/

கறை – கல்பற்றா நாராயணன்

தமிழில் : அழகிய மணவாளன்

வெறுப்புதான் எம்.டி.வாசுதேவன் நாயரின் நிலையான உணர்வுநிலை. ஆனால், மலையாளிகளுக்கு மிகமிக பிடித்தமான எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர்தான். நியாயப்படி, இவ்வளவுதூரம் சுய இழிவை எழுதி தொந்தரவு செய்யும் எம்.டி,வாசுதேவன் நாயரை வாசகர்கள் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், வாசகர்கள் (மிக அந்தரங்கமாக) அவரை மனமார ஏற்றுக்கொண்டார்கள். எம்.டி.வாசுதேவன் நாயரை வாசித்த அன்றுதான் நீங்கள் உங்கள் முகத்தின் மிகமிக அவலட்சணமான கோணத்தை முதன்முதலில் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். ஆனால், எம்.டி.வாசுதேவன் நாயர் உங்களுக்கு அளித்த அந்த அசல் கண்ணாடியை உங்களால் அருவருக்கமுடியாது. நுண் விவரணைகளுடன் வெளிப்படும் அந்த ஆடிப்பிம்பத்தை உங்கள் தனிவாழ்க்கையில் அவ்வளவாக எதிர்கொள்ளவும் முடியாது.

உவப்பில்லாத விஷயங்களை மட்டுமே எழுதிய எம்.டி நமக்கு மிகமிக உவப்பானவராக ஆகிவிட்டார். எம்.டி.வாசுதேவன் நாயரின் புனைவுலகம் எந்தவிதமான நேரடி ஆசுவாசத்தையும் அளிக்காத தனித்தீவு போன்றது. ஆனால் தனியர்கள் தங்களில் அந்தரங்கமாக உணரும் குற்றவுணர்வை பகிர்ந்துகொள்வதற்கான தணியாத விழைவுடன் அந்த தீவிற்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். குற்றம் செய்தவனை பொறுத்தவரை அவன் மட்டுமாக எஞ்சும் தனித்த தருணங்களை கொஞ்சம்கூட அவனால் தாங்கிக்கொள்ளமுடியாது. ஆனால் எம்.டி வழியாக அந்த தாளமுடியாமையை அனுபவிக்க குற்றவாளிகள் விழைந்தனர். தனித்தவர்களின் எழுத்தாளரான எம்.டி என்ற தனியர் வேறு யாரிடமும் பகிராத சிலவற்றை அவர்களுக்கு பகிர்ந்திருக்கவேண்டும். பலருக்கு எதிர்கொள்ளமுடியாத உண்மை மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதை நமக்கு காட்டியது எம்.டி.வாசுதேவன் நாயர்தான்.

எம்.டி. நமக்கு பருகக்கொடுத்தது கொடுத்தது கடும் கசப்பான திரவத்தைதான். எம்.டியின் புனைவுகள் நிகழும் காலகட்டத்தில் எந்த நேரடியான சுவையிலும், கொண்டாட்டங்களிலும் விருப்பமில்லாதவர்கள் நிறைந்திருந்தனர். அந்த மனங்களின் கூட்டான விருப்பமின்மையை எம்.டி. தன் புனைவுகள் வழியாக வெளிப்படுத்தியிருக்கலாம். அவர்களை பொறுத்தவரை சில காயங்களை ஆறாமல் பார்த்துக்கொள்வது அவசியமானதாக இருந்திருக்கவேண்டும், காயம் ஆறிவிட்டால் அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாகும்படியான நிலை. வாழ்க்கையின் மிக மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களை சித்தரித்தது இருத்தலியல் எழுத்தாளர்கள் அல்ல, இவான் இலியச்சின் மரணம் என்ற குறுநாவலை எழுதிய டால்ஸ்டாய்தான். அதேபோல, மலையாள இலக்கியத்தில் அசலான இருத்தலியல் துயரத்தை எழுதியது எம்.டி.வாசுதேவன் நாயர்தான், இருத்தலியல்வாதிகள் என்று அறியப்பட்ட எந்த மலையாள எழுத்தாளருமல்ல. இருத்தலின் வெம்மையில் தகித்தபடியே எழுதிய எம்.டி.வாசுதேவன் நாயர் கழுத்துவரை உமித்தீயை உருவாக்கி அதன் நீற்றலில் காவியம் பாடிய சுகுமாரகவியைப்போல1. எம்.டி வாசுதேவன் நாயரின் ‘காலம்’ நாவலில் ” சேதுவிற்கு சேதுவை மட்டும்தான் பிடிக்கும்” என்ற வரியை வாசித்த நாள் முழுக்க நான் நிம்மதியிழந்திருந்தேன், அது ஏன் என்று ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். எப்படிப்பட்டவர் எம்.டி.வாசுதேவன் நாயர்? போலியான ஆசுவாசங்களிலிருந்து விடுபட்டபடி வாசகர்கள் அவரை வாசித்ததன் காரணம்தான் என்ன?

