Of mere being, Anecdote of the jar, Another weeping women
1. வெறுமனே இருப்பது
மனதின் முடிவில் ஒரு பனை
கடைசி எண்ணத்திற்கும் அப்பால்,
வளர்கிறது
வெண்கல உருவில்
பொன்நிறமான ஒரு பறவை
அந்தப் பனை மரத்தில் இருந்து பாடுகிறது
மனித அர்த்தம் இன்றி,
மனித உணச்சி இன்றி,
அந்நியமான ஒரு பாடல்.
நமக்குத் தெரிகிறது காரணம் அதுவல்ல
நாம் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இருப்பதற்கு
பாடுகிறது அப்பறவை. ஒளிர்கிறது அதன் சிறகுகள்.
வான்வெளியின் நுனியில் நிற்கிறது அந்தப் பனை
அதன் கிளைகளில் மெதுவாக அசைகிறது காற்று
பறவையின் சுடரும் இறகுகள் அசைந்து இறங்குகிறது.
2. ஜாடியைப் பற்றி ஒரு சம்பவம்
டென்னஸீயில்* ஒரு ஜாடியை வைத்தேன்.
வட்டமாக இருந்தது மலை மேல்
அழுக்கேறிய வானந்திரத்தை அது
மலையைச் சூழச் செய்தது.
வானந்திரம் உயரே எழும்பி
அதைச் சுற்றி பரந்து கிடந்தது, பிறகு வனமாக நீடிக்கவில்லை.
ஜாடி அடியில் வட்டமாக
மேலே பிரம்மாண்டமாக ஒரு பல்லக்கு போல இருந்தது.
திசையெங்கும் ஆட்சி புரிந்தது அது.
வெளிறிப் போய் வெறுமையான அந்த ஜாடி
ஒரு புதரையோ குருவியையோ அண்ட விடாமல்
டென்னஸியில் உள்ள பிற எதைப் போலவும் இல்லாதிருந்தது.
*டென்னஸி(Tennessee) அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணம்.
3. இன்னொரு அழும் பெண்
துக்கத்தை வெளியே ஊற்று
உன் கசப்பு மிகுந்த இதயத்தில் இருந்து
துயரம் இனிப்பூட்டப் போவதில்லை.
இவவிருட்டில் தான் நஞ்சு வளர்கிறது.
கண்ணீரில் தான்
வளர்க்கிறது அதன் கரிய மலர்கள்.
இருப்பின் மகத்தான காரண கர்த்தாவான
கற்பனை,
இந்த மாய உலகின் ஒரே எதார்த்தம்,
உன்னை அவனிடம் விட்டுச் செல்கிறது
அவனுக்காக எந்த மாயத் தோற்றமும் பரிவு கொள்ளாது
உன்னையோ துளைத்து எடுக்கிறது ஒரு இறப்பு.
ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.
சிறப்பான கவிதை வாழ்த்துகள்,.,