/

கதிர் பாரதி கவிதைகள்

சாவியாக இருந்தால்

பூட்டோடு நட்பாக முடியாது!!!

“இந்தக் கதவைத் திறந்துவிட்டால் போதும்.“

“வழி கிடைத்துவிடுமா?“

“இல்லை

அடுத்த கதவைத் திறந்துவிடலாம்.“

“பிறகு?“

“அடுத்த கதவை

அடுத்த கதவைத் திறந்துகொண்டே போகலாம்.“

“எதற்கு இந்தத் திறப்பு?“

“ஏனெனில்

பூட்டியதைத்தானே திறக்கமுடியும்.“

“அப்புறம்?“

“எனக்குப் பின்வருபவன்

ஒரு கதவு விடாமல் பூட்டிக்கொண்டு வருவான்.“

“ஏன்?“

“திறந்ததை மீண்டும் திறக்க முடியாதல்லவா!

உலகில்

ஆக்கமுமில்லை அழித்தலுமில்லை.

திறப்பதும் மூடுவதும்

மட்டும்தான்.

உண்மையில்

திறப்பது என்பது பிறப்பது

மூடுவது என்பது இறப்பது.“

“சரி…

வாழ்வது என்றால்..?“

“பூட்டைத் திறக்க

உன்னிடம் ஆயிரம் சாவிகள் இருந்தும்

அதைத் திறவாமல் இருப்பது.“

ஆதியில்

எனக்கும் சாத்தானுக்கும்

பக்கத்துப் பக்கத்து வீடு

“என்கூட ஊர் வந்தால்

மேலுலகம் கூட்டிப்போவேன்”

சொன்ன தேவகி டீச்சருக்கு

பிறந்த ஊர் நாகப்பட்டினம்.

“எப்படி?” எனக் கேட்டப்போது

நான் இரண்டாம் வகுப்பு.

ஐந்தாறு முறை

கடல் வழி தொடுவானம் தொட்டு

மேலுலகம் கூட்டிப்போனார்.

நான்காம் வகுப்பு அறிவியலில்

என் 99 மதிப்பெண்ணோடு

ஒரு புன்னகையைக் கூட்டி

100 என வட்டமிட்டு

கண்ணடித்த கரோலின் டீச்சர்

இன்றும்

இருதயத்தின் இடது ஆர்க்கிளில்

துடிக்கிறார்.

அவர் பரதநாட்டியத்தில் வித்தகி.

எட்டாம் வகுப்பின்

ஆரோக்கிய செல்வி டீச்சர்

தன் கக்கத்தின் பக்கம் வளைத்து

செல்லமாகக் குட்டுவார்.

வலித்தும்வலிக்காத அந்தக் குட்டுக்கு

அவர் வியர்வைச் சுகந்தம் சாட்சி.

கன்னம் வதங்காத

பூரி கொண்டுவந்து தருவார்.

பதினோராம் நிலை ‘ஆ’ பிரிவு,

தெத்துப் பல் எலிசா டீச்சரின்

கணித பாட வேளையா

கஜல் பாடல் வேளையா எனக் குழம்பும்.

அவர் தெத்துப் பல்லுக்கும் எனக்கும்

பிறந்ததுதான்

என் முதல் கவிதை.

அப்ளைடு ஃபிசிக்ஸ் தமிழ்ரோஜா மிஸ்

கல்லூரிக் கரும்பலகையில்

பூ கொண்டு எழுதுவார்.

அவர் கையில் இருந்ததோ

சுண்ணம் சாக்பீஸ்.

அதில்

வானவில் முழுவட்டம் ஆனது.

வேதியியல் ஆய்வகத்தில்

பியூரெட் பிப்பெட்டைக் கையில் கொடுத்தார்

உமா ரமேஷ் மிஸ்.

வாழ்க்கைக் சாகரத்தில்

அவற்றால் நீந்தி மூச்சேறி வந்தேன்.