எம்.டி. வாசுதேவன் நாயரைப்பற்றி ஒரு உரையாற்ற வேண்டியிருந்ததால் அவரது சில சிறுகதைகளை மீண்டும் வாசித்தேன். அதில் இருட்டின் ஆன்மா சிறுகதையை2 மீண்டும் வாசித்தது என்னை ஆழமாக பாதித்தது.

இருட்டின் ஆன்மா சிறுகதையை நான் மீண்டும் வாசித்த அன்று என் அப்பா கனவில் வந்தார். நாற்பது வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட அவர் மிக அபூர்வமாகத்தான் என் கனவில் வந்திருக்கிறார். அப்பாவின் தேவையை அவ்வளவு உணராமல் இருந்திருக்கலாம், தந்தையின்மை தீவிரமாக அழுத்திய சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கலாம் அல்லது தெய்வத்தை தந்தைவடிவத்தில் பார்க்கும் புராதமான பயம் என் ஆழ்மனதிலிருந்து வெளிப்படாமல் இருந்திருக்கலாம். இருட்டின் ஆன்மா சிறுகதையில் யாருமில்லாத வேலாயுதனின் மீதான அனுதாபம் என் கனவில் என் தந்தையை வரவழைத்திருக்கலாம். தந்தையின்மைதான் வேலாயுதன் சூழ்ந்திருக்கும் இருட்டிற்கு காரணம் அல்லது நம்மை புரிந்துகொண்டு கூடவரும் அரவணைப்பின்மைதான் வேலாயுதனை அநாதையாக ஆக்குகிறது என அந்த கனவிற்கு பிறகுதான் எனக்கு புரிந்தது. மனம் பிறழ்ந்தவர்களைவிட வேறு எந்த நோயாளியும் அவ்வளவுதூரம் கைவிடப்பட்டவர்கள் அல்ல என்றும், தனக்கு நோய்மை இருக்கிறது என்று அறியமுடியாத ஒரே நோய் மனப்பிறழ்வுதான் என்றும் நான் என் கனவு வழியாக அறிந்துகொண்டேன்.

இருட்டின் ஆன்மா சிறுகதையில் அம்மா இல்லாத அந்த மருமக்கத்தாய3 வீட்டில் வேலாயுதனுக்கு யாருமில்லை. அங்கு வேறு சிலர் வாழ்கிறார்கள் என்றாலும்கூட, அவர்கள் இருப்பற்றவர்கள். யாருமில்லாமை என்ற உணர்வு வேலாயுதனின் மனதில் வளர்ந்து வளர்ந்து முதலில் அரைக்கிறுக்கனாக, பின் முழுப்பைத்தியமாக ஆகி பரிதாபகரமான நிலையை அடைந்துவிடுகிறான். அந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லாத, பிறிதொரு வீட்டில் மனைவியும் குழந்தைகளும் வாழ்க்கையும் உள்ளவர் வேலாயுதனின் தாய்மாமா. அவருக்கு வேறு எங்கும் அதிகாரம் செலுத்த வழியில்லை, இங்கு தன் தங்கைவீட்டில் மோசமான அதிகாரத்தை வெளிப்படுத்தவதற்கான முழுமையான சுதந்திரம் கிடைக்கிறது. இதற்காகவே தான் நியமிக்கப்பட்டவன் என்று நினைக்கும், தன்னலம் கொண்ட காரணவரின்(தாய்மாமாவின்) மிருகத்தனமான அடக்குமுறைக்கு இரையாகிறான் வேலாயுதன். தன் தீமைகளையெல்லாம் வெளிப்படுத்த அவருக்கு அங்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வீட்டின் நன்மை-தீமை என்ற மரத்தின் கனியை அந்த தீயதெய்வத்தைத்தவிர வேறு யாரும் உண்ண அதிகாரமில்லை.

வேலாயுதனின் தாய்மாமா அவனுக்கு என்னவெல்லாமாக இருந்திருக்க வேண்டுமோ அப்படியான தந்தைமை சார்ந்த நேசம் துளிக்கூட கிடைக்காததால் வேலாயுதன் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பற்றவனாக ஆகிவிடுகிறான். தாய்மாமாவின் செயல்பாடுகளை தடுக்க யாருமில்லை. அந்த வீட்டில் வேலாயுதன் மேல் ’அன்பு’ கொண்ட ஒரே இருப்புக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கான அதிகாரமில்லை. வீட்டில் வேறு யாருமே இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு மட்டுமே அவனை ’குட்டி ஏட்டா’ என்று அவளால் அழைக்க முடிகிறது. வேலாயுதனை சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தும்போது எந்த ஓசையும் எழுப்பாமல் வலியுடன் மௌனமாக கண்ணீர் சிந்துவதற்கு மட்டுமே அவளுக்கு அதிகாரம் இருக்கிறது. தந்தையில்லாத அந்த மருமக்கதாய காலம் (சமீபகாலத்தில்தான் தந்தையை அவதூறு செய்தால் நாயர்கள் கோபம்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்) உருவாக்கிய பாதுகாப்பின்மையின் பருவடிவம்தான் மனம்பிறழ்ந்த வேலாயுதன்.

