/

ஏழு புலன்களுக்கான ஒரு கட்டிடக்கலை : ஜுகானி பலாஸ்மா

தமிழில் : ஜனார்த்தனன் இளங்கோ

புனித பால் தேவாலயம், மெல்போர்ன்.

ஜுகானி பலாஸ்மா (Juhani Pallasmaa) (பிறப்பு : 14 செப்டம்பர், 1934) பின்லாந்தைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர், எழுத்தாளர், கல்வியாளர். ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி 1998-இல் ஓய்வு பெற்றார். இது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த அவருடைய “An Architecture of the Seven Senses” என்னும் கட்டுரையின் தமிழ் வடிவம். இக்கட்டுரையில் கட்டிடக்கலைக்கும் நம் புலனுணர்ச்சிகளுக்கும் இடையிலான தொடர்பை பலாஸ்மா கவித்துவமான வழியில் ஆராய்ந்து வெளிக் கொணர்கிறார். இக்கட்டுரையை அடித்தளமாகக் கொண்டே “The Eyes of the skin” என்னும் நூலை பின்னர் எழுதியதாக அதன் முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார். இந்த நூலானது கட்டிடக்கலை குறித்த முக்கியமான ஆக்கமாக உலகெங்கிலும் வாசிக்கப்படுகிறது.

புலனுணர்ச்சி சார் வடிவமைப்பு

மறுமலர்ச்சி காலகட்டத்தில் ஐம்புலன்களையும் ஒரு படிநிலையாக்கி பார்வையுணர்ச்சியை அதன் மேல் அடுக்காகவும், தொடுகையுணர்ச்சியை கீழ் அடுக்காகவும் பொருத்திப் புரிந்துகொள்ளும் போக்கு இருந்தது. பார்வையை நெருப்புடனும் ஒளியுடனும், செவிப்புலனை காற்றுடனும், நுகர்ச்சியை நீராவியுடனும், சுவையை நீருடனும், தொடுகையை பிரபஞ்சத்துடனும் என்று ஐம்புலன்களும் உடலின் பஞ்ச பூத உருவகத்தோடு இணைக்கப்பட்டது.

மனிதனானவன் பார்வையுணர்வோடு மாத்திரம் எப்போதும் தனித்து விடப்படவில்லை. கேட்டல் உணர்ச்சியின் ஆதிக்கத்தில் இருந்து படிப்படியாக நகர்ந்து தான் அவன் பார்வைத்திறன் நோக்கிச் சென்றான். வால்டர்.ஜே.ஓங்க் தன்னுடைய “Orality and Literacy” என்னும் புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : “உரையாடலானது வாய்வழியில் இருந்து எழுத்துவழிக்கு மாறுவது என்பது சப்தங்களில் இருந்து காட்சிகளுக்கு மாறுவது தான். தொடர்புறுத்தலிலும் சிந்தனை உலகிலும் கோலொச்சிக் கொண்டிருந்த செவிப்புலனின் ஆதிக்கத்தை அச்சு ஊடகம் தான் காட்சி வழிக்கு மாற்றியது. இது இன்றைய உலகத்தை ஈவிரக்கமற்ற, மனிதத் தன்மை நீக்கமடைந்த உண்மைகளைக் கொண்டிருக்கும் ஒன்றாக மாற்றிவிட்டது.”

ஒரு கட்டிடத்துடனான நம் உரையாடல் என்பது எல்லா புலனுணர்வுகளையும் உள்ளடக்கியது. அதன் பருவடிவின், இடைவெளியின் மேன்மையை கண், காது, நாசி, தோல், நாக்கு, உடல் மற்றும் தசைநார் என்னும் ஏழு புலங்களும் சரிசமமாக அளவிடுகிறது. கட்டிட வடிவமைப்பானது இந்த ஏழு புலனணுபவங்களும் ஒன்றோடொன்று உறவாடி முயங்குவதை உள்ளடக்கியது.

மெர்லியோ பான்டியின்(Merlea Ponty) சொற்களில் சொல்வதென்றால், “பொருட்களின் ஆழத்தையும், வேகத்தையும், மென்மையையும், உறுதித்தன்மையையும், -அதன் வாசனையையும் கூட- கண்டு கொள்கிறோம். ஒரு ஓவியர் உலகளாவிய தன்மையை தன் ஓவியத்தில் வெளிப்படுத்த விரும்பினால் அவரின் வண்ணச் சேர்க்கை சிக்கலான எல்லா உணர்வு நிலைகளையும்  வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும் பட்சத்தில் அந்த ஓவியமானது ஒருங்கிணைவையும் பண்முகத்தன்மையையும் காண்போரிடத்தில் உண்டாக்காமல் வெறும் சாத்தியக்கூறுகள் என்ற அளவிலேயே நின்றுவிடும்.”

