/

தாள கோபுரம் : கே சி நாராயணன்

தமிழில் : அழகிய மணவாளன்

இரவு. ஒளிரும்  தீப்பந்தங்களின் சிவந்த வெளிச்சம் பட்டு யானைகளின் நெற்றிப்பட்டங்கள் ஜொலிக்கின்றன. தேங்காயெண்ணை மணம் காற்றை கிறங்கச்செய்கிறது. வரிசையாக எரியும் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில், தாளத்தில் லயித்து காதசைத்து நிற்கும் யானைகளுக்கு முன், சுமார்  ஐம்பது செண்டை மேளங்களிலிருந்து எழும் நாதம் கொஞ்சம் கொஞ்சமாக செறிவாக ஆரம்பிக்கிறது. பஞ்சாரிமேளத்தின்1 தாளவேகம் அதிகரிக்கிறது . செண்டையின் தாளம் சாவதானமான தாளத்திலிருந்து உயர்ந்து உயர்ந்து வேகமாகத் தொடங்கியிருக்கிறது. பேயடித்ததுபோல அசைந்தாடும் மக்கள்திரளுக்கு நடுவே இன்னும் கொஞ்சம் வேகமாகவும், கொஞ்சம் பின்வாங்கியும் கடல்போல பெருகிக்பெருகி ஒலிக்கும் செண்டைமேளத்தின் தாளம்  அச்சமூட்டும் பெரிய அலையாக ஆகி அதன் உச்சத்தில் வெடித்து சிதறுகிறது. இந்த உயிர்த்துடிப்பான வெடிப்பிற்கு பிறகு நீண்ட மௌனம். அந்த நீண்ட மௌனத்தில் இருந்துகொண்டு நிகழ்ந்ததை திரும்பிப்பார்த்தால், அந்த மக்கள்திரளின் காலப்பிரக்ஞையை மீறி, அவர்கள் அறியாமலேயே  நான்கு மணிநேரம் கடந்துவிட்டிருப்பதை உணரமுடியும்.

கேரளத்தின் காவுகளில், கோவில்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரைவரை இரவுபகலாக முடங்காமல் திரும்பதிரும்ப நிகழும் தாளவாத்தியங்களை மட்டுமே  கொண்ட இசை நிகழ்வுகளை  மலையாளி அல்லாத வேறெந்த பகுதியைச்சேர்ந்த இசைரசிகனாலும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது.  நான்குமணிநேரம் நீளும்  தாளவாத்தியங்கள் மட்டுமேயான  இசைநிகழ்வா? இது  தமிழனை ஆச்சர்யப்படுத்தக்கூடியது. மூன்று மணிநேரம் நிகழும் வாய்ப்பாட்டு கச்சேரிகளை அவன் கேட்டிருப்பான். ஆனால், அப்படிப்பட்ட கச்சேரிகளிலெல்லாம் இசைக்கருவிகள் குரலிசைக்கான அகம்படிகளைப்போல. அவை குரலிசையின் துணை அங்கங்கள்தான். பாட்டுக்கச்சேரிகளின் தனியாவர்த்தனங்களில் மட்டும்தான் இசைவாத்தியங்கள் சுதந்திரமாக வெளிப்படுவதற்கான அதிகாரம் கிடைக்கிறது. ஆனாலும் மிகச்சிறந்த தனியாவர்த்தம்கூட இருபது நிமிடங்களைத்தாண்டினால் சலித்துவிடும் என்பதுதான் தமிழனின் அனுபவம். ஆனால் இங்கே கேரளத்தில்  இருபது நிமிடங்கள் அல்ல அதைவிட இருபது மடங்கு அதிக நேரம் நீளும் தாளவாத்தியங்களால் ஆன கச்சேரி. குரலிசையின் அகம்படியாக மட்டுமே தாள வாத்தியங்களை  கேட்டுப்பழகிய தமிழனின் காதுகளில் இதோ பாட்டின் அகம்படியாக அல்லாத தன்னிலளவிலேயே முழுமைகொண்ட தாளவாத்தியங்களின் கொப்பளிப்பு. கேரளத்தின்  ஆலயமுற்றங்களில்  முழங்கும் தாளவாத்தியங்களின் ஒலிப்பிரவாகத்தை எதிர்கொள்ளும் தமிழன் பிரமிப்புடன் நின்றுவிடுவான். ஆனால் செண்டையின் முழக்கம் அவனை முழுமையாக மூழ்கடித்துவிடும். கிட்டத்தட்ட நான்குமணிநேரம் அதில் முழுமையாக கரைந்து மீளும்போது வாய்ப்பாட்டு கச்சேரிகளுக்குக்காகவே  புகழ்பெற்ற தன் மாநிலம், அந்த இசைக்கான பயிற்சி மட்டுமே கொண்ட பண்பாட்டிலிருந்து  எவ்வளவோ வேறுபட்ட இசையை  தான் அனுபவித்ததாக வியப்புடன் எண்ணிக்கொள்வான்.  அவன் அருகிலேயே நிற்கும் மலையாளி  தமிழனின் தோளில் தட்டி  ’ ஆச்சர்யப்பட வேண்டாம். எங்கள் கேரளம் இசையில் ஸ்வரத்தைவிட தாளத்திற்கு பழக்கப்பட்ட மாநிலம்’ என்பான்.

கேரளத்தில் குரலிசையைவிட தாளவாத்தியங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கிடைத்தது. தமிழ்நாட்டின் பாட்டுக்கச்சேரிக்கு பதிலாக இங்கு தாளவாத்தியங்களின் கச்சேரி. மனிதக்குரலும்  அதிலிருந்து உருவாகிவரும் எண்ணிறந்த சாத்தியங்கள்கொண்ட குரலிசையின் உலகம் கேரளத்தில் அவ்வளவாக வளர்ச்சியடையவில்லை. கேரளத்திற்கு என தனித்தன்மையான இசைமரபு ஏதேனும் இருக்கிறதா என இசையறிஞர்கள் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு கேரளத்தின் செழித்து வளர்ந்த  தாளவாத்தியங்களின் பாரம்பரியம் சார்ந்த எந்த சந்தேகமும் இல்லை. கேரளத்தின் செவ்வியல் கலைத்தொகுதியில் தாளவாத்திய இசைவடிவங்கள்  மிகப்பிரதானமானது.  கேரளத்தின் தாள இசை பாட்டுக்கச்சேரியைப்போல தனித்துவமான குரலினிமையின் வெளிப்பாடு அல்ல. மாறாக சுமார் நூறுபேர் கொண்ட மகத்தான மனிதக்கூட்டமைப்பு ஒன்றிணைந்து எழுப்பும்  தாளம் அசுரத்தன்மைகொண்ட ஒலிவடிவ கோபுரங்களாக மலையாளியின் வானில் உயர்ந்து நிற்கிறது. கேரளத்தில் மனிதக்குரல் உயர்கலையாக வளர்ச்சியடையவில்லை. இங்கு தாள வாத்தியங்கள் செவ்வியல்படுத்தப்பட்டன, பேணப்பட்டன. voiceஐ விட  noiseற்கு கேரள இசைமரபில் அதிக முக்கியத்துவம் கிடைத்தது. இரைச்சலை நாம் கலையாக வளர்த்தோம்.  ஒவ்வொரு தாள வாத்திய நிகழ்வின்  இறுதிப்பகுதியிலும்  செண்டைமேளத்தின் முழக்கம்  வெடியோசை  போல  அச்சமூட்டும் அழகுடன் வெளிப்படுவதிலுள்ள கலையழகை அறிந்த  மாநிலம் கேரளம். மலையாளியைத்தவிர வேறு யார் இதை புரிந்துகொள்ளமுடியும்?