வேலாயுதன் மேல் அன்பு செலுத்திய ஒரே இருப்பும் அவனை பைத்தியம் என்று சொல்லிவிடுவதால் அவன் வீட்டிற்கே திரும்பிவருகிறான். இனி கிடைப்பதை சாப்பிட்டு, எந்த பரிகாசத்தையும், சித்ரவதையையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் பெற்றுக்கொண்டு, மருமக்கத்தாய அமைப்பின் காரணவர், தன் தாய்மாமாவை எப்போதும் வெற்றிபெறச்செய்யும்படி சங்கலியில் கட்டப்பட்ட நிலையிலேயே வாழ்வதற்காக வீட்டிற்கே திரும்பிவருகிறான் வேலாயுதன். வீட்டிற்கு திரும்பிய வேலாயுதனின் நடவடிக்கைகளில், பேச்சில் அதுவரையில்லாத தெளிவு இருக்கிறது. ‘என்னை கட்டிப்போடுங்கள், எனக்கு பைத்தியம் ‘ என்கிறான். அப்படி சொல்லும்போது அவனில் மனப்பிறழ்வின் எந்த தடையமும் இல்லை.2

இளைஞர்கள் வேலாயுதனாக ஆகாமல் இருப்பதற்கான எச்சரிக்கை தேவைப்பட்ட காலகட்டம் அது. அன்று ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒருவகையில் வேலாயுதனைப்போன்ற ஒருவராவது இருந்தனர். அந்த காலகட்டத்தின் மனநிலை இன்று சுத்தமாகவே இல்லை. அந்த காலகட்டத்தின் அம்சங்களை நுட்பமாக பயன்படுத்தி, பைத்தியமாக ஆவதுதான் ஒரே தப்பிக்கும் வழி என்னும் அளவுக்கு தனித்துவிடப்படும் நிலையை உருவாக்கும் அந்த காலகட்டத்தின் குடும்ப அமைப்பைத்தான் ‘இருட்டின் ஆன்மா’ சிறுகதையில் சித்தரித்துக்காட்டியிருக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர்.

அந்த கதையை வாசித்தவுடன் அந்த காலகட்டத்திலிருந்து தப்பிப்பது தந்தை வழியாகவா அல்லது மக்கத்தாய சொத்துரிமை வழியாகவா (தந்தைவழி சொத்துரிமை) என்று யோசித்த என் ஆழ்மனம் தந்தையை தேர்ந்தெடுத்திருக்கலாம். இருட்டின் ஆன்மா சிறுகதையை வாசித்து நான் என் தந்தையை கனவு கண்டதன் பொருள் மருமக்கத்தாய அமைப்பில் உள்ள ”இல்லாமை” என்பது தந்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் விளைவு என்றுதான் சொல்லவேண்டும். சில சந்தர்ப்பங்களில் மக்கத்தாய அமைப்பில் (தந்தைவழி சொத்துரிமை) உள்ள “தந்தை” மருமக்கத்தாய அமைப்பின் காரணவரைப்போல(தாய்மாமா) மோசமான அதிகார அம்சங்களையும் பிரதிபலிப்பவராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சமூகச்சூழல் தனிமனிதனை யாருமற்றவனாக ஆக்குகிறது. அந்த சூழல்மீதான தீராப்பகை, நுட்பமாக சொல்லவேண்டுமென்றால் அந்த சமூகச்சூழல் மீதான ’கறை’தான் எம்.டி.வாசுதேவன் நாயரின் புனைவுலகின் தனித்தன்மை. மனிதனின் அகநெருக்கடிகளின் ஊற்றுமுகத்தை தேடும் எம்.டி. சென்றுசேர்வது அங்குதான். அப்படி ‘இருட்டின் ஆன்மா’, ‘குட்டியேடத்தி’ என எம்.டி தன் எல்லா சிறுகதைகளிலும் மனிதமன நெருக்கடிகளின் அடிப்படையை கண்டடைகிறார்.

எம்.டி.வாசுதேவன் நாயரின் படைப்புலகில் ‘கறை’ என்ற சொல் முக்கியமானது. மரத்தின் காம்பிலிருந்து வடியும் பால்கறை அதன் உயிராற்றல், அதன் சாரம். நாம் மிதித்தால் கடிக்கும் பாம்பில் உயிர்பெறும் ’நஞ்சு’ கறைதான். மனிதனில் அகங்காரமாக, பகையாக, வெறுப்பாக மாறுவது அவனின் ’கறை’தான். எம்.டி.வாசுதேவன் நாயரின் படைப்புகளில் உள்ள கதாப்பாத்திரங்களின் காயங்களிலிருந்து ஒழுகுவது சீழ் என்ற கறை தான், ரத்தம் அல்ல. எம்.டி.வாசுதேவன் நாயரின் மையக்கதாப்பாத்திரங்களின் சாராம்சம், அவர்களின் அசல்தன்மை என்பது இந்த கறைதான். தன்னில் உள்ள கறையை வெளிப்படுத்துவதற்கான வழிதேடித்தான் எம்.டி எழுதுகிறார். கறையாக ஆகாதது எதுவும் உண்மையானது அல்ல என்று அவர் நினைக்கிறார். எதைத்தாள முடியாதோ, எதை மறக்கமுடியாதோ, எதனோடு இணங்கமுடியாதோ, எதைக் கரைக்க முடியாதோ அதுதான் ’கறை’.

