப்படும். பாடல் வரிகள் அற்ற வெறும் அபிநயத்தால் மட்டும் நிகழ்த்தப்படும் பகுதிகளில் கதகளி கலைஞனின் தனிதன்மைகளும், அவரின் கற்பனைகளை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உண்டு. அதுபோக கதகளி கலைஞனின் எந்த உணர்வுநிலையும் கலக்காத அருவமான நடனங்களும் உண்டு.

கூடவே, ஆட்டக்கதை என்பது இலக்கியப்பிரதியை போலத்தான். வரிகளுக்கு இடையேயான, சொற்களுக்கு இடையேயான மௌனம் வழியாகத்தான் அது செயல்படுகிறது. இலக்கிய வாசிப்பில் அந்த மௌனமான இடங்களில்தான் படைப்பாளியும் வாசகனும் சந்தித்துக்கொள்கிறார்கள். கதகளியில் அந்த மௌனம் கலைஞனின் அபிநயம் வழியாக செறிவுபடுத்தப்படும். பார்வையாளனும், கதகளி கலைஞனும், ஆட்டக்கதையை எழுதியவரும் அங்கு  சந்தித்துக்கொள்கிறார்கள்.

கதகளியை நிகழ்த்தும் கதாப்பாத்திரம் எதையும் பேச அனுமதியில்லை. ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுநிலைகள் வெளிப்படுவது அந்த கதாப்பாத்திரத்தின் கைமுத்திரைகளாலும், முகஃபாவங்களாலும், உடல்மொழியாலும் கதகளி பாடகரின் பாட்டு வழியாகவும்தான். கதகளியின் அடிப்படை அலகு கைமுத்திரைகள். பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து கதகளி 24 அடிப்படை கைமுத்திரைகளை உருவாக்கிக்கொண்டது. அந்த 24 அடிப்படை முத்திரைகளிலிருந்து கதகளியில் அதன் கதைசொல்லலுக்காக சுமார் 500 கைமுத்திரைகளை உருவாக்கிக்கொண்டது.

கதகளியில் கதாப்பாத்திரங்களின் வேஷங்களை பச்சை, கத்தி, தாடி, மினுக்கு, கரி என 5 வகையாக பிரிக்கலாம். இதில் உட்பிரிவுகளும் உண்டு.

சாத்வீகமான கதாப்பாத்திரங்களுக்கான வேஷத்தின் பெயர் பச்சை (நளன், யுதிஷ்டிரன், பீமன்) ரஜோ குணம் கொண்ட, தன்னகங்காரம் மிகுதியான , அரச கதாப்பாத்திரங்களுக்கான வேஷம் கத்தி (ராவணன், துரியோதனன், கீசகன், சிசுபாலன்). தாமஸ குணம் கொண்ட தீய கதாப்பாத்திரங்களுக்கான வேஷம் தாடி (துச்சாதனன், ஜராசந்தன்). பெண் கதாப்பாத்திரங்களுக்கும், முனிவர்கள், பிராமணர்கள் போன்றவர்களுக்கான வேடம் மினுக்கு (சீதை, தமயந்தி, குந்தி). அரக்கர்களுக்கும், அரக்கிகளுக்குமான வேடம் கரி (கலி, சூர்பனகை, சிம்ஹிகை, நக்ரதுண்டி).

இன்று கேரளத்தில் கதகளி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அங்குள்ள கோவில்களின் உற்சவ காலங்களில் நிகழ்த்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் கதகளியும் உண்டு. கூடவே தனிப்பட்ட அரங்குகளில், மண்டபங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. பக்தர்களின் நேர்சைகளாக சில கோவில்களில் கதகளி நடத்தப்படுகிறது. திருவல்லா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீவல்லபா விஷ்ணுகோவிலில் கதகளி கடவுள் வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியும்கூட. கதகளியை பார்க்க விழைபவர்கள் கதகளியின் அழகியல் பற்றிய அறிமுகமும், கதகளியின் ஆட்டக்கதைகளின் ஆங்கில வடிவமும் கொண்ட “David Bolland: A guide to kathakali” என்ற நூல் உதவியானது. கூடவே கதகளியின் கைமுத்திரைகளை அறிமுகப்படுத்தும் யூட்யூப் வீடியோக்கள் இருக்கின்றன. இந்த அறிமுகங்களுக்கு பிறகு கதகளியை நேரில் பார்த்தால் அது அணுக்கமாக ஆக சாத்தியமுள்ளது.