ஒரு வனப்பகுத்திகோ, ஜப்பானியத் தோட்டத்திற்கோ செல்வது நமக்கு வலிமையையும் புத்துணர்ச்சியையும் ஊட்டுவதாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய அனைத்துப் புலன்வழிச் சாத்தியங்களும் அங்கு செயலூக்கம் பெற்று ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதாக இருக்கிறது. இப்புறவுலகம் என்பது புலன்களால் உருவானது என்னும் உணர்வு இதன்மூலம் நன்றாக தொடர்புறுத்தப்பட்டு நம்மில் அழுத்தமாகப் பதிகிறது.

ஒரு புலணுனர்ச்சியால் பெறப்படும் மனஉருவகமானது வேறொரு புலனுணர்ச்சியின் மனஉருவகத்திற்கு ஊற்றுமுகமாக இருக்கிறது. எளிமையான தேநீர் சடங்கில் இருந்து எவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களாலான மனஉருவகம் உண்டாகிறது என்று “The Book of Tea” நூலில் ‘Kakuzo Okakura’ அற்புதமாக விளக்குகிறார்.  “ஆழ்ந்த அமைதியில் இரும்புக் கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. பாத்திரத்தின் அடியில் உள்ள இரும்புத் துண்டுகள் வினோதமான மெல்லிசை ஒன்றை மீட்டிக் கொண்டிருக்க, கெட்டில் பாடிக்கொண்டிருக்கிறது. இப்பாடலின் எதிரொலியில் ஒருவர் தொலைதூரத்தில் உள்ள மேகங்கள் பொழிந்து கொண்டிருப்பதையும், கடலலைகள் பாறைகளின் நடுவே மோதி உடைந்து கொண்டிருப்பதையும்,  மழைக்காற்று மூங்கில் காடுகளின் ஊடாக வீசிச் செல்வதையும், தூரத்து மலையில் பைன் மரங்கள் முனுமுனுப்பதையும் கேட்கமுடியும்”

நம்முடைய காரண அறிவின் மதிப்பீடுகளுக்கான தகவல்களை தொடர்புறுத்துவதோடு புலன்களின் பணி நின்றுவிடுவதில்லை. புலனுணர்ச்சியால் உருவாகும் எண்ணங்களையும் அவை வெளிப்படுத்துகின்றன.

1. விழித்திரையின் வடிவமைப்பும் தொலைந்துபோன நெகிழ்தன்மையும்

நம் காலகட்டத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பானது வெறும் கண் விழித்திரையின் கலையாக மட்டுமே மாறத் துவங்கியுள்ளது. கட்டிட வடிவமைப்புகள் காமிராவின் கண்களால் அவசரகதியில் கைப்பற்றப்படும் புகைப்படங்கள் என்னும் அளவிற்கு சுருங்கிவிட்டது. பார்வைக் கோணங்களும் தட்டையான படங்களாக மாறி அதன் நெகிழ்தன்மையை இழந்துவிட்டிருக்கிறது. நம்முடைய இருப்பை முழுமையாக அனுபவிக்காமல், இவ்வுலகத்தை வெளிப்புறத்தில் இருந்து விழித்திரையில் உருவாகும் புகைப்படங்களாக மட்டும் காணும் பார்வையாளர்களாக மாறிவிட்டோம்.

கட்டிடங்கள் நம் உடலின் மொழியிலிருந்தும் ஞானத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டு அதன் நெகிழ்தன்மையை இழக்கும் போது முற்றிலும் அந்நியமடைந்து பார்வையுணர்வின் பிடியில் தனித்து விடப்படுகிறது. மனித உடலுக்கு ஏதுவான வகையில் அதன் அளவுகளும் தொடுவுணர்வும் இல்லாதபோது, ஒரு கட்டிடம் தட்டையாகவும், கூராகவும், பொருத்தமில்லாமல்  செயற்கையாகவும் ஆகிறது. கட்டிடத்தின் கட்டுமானம்  நடைமுறையில் இருந்து விலகும் போது அதன் வடிவமைப்பானது காட்சிக்காக அமைக்கப்பட்ட ஒரு நாடக மேடை போல மாறிவிடுகிறது.

