வாலஸ் ஸ்டீவென்ஸின் இந்தக் கட்டுரை 1948ஆம் வருடம் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறை கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் அச்சு வடிவம்
“கற்பனை”க்கு ஒரு குறிப்பிட்ட பண்பு இருப்பதாகவோ, அதன்மூலம் கற்பனைக்கு ஒரு மதிப்பு – நல்லதோ கெட்டதோ – உண்டாவதாகவோ கூற இயலாது. அப்படி கூறுவது “காரண அறிவு” நல்லதா கெட்டதா என்று ஆராய்வதை போன்றது. அல்லது மனித இயல்பு நல்லதா கெட்டதா என்று ஆராய்வதை போன்றது.
கற்பனையை உலகத்தின் எஜமானி என்றார், பாஸ்கல் . ஆனால் கற்பனையை பற்றி அவர் நல்லவிதமாக எதுவும் சொன்னதில்லை என்பதால், இந்த வரையறையையும் நிச்சயம் நேர்மறை அர்த்தத்தில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. கற்பனை, மனிதனை ஏமாற்றுகிற ஒரு அம்சம் என்கிறார் அவர். அதாவது தவறிழைக்கும், இரட்டை வேடம் போடும் எஜமானி. ஆனால் எல்லா சூழ்நிலையிலும் பாஸ்கல் “கற்பனையை” அப்படி குற்றம் சாட்டவில்லை. அவர் கற்பனையை விமர்சித்த இடமும் உண்டு. ஆதரித்த இடமும் உண்டு. ஏனென்றால் எந்த விஷயத்திலும் துல்லியமான அளவு பொய் இருந்தால் ,துல்லியமான அளவு உண்மையும் இருக்கும்.
பெரும்பாலான சமயங்களில் “கற்பனை” பொய்யாகவே எஞ்சிவிடுவதால், அதன் மதிப்பு வெளித் தெரிவதில்லை. அத்துடன் உன்மையையும் பொய்யையும் அது ஒன்று போலவே சுட்டுகிறது. இதைப்பற்றி தன்னுடய ‘Pensees’ நூலில் பாஸ்கல் மேலும் உரையாடுகிறார். நீதிபதிகளையும் மருத்துவர்களையும் அவர் அதில் விமர்சிக்கிறார். நீதிபதிகள் சிகப்பு நிற மேலங்கிகளும், புசு புசுவென பூனையைப் போல கழுத்து பட்டைகளும் அணிந்து மாளிகையில் உள்ள அரியணையில் அமர்ந்து நீதி பரிபாலனம் செய்வதை சாடுகிறார். போலவே மருத்துவர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. கணுக்கால் வரை நீண்ட தொளதொள அங்கியும் குதிகால் பட்டையற்ற ஷூக்களும், சதுர தொப்பியும் அணிந்திராவிட்டால் மருத்துவர்கள் உலகத்தை ஏமாற்றி இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.
அதே பாஸ்கல், அரசர்களையும் படைவீரர்களையும் அப்படி விமர்சிப்பதில்லை. அவர்களுடைய தோற்றத்தை அவர் ஆதரிக்கிறார். அவர்கள் தங்கள் வலிமை மூலம் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் என்று மிகுந்த மரியாதையுடனும் எச்சரிக்கையுடனும் குறிப்பிடுகிறார். முடியாட்சியையும் அதன் அதிகார வலிமயையும் நியாயப்படுத்துவதோடு முடியாட்சி அமைப்பின் மேல்மட்ட அதிகாரிகள், பிரம்மாண்டமான கோட்டைகளில் பல்லாயிரம் வீரர்கள் புடைசூழ இருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது என்றும் கூறுகிறார்.
எது எப்படியானாலும் ஒரு விஷயம் உண்மை. மேலங்கிகளாலும் புசுபுசுவென்ற கழுத்துப் பட்டைகளாலும் நீதிபதிகளுக்கு மதிப்பை உண்டாக்கிட முடியும் என்றால், அரியனையின் தோற்றத்தின் மூலம் நீதியை நிலை நாட்டி விட முடியும் என்றால், வெகு சில வீரர்களுக்கு சீருடை அணிவித்து வீதிகளில் சுற்றுக்காவலுக்கு அனுப்புவதன் வழியே பொதுமக்கள் அனைவரையும் பாதுகாத்து கவலையின்றி நிம்மதியாக வாழச் செய்து விட முடியும் என்றால் பாஸ்கல் எதிர்த்த “கற்பனை” தீமையான விஷயம் அல்ல. அது நல்லதே.
உண்மையில், பெரும் மக்கள் திரளை நாம் இந்த வழிமுறையால் -வெறும் தோற்றத்தால்- கட்டுப் படுத்துவதில்லை. ஆட்சியாளருக்கு பின்னால் அவரின் வலிமை மிக்க படை உள்ளதென்று பாஸ்கலுக்கு நன்றாகத் தெரியும். வெறும் தோற்றம் மட்டும் அங்கே செயல்படுவதில்லை. மருத்துவருக்கு பின்னால் அறிவியல் இருக்கிறது. பாஸ்கல் பிற எல்லாவற்றையும் எப்படி புரிந்துகொண்டிருந்தாரோ அதன் பகுதியாகவே “கற்பனையை”யும் புரிந்து கொண்டிருந்தார். முழுமையான விதத்தில் அல்ல.
இறக்கும் தருவாயில் மிகக்கடுமையான ஒரு வலிப்பினால் பாஸ்கல் அவதியுற்றிருந்தார். தனக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதா என்று அடிக்கடி வினவியிருக்கிறார். அப்போது உடனிருந்த அவர் சகோதரி அக்காட்சியை கீழ்க் கண்டவாறு விவரிக்கிறார்.
“அற்புதம் போல, கடவுள் அவர் வலிப்பை நிறுத்தி, அவரை இயல்பு நிலைக்கு மாற்றியிருந்தார். அப்போது அறைக்குள் பாதிரியார் நுழைந்தார். உடனே, யாருடைய உதவியும் இல்லாமல் பாஸ்கல் தன் படுக்கையில் இருந்து பாதி எழுந்து விட்டார். கிறிஸ்துவ வழக்கப்படி ஆதி இறை நம்பிக்கைகளை மனதார நம்புகிறேன் என்று பாதிரியாரிடம் கூறினார். பின் புனித நீரைப் பெற்றுக்கொண்டதும் உனர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தினார். பாதிரியாருக்கு நன்றி கூறினார். பாதிரியார் அவரை ஆசீர்வதித்து புனித அப்பத்தை அளித்தவுடன், அவர் அதை பெற்றுக் கொண்டு ‘கடவுள் என்னை ஒருபோதும் கைவிடாமல் இருக்கட்டும்’ என்றார்.”