’நரகாசுரவதம்’ கதகளியை நேரில் பார்க்க  நானும் நண்பரும் எர்ணாகுளத்திலிருந்து 30km  தொலைவில் உள்ள பனவள்ளி என்ற ஊரில் உள்ள நால்பத்தெண்ணீஸ்வரம் சிவன் கோவிலுக்கு போயிருந்தோம்.  ’நரகாசுரவதம்’ பாகவதத்தில் உள்ள கதையை அடிப்படையாகக்கொண்டது. நரகாசுரனை அழிக்க தேவர்கள் கேட்டுக்கொள்வதால் கிருஷ்ணன் அவனை கொல்வதுதான் கதை. ஆனால், நரகாசுரவதம் என்ற கதகளி வடிவத்தில் நக்ரதுண்டி என்ற பெண் கதாப்பாத்திரம் உண்டு. இந்த கதாப்பாத்திரம் பாகவதத்தில் இல்லை. கதகளி புராணக்கதையை அப்படியே திரும்ப நிகழ்த்துவதில்லை. ஒரு புராணக்கதையை எடுத்துக்கொண்டு அதிலிருந்து கதகளிக்கான ஆட்டக்கதையை சிருஷ்டிப்பதால்தான் கதகளி படைப்பூக்கம்கொண்ட கலைவடிவமாக இன்றும் நிலைநிற்கிறது.  கதகளியில் நடிகர்கள், பாடகர்கள் அளவுக்கே ஆட்டக்கதையை எழுதியவர்களும் முக்கியமானவர்கள். ஒரு பேட்டியில் கல்பற்றா நாராயணனிடம் உங்களுக்கு பிடித்த கவிஞர் யார் என்ற கேட்டதற்கு நள-தமயந்தி கதையை அடிப்படையாகக்கொண்ட நளசரிதம் ஆட்டக்கதையை எழுதிய உண்ணாயி வாரியார் என்று பதிலளித்தார்.

கதகளியில் அரக்கிகள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அழகிய பெண்ணாக உருமாறுவார்கள். அந்த அழகிய பெண்ணை ’லலிதா’ என்று அழைப்பார்கள். கிர்மீரவதம் கதகளியில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் சமயம் பாஞ்சாலியிடம் பேச்சுக்கொடுத்து அவளை கவர்ந்து செல்வதற்காக சிம்ஹிகை என்ற அரக்கி ‘லலிதாவாக’ உருமாறுவாள். பூதனாமோட்சம் கதகளியில் கிருஷ்ணனை கொல்வதற்காக அனுப்பப்பட்ட  பூதனை என்ற அரக்கி  ஆயர்பாடியில் நுழையும்போது அழகிய பெண்ணாக உருமாறுவாள். நரகாசுரவதம் கதகளியிலும் நக்ரதுண்டி அழகிய பெண்ணாக (லலிதாவாக) உருமாறுவாள். ஆனால் நரகாசுரவதத்தின் ’லலிதா’ மற்ற கதகளிகளின் லலிதாவைவிட மாறுபட்டது. மற்ற கதகளிகளில் அரக்கி பெண்ணாக மாறுவது முன்பே தீர்மானத்த ஒரு விஷயத்திற்காகத்தான். அது கிட்டத்தட்ட மாறுவேஷம் போடுவதுபோலத்தான். ஆனால் நரகாசுரவதம் கதகளியில் நக்ரதுண்டி என்ற அரக்கி  அழகிய பெண்ணாக ஆகும்பகுதி கவித்துவமானது.

நரகாசுரனின் ஆணைப்படி மேனகை, ஊர்வசி போன்ற தேவகன்னிகளை கவர்ந்து வருவதற்காக நக்ரதுண்டி தேவலோகத்திற்கு செல்கிறாள். தேவகன்னிகளை கடத்திக்கொண்டு நரகாசுரனிடம் ஒப்படைப்பதற்காக தேவலோகத்திலிருந்து திரும்பும் வழியில் இந்திரனின் மகன் ஜயந்தனை பார்க்கிறாள். அவனை பார்த்த கணத்தில் நக்ரதுண்டி ஜெயந்தன் மேல் காதல்கொண்டுவிடுவாள். அந்த காதல்தான் அவளை அழகிய பெண்ணாக ஆக்குகிறது. நக்ரதுண்டி தன் காதலால் அரக்க உருவத்திலிருந்து அழகிய பெண்ணாக ஆகும் பகுதி அதை நடிக்கும் கலைஞர்களின் தனித்தன்மையால் மட்டுமே துலங்கக்கூடிய பகுதி.

இந்த கட்டுரையின் மையத்திற்கு வெளியே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். இன்றைய நிலவரப்படி மகாபாரதம், ராமாயணம், பாகவதம் இவற்றின் முக்கியமான கதைச்சந்தர்ப்பங்களை அடிப்படையாகக்கொண்ட சுமார் 20 கதகளிகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒருவர் கதகளி பார்க்க ஆரம்பித்தால் 3 மாதங்களில் அத்தனையையும் பார்த்துவிடலாம். அதே கதைகள்தான் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பார்வையாளனாக ஏற்கனவே பார்த்த கதகளியை மீண்டும் ஏன் பார்க்கவேண்டும்? செவ்வியல் கலைகளின் முக்கியமான கூறான கலைஞனின் ‘மனோதர்மம்’ என்ற அம்சம்தான் மீண்டும் மீண்டும் நிகழும்போதும் கதகளியை உயிர்ப்புடன் நிலைநிறுத்துகிறது. ஒவ்வொரு கதைக்கும் அதற்கான திட்டவட்டமான கதைச்சந்தர்ப்பங்களும், பாடல்களும் எழுத்துவடிவில் உண்டு. அபிநயிப்பவர்களின் அடவுகள் சார்ந்த விதிமுறைகள் உண்டு. ஒரு கதகளி கதாப்பாத்திரம் அரங்கில் எந்தப்பக்கம் நிற்க வேண்டும், குறிப்பிட்ட கைமுத்திரையை இடதுகையில் காட்ட வேண்டுமா, வலது கையிலா  என்பதற்குக்கூட விதிமுறைகள் உண்டு. என்றாலும், கதகளியில் ஒவ்வொருமுறையும் அதே கதாப்பாத்திரமே புத்தம்புதிதாக துலங்கிவருவது அந்த கதாப்பாத்திரத்தை நிகழ்த்தும் கலைஞனின் தனித்தன்மையின் ஊடுருவலால்தான். உதாரணமாக, கதாநாயகன் கதாநாயகியின் உருவ அழகை, அவளது குணநலன்களை புகழும்போது கதாநாயகி நாணம் கொள்வதாகவோ, பெருமிதம் அடைவதாகவோ நடிப்பார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படித்தான் நடிப்பார்கள். நான் பார்த்த கதகளி ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் கலைஞர் கதாநாயகனை பார்த்து ’சும்மா வெறுமனே புகழவேண்டாம்’ என்பதை கைமுத்திரையாக காண்பித்து சலித்துக்கொள்வதாக நடித்தார். அதற்கு எதிர்வினையாக கதாநாயகன் “ ஆயிரம் நாவுகள் கொண்ட அனந்தன் என்ற பாம்பால்கூட உன் அழகை விவரித்து முடிக்க  முடியவில்லை “ என்று பதிலளித்தார். இதைப்போல கலைஞனின் தனிப்பட்ட கற்பனைத்திறனும், நுண்மையும், ஆழமும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுவதால்தான் கதகளியில் ஒரே கதையே மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும்போதும் புத்தம்புதியதாக இருக்கிறது. 

