/

ரமேஷ் பிரேதன் கவிதைகள்

வெட்டவெளியில் நிற்பவள்

விடுதலை என்னும் சொல்லில் மனிதம் இருக்கிறது அதன் மாண்பும் இருக்கிறது. இதுபோன்ற சொற்களைத் தொகுத்து ஆக்கியக் கதையில் நான் வாழப்போகும் வாழ்க்கையைத் தேர்கிறேன். வாழ்க்கையைத் தேர்வுசெய்வதில் தனிமனித விருப்பை அங்கீகரிப்பதே விடுதலை. கதைக்குள் அடங்காத வாழ்க்கை எதுவுமில்லை; கதையில் வரையப்படும் விடுதலையே வாழ்க்கை நிகழ்வாகிறது. எனது வாழ்க்கையை நீ எழுதுவதில் எனது விடுதலை முடக்கப்படுகிறது. எனது உடம்பின் வழி எனக்கான வாழ்க்கையை வரைகிறேன், எழுதுகிறேன், செதுக்குகிறேன், இசைக்கிறேன். எனது வாழ்க்கை எனது உரிமை என்னும் முழக்கத்தை ஓங்கி ஒலிக்கிறேன். எனது உடம்பு எனது நிலம்; எனது நிலம் எனது தேசியம் என்னும் முழக்கத்தை என்னோடு சேர்ந்து எழுப்ப உன்னையும் அழைக்கிறேன். ஒருவரின் இருப்பை மற்றொருவர் அங்கீகரிப்பதே விடுதலையை நோக்கிய முதல் நகர்வு.

ஆபெண் காதலில் காமத்தைவிட அறத்திற்கே முதலிடம் தருகிறேன். உடம்பின் எல்லைக்குள் அடங்குவது காமம்; அதன் எல்லைத் தாண்டி விகசிப்பதே அறம். உடம்பு தாண்டிய எனது இருப்பை உணர்பவரே என்னை அடையமுடியும். உனது பார்வைக்குப் புலப்படாத ஒன்றைத் தேடி முனையுடைகிறது விழைவின் வேட்டைக் கருவி. வெட்டவெளியில் நிற்பவளுக்கு திசைகளே ஆடைகளாகும். எனது அம்மணத்தை உன்னால் தீண்டமுடியாது; புலன்களைக் கடந்த எனது இருப்பை உனது பார்வையால் அளவிடமுடியாது. என்னிடம் இழப்பதற்கு உன்னைத் தவிர வேறெதுவுமில்லாதவனாக இருக்கவேண்டும். காதலின் தன்மை ஒவ்வோர் உடம்பிற்கும் அவற்றின் பாலிற்குமேற்ப மாறுபடும். லிங்கமைய உடம்பால் யோனிமையம் இல்லாதவளைப் புணரமுடியாது.  கலவிக்கான உடம்பிலக்கணத்தை மாற்றி எழுதவேண்டும்.

ஐம்புலன் பொருண்மையை இல்லாமலாக்கி அங்கே புனைவைப் புகுத்தவேண்டும். புனைவின் பாவனை கடவுளைப் படைத்துத் தருவதைப்போல விடுதலையை ஆக்கித்தரும். புலன்கடந்த விடுதலை ஒரு கவித்துவ மெய்யியலைச் சட்டகப்படுத்தும். அன்று என்னைக் கேட்டாய், “உனக்கு எல்லாமே வெறும் பாவனைதானா?”

‘ஆம், எனக்கு மட்டும்தான். நான் எதையும் பொதுமைப்படுத்துவதில்லை. சமூகத்திலிருந்து வெளியேறிய என்னை ஒத்தவர்களுக்காகப் பேசுகிறேன். ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம். இதில் கட்டாயம் ஏதுமில்லை. விடுதலையின் முன்நிபந்தனை எதிலும் கட்டுப்பட மறுப்பது.’

உரையாடலிலிருந்து வெளியேறினாய், திரும்பி வரவுமில்லை, என்னுடன் பயணிக்கவுமில்லை. நடந்துகொண்டிருக்கிறேன்; ஒன்றிலிருந்து இன்னொன்றைக் கடந்து. இரவும் பகலும் ஊர்தோறும் என்னைப் பின்தொடரும் காலடியோசைகள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன; பின்திரும்பிப் பார்த்தால் ஒருவருமில்லை. விடுதலை வேட்கையும் கடவுளைப்போல ஒரு பாவனை எனச் சொல்லி, மீண்டும் தனித்துவிடப்பட்டேன். கால்கள் ஓயும்வரை நடந்துகொண்டிருப்பேன்.

நாய்க்காரச் சீமாட்டி

பகலிலும் இரவிலும் தெரு நாய்கள் என்னைப் பின்தொடர்கின்றன. வியர்வை நெடியால் ஈர்க்கப்பட்டு, நகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திசைமாறிப் பிரிந்தாலும், விரைந்து என்னை மோப்பமுற்றுத் தடங்கண்டுப் பின்தொடர்கின்றன. தசையில் வாய் வைக்காதவரை அவற்றால் எனக்கு இடர்பாடு ஏதுமில்லை. இரவில் சாலையோர சத்திரங்களில் தூங்கும்போது அவற்றின் மூச்சுக்காற்று முகத்தில் சுடும். தொடக்கத்தில் பதறி எழுவேன்; கைத்தடிகொண்டு விரட்டியடிப்பேன். காலப்போக்கில் அதுவும் பழகிவிட்டது. நாய்கள் என்னைச் சுற்றி வட்டமாகப் படுத்துக்கொள்ளும். மூர்க்கத்தனமான ஆண்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்த நாய்களின் அணுக்கம் எனக்குத் தேவைப்படுகிறது.