எனில், தான் “ஏமாற்றும் அம்சம்” என்று அழைத்த ஒன்றையே இறக்கும் தருவாயில் பாஸ்கல் இறுகப் பற்றிக் கொண்டார். கடைசி நேரத்தில் அவர் கற்பனையால் நிறைந்திருந்தார். “இந்த அற்புத ஆற்றல், தர்க்கத்தின் எதிரி” என்று கற்பனையைப் பற்றி பாஸ்கல் கூறியது இறுதி வரைக்கும் அம்மாதிரியே இல்லை என்பதை கணக்கில் கொண்டே அவர் கற்பனையை பற்றி நல்லவிதமாக எதுவும் சொன்னதில்லை என்றேன். அந்த நேரத்து கவனமின்மையால் அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். கற்பனையே அழகையும், நீதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்குகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கற்பனை என்பது சாத்தியக்கூறுகளின் மீது இருக்கும் சிந்தனையின் ஆற்றல். எனவே அதற்கு ஒரு குறிப்பிட்ட குணநலன் இருக்க முடியாது. அதன் பண்பு, பல மதிப்புகளின் ஊற்றுமுகமாகவே இருக்கும்.
கற்பனையின் மதிப்பு குறித்த இரண்டாவது பிரச்சனை என்னவென்றால் மீபொருண்மையான(metaphysics) கற்பனைக்கும், புறவுலக விஷயங்களின் (அதாவது யதார்த்ததின்) மேல் சிந்தனையினால் ஏற்படும் கற்பனைக்கும் உள்ள வேறுபாடு. எர்னெஸ்ட் கசிரெர்(Ernst Cassirer) தன்னுடய “மனிதன் பற்றிய ஒரு கட்டுரை”(An Essay on Man) நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கற்பனாவாத காலகட்டத்தில் கவித்துவ கற்பனை என்னும் அம்சம் அதன் உச்சத்தை எட்டியது. கலைச் செயல்பாடு என்பதை தாண்டி அதற்கு இப்போது உலகளாவிய மீபொருண்மை மதிப்பு வந்துவிட்டிருந்தது. கவித்துவ கற்பனைதான் யதார்த்தத்தினை அறிந்து கொள்வதற்கான ஒரே தடயம். ஃபிட்செவின் இலட்சியவாதம்(Fichte’s idealism) அவரின் ஆக்கப்பூர்வ கற்பனை(productive imaginantion) என்னும் கருத்தினை அடிப்படையாக கொண்டது. ஷெல்லிங்க் தத்துவத்தின் பூர்த்தியான வடிவமே கலை என்கிறார். இயற்கையிலும், அறநெறியிலும், வரலாற்றிலும் நாம் தத்துவ மெய்மையின் நுழைவாயிலில் இருக்கிறோம். அதே சமயம் கலையில் நாம் அதன் சந்நிதிக்கு உள்ளே செல்கிறோம்”.
பேராசிரியர் கசிரெர் உற்சாகக் களிப்பில் பாராட்டும் விதமாக கவித்துவ கற்பனையை மேலுள்ளவாறு குறிப்பிடுகிறார். இங்கு கற்பனாவாத சிந்தனை என்று அவர் மீபொருண்மையையே(metaphysics) உத்தேசிக்கிறார். ஆனால் கற்பனயானது கலையிலும் மீபொருண்மையிலும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. நான் புறவுலக விஷயங்களின் மீதான சிந்தனையின் ஆற்றல் என்று சொல்லும் போது கலைப் படைப்புகளையே புறவுலக விஷயங்களாக உத்தேசிக்கிறேன். உதாரணத்திற்கு மைக்கலேஞ்சிலோவின் சிற்பங்களை சொல்லலாம். வால்டெர் பெடர்(walter pater) அவற்றை “கற்பனையின் பெரும் வலிமை ஒரு பொருளின் தனி இயன்பின் மேல் அல்லது வினோதத்தின் மேல் படிவது” என்கிறார். இத்தகைய கலைக் கட்டுமானங்களில், ஒருவர் மாற்றம் பற்றியே பிரக்ஞையே இல்லாமல் யதார்த்தத்திலிருந்து தரிசனத்திற்கு சென்றுவிடலாம்.
கற்பனை, மீபொருண்மையாக, ஒரு திசையிலும் கலையாக, மற்றொரு திசையிலும் நம்மை இட்டுச் செல்கிறது. மீபொருண்மை-தன்மை கற்பனையின் இயல்பிலே இருக்கிறது. அதுவே யதார்த்தத்தை அறிவதற்கான ஒரே தடயம். மீபொருண்மையாக, யதார்த்தத்தை கற்பனையே வழியே அறிகிறோம்.
மீபொருண்மையை விமர்சிக்கும் புறவயத் தர்க்கவாதிகளையும்(logical positivists) நாம் எதிர்கொண்டாக வேண்டும். “Language, Truth and Logic” நூலில் பேராசிரியர் அயெர்(Ayer) “மீபொருண்மைவாதிகளின் நேரடி அர்த்தமில்லாத சொற்களுக்கு தார்மீக ரீதியாகவோ அல்லது கலை ரீதியாகவோ ஒரு மதிப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தத்துவத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை அவர்கள் இப்படி ஈடுகட்டுகிறார்கள் ” என்று சொல்கிறார்.
புறவயத் தர்க்கவாதிகள் பார்வையிலும் மீபொருண்மையான கற்பனைக்கு குறைந்த பட்சமதிப்பு இருக்கிறது. மீபொருண்மை பற்றி பேசும்போது பேராசிரியர் ஜோட் இப்படி சொல்கிறார் “கடவுள் ஒரு மீபொருண்மை கூற்று என்றால்- அதாவது புலன் அனுபவத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு யதார்த்தைச் சேர்ந்தவர் என்றால், அவரின் இருப்பு உன்மையும் அல்ல; பொய்யும் அல்ல; கடவுளைப் பற்றிய எந்தப் பேச்சும் – சார்பானதோ எதிர்ப்பானதோ – ஒரு பிதற்றலே.”
ஒரு மீபொருண்மை கூற்றைப் பற்றிய இந்த உண்மை, எல்லா மீபொருண்மை கூற்றுகளுக்கும்பொருந்துவதே.
மேலும் தொடர்வதற்கு முன்னால்,கற்பனாவாதியிடமிருக்கும் கற்பனையை தூய்மை செய்ய வேண்டி இருக்கிறது. புறவயத் தர்க்கவாதத்தின் தாக்குதலில் இருந்து கற்பனை தப்பித்துகொள்ளும் என்பதை எந்த புத்திசாலித்தனமும் இன்றி உணரலாம். அதே சமயம், கற்பனையை கற்பனாவாதத்துடன் முடிச்சிட்டிடக் கூடாது.