கேரளத்தின் பல்வேறுவகைப்பட்ட செறிவான இசைக்கருவிகளின் வரிசையை ஆராய்ந்தால் இங்கு தாளத்திற்கு  உள்ள  முக்கியத்துவத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.

இந்திய மரபில்  இசைக்கருவிகளை நான்காக பிரிக்கப்பட்டிருக்கிறது. தந்து, அவனத்தம், கனம், சுஷிரம். வீணை, வயலின் போன்ற கம்பிவாத்தியங்களை தந்து என்ற வகைப்படுத்தலாம். தோல்களை இறுக்கமாக கட்டிய செண்டை, திமிலை, மத்தளம், மிருதங்கம் போன்றவை அவனத்த வாத்தியங்கள். சேங்கிலை, இலைத்தாளம்போல இரண்டு திடப்பொருட்கள் ஒன்றையொன்று தட்டி ஒலியெழுப்புவதை கனவாத்தியங்கள் என்று சொல்கிறார்கள். புல்லாங்குழல் சுஷிர வாத்தியம். இந்த நான்கு வகைமைகளில் தந்து வாத்தியமான வீணையும் , சுஷிர வாத்தியமான புல்லாங்குழலும் தூய இசைக்கானவை. மெட்டையும், ராகத்தையும் உருவாக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. அவனத்த வாத்தியங்களும், கனவாத்தியங்களும் தாளத்திற்கானவை. கேரளத்தில்  தாளத்தை உருவாக்குவதற்கான வாத்தியங்கள் ராகத்தை உருவாக்கும் வாத்தியங்களைவிட பலமடங்கு அதிகமாக இருக்கின்றன. கேரள இசைமரபின் தனித்தன்மை இதுதான். இங்கு பயன்பாடு ரீதியாகவும் தாளவாத்தியங்கள் ஸ்வரங்களை அல்லது ராகங்களை உருவாக்கும் வாத்தியங்களைவிட முன்னணியில் நிற்கின்றன. இடைக்கா, துடி, மத்தளம், செண்டை, பறை, திமிலை என்ற பிரபலமான தாளவாத்தியங்களுக்கு அப்பால் அதிகம் யாரும் கேள்விப்படிருக்காத இருதுடி விராணம், பஞ்சமுக வாத்தியம், மரம் என மேலும் பல தாள வாத்தியங்கள் இங்கு இருக்கின்றன. கேரளம்  தாளவாத்தியங்களின் அருங்காட்சியகம் போல. இந்த வாத்தியங்களை பயன்படுத்தி மற்ற எங்குமில்லாத அளவுக்கு பெரிய அமைப்புகொண்ட இசைக்குறிப்புகளையும்  நாம் உருவாக்கியிருக்கிறோம். தாளவாத்தியங்களின் ஒலிச்சிற்பங்கள் நம்முடைய குரலிசையையே முக்கியத்துவமில்லாததாக ஆக்கியிருக்கிறது. வேறு  இடங்களில் ராகத்திற்காக, மெட்டிற்காக உருவாகிவந்த வாத்தியங்களை நாம் தாளத்திற்காக பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பரீதியாக வில் என்ற இசைக்கருவி  வீணைபோன்ற தந்திவாத்தியம். ஆனால் நம் குழந்தைகள் ஓணவில்லை தாளம் பிடிப்பதற்காக பயன்படுத்துவார்கள். புள்ளுவர்களின் இடியறை என்ற  தந்திவாத்தியத்தை மெட்டு உருவாக்குவதைவிட தாளத்திற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில் குறுங்குழல் சாதாரணமாக பயன்படுத்தப்படுவது என்றாலும் அதைப்பயன்படுத்தி நாதஸ்வரம் போல இங்கு ராகங்கள் உருவாக்கப்படவில்லை. இங்கு குறுங்குழல் (நாதஸ்வரத்தின் சிறிய வடிவம்) சுதந்திரமான ராகவடிவத்தை உருவாக்குவதற்காக அல்ல, மேளத்தின் அகம்படியாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. ராகத்திற்கு அகம்படியாக தாளம் என்ற சாதாரணநிலையை மாற்றி, தாளத்தை செறிவூட்டுவதற்காக ராகம்  என்ற நிலைவரை சென்றுசேர்ந்திருக்கிறது கேரளம். இதைவைத்தே கேரளத்தில் தாளவாத்தியங்களுக்கு உள்ள அசாதாரணமான மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும். குரலிசைக்கு இங்குள்ள கேள்விஞான மரபில் அவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இங்கே இவ்வளவு மூங்கில் காடுகள்  இருந்தும் புல்லாங்குழல் சார்ந்த தனித்துவமான இசைமரபு கேரளத்தில் உருவாகவேயில்லை. ஸ்ருதியைவிட தாளம் இங்கு முக்கியமானதாக ஆகியது.

என்ன காரணம்?