செங்கல், மணல் மரம் போன்ற இயற்கையான கட்டுமானப் பொருட்களானது நம் பார்வையை அவற்றினுள்ளே ஊடுருவ அனுமதிப்பதன் வழியாக அப்பருப்பொருளின் இருப்பை உறுதி செய்ய உதவுகிறது. மேலும் இயற்கையான கட்டுமானப் பொருட்கள் அதன் வயதை, வரலாற்றை, மனிதப் பயன்பாட்டை நமக்கு வெளிப்படுத்துவது. ஒரு பொருளின் தேய்மானத்தை அறிவிக்கும் வெளிப்பகுதி என்பது அதைத் துய்க்கும் அனுபவத்திற்கு மெருகூட்டுவது. ஏனெனில் கால மாற்றமானது பருப்பொருட்களின் இருப்பில் தான் வெளிப்படுகிறது. ஆனால் இன்றைய கட்டிடப் பொருட்களான கண்ணாடிப் பட்டைகள், எனாமல் பூச்சிட்ட உலோகங்கள், செயற்கையன சேர்மானத்தில் உருவாக்கப்படும் பொருட்கள்(synthetic materials) போன்றவை எந்தவித மாறுதல்களுக்கும் உட்படாத உறுதியான மேற்பரப்பைதான் வெளிக்காட்டுகிறது. இது எந்த வகையிலும் அப்பொருளின் தன்மையையோ, வயதையோ தெரிவிப்பதில்லை.

வடிவமைப்பைத் தாண்டி நமது கலாச்சாரமும் பெருமளவில் நடைமுறையில் இருந்து விலகி, புலனுணர்வும் கவர்ச்சியும் நீக்கம் பெற்ற மனிதத் தொடர்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஓவியமும் சிற்பமும் தங்களுக்கான உணர்ச்சிகளை பெருமளவில் இழந்து விட்டது. பெரும்பாலான தற்கால கலைப் படைப்புகள் உணர்வு ரீதியான நெருக்கத்தையும் ஆர்வத்தை இழந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தற்போதைய காலகட்டத்தில் வடிவமைப்புகளுக்கு கொடுக்கப்படும் அறிவுசார்ந்த, கோட்பாடு சார்ந்த அதீத முக்கியத்துவமானது அவற்றில் இருந்து இயற்பியல் தன்மையையும், புலனுணர்வையும் நீக்கி விடுகிறது.

2. ஒலிசார் நெருக்கம்

தொலைதூரத்தில் இருந்து வரும் ரயில் சத்தத்தினால் நள்ளிரவில் துயில் கலைந்து, அதன் பின்னர் தூக்கத்தில் ஒரு நகரின் விரிவையும், அதனூடாக சிதறிப் பரவியிருக்கும் மக்கள் கூட்டத்தையும் கண்ட ஒருவருக்கு ஒலியின் கற்பனா சக்தியைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இரவில் ரயில் எழுப்பும் ஒலியானது மொத்த நகரமும் துயிலில் தோய்ந்திருக்கிறது என்னும் உணர்வை நமக்கு அளிக்கிறது. இருட்டில் ஒரு பாழடைந்த இடத்தில் சொட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளிகளின் ஓசையால் பிரமிப்படைந்த ஒருவர் இருட்டான வெற்றிடத்தில் இருந்தும் கூட செவிகளால் ஒரு குறிப்பிட்ட அளவை செதுக்கியெடுக்க இயலும் என்பதை ஒத்துக் கொள்வார். காதுகளால் அளவிடப்பட்ட அந்த வெளியைதான் நம் ஆழ்மனம் வெற்றிடமாகப் புரிந்துகொள்கிறது.

யாரும் வசித்திடாத காலியான வீட்டில் எந்தவொரு சத்தமும் ஏன் அவ்வளவு கடுமையாக ஒலிக்கிறது? அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் வசிக்கும் வீட்டில் புழக்கத்தில் உள்ள எண்ணற்ற பொருட்களின் மேல் எதிரொலித்து ஒலி எவ்வளவு மென்மையாக இருக்கிறது என்று உணரலாம். ஒவ்வொரு கட்டிடமும் அதன் ஒலியின் குணாதிசயத்திற்கேற்ப நமக்கு அணுக்கமாகவோ, நியாபகார்த்தமாகவோ, நம்மை வரவேற்கும் விதத்திலோ அல்லது நிராகரிக்கும் விதத்திலோ, அடைக்கலம் கொடுக்கவோ அல்லது உபசரிக்கவோ செய்கிறது.

கண்ணோட்டம் நாம் தனித்திருப்பது போன்றதொரு உணர்வைக் கொடுக்கிறது. ஆனால் கேள்விப்புலன் ஒருவகை கூட்டுமனப்பான்மையை உருவாக்குகிறது. நம் பார்வையானது ஒரு தேவாலயத்தில் அதனுடைய ஆழங்களில் தனித்து அலைகிறது. எனினும் அங்கு நமக்குக் கேட்கும் உள்ளுடலின் ஓசையானது அங்குள்ள பருவெளியின் தொடர்பைப் புரிந்து கொள்ள வைக்கிறது. ஒரு மாய வித்தை அரங்கேறும் வேளையில் புதிரோடு தனிமையில் அமர்ந்து அதைப் பார்க்கிறோம். எனினும் மர்மம் கட்டவிழ்க்கப்பட்டு அரங்கமே கைத்தட்டலால் அதிரும்போது நாம் அங்குள்ள கூட்டத்தோடு ஒன்றிணைந்து விடுகிறோம். அதுபோல் நாம் நடந்து செல்கையில் வீதியில் கேட்கும் ஆலய மணியோசை ஒருவகையில் நம்முடைய கூட்டாட்சியை நினைவுறுத்துவது. கற்கள் பதித்த சாலையில் நடக்கும் எதிரொலியானது நமக்கு ஒருவகை ஆற்றலை அளிக்கிறது. ஏனெனில் சுற்றியுள்ள சுவர்களில் மோதித் துள்ளும் அந்த ஒலி நம்மை அந்த இடத்தோடு நேரடியாக உரையாடச் செய்கிறது. ஒலியானது ஓரிடத்தை அளவிட்டு அந்த அளவை நாம் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. நாம் ஓர் இடத்தின் விளிம்புகளை செவிகளைக் கொண்டே தீட்டுகிறோம். ஆனால் தற்காலத்தைய நகரம் அதன் எதிரொலியை இழந்துவிட்டது.