மனிதனின் மிகச்சிறந்த ஆற்றலில் ஒன்று கற்பனை. கற்பனாவாதம் அதை சிறுமை செய்கிறது. கற்பனை என்பது சிந்தனையின் சுதந்திரம். கற்பனாவாதம் அந்த சுதந்திரத்தை உபயோகிக்கத் தவறுகிறது. மெல்லுணர்ச்சிப் (Sentiment) போன்றது கற்பனாவாதத்தின் கற்பனை. மெல்லுணர்ச்சி எப்படி உனர்ச்சியின் தோல்வியோ அதே போல கற்பனாவாதம் என்பது கற்பனையின் தோல்வி. கற்பனை என்பது மேதமை. அது ஆர்வமும் துணிவும் கொண்டது. கருத்துருவமாக (abstraction) இருப்பதில்தான் தான் கற்பனையின் சாதனை உள்ளது. ஆனால் கற்பனாவாதத்தால் கருத்துருவமாக முடியாது. அதன் சாதனை என்பது அற்பமான ஆசை நிறைவேற்றங்களே. கற்பனை உணர்வை வெளிப்படுத்துவதற்கான ஒருவரின் விழைவு முக்கியமானது. அந்த வகையில் ஒருவர் கற்பனையை ஒரு மீபொருண்மை விஷயமாகவே கையாள வெண்டும்.
புறவயத் தர்க்கவாதத்தின் தாக்குதலில் இருந்து தப்பித்து, கற்பனாவாதத்தின் கறைகளை நீக்கினாலும், கடைசியில் பிராய்டினை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கற்பனையே யதார்தத்துக்கான தடயமாக இருப்பது பற்றியும், கற்பனையை அடிப்படையாக கொண்ட கலாச்சாரம் பற்றியும் அவர் என்ன சொல்லி இருக்கக் கூடும்? அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நாகரீகத்தில், மாயைககளின் அறிவியல் (science of illusions) இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. பிராய்ட் ஏற்கனவே இப்படி சொல்லியிருக்கிறார் : “ஒரு மனிதனின் ஆரம்ப கால வருடங்கள் மத சிந்தனைகளாலும், பால்(sex) சார்ந்த சிந்தனைகளாலும் தாக்கமுறுவது வரை அவன் உன்மையில் என்ன மாதிரியான மனிதன் என்று சொல்ல முடியாது.“
மனித அறிவு உச்சநிலையை அடைந்து விட்ட பின்னால் மட்டும் ஒருவர் உன்மையில் என்ன மாதிரியான மனிதர் என்று சொல்லிவிட முடியுமா? மனிதனை வரையறுக்க முடியாது என்றால், மாயைகளின் அறிவியலைவிட இயற்கையானது வேறு என்ன இருக்க முடியும்? அத்துடன், இன்றைய நிலையில், கற்பனை யதார்த்தத்தை அறிவதற்கான தடயம் இல்லை என்றாலும், அது பின்னர் அப்படி மாற முடியும் தானே? மேலும் அறிவியல் உதவாத இடத்தில் கற்பனையைத் தவிர வேறு என்ன இருக்கிறது? சமகால மனித மனதில், புனைவாக உதிக்கும் சிந்தனைகள், எதிர்காலத்தில் அறிவியல் உன்மையாக மாறாது என்று யாரால் சொல்ல முடியும்? உன்மையான கலையாக்கம் தனி ஒருவரை சார்ந்ததல்ல என்று கூறுவது வெறும் கற்பனாவாத வாக்கியம் அல்ல. மேலும் ஆழமானது. காலமும் இடமும் தம்மை முழுமை செய்துகொள்கையில் கலையாக்கம் காலமாகவும் இடமாகவும் இருக்கிறது.
கற்பனையை மீபொருன்மையாக கருதுவது என்பது, அதை நம் வாழ்வின் ஒரு அங்கமாகக் கருதுவதாகும். கற்பனையை நம் வாழ்வின் ஒரு அங்கமாகக் கருதுவது என்பது கலையின் பிரம்மாண்டத்தை உணர்வதாகும். நாம் மனதிலேயே வாழ்கிறோம். மனதில் வாழ்வது என்றால் என்ன என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் – பிறவியில் இருந்தே பார்வையற்ற இருவர் உரையாடிக் கொள்வது. அவர்களால் படிமங்களால் உரையாடிக் கொள்ள முடிகிறது. பார்வையுள்ளவர்களின் படிமங்களால் இல்லாமல் சொந்த படிமங்களாலேயே அவர்களால் பேசிக் கொள்ள முடிகிறது. அவர்கள் உரையாடல் நம் உலகத்தைச் சேர்ந்ததாக இருக்காது.
மனதில் வாழ்வது பற்றி இன்னொரு உதாரணமும் சொல்லலாம். பாரீஸ் நகரை சேர்ந்த ஒருவரின் கற்பனையும் உகாண்டாவை சேர்ந்த ஒருவரின் கற்பனையும் ஒன்று போல இருக்காது. இவ்விருவரும் தங்கள் கற்பனையை இடம் மாற்றிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது பாரிஸில் உள்ள மனிதர் நள்ளிரவில் ஒரு கால்பந்தின் சத்தம் கேட்டால், அதை ஒரு பேயின் ஓசையாக புரிந்துகொள்ளக் கூடும் இல்லையா? போலவே, உகாண்டாவை சேர்ந்தவர் ஒரு தேவாலயத்தில் இருக்க நேர்ந்தால் அங்கு அவருக்கு நிகழும் குழப்படியான அனுபவத்தை எப்படி விவரிப்பார்?
நாம் மனதில் வாழ்வதால் கற்பனையிலேயே வாழ்கிறோம். புறஉலகில் கலையின் விரிவை உணர்ந்து, ஃப்லொரென்ஸ்(florence) டப்ளினை விட கற்பனைத் திறன் மிக்கது என்றோ நீல-வெள்ளை வண்ண முனிச்(munich) பசுமை-வெள்ளை வண்ண ஹவானாவை(havana) விட கற்பனைத்திறன் மிக்கது என்றோ கூறுகிறோம். அல்லது இந்த நகரத்தில் கற்பனை வளம் மிக்க எந்த பொதுச் சின்னமும் இல்லை என்றோ அல்லது வாட்டிகன் நகரத்தில் கற்பனை வளம் இல்லாத எந்த பொது சின்னமும் இல்லை என்றோ கூறுகிறோம். அந்த கனத்தில் நம்மை வசீகரிக்கிற ஒன்றிற்கும் புற உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம் அக்கறை நம்முள் இருக்கும் கலை விரிவின் பாற்பட்டது. கூடவே அதன் மதிப்பு என்ன என்ற கேள்வியும் கேட்கிறோம்.
அப்படி என்றால் மனதில் கற்பனையோடு வாழ்வது எப்படி? அதாவது கற்பனையில் வாழும்போதே, நிறுவப்பட்ட பழைய சொல்லாட்சிகளிலும் பழைய எண்ணங்களிலும் மூழ்காமல் இருப்பது எப்படி? இதற்கு இடையில் இருப்பது “தர்க்கம்” மட்டுமே. தர்க்கத்துக்கும் கற்பனைக்கும் நடுவே நீடித்த போராட்டம் உள்ளது. இந்த போராட்டம் எப்போதுமே முடிவில்லாமல் நடைபெறுவது. அப்போராட்டத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள ஏதுமில்லை. பாஸ்கலோ அல்லது வேறொருவரோ சுட்டிக் காட்டாத வரை அது நம் கண்ணுக்குப் புலப்படுவதும் இல்லை. இது பற்றி எவ்வளவு அதிகமாக யோசிக்கிறோமோ அந்த அளவுக்கு இதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதும், இதனால் உலகத்திற்கு குறைவு ஒன்றும் இல்லை என்பதும் நமக்குத் தெரிகிறது. இந்த போராட்டம் உண்மைதானா என்றும் சந்தேகம் வருகிறது.