எப்பொழுதும் என்னைப் பத்து நாய்கள் போகுமிடத்திற்குத் தொடர்ந்து வருகின்றன. சில ஊர்களில் இவற்றின் எண்ணிக்கைக் கூடும் குறையும். குழுவிலிருந்து முதிய நாய்கள் விலகும், புதிய நாய்கள் போகும் வழியில் சேர்ந்துக்கொள்ளும். ஒருபோதும் அவற்றை இடையீடு செய்ததில்லை. பத்து அடிகள் என்னை விலகியே இருக்கும். ஆடை களைந்து ஆற்றில் குளிக்கும்போது, கரையில் எனது உடைமைகளைப் பாதுகாக்கும். யாரேனும் என்னை நெருங்கிவந்தால் குரைத்து விரட்டும். இன்றுவரை நாய்களுக்கு நான் உணவளித்ததில்லை. அவை எங்கு எப்பொழுது எப்படி உண்கின்றன என்பதை அறியேன். என்னிடம் இவற்றின் தேவை என்ன என்பதைப் பொருட்படுத்தி சிந்தித்ததில்லை. இரந்து வாழும் என்னால் நாய்களின் பசிக்கு எப்படி உணவளிக்கமுடியும்?

நேற்றிரவு நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலை இருட்டில் காவல்துறை வாகனம் வழிமறித்தது. என்னை வண்டியில் ஏறச்சொன்னார்கள். மறுத்தேன். எகிறிவரும் நாய்களைக் காவலர் இருவர் கைத்தடியால் அடித்து விரட்டினர். ஒவ்வொருவரையும் வாய்ப்புணர்ச்சி செய்ய என்னை மிரட்டினர். உறுதியாக மறுத்தேன். வற்புறுத்தினர். அதிகாரத் தோரணையிலிருந்து இறங்கிவந்து இறைஞ்சினர். சுற்றி நின்ற நாய்கள் பெருங்குரலெடுத்துக் குரைத்தன.  எங்களைக் கடந்த வாகனங்கள் எதிரெதிர்த் தடத்தில் நின்றுவிட்டன. கூட்டம் கூடிவிட்டது. காவலர் வாகனத்திலேறி விரைந்து மறைந்தனர். நானும் அந்த இடத்திலிருந்து நகர்ந்தேன். என்னைச் சுற்றி நாய்களின் படை அரணமைத்து வழிசெய்தது. இப்படி எப்பொழுதேனும் நடக்கத்தான் செய்கிறது. நாய்கள் இல்லாவிட்டால் என்னால் அவர்களை எதிர்த்திருக்க முடியாது.

இன்று காலை ஓடும் ஆற்றில் நாய்களோடு குளித்தேன். முதன்முறை அவற்றைத் தொட்டு சோப்புப்போட்டுக் குளிப்பாட்டினேன். அவை வெயிலில் நின்று குளிர்காய்ந்தன. நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் வட்டமானச் சிவப்புப் பொட்டுகள் வைத்திருந்தேன். அவற்றை நாய்களின் நெற்றியில் ஒட்டினேன். நாய்களின் ஆண் பெண் வேறுபாடு நீங்கி அனைத்தின் முகத்திலும் பெண் அழகுக் கூடிவந்தது. ஆற்றங்கரையில் என்னைச் சுற்றி நாய்கள் அமர்ந்தன. எனக்கும் அவற்றிற்குமானப் பத்தடி இடைவெளி குறைந்து, பொட்டுவைத்த ஆண் ஒன்று நெருங்கிவந்து எனது மடியில் தலைச் சாய்த்தது.

ஆண் பறவைகளைத் தின்பவள்

தோகை விரித்து ஆயிரம் கண்களால் என்னைப் பார்க்கும் அந்தப் பறவை ஓர் ஆணாய் இருப்பதில் எனக்கு உவப்பில்லை. முட்டையிட்டு அடைகாக்கும் பெண்ணுக்குத் தோகை இடையூறாக இருப்பதால் இயற்கை என்னை மொட்டையாக வளர்த்தெடுத்திருக்கிறது. ஆண் பறவைகள் அழகாக இருப்பதனால் பெரும்பாலும் அவற்றையே எனக்கான உணவாக்கிக்கொண்டேன். என்னுள் பெருகும் பொறாமை ஆண் கொலையை ஊக்கப்படுத்தியது. பறத்தலிலிருந்து விலகி ஆண் கால்நடைகளை வேட்டையாடத் தொடங்கினேன்; அவற்றில் உண்பதற்குச் சுவையானப் பகுதி பாலுறுப்பு என்பதைக் கண்டறிந்தேன். நான் ஊனுண்ணி என்பதிலோ அதிலும் ஆணுண்ணியாக இருப்பதற்கோ வெட்கப்படவில்லை. ஆணாகப் பிறந்த எல்லா உயிர்களையும் தின்று ஆண் வெறுப்பின் உச்சத்தில் என்னுள் பெண்மையைத் தடங்கண்டேன். நான் இப்படி பேசுவதைக் கேட்டு மிரளாதே; நானும் ஆணாகப் பிறந்து பெண்ணாகத் திரிந்தவள். நான் பால் திரிந்ததற்கான மூலக்காரணத்தைப் புரிந்திருப்பாய்; என்னுள் இருந்தப் பெண் வெளியில் ஆணாகி நிற்கும் என்னையே தின்றுவிடுவாள் என்பதனால் எனது புறத்தோற்றத்தையும் பெண்ணாக மாற்றிக்கொண்டேன். ஆணாகவே எனது இருப்பைத் தொடர்ந்திருந்தால் ஒரு கட்டத்தில் என்னையே கொன்று தின்றிருப்பேன். என்னிடமிருந்துத் தப்புவதற்கே இந்தப் பால்மாறாட்ட வேடத்தைப் பூண்டேன்.