வேறெங்கும் காணமுடியாதபடி கேரளத்தில்  தாளவாத்தியங்கள் இவ்வளவுதூரம் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டவையாக வளர்ந்தது எப்படி? இதற்கு திட்டவட்டமான  பதில் சாத்தியமில்லை. ஆனால் வரலாறு சில குறிப்புகளை அளிக்கிறது. எந்த சமூகத்திலும் ஒரு பிரத்யேகமான கலைவடிவத்தில் முழுநேரமும் மூழ்கியிருக்கும் ஒரு வர்க்கம் உருவாகும்போதுதான் அந்த கலைவடிவம் அசாதாரணமான வளர்ச்சியடைகிறது. கேரளத்தில் தாளவாத்தியங்கள் வளர்ச்சியடைந்ததற்கு காரணம் அதை மட்டுமே தொழிலாகக்கொண்ட நிபுணர்குழு இங்கு உருவாகியிருக்கிறது என்று ஊகிக்கலாம். கேரளத்தின் சமூக அமைப்பை ஆராய்ந்தால் அப்படியொரு குழுவை கண்டுகொள்ளமுடியும். செண்டை, மத்தளம் போன்ற மேளங்களுக்கு  இங்கு தனி சாதியே உண்டு. மாராரும், பொதுவாளும் தாளவாத்தியங்கள் இசைப்பதை தங்கள் குலத்தொழிலாகக் கொண்டவர்கள். அவர்களின் தொழில் கோவில் சடங்குகளில், கோவில்சார்ந்த கலைவடிவங்களில் உள்ள இசையுடன் தொடர்புடையது. கேரளத்தில் சுமார் ஆயிரம்வருடங்களுக்குமுன் பிராமணர்களின் தலைமையில் கோவில்கள் உருவாக ஆரம்பித்தன. கோவில்களுக்கு சொந்தமான விவசாயநிலங்கள் இருந்ததால் அவை இந்த கோவில்களை சிறிய உற்பத்தி அலகுகளாகவும் ஆக்கின. அன்றைய கேரளச்சமூகம் பல்வேறு வகையான பழங்குடி இனக்குழுக்களின் தொகை. நடனமும், இசைவாத்தியங்களும்  பழங்குடி வழிபாட்டில் பிரிக்கமுடியாத பகுதி. பிரமாணர்களின் வழிபாட்டு இடங்களான கோவில்களில் பழங்குடிகளின் சில இசைக்கருவிகள் அனுமதிக்கப்பட்டன. கோவில்களில் தாளவாத்தியங்களை இசைப்பதற்காக பழங்குடி இனங்களில் சிலர் உள்ளிழுக்கப்பட்டனர். கோவில் என்ற அமைப்பு இருந்ததால் தாளவாத்தியங்களை மட்டுமே இசைத்து அவர்களால்  வாழமுடிந்தது. அவர்கள் சமுதாயத்தின் உற்பத்திசெயல்பாட்டில் பங்கெடுக்க வேண்டியதில்லையென்பதால் அதிக  ஓய்வுநேரமும் கிடைத்தது. தங்கள் தனித்துவமான கலைச்செயல்பாடுகளில் ஆழ்ந்துசெல்வதற்கான, அதிலேயே மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் தங்களுடைய பழைய பழங்குடி இசைக்கருவிகளை பண்படுத்தினார்கள். அதை பிரபலப்படுத்தி அவற்றிற்கு மேலும் இசையொழுங்கை உருவாக்கினார்கள். அவற்றின் ஒலியமைப்பை, வடிவத்தை செம்மையாக்கினர்.  அதன் விளைவாக மேலும் இசையொழுங்குகொண்ட புதிய இசைவாத்தியங்கள் உருவாகின.  மேளங்களுக்கான புதிய விதிமுறைகளையும், அவற்றில் புதிய வகைமைகளையும் உருவாக்கினார்கள். அவர்களின் செண்டை அடியில் நூற்றாண்டுகளும், பல தலைமுறைகளும் கடந்து விட்டிருக்கும்போது செவ்வியல் தாளவடிவங்களும், இசையொழுங்குள்ள தாளவாத்தியங்களும் உருவாகி வந்துவிட்டிருந்தது. புதிய மேள வகைமைகளும், அவற்றிற்கிடையான ஒத்திசைவும் (orchestration) உருவாகியது. கேரளத்தில் பிரமாணர்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள,   செல்வவளம் நிறைந்த  கோவில்கள் கொச்சியின், வள்ளுவநாட்டின்(நடுகேரளத்தில் ஷொர்ணூரிலிருந்து தொடங்கி வடக்கே பெரிந்தல்மண்ணவரையும் மேற்கே  பட்டாம்பியிலிருந்து கிழக்கே அட்டப்பாடிவரை உள்ள பகுதி) ஆலயமுற்றங்களில் செவ்வியல்படுத்தப்பட்ட தாளவாத்தியங்களின் முழக்கம் அலைபோல வந்தறைந்தது.

கோவில் உற்சவங்களிலும்; கூடியாட்டம், தீயாட்டம் போன்ற கோவில் சார்ந்த கலைகளிலும் செண்டை, மத்தளம், மிழா போன்ற தாளவாத்தியங்கள் இசைப்பதற்கென தனி சாதியே உருவாகியதனால் வேறு எங்கும் காணாதமுடியாத அளவுக்கு கேரளத்தில் தாளவாத்தியங்கள் வளர்ந்துவந்ததன் சித்திரத்தைத்தான் நாம் பார்த்தோம். ஆனால் தாளவாத்தியங்களில் இந்த வளர்ச்சி உருவானதற்கான காரணம் அதற்கென்றே உருவான சாதிகள் என்பதுபோலவே வேறொரு முக்கியமான  காரணமும் இருக்கிறது-  அது செண்டை அடிப்பவர்களின் தொழில்நுட்பரீதியான புதிய  கண்டுபிடிப்பு.

செண்டை அடிப்பதில் உள்ள மாறுபட்ட முறைமையான ‘உருட்டிக்கொட்டுதல்’ தான் அந்த புதிய கண்டுபிடிப்பு. கேரளத்தில் மட்டுமே நிகழ்ந்த தனித்தன்மை இந்த உருட்டிக்கொட்டு அல்லது உருள்-கை. கேரளத்திற்கு வெளியே, ஏன் கேரளத்திலேயேகூட இன்று எஞ்சியிருக்கும் பழங்குடிகளின் தாளவாத்தியக்கருவிகளில் இந்த முறைமையை பார்க்கமுடியாது.