நாலுகட்டு நாவலில் வாழத்தகுதியில்லாத குடும்பச்சூழல் மீதான வெறுப்புதான் அந்த நாவலின் மையகதாப்பாத்திரமான அப்புண்ணியில் கறையாக இருக்கிறது. தந்தை யார் என்று கேட்டால் கோந்துண்ணி நாயர் என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்று அப்புண்ணி சின்னவயதில் கனவுகாண்கிறான், இந்த பகற்கனவு மருமக்கத்தாய அமைப்பு மீதான கறைதான். கறையை பகை என்றோ, வெறுப்பு என்றோ, வெல்லவேண்டும் என்ற விழைவு என்றோ தனியாக சொல்லமுடியாது , இவை எல்லாம் சேர்ந்ததுதான் ‘கறை’. ‘குட்டியேட்டத்தி’ என்ற கதையில் மாளுகுட்டிக்கு அனைத்தின் மீதும் கறை. ‘காலம்’ நாவலில் சேதுவிற்கு, ‘அசுரவித்து’ நாவலில் கோவிந்தன்குட்டிக்கு எதன் மீதெல்லாமோ வெறுப்பு, தன்மீதும். அது அவர்களின் கறை. ”இரண்டாம் இடம்” நாவலில் எம்.டி தன்னுடைய கதைநாயகனாக பீமனை ஏன் தேர்ந்தெடுத்தார்? அவரை செலுத்திய விசை என்ன? இலக்குகளை பிசிரின்றி வெல்லும் அர்ஜுனனிலோ, நீதி சார்ந்த மன அமைப்பு கொண்ட யுதிஷ்டிரனிலோ இல்லாத தனித்தன்மை பீமனில் இருக்கிறது என்று எண்ணினாரா?. இல்லை, அவர்களில் இல்லாத ’கறை’ பீமனில் இருந்ததால்தான். எம்.டி. வாசுதேவன் நாயர் எதையுமே ’கறை’ இருக்கிறதா என்று உறுதிசெய்த பின்புதான் தன்னுடைய பெட்டகத்தில் சேமித்துக்கொள்வார்.

எம்.டி தேர்ந்தெடுத்தது கறைகொண்டவர்களைத்தான். சுயபச்சாதாபமும், கோபமும், நிறைவின்மையும், பேராசையும் ஒன்றாக இணைந்தவர்களை, நிம்மதியை அறியாதவர்களை. அவரின் ’உன் நினைவுக்காக’ என்ற சிறுகதை ’ உன் நினைவுக்காக நான் இதை பதிவுசெய்கிறேன் ‘ என்ற சொற்றொடருடன் முடியும். அந்த கதைச்சந்தர்ப்பத்திலிருந்து விலகி அதை வாசித்தால் அந்த ’உன்’ என்ற சொல் வாசகன் என்ற சொல்லாக ஆகும். எம்.டியை வாசிப்பது என்பது வாசகன் தன்னைத்தானே வாசித்துக்கொள்வதுதான். நாம் அவரை உண்பது நம் சொந்த நினைவுகளையும் சேர்த்துதான். (இருட்டின் ஆத்மா சிறுகதை வாசித்த வாசகன் தன் கனவில் தன் தந்தையை காண்கிறான் என்பதுபோல எம்.டி.யை வாசிப்பது என்பது அடிப்படையில் சிக்கலானது). அவரை வாசிக்கும்போது வாசகர்கள் தங்களின் அந்தரங்கமான, ரகசியமான நினைவுகள் எப்படியோ பகிரப்பட்டுவிடுவதாக உணர்கிறார்கள். அவர் வாசகர்களுக்கு மிகமிக பிரியத்திற்குரிய எழுத்தாளராக ஆவது ஒவ்வொரு வாசகனும் தன்னில் கழுவ முடியாத ’கறை’யின் எடை பகிரப்பட்டுவிட்டதாக உணர்வதால்தான்.