ஆணாதிக்கம் அற்பத்தனமானது; பெண்ணாதிக்கம் அருவருப்பானது. ஆதிக்க மனோநிலை பால்நிலை கடந்தது; உயர்திணை, அஃறிணை என எல்லா உயிர்க்கும் பொதுவானது. உயிர்ப்பொருள் யாவும் ஆதிக்க மனவுந்துதலைக் கொண்டவையே; அதுவே அனைத்திலும் இயக்கமாகிறது. ஆதிக்கத்தை அடிப்படையாகக்கொண்ட இயங்கியல் பண்பே உயிர்ப்பொருள் ஒன்றையொன்று வெட்டியும் ஒட்டியும் தம்மை நிலைநிறுத்த ஏதுவாகிறது. ஆண், பெண் இரு நிலைகளிலும் தொடக்கம்முதல் அவற்றின் உச்சம்வரை உழன்றிருக்கிறேன். நான் ஒற்றைப் பாலடையாளத்தில் ஒருபோதும் தேங்கியதில்லை. ஓட்டமும் நடையுமான எனதிருப்பு வேட்டை விலங்கின் இயல்புகொண்டது. என்னைத் தவிர உண்ணத் தகுந்த அனைத்தையும் தின்றிருக்கிறேன். உனது பொருளைக் கவர்ந்து நான் செழித்து வாழ உன்னை வறுமையில் இறக்கவிட்டேன் எனில் நான் உன்னை வெட்டித் தின்றவராவேன் என்று ஓர் அறநூல் சொல்கிறது.

உன்னை முன்னிறுத்தி பேச நினைப்பதை எல்லாம் பேசிவிடுகிறேன். இதுவொரு தொடர் உரையாடல். இது எல்லாவற்றையும் பேசித் தீர்க்கவேண்டியக் காலம். ஆண் × பெண் இருமை எதிரிடையில் நின்று எந்தவொன்றிலும் சார்பு நிலையை எடுக்க முடியாது. பால் பன்மையில் என்னை வசதியாக உணர்கிறேன். உன்னை முன்வைப்பது, என்னை இடப்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது. எனக்குத் தேவையானவை எல்லாம் எனது உடம்பின் வழியே கிடைத்துவிடாது. சமூகமாதலை அறிவு நிலையில் வெறுத்தாலும் எனது உடம்பு அதனோர் அங்கம். விட்டு விலகினாலும் சமூகத்தில் வைத்துத்தான் என்னை அறுதியிடுகிறேன்.  தோழா, உனக்கும் எனக்கும் நடுவிலிருப்பது மொழி; அதுதான் உன்னையும் என்னையும் இந்த மானுடக் கூட்டத்துடன் இணைக்கிறது. தூங்கப்போகிறேன்; எழுந்தவுடன் பேச்சைத் தொடர்கிறேன்.

எங்கே இருக்கிறாய்?

இறந்த காலத்திலிருந்து நிகழ்காலம்வரை அவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்துத் தப்பித்து வரலாற்றில் எங்கோ ஓரிடத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறான்.

அவனால் என்னைச் சுமக்கமுடியவில்லை. காதல் என்னும் உணர்வு, பருப்பொருளைவிட கனமானது, அதை இறப்பின் எல்லைவரை சுமந்துச் செல்ல இயலாதபோது அதனிடமிருந்து விலகிப் பதுங்கிக் காலத்திலிருந்துத் தொலைவதே எளிய வழி.

பெரும் பாறை ஒன்று கிழக்குக் கடலில் படகு நிலைக்குமிடத்தில் மூழ்காமல் கிடக்கிறது. முதுகில் சுமந்துவந்து கடலில் போட்டவன் அதில் எனது பெயரைச் செதுக்கியிருக்கிறான்.

என் காதல் அத்தனைக் கனமாவெனக் கலங்கினேன். சுமக்கமுடியாத பாரத்தை விரும்பிச் சுமப்பதை நான் ஏற்பதில்லை. அன்பின் நிமித்தம் உருவாகும் வல்லாதிக்கம் அறம் வழுவி வன்முறையில் முடியும்; அதைத் தவிர்க்கவே கைக்குலுக்கி முத்தமிட்டுப் பிரிய காலத்தில் முன்னும் பின்னும் பயணித்து அவனைத் தேடுகிறேன்.

எனக்குத் தெரியும்; என்னை இச்சிப்பது ஓர் ஆணுக்குத் தற்காலிக விழைவாகத்தான் இருக்கமுடியும். கண்ணில் தூசு விழுந்து உறுத்திக்கொண்டிருப்பதைப்போல நிர்வாணம் செய்யப்பட்டு எனது உடம்பில் புதைக்கப்பட்ட ஆண்குறி, என்னை இணையும்போது அவனை ஊடாக நுழைந்து அறுத்துக்கொண்டேயிருந்திருக்கும்.

உடம்பைக் கடந்த காதல் என்பதைச் சொல்லிப்பார்க்கக் கவித்துவமாக இருக்கும்; ஆனால், பழகப்பழக அலுத்துவிடும். எதிர் பாலுறவில் உறுத்தலில்லாமல் அமைவதே முயற்கொம்பாகும்போது பால் பிறழ்ன்ற உடம்புடன் கொள்ளும் உறவில் உயிர்க் கொல்லும் திருகல் உண்டாவது இயல்பே.

பேசிப் பிரிவதில் மன அழுத்தம் விலகும். அவனுடன் பேசிப் பிரியத்தான் காலவெளியில் பைத்தியம்போலத் தேடித் திரிந்து, நிலவெளியில் மனித நடமாட்டமில்லாத ஊருக்கு வெளியே தனித்திருக்கிறேன்.

இதே அழுத்தம் அவனுக்குள்ளும் இருக்கும். ஒருநாள் என்னைத் தேடிவருவான். அவன் என்னை எதிர்கொள்ளும் நாளில், நான் இந்த உடம்பைக் கிழித்து எறிந்துவிட்டு அவனால் அடையாளம் காணமுடியாத வேறொன்றை உடுத்தியிருப்பேன். புற அடையாளம் குழம்பி என்னை மோப்பமுற்று பின்தொடர்வான். எனது வழி கடலுக்குச் செல்லும். மோதும் அலைநடுவே மூழ்காமலிருக்கும், அவன் தூக்கிச் சுமந்து கைவிட்டப் பாறைமேல் அமர்வேன்.