செண்டை அடிப்பவர்கள் தங்கள் கையில் உள்ள கோலை நேராக பிடித்து செண்டைக்கோல் நேரடியாக செண்டைத்தலையின் மையப்பகுதியில் படும்படி அடிப்பதற்கு பெயர் நேர்க்கோல். பொதுவாக, தாளத்தின் வேகத்தை அதிகரிக்க நேர்க்கோலின் வேகத்தை அதிகரிப்பதைத்தவிர வேறுவழியில்லை. ஆனால்  இந்த முறைமையில் நிகழ்த்த சாத்தியமுள்ள தாள வகைமைகளும், தாளங்களின் வேகமும் செண்டை அடிப்பவரின் கைவேகத்தை சார்ந்தது., அதனால் எல்லைக்குட்பட்டது. இந்த எல்லைகளை கடக்க கேரளத்தில் பொதுவாள், மாரார் சாதியை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்த பிறிதொன்றில்லாத முறைமைதான் இந்த உருட்டிக்கொட்டுதல் அல்லது ’உருள்-கை’. செண்டை அடிப்பவர்கள் தங்கள் கைகளின் மணிக்கட்டை கொஞ்சம் வளைத்து செண்டைக்கோல் செண்டைத்தலையின் விளிம்பிலும் உள்ளேயும் படும்படி அடிப்பது உருட்டிக்கொட்டு அல்லது உருள்கை. செண்டையின் மையப்பகுதியில் தொடர்ச்சியாக அடிப்பதைவிட இந்த முறைமையால் அடுத்தடுத்த தாளவேகங்களுக்கு எளிதில் நகரமுடியும். மேலும் இந்த முறைமையில் செண்டையின் கோல்கள் செண்டையின் விளிம்புகளிலும், உள்ளேயும் படுவதால் நேரடியாக செண்டையின் மையத்தில் அடிப்பதைவிட ஒலி சற்று மாறுபட்டதாக இருக்கும். இந்த ஒலிமாறுபாடுகள் தாளங்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகிறது. செண்டைக்கோலின் அமைப்பே உருட்டிக்கொட்டுவதற்கு வசதியாக கோலின் நுனி மெல்லியதாகவும் கோலின் பிடிமானப்பகுதி தடிமனாகவும் இருக்கும்.  ‘த கி ட’ என்ற தாளவரிசையை அடிக்கும்போது ’த’ நேர்க்கோலிலும் , ‘கி  ட’ மணிக்கட்டை வளைத்தும் அடிக்கப்படும்.  ‘த கி ட’ என்பதற்கப்பால், ’த ரி கி ட’ ,  ’ த க த கி ட’ போன்ற தாள அமைப்புகளும்  இருக்கின்றன. செண்டை அடிப்பதை ஒருமொழியாக எடுத்துக்கொண்டால் அதன் அகரவரிசைதான் இந்த நேர்க்கோலும், உருள்-கையும். இந்த நேர்க்கோலும் உருள்-கையும் இணைந்தும் பிரிந்தும் உருவாக்கும் எண்ணற்ற சாத்தியங்களால் தாளங்களின் மகத்தான அமைப்புகள் பிறக்கின்றன. இவற்றை நான்கு காலங்களில் அல்லது நான்கு வகையான வேகத்தில் அடிக்கலாம் என்பதால் இதை வைத்து உருவாக்கப்படும் ஒலிச்சிற்பங்களின் சாத்தியக்கூறு நான்கின் இரண்டு மடங்காக பெருகுகிறது. உருட்டிக்கொட்டுதல் என்ற நடைமுறை வந்தவுடன் கேரளத்தின் வாத்தியக்கலை சாத்தியங்களின் புதிய வான்வெளியை நோக்கி விரிந்தது. இந்த முறைமை கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இங்கு தாயம்பகா உருவாகியிருக்காது. பஞ்சாரிமேளம், பாண்டிமேளம் என பல்வேறு வகையான கூட்டான தாள இசை நிகழ்வுகள் உருவாகியிருக்காது. மொக்கவிழ்வதுபோன்ற ஒலிகொண்ட கதகளிக்கான செண்டைமேளத்தை கற்பனைகூட செய்திருக்க முடியாது. தாளங்களை இசைப்பதற்கென்றே ஒரு சாதி உருவாகியதுபோல அந்த சாதியினர் கண்டுபிடித்த படைப்பூக்கம்நிறைந்த அடிக்கும் முறைமைதான் கேரளத்தின் தாளவாத்திய இசையை  இவ்வளவுதூரம் வளர்த்தது. சமூகச்சூழல் மட்டுமல்ல, அதோடு சேர்ந்த மனிதனின் படைப்பூக்கமும் தான் கலையில், பண்பாட்டில் பெரிய பாய்ச்சல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாரிமேள நிகழ்வு

சாதிப்பின்னணியால், செண்டை அடிப்பதன் முறைமையில் நிகழ்ந்த தொழில்நுட்பரீதியான முன்னேற்றத்தால் கேரளத்தில் வளர்ந்து செழுமையடைந்த தாளம் சார்ந்த கலைவடிவங்கள் என்னென்ன? திருவிழாக்களில் ஆலயமுற்றத்தில்  பிளிரும் மேளத்திலிருந்து தொடங்கி ஒலியைவிட மௌனத்தை அடிப்படையாகக்கொண்ட பாணி என்ற கோவில் குடமுழுக்கு சமயத்தில் செய்யப்படும் சடங்குசார்ந்த தாள இசைவரை பலவகைப்பட்ட இசைவடிவங்களாக அது நீண்டுகிடக்கிறது. ஒருபக்கம் தாயம்பகா போல  தூய சுதந்திரமான வெளிப்பாடுகளாக, இன்னொருபக்கம் கதகளி போன்ற நடனக்கலையின் துணைஅங்கமாக அது பரவியிருக்கிறது. ஆனாலும் நமது வசதிக்காக தாளம் சார்ந்த கலைவடிவங்களை அனைத்தையும் இரண்டாக வகைமைகளாக பிரிக்கலாம்- 1. ஒருங்கிணைவை பிரதானமாக கொண்டவை 2. தனியாளுமையின் வெளிப்பாட்டை பிரதானமாகக் கொண்டவை. மேளம் என்ற மலையாளச் சொல்லுக்கு  ஒருங்கிணைவு என்று பொருள்.  ஒரே தாளவாத்தியத்தை பலர் கூட்டாக இசைப்பதன் ஒருங்கிணைவு. கூடவே வெவ்வேறு வகையான தாளவாத்தியங்கள் இணையும் ஒருங்கிணைவு. உதாரணமாக பஞ்சாரிமேளத்தில் 80 செண்டை இசைப்பவர்களும், 10 கொம்பிசைப்பவர்களும், 10 இலைத்தாளம் , 10 குழல் இசைப்பவர்களும் ஒருங்கிணைவது.  ஒருங்கிணையும் கலைவடிவங்களில் முக்கியமானது செண்டைமேளம்2. பஞ்சாரிமேளம், பாண்டிமேளம், அடந்தைமேளம், செம்படமேளம், துருவமேளம், மட்யமேளம் என செண்டைமேளம் என்ற கலைவடிவத்திற்கு ஆறு உட்பிரிவுகள் உண்டு. செண்டைமேளத்திற்காக பயன்படுத்தப்படும் தாளங்களின் வித்தியாசத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டுதான்  இவ்வாறு ஆறு உட்பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். ஆனாலும் இவற்றில் பஞ்சாரிமேளமும், பாண்டிமேளமும் பரவலான கவனத்தை பெற்றன. கலாபூர்வமாக பார்த்தால், பஞ்சாரிமேளம் நிமிர்வுகொண்டது, முழுமையானது. பாண்டிமேளம் கடுமையானது, ஆக்ரோஷமானது. அமைச்சர்களை வரவேற்பது என்ற பயன்பாடும் இருப்பதால் இன்று அதிகம் பிரபலமான இருப்பது பாண்டிமேளம்தான்.  பஞ்சவாத்தியமும் ஒருங்கிணைவை அடிப்படையாகக்கொண்ட கலைவடிவம்தான். திமிலை, மத்தளம், இடைக்கா, சங்கு, கொம்பு, இலைத்தாளம் இந்த 6 வாத்தியங்களின் ஒருங்கிணைவுதான் பஞ்சவாத்தியம். பஞ்சவாத்தியம் கேட்டால்  ஒலியின்  ததும்பும் இனிமையை, அதன் தாளலயத்தின் அழகை உணரமுடியும்.