உன்னைப்பற்றி எழுதவேண்டும் என்றால் என்னை மறக்கவேண்டுமா அல்லது என்னை நினைவுகூறவேண்டுமா என்ற சிக்கலான கேள்விக்கு “ ’தன்னை’ நுட்பமாக நினைவுகூர்ந்தால் போதும் ” என்று எம்.டி. பதிலளிக்கிறார். ( ‘தன்னை’ என்ற மலையாளச்சொல்லுக்கான வேர்ச்சொல்லான ’தான்’ ஒரு விசித்திரமான சொல். அந்த சொல்லை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம், ‘நான்’ என்ற அர்த்தத்திலும் ’நீ’ என்ற அர்த்தத்திலும். அந்த சொல் நானாகவும், நீயாகவும் ஆகலாம். இந்த குழப்பத்தை எம்.டி.வாசுதேவன் நாயர் நன்றாக பயன்படுத்திக்கொண்டார்). எம்.டி.வாசுதேவன் நாயரின் கதைகள் நினைவுகூறல்கள்தான், தன் சொந்த நினைவுகளை விரிவாக பயன்படுத்தி எழுதப்பட்டவை. எம்.டி.வாசுதேவன் நாயரின் சிறுகதைகளை வாசிப்பதும் அதேபோலத்தான், வாசகனின் தனிப்பட்ட நினைவுகளும் கலந்த அந்தரங்கமான செயல்பாடு அது. ஒருவகையில், வாசகர்களின் நினைவுகளை வைத்துதான் எம்.டி தன் படைப்புகளை எழுதினார் என்றும் சொல்லலாம். ’தான்’ நானாக ஆகும் மொழிச்சந்தர்ப்பங்களை எம்.டி சிருஷ்டித்துக்கொண்டிருந்தார். உன் வாழ்க்கையை ’தன்’ வாழ்க்கையை பயன்படுத்தி எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதினார்.

எம்.டி.வாசுதேவன் நாயரின் புனைவுகளுக்கு சமானமான வாழ்க்கைச்சூழல் இல்லாதவர்கள் கூட அவரது படைப்புகளில் தங்கள் சொந்த வாழ்க்கையை கண்டுகொள்ளும்படியான குறியீட்டுத்தன்மை கொண்டதாக அவரது படைப்புலகம் இருந்தது. அந்த புனைவுலகில் உண்மையிருந்தது. வாசகனுக்கும், வாசகிக்கும் தாங்கள் வாழாத வாழ்க்கைச்சூழல் என்றாலும் தங்களின் வாழ்க்கைக்கதையாகவே அது இருந்தது. தகழி சிவசங்கரப்பிள்ளையும், எஸ்.கெ.பொற்றேகாட்டும் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கைவரலாற்றை எழுதினர், எம்.டி.வாசுதேவன் நாயர் கதாப்பாத்திரங்களின் சுயசரிதையை எழுதினார். எம்.டி.வாசுதேவன் நாயரின் புனைவுகளில் உள்ள ‘அவன்’ என்பது ’நான்’ தான். ஒருவகையில் என்னைவிட பெரிய ‘நான்’. தன் கறையை எழுதுவது வழியாக வாசகனின் கறையை வெளிப்படுத்துகிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். எது என்னை செலுத்துகிறதோ அதுதான் உன்னையும் இயக்குகிறது என்று எம்.டி.வாசுதேவன் நாயரும், அவரது வாசகர்களும் நம்பினார்கள்.
எம்.டி.வாசுதேவன் நாயர் உரையாடியது சமூகத்துடன் அல்ல, தனிமனிதனிடம்தான். எம்.டி ’alone to alone‘ தான். உங்களில், எங்களில், அவர்களில் அவருக்கு அக்கறையோ, நம்பிக்கையோ, ஆர்வமோ இல்லை. ” அவருக்கும் எனக்குமான தொலைவு அதிகரிப்பதுதான் முதுமை என்று சொல்லப்படுகிறது” என்றுதான் எம்.டி.யின் ‘அவர்’ என்ற சிறுகதை ஆரம்பிக்கிறது. உறவுகளில், நட்புகளில், உபசாரங்களில் உள்ள பாவனையின் கறைதான் அவரது புனைவுலகத்தின் பிரதானமான தனித்தன்மை. எம்.டி.யால் பாவனைகளை, போலித்தனங்களை தாங்கிக்கொள்ளமுடியாது, அவரது முக்கியமான அடையாளமே அதுதான்.

எம்.டியில் நடிப்பு இல்லை (எம்.டி. திரைக்கதை எழுதிய மலையாள சினிமாக்களில்தான் மிகைநடிப்பு இல்லாத, நடிப்பு இயல்பான குணாதிசயமாக வெளிப்படும் கதாப்பாத்திரங்களை காணமுடியும்). பாவனையான அன்பை சகித்துக்கொள்ளமுடியாமையும், பாவனைகளற்ற அன்பிற்கான விழைவும் எம்.டி.வாசுதேவன் நாயரின் மன அமைப்பில் உண்டு. எழுத்துச்செயல்பாட்டை உண்மையின் இடத்தில் வைக்க எம்.டி.வாசுதேவன் நாயரால் முடிந்தது. சமூக அக்கறையையோ, சமூகம் மீதான வெறுப்பையோ எம்.டி.வாசுதேவன் நாயர் நடிக்கவில்லை. கறைகளற்ற அன்பையோ, வெறுப்பையோ அல்ல கறைகொண்ட அன்பையோ, வெறுப்பையோதான் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதினார். உறவுகளில் ஆத்மார்த்தமின்மையோ, புறக்கணிப்போ, அவமானமோ, தனித்துவிடப்படலோ கறையாக ஆகியது, பின் எழுத்தாக ஆகியது.