கதகளி தொடங்கியது. முதல் இரண்டு காட்சிகளில் நரகாசுரனின் ஆணைப்படி நக்ரதுண்டி தேவலோகம் சென்று தேவகன்னிகளை கவர்ந்துவரும் பகுதி. அந்த இரண்டு பகுதிகளும் வழக்கமாக கதகளியில் அரக்கியாக நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்கான அருவருப்பான உடலசைவுகளுடன், நாராசமான கூச்சலுடன் செவ்வியல் கலையில் அருவருப்புச்சுவைக்கு (பீபத்ஸம்) உள்ள இலக்கணம் பிறழாமல் அதேபோல நிகழ்ந்தது. தேவகன்னிகளை கவர்ந்து திரும்பும் வழியில் நக்ரதுண்டி இந்திரனின் மகன் ஜெயந்தனை காண்கிறாள். பார்த்த கணத்திலே அவனை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

நக்ரதுண்டி அரக்கியாக ( வேடமிட்டது: நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரி)

அரக்கி வேடத்தில் உள்ள நக்ரதுண்டி அரங்கிலிருந்து வெளியேறுகிறாள். அழகிய பெண்வேடத்தில் லலிதா உள்நுழைகிறாள். (அரக்கியாக நடிக்கும் நக்ரதுண்டியையும், லலிதாவாக நடிக்கும் நக்ரதுண்டியையும் வேறுவேறு கலைஞர்கள் நடிப்பார்கள்) லலிதாவாக நடித்தது கலாமண்டலம் ஷண்முகன். 

கதகளியில் பெண் கதாப்பாத்திரங்களையும் ஆண்கள்தான் நடிப்பார்கள். பெண் கதாப்பாத்திரங்களை நிகழ்த்துவதில்  தேர்ந்த கலைஞர்கள்  வாழ்நாள் முழுக்க  பெண் கதாப்பாத்திரங்களை மட்டும்தான்  நடிப்பார்கள். அந்த கலைஞர்களின்  உடல்மொழி, முகஃபாவம்  என அனைத்து அம்சங்களும்  கச்சிதமாக ’பெண்மையை’  அடைந்துவிட்டிருக்கும். ’பெண்மை’  என்பது பெண் உடல் அல்ல, அசைவுகள் தான் என்ற முடிவிற்கு சென்றுசேரும் அளவுக்கு அவர்களது நடிப்பு இருக்கும்.  பெண்மையின்  நளினத்தை, அலைக்கழிப்பை, தயக்கத்தை , இரக்கமின்மையை, ஆழத்தை எந்த அழகிய பெண்ணை விடவும்  இந்த ஆண் கலைஞர்களின் உடல்மொழி, கண்ணசைவுகள்  வழியாகத்தான்   தீவிரமாக  உணர்ந்துகொள்ளமுடியும்  என்று எனக்கு  தோன்றியதுண்டு. கதகளியில் பெண்வேஷங்களை நிகழ்த்தும்  கலாமண்டலம் ஷண்முகன் வழியாகத்தான் நான் ’பெண்மை’யின் சாராம்சத்தை  அறிந்தேன்.  

கதகளியின் பெண் கதாப்பாத்திரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல்வகையில் தமயந்தி, சீதை, பாஞ்சாலி, ருக்மிணி, குந்தி  போன்ற கதாப்பாத்திரங்கள். இவர்கள் கதகளியில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இலக்கியம், வாய்மொழி மரபு வழியாக ஆழமான அடுக்குகள் கொண்ட கதாப்பாத்திரங்களாக ஆகிவிட்டவர்கள். கதகளி இந்த வலுவான அடித்தளத்தில் நின்றுகொண்டு அந்த கதாப்பாத்திரங்களுக்கு இன்னும் ஆழத்தையும், உணர்ச்சிகரத்தையும் அளிக்கிறது.