சைகோஜி(Saihoji) : ஜப்பானியத் தோட்டம்

3. அமைதி, நேரம் மற்றும் தனிமை

செவிப்புலன் சார்ந்த கட்டிட வடிவமைப்பு உருவாக்கும் அடிப்படையான அம்சம் என்பது அமைதி தான். ஒரு கட்டிடத்தின் கட்டுமானமானது பருப்பொருளாலும் வெளியாலும் அமைதிப்படுத்தப்பட்ட ஒரு நாடகத்தை வெளிப்படுத்துகிறது. அச்சத்தில் கல்லென உறைந்த அமைதியே ஒரு கலைக்கட்டுமானம் எனலாம். கட்டிடத்தின் அழுக்குகள் எல்லாம் நீங்கி அதில் பணிபுரிபவர்களின் இரைச்சல் காலியானதும் அந்தக் கட்டிடம் காத்திருப்பின், பொறுமையின், அமைதியின் அருங்காட்சியகம் போல மாறிவிடுகிறது. எகிப்திய ஆலயங்களில் நாம் ஃபேரோஸின்(pharaohs) அமைதியை அடைகிறோம். போலவே கோதிக் தேவாலயங்களின்(Gothic cathedrals) அமைதியானது காற்றில் கரைந்து போன க்ரெகோரிய உச்சாடனத்தின்(gregorian chant) கடைசிச் சொல்லை நினைவுறுத்துவது.

கட்டிடவடிவமைப்பின் அனுபவமானது புறவுலகில் இருந்து வரும் எல்லா இரைச்சல்களையும் நீக்குகிறது. பிற எல்லாக் கலைகளைப் போலவே கட்டிடக்கலையும் நம் ஆதாரத் தனிமையை உணரச் செய்கிறது. அதே சமயம் கட்டிடக்கலை நம்மை அன்றாடத்தில் இருந்து நீக்கி, மெதுவாகவும் உறுதியாகவும் வழிந்தோடும் நேரத்தையும் பண்பாட்டையும் அனுபவிக்கச் செய்கிறது. கட்டிடங்களும் நகரங்களும் காலத்தின் இசைக்கருவிகள், அதன் நினைவுச் சின்னங்களும் கூட. அவைதான் வரலாறு நம்மைத் தாண்டிச் சென்றதன் சுவடை காணவும் புரிந்துகொள்ளவும் வழி வகுக்கிறது.

கட்டிடக்கலை இறந்த காலத்துடன் நம்மைப் பினைக்கிறது. கட்டிங்களின் வழியாகத் தான் ஒரு புரதான கால வீதியில் நிகழ்ந்த திருவிழாக் கொண்டாட்டத்தை, தேவாலயத்தை நோக்கி மிடுக்குடன் சென்ற ஒரு அனிவகுப்பை நம்மால் கற்பனை செய்ய இயலும். கட்டிடக் கலை வழியாக காலமானது சிறைபிடிக்கப் பட்டுவிடுகிறது. மாபெரும் கட்டிடங்களில் காலமானது உறுதியோடு நிமிர்ந்து நிற்கிறது.

ஒரு கலைப்படைப்பின் அனுபவம் என்பது அந்த படைப்பிற்கும் பார்வையாளருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் எனலாம். “தனிமையை உணர்ந்த ஒருவரால் படைக்கப்பட்ட ஒருவகை தனிமைதான் கலை” என்று சிரில் கன்னொலி(Cyrille Connolly) குறிப்பிடுகிறார். நம்மை நெகிழச் செய்யும் கலை அனுபவத்திற்கு அடியில் ஒரு சோகம் இழையோடுகிறது. இது அழகின் வெளிப்பாட்டில் உள்ள காவிய சோகம். நடைமுறையில் அடையமுடியாத லட்சியத்தன்மையை தான் கலை முன்வைக்கிறது.