அழிந்துவிடும் பேனா மையால் அல்ல, அழியாத கறையைக்கொண்டுதான் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதினார். கறைதான் தன் பொக்கிஷம் என்றும் அதை பயன்படுத்தித்தான் தான் எழுதுவேன் என்ற உறுதியும் எம்.டி.யிடம் இருந்தது. அங்கதத்தையோ, கவித்துவத்தையோ, தத்துவசிந்தனையையோ அந்த கதைச்சந்தர்ப்பங்களை தாண்டி வளர்வதற்கு எம்.டி.வாசுதேவன் நாயர் அனுமதிக்கவில்லை. தன் இயல்பான போக்கில் அல்லாமல் மனப்பாய்ச்சலுக்கான தவிப்பை எம்.டி.வாசுதேவன் நாயரில் காணமுடியாது. பகடி எழுத்தாளர் வி.கே.என் போல தாராளமான செலவாளி அல்ல, பெரும்பாலும் மிகிமிக குறைவாக செலவிடுவதுதான் எம்.டி.வாசுதேவன் நாயரின் இயல்பு. எம்.டி.வாசுதேவன் நாயர் பெரிய பிழைதிருத்துநராக ஆனது மாத்ருபூமி நாளிதழை பிழைதிருத்தி அல்ல, தன் சிறுகதைகளை பிழைதிருத்தித்தான். மலையாள சிறுகதை ஆசிரியர்களில் அபாரமான வடிவக்கச்சிதம் கொண்ட காரூர் நீலகண்டபிள்ளையின் சிறுகதைத்தொகுப்பிற்கு எம்.டி அறிமுகக்குறிப்பு எழுதினார். சிற்பம்போல வடிவநேர்த்தியுடன் எழுதிய எர்னஸ்ட் ஹெமிங்வேவிற்கு ஒரு முகவுரை எழுதினார். ரெய்மண்ட் கார்வரின் வடிவத்துல்லியத்தை தன் சிறுகதைகளில் எம்.டி நிலைநிறுத்தினார். எம்.டியின் ’அவர்’, ‘குட்டியேடத்தி’, ‘ஜோக்கர்’, ’ஷெர்லாக்’ ‘வானபிரஸ்தம்’ இந்த சிறுகதைகளெல்லாம் அதன் உள்ளார்ந்த கறையாலும், வடிவமுழுமையாலும் ஒளிரும் படைப்புகள். எம்.டி.யின் வடிவப்பிரக்ஞை துல்லியத்திலும் துல்லியமானது. நாலுகட்டு நாவலில் வயநாட்டை விவரிக்கும்போது அந்த துல்லியத்தன்மையை கடைபிடிக்கமுடியவில்லை என்று அவர் வருந்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

எல்லா முன்தயாரிப்புகளுக்கும் பிறகுதான் எம்.டி.வாசுதேவன் நாயர் புறப்படுகிறார். ஆழம் பார்த்துதான் நீரில் குதிக்கிறார். வைக்கம் முகம்மது பஷீர், மாதவிக்குட்டி, மேதில் ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் படைப்பாக்கத்தின் அரிய கணங்களில் ’மாயக்கரம்(magic hand)’ ஒன்று தையோ நிகழ்த்திவிடும், எம்.டி.வாசுதேவன் நாயருக்கு அதில் நம்பிக்கையில்லை. பணம் அச்சடிக்கும்போது அதற்கு சமானமான அளவில் தங்கம் இருப்பில் இருந்தாகவேண்டும் என்ற பழைய நம்பிக்கையை எம்.டி. நிலைநிறுத்தினார், அந்த இருப்பு என்பது எம்.டியின் கறைதான். ’கறை’ கால- இடம் சார்ந்த சந்தர்ப்பங்களில் உருவானதுதான் என்றாலும் எம்.டி.வாசுதேவன் நாயர் காலத்தால் துடைக்கப்படமுடியாத கறையால் நம்மை அவஸ்தைக்குள்ளாக்குகிறார்.
(எம்.டி. வாசுதேவன் நாயரின் 90ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி எழுத்தப்பட்ட இந்த கட்டுரை ஜூலை 2023ல் மாத்ருபூமி இதழில் வெளியானது )


மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

  1. சுகுமாரகவி: ஸ்ரீகிருஷ்ணவிலாசம் என்ற சமஸ்கிருத காவியத்தை எழுதியவர். காவியம் முழுமைபெறவில்லை. சுகுமாரகவி வாழ்ந்த காலகட்டம் பற்றிய எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. அவரைப்பற்றிய தொன்மங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. ஸ்ரீகிருஷ்ணவிலாசம் என்ற காவியத்தை அவர் எந்த பின்னணியில் எழுதினார் என்பதற்கான தொன்மம் உள்ளது.