செண்டைமேளம், பஞ்சவாத்தியம் போன்றவை தாள இசைக்கான ஒருங்கிணைந்த கலைவடிவங்கள். மாறாக தனிநபர்வெளிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட கலைவடிவங்களும் உள்ளன. அவை ஒருங்கிணைவு சார்ந்த, மனிதனின் கூட்டான கலைவெளிப்பாட்டிலிருந்து மாறுபட்ட தனியாளுமைகளின் கலை.  இவற்றில் மிகவும் பிரதானமானது தாயம்பகா . ’தாய’ என்ற மலையாள சொல்லுக்கு தாளம் என்று அர்த்தம். ’வக’ என்ற மலையாள சொல்லுக்கு தனியாளுமையின் மனோதர்மம் என்று பொருள்.  ’தாய’வும் , ’வக’யும் சேர்ந்துதான் தாயம்வகா. அந்த சொல் மருவி தாயம்பகா என்பதாக ஆகிவிட்டது. ஒரு அடிப்படையான தாளத்திலிருந்து தனிநபர் சிருஷ்டிக்கும் வித்தியாசங்களாலும் அவர் வெளிப்படுத்தும் மனோதர்மங்களாலும் ஆனது தாயம்பகா. பலர் ஒன்றிணைந்து நிகழ்த்தவேண்டிய ஒருங்கிணைவு கொண்ட கலைவடிவங்களில் தனிக்கலைஞர்களின் சுதந்திரவெளிப்பாடுகள் சாத்தியமில்லை. தனியாளுமையின் வெளிப்பாட்டு கலையான தாயம்பகாவில் அந்த சுதந்திரம் உண்டு.  தாளத்தில் சேராதபடி அடித்தல்(offbeat), தாளவேகத்தின் ஏற்ற இறக்கத்தை கேட்பவர்கள் ஊகிக்கமுடியாதபடி நிகழ்த்துதல் போன்றவற்றை  சுதந்திரவெளிப்பாடுகளுக்கான உதாரணங்கள். கர்நாடக சங்கீதத்தின் மிருதங்கத்தில் வாசிக்கப்படும் முறைமையுடன் தாயம்பகாவின் இந்த அம்சங்களுக்கு நல்ல ஒற்றுமை இருக்கிறது. ஒருவிதத்தில் தாயம்பகா என்ற கலைவடிவமே கர்நாடக சங்கீதத்துடன் கேரளத்தின் வாத்தியக்கலையுடனான உரையாடலால் உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம். தமிழகத்தின் ஐப்பசிமாத மழைக்காற்று பாலக்காட்டிலும் வீசுவதுபோல,  கர்நாடக சங்கீதம் பாலக்காட்டை சுற்றியுள்ள  பகுதிகளில் வளர்ச்சியடைந்திருக்கிறது. அதேபோல பாலக்காடு முதல் பொன்னானி வரை உள்ள பாரதப்புழா ஆற்றை ஒட்டிய பகுதிகளில் மட்டும்தான் தாயம்பகா உருவாகி வந்திருக்கிறது. இந்த வரலாற்று உண்மை  தாயம்பகா என்ற இசைவடிவம் கர்நாடக சங்கீதத்துடனான உரையாடலிலிருந்து  உருவானது  என்ற ஊகத்தை உறுதிபடுத்துகிறது.

தாயம்பகா நிகழ்வு

ஆனால் தனிநபர் வெளிப்பாடு சார்ந்த கலையான தாயம்பகாவில் பஞ்சாரி மேளம், பாண்டிமேளம் போன்ற ஒருங்கிணையும் கலைவடிவங்களின்  மாண்பையும், கம்பீரத்தையும் உணரமுடிவதில்லை. மேலும் பஞ்சாரிமேளம் போன்ற ஒருங்கிணையும் கலைநிகழ்வு நீண்டநேரம் நிகழ்கிறது. இந்த நீண்ட கால அவகாசம், அந்த  நிகழ்வு நடக்கும் புறச்சூழலான  ஆலயமுற்றத்தின் காட்சிச்சித்திரங்கள் என எல்லா அம்சங்களும் மேளநிகழ்வுகளின் மேன்மைக்கு துணையாக இருக்கின்றன. பஞ்சாரிமேளம், பஞ்சவாத்தியம் போன்ற ஒருங்கிணையும் இசைநிகழ்வுகள்  ஒவ்வொன்றும் தெய்வம் எழுந்தருளும் சடங்கு (எழுந்நள்ளிப்பு) என்ற மிகப்பெரிய சடங்கின் பகுதியாகத்தான் நிகழ்கின்றன. இரவின் நலுங்கும் வெளிச்சத்தில் ஒளிர்ந்தபடி  தெய்வம் எழுந்தருளும் காட்சி மயங்க வைக்கக்கூடியது, வசீகரமான ஆற்றல்கொண்டது. ஒருபக்கம்  யானையின் பூத்துநிற்கும் மத்தகம் மேல் முத்துக்குடையும் தளிரும் சூடிய கோவிலின் உற்சவமூர்த்தி எழுந்தருளியிருக்கும். பொன்அணிகளால் அலங்கரிக்கப்பட்ட யானைமேல் இருக்கும்  தெய்வம் மலைமேல் நிற்பதாக தோன்றும். அதன்முன் ஒளிரும் வெளிச்சத்தாலும்  களைந்துவிடமுடியாத யானை இருட்டின் ஆழமான பள்ளத்தாக்கு. அந்த மலையையும் பள்ளத்தாக்கையும் பார்த்தபடி செண்டைகளிலிருந்தும், கொம்புகளிலிருந்தும் எழுகிறது தாளத்தின் கடல். ஒருவகையில் இது உற்சவகால ஆலயமுற்றத்தில் தெய்வம் எழுந்தருளும் சடங்கு மட்டுமல்ல. மலையும், காடும், கடலும் நிறைந்த கேரள நிலக்காட்சியின் பதிலிவடிவம். அபூர்வமான பிரியத்துடன் கேரளத்தின் செழிப்பான முழுஇயற்கையும் அதன் தாளவாத்தியக்கலைக்கு பின்னணியாக விரிந்து நிற்கிறது. கேரளத்தின் வேறு எந்த கலைக்கு கேரளத்தின் இயற்கை எழிலின் முழுமையான பாக்கியம் கிடைத்திருக்கிறது? இந்த மகத்தான பின்னணியில் நடக்கும் மேளநிகழ்வு கேரளத்தின் மிகப்பெரிய கூட்டுக்கலை. ஒரு நிறைந்த பஞ்சாரிமேள நிகழ்வில் 125 பேர் பங்கெடுக்கிறார்கள். மேளக்காரர்களின் முன்நிரையில் பதினைந்து கலைஞர்கள் இருப்பார்கள். அவர்கள் உருட்டிக்கொட்டும் செண்டை வாத்தியக்காரர்கள். அவர்களுக்கு பின்வரிசையில் செண்டையின் வலந்தலையில்3 தாளம்பிடிப்பதற்காக நாற்பத்தைந்துபேர். மூன்றுவரிசைகளாக அவர்கள் நிற்கிறார்கள். அவர்களுக்கு நடுநடுவே இலைத்தாளம் இசைப்பவர்களும் உண்டு. அவர்கள் முப்பதுபேர். மொத்தமாக இந்த 90 பேர் அடங்கிய தாளவாத்தியக்குழுக்கு எதிரே 15 குறுங்குழல் இசைப்பவர்களும், பதினைந்து கொம்பிசைப்பவர்களும் நிற்பார்கள். ஒட்டுமொத்தமாக 120 பேர் கொண்ட பெரிய குழு. இரவின் தனிமையில் அந்த மனிதக்குழு மகத்தான சிருஷ்டிக்கு உயிர்கொடுக்கிறது.