கற்பனையும் எதார்த்தமும் இரு சகோதர சகோதரிகளை போல சிந்தனையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. டர்பி மற்றும் ஜோன் சகோதரர்களை போல. டர்பி இப்படி சொல்கிறார் : “மிகுந்த தர்க்க ரீதியான ஒரு படைப்பு மிகுந்த கற்பனை மிக்கதாகவும் இருக்கும், பிக்காசோவின் படைப்புகளைப் போல. ” ஜோன் சொல்கிறார் : ” மிகுந்த கற்பனை மிக்க ஒரு படைப்பு மிகுந்த தர்க்க பூர்வமாகவும் தெரிவதும் உண்மை தான். ஜாய்ஸின் படைப்புகளை போல. வாழ்க்கை கடினமாகவும் அன்பாகவும் உள்ளது. எனினும் அந்த கடினமே அதை அன்பாக ஆக்குகிறது.”
கற்பனைக்கும் எதார்த்திற்கும் இடையிலான உறவு பற்றி பேசும்போது, நாம் தொடர்ந்து ஆன்மாவின் மதிப்பைப் பற்றியும், உலகத்தின் லாப நஷ்டங்களைப் பற்றியும் பேசியாக வேண்டி இருக்கிறது. வரலாற்றில், தனி மனிதர்கள் சிலரின் தர்க்கமே ஒட்டு மொத்த உலகத்திற்குமான தர்க்கமாக இருந்திருக்கிறது. பெருங்கூட்டங்களால் ஆளப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அப்பெருங்கூட்டங்களின் செயலுக்கு அடியே சில மனிதர்களின் தர்க்கம் இருக்கும்போதும், கூட்டத்தினர் பெரும்பாலும் கற்பனையினாலேயே உந்தப்படுகின்றனர். கவிஞன் இந்த உலகை இழந்திருக்கலாம். ஆனால் கற்பனை, உலகை இழக்கவில்லை. நான் ஏன் கவிஞனைப் பற்றி குறிப்பிடுகிறேன் என்றால் நாம் கவிஞனை கற்பனையின் பிரச்சாரகனாக நினைக்கிறோம். அத்துடன் கவிஞன் இவ்வுலகை இழந்துவிட்டான் என்று ஏன் சொல்கிறேன் என்றால் சொர்க்கம் மற்றும் நரகத்தின் மகத்தான கவிதைகள் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. ஆனால் இவ்வுலகத்தின் மகத்தான கவிதைகள் இனிதான் எழுதப்பட வேண்டும். அத்தகைய கவிதைகள் ஆன்மாவின் உண்மையான மேன்மையை உள்ளடக்கி இருக்கும். அத்தகையை கவிதைகள் எழுதப்படும் வரை குறைபட்டவையே உயர்வாக கருதப் படும்.
கற்பனையை அதன் பிரம்மாண்ட அளவைக் கணக்கில் கொண்டே ஒருவர் மதிப்பிட வேண்டும். இன்று அந்த அளவுகோல் கவிதையின் அளவுகோலாகவோ, இலக்கியம் அல்லது வேறெந்த கலையின் அளவுகோலாகவோ மட்டும் இல்லை. அது உலக அரசியலின் அளவுகோளாக, குறிப்பாக கம்யூனிசத்தின் அளவுகோலாக இருக்கிறது. கம்யூனிசமும் கற்பனையின் விளைபொருளே. கம்யூனிசம் வெடித்துப் பரவிய விதம் நிச்சயம் கற்பனையின் பிரம்மாண்ட அளவைக் காட்டுகிறது. கம்யூனிசம் மானுட மேன்மையின் அளவுகோலோ இல்லயோ, அதன் வார்த்தைகள் தற்போதைய காலகட்டத்தை எதிரொலிக்கின்றன. மானுடத்தின் இன்றைய முக்கியத் தேவையை அது பேசுகிறது. மற்ற நம்பிக்கைகளின் தோல்வியால், இந்த பண்படாத சிந்தனை பூலோக சொர்கத்தை உறுதியளிக்கிறது. மிகச் சிறந்த பிற சிந்தனைகளால் உறுதியளிக்க முடிந்த ஒரே பூலோக சொர்கம் என்பது மனிதனின் உன்னதமான உருவத்தை (man’s noblest image) அடிப்படையாக கொண்டதே. இந்த உருவத்திற்கோ மனிதகுலத்திடம் இதுவரை இல்லாத கற்பனை தேவைப்படுகிறது.
கம்யூனிச பொருள்முதல்வாத கற்பனைக்கும், கருத்துமுதல்வாத திட்டங்களின் கற்பனைக்கும் வேறுபாடு உண்டு. கற்பனைக்கு பண்முகத் தன்மை உண்டு என்று சொல்லவில்லை. ஆனால் வேறுவேறு வகையான கற்பனைகள் உண்டு. ஒரு கற்பனைப் பொருள் பற்றிய பொது கருத்து, பெரிதானது என்று நாம் நினைக்கலாம். ஜப்பானியர்கள் இதை எதிர்நிலையில் சொல்கிறார்கள். ஒரு கற்பனை பொருள் பற்றிய பொது கருத்தை அவர்கள் சிறியதாக கருதுகிறார்கள். இந்துக்கள் அதை அலைவடிவிலான ஒன்றாகவும், சீனர்கள் வட்ட வடிவமானதாகவும் டச்சு மக்கள் சதுரமானதாகவும் கருதுகிறார்கள். இப்படி கற்பனையில் வகைகள் இருக்கின்றன. பைபிளுக்கும் கவிதைக்கும் இடையிலான ஒப்பீடு இங்கு பொருத்தபாடு கொண்டது. உலகில் பரவலாக வாசிக்கப்படும் பைபிளை செறிவற்ற நூல் என்று சொல்லிவிட முடியாது. அதே போல அதன் பரவலான வாசிப்பிற்கு அதில் அடங்கியிருக்கும் கவித்துவம் மட்டுமே காரணம் என்றும் சொல்ல முடியாது. கவிதையும் பைபிளின் தேவைகளையும், அபிலாஷைகளையும், நம்பிக்கைகளையும் அச்சங்களையும் கைக்கொள்ளுமானால், பைபிளைப் போன்ற பரவலான கவனத்தையும் பெறும். ஆனால் கவிதை பைபிளின் நம்பிக்கைகளை எடுத்தாள முடியாது. அத்துடன் பைபிள் உருவாக்குவது போன்ற பழமைவாய்ந்த உலகத்தை கவிதை உருவாக்க முடியாது. கவிதையும் பைபிள் போல சில விஷயங்களை கையாள வேண்டும் என்று விமர்சகர்கள் கூறும் போது ஒன்றைத் தவற விடுகின்றனர். கவித்துவ கற்பனையும், பைபிளின் கற்பனையும் வெவ்வேறானவை. அரசியலால் திருப்தியடைந்த கற்பனை -அது எந்த வகை அரசியலாக இருந்தாலும்- பிரபஞ்ச விரிவு கொண்ட கவிஞனின் மனதை திருப்தி செய்கின்ற கற்பனையின் அளவுக்கு மதிப்பு மிக்கதாக இருப்பதில்லை. கவிஞனின் கற்பனையானது அடிப்படையான படிமங்களையும், உணர்ச்சிகளையும் ஊடுருவ முயல்வதாகவும், அதன்மூலம் பழங்கால உலகத்தைக் காட்டிலும் புராதானமான, ஆதாரமான ஒரு கவிதையை படைப்பதாகவும் இருக்கும்.
