/

டிரேஸி கே.ஸ்மித் கவிதைகள்

தமிழில் : ஜனார்த்தனன் இளங்கோ

டிரேஸி கே.ஸ்மித், புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்க கவிஞர் மற்றும் கல்வியாளர். அமெரிக்காவின் பால்மவுத் நகரத்தில் ஏப்ரல் 16, 1972 அன்று பிறந்தார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். எலிசபெத் பிஷப், ஷீமஸ் ஹீனி, பிலிப் லார்கின், யூசுப் கோமுன்யகா மற்றும் ரீடா டோவ் ஆகியோர் தன் எழுத்தில் செல்வாக்கு செலுத்தியதாக குறிப்பிடுகிறார். 2017 முதல் 2019 வரை அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கவிஞராக பதவி வகித்துள்ளார். இவரின் நான்கு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. Life on Mars தொகுப்பிற்காக 2012 ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றார்.

பிரபஞ்சமே ஓர் ஆதி அலறலாய்

பதிவாய் மாலை 5 மணி. அவர்கள் வாயை திறக்கிறார்கள்
உடனே வெளிவருகிறது : உச்சஸ்தாயியில், கிறீச்சிடுகிற உலோகக் குரல்
முதலில் அந்த பையன். பிறகு அவன் சகோதரி. அவ்வப்போது,
இருவரும் ஒரே நேரத்தில் குரலை நிறுத்துகிறார்கள்.
காலணிகளை மாட்டி மேலே போய் பார்க்கலாமா என்று யோசிக்கிறேன்.
ஒரு நல்ல கண்ணாடி படிகம் மீது அவர்கள் பெற்றோர் நடத்துகிற
பரிசோதனை முயற்சியாக இது இருக்கக்கூடும்
தரையில் தூசியாக கண்ணாடி சிதறி கிடக்கக் கூடும்

தான் ஊட்டி வளர்த்த திடகாத்திரமான  
அந்த நான்கு இளஞ்சிவப்பு நுரையீரல்கள்மீது
அவர்கள் அம்மா இன்னும் பெருமையோடு இருக்கலாம்.
ஒருவேளை அந்த மாய ஒலியளவை அவர்கள் எட்டிவிட்டால்
மொத்த கட்டிடமும் உயரே எழும்பி விடக்கூடும்
மகிமை நோக்கி நாம் பயணிக்கலாம், எலியாவைப் போல
இதுதான் என்றால் -அவர்களுடைய அலறல்கள் இதை நோக்கியதுதான் என்றால்-
வானம் நீலத்திலிருந்து சிவப்புக்கும், பின் உருகும் பொன்னிறத்துக்கும்,
பின் கருமைக்குமாய் மாறட்டும். நமக்கு சொந்தமாக வேண்டிய விண்ணுலகம் நம்மை அடையட்டும்.

அது பழைய வேதாகம உடுப்பணிந்த மரித்து போனவர்களின் இடமா
அல்லது சுழலும் வெற்றுவெளியின் முடிவின்மை நோக்கி திறக்கும் கதவா
அது ஒரு தந்தைப் போல குனிந்து நம்மை வரவேற்குமா
அல்லது எரியும் அடுப்பு போல நம்மை விழுங்குமா. நான் தயாராகிவிட்டேன்
அதை சந்திப்பதற்கு. நம்மிடம் நீண்ட காலம் எதுவுமே தங்காதபடி எது தடுக்கிறதோ
எது நம்மை ஆசீர்வாதங்களால் சுண்டியிழுக்கிறதோ
எது நம்மை ஆழ்ந்த துயரத்தால் முறித்து போடுகிறதோ அதை சந்திப்பதற்கு.
அது மந்திரவாதியோ, திருடனோ,
நம் கண்ணாடிகளை தரையில் வீழ்த்தி நம் குட்டி வாழ்க்கைகளை
சுத்தமாய் துடைத்து அகற்றும் மாபெரும் காற்றோ.

அதன் அருகே நம் இரைச்சல் எவ்வளவு மதிப்பில்லாமல் இருக்கிறது.
என் இசைப் பெட்டியில் பாடல்களை சீரற்ற வரிசையில் ஒலிக்க விடுகிறேன்.
என் பக்கத்து வீட்டுக்காரர் சுவரோடு ஒட்டி வெங்காயம் நறுக்குகிறார்
இவை எல்லாமே – நம்மை நோக்கி என்ன வருகிறதோ அதன் எதிரே-
விக்கல் போன்ற இடைவெளிகள்தாம். மேல்மாடியில் சிறார்கள் இன்னமும் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பெருங்குரலில் அலறுகிறார்கள், மனிதனின் விடியல் போல
பெயரில்லாத ஏதோவொன்று தான் பிறக்க வேண்டியதை
வலியுறுத்த ஆரம்பிப்பது போல.

ooo

நல்ல வாழ்க்கை

பால் வாங்கச் சென்று திரும்பியே வராத
ஒரு மர்மமான காதலரை பற்றி பேசுவது போல
சில மனிதர்கள் பணத்தை பற்றி பேசுகிறார்கள்
அது என்னில் நினைவேக்கத்தை எழுப்புகிறது
வருஷக்கணக்காக ரொட்டியிலும் காபியிலும் மட்டும் வாழ்ந்தது.
சதா பசியிலேயே இருந்தது.
கிணறில்லாத ஊரிலிருந்து ஒரு பெண்
தண்ணீர் கொண்டு வர நீண்ட தூரம் பயணிப்பது போல
சம்பள நாளில் வேலைக்கு நடந்தே சென்றது.
அவ்வப்போது ஒன்றிரண்டு இரவுகள் எல்லோரையும் போல வாழ்ந்தது
வறுத்த சிக்கனோடும் சிவப்பு ஒயினோடும்.