எனது அடையாளம் உறுதிபட நெருங்கிவந்து காலடியில் நிற்கும் அவனை அலையில் அமுக்கிக் கொல்லலாம், தாவிக் கட்டிக்கொண்டு கதறியழலாம், என்னுடன் சேர்ந்து வாழ இனி இது உனக்குத் தேவையில்லை எனச் சொல்லியபடி குறுங்கத்தியால் குறியை வெட்டிக் கடலில் எறியலாம், நான் அவளில்லை எனக்கூறி அவனை விரட்டியடிக்கலாம், கொலைக்கும் தற்கொலைக்கும் நடுவில் அவனை நிறுத்திப் பைத்தியமாக்கலாம்.

காலமெல்லாம் உன்னுடன் கண்ணாமூச்சி விளையாட ஆசைப்படுகிறேன். இந்தப் பரந்த நிலத்தில் ஐந்திணைகளிலும் ஐம்புலன்களைப் பதுக்கி உன்னுடன் ஆடும் விளையாட்டில், மிச்சக் காலத்தையும் என்னைக் கண்டுபிடிப்பதிலேயே நீ செலவிடவேண்டும்.

கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் என்னைக் கண்டடையும் எத்தனமே உன்னை ஆட்கொள்ள வேண்டும். இறுதிவரை என்னைத் தீண்டமுடியாதப் பரிதவிப்பில் நீ வெம்பி வெம்பி இறப்பதை நான் ஒளிந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற அறிதலோடு உனது உயிர்ப் பிரிவதை என்னுள் வாங்கவேண்டும். தோழா, நீ எங்கே இருக்கிறாய்?

கழுமர நிழலில்

எங்கிருந்தோ எழும் தூரத்துப் பறவையின் அகவல்; இந்தப் பரபரப்பான நகரத்தில் தனக்கும் இடமிருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. இடைத்தளத்தின் சாளரத்தின் வழியே பார்க்கிறேன்; எட்டியத் தூரம்வரை ஒலியின்றி நகரும் வாகன வரிசை. ஆங்காங்கே கொத்துக்கொத்தாகப் பச்சையத் திட்டுகள். பறவையின் ஓசைமட்டும் வெயிலில் மிதந்துவந்து செவிகளில் படிகிறது. கூர்ந்து கவனித்தால் என்னைச் சுற்றிப் புதைந்தக் காட்டின் மிச்சம்மீதி பார்வைக்குப் புலப்படாமல் இன்னும் உயிர்த்திருப்பது தெரிகிறது. இந்தக் கோடை நடுப்பகல் பறவையின் குரல்வழியே குருதிச் சாரலைத் தூவிக்கொண்டிருக்கிறது. வறண்ட உள்ளத்தை ஊடறுத்து செவ்வோடை ஓடுகிறது.

கடலில்லாதப் பெருநகரம் எப்பொழுதும் தனக்குள் வன்முறை வெறியாட்டத்தை மூடிமறைத்து இயல்பாக இருப்பதைப்போல நடித்துக்கொண்டிருப்பதான ஓர் எண்ணம் எனக்குள் பீதியை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். எனவே, கடலில்லாத நகரங்களுக்குச் செல்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். கடலெனும் மாபெரும் இருப்பின் முன் மனிதர் சிறுத்துப் பொருளிழந்துப்போவது காரணமாக இருக்கலாம். மனிதர் மட்டுமே இருக்கும் இடத்தில் என்னால் இயல்பாகப் புழங்கமுடியாது; அங்கு, ஆறு, ஏரி, குறும்புதர்க் காடு என ஏதாவதொன்று இருத்தல் வேண்டும்; அவை, மனித வன்முறையை வலுவிழக்க வைக்கும்.

நகர அழுத்தத்திலிருந்து விலகி இளைப்பாறும் இடமாக ஒரு காலத்தில் கோயில் இருந்தது. கடவுளை மனிதர் கைவிட்ட நிலையில், கோயில் அரசியலதிகார நடுவமாக மாறிவிட்டது. அங்கு, ‘கடவுள்: செய்முறை விளக்கக் கையேடு’ அச்சடித்து விற்கப்படுகிறது. இன்றையச் சமூகத்தில் கடவுளைப்போலப் பொருளிழந்தவொன்று வேறில்லை. கோயிலின் கருவறையில் கழுமரம் நிற்கிறது. அதன் உச்சிக் கூர்மையில் ஆசனவாய் சொருகப்பட்டத் தோகைமயிலின் அகவலை நகரத்தின் மூலைமுடுக்கெல்லாம் காற்று ஏந்திச்செல்கிறது. வந்த வேலை முடிந்ததும் இந்த நகரக் கொலைக்களத்திலிருந்து உடனே வெளியேறவேண்டும்.

குருதி கசியும் சொற்களால் எனது மனவோட்டத்திற்கு உருவம் வரைகிறேன். சீதள மதுவும் பாலைப் பொருட்படுத்தாத உடனிருப்பும் இப்பொழுதே வேண்டும். முந்நூறு மைல் தூரத்தில் மிதக்கும் எனது கடற்கரை குடிலுக்குச் செல்லவேண்டும். அந்நகரத்தில் எனக்கென்று யாருமில்லை என்றாலும் இரவும் பகலும் விழித்திருக்கும் கடல் எனக்காகக் காத்திருக்கிறது. உடலுறவைவிட கடலுறவே என்னைத் திளைக்க வைக்கிறது.  என்னை ஏற்றிக்கொண்ட வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் விரைகிறது. நடுயிரவில் ஊரைச் சென்றடைவேன். அங்கே, கிழக்கில் நீராலானப் பேரிருப்பு எனக்காக அம்மணமாகப் படுத்துக் கிடக்கிறது.