4. வாசனையின் வெளி

ஓரிடத்தின் வலுவான நினைவு என்பது பெரும்பாலும் அந்த இடத்தின் வாசனை தான். பால்யகாலத்தில் இருந்த என் தாத்தாவின் பன்னை வீட்டின் மரக்கதவுகளின் தோற்றத்தை என்னால் சரியாக நினைவுக்கூர இயலவில்லை. ஆனால் திறக்க எத்தனிக்கும் போது அக்கதவுகள் காட்டிய வலுவான எதிர்ப்பையும், அரை நூற்றாண்டின் பயன்பாட்டினால் அதன் மேற்பரப்பில் உருவாகியிருந்த சொரசொரப்பைம் என்னால் சுலபமாக ஞாபகப்படுத்த முடிகிறது. குறிப்பாக அக்கதவிற்கு பின்னால் கண்ணுக்கு புலப்படாத சுவர் போல என் முகத்தில் மோதும் அதன் வாசனையை என்னால் இப்போதும் துல்லியமாக நினைவுக்கூர முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட வாசனையானது நம் விழித்திரையில் இருந்து முற்றிலும் மறைந்து போன ஒரு இடத்திற்கு நம்மை மீண்டும் ரகசியமாகக் கூட்டிச்  செல்ல முடியும். நாசித்துவாரங்களால் நமக்கு முற்றிலும் மறந்து போன ஒரு உருவத்தைக் காட்ட வல்லது. அதன் மூலம் நாம் அந்தப் பகல்கனவில் நுழைந்திட தூண்டப்படுகிறோம்.

“நினைவும் கற்பனையும் ஒன்றுக்கொன்று தொடர்புற்று இருப்பது. என்னால் இங்கிருந்து கொண்டு வேறோரு நூற்றாண்டின் நினைவுகளில் உள்ள ஒரு நீண்ட அலமாரியைத் திறக்க முடியும். எனக்கு மட்டுமேயான அதன் தனித்துவமான வாசனையை, குறிப்பாக அதன் இழுப்பறைக்குள் ஒரு சிறிய மூங்கில் தட்டில் காய்ந்து கொண்டிருக்கும் உலர் திராட்சையின் வாசனையை உணர முடியும். எனினும் வர்ணனைகளுக்கு எட்டாத அந்த வாசனையை அடைய ஒருவருக்கு நிறைய கற்பனைத் திறன் தேவைப்படும்” என்கிறார் ‘Gaston Bachelard’.

ஒரு பழமையான நகரின் நெரிசலான வீதியில் ஒரு வாசனையில் இருந்து மற்றொறு வாசனைக்கு செல்வது என்பது அவ்வளவு அலாதியான அனுபவம். ஒரு மிட்டாய்க்கடையின் வாசனை வட்டமானது அப்பாவித்தனமும் ஆர்வமும் கொண்டிருந்த நம் குழந்தைக்காலத்தை நினைவுறுத்துவது. குதிரை லாடத்தின் பட்டறையில் இருந்து வரும் கனத்த வாசனையானது குதிரைகளையும், அதன் சேனையையும், அதில் ஏறிச் செல்லும் உற்சாகத்தையும் மீண்டும் கொண்டுவருவது. ரொட்டிக்கடையில் இருந்து வரும் வாசனையானது ஆரோக்யத்தையும், உடல் வலிமையையும் நினைவுறுத்துவது என்றால் ஒரு சிற்றுண்டிக் கடையில் இருந்து வரும் நறுமணமானது நடுத்தர வர்க்கத்தின் மகிழ்ச்சிகளை நியாபகப்படுத்துவது.

ஏன் கைவிடப்பட்ட எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான வெற்று வாசனையை கொண்டிருக்கிறது? ஒருவேளை கண்களுக்கு புலப்படும் வெறுமை தான் நாசிக்கு அவ்வாறான ஒரு வாசனையைத் தருகிறதோ?

தன்னுடைய ‘Notebooks of Malte Laurids Briggie’ நூலில் ரெய்னர் மரியா ரில்கே(Rainer Maria Rilke) கடந்த கால வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சிதிலமடைந்த வீட்டிலில் நிகழ்ந்த நாடகீயக் காட்சிகளை அதன் சுவற்றில் படிந்துள்ள சுவடுகளில் இருந்து இவ்வாறு விவரிக்கிறார். “பல ஆண்டுகளாக சமைக்கப்பட்ட மதிய உணவின் புகைக்கரியும், கையிடுக்குகளில் உருவாகி ஆடைகளை நனைக்கும் வியர்வையும், உறக்கத்திற்குப் பின் வாயிலிருந்து வெளிப்படும் துர்நாற்றமும், பாதங்களில் வியர்வையால் உருவாகும் எண்ணெய் பிசுபிசுப்பும் அங்கு தென்பட்டது.  அத்துடன் தாளமுடியாதபடி நாற்றமடிக்கும் சிறுநீரின் நெடியும், உருளைக்கிழங்கு மற்றும் இன்னபிறவும் வறுபட்ட சாம்பல்கறையும் இருந்தது. கூடவே தரையில் தனித்து விடப்பட்ட கைக்குழந்தைகளின் இனிய நறுமணமும், பள்ளிக்குச் செல்ல பயப்படும் சிறுவர்களின் வாசமும், பதின்ம வயதினரின் அழுத்தமான மெத்தையின் மூச்சடைக்கச் செய்யும் வாடையும் கூட அங்கு இருந்தது.”