தொடர்ந்து கற்பனைக்கும் சமூகத்துக்குமான உறவு பற்றி பேசலாம். சமுதாய அமைப்பு சார்ந்த கற்பனையைப் (imagination of social form) பற்றி கூறும் முன்னர் அன்றாட வாழ்க்கையும், கலாச்சார நடவடிக்கைகளும் வேறு வேறு என்று முதலில் சொல்லிக் கொள்கிறேன். திரையரங்கம் ஒரு சமூக அமைப்பு. அது ஒரு கலாச்சார அமைப்பும் கூட. இங்கு கற்பனை எவ்வாறு ஒரு அமைப்பாக இருக்கிறது என்பதைப் பற்றி நான் விவாதிக்க வரவில்லை.
கற்பனை என்பது பார்த்தல், கேட்டல் போல ஒரு புலன் சார் நடவடிக்கையாக சமூகத்தில் வியாபித்து இருக்கறது. சமுதாய அமைப்பு சார்ந்து கற்பனையின் இருப்பை ஒருவர் தொகுக்க ஆரம்பித்தால், பெரும் எண்ணிக்கையிலான நம் தினசரி பழக்க வழக்கங்களில் அதன் தாக்கத்தை உணர முடியும். நம் சமூக அனுகுமுறைகள், தனித்தன்மைகள், சமூக தனித்தன்மைகளின் சின்னங்கள் இவை எல்லாம் அதன் வழி வந்தவையே. உதாரணமாக ஞானஸ்னான சடங்கு, திருமணம், இறுதிச் சடங்கு என நிறைய விஷயங்களைச் சொல்லலாம்.
கற்பனையின் மூலம் உருவாகிய சமூக அமைப்பை அன்றாடத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்ட சிறு முயற்சியே போதும். ஒரு சமூக அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது என்பதே அந்த வாதத்திற்கு வலு சேர்ப்பது. சாதாரணமாக மனிதர்கள் அசாதாரணமான ஒன்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை அன்றாட பழக்கத்தின் மூலம் சாதாரணமாக்கிய பிறகே அவர்களால் ஏற்க இயலும். நம்முடைய ஆடை ஒப்பனைகள் கற்பனையின் சமூக உருவங்களே. ஒப்பனை என்பது அசாதாரணமான ஒன்று. அதை பழக்கத்தின் மூலம் சாதாரணம் ஆக்கி நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். நம்முடைய தினசரி வாழ்க்கை கற்பனையம்சத்தை அணிந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் நம்முடைய தினசரி வாழ்க்கையில் கற்பனையம்சம் சமூக உருவங்களில் மறைந்திருக்கிறது என்று கூறலாம். நம் பழக்க வழக்கங்கள் – மானுடவியலாளர்களால் மட்டும் புரிந்து கொள்ள இயலும்- கணக்கிலடங்கா விஷயங்களை ரகசியங்களாக கொண்டிருக்கின்றன . போலவே, கணக்கிட முடியாத அளவிலான மனித வாழ்கைகள் விட்டுச் சென்ற விஷயங்களின் தொகுப்பால் நம்முடைய இப்போதைய வாழ்க்கை பின்னப்பட்டிருக்கிறது.
இப்படி எவையெல்லாம் வாழ்க்கையில் கலந்திருக்கின்றன என்பது ஆச்சர்யமான கேள்வி. ஓர் உதாரணம் சொல்லலாம். என்னைப் பொருத்த வரை, பல்கலைக்கழகத்தில் நாம் செலவிடும் வருடங்கள் அசாதாரணமானவை. வாழ்க்கையில் மற்ற வருடங்களின் விளைவுகளைக் காட்டிலும், கல்லூரியில் நாம் செலவிட்ட கற்பனை நிறைந்த அந்த சில வருடங்கள் நம்முள் உறைந்துவிடுபவை. பொருளியல் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் நாம் செலவிடும் பிந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் பல்கலைக்கழகத்தில் நாம் செலவிட்ட கற்பனை மிகுந்த ஆண்டுகள் மிகுந்த செல்வாக்கு கொண்டவை இல்லையா?
கற்பனை, மீபொருண்மையாக செயல்படுவதைப் பற்றிய விவாதம் நம்மை கொஞ்சம் வேறு பக்கமாக இழுத்துச் சென்று விட்டது. ஆனால் இது நியாயமானதே. முதலில், கற்பனை கலையில் செயல்படுவதை விடவும் கூடுதல் முக்கியத்துவம் வாயந்த விதத்தில் நம் வாழ்வில் செயல்படுகிறது. . இரண்டாவதாக, கற்பனை வாழ்க்கையை ஊடுருவுகிறது. இறுதியாக, மீபொருன்மையாக செயல்படுவதன் மதிப்பும் கலையாக செயல்படுவதன் மதிப்பும் ஒன்றல்ல. வாழ்வில் கற்பனையின் பரவல் தன்மை காரணமாக, இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு பற்றிய விவாதங்கள், கலையுடன் ஒப்பு நோக்க, குறைவாகவும் தேவையற்ற ஒன்றாகவும் தெரிகின்றன. கற்பனைக்கும் யதார்தத்திற்கும் இடையிலான தொடர் விவாதத்தின் தேவை வாழ்க்கையை விட கலை இலக்கியத்துக்கே அவசியமாகிறது. இதற்கு காரணம், வாழ்க்கையில் வெகு சிலரே கற்பனையை நோக்கித் திரும்புகிறனர் என்பதே. மறுபுறம், கலையில் வெகு சிலரே கற்பனை அல்லாத வேறு விஷயங்களை நோக்கித் திரும்புகிறனர். வாழ்கையில் உண்மை என்பது அதனளவிலேயே முக்கியமானதாக இருக்கிறது. கலையிலோ உண்மையை நாம் எப்படிக் காண்கிறோம் என்பது முக்கியமானதாக இருக்கிறது. இங்கு ஒரு வேறுபாடு உள்ளது. அது என்ன என்றால், தன்னுனர்வின்றி ஒருவர் வாழ்கையில் கற்பனையை நோக்கியும், கலையில் யதார்த்ததை நோக்கியும் திரும்புவதுண்டு.