    சுகுமாரன் கல்வி கற்கும்போது அவரின் குரு அவர்மீது மிகக்கடுமையாக நடந்துகொண்டதால் அதைத்தாள முடியாமல் ஒரு இரவில் குருவின் தலையில் கல்லைவீசு அவரைக் கொல்ல குருவின் அறையில் மேலே உள்ள பரணில் ஒளிந்திருந்து காத்திருக்கிறார் சுகுமாரகவி. குரு தன் மனைவியிடம் உரையாடும்போது தன்மீது குருவிற்கு அளவுகடந்த நேசம் இருக்கிறது என்பதை சுகுமாரன் உணர்ந்துகொள்கிறார். சுகுமாரன் தான் குருவை கொல்ல நினைத்த செயலுக்காக வருந்துகிறார்.

    அடுத்தநாள் குருவிடம் பொதுவான கேள்வி என்பதுபோல குருவை கொல்லநினைத்த சிஷ்யனுக்கான தண்டனை என்ன என்று குருவிடம் கேட்கிறார் சுகுமாரன். சிஷ்யன் உமியால் நெருப்புக்குண்டத்தை நம் உடலில் கழுத்துவரை உருவாக்கி மூழ்கும்படி அதில் இருந்தபடியே வெந்து உருகி இறக்கவேண்டும் என்கிறார். குரு சொன்னதைப்போலவே சுகுமாரன் நெருப்புக்குண்டம் உருவாக்கி அதில் இருந்தபடி ஸ்ரீகிருஷ்ணவிலாசம் என்ற காவியத்தை பாடியதாக தொன்மம். காவியம் முழுமைபெறுவதற்குள் அவர் நெருப்பின் வெம்மையால் இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

  2. இருட்டின் ஆன்மா சிறுகதையில் வேலாயுதன் என்ற மையக்கதாப்பாத்திரத்தின் அம்மா சிறு வயதிலேயே இறந்துவிடுகிறார். வேலாயுதன் மனவளர்ச்சி குன்றியவன். வேலாயுதனின் தந்தை பற்றிய குறிப்புகள் சிறுகதையில் இல்லை. பழைய கேரளத்தின் மருமக்கத்தாய வழக்கப்படி குடும்பத்தில் தந்தைக்கு எந்த அதிகாரமும் இல்லை. வேலாயுதனை வளர்ப்பது அவன் தாய்மாமாதான். மனவளர்ச்சி குன்றிய வேலாயுதனை குடும்பத்தின் சாபமாக தாய்மாமா கருதுகிறார். அவன் அத்தை, அவர்களின் மகன்கள் அனைவருமே அவனது மன வளர்ச்சி குன்றிய நிலையை இழிவுணர்ச்சியுடனும், அவன் வீட்டில் இருப்பதை தாங்கிக்கொள்ளமுடியாத சுமையாகவும் கருதுகிறார்கள்.

    வேலாயுதனை பார்க்கும் அனைவரும் அவனை ”முடியாதவன்” என்றே சொல்வதால் அவனும் தனக்கு ஏதோ நோய் இருப்பதாக எண்ணிக்கொள்கிறான். அவனுக்கு அவன் வயதையொத்த மனப்பக்குவம் இல்லை என்றாலும், அவன் தான் முதிர்ந்துகொண்டே இருப்பதை உணர்கிறான். தன்னை மற்றவர்கள் இழிவாக நடத்துவதில் கோபமும், வன்மமும் இருக்கிறது. அந்த வீட்டில் தாய்மாமாவின் மகள் அம்முக்குட்டிக்கு மட்டும்தான் அவன்மீது அன்பு இருக்கிறது. வேலாயுதன் அவள் அன்பை உணர்கிறான், அவள்மேல் அவனுக்கு அவனாலேயே புரிந்துகொள்ளமுடியாத ஈர்ப்பு உருவாகிறது. அம்முகுட்டி மட்டும்தான் அவனது ஒவ்வொரு நெருக்கடியிலும் உடன் இருக்கிறாள், அவனுக்காக கண்ணீர் சிந்துகிறாள், அவன் மனநலம் சரியாகவேண்டும் என்று உண்மையாகவே விழைவது அவள்மட்டும்தான். மற்ற அனைவரும் அவனை பைத்தியம், பைத்தியம் என்றே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

    தன்னை ஏன் பைத்தியம் என்று சொல்கிறார்கள் என்பது வேலாயுதனுக்கு புரியவில்லை. எனக்கு ஒன்றுமில்லை என்று அவன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவனை வீட்டை விட்டு ஒதுக்கி தனியறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள். அதை ஒத்துக்கொள்ளாத வேலாயுதனை தாய்மாமாவும், வேலைக்காரன் சங்கரன் நாயரும் அடிக்கிறார்கள். தனியறையில் அடைபட்டதும் வேலாயுதனின் மனம் மேலும் பாதிக்கிறது. வெளிச்சம் இல்லாத அறையில் அடைக்கப்பட்ட வேலாயுதனை இருட்டு அச்சுறுத்துகிறது. துர்தேவதைகளாகவும், கொலைசெய்யப்பட்டு இறந்துபோன மூதாதையரின் ஆவியாகவும் இருட்டு அவனுக்கு பயப்படுத்துகிறது.