ரில்கே இவ்விதம் கற்பனையில் உருவாக்கும் காட்சிகளுக்கு நேர்மாறாக, தற்கால கட்டிட வடிவமைப்புகளோ எந்த உயிர்ப்பும் இல்லாமல் மலட்டுத்தன்மையோடு இருக்கிறது.

5. தொடுகையின் வடிவம்

ஒரு பருப்பொருளின் அடர்த்தியை, கணத்தை, அதன் மேற்பரப்பின் தன்மையை, வெப்பநிலையை நம் தோல் மிகச்சரியாக உணர்ந்து கொள்கிறது. ஒரு தேர்ந்த வல்லுநரால் இழைத்து உருவாக்கப்பட்ட ஒரு பொருளின் மேற்பரப்பானது நம் கைகளால் அதை வருடும்படி தூண்டுகிறது. ஆயிரம் கைகளால் உபயோகமுற்று பளபளக்கும் ஒரு கதவின் கைப்பிடியை அழுத்தித் திறப்பதென்பது அலாதியானது. கணக்கிலடங்கா உபயோகத்தால் ஒளிரும் அந்தக் கைப்பிடியானது வரவேற்பின், உபசரிப்பின் அடையாளமாகத் திகழ்வது. ஒருக்கதவின் கைப்பிடி என்பது அந்தக் கட்டிடத்துடன் நாம் கொள்ளும் கைகுலுக்கல். தொடுவுணர்ச்சியானது நம்மை காலத்தோடும் பண்பாட்டோடும் இனைக்கிறது. அத்தகையதொரு கைப்பிடியை தொட்டுத் திறக்கும் போது அதற்கு முந்தைய அத்துனை தலைமுறைகளோடும் கைகுலுக்குகிறோம்.

ஒரு மரத்தின் குளிர்ச்சியான நிழலாகட்டும், அரவணைப்பது போலான சூரியனின் கதகதப்பான வெம்மையாகட்டும், எந்த ஒரு இடத்தின் வெப்பநிலையையும் நம் தோலானது துல்லியமாகக் கண்டுகொள்கிறது. என் கிராமப்புற பால்யகால நினைவுகளில், சூரியனுக்கு நேர் எதிராக நிற்கும் மதில்கள் எவ்வாறு முதல் ஆளாக அத்துனை சூரிய ஒளியையும் பெற்றுக் கொண்டு அதன் மேல் படிந்திருக்கும் பனியை உருகச் செய்து உள்ளே தரித்திருக்கும் மண்ணின் வாசத்தின் வெளியிட்டு வரவிருக்கும் கோடைகாலத்தை அறிவித்தது என்று இப்போது உணர்கிறேன்.

அதுபோல் நிலத்தின் தன்மையையும், உறுதியையும் நாம் பாதங்களின் மூலமே அறிந்து கொள்கிறோம். சூரிய அஸ்தமன வேளையில் கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு பாறையில் வெறுங்கால்களோடு நிற்கையில் அதன் வெப்பத்தை நம் பாதங்களில் உணர்வது என்பது ஒரு பூரணமான அனுபவம். அப்போது நம் கால்களுக்கடியில் உணர்வது இப்புவியின் சுவாசத்தை தான். இதன் வழியே இயற்கையின் முடிவுறா சுழற்சியில் நாமும் ஒரு அங்கமாகிறோம்.

வசிப்பிடம் என்ற நம் உணர்சிக்கும் தோலுக்கும் உறுதியான ஒரு பிணைப்பு இருக்கிறது. வீட்டை உண்ர்வது என்பது கதகதப்பை உணர்வது தான். கணப்பறையைச்(fireplace) சுற்றியுள்ள இடமென்பது நெருக்கத்திற்கும் சௌகர்யத்திற்குமான இடம். அந்தியில் பனி போர்த்திய வீட்டில் உள்ள ஜன்னலின் வழியே தெரியும் வெளிச்சம் தான் வீட்டை அடந்து விட்டோம் என்னும் உணர்ச்சியை நமக்கு வலுவாக அளிக்கிறது. வீட்டின் உள்பகுதியின் கதகதப்பை நினைத்துப் பார்க்கும் போது, நம்முடைய உறைந்த மூட்டுகளில் சன்னமாகச் சூடேறுகிறது. வீடும் உடலும் ஒற்றை உணர்வாக மாறுகிறது.