இரண்டாவது வகை ஊர்வசி, மோகினி, லலிதா போன்ற கதாப்பாத்திரங்கள். லலிதா என்பது கதகளிக்காகவே உருவான கதாப்பாத்திரம் என்று நினைக்கிறேன். நமது புராண, காவிய மரபில் ஊர்வசி, மோகினி போன்றவர்கள் துணைக்கதாப்பாத்திரங்கள். ஆனால், கதகளியில் அவர்கள் பிரதான கதாப்பாத்திரங்கள். ராவணவிஜயம் , காலகேயவதம் போன்ற கதகளிகளில் ஊர்வசி மையக்கதாப்பாத்திரம்.

சீதை, பாஞ்சாலி போன்ற கதாப்பாத்திரங்கள் அரங்கில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே பார்வையாளர்கள் தங்கள் கேள்விஞானம் வழியாகவோ, இந்திய காவிய மரபின் அறிமுகம் வழியாகவோ அந்த கதாப்பாத்திரத்தின் குணநலன்களை, உணர்வுநிலை மாறுபாடுகளில் உள்ள நுண்மைகளை ஓரளவு உணர்ந்துகொண்டவர்கள். அந்த பரிச்சயத்தின் அடித்தளத்தில் நின்றுகொண்டு அந்த கதாப்பாத்திரங்களை நடிப்பவர்கள் தங்கள் சொந்த கலையாளுமை வழியாக இன்னும் நுண்மையையும் ஆழத்தையும் அளிப்பார்கள். அந்த கதாப்பாத்திரங்களாக நடிக்கும் கலைஞர்கள் அதன் அடித்தளத்தை சரியாக நடித்தால் போதும். கலைஞன் தன் சொந்த கலையாளுமையின் வெளிப்பாட்டை வெற்றிகரமாக நிகழ்த்த முடியாவிட்டாலும்  பார்வையாளனின் கதகளி அனுபவத்தை  அது அவ்வளவு பாதிப்பதில்லை.

ஆனால், ஊர்வசி, மோகினி, லலிதா போன்ற கதாப்பாத்திரங்கள் கதகளி கலைஞர்களின் கலைத்தன்மையால் மட்டும்தான் பார்வையாளனில் கதகளி அனுபவத்தை ஏற்படுத்த முடியும். அது எல்லா கதகளி கலைஞர்களிலும் நிகழ்வதில்லை. அதுவும் நல்ல கலைஞர்களில்கூட அது எல்லா சந்தர்ப்பங்களிலும் நிகழ்வதில்லை. கதகளி தொடர்ச்சியாக பார்ப்பவர்கள் ராவணவிஜயம் (ஊர்வசி), ருக்மாங்கதா சரிதம் (மோகினி), கிர்மீரவதம் (லலிதா), பூதனாமோட்சம் (லலிதா) இந்த கதகளிகளை காணச்செல்லும் முன் யார் நடிக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுதான் கதகளி பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்கள். முக்கியமான கலைஞர்களாக அல்லாதவர்கள் நிகழ்த்தும்போது அந்த கதகளிகள் கலாப்பூர்வமான அனுபவத்தை ஏற்படுத்த தவறிவிடும்.

இந்த இரண்டாவது வகை பெண் கதாப்பாத்திரங்களை நிகழ்த்துவதில் கலாமண்டலம் ஷண்முகனுக்கு உள்ள ஆழத்தையும், தேர்ச்சியையும் நான் கதகளி பார்க்கத் தொடங்கும் கட்டத்திலேயே அவ்வளவு வெளிப்படையாக உணர்ந்துகொள்ள முடிந்தது. முதல்முறையாக நான் கலாமண்டலம் ஷண்முகனை பார்த்தது ருக்மாங்கதா சரிதம் கதகளியில் மோகினி கதாப்பாத்திரமாக. அவர் ஆண் என்ற தகவல் தெரிந்தும் ஆழ்மனம் அதை மறுத்தபடியே இருக்கும் அளவுக்கு அவரில்  மோகினி  திகழ்ந்தாள். மோகினியின் நிறைவை, பேரழகின் திமிரை, நிமிர்வை, முழுமையை மிக இயல்பான மெல்லிய உடலசைவுகளால், முகத்தால்  நிகழ்த்திக்காட்டிய கலாமண்டலம் ஷண்முகனை  நான் கண்ட அழகிய பெண்களைப்போல அந்தரங்கமாக இன்றும் ஆராதித்தபடியே இருக்கிறேன்.

கதகளியின் அடுத்தபகுதி தொடங்கியது. இந்திரனின் மகன் ஜெயந்தன் ஒருபுறம் ஸ்டூலில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இடதுபக்கம் நக்ரதுண்டி லலிதாவாக  வந்து நின்றிருக்கிறாள். கலாமண்டலம் ஷண்முகனின் பரிபூரணமான பெண்வேஷம். கதகளியின் பெண் கதாப்பாத்திரங்களில் மோகினியும், லலிதாவும் புராண கதாப்பாத்திரங்களான சீதை, திரௌபதி, தமயந்தி  போன்றவர்களைவிட மிகமிக அழகாக அணிசெய்யப்பட்டிருப்பார்கள். இந்த பகுதி தொடங்கியவுடன் அரங்கில் அசாதாரணமான அமைதியை உணரமுடிந்தது. நாங்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நாலைந்துபேர் எழுந்து சென்றனர், சிலரை மேடையை மறைக்கும்படி வந்தார்கள். ஆனாலும் அந்த அமைதியின் செறிவு குலைக்கப்படவேயில்லை.