எதிர்கொள்ளல்

முகநூல் வழியே எனக்கு அறிமுகமான ஆபெண் கவியைச் சந்திக்க ஃபிரெஞ்சு பின்காலனிய நகரமான பொந்திஷேரிக்குச் சென்றேன். அங்கே வெள்ளை நகரப் பகுதியில் வாழ்ந்துவந்தாள். ஓரிடத்தில் வாழ்வதற்கும் வசிப்பதற்கும் வேறுபாடுண்டு என்பதை அவள் விளக்கத்தில்தான் தெளிந்தேன். மாலை ஐந்து மணிக்குக் கடற்கரை காந்தி சிலை அருகில் காத்திருப்பேன் என்றாள். காலையிலேயே சென்றுவிட்டேன். அவளைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நான் வந்துவிட்டச் செய்தியைச் சொன்னேன். மகிழ்ச்சி, மாலைவரை ஊரைச் சுற்றிப்பார் என்றாள். கடற்கரை சாலையில் வடக்குக்கும் தெற்கிற்கும் திரிந்துகொண்டிருந்தேன். மதியம் மாட்டுக்கறி வறுவலுடன் மீன்கொத்தி பீர் பருகினேன். கவிஞர்களின் நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் வேறு யாருடனும் எனக்குப் பழக்கமில்லை. பரிதி மேற்கில் சரிந்துகொண்டிருந்தது. தெற்கிலிருந்து காந்தியை நெருங்கும்போது, அவள் குறித்த நேரத்தில் காத்திருப்பதைக் கண்டேன். இவள் பெண்ணானவன் என்பதை நம்பமுடியவில்லை. புகைப்படத்தில் இத்தனைத் தெளிவும் அழகும் துலங்கவில்லை.

கடற்காகம் என்ற கடற்கரையோர மதுவகத்தின் மொட்டைமாடியில் கடலைப் பார்த்தபடி அமர்ந்தோம். வெள்ளொயின் பருகிக்கொண்டே கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். இடையிடையே வறுத்த முந்திரியைக் கொறித்துக் கொண்டிருந்தேன். கடலும் வானும் இணையும் கோட்டிலிருந்து நிறைமதியம் கண்கொள்ளாமல் எழுந்தது. நிலவொளி அவள் முகத்தில் மஞ்சளாக வழிந்தது. அவள் நிலவிலிருந்துத் தனது பார்வையை நகர்த்தவில்லை. எங்கள் இருவருக்குமிடையே நிலவின் இருப்பு மெளனமாக, நிறைவாக, வெளிச்சமாக இருந்தது. எனது வீட்டின் மேல்மாடத்திலிருக்கும் கற்றாழையின் இருப்பு தனிமையின் வெறுமையை நிறைத்துவிடும். பூக்காதத் தாவரமாகவிருந்தாலும் அதன் பச்சை நிறம் உயிருள்ள உடனிருப்பை ஈடுசெய்துவிடும். இருவருக்கும் நடுவில் மதுவால் நிரப்பமுடியாத வெற்றிடத்தை நிலவு நிறைத்தது. இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தாள். சிகரெட்டைப் பற்றவைத்து பெட்டியை என் பக்கம் நகர்த்தினாள். எனக்குப் புகைக்கும் பழக்கமில்லை என்பதால் மதுவை மட்டும் அருந்திக்கொண்டிருந்தேன்.

எதிரிலிருக்கும் எனக்குக் கைப்பேசி வழியே குறுஞ்செய்தி அனுப்பினாள், “நான் போகிறேன். விரைவில் வேறொரு நாளில் சந்தித்துப் பேசுவோம். வந்ததற்கும் இன்றைய மாலையை என்னோடு பகிர்ந்துகொண்டதற்கும் நின்றி தோழர்.”

நானும் உடனே பதிலனுப்பினேன், ‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி தோழர்.’

பரிமாறியவரைச் சைகையால் அழைத்து, பணத்தைக் கொடுத்து கணக்கை முடித்துவிட்டு எழுந்து நின்றாள். நானும் எழுந்தேன். கைக்குலுக்கிவிட்டுப் படியிறங்கினாள்.

மீண்டும் கடற் சாலையில் நடக்கிறேன். கூட்டம் கலைந்து வெறிச்சோடிய சாலையில் அலைகளின் இரைச்சல். நானொரு திருநம்பி என்பதைக் கண்டுகொண்டாளா எனத் தெரியவில்லை. நாளைய கவிதையில் அவள் என்னைக் குறிப்பிடுவாளா? பொறுத்திருந்து அறிவோம்.

மழை இரவு

தூரத்தில் மின்னுகிறது. இந்த இரவில் இருட்டிக்கொண்டுவரும் ஈரமுகிலின் அடர்த்தி உடைந்து உச்சியிலிருந்து பொலபொலவென எந்நேரத்திலும் தலையில் கொட்டலாம். மழைக்குமுன் எதிர்வரும் சிற்றூருக்குச் சென்றுசேரவேண்டும். இழப்பதற்கு எதுவுமில்லாதவளுக்கு எங்கேனும் எப்படியேனும் இந்த மழையைத் தவிர்த்து ஒதுங்குவதற்கு ஓர் இடம் கிடைத்துவிடும். யோனி இல்லாதவளுக்கு வழியில் பயமில்லை என்று மூதாய் ஒருத்தி சொல்வாள். ஆம், இக்கூற்று என்னை நானே துணிந்து இடம்பெயர்க்க உதவியாக இருக்கிறது. பெண்ணுடம்பின் ஆகப்பெரும் சுமையான பாலுறுப்பு இல்லாதிருப்பதின் விடுபடலின்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் அம்மா இடுப்புக்குக் கீழே வதைப்பட்டுச் செத்ததை, சிறுவனாக உடனிருந்து பார்த்து வளர்ந்தவன்; அதனாலேயே பெண்குறி இல்லாதப் பெண்ணாக உருவெடுத்தேன். சுழலும் நிலத்தின் நடுப்புள்ளியாக யோனி இருப்பதைச் சுட்டிக்காட்டினால் எல்லோரும் என்னை வெறுப்போடு பார்ப்பார்கள். தூரத்தில் மின்னுகிறது; மழைக்குமுன் எதிர்வரும் ஊரில் நனையாமல் ஒதுங்கவேண்டும்.