அதுபோல கண்களும் ஒன்றைத் ‘தொட்டு’ அறிகிறது. பார்வை அதன் வழியாக தன்ணுனர்வற்ற ஒரு உடலை வெளிப்படுத்துகிறது. அதாவது ஒருவகை தண்ணுனர்வற்ற பார்வையே தொடுகை எனலாம். நம் பார்வையானது தூரத்து பரப்புகளை, உருவங்களை, விளிம்புகளைத் தொட்டறிகிறது. அவ்வாறு தொட்டறிந்த அனுபவத்தின் விருப்பத்தையும் விலக்கத்தையும் தண்ணுனர்வற்ற அந்த தொடுகைத்திறன்தான் முடிவு செய்கிறது. இதனால் தூரமும்  அருகாமையும் நமக்கு ஒரே விசையில் அனுபவமாகிறது.

ஒருபுறம் பார்வையுணர்வானது பிரிவையும் தூரத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்றால் மறுபுறம் தொடுகையானது நெருக்கத்தையும், பிரியத்தையும் குறிக்கிறது. உணர்ச்சிமிகு தருணங்களில் நம்முடைய புலனுணர்வானது பரிணாம வளர்ச்சியில் தூய்மையடைந்த உணர்வுகளில் இருந்து ஆதாரமான உணர்வுகளுக்கு சென்றுவிடுகிறது என்று நினைக்கிறேன். அதாவது பார்வையுணர்வில் இருந்து தொடுவுணர்ச்சிக்கும், வாசனை உணர்ச்சிக்கும் இறங்கிவிடுகிறது. இதன் காரணமாகத்தான் நாம் உணர்ச்சி மேலிட்டு நெருக்கமானவர்களைத் தழுவும் போது பார்வையினால் ஏற்படும் தூர உணர்வை விலக்கும் பொருட்டு கண்களை மூடிக் கொள்கிறோம். பார்வையின் துல்லியத்தைக் குறைத்து, தண்ணுனர்வற்ற தொடுவுணர்ச்சியையும் அது தரும் கற்பனாசுகத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நமக்கு கருமை மிக்க நிழல்களும், இருட்டும் தேவை. ஒற்றைப்படையான வடிவமானது எவ்வாறு ஒரு இடத்தின் அனுபவத்தை இல்லாமலாக்குகிறதோ அதேபோல ஒற்றைப்படையான வெளிச்சமும் நம் கற்பனையை முடமாக்குகிறது.

புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஜுனிசிரோ டானிசாகி(Junichirō Tanizaki) தன்னுடைய “In Praise of Shadows” என்னும் நூலில் எவ்வாறு ஜப்பானிய சமையல் கலை இருட்டில் இருந்தும் நிழலில் இருந்தும் பிரிக்க முடியாதவாறு இருக்கிறது என்று விளக்குகிறார். “ஜப்பானிய முறைப்படி பளபளப்பான கின்னத்தில் பறிமாறப்பட யோகன்(yokan) என்னும் உணவைச் சுவைக்கும் போது மொத்த அறையின் இருட்டும் நம் நாவில் கரைந்து உருகுகிறது.” என்று அந்நூலில் குறிப்பிடுகிறார். ஜன்னலின் பரப்பளவை சரிபாதியாகக் குறைத்தால் நம்முடைய நவீன வீடுகள் இன்னும் இனிமை மிக்கதாக மாறிவிடும் என்று புகழ்பெற்ற கட்டிடக்கலை வல்லுநரான ‘Luis Barragan’ குறிப்பிடுகிறார்.

ஜுகானி பலாஸ்மா

6. தசைநாரின் எலும்பின் உருவம்

ஆதிகால மனிதன் தன்னுடைய உடலை ஆதாரமாகக் கொண்டே கட்டுமானங்களின் அளவுகளை, சேர்க்கை விகிதங்களை கணக்கிட்டான். ஒரு பறவை தன் கூட்டை வடிவமைப்பதைப் போன்று பழங்கால கட்டிட வடிவமைபாளர்கள் தம்முடைய வீடுகளைக் கட்டினார்கள். ஒரு வேட்டைமனிதனின், மீனவனின், விவசாயியின், பாறைகளைச்  செதுக்கிய சிற்பியின் ஞானமெல்லாம் பண்பாட்டின் தொடர்ச்சியால் நம்முடைய உடலின் தசைகளிலும் எலும்புகளிலும் பதிந்துள்ளது.

“நம் உடலின் நினைவாற்றலைக் குறிக்கும் ‘பழக்கம்’ என்னும் சொல் நம் உடலின் மறதியில்லாத உற்சாகமான ஒரு தொடர்புறுத்தலை வெளிப்படுத்தாமல் நைந்துபோய் வெறும் தேய்வழக்காக இப்போது மாறிவிட்டது.” என்று தத்துவ அறிஞர் ‘Bachelard’ குறிப்பிடுகிறார்.

