/

செவ்வியல் என்றால் என்ன? (பகுதி 2) : டி.எஸ்.எலியட்

தமிழில் : விஷால் ராஜா

விர்ஜில் சிலை

செவ்வியல் என்றால் என்ன? (பகுதி 1)

செவ்வியலின் பண்புநலன்களாக இதுவரை முன்வைத்த மனதின் முதிர்ச்சி, பழக்கவழக்கங்களின் முதிர்ச்சி, மொழியின் முதிர்ச்சி மற்றும் ஒரு பொது நடையின் தேர்ச்சி ஆகியவை பெரும்பாலும் ஆங்கில இலக்கியத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் காணக் கிடைக்கின்றன. கவிதையில், போப்பை (Pope) உதாரணம் காட்ட முடிகிறது. இந்த விஷயத்தில் நான் சொல்ல வேண்டியது இவ்வளவுதான் என்றால், இது நிச்சயம் புதிதானது அல்ல. சொல்ல தகுதியானதும் அல்ல. அப்படி சொல்வது, ஏற்கனவே மற்றவர்கள் செய்தது போல, இரண்டு பிழைகள் நடுவே ஒரு தேர்வை முன்மொழிவதாக மாறிவிடும். ஒன்று, பதினெட்டாம் நூற்றாண்டே (அது தானும் எண்ணியது போல) ஆங்கில இலக்கியத்தின் சிறந்த காலகட்டம் என்பது. மற்றது, செவ்வியல் எனும் சிந்தனையையே மொத்தமாக கைவிட்டுவிட வேண்டும் என்பது.

ஆங்கிலத்தில் செவ்வியல் காலகட்டமோ செவ்வியல் கவிஞனோ இல்லை என்பது என் சொந்த கருத்து.  ஏன் என்று யோசிக்கும்போது, நாம் வருத்தப்படுவதற்கு எந்த குறைந்தபட்ச நியதியும் தென்படவில்லை. ஆனாலும், செவ்வியல் சார்ந்த லட்சியத்தை கண் முன்னால் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க வேண்டியிருப்பதாலும், இதற்கு முன்னால் ஆங்கில மொழியின் மேதமை செவ்வியலை உணர்வதைக் காட்டிலும் வேறு காரியங்களை செய்ய வேண்டியிருந்ததாலும், போப்பின் காலகட்டத்தை நிராகரிக்கவோ அல்லது மிகையாக மதிப்பிடவோ நமக்கு சலுகை இல்லை. போப்பின் ஆக்கங்களில் செவ்வியல் குணங்கள் எந்த அளவுக்கு சிறப்பாய் திரண்டிருக்கின்றன என்பதை விமர்சனபூர்வமாக மதிப்பிட்டு பாராட்டாமல் ஆங்கில இலக்கியத்தை மொத்தமாக பார்க்க முடியாது; வருங்காலத்துக்கான சரியான குறிக்கோளையும் வகுக்க முடியாது. அதன் அர்த்தம், போப்பின் ஆக்கங்களை ரசிக்க முடியாதவரை, ஆங்கில கவிதை பற்றிய முழுமையான புரிதலை எட்ட முடியாது என்பதேயாகும்.

செவ்வியல் குணங்கள் சார்ந்த போப்பின் உணர்தல் ஓர் உயரிய விலையினாலேயே – ஆங்கில வசனக் கவிதையின் வேறு சில மகத்தான சாத்தியங்களை கைவிடுவதன் வழியாக- பெறப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சில சாத்தியங்களை அடைவதற்காக, வேறு சிலவற்றை கைவிடுவது என்பது, ஓர் எல்லை வரைக்கும், கலை உருவாக்கத்தில் விதியாகவே இருக்கிறது. வாழ்வில் ஒரு விதியாக இருப்பதுப் போலவே.

வாழ்வில் ஏதேனும் ஒரு விஷயத்தை அடையும் பொருட்டு, எதையும் தியாகம் செய்திடாத ஒரு மனிதன் வெறும் சராசரியாகவோ அல்லது தோல்வியுற்றவனாகவோதான் எஞ்ச முடியும். மறுபுறம், ஒரு நிபுணரோ (specialist) மிக குறைவானவற்றுக்காக மிக அதிகமானவற்றை தியாகம் செய்துவிடக்கூடும். அல்லது மொழியில் ஒரு நிபுணராகவே பிறப்பெடுப்பவர் தியாகம் செய்வதற்கு எதுவுமே இல்லாமலும் போய்விடலாம். பதினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியத்தில் கைவிடப்பட்டவற்றின் எண்ணிக்கை அதிகமாய் தோன்றுவதற்கு காரணம் இருக்கிறது. அப்போது முதிர்ச்சியடைந்த மனம் இருந்தது; ஆனால் குறுகலான வகையில் இருந்தது.