மழை என்ற சொல்லுக்குள் நெல் முளைக்கும் என்று அம்மா மழைவரும்போதெல்லாம் சொல்வாள். மழைக் கிளர்த்தும் மண்வசனையில் அம்மா தட்டுப்படுவாள். வன்கொடுமையைத் தாங்கித் தாங்கி வறண்ட அம்மாவின் உடம்பை மழைத் தீண்டும்போது அதில் நாற்று முளைத்தெழும். அம்மணத்தில் பச்சைப் பசேலென இருப்பாள். தவழும் காற்றில் கழனியில் நாற்று சிலிர்ப்பதைப்போல மின்விசிறியில் ஈரம் உலர்த்துவாள். நடுயிரவில் யார் கண்ணிலும் படாமல் மழையைப்போல அழுவாள். ஒரு கண்ணால் தூங்கிக்கொண்டு மறுகண்ணால் விழித்திருந்துப் பார்ப்பேன்.   இரவில் தட்டப்படும் கதவுக்குப் பின்னே ஆண்குறி கொடுவாளைப்போல விடைத்து நிற்கும். இரவு மழை கூரைமீது இரைச்சலிடும். மழை ஓய்ந்தப் பிறகு நடுயிரவானாலும் குளித்துவிட்டுத்தான் படுக்கைக்கு வருவாள். கூந்தல் உலர்ந்துவிட்டாலும் கண்களில் ஈரம் காயாமலிருக்கும்.

மின்னும் இரவுக்குள் சாம்பல்நிற வானம் அம்மாவின் பிணத்தைப்போலக் கனக்கிறது. ஊரெல்லையில் நின்று நாய்கள் குரைக்கின்றன. ஊரின் மறைபொருள் நாய்களுக்குத் தெரியும். எனது வேகநடையைக் கொஞ்சதூரம் பின்தொடர்கின்றன. அவற்றைப் பொருட்படுத்தக்கூடாது. ஊரிலுள்ள இரவுநேர ஆண்கள் நாய்களை வெறுக்கிறார்கள். பெண்களுக்கு அணுக்கமான உளவாளிகளாக நாய்கள் இருக்கின்றன. நாயை நேசிக்கிறேன். பெண் நாயாக இருந்தாலும் அதன் ஆண்குணம் பால் கடந்தது. மழை சடசடவெனக் கொட்டுகிறது. ஓட்டமும் நடையுமாக பிறை ஓடு வேய்ந்த வீட்டின் திண்ணையில் ஒதுங்குகிறேன். மழையின் மூர்க்கத்தால் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. எதிர்வீட்டுச் சாளரவெளிச்சமும் மழையால் அடைக்கப்பட்டது. மழை வலுவாகப் பெய்துகொண்டிருக்கிறது.  மழையின் மறுபெயர் வலி; அதில் அம்மாவின் குருதி இழையோடும். வீட்டுத் தெருக்கதவின் உள்தாழ்ப்பாள் அவிழும் ஒலி மழையை மீறி கேட்கிறது.

துறவி

பொழுது நடுயிரவைத் தாண்டிவிட்டது. கோயில் கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. கிழக்கு வாசல் இருண்டுகிடக்கிறது. இரவலர் குளக்கரை மண்டபத்தில் தூங்குகிறார்கள்.  செங்கழுநீராளின் நேர்க்குத்துப் பார்வையில் கடல் நனைவது தடைப்பட்டிருக்கிறது. அலைகளில் கால்கள் புதைய கரையோரத்தில் நின்று கீழ்வானில் பார்வை நிலைக்குத்த வெறிக்கிறேன். அம்மன் விழிப்பதற்குள் வீராம்பட்டினத்திலிருந்து வெளியேறவேண்டும். அவள் கண்ணில்பட விருப்பமில்லை.

 பிறந்து எட்டு மாதங்களில் எட்டடிகள் எடுத்துவைத்து நடந்த கால்கள் இன்றுவரை ஓரிடத்தில் ஓய்ந்தப்பாடில்லை. அடைபட மறுக்கும் உடம்பு ஓரிடத்தில் நிலைப்பதில்லை. தூங்கும்போது மட்டுமே இந்த உடம்பு தனது இயக்கத்தை நிறுத்துகிறது. விழிப்பில் நடந்துகொண்டேயிருக்கும் உடம்பு என்னை ஓயவிடுவதில்லை. ஊரைத் தாண்டி கடலூர் நெடுஞ்சாலையில் நிற்கிறேன். என்னைக் கண்டு பேருந்து நின்றதும், அதில் ஏறிக்கொள்கிறேன். ஈரக்காற்று அசைகிறது.

நான்கு சாலைகளின் சந்திப்பில் இறங்கிக்கொண்டேன். புறநகர் பகுதி; இறங்கிய இடத்திலிருந்து கோயில் மணியோசையெழும் திசைநோக்கி நடக்கிறேன்.  இந்தச் சாலையின் இருமருங்கிலும் வேப்பமரங்கள் வரிசையாக நிற்கின்றன. புளியமரங்களையே பார்த்துப் பழகியக் கண்களுக்கு வேம்பின் அணிவரிசை அழகாக இருக்கிறது. வழித்துணைக்கு மரங்களிருந்தால் போதும், பேசிக்கொண்டே நடந்துவிடலாம். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் என்னை அரிய விலங்கினம்போலப் பார்க்கிறார்கள். செல்லும் வழியில் குறுக்காகக் கடக்கும் இருப்பூர்தி, எதிர்ப்படும் குரங்கு, கடந்துசெல்லும் கோயில் யானை போன்றவற்றைப் பார்ப்பதைப் போலவே ஊரைக் கடக்கும் திருநங்கையையும் பார்க்கிறார்கள்.