ஒரு நந்தவனத்தின் புற்களுக்கிடையே கருங்கற்களால் பாவிய பாதை என்பது ஒருவகையில் நம்முடைய கால்தடங்களின் உருவகமும் கூட.

நாம் ஒரு கதவைத் திறக்கையில் நம்முடைய உடலின் எடையானது கதவின் எடையை எதிர்கொள்கிறது. படிக்கட்டுகளில் ஏறும் போது நம் கால்களானது தனிச்சையாக படிகளை அளக்கிறது, கைகள் கைபிடியை வருடுகிறது, மொத்த உடலும் குறுக்குவெட்டாக அந்தரத்தில் முன்னேறுகிறது.

7. கட்டிடக்கலையின் சுவை

‘Veronese’ சலவைக் கற்கள் ஒரு உடல்சார் தூண்டுதலை ஏற்படுத்த வல்லது. இதைப் பற்றி Adrian Stokes விரிவாக எழுதியுள்ளார். தொடுவுணர்வில் இருந்து சுவையுணர்விற்கு ஒரு சிறு தாவல் நிகழ்கிறது. பார்வையுணர்வும் கூட சுவையுணர்வாக மாற்றமடைகிறது. குறிப்பிட்ட சில வண்ணங்கள் சுவையுணர்வை அவ்வாறு தூண்டுகிறது. நுட்பமாகவும் நயமாகவும் இழைத்து வண்ணமேற்றப்பட்ட ஒரு சலவைக் கல்லானது நம் சுவையுணர்ச்சியைத் தூண்டுகிறது.

டானிசாகி புலனுணர்வுகளுக்கு இடையிலான நுட்பமான தொடர்பைப் பற்றி அற்புதமாக வர்ணிக்கிறார். “ஒரு பளபளப்பான தேநீர்க்குடுவையின் மூடியை நீக்கிவிட்டு அதை நம் வாய்க்கு அருகில் கொண்டு செல்வதில் ஒரு தனி அழகு உள்ளது. அக்கணத்தில் கின்னத்தின் ஆழத்தில் நிசப்தமாக அசைவின்றி இருக்கும் திரவத்தை காண்கிறோம். குடுவையின் நிறத்திற்கும் திரவத்தின் நிறத்திற்கும் அப்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. நம் உள்ளங்கைகள் குடுவைக்குள் தேநீர் மெதுவாக நகர்வதை உணர்ந்து கொள்கிறது. விளிம்புகளில் நீராவியால் நீர்த்துளிகள் உருவாகி வழிகிறது. நீராவியால் ஏற்படும் இனிய நறுமணம் நம்மில் ஒரு தூண்டுதலை உருவாக்குகிறது.”

கட்டிடக்கலையின் பணி

கட்டிடக்கலையின் என்றைக்குமான பனி என்பது இப்புவியில் மனிதனின் இருத்தலியல் அம்சத்தை பிரதிபலிக்கும் உருவகங்களை உருவாக்குவது தான். கட்டிடக்கலையின் உருவகங்கள் மனித வாழ்க்கையின் சிந்தனைகளை பிரதிபலிப்பவை. அவை ஆதர்ச வாழ்வின் வெளிப்பாட்டு வடிவங்கள். கட்டிடங்களும் நகரங்களும் நாம் யார் என்று தொகுத்துக் கொள்ளவும், நினைவூட்டம், புரிந்து கொள்ளவும் வழிவகுப்பவை. இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் பண்பாட்டில் நம்மைப் பொருத்திக் கொள்ளச் செய்வது கட்டிடங்கள் தான்.

எல்லா அனுபவமும் ஒப்பிடுதலையும் நினைவூட்டலையும் தான் நமக்கு உணர்த்துகிறது. ஒரு இடத்தையோ வெளியையோ நியாபகமூட்டும் ஆதார வேலையை ஒரு அனுபவம் மேற்கொள்கிறது. நம்முடைய வீடு ஒருவகையில் நம் சுய அடையாளத்துடன் ஒன்றிணைந்திருப்பது, நம் உடலின் அங்கமாகத் திகழ்வது.

நினைவில் நீடிக்கும் ஒரு கட்டிடக் கலையனுபவத்தில் வெளியும், பருப்பொருளும், காலமும், ஒன்றோடொன்று முயங்கி நம் ஆழ்மனதில் ஊடுருவுகிறது. நம் சொந்த இருப்பின் சாரமென்றாகி அந்தக் கட்டிடத்தின் வெளியுடன், இடத்துடன் நம்மை தொடர்பு படுத்திக் கொள்கிறோம். கட்டிடக்கலை என்பது தியானத்தின், ஒத்திசைவின் கலை.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.