ஆங்கில சமூகமும் ஆங்கில எழுத்துக்களும் பிராந்தியம் சார்ந்தவை (Provincial) அல்ல. சிறந்த ஐரோப்பிய சமூகத்திடமிருந்தும் சிறந்த ஐரோப்பிய எழுத்துக்களிடமிருந்தும் துண்டுப்பட்டவையோ அவற்றைவிட பின்தங்கியவையோ அல்ல. ஆனால் அந்த காலகட்டமே, சொல்லப்போனால், பிராந்தியங்களின் காலகட்டமாக இருந்தது. பதினேழாம் நூற்றாண்ட்டில் இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியரையோ, ஜெரமி டெய்லரையோ (Jeremy Taylor), மில்டனையோ எண்ணிப் பார்க்கும்போது அல்லது பிரான்சில் ராசினையோ (Racine), மொலெய்ரயோ (Moliere), பாஸ்கலையோ (Pascal) எண்ணிப் பார்க்கும்போது, தொடர்ந்து வந்த பதினெட்டாம் நூற்றாண்டானது வடிவ அடிப்படையில் தன் தோட்டத்தை துல்லியமாக உருவாக்கவே ஆற்றலை செலவழித்திருப்பது தெரிய வருகிறது. விவசாய நிலத்தை முற்றிலும் அழித்துவிட்டு தோட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

செவ்வியல் என்பது பெறுமதியான லட்சியம் என்றால், பதினெட்டாம் நூற்றாண்டினால் உரிமை கொண்டாட முடியாத பொருள்வளத்தினையும், பலதரப்பட்ட ஆர்வங்களையும்  அது வெளிப்படுத்த வேண்டும். என்வரையில் ஆங்கில இலக்கியத்தின் செவ்வியல்கள் என்று கருத முடியாத சாஸர் (Chaucer) போன்ற சிறந்த ஆசிரியர்களின் குணநலன்களையும், மத்தியக் கால (medieval age) மனதினை கொண்ட தாந்தேவில் முழுமையாக திரண்டிருக்கிற குணநலன்களையும் ஒரே சமயத்தில் செவ்வியல் வெளிப்படுத்த வேண்டும். நவீன ஐரோப்பிய மொழியில் எங்கேயாவது ஒரு செவ்வியலை கண்டடைய முடியும் என்றால், அது டிவைன் காமெடியிலேயே நடக்க முடியும்.

நாம் பதினெட்டாம் நூற்றாண்டில் எல்லைக்குட்பட்ட குறிப்பிட்ட வகையான நுண்ணுணர்வினால் அழுத்தப்பட்டிருந்தோம். முக்கியமாக மதவுணர்வு சார்ந்த அளவுகோலில் பார்க்கும்போது அதன் எல்லை புலப்பட்டுகிறது. கவிதை கிறிஸ்துவத்தன்மையை இழந்துவிட்டிருந்ததாக சொல்லவில்லை. குறைந்தபட்சம் இங்கிலாந்திலேனும் அப்படியில்லை. போலவே, கவிஞர்கள் பக்தியுடைய கிறிஸ்தவர்களாக இல்லை என்றும் சொல்லவில்லை. சாமுவேல் ஜான்சனிடமிருந்த பழமைவாத கொள்கையையும், கடவுள் பற்றையும் இன்னொரு கவிஞரிடம் காண ரொம்ப நேரம் தேட வேண்டும். ஷேக்ஸ்பியருடைய நம்பிக்கையும் பழக்க வழக்கங்களும் யூகத்திற்குரியவை என்றாலும், அவருடைய கவிதையிலேயே  ஆழமான மதவுணர்வுக்கான தடயங்கள் தென்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் , மதவுணர்வு சார்ந்து ஒரு தடை உருவாகியிருந்தது. அதுவே ஒருவித பிராந்தியத்தன்மையை உண்டு பண்ணியது. (அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இன்னும் மேலதிக பிராந்தியத்தன்மையை கொண்டிருந்ததை சேர்த்து சொல்ல வேண்டும்).  அந்த பிராந்தியத் தன்மை கிறிஸ்தவத்தின் சிதைவையும், பொது நம்பிக்கை மற்றும் பொது கலாச்சாரத்தின் வீழ்ச்சியையுமே குறிக்கிறது. இதன் வழியே தோன்றுவது ,பதினெட்டாம் நூற்றாண்டு அதன் அத்தனை செவ்வியல் சாதனைக்கும் -என் நம்பிக்கையில், வருங்காலத்துக்கான உதாரணமாக மாறத்தகுந்த பெரும் சாதனை அது- அப்பால் மெய்யான செவ்வியலுக்கான ஏதோவோர் சூழ்நிலையைக் கொண்டிருக்கவில்லை. அது என்ன சூழ்நிலை என்பதை தெரிந்துகொள்ள நாம் விர்ஜிலுக்கே திரும்ப வேண்டும்.