லலிதா கதகளி பெண்வேஷங்களுக்குரிய பர்தா போல தலையில் அணிந்திருக்கும் பொன்நிறமான பெரிய பூக்கள் கொண்ட சிவப்புநிற மேல்சேலையின் நுனியை இரண்டு கைகளிலும் பிடித்தபடியான அபிநயம் பிடிக்கிறாள். பின்னணியில் எந்த பாடல்வரிகளும் அற்ற ஆலாபனை. நீலாம்பரி ராகம். லலிதாவின் கண்ணசைவும், கையசைவும், உடலசைவும் பாடகரின் ஆலாபனையும் தயங்கியபடியே இருந்தது. அழகு திரண்டு வருவதன் தாளமுடியாமை.  முதல் சில நிமிடங்கள் அதிர்ச்சியாக இருந்தது. பரவசமாகவும், இனிமையாகவும். இவ்வளவு இனிமையா? பின்னணியில் மத்தள இசை. கலாமண்டலம் ஷண்முகன் மிகமிக மெதுவாக சில அடவுகளை நிகழ்த்திக்கொண்டிருந்தார். பேரழகு. என்ன இது? என்ற கேள்வி மட்டுமாக இருந்தது அகம். இத்தனைக்கும் எந்த திட்டவட்ட அர்த்ததையும் அளிக்கக்கூடிய கைமுத்திரையையும் பயன்படுத்தவில்லை. கதகளியில் எந்த பொருளையும் சுட்டாத நடனத்திற்காக மட்டுமே என சில அடவுகளும் அவற்றிற்கான கையசைவுகளும் உண்டு. அந்த அடவுகள் மட்டும்தான். குறிப்பிட்ட அர்த்தம்கொண்ட கைமுத்திரையாக இருந்தால் நாம் அதை மானசீகமாக மொழியாக மாற்றிக்கொண்டேயிருப்போம்….. காதலால் பெண்மை கொள்ளும் நாணத்தை, பரவசத்தை, நிலைகொள்ளாமையை, இனிமையை  எந்த கைமுத்திரையும் சென்றுதொடமுடியாது என்று உணர்ந்ததால்தான் இங்கு கைமுத்திரைகள் பயன்படுத்தப்படுவதில்லை போல.

நக்ரதுண்டி  அழகிய பெண்ணாக (லலிதா)-  (வேடமிட்டது: கலாமண்டலம் ஷண்முகன்)

கண்ணசைவும், கைகளின் முத்திரையில்லா முத்திரையும், அதற்கேற்றபடி உடலசைவும், காலசைவும் மிகமிக மெதுவாக அணுஅணுவாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அதன் இசைவடிவம் என்பதுபோல தூய ஆலாபனை. நீலாம்பரி ராகம் தித்திக்க வைத்தது. இனிமை கொஞ்சமும் சிதறிவிடாதபடி அதை ஏந்திச்செல்வதுபோல மிகமிக மெல்லிய தாளத்தில் ஆலாபனை. இவ்வளவு இனிமையை நானா அடைகிறேன்? இதுதானா? அங்கம் அங்கமாக நக்ரதுண்டியில் பெண்ணழகு திரண்டு வருவதை உணர முடிந்தது. நடுவே என் அருகே ஒன்று இரண்டு பேர் எழுந்து சென்றதுகூட பிரக்ஞையில் பதியாதபடி இடவுணர்வை மறந்து அந்த இனிமையில் இருந்தேன்.