அந்த தருணத்தில் மிகமெல்ல செண்டையில் கோல்கள் விழுவதை கேட்கலாம். மேளம் தொடங்கிவிட்டது. பஞ்சாரிமேளத்தின் ஒன்றாம் காலம்4 தொடங்கியிருக்கிறது. 96 அக்‌ஷரகாலம்5 வரும் சாவதானமான தாளவட்டம்6 ஒன்றாம் காலத்தில் அப்படியே வந்து நிறைகிறது. ஒவ்வொரு தாளவட்டம் முழுமையடையும்போதும் கலாசம்7 உண்டு. இயற்கையில் ஒரு பருவத்திற்குபின் அடுத்தபருவம் வருவதைப்போல செண்டை அடுத்த தாளவட்டத்தை நோக்கி நகர்கிறது. பருவமாற்றத்தின் கொண்டாட்டம் போலத்தான் ஒவ்வொரு கலாசமும். ஒன்றாம்காலம் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் நீளக்கூடியது. அது முடிந்தால் அடுத்தது இரண்டாம்காலம். அப்போது தாளத்தின் வேகம் இரண்டுமடங்கு அதிகரித்திருக்கும். இந்த இரண்டாம் காலத்தில்  48 அக்‌ஷரங்கள் வந்து நிறைகின்றன. அரைமணிநேரம் நீளும் இரண்டாம்காலம் முடிந்தால் செண்டை  மூன்றாம்காலம் நோக்கி நகர்கிறது. அக்‌ஷரகாலத்தின் நீளம் 24 ஆக குறைகிறது. ஒவ்வொரு காலத்தையும் இவ்வளவு நேரம் இசைக்கவேண்டும்  என்றும் சரியாக இந்த இடைவெளியில்  அடுத்தகாலத்திற்கு உயரவேண்டும் என்பதை தீர்மானிப்பது மேளம் அடிக்கும் குழுவில் நடுவே நிற்கும் ஆள்தான். அவரை வைத்துதான் செண்டை அடிப்பதன் காலம் கணிக்கப்படுகிறது. அதனால் அவரை பிரமாணி என்று சொல்லலாம். முக்கியத்துவம்கொண்டவர் என்பதற்கான மலையாச்சொல்லும் ‘பிரமாணி’தான். ஒருவேளை மலையாளத்தின் பொதுமொழிக்கு இந்த சொல்லை அளித்ததும் இந்த செண்டைக்குழுவின் பிரமாணி தானா? நான்கு காலங்களும் முடிந்து செண்டை கடைசியாக ஐந்தாம் காலத்தை தாண்டும்போது தாளத்தின் வேகம் geometric progression என்ற விகிதமுறையில் பதினாறின் இருமடங்காக உயர்ந்திருக்கும். ஆறு அக்‌ஷரங்கள் கொண்ட தாளவட்டத்தில் ஆவேசமான வேகத்தில் செண்டை முழங்கும். அதன் ஒசை உச்சத்தில் தீவிரமடையும். அந்த ஒலி காற்றையே விரைக்கவைக்கும்.  தாளத்தின் போதை செண்டை அடிப்பவரிலிருந்து  கேட்பவருக்கு தொற்றிக்கொள்ளும். தாளத்தின் வெறி அனைவருக்கும் பரவும். அதை மலையாளத்தில் கலி என்பார்கள். வெறிகொண்ட தாளம் ’கலிகாலம்’ என்று சொல்லப்படுகிறது. தாளவேகம் அதிகரித்து கடைசியில் இனி சாத்தியமில்லை என்ற உச்சப்புள்ளியில் அச்சமூட்டும் பெருவெடிப்பாக உடைந்து சிதறிவிடுகிறது. இதைவிட பெரிய ஓசை மேள நிகழ்விற்கு பிறகு வெடிக்கப்படும் வெடியோசை மட்டுமாகத்தான் இருக்கும். பஞ்சாரி மேளம் என்பது தாளவேகத்தின் கீழ்ஸ்தாயியில் தொடங்கி கடைசியில் ஆவேசமான தாளகதியில் பூமியிலிருந்து தொடங்கி உயர்ந்துயர்ந்து வானில் முடியும். கிட்டத்தட்ட இரைச்சலுக்கு சமானமான கலை.

பெருவனம் குட்டன் மாரார்- திரிச்சூர் பூரத்திற்கான மிகப்பெரிய செண்டைமேளக்குழுவை தலைமை தாங்கும் பிரமாணி

பெரிய பின்னணி. கிட்டத்தட்ட 120 பேர்கொண்ட இசைக்குழு. அவர்களின் ஒருங்கிணைவில் திரண்டுவருகிறது தாளம். அந்த தாளத்தின் வடிவத்தை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். ஒரு பெரிய பிரமிடின் அமைப்பு அதில் உருவாகிவருவதை உணரமுடியும். தாளம் சாவதானமான வேகத்தில் பிரமிடின் விசாலமான அஸ்திவாரம் என்பதுபோல தொடங்கி தாளவேகம் அதிகரித்து, அதிகரித்து உச்சத்தில் அது  ஒரு ஸ்தூபியின் முனைபோல கூர்மையான, வேகமான தாளமாக  உயர்கிறது. ஆம், மேளம் என்ற ஒருங்கிணையும் கலை வழியாக நிகழ்த்தப்படும் தாளங்கள்   ஒரு பிரமிடின் வடிவத்தில்தான் இருக்கின்றன. நான்குமணிநேரம் நீளும் நீண்ட உழைப்பில் ஒரு மனிதக்குழு உயர்த்தும் ஒலிவடிவ பிரமிட். 96 அக்‌ஷரகாலம் நிறைந்து உருவாகிய தாளவட்டங்களின் ஒன்றாம் காலம் தான் அந்த பெரிய அமைப்பின் அஸ்திவாரம். ஒரு தாளவட்டத்திற்கு பிறகு அடுத்தது என செங்கலுக்கு பக்கவாட்டில் இன்னொரு செங்கல் என அது அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு அடுக்கு முழுமையடைகிறது. அதன்பிறகு இரண்டாம்காலம். 48 அக்‌ஷரங்களால் ஆன அடுத்த அடுக்கு ஏற்கனவே உள்ள அஸ்திவார அடுக்கிற்கு மேலே அடுக்கப்படுகிறது.  அப்படியே அது கோபுரமாக  உயர்கிறது. அந்த அடுக்கிற்கு மேலே 24 அக்‌ஷரகாலத்தின் தாளவட்டங்கள் நிறைந்த மூன்றாவது அடுக்கு. அந்த அமைப்பு இன்னும் மேலே உயர்கிறது. ஒவ்வொரு அடுக்கும் வரிசைப்படுத்தி வைத்த தாளவட்டங்களின் செங்கற்களால் அமைக்கப்படுகிறது. தாளவட்டத்தின் நீளம் பாதியாகி தாளவேகம் அதிகரிக்கும்போது , அடுக்கு உயர்ந்து கோபுரம் அப்படியே வளர்ந்து நிற்கிறது. இந்த நிகழ்வின் இரண்டு அடிப்படை விசைகள் – தாளவட்டமும், தாள வேகமும். தாள வட்டங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்பவை.  தாளத்தின் வேகம் அதிகரித்தபடியே இருக்கிறது. மீண்டும் மீண்டும் நிகழ்வதும், தாளவேகத்தின் வளர்ச்சியும் பரஸ்பரம் எதிரானவை என்றாலும் அவை ஒன்றை ஒன்று நிரப்பக்கூடியவை(complementary). அவை அடுக்குகளாக குறுக்கும்நெடுக்குமாக ஒன்றுசேர்ந்து தாளங்களால் ஆன பிரமிட் கோபுரத்தின் பணியை பூர்த்தி செய்கின்றன. வானில் அது உயர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டைப்போல பெரிய ஆலயகோபுரங்கள் ஒன்றும் இல்லாத கேரளம், அதன் உற்சவகால இரவுகளில் இந்த  ஒலியாலான மகத்தான கோபுரங்களை உயர்த்திக்கொண்டேயிருக்கிறது.