விர்ஜிலையும், அவர் மொழியையும், நாகரீகத்தையும், அந்த மொழி மற்றும் நாகரீகத்தை அவர் எட்டிய வரலாற்றுத் தருணத்தையும் கணக்கில் கொண்டு இதுவரை செவ்வியலோடு அடையாளப்படுத்திய குணாதிசயங்களை முதலில் தொகுத்து பார்க்க விரும்புகிறேன். மனதின் முதிர்ச்சி: இதற்கு வரலாறும் வரலாறு பற்றிய பிரக்ஞையும் தேவை. வரலாற்று பிரக்ஞை முழுமையான விழிப்பை அடைய, தன் சொந்த மக்களின் வரலாற்றைத் தாண்டிய பிறிதொரு வரலாறும் தெரிய வேண்டும். வரலாற்றில் நம்முடைய இடத்தை அறிய, உயர்ந்த நாகரீகமடைந்த பிறிதொரு மக்கள் வரலாறு பற்றிய அறிவு அவசியம்.  நம்முடைய சொந்த நாகரீகத்தில் ஊடுருவி பாதிப்பு செலுத்தும் வகையில் உறவுக் கொண்ட பிறிதொரு நாகரீகமாக அது இருக்க வேண்டும். ரோமானியர்கள் அந்த பிரக்ஞையோடிருந்தார்கள். நாம் மதிக்கக்கூடிய எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் கிரேக்கர்கள் அந்த பிரக்ஞை கொண்டிருக்கவில்லை. விர்ஜில் மிகவும் முயன்று அப்பிரக்ஞையை வளர்த்துக் கொண்டார்.

ஆரம்பம் முதலாகவே தன் சக எழுத்தாளர்களையும், உடனடி முன்னோடிகளையும் போல விர்ஜிலும் தொடர்ந்து கிரேக்க கவிதை மரபுகளையும், கண்டடைதல்களையும் தகவமைத்து உபயோகிப்பவராகவே இருந்திருக்கிறார். தன்னுடைய கடந்தகாலத்தை மட்டுமில்லாமல், அன்னிய இலக்கியத்தையும் இப்படி பயன்படுத்துவது ஒரு நாகரீகத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை சுட்டுகிறது. கிரேக்கம் மற்றும் ஆரம்ப கால லத்தீன் கவிதையை விர்ஜில் அளவுக்கு வேறெந்த கவிஞரும் சீரான விகிதத்தில் பயன்படுத்தியதில்லை. இப்படி இன்னொரு நாகரீகம் அல்லது இலக்கியத்துடனான உறவின் வழியே தன்னுடைய வளர்ச்சியை நிகழ்த்தியதே விர்ஜிலின் காவியத்துக்கு ஒரு விசேஷ முக்கியத்துவத்தை வழங்குகிறது.

ஹோமர் (Homer) நாடகத்தில் கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது ஒரு கிரேக்க நகர மாகாணத்துக்கும் பிற நகர மாகாணங்களின் கூட்டமைப்புக்கும் நடுவிலான சண்டை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் ஏனியாஸின் (Aeneas) கதைக்கு பின்னே, ஒரு அடிப்படை வேறுபாடு சார்ந்த பிரக்ஞை இருக்கிறது. அவ்வேறுபாடானது இரண்டு மகத்தான கலாச்சாரங்கள் நடுவிலான உறவையும் அதே நேரத்தில் அனைத்தையும் உள்ளடக்கும் விதியின் முடிவில் அவற்றிடையே உருவாகும் ஒத்திசைவையும் குறிக்கிறது.