மகனின் பள்ளி முதல் நாளில்

ஒரு பூனைக் கண் டீச்சரிடம்

தெத்துப் பல் பார்த்தேன்.

பயமே இல்லாமல்

தெத்துப் பல்லிடம் என் எலிக்குட்டியை

ஒப்படைத்துவிட்டு வந்தேன்.

கிழக்கு மேற்கில்

காந்தம் இல்லை!

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே…’’ பாடலை

ரேடியோ காந்தம் ஒலிபரப்புவதுபோலவே இருப்பாள்

செந்தமிழ்ச் செல்வி அக்கா.

வெயிலில் “விட்டமின் டீ“ ஒளி(ர்)ந்திருப்பதை

அவள் டியூசனில் வைத்து அறிந்தேன்.

ராஜசெல்வக் குமார் அண்ணனுக்குள்

செல்வி அக்காவும்

செல்வி அக்காவுக்குள்

ராஜசெல்வக் குமார் அண்ணனும்

“விட்டமின் டீ“யாக ஒளி(ர்)ந்திருந்தார்கள்.

இவர்கள் காந்தம்

வடக்கு – தெற்காகி நின்றபோது

கிழக்கு – மேற்காகத் திருப்ப ஆசைப்பட்டது

சூறைக் காற்று.

ஊசலாடியது காந்தம்.

சூரியனைக் குவித்து

காகிதத்தை எரிக்கும் குவியாடியைக்

கழற்றித் துடைத்து கண்ணில் மாட்டிக்கொண்டு

அக்காவைப் பொசுக்கினார்

அவள் அப்பா.

எரியாமலே பதங்கமாகி ஆவியானது

செல்வி அக்கா விட்டமின்.

ஆர்க்மிடிஸ் வழிகாட்டியபடி

சோகத்தில் காந்தத்தை மூழ்கவிட்டு

அதே அளவு கண்ணீராய்

கல்யாணமாகி வெளியேறினாள்.

காகிதம் மீது காந்தத் துகள்களாய்

அலைக்கழிந்தார் செல்வா அண்ணன்.

“வா செல்வா… எல்லாம் விதி.

எல்லாவற்றுக்கும் எதிர்த்திசை உண்டு“ என

எங்கெங்கோ கூட்டிப்போனார் நியூட்டன்.

“இந்தா பசியாறு“ என ஆப்பிள் கொடுத்தார்.

ஆதி முதலே

ஆப்பிளில் காதல் இருந்திருக்கிறது

ஆறுதல்தான் இல்லை.

ஊர் பக்கம் திரும்பியது

செல்வா அண்ணன் காந்தம்.

அவரது சூரியனில்

“விட்டமின் டீ“ இல்லை இப்போது.

வடக்கு தெற்காகத் திரும்பும் பூமிக் காந்தம்

அவருக்குள் திரும்பிக்கொண்ட போது,

கிழக்கு மேற்காக மூளை கோணிக்கொண்டது

ராஜசெல்வக் காந்தம்.

பள்ளி சீருடையில் இருக்கிற

செல்ஃபோன் காந்தம் பாடுகிறது…

“மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே…“

பரமார்த்தக் குதிரை

குதிரைப் பயணம் போனார்

பரமார்த்தர்

அவர் பின்போயினர் சீடர்களும்.

ஓரிடத்தில்

பாதையின் தலையில் பூத்திருந்த

முள் சிக்கி

தலைப்பாகை உதிர்ந்துவிட்டது

குருவுக்கு.

சீடர்கள் சேமித்து வருவார்களென

மவ்னம் பூத்து இருந்துவிட்டார்

பரமார்த்தர்.

சிரமப்பரிகாரத்தின்போது

முகத்தில் வழியும் அசதி துடைக்க

அவரிடம்

தலைப்பாகைத் துவாலை இல்லை.