அதுபோல வாழ்க்கையில் கற்பனை செயல்புரியும் விதம் வித்தியாசமானதும், கலையில் செயல்படுவது போல அவ்வளவு சரியாக வரையறுக்கப்பட்டதும் அல்ல. வாழ்கையில் ஒருவர் தயக்கத்துடனேயே கற்பனயின் மதிப்பைப்பற்றி பேசுவார். கலையில் அதன் மதிப்பே அழகியலாகிறது. பெரும்பாலான மனிதர்களின் வாழ்வு அவர்களுக்கு திணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி திணிக்கப்பட்டிருக்கும் வாழக்கையில் அழகியல் மதிப்புகளை கண்டுபிடிப்பது இயலாத விஷயம். தங்கள் சொந்த தெரிவுகளின் அடிப்படையில் வாழும் வாழ்கையும் உண்டுதான். மீண்டும் சொல்வதென்றால், கலைகளில் உள்ள கற்பனையின் மதிப்பின் அளவிலேயே இருக்கும் வாழ்க்கையிலும் கற்பனையின் மதிப்பு உண்டு.
கற்பனையால் உருவாகும் அறநெறிகளும், ஒழுக்க மதிப்பீடுகளுமே வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி சிந்திக்கத்தக்கவை. விக்டொரியவாதிகள் இந்த மதிப்பீடுகளை கலை மற்றும் இலக்கியத்துடன் தொடர்பு படுத்தி சிந்தித்தனர். ரஷ்யர்களும் அவர்களை அடியொற்றியே சிந்தித்தனர். போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கலை இலக்கியத்தின் மதிப்பீடுகளை வாழ்க்கையில் நிறுவ முயற்சி நடைபெற்றது. மதிப்பீடுகளை இந்த மாதிரி அவற்றின் எல்லைக்கு அப்பால் கூட்டிச் செல்லும் செயல்பாடுகளை வரையறுக்க முயல்வது தேவையற்றது. அவை வானிலை போன்றவை. வானிலையால் மகிழ்ச்சியடைகிறோம் அல்லது அல்லலுறுகிறோம். எனினும் ஒரு உணர்சியில் இருந்து இன்னொன்றை பிரித்தரிய முடிவதில்லை. மதிப்பீடுகளை இந்த மாதிரி அவற்றின் எல்லைக்கு அப்பால் கூட்டிச் செல்லும் செயல்பாடுகளைப் பற்றி பேசுவதே தவறாக இருக்கலாம். ஏனென்றால் அவற்றிற்கு முதலில் எல்லைகள் உண்டா? எது பொருத்தமான எல்லை? என்பது போன்ற கேள்விகளே இன்னும் தீர்ந்த பாடில்லை.
சமீபத்தில் நான் ஒரு வாசகம் படித்தேன். “விளக்க முடியாத உள்ளுணர்வை சாராத, ஆனால் மனித தேவைகளோடு மேன்மை, உண்மை மற்றும் அழகியலை இணைக்கிற, மதிப்பீடுகள் சார்ந்த புறவயமான கருதுகோள் தத்துவத்தில் தேவைப் படுகிறது” .இது ஒரு சீண்டல் தொனி இருக்கிறது. கல்வி கற்ற மனிதரே ஒரு அறிவான மனிதராக தொடரட்டும் என ஒரு கவிஞன் சொல்வது எளிது. ஆனால் ஒரு கவிஞன் தன் ஞானத்தைத் தாண்டி வேறெதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவன் புனிதர்களிடம் அடி பணிவதுமில்லை.
கவித்துவ மதிப்பீடு தன்வரையில் உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது என கவிஞன் கருதுகிறான். அது அறிவின் மதிப்பீடோ நம்பிக்கையின் மதிப்பீடோ அல்ல. அது கற்பனையின் மதிப்பீடு. தன்னளவில் விரிவடைந்தபடியே இருக்கும் கற்பனைச் செயல்பாட்டின் மூலம் அதை கவிஞன் எடுத்துக்காட்டி விளக்குகிறான். நான் இங்கு விளக்க முற்பட்டதைப் போலவே. இங்கே நான், கவிஞன் விளக்குவதாகவே சொல்கிறேன். நியாயப்படுத்துவதாக அல்ல. ஏனென்றால் கவித்துவ மதிப்பீடு என்பது உள்ளுணர்வு சார்ந்த மதிப்பீடு. உள்ளுணர்வின் மதிப்பீடுகளை நியாயப்படுத்த இயலாது.
மதிப்பீடுகளின் எல்லை பற்றியும், ஒரு எல்லையிலிருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் மதிப்பீடுகள் பற்றியும் பேசும்போது இவையெல்லாம் நீடித்த செயல்பாடுகள் எனபதை மனதில் கொள்ள வேண்டும். எந்த துறையை விடவும் ஓவியத்தில் இது வெளிப்படையாக தெரியும். எந்த துறையை விடவும் ஓவியத்தில் தொடர்ந்த்து விவாதத்தில் இருக்கும் தலைப்பு இது. ஓவியத்தில் எந்த அளவுக்குக்கு யதார்த்தம் இருக்க வேண்டும் என்பதற்கு திட்டவட்டமாக வரையறை இல்லை. ஏற்கத்தக்க அளவில் யதார்த்தம் ஓவியத்தில்,தனி அழுத்தத்தோடு, அலைவுறுகிறது. அந்த அழுத்தமே ஓவியத்தில் மதிப்பீடாகவும் மாறுகிறது. ஓவியத்தை காணும்போது ஓவியர் தன்னுள் தொடர் விவாதத்தில் இருப்பதாக தோன்றுகிறது. கலையாக்கத்தில் நம்மை மகிழ்விப்பது எது? மனதின் பயிற்சியால் நாம் உருவாக்கக்கூடிய படைப்பா அல்லது மனதின் ஆற்றலா?
ஒரு தலைமுறைக்கு முன்னர், கற்பனை என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான மோதல் என்று கூறி இருப்போம். தற்போது அது மனிதனுக்கும் ஒருங்கிணைந்த சமூகத்துக்கும் இடையிலான மோதல் என்றே கூறத் துணிவோம். கற்பனை என்பது நம் பாதுகாப்பின் ஒரு அங்கம். அது ஒவ்வொருவரையும் தம் சொந்த வாழ்க்கையை வாழச் செய்கிறது.
கற்பனையை நாம் கைக்கொண்டிருக்கிறோம் – ஏனென்றால் கற்பனையின்றி நமக்கு நிறைவு இல்லை. இது அனைவருக்கும் பொருந்தாது. யதார்த்தமும் தர்க்கமுமே போதும் என்று இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது. ஆனால் மானுடக் குலத்திற்கு இது தேவை.