ooo

இதுவரை இருந்த அனைத்தும்

ஓர் அகன்ற விழிப்பைப் போல, தொலைதூரம்வரை
முடிவின்றி அதிர்ந்தவாறு,
“இதுவரை இருந்த அனைத்தும்”, இன்னமும் மிதக்கிறது ,
எங்கேயோ ஒரு மேற்பரப்பின் அருகே.
அது ஊட்டுகிறது தன் பசியை
உனக்கும் 
எனக்கும்
மேலும் நாம் பெயரிட்டு ஓர் இடம் என்றான  
இப் பொழுதுக்கும்

சிலசமயம் சூறாவளிப் போல மேலெழுந்து
நாம் நின்றிருக்கும் நிலத்தில்
சிறுபகுதியை எடுத்துக்கொள்கிறது

நாம் விரைந்து அடித்து சாத்துவதற்குள்
ஜன்னல்களை தள்ளிவிட்டு 
மழையை கொண்டு வந்துவிடும் காற்றைப்போல
இலைகளை உள்ளே வீசி எறிகிறது

இருள்போன்ற கரிய நீர், வடிய நாளாகும்

நேற்றிரவு உறக்கத்தின்போது அது
உணவும், பரிசுப் பொருளும் கொண்டு வந்து
நம்மை ஆச்சர்யப்படுத்தியது

உன் கண்கள் என் கண்கள் தேடி நடனமிட்ட வேளையில்,
என் கைகள் மடியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்தபோது
நம்மிருவர் இடையே அது நேராய் நின்றிருந்தது.
நெருக்கத்தில் பார்க்க அது மெலிந்து காட்சியளித்தது.இறுதியாக,
நீ என்னை நெருங்கி வந்தபோது அது பின்வாங்கிவிட்டது
கைவிடப்பட்டு ஆனால் தொலைந்துவிடாமல். 

அது எதுவென்றாலும், இன்று,
புகை போல் மேலெழும் மேகத்தின் தடமாய்
லேசாகியிருக்கிறது

நான் இதை எழுதும்போது 
என்னை பார்த்துக் கொண்டிருக்கும் மரங்கள்
காற்றில் அசைந்தாடுகின்றன
பூமிக்கு கீழே அவற்றை கிளர்த்துவது
அறிவின் கூசும் சிறு தீண்டல் என்பது போல
மகத்தான குருட்டு வேர்கள் 
எப்படியும் அதைத் தள்ளி கடத்திவிடும் என்பது போல.

ooo


அதுவும் சார்ந்ததும்

நாம் “அதன்” பகுதி. “அதன்” விருந்தாளிகள் அல்ல.
“அது” என்பதே நாம் தானா அல்லது “அது” நம்மை உள்ளடக்கியிருக்கிறதா?
“அது” கற்பனை எண்ணின்(i) முதுகுத் தண்டில்
தள்ளாடுவதாக, ஒரு கருத்தாக இல்லாமல்
வேறெதுவாகவும் எப்படி இருக்க முடியும்? அது நேர்த்தியானது.
தயக்கமுடையது. நாம் சுட்டிக்காட்ட விரல் நீட்டும்போது
நம் விரல்களின் மழுங்கிய முனைகளை “அது” தவிர்த்துவிடுகிறது.  நாம்
“அதை” தேடி எல்லா இடங்களுக்கும் சென்றுள்ளோம்:
பைபிளிலும், கடலுக்கடியிலிருந்து ஒரு காயம் போல
பூத்து வரும் அலைவரிசையிலும்.
எனினும் பொய், நிஜம் எனும் எதிர்நிலை பேச்சை “அது” மறுக்கிறது.
நம் வைராக்கியத்தில் நம்பிக்கையில்லாத “அதனை”
சமாதானப்படுத்த இயலாது. “அது” சில நாவல்களை போன்றது:
பிரம்மாண்டமானது. வாசிக்க முடியாதது.

ooo

நாமும் சார்ந்தோரும்

நாம் இங்கே சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கப் போகிறோம்
            அதிகபட்சமாக ஒரு நாள்.
நாம் இந்த நிலப்பரப்பினை உணர்ந்து அர்த்தப்படுத்தப் பார்க்கிறோம் –
            புதிதாய் தோன்றிய உடல் அங்கங்கள் வழியே
உடல்களின் மந்தையில் மோதி மோதி விலகி
            கடைசியாக ஒருவர் தன்னை வீடு போல சொந்தமாய் அறியும் வரை.
தருணங்கள் நம்மை கடந்து பெருகியோடுகின்றன. புல் வளைகிறது
            பிறகு மீண்டும் எழுந்து நிற்க கற்றுக் கொள்கிறது.

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

2 Comments

  1. வழக்கமாக இல்லாமல் தன் பார்வை கோனத்தினால் இக்கவிதைகள் ரசிக்கவும் ஞாபகம் வைத்துக்கொள்ளவும் இயலும்

    புல் வளைகிறது பிறகு மீண்டும் எழுந்து நிற்க கற்றுக்கொள்கிறது
    இவ்வரிகளே போதும்

  2. அவ்வப்போது சொற்களை செதுக்கும் அற்புதமான நிகழ்வை நிகழ்திக்காட்டுகிறார், கவிஞர் ….

உரையாடலுக்கு

Your email address will not be published.