தாள வட்டங்கள் மீண்டும்மீண்டும் நிகழ்வதும், தாள வேகத்தின் வளர்ச்சி – தாளத்தின் தொழில்நுட்பம் முழுமையாவது இந்த இரண்டு எதிர் எதிரான அமைப்புகளைக் கொண்டுதான். பஞ்சாரிமேளத்தில் மட்டுமல்ல, பஞ்சவாத்தியத்திலும் தாயம்பகாவிலும் எல்லாவகையான தாளவாத்தியம் சார்ந்த  கலைவடிவங்களிலும் திரும்பத் திரும்ப நிகழ்வது, வளர்ச்சி என்ற  இரண்டு கண்ணிகள்தான் அடிப்படை . ஒருவிதத்தில்  பொருளேற்றம் செய்யப்பட்ட  எல்லா அமைப்புகளுக்கும் குறுக்கும் நெடுக்குமாக இந்த இரண்டு கண்ணிகள் தான் ஊடுவியிருக்கின்றன. குறுக்கே  கிடைமட்டமாக உள்ள ஒரு கோட்டிலும் செங்குத்தாக நீளும் மற்றொரு கோட்டிலும்தான் எல்லா அமைப்புகளும் நிலைநிற்கின்றன. மொழியியல் அடிப்படையில் கிடைமட்டமாக உள்ளதை  syntagm என்றும் செங்குத்தாக உள்ளதை paradigm என்றும் சொல்லலாம். மீண்டும் மீண்டும் வரும் தாளவட்டங்களின் வரிசை பஞ்சாரிமேளத்தின் syntagm.  உயர்ந்து உயர்ந்துபோகும் தாள வேகத்தின் வளர்ச்சிதான் அதில் paradigm. மொழியியல்படி, இன்னும் ஆழமாக சொல்லவேண்டுமென்றால்  இந்த syntagm என்பது இயற்கையையும், paradigm என்பது பண்பாட்டையும் சுட்டக்கூடியது. திரும்பத் திரும்ப நிகழ்வது x வளர்ச்சி என்ற எதிரீட்டிற்கு சமானமாக இயற்கை x பண்பாடு என்ற மற்றொரு எதிரீடும் மேளத்தின் அமைப்பில் இழைந்திருக்கிறது என்று சொல்லலாம். மேளத்தின் மீண்டும் மீண்டும் நிகழ்வது இயற்கையையும் அதிலுள்ள வளர்ச்சி பண்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இயற்கை என்பதே மீண்டும் மீண்டும் நிகழ்வதுதான் இல்லையா? திரும்பத் திரும்ப நிகழும் இரவுபகல்கள், பருவங்களின் சுழற்சி. பழைய கலைகளில் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுவது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக இருப்பதற்குக் காரணம் இயற்கைதான். தாளவாத்தியங்களில் தாளவட்டம் என்ற கற்பிதம் வந்தது அவ்வாறுதான். ஆனால் இயற்கையில் சுழற்சிமட்டும்தான் இருக்கிறது. வளர்ச்சி இல்லை. இரவுபகல்கள் சுழன்று சுழன்று வேகம் அதிகரிப்பதுமில்லை. அந்த சுழற்சி 365-வது முறைவரும்போது நாட்களின் நீளம் ஆறுமணிநேரமாக குறைவதுமில்லை. வளர்ச்சி என்பது மனிதன் உருவாக்கிய கற்பனை. அவனுக்கு இந்த கற்பனைக்கு வந்து சேர்வதற்கான காரணம் என்ன? அவனுடைய அடிப்படைவிசையான காமத்திலிருந்துதான்  அவன் அந்த கற்பனையை அடைந்தான் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்லலாம். சாவதானமான தாளத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து இறுதியில் ஆற்றலின் பெருவெடிப்பில் உடைந்து சிதறிவிடும் காமச்செயல்பாடுதான் ஆரோஹணம் என்ற கற்பனையை அவனுக்கு அளித்திருக்க வேண்டும். நாகரிக வளர்ச்சி என்ற கருதுகோளின்  வேர்கூட இதுவாகாத்தான் இருக்குமோ? அப்படியாக தாளவரிசை மீண்டும்மீண்டும் நிகழ்வது அதன்  இயற்கையம்சத்தை சுட்டுவதுபோல தாளவேகம் அதிகரிப்பது அதன் மனிதத்தன்மையையும் பண்பாட்டு அம்சத்தையும் சுட்டுகிறது. திரும்பதிரும்ப நிகழ்வதல், வளர்ச்சி இரண்டின் வழியாகவும்  உயர்ந்த ஒரு உருவத்தை தன் கைகளால் சிருஷ்டிக்கும் தாளவாத்தியக்கலையை இயற்கையின் மனிதமயமாக்கப்பட்ட வடிவம்  என்பதாக கொள்ளலாம். எல்லா கலைகளும் இயற்கையின் மானுடவடிவங்கள்தான் என்று மார்க்ஸிஸ்டுகள் ஒரு பாட்டி கதையைப்போல அடிக்கடி சொல்வார்கள். ஆனால் அந்த தத்துவத்தின் இவ்வளவு  தெளிவான சாட்சியாக நம் தாளவாத்தியங்கள கண்முன்னே இருக்கும்போதும் அவர்கள் யாரும் அதை கவனிக்கவில்லை. அந்த தத்துவத்தின் அழகிய வெளிப்பாடு கேரளத்தின் மேளக்கலை.