ஒரு தனித்த, வலுவான கற்பனை என்பது ஒரு தனித்த வலுவான தர்க்கம் போன்றது. இரண்டிலும் உருவாகும் நன்மை என்பது ஓர் ஆன்மீக நன்மையே. இரண்டில் எது தலையாயது என்று சொல்வது இயலாதது. முதலில் இவை இரண்டாக இருப்பதாகவே சொல்ல முடியாது. எப்போது ஒரு கட்டிடம் தர்க்கத்தின் விளைபொருளாக இருப்பது நின்று, கற்பனையின் விளைபொருளாக மாறுகிறது? கற்பனை உயரத்திற்கு ஒரு கட்டிடத்தை எழுப்பிய கணமே அது ஒரு கற்பனை கட்டிடமாக மாறிவிடுகிறது. அலுவலகத்திலிருந்தும் பள்ளிக்கூடத்திலிருந்தும் ஊர்ந்து வெளியே வருகிறவர்கள், ஓபரா அரங்கில் நுழையும்போது வேறு வகை விழிப்பை அடைந்துவிடுகிறார்கள். அல்லது நாம் நம்பும் கற்பனையில் லயித்தபடியே இசை கேட்கிறோம்.
கற்பனை எனும் திறன் வழியாக நிஜமற்றதை நாம் நிஜத்துக்குள் கொண்டு வருகிறோம். எனில் கற்பனையின் மதிப்பு என்பது கடவுள் என்னும் கருத்தை மனிதன் என்னும் கருத்தாக மாற்றும் சிந்தனை முறையின் மதிப்பே தான். அது அசலானவற்றில் இருந்து சுதந்திரமான படிமங்களை உருவாக்குகிறது. ஏனென்றால் ஒரு கற்பனையே மற்றொரு கற்பனையை ஏற்றுக்கொள்ள முடியும். ஒருவரின் அத்தை கலிஃபொர்னியாவில் இருந்து கொண்டு தன் வீட்டின் இரண்டாம் மாடியின் ஜன்னல் வரை பூச்செடி கொடிபோல் படர்ந்திருக்கிறது என்று எழுதினால், அக்கணமே நம் கூரைக்கு மேல் அச்செடி படர ஆரம்பித்து விடுகிறது.
இந்த பத்திகளின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நான் வேண்டுமென்றே வேறுவேறு விஷயங்களை கலவையாக்கி குழப்பியதும் கற்பனையின் விளைவே. கற்பனை என்பது மனதின் அறியாமை என்று தோன்றலாம். ஆனால் மனம் மாறும்போது கற்பனையும் மாறுகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு இத்தாலியர் தன் இளமையில் கால்நடை மேய்ப்பவராக இருந்தார். அவர் தன் தினசரி அலுவலை என்னிடம் விவரித்தார். மாலை வேளையில் மிகவும் சோர்வுற்று மரத்தடியில் ஒரு நாய் போல் படுத்திருப்பேன் என்று அவர் சொன்னார். அந்த உருவகம் அவரின் சொந்த நாயின் உருவகமே. தன் சொந்த நாயின் உருவத்தை பயன்படுத்தி அவரால் எளிதாக தான் எவ்வளவு சோர்வாக இருந்தேன் என்று சொல்ல முடிகிறது. ஆனால் இன்னொரு மனிதர் அதே சம்பவத்தை இன்னும் ஆழமாக சொல்ல முடியும். அந்த மனிதரின் மனம் அதிகம் ஆற்றல் கொண்டிருக்குமாயின், அவர் மனம் சிந்தனையில் பரிச்சயம் கொண்டிருக்குமாயின், கற்பனையில் பரிச்சயம் கொண்டிருக்குமாயின், மொத்தம் சாரமும் மாறியிருக்கும். மனம் வாழ்வதற்கு ஏற்பவே கற்பனையும் வாழ்கிறது. ஆதிநிலை (primitivism) மறைகிறது. பிளேட்டோனிய பன்முகத்தன்மை (Platonic resolution of diversity) பிறக்கிறது.
உலகம் புறவயப் பொருட்களால் நிறைந்த இன்னொரு புறவயப் பொருள் அல்ல. அது ஒரு படிமம்(image). நாம் முக்கியமாக நினைப்பது இந்த படிமத்தையே. அது பற்றியே நாம் இறுதியாக விவாதிக்கப் போகிறோம். அதற்காக, கற்பனையின் பிரதான நோக்கமே இத்தகைய ஒரு படிமத்தை உருவாக்குவதுதான் என்று எண்ணக் கூடாது. வேண்டுமானால், கற்பனையின் பல்வேறு நோக்கங்களில் நாம் அக்கறை கொண்டிருக்கிற இந்நோக்கம், பிரதானமானது என்று சொல்லலாம். தொடர்ந்து கற்பனைகளின் தொகுப்பால் உருவான, குறிப்பிட்ட ஏதோவோர் படிமமே முதன்மையானது என்று நிறுவ முயன்றால், கற்பனை அந்த ஒற்றை படிமத்துடன் நிறைவடையாது. நம்மையும் நிறைவடைய அனுமதிக்காது. கற்பனை ஒரு அடக்கவியலா புரட்சியாளர்.
மதிப்பீடுகளின் குழப்படிகளையும், பலதரப்பட்ட விஷயங்களையும் கடந்து நாம் இப்போது கலை இலக்கியத்தை நேரடியாக சந்திக்கிறோம். பெர்லின் அருங்காட்சியகத்தில் நீங்கள் பார்த்திருக்கக் கூடிய புகைப்படங்களை இங்கு குறிப்பிடலாம். பௌசின்(Poussin) எடுத்த புகைப்படங்களை அத்தொகுப்பிலேயே மிகச் சிறந்தவை என்று சொல்ல முடியாது. எனினும் “கற்பனையே ஒரே மேதமை” என்னும் வாக்கியத்திற்கு அவை சான்றாக இருக்கின்றன.
அதே அருங்காட்சியகத்தில் கியோர்கியோன்(Giorgione) என்னும் வாலிப மனிதனுடைய ஓவியம் உள்ளது. வசரி(Vasari) அதை வரைந்ததைப் பற்றி கூறும் போது இயற்கையில் இல்லாத எதையும் தான் அதில் வரைந்துவிட வில்லை என்றார். இந்த ஓவியம் நிஜத்தை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் கற்பனையானதும் கூட. அதில் கற்பனையின் பிரம்மாண்டமான அழுத்தம் (diction) இருக்கிறது. கவிதையின் அழகை இந்த ஓவியம் கொண்டிருக்கிறது. அந்த ஓவியத்தின் பேசுபொருள் தீவிரமானது. ஆனால் தடையற்ற ஒரு ஆனந்தமான ஆன்மாவின் அருகே நாம் உணரும் மகிழ்ச்சியை அது அளிக்கிறது. இவ்வம்சத்தையே ஓவியத்தின் அழுத்தம் என்கிறோம்.