வாழ்க்கையைக் கடந்துசெல்பவளை ஊரைக் கடந்துசெல்பவளாகப் பார்க்கிறார்கள். எல்லோர் வாழ்க்கையும் ஓரிடத்தில் சந்திக்கும் பொதுப் புள்ளியிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கும் என்னை இடப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். யாரிடமும் எனக்கான இடத்தைக் கேட்டுப்பெற விரும்பவில்லை. நான் அனைத்திலிருந்தும் விலகியிருக்கவே விழைகிறேன். நாள்தோறும் கதவைத் திறந்துப் பார்த்து வணங்கிவிட்டு மீண்டும் கதவை அடைத்துவிட்டுப் போகிறாரேயொழிய யாரொருவரும் செங்கழுநீராளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப்போவதில்லை. அம்மனைப் போலவே நானும் ஊரிலிருந்தாலும் ஊரைவிட்டு ஒதுங்கியே இருக்கிறேன்.

மதியம் ஒரு கோயிலில் சோறு கொடுத்தார்கள்; வாங்கிச் சாப்பிட்டேன். நானே விரும்பியேற்ற இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. நாடோடியாகத் திரிவதை நண்பர்களும் தோழிகளும் விமர்சிக்கிறார்கள். சமூகக் கடப்பாடின்றி பேசும் விலங்காக வாழ்வதில் யாருக்கும் இழப்பில்லை. இதுவும் ஒரு துறவுநிலை. போகும் திசையெல்லாம் கோயில்கள்; அங்கே, பசிக்கு உணவும் குளக்கரை உறக்கமும் இந்த வாழ்க்கைக்குப் போதுமானவை. கோயிலிருக்க உறங்கியெழ சொந்தக் கூரை எதற்கு?

மூன்றாவது கண்

நாளின் தொடக்கத்தையும் முடிவையும் பரிதியை முன்வைத்தே அறுதியிடுகிறேன்; இதற்கு மாற்றாக வேறொன்றை நிறுவும் எத்தனிப்பில் மதிக்கலங்கித் தவிக்கிறேன். எனது உடம்பின் இயக்கத்தை முன்வைத்து நாளின் தொடக்கத்தையும் முடிவையும் நிறுவ முனைகிறேன். இது எனக்கு மட்டுமேயானக் காலக் கணக்கீடு. இதைப் பொதுவில் வைக்கப்போவதில்லை. எனது உடம்பில் செயல்பட்டு வாழ்க்கையை வழிப்படுத்தும் இயற்கையின் இயக்கக் கதியை மாற்றிப் பொருள்கொள்ள, உடற்புலன்களைத் தம் இயல்புமாற்றிக் கட்டமைக்கப்போகிறேன். எல்லோரையும் போல உயிருள்ள அச்சுபொம்மையாக, வரையறுக்கப்பட்ட வெளியில் ஒத்தத் தாள அசைவுக்கேற்ப வழிக்காட்டி மரம் சுட்டும் திசையில் என்னால் இறப்பை நோக்கிப் பயணிக்க முடியாது.  குமுகாயப் பொதுமை நோக்கில் நிறுவப்பட்ட அனைத்தி லிருந்தும் வெளியேறுகிறேன். ஒன்றை முரணி நிற்பதில் பொருள் நிறைவு கொள்கிறேன். நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும் மீன் தூண்டில் புழுவைக் கடிப்பதில்லை.

விழிப்பில் தொடங்கும் எனது நாளை உறக்கத்தில் பதுக்கிவைக்கிறேன். உறங்கும் நேரம் எனது வாழ்நாள் கணக்கில் சேராது. விழிப்பில் மட்டுமே உயிரோடிருப்பதால் உறக்கத்தில் இறப்பது வாழும்காலத்தில் வெற்றிடமாகத் துலங்குகிறது. இதன்மூலம் வாழ்நாளை நீட்டித்து இறுதி நாளைத் தள்ளித்தள்ளிப் போடுகிறேன். உறக்கத்தில் பதுங்கி இயற்கையோடு விளையாடும் கண்ணாம்மூச்சியில் கடவுளையே திகைக்க வைக்கிறேன். பிறப்பில் விதிக்கப்பட்ட பாலடையாளத்தை மீறும் பாவனையில் ஆணான நான் சில காலம் பெண்ணாகவும் வாழ்ந்தேன். எழுதப்பட்ட ஆண் இலக்கணத்தை மாற்றிப் பெண்ணாக வாழ்ந்தபோது அறிந்தேன், எனது ஆணாதிக்க மனம் உடம்பில் பால்மாறினாலும் மாறாது என்பதை. கடந்த மாதம் ஆணாகயிருந்தேன்; இந்த மாதம் பெண்ணாகயிருக்கிறேன்; இருப்பினும் ஆணுடம்பைக் கடக்க முடிந்த என்னால் ஆணுள்ளத்தைக் கடக்க இயலவில்லை.