    கொஞ்சம்கொஞ்சமாக வேலாயுதன் இருட்டிற்கு அணுக்கமானவனாகவும் வேறு யாரையும் அறியாதவனாக ஆகிவிடுகிறான். அவன் அறைக்கு வெளியே இருக்கும் எல்லாமே அவனுக்கு அந்நியமாக ஆகிவிடுகிறது. குடும்ப உறுப்பினர்கள் யாரவது அவன் அறைக்கு வந்தால் அவர்கள் தன்னை கொலைசெய்யப்போகிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறான். அம்முக்குட்டி அவனை தனியறையில் வந்து பார்க்கும்போதும் அவனால் அவளை அடையாளகாணமுடியாதபடி ஆகிவிடுகிறான். இரண்டு மூன்றுமுறை அவள் அவன் அறைக்கு வந்துவிட்டு அவன் தன்னை உணர்ந்துகொள்ளவில்லை என்ற வருத்தத்துடன் திரும்பிச்செல்கிறாள். வேலாயுதன் அறையிலேயே வாந்தியெடுத்து அறையை அசுத்தமாக ஆக்கிக்கொள்கிறான். அவன் தாய்மாமா ஒருகட்டத்தில் அவனை சங்கிலியில் கட்டி வைக்கிறார். அவனை கையாள்வதான பாவனையில் அந்த தாய்மாமா தன் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறார்.

    ஒருகட்டத்தில் தாய்மாமாவின் சித்திரவதைகள் தாளமுடியாமல் வீட்டிலிருந்து தப்பிச்செல்கிறான் வேலாயுதன். தாய்மாமன் மகள் அம்முக்குட்டிக்கு திருமணம் ஆகிவிடுகிறது. வேலாயுதன் நடந்து செல்லும்வழியில் ஏதோ உள்ளுணர்வால் அம்முக்குட்டி திருமணமான வீட்டிற்கு செல்கிறான். அம்முக்குட்டி அவனை பார்த்ததும் பயப்பட்டு வீட்டிற்குள் சென்று “பைத்தியம், அவனை வெளியே துரத்திவிடுங்கள்” என்கிறாள். தன் ஒரே ஆறுதலான, தன்னை நேசிக்கும் அம்முக்குட்டியும் தன்னை பைத்தியம் என்று உணர்ந்தது தன்னை விலக்குவதால் விரக்தியடைந்த வேலாயுதன் வீட்டிற்கு திரும்பிவிடுகிறான். தாய்மாமாவிடம் ” எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. என்னை சங்கிலியால் கட்டுங்கள்” என்று கேட்பதுடன் கதை முடிவடைகிறது.

  3. மருமக்கத்தாயம் : கேரளத்தில் எப்போதென்று அறியமுடியாத காலம் முதலே மருமக்கள் சொத்துரிமை முறை இருந்து வருகிறது. இது தாய்வழிச் சொத்துரிமை முறையின் இன்னொரு வடிவம். சொத்துரிமை முழுக்க முழுக்க பெண்களுக்கு இருந்தது. பெண்களின் சொத்துக்கு நிர்வாகியாக , உரிமை இல்லாதவராக, அவர்களின் மூத்த சகோதரர் இருந்தார். அவர் காரணவர் என்று அழைக்கப்பட்டார்.

    பெண்களின் சொத்து அப்பெண்களின் பெண்களுக்கே செல்லும். மகன்களுக்குச் செல்லாது. அந்த மகன்களுக்கு மகள் இருந்தால் அவளுக்குச் செல்லும். அரசுரிமை போன்ற ஆண்கள் வகிக்கும் பதவிகள் காரணவராக இருக்கும் மாமனில் இருந்து மூத்த சகோதரியின் மூத்த மகனுக்குச் செல்லும். மிகச்சிக்கலான இந்த சொத்துரிமை முறை தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்தச் சொத்துரிமை முறை திருவிதாங்கூரில் அரசநிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்த எல்லா சாதியினருக்கும் பரவியிருந்தது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருமக்கள் சொத்துரிமை என்பது சீரழிந்த நிலையை அடைந்தது. அது பெண்ணுக்குச் சொத்துரிமை என்ற அடிப்படையில் உருவானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் வீட்டுக்குள் அடைபட பெண் பெயரில் ஆண்கள் சொத்தை கையாள ஆரம்பித்தார்கள். அப்படி கையாள்பவர் தன் சொந்த மனைவியின் குழந்தைகளுக்கு அதை அதிகாரபூர்வமாகக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவரது மருமக்களுக்கு உரியது அந்தச் சொத்து. ஆகவே சொத்தை பலவகையிலும் திருடி தன் மக்களுக்குக் கொடுத்தனர் சிலர். மாமன் ஒழுங்காக இருந்தாலும் அவர் தங்கள் சொத்தை திரூவதாக எண்ணினர் மருமக்கள். குடும்பங்கள் சண்டைகளில் சீரழிந்தன.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.