‘கீழே விழும் அனைத்தையும்

சுமந்துவருதே சீடர்களின் பயணப் பயன்’

எனச் சீறிவிட்டு

குதிரைப் பயணம் தொடர்ந்தார்.

கண்கள் தாழ்த்தி நடந்த சீடர்கள்

சேமித்து வருவதற்கெனவே

இப்போது

சாணம் உதிர்த்தது குதிரை.

இரண்டாம் சிரமப்பரிகாரம்

சாண மூட்டையாயிற்று

பரமார்த்தருக்கு.

கீழ்விழும் எவையெல்லாம்

எடுக்கத் தகுந்தவை என எழுதி

சீடர்கள் மனசுக்குள் எரிந்துவிட்டு

குதிரை மீதேறிவிட்டார்

குரு.

மழைவழிப் பாதை வழுக்கி

குருவைக் குழிக்குள் தள்ளி

சீடர்களைச் சிந்திக்கவைத்தது

நொண்டிக் குதிரை.

மனதைப் புரட்டிப் பார்த்தனர்

சீடர்கள்.

எடுக்கத் தகுந்தவை பட்டியலில்

பரமார்த்தர் இடைக்கச்சை இருந்தது

பரமார்த்தர் இல்லை.

உரித்துவந்துவிட்டனர்

அவர் துவாராடையை.

ஆத்திர அம்மணத்தில் எழுந்த

பரமார்த்தர்

மறுநாள் நாட்டின் முதலமைச்சராகி

பயண வழிகள் அனைத்தையும்

தூர்க்க ஆக்ஞையிட்டார்.

சீடப்பிள்ளைகளை மந்திரியாக்கி

ஒரு வட்டத்தைப் பாதையாக்கினார்.

நொண்டிக் குதிரை

என்னவாயிற்று?

நீங்களும் நானும்தான்

வாலாட்ட வேண்டும்

கூர்க்காவின்

விசில் வணக்கத்திலும்

நீ இல்லை

 உனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை

திடீரென முளைத்துக் கிளைத்துவிட்டது.

ஒரு குறுஞ்செய்தி தூரத்தில்

இருக்கிறாய் நீ.

என்ன செய்வேன்?

ஓடோடி வந்து

வானத்தைப் பார்க்கிறேன்

மேகத்தைக் கலைக்கிறேன்.

நீ வரும் போகும்

பாதையில் நடக்கிறேன்.

ஒரு திருப்பத்தில் நின்று

போதுமான அளவு காற்றை

உள்ளிழுத்துப் பார்க்கிறேன்.

காலணிகளை உதறிவிட்டு

மரத்தடியில் வெறுங்காலில் நிற்கிறேன்.

உனைப் பார்க்க முடியாத கசப்பு

உருண்டு திரண்டுவிட்டது.

தேநீரை உறிஞ்சி உறிஞ்சி

அதனுள்ளும் பார்க்கிறேன்

ஒன்றிலும் உனைக் காணவில்லை.

பொடிநடையில் வீடு வந்து

மசூதி புறாக்களுக்கு

அறை ஜன்னலைத் திறந்துவிடுகிறேன்.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன்

எல்லோரிடமும் உதவிகேட்கிறேன்.

இல்லை

நீ இல்லவே இல்லை.

காலை 9 மணிக்கு மேல்

வழக்கம்போல உனைப் பார்த்துவிட்டேன்.

உன் குறுஞ்செய்தியில்

நீ இருப்பதுபோல

உன்னிலும் நீ இல்லை.

கதிர் பாரதி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'கதிர் பாரதி' சமகாலத்தில் அதிகம் கவனிக்கப்படும் தமிழ்க் கவிஞர்களில் ஒருவர். "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்", "ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்", "உயர்திணைப் பறவைகள்" ஆகிய கவிதை நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.

1 Comment

  1. மீசை சிசு கர்ப்பத்திலேயே கிளுகிளுப்பைக்கு பதில் பேனா கிளுகிளுப்புடன் சுழல்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.