வெட்டவெளியில் நீந்தத் தொடங்கிய நீருயிரி ஒரு பறவையைப் பின்தொடர்ந்துத் தானும் மரக்கிளையில் தொத்திக்கிடந்த, கைவிடப்பட்டக் கூட்டில் முட்டையிட்டுக் குஞ்சுப் பொரித்தது. ஒருநாள் குஞ்சுகளோடுப் பறந்து ஆற்று நீரில் மூழ்கிப் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்தது. நானும் இந்த மீனைப் பார்த்துத்தான் இப்படி வாழ என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேனா, தெரியவில்லை. நீரிலும் நிலத்திலும் வாழப்பழகிய உயிரியைப்போல் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே உடம்பில் வாழப்பழகிக்கொண்டேனா? என்னும் கேள்வியோடுதான் தொடர்கிறேன். நான் யாராகயிருக்கிறேன் எனத் தெரியவில்லை.  வெளியில் நிற்பவளை உள்ளே இருப்பவன் கொல்லத் துடிக்கிறான். உள்ளே நிற்பவன் முகத்தில் வெளியிலிருப்பவள் காறித்துப்புகிறாள். நான் யாரையும் சார்ந்தில்லை. இயற்கையின் கட்டமைப்பை மீறும் நான் எனக்குக் கட்டுப்படுவேனா?   முகத்தின் இரு கண்களை ஆளுக்கு ஒன்றாக அவனும் அவளும் எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் பார்க்கின்றனர். மூன்றாவது கண்ணால் என்னை மருட்சியோடு பார்க்கிறேன்.

பகல் என்னைத் திறந்துவைக்கிறது

விலங்கினத்தில் இரவை எதிர்கொள்ள அச்சப்படுவது மனிதரைத் தவிர வேறில்லை; நானோ இரவை வரவேற்கிறேன்; அது என்னை மூடிவைத்துப் பாதுகாக்கிறது; மாறாக, பகல் என்னைத் திறந்துவைக்கிறது. பகலில் தெருநாய்கள் துரத்துகின்றன; காகங்கள் தொடர்ந்துவந்து தலையில் கொத்துகின்றன. உணவுத் தேடி இரவில் வெளியே செல்கிறேன். உறக்கங்கெட்ட நாய்களின் பற்கள் கெண்டைத் தசையில் பதிந்து தடித்த இரவின் தோல் கிழியும்; ஆனால், எனக்குக் காயம்படாது. பகல் என்னை நீர்த்துப்போகச் செய்கிறது; எப்பொருளுடனும் இரண்டறக் கலந்து தன்னிலை இழக்கிறேன். இரவு என்னைத் திடமாகக் கட்டமைக்கிறது.

இரவின் அழகு பகலுக்கில்லை. இரவு தனது அழைகையெல்லாம் எனக்குக் கொடுக்கிறது; அதன் மறைபொருள் என்னை மேன்மைச்செய்கிறது. இரவின் இருப்பை மேம்போக்காக இருட்டு என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிடுகிறார்கள். விடியும்வரை தனது நிறத்தை இரவு மாற்றிக்கொண்டே இருக்கிறது. அதன் நிறமாறுபாடுகளை உறங்கும் மனிதர் பொருட்படுத்துவதில்லை. நான் இரவை அணிகிறேன். எனது உடம்பின் நிறமாறுபாட்டின் துல்லியத்தை மணிதோறும் மனத்தில் குறித்துவைத்திருக்கிறேன். இரவின் கவித்துவம் ஆண்மையைப் பெண்மைசெய்கிறது. எனது ஆண்மைக்குள் பெண்மையைத் தொட்டுணர்கிறேன்.

நான் இரவுடன் பகலை ஒப்பிடவில்லை. பகலுக்கு என்மேல் ஒவ்வாமை உண்டு; பகல்மேல் எனக்கு எந்தவகையிலும் ஈடுபாடில்லை. இது என்னுடைய தனிப்பட்ட மனப்போக்குத்தானே தவிர அதன்மீது எனக்கு எந்தவொரு புகாருமில்லை. பகல் என்னைத் திறந்துவைக்கிறது என்று சொன்னேன்; ஆம், அப்படி நான் உணர்வதற்குப் பகலைப் பொறுப்பாளியாக்க முடியாது. பகலை நான் வெறுப்பதுகூட அதற்குத் தெரியாது. மனிதவுலக இயக்கத்தை வழிநடத்திக்கொண்டிருக்கும் பகலுக்குத் தலைக்குமேல் ஆயிரம் கடப்பாடுகளுண்டு; இரவுக்கு அப்படி எதுவுமில்லை. அதுவோர் எருமை; தன் போக்கில் தான்செல்லும் அது என்னை ஆட்கொண்டுள்ளது.

விண்மீன்கள் நீந்தும் தடாகத்தில் இறங்குகிறேன்; நீந்திக் கரைத்தொட முடியாதப் பேரிருப்பு. கைக்கால்கள் அசந்துவிட்டன; இருந்தாலும் தரிக்க இடமின்றி நீந்திக் கொண்டிருக்கிறேன். உடம்பு கட்டவிழ்ந்து உறுப்புகள் ஒவ்வொன்றாக இணைப்புவிட்டு நீரில் அசையாமல் மிதக்கின்றன. இருப்பினும் நான் நீந்துவதை நிறுத்தவில்லை. கைகள், கால்கள், தலை எல்லாம் கழன்றுவிட, மார்பும் அடிவயிறும் இணைந்தப் பகுதி நெகிழி பொம்மையின் உடல் பகுதியைப் போல மிதக்கிறது. நீந்திப்போகும் நீர்ப்பாதை நெடுக உறுப்புகள் மிதக்க நான் இன்னும் நீச்சலை நிறுத்தவில்லை. எனது உள்ளுணர்வு கரையைத்தொட கைகளும் கால்களும் இல்லாமல் நீந்திக்கொண்டிருக்கிறது. விடியலில் குளிக்கக் குளக்கரைக்கு வந்தேன்.  கை, கால், தலை எல்லாம் இழந்த பொம்மை உடல் ஆடையின்றி மிதக்கிறது. உற்றுப் பார்த்தேன்; அதற்கும்  இடுப்புக்குக்கீழ் என்னைப்போல் பால்குறி இல்லை.

ரமேஷ் பிரேதன்

'ரமேஷ் பிரேதன் தமிழில் எழுதிவரும்  முக்கியமான மீபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். இருபது ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.