அந்த பகுதி தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இப்படி ஒரு அனுபவத்தை நான் எதிர்நோக்கவே இல்லை என்பதால் அதிர்ச்சியும், நான் உண்மையாகவே இனிமையை உணர்கிறேனா என்ற சந்தேகமும், நான் நான் என்று திமிரும் அகங்காரமும் என்னை வதைத்தது. இதோ அவ்வளவுதான் இந்த கணத்திலேயே இந்த இனிமை முடிந்துவிடும் என்பதுபோல, அரிய ஒன்றை இந்த கணம் இழந்துவிடுவோம் என்ற பதற்றமும் இருந்தது. மிகமிக மெதுவாக  துளிர்ப்பதுபோல பெண்ணாக ஆகிக்கொண்டிருந்தாள் நக்ரதுண்டி. ஆலாபனையிலும் மெல்ல மெல்ல நழுவுவது போன்ற ஃபாவம். நான் அடைந்த அனுபவத்தை விளக்கமுடியாமல் பரிதாபமாக தோற்றுக்கொண்டிருக்கும்போதுகூட அந்த அனுபவத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற வெம்பலை என்னால் கட்டுப்படுத்தமுடியாமல்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அரிய அனுபவங்களை, தீவிரத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதமனம் எவ்வளவு நொய்மையானது, போதாதது என்பதை அப்போது உணர்ந்தேன். அன்றாடத்தன்மையாலும், அகங்காரத்தாலும் திரிபுபட்ட அது எவ்வளவு பரிதாபத்திற்குரியது. ஆனால் இந்த சில நிமிட அவஸ்தைகளுக்கு பிறகு என்னால் அதில் மீண்டும் கதகளிக்குள் நுழைய முடிந்தது என்பதை அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்து கதகளியில் பெண்வேஷங்களுக்குரிய சிக்கலான நடனம். கொஞ்சம் கொஞ்சமாக ஆலாபனையின் வேகமும், லலிதாவின் நடனத்தின் தாளமும் அதிகரித்தது. எந்த கணத்தில் தாளம் வேகமாக ஆரம்பித்தது என்பதை பிரக்ஞை உணர்ந்துகொள்வதற்குள்ளேயே இது நிகழ்ந்தது. பொதுவாக கதகளியில் பெண்கதாப்பாத்திரங்களின் நடனத்தில் உடலசைவு பெண்மைக்கே உரிய மென்மையுடனும் அதே சமயம் நடனத்திற்கான கால்வைப்புகள் எளிமையாக அல்லாததாகவும் இருக்கும். அது அளிக்கும் அழகியல் அனுபவம் விந்தையானது. அது நேரடியாக நளினமானது என்று தோன்றாது. காரணம் சிக்கலான கால்வைப்புகள் வழியாக நிகழ்த்தப்படும் நடனம் நம்மை அப்படி எண்ணச்செய்யாது, அந்த சிக்கலை நாம் உணர்ந்தபடியும் இருப்போம். உடலசைவில் பெண்மையின் நளினம் திகழ்வதையும் நம்மால் உணரமுடியும். செவ்வியலாக்கப்பட்ட நளினம் என்று அதைச்சொல்லலாம். இந்த முறை லலிதாவின் சிக்கலான நடன அசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். கால்வைப்புகளின் சிக்கல் எந்த வகையிலும் என் பிரக்ஞையை தீண்டவில்லை. லலிதாவின் அழகை, அந்த உடலசைவில் வெளிப்படும் காதலின் இனிமையையும், பூரிப்பையும் மட்டும்தான் உணரமுடிந்தது. அடுத்து ஜெயந்தனை பாதாதிகேசம் பார்ப்பது, நாணம் அடைவது என பெண்கொள்ளும் காதலின் அத்தனை நிலைகளும் நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒருமணிநேரம். செறிவான அந்த ஒரு மணிநேரம்  காலவுணர்வை மயங்கச்செய்தது.  என்னென்ன உணர்ச்சி நிலைகளால் ஆட்கொள்ளப்பட்டேன் என்பதை துல்லியமாக சொல்லிவிட முடியாது.

லலிதாவின் நடனம்- ( கலாமண்டலம் ஷண்முகன்)

இந்த கதகளி பார்த்த முடித்தவுடன் யூட்யூபில் மற்ற கலைஞர்கள் நிகழ்த்திய நரகாசுரவதம் லலிதாவை பார்த்தேன். வெறும் பதினைத்து நிமிடத்தில் இந்த பகுதியை நடித்து முடித்திருக்கிறார்கள். பொதுவாக கதகளியில் இது போன்ற நுண்மையான, கைமுத்திரைகள் அற்ற, பாடல்வரிகள் அற்ற உணர்த்தும் பகுதிகளை வெளிப்படுத்தலுக்கான கால அவகாசம் கலைஞர்களின் தனிப்பட்ட கலையாளுமையை சார்ந்தது. அசாதாரணமான கலைஞர்களுக்கு விரிவாக அங்கம் அங்கமாக தங்கள் கற்பனை சாத்தியத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த கால அவகாசம்தான் இன்றியமையாதது. ஒரு அரக்கியில் பெண்மையின் இனிமை திரண்டுவருவதன் சித்திரத்தை நிகழ்த்த இந்த ஒருமணி கால அவகாசம்கூட போதுமானதாக இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  கால அவகாசம் இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் நல்ல கலைஞர்களில்கூட அது நுண்மையானது என்பதாலேயே நழுவிப்போவதற்கும் வாய்ப்புண்டு. கூடவே, இந்த பகுதியில் கதகளி பாடகர்களின் ஆலாபனையும் நடிப்பவரின் உணர்வுநிலைக்கு கச்சிதமாக ஒத்திசைந்திருக்க வேண்டும். நல்ல கதகளி பாடகர் அமையாத பட்சத்தில் நல்ல கலைஞனின் நடிப்பு மட்டும் போதுமானது இல்லை.

கலாமண்டலம் ஷண்முகனின் அபிநயத்தையும், கதகளி பாடகரான கோட்டக்கல் மதுவின் ஆலாபனையின் ஃபாவத்தையும் இவ்வளவு தீவிரமாக நான் அதுவரை அனுபவித்ததில்லை. மொத்தம் ஒருமணிநேரம். என் மனதில் நான் உணர்ந்த திகட்டாத இனிமையை நினைத்தால் பயமாக இருந்தது. அரிய அனுபவம் அளிக்கும் நிறைவுணர்ச்சியும், இனி இது சாத்தியம்தானா என்ற ஏக்கமும் சேர்ந்தே எழுந்தது.

