/

க.மோகனரங்கன் கவிதைகள்

1) சர்க்கஸ்


நாளும்
புலியின் வாயில்
தலையைக் கொடுத்துதான்
நானும்
பிழைத்து வருகிறேன்;
உண்ணவும்
உடுத்தவும்
குறைவேதுமில்லை.
தொடக்கத்தில்
மிருகத்தை
எவ்வளவு தூரத்திற்கு நம்புவது
என்கிற அச்சத்தில்
பார்வையாளர்களின் கைத்தட்டலையும் மீறி
எனக்கு உடல் வியர்த்துவிடும்.
பழகப் பழக
மனித வழமைகளைப்
புரிந்து புலியும் நடந்துகொண்டது.
இருப்பினும்
வனம் பற்றின கனவு அதற்கும்
உலகம் பற்றிய நினைவு எனக்கும்
எப்போதாகிலும்
எழாமல்லில்லை.
அப்போதெல்லாம்
கட்புலனாகாதவொரு
சவுக்கின் சொடுக்கொலி
கட்டுக்குள் வைத்திடும் எம்மை.
புலிக்கு
சலிக்காத வரை
என் தலைக்கு இல்லை
வலி.

2) இயங்கு விதி


ஏராளமான
இருப்புப் பாதைகள்
ஒன்றையொன்று
சந்திக்கும்
இந் நிலையத்தின்
எண்ணிட்ட நடைமேடைகளை
நோக்கி
வந்து சேரும்
வண்டிகளின் எண்ணிக்கையானது,
விட்டு வெளியேறும்
வண்டிகளின் எண்ணிக்கைக்கு
குறையாமல்
எப்போதுமிருக்கிறது.
எனில்,
இந் நகரத்தை விட்டுப்
புறப்பட்டுப் போகிறவர்களின்
அதே அளவிற்கு,
இந் நகரைத் தேடி
கிளம்பி வருபவர்களும்
இருக்கிறார்கள்.
எனவேதான்
யாரொருவர் உள்ளபோதும்
எவரொருவர் இல்லாதபோதும்
தன் மூப்பில்
தானியங்கிக் கொண்டிருக்கும்
இப் பெரும் நிலையத்தில்
வரும் போகும் வண்டிகளுக்கு
கொடி அசைவித்து
வழி காட்டும்
நிலைய அதிகாரியும்
நேர நெறிமுறைகளின்படி
நாளும் வண்டிகளை முடுக்கியபடி
எங்கெங்கும் அலைந்து திரும்பும்
ஓட்டுநரும்
அட்டவணையில் குறிக்கப்பெறாத
அகாலத்தில் சந்திக்கும் போது
அருந்தும் தேநீரில்
பிரிவின் துவர்ப்பும்
சந்திப்பின் மதுரமும்
சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது.

3) படைப்பின் நியதி


இரு வகை ப்ளாஸ்டிக்குகள் பற்றி
பொருட்களின் அறிவியல்
விவரிக்கிறது.
முதலாவது வெப்ப இளகு ப்ளாஸ்டிக்;
குறிப்பிட்ட எல்லைக்குமேல் வெப்பத்தை அதிகரிக்கும் போது
தன் திடத்தன்மையை இழந்து
உருகி வழியத் தொடங்கும்.
அதனை மீண்டும் மீண்டும் உருக்கி
வேண்டும் வடிவத்தில்
நாம் வடித்துக்கொள்ளலாம்.
மற்றதோ,
வெப்ப இறுகு ப்ளாஸ்டிக்;
வெம்மைப்படுத்தும் தோறும்
இளகாமல் இறுகித் திண்மமாகும்.
இதை உருக்கி மறுவார்ப்பு
செய்யவியலாது.
படைப்பாக்கத்தின் போது
கருமமே கண்ணாகியக் கடவுள்
இதயத்தை வனையும் போதெல்லாம்
வஞ்சனையில்லாமல்
இரண்டிலொன்றை எடுத்துப் பிணைந்து கொள்வார்
பிறகு
இணை சேர்க்கும்போதோ
கவனமாக எதிரெதிர் சுபாவிகளை
பிணைத்து வைத்து வேடிக்கைப் பார்ப்பார்.
உருகி வழியும் ஒன்றானது
இறுகி நிற்கும் மற்றதை
இறுதி வரையிலும்
எதனால் என்றே
புரிந்துகொள்ள முடியாமல்
விதியேயென வெம்பி அழியும்.

க.மோகனரங்கன்

கவிஞராக அறியப்படும் க. மோகனரங்கன் விமர்சனம், மொழியாக்கத் துறையியிலும்  தொடர்சியாக இயங்கிவருகிறார். மீகாமம்’, ‘அன்பின் ஐந்திணை’, ‘மைபொதி விளக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

 

 

2 Comments

  1. அருந்தும் தேநீரில்
    பிரிவின் துவர்ப்பும்
    சந்திப்பின் மதுரமும்
    சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது.

    பிரமாதமான வரிகள்..

உரையாடலுக்கு

Your email address will not be published.