ஆனால் எந்த இயற்கை? வெறும் இயற்கை என்ற அருவமான கருத்துரு அல்ல. நம் கண்முன்னே உள்ள செழிப்பான கேரளத்தின் நிலம்தான். யானையும், மலையும் பள்ளத்தாக்குகளும், செறிந்த காடுகளாலும் ஆன கேரள நிலம்தான். தாள இசை என்ற  தூயபிரபஞ்சத்திற்கு பின்னணியாக, அரவணைப்பாக அது நம்மை வாழ்த்தியபடியே இருக்கிறது. இடவப்பாதி மழை பரவி (தென்மேற்கு பருவமழை) காடு தளிர்ப்பதுபோல, மேளக்கலை நிகழ்வு தொடங்குவதற்கான சமிக்ஞையான கொம்பின் ஓசை படர்ந்து யானைமத்தகங்களுக்கு மேல் சாமரம் விரிகிறது. பருவங்கள் ஒவ்வொன்றும் வந்து போவதுபோல கலாசங்கள் எழுந்து மறைகின்றன. கலாசம் முடிவு அல்ல, மீண்டும் வரப்போவதன் தொடக்கம். மீண்டும் விஷு வரும். மழைவரும். ஒவ்வொரு தளிரிலும் பூ வரும், காய் வரும். பருவ சுழற்சிகளின் சங்கிலித்தொடர் கண்ணி கண்ணியாக நகர்கிறது. கேரள இயற்கையின் நல்லூழ் செண்டை அடித்தலின் ஒவ்வொரு இடைவெளியிலும் நிலைத்து நிற்கிறது. சொந்த இயற்கையின் அழகான மனிதவடிவத்தை இந்த கலைநிகழ்வில் ஒவ்வொரு மலையாளியும் கண்டுகொள்கிறான். உற்சவகாலத்தில் ஒவ்வொரு ஆலயமுற்றத்திலும் தன் இதயத்துடிப்பின், ரத்தஓட்டத்தின் தாளத்தால் எழுப்பப்பட்ட ஒலியின் கோபுரம் வழியாக நாம் நம்மையே உயர்த்திக்கொள்கிறோம். கேரளத்தின் கலை, அதாவது மிகமிக மலையாளத்தன்மைகொண்ட கலை தாளஇசை தான். இந்த தாளத்தை, இந்த ஒலிக்கட்டுமானத்தை தவிர வேறொன்றும் நம்முடைய சொந்த கலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று அது நம்மை ஒவ்வொரு கணமும் உணர்த்துகிறது.

******

1. பஞ்சாரிமேளம்– செண்டையை அடிப்படையான தாளக்கருவியாகக்கொண்ட கூட்டான இசைநிகழ்வு.  ஒரு  பஞ்சாரிமேள நிகழ்வில்  120 பேர் இசைப்பார்கள். மலையாளத்தில் கூட்டான இசைக்கருவிநிகழ்வுகள் மேளம் என்று அழைக்கப்படும். பஞ்சாரிமேளம் கோவில் உற்சவ காலங்களில்  நிகழ்த்தப்படுவது.  பஞ்சாரிமேளத்தில் செண்டையுடன் குழல், கொம்பு, இலைத்தாளம் போன்ற இசைக்கருவிகள் செண்டைக்கு துணைக்கருவிகளாக செயல்படக்கூடியவை.

2. செண்டைமேளம்– பல செண்டைகளை ஒருங்கிணைப்பதுடன், குழல், இலைத்தாளம், கொம்பு போன்ற மற்ற இசைக்கருவிகளையும் ஒருங்கிணைக்கும் கலைவடிவம். பல்வேறு செண்டைகள் இணைகின்றன, கூடவே மற்ற இசைக்கருவிகள் செண்டைகளுடன் ஒருங்கிணைகின்றன. அந்த இணைவால்தான் இது மேளம் (இணைவு) என்று சொல்லப்படுகிறது. அந்த இணைவுகளில் பிரதானமானது செண்டை என்பதால் செண்டைமேளம்)

3. வலந்தலை– செண்டையின் வலப்பக்கம். வலப்பக்கம் தாளபிடிப்பதற்கான அழுத்தமான ஒலியை, நேர்க்கோல் ஒலியை எழுப்ப பயன்படுத்தக்கூடியது. இதை வீக்குசெண்டை என்று சொல்வார்கள். அதற்கேற்படி வலப்பக்கம் செண்டையில் இழுத்து கட்டுப்படும் மாட்டுத்தோல் தடிமனாக, பல அடுக்குகள் கொண்டதாக இருக்கும். மாறாக இடந்தலை என்பது செண்டையின் இடதுபக்கம். இடப்பக்கம் இது மெல்லிய ஒலிமாறுபாடுகளை உருவாக்குவதற்காக, உருட்டிக்கொட்டுவதற்கு பயன்படுத்தப்படுவது. இதை உருட்டுச்செண்டை என்றும் சொல்லப்படுகிறது.

4. ஒன்றாம் காலம்- கேரளத்தின் தாள இசையில் காலம் என்பது தாளத்தின் வேகத்தை (tempo) குறிக்கக்கூடியது. ஒன்றாம் காலம் என்பது மிக சாவதானமான நிகழ்த்துவது. இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என காலம் உயரும்போது தாளத்தின் வேகம் அதிகரிக்கும். 

5. அக்‌ஷரகாலம்- கேரளத்தின் தாள இசைமரபில்  காலத்திற்கான அடிப்படை அலகு அக்‌ஷரகாலம். தமிழ் இலக்கணத்தில் மாத்திரை என்ற கால அளவைக்கு நிகரானது. அக்‌ஷரங்களை வைத்து என்ன தாளவகைமை என்று சொல்லிவிடலாம். அக்‌ஷரங்கள் 96, 48, 24 என்ற  6இன் மடங்குகளாக  இருப்பது பஞ்சாரிதாளம். 96 அக்‌ஷரகாலம் என்பது மந்தமான தாள வேகம் கொண்டது, அக்‌ஷரங்கள் குறையக்குறைய தாள வேகம் அதிகரித்தபடியே இருக்கும்.

6. தாளவட்டம்- கேரள இசைமரபில் செண்பை, சம்பை, செம்படை, அடந்தை, பஞ்சாரி, ஏகதாளம் என ஆறு அடிப்படையான தாள வகைமைகள் உண்டு. ஒவ்வொரு தாள வகைமைக்கும் பல தாளவரிசைகள் உண்டு. அந்த தாளவரிசை ’தாளவட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

7. கலாசம் சம்பை, பஞ்சாரி, அடந்தை என ஒவ்வொரு  தாளவகைமையும் பல தாளவட்டங்களால் ஆனது. ஒரு தாளவட்டம்  முடிந்ததையும் அடுத்த தாளவரிசை தொடங்குவதையும் அறிவிக்கக்கூடிய தாளக்குறிப்புகள் கலாசம் என்று அழைக்கப்படுகிறது.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

2 Comments

  1. மிகச் சிறப்பான கட்டுரை. ஒவ்வொரு இசை வகைமை பற்றியும விரிவான விளக்கியுள்ளது. அதனைப்பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது. வாழ்த்துகள்

  2. மலையாள பண்பாட்டில் ஆழ்ந்து வாழும் ஒருவரால் எழுதப்பட்ட இந்த கட்டுரையை கேரள பண்பாட்டை ஆழமாக உள்வாங்கும் ஒருவரால் தான் நேர்த்தியாக மொழி பெயர்க்க முடியும் என்று தோன்றியது. சமீபத்தில் வாசித்த மிக அழகான மொழிபெயர்ப்பு கட்டுரை. நன்றி மணவாளன்!

உரையாடலுக்கு

Your email address will not be published.