அடுத்தது லலிதா ஜெயந்தனை சந்தித்து உரையாடும் பகுதி ஆரம்பித்தது. நக்ரதுண்டியை ஜெயந்தனிடம் தன் காதலை சொல்கிறாள். உண்மையில், அவள் அதை சொல்ல வேண்டுமா என்ன?  பெரும்பாலான தீவிரமான காதல்களில் நிகழ்வதுபோல ஜெயந்தன் நக்ரதுண்டியின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். தன் தந்தையின் அனுமதியில்லாமல் எந்த பெண்ணையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பதில் சொல்கிறான். காதலின் தாளமுடியாமையால் நக்ரதுண்டி பிடிவாதமாக நிற்கிறாள். ’ உன்னை ஒருகணம் கூட பிரிந்து என்னால் வாழமுடியாது’ என்று ஜெயந்தனிடம் மன்றாடுகிறாள். அவ்வளவு தீவிரமான காதலின் ஆற்றாமையுடன் நிற்கும் அவளை ஜெயந்தனால் தவிர்க்க முடியவில்லை. அவளை புண்படுத்தி மட்டும்தான் அனுப்ப முடியும் என்பதால் முகத்தை சுளித்து ’ உன் குரலைக்கேட்டாலே என் காது கூசுகிறது ‘ என்று கைமுத்திரை காட்டுகிறான் ஜெயந்தன். அதை எதிர்நோக்கியிராத லலிதாவின் முகம் முதலில் ஆச்சர்யத்தில் ‘ நிஜமாகவா?’ என்கிறது.

அடுத்தடுத்து அவளின் முகத்தில் கேள்விகள்: ‘ஏன்?’, ‘அவ்வளவு அருவருப்பூட்டக்கூடியவளா நான்?’ ‘என்ன நடக்கிறது?’. எந்த பாடல்வரியும் இல்லாமல் முழுக்கமுழுக்க முகஃபாவத்திலும் கைமுத்திரைகளிலும் இது நிகழ்ந்தது. அழகின் முழுவடிவம் கொண்ட லலிதா  நிலைகுலைந்தபடியே இருந்தாள்.

அடுத்து ஜெயந்தன் “ உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. அருவருப்பாக இருக்கிறது“ என்று கைமுத்திரை காட்டுகிறான். உண்மையாகவே அவளை அவ்வளவு வெறுக்கிறானா?

முதலில் ஜெயந்தனின் நடத்தையால் அதிர்ச்சியும், விளங்கிக்கொள்ளமுடியாமையும்  கொண்ட நக்ரதுண்டியின் முகத்தில் புண்பட்டவர்களின் சீற்றம் வெளிப்பட்டது. எப்போது ஆற்றாமை வன்மமாக ஆகிறது? நக்ரதுண்டி மூர்க்கத்துடன் ஜெயந்தனை கட்டிப்பிடிக்க செல்கிறாள். ஜெயந்தன் நகர்ந்து தவிர்க்கிறான். மீண்டும். இரண்டு, மூன்றுமுறை. ஜெயந்தன் விலகி விலகிச் செல்கிறான். அவனை வசப்படுத்த இயலவில்லை.

நக்ரதுண்டியின் ஆற்றாமை வன்மமாக ஆவது (கலாமண்டலம் ஷண்முகன்)

கொஞ்சம் கொஞ்சமாக நக்ரதுண்டி தன் இனிய நிலையிலிருந்து பிறழ்ந்துகொண்டிருந்தாள். எதிர்பாராத ஒருகணத்தில் லலிதா தலைவிரிகோலமாக, முகத்தில் இரண்டு பக்கமும் கரியை தீற்றலாக பூசி, தேற்றைப்பற்களுடன் காட்சியளிக்கிறாள். சில நிமிடங்கள் ஆற்றாமையுடன் அலறல். அரங்கிலிருந்து வெளியேறுகிறாள். நக்ரதுண்டி பழைய அரக்க வேடத்தில் அரங்கில் நுழைகிறாள். ஜெயந்தன் முகம் சுளிக்கிறான். தன்னுடன் வரவில்லையென்றால் உன்னை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவேன் என்று நக்ரதுண்டி அவனை மிரட்டுகிறாள். இருவருக்குமான வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் கட்டுப்படுத்தமுடியாத கோபத்தில் ஜெயந்தன் நக்ரதுண்டியின் மூக்கையும், முலையையும் அறுத்துவிடுகிறான். நாராசமான கூச்சலிட்டு கண்ணீருடன் நக்ரதுண்டி அரங்கிலிருந்து வெளியேறுகிறாள்.

சீற்றம்கொண்ட நக்ரதுண்டி (கலாமண்டலம் ஷண்முகன்)

நரகாசுரவதம் கதகளியில் இன்னொரு தனித்தன்மையான ‘நிணம்’ என்ற பகுதி உள்ளது. மூக்கும், முலையும், காதும் அருக்கப்பட்ட நக்ரதுண்டியின் முகத்திலிருந்தும், முலைகளிலிருந்தும் சீழும், ரத்தமும் உருச்சிதைந்த சதையிலிருந்து வடியும். இரண்டு சேவகர்களின் துணையுடன் ஆற்றாமையும், அருவருப்பும் நிறைந்த கூச்சலும், கண்ணீருமாக நக்ரதுண்டி தன் நிலையை நரகாசுரனிடம் முறையிடும் பகுதி. இந்த பகுதி கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நிகழ்த்தப்படும். மேடைக்கு வெளியே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் கடைசி இருக்கையிலிருந்து ஆரம்பித்து மேடையை நோக்கி வருவதாக நடிக்கப்படும். அந்த பகுதியில் நக்ரதுண்டியின் சீழும், ரத்தமும் கலந்த ஒப்பனையும், அவள் முகமும், முலைகளும், நாராசமான ஒப்பாரியும் பார்வையாளனை குமட்ட வைக்கக்கூடியது. சமீப காலங்களில் இந்த பகுதியில் உள்ள பீபத்ஸம் (அருவருப்பு) அளவுக்கு அதிகமாக இருப்பதால் “நிணம்” பகுதியை பெரும்பாலும் நிகழ்த்துவதில்லை. நான் பார்த்த கதகளியிலும் நிணம் பகுதி இல்லை.