என்னுடைய இறுதிக் கருத்து இதுதான் – கற்பனை என்னும் ஆற்றலே நம்மை அசாதாரணத்திலிருந்து சாதாரணத்தையும் , குழப்பத்தில் இருந்து தெளிவையும் விளங்கிக் கொள்ளச் செய்கிறது. கலை இலக்கியத்தில் கற்பனை இதை செய்கிறது. தர்க்கம் மற்றும் கற்பனைக்கு நடுவிலான போராட்டத்தினாலும், சமூக அமைப்பு மற்றும் கற்பனைக்கு நடுவிலான போராட்டத்தினாலும், கற்பனையை அசாதாரணமாக ஒன்றாக கருதும் போக்கு நிலவுகிறது. கற்பனையின் கண்ணியத்தை குலைக்கும் இந்த மனநிலை என்பது அசாதாரனத்தின் மேல் உள்ள வெறுப்பின் வெளிப்பாடே.
நவீன கலை மற்றும் இலக்கியம் சார்ந்த பொது மனநிலையிலும் மேற்சொன்ன போக்கை காணலாம். ரிம்பார்ட்(Rimbaud) கவிதையிலும், காப்கா உரைநடையிலும் அசாதாரணத்தை வெளிப்படையாக சுரண்டினார்கள். எழுத்தில் அசாதாரணத்தை வெளிப்படுத்துபவர்களையே கற்பனையோடு தொடர்புபடுத்தி யோசிப்பது எனபது இயல்பானதே. சுதந்திரத்தை அதை சுரண்டுபவர்களோடு அடையாளப்படுத்தி அறிவது போல. அசாதாரணங்கள் நிறைந்து வழியும் ஓர் இலக்கியப் படைப்பு தர்க்கத்தை இயல்பானதாக தோன்றச் செய்கிறது. ஆனால் அது உண்மையல்ல. தர்க்கம் என்பது கற்பனையை முறைப்படுத்தும் கூறு மட்டுமே. நாம் கற்பனையின் கருதுகோள்களிலேயே (concepts of imagination) வாழ்கிறோம். தர்க்கம் அவற்றை நிறுவுவதற்கு முன்னாலேயே நாம் அவற்றில் வாழத் தொடங்கிவிடுகிறோம். மேற்சொன்ன கூற்றில் ‘கருதுகோள்கள்’ என்று சுட்டப்படுபவை, சாதாரணத்தைக் குறிக்கும் கருதுகோள்களே. ‘கற்பனை என்னும் ஆற்றலே அசாதாரணத்தில் இருந்து சாதாரணத்தை அறிந்து கொள்ள வழி செய்கிறது’ என்னும் கூற்று முந்தய கூற்றை ஒரு வகையில் திரும்பவும் சொல்வது போல தான். எனினும் ஒன்று மற்றொன்றை விளக்குவதில்லை. இந்த இரண்டு கூற்றுகளும் ஒன்றிணைந்து குறிப்பது என்னவென்றால் வாழ்வின் உடனடி வெளிப்பாடுகள் என்பது சாதாரணத்தின் வெளிப்பாடுகளே.
இவ்வுலகத்தின் தனிமையையும், துயரத்தையும் பயங்கரத்தையும் வலியுறுத்துபவர்களுக்கு மேலே உள்ள கூற்றுகள் அபத்தமாகத் தெரியும். அவர்களின் கேள்வி அவர்களைப் பொருத்த வரை கற்பனையின மதிப்பு என்னவாக இருக்கிறது என்பது. அவர்கள் அனுபவத்தை கருத்தில் கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் வாழ்வது தீய கற்பனையில், என்பதை எப்படி மறுப்பது? தீமை சாதாரணமானதா, அசாதாரணமானதா? கவிஞர்களின் அழகிய ஆரூடங்களும், ஞானிகளின் ஒளிவட்டமும் அவர்களுக்கு எப்படி உதவும்? ஆனால் சாதாரணத்தைப் புரிந்து கொள்ள சொல்லும் போது நாம் வாழ்கைக்கு தேவையான உள்ளுணர்வாலான ஒருங்கினைவுகளையே உத்தேசிக்கிறோம். தனிமையிலும், துயரிலும் பயங்கரத்திலும் வாழ்பவர்களுக்கு கற்பனையைத் தவிர வேறு எதில்தான் மதிப்பு இருக்கிறது? ஜீன் பால்ஹன்(Jean Paulhan) ப்ரெஞ்சு நாட்டை சேர்ந்த எழுத்தாளர். பெரும் சிந்தனாவாதி. பிரான்சின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள டார்பிஸ்(Tarbes) என்னும் நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அது மார்ஷல் ஃபொச்(Marshal Foch) பிறந்த இடம். மார்ஷல் குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு சிலை நடைபாதையை ஒட்டி உள்ளது. தன்னுடைய ‘Les Fleurs de Tarbes’’ என்னும் நூலில் ஜீன் பால்ஹன் இவ்வாறு கூறுகிறார்.
“ஒருவர் டர்பிஸ் நகரின் பூங்காவின் நுழைவாயிலில் கீழ்கண்ட அறிவிப்பு பலகையைக் காண்கிறார்.
இந்த பூங்காவிற்குள் மலர்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.”
அவர் மேலும் இப்படி கூறுகிறார்.
“நம் காலத்தில் ஒருவர் இத்தகைய அறிவிப்பை இலக்கியத்தின் நுழைவாயிலிலும் காண்கிறார். எப்படி இருப்பினும் டர்பிஸ் நகரத்தின் பெண்கள் (மற்றும் இளம் எழுத்தாளர்களும்) ஒரு ரோஜாவையோ, கைநிறைய சிகப்பு நிற பாப்பி மலர்களையோ கொண்டு செல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கும்”
நான் முன்னரே குறிப்பிட்டது போல, ஜீன் பால்ஹன் ஒரு சிறந்த சிந்தனாவாதி. ஆனால் இலக்கியத்தின் நுழைவாயிலை காண முடிவது – அதாவது கற்பனையின் நுழைவாயிலை இயல்பான அன்பாலும் அழகாலும் காண முடிவது – தன்னளவிலேயே ஒரு மகத்தான கற்பனையின் அருஞ்செயல். ஒரு மனிதர் தன் சொந்த நகரத்தில் உள்ள பூங்காவில், சாமானிய உலகில் கொண்டாடப்படும் ஒருவரின் சிலைக்கு அருகில் அமர்ந்து இந்த அழகிய காட்சியைக் காண்கிறார். அங்கிருந்து நகர்ந்து எந்த ஒரு கலைஞனுக்கும் உள்ள தலையாய பிரச்சனைகளை, எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் இருக்கும் பிரச்சனைகளாகப் பார்க்கிறார். அவற்றைத் தீர்ப்பதற்கு கற்பனை அளிக்க முடிந்த அனைத்தும், அந்த மனிதருக்கு, தேவையாக இருக்கிறது.
ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.