ஆனாலும் சிக அரிதான சந்தர்ப்பங்களில் ”நிணம்” பகுதியை இன்றும் நிகழ்த்துகிறார்கள். பார்க்கலாம் என்ற ஆவல் இருந்தாலும் “நிணம்” பகுதியை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. நரகாசுரவதம் கதகளியை ஒட்டுமொத்தமாக நிணம் பகுதியுடன் சேர்ந்து பார்க்கும் பார்வையாளன் அடையும் உணர்வுநிலைகளை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. நக்ரதுண்டி பேரழகின் முழுமையிலிருந்து அதிவிரூபியாக ஆவதை உணர வேண்டும். மலை உச்சியிலிருந்து நிலத்தில் வீழ்வதல்ல, உச்சியிலிருந்து அதள பாதாளத்திற்கு.

நிணம்- நக்ரதுண்டியின் அருவருப்பான தோற்றம் (வேடமிட்டது- கோட்டக்கல் தேவதாஸ்)

நாங்கள் பார்த்த கதகளியில் அடுத்தடுத்த காட்சிகள் வரத்தொடங்கின. நரகாசுரனின் அறிமுகம். நரகாசுரன் நக்ரதுண்டியின் நிலையை அறிவது. கிருஷ்ணனுக்கு நரகாசுரனுக்குமான போர். நரகாசுரனின் இறப்பு. இந்தபகுதிகள் எதுவுமே என்னில் பதியவில்லை. நக்ரதுண்டி மட்டும்தான் என் மனதில் இருந்தாள். களமெழுத்துப்பாட்டில் தேவியின் கலைந்த ஓவியம் நினைவுக்கு வந்தது. கணம் கணமென திரண்ட பூரண  அழகு எப்படி ஒரு நொடியில் விரூபமாக ஆகியது? என்றென்றைக்குமானது என்று மாயம் காட்டும்  தித்திப்பு எப்படி நொடியில் திரிபடைகிறது?  நக்ரதுண்டி வழியாக நானும் ஏன் அவ்வளவு இனிமையை அடைந்தேன் என்று இருந்தது. அந்த கதகளியில் அவள் வீழும் சித்திரத்தை மனதிலிருந்து விலக்கி அவள் சென்றடைந்த இனிமையின் நினைவை மட்டும் வெள்ளிசிமிழில் என பொத்தி எடுத்துக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்று விழைந்தேன். களமெழுத்துப்பாட்டில் தேவியின் ஓவியம் முழுமையாக கலைக்கப்பட்ட பின் அந்த வெறுமையை தாளமுடியாமல் எஞ்சிய வண்ணக்குழம்பலிலிருந்து பூரண ரூபத்தை கற்பனைசெய்ய முயற்சிப்பதுபோல…

ராமாயணத்தில் சூர்பனகையையும், மகாபாரதத்தில் அம்பையையும் நக்ரதுண்டி நினைவுபடுத்தினாள். விதியின் இந்த  புலப்படாத இயங்குமுறையை  புராதான காலத்திலிருந்து இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில்   நாம் ஏன் மீண்டும் மீண்டும்  நிகழ்த்திப் பார்த்துக்கொள்கிறோம்?

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

4 Comments

  1. ஆழமான அவதானிப்புகளின் வழியே, நமக்கும் அதை கடத்துகிறார். வாழ்த்துக்கள் அழகிய மணாளன்

  2. புனைவுக்குரிய நுட்பமான மொழியும் கட்டுரைக்குரிய ஆழமான கருத்துக்களையும் கொண்ட புனையாக்கட்டுரை இது. வாழ்த்துகள்.
    – டாக்டர். ப. சரவணன். மதுரை.

  3. அழகான மொழி நடை. கூர்ந்து உள்வாங்கல் வழி சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. கதகளி பார்க்க தூண்டும் விவரணைகள். மனம், மொழி, மெய் ஆகியவை ஒன்றியதால் ஏற்பட்ட உணர்வு கிடைப்பதற்கரியது. அளப்பரியது. ஒன்றில் ஒன்ற ஒன்று அடையமுடியாத தூரங்களும் நமக்கு தெரிய ஆரம்பித்து அதனை அடையவும் முடிகிறது. வாழ்த்துகள்.

  4. ஒரு நிகழ்த்துக் கலையை இரசிப்பவர் அதில் மனம் லயிக்கையிலும் விழிக்கையிலும் தான் அவர் சார்ந்த கலையில் தன் உள்வாங்கலை கடத்த முடிகிறது. அனுக்கமான மொழிநடை. வாழ்த்துக்கள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.