விர்ஜிலுடைய மனதின் முதிர்ச்சியும், அவர் காலகட்டத்தின் முதிர்ச்சியும் வரலாறு சார்ந்த இந்த அறிதலிலேயே வெளிப்படுகிறது. மனதின் முதிர்ச்சியோடு பழக்க வழக்கங்களின் முதிர்ச்சியையும் பிராந்தியத்தன்மையின் நிராகரிப்பையும் இணைத்துக் குறிப்பிடலாம்.

திடீரென்று கடந்தகாலத்துக்கு கடத்தப்படுகிற ஒரு நவீன ஐரோப்பியனுக்கு ரோமானியர்கள் மற்றும் ஏதேனியர்களின் சமூக நடத்தையானது காட்டுமிராண்டித்தனமானதாகவும் கோபமூட்டுவதாகவும் தோன்றலாம். ஆனால் ஒரு கவிஞனால் தன் சமகால பழக்கத்தைவிடவும் உயர்வானதை முன்வைக்க முடிகிறதென்றால், அவன் வருங்காலத்தையோ அல்லது முற்றிலும் வேறுப்பட்ட ஒரு சமூக நடத்தையினையோ கற்பனை செய்வதால் அது நடக்கவில்லை. மாறாக தன் காலத்திலேயே தன் மக்களின் நடத்தையின் சிறந்த வெளிப்பாட்டை உள்ளுணர்வதால் நடக்கிறது. எட்வர்னியன் கால இங்கிலாந்தின் பணக்கார வீட்டு விருந்துகள் ஹென்றி ஜேம்ஸின் எழுத்துக்களில் படிப்பது போல இருந்திருக்காது. ஆனால் ஜேம்ஸின் சமூகம் என்பது அந்த குறிப்பிட்ட சமூகத்தின் லட்சிய வடிவம் (idealisation) தானே தவிர வேறொரு சமூகத்துக்கான கற்பனையில்லை.

மற்ற எந்த லத்தீன் கவிஞரைவிடவும் விர்ஜிலிடமே, மென்மையான நுண்ணுணர்விலிருந்து கிளைக்கிற பழக்கவழக்கங்களின் பண்பட்டத்தன்மையை அறிய முடிகிறது; குறிப்பாக இரு பாலரிடையிலான தனிப்பட்ட மற்றும் பொதுவான நடத்தையிலும் பழக்கத்திலும் அதை காணலாம்.  

ஆறாவது புத்தகத்தில், டிடோவின் (Dido) ஆவியுடனான ஏனியாஸின் சந்திப்பானது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிற ஒன்று மட்டும் அல்ல. இதுவரையிலான கவிதை வரலாற்றிலேயே ஆக நாகரீகமான, அதி நயம் மிக்க பத்திகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அர்த்தத்தில் ஊடுபாவு கொண்டதாகவும் வெளிப்பாட்டில் சிக்கனமானதாகவும் இருக்கிறது. அது டிடோவின் மனப்போக்கை சொல்வதோடு ஏனியாஸின் மனப்போக்கையும் சொல்கிறது. ஏனியாஸுடைய சொந்த மனதின் நீட்சியாகவே டிடோவின் நடவடிக்கை தோன்றுகிறது. டிடோ இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற ஏனியாஸ் மனதின் எதிர்பார்ப்பே அது என நாம் உணர்கிறோம். டிடோ அவனை மன்னிக்கவில்லை என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது. ஏனியாஸால் தன்னையே மன்னிக்க முடியவில்லை என்பதே முக்கியமானது. விதிக்கு இசைந்து அல்லது மகத்தானதும் ஆராயமுடியாததுமான சக்திகளின் கருவிகளான கடவுள்களின் இயக்கத்திற்கேற்பவே தான் செயல்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்தும் அவனால் தன்னை மன்னிக்க முடியவில்லை என்பதே இங்கு முக்கியமானது.

நாகரீகமான பழக்கவழக்கங்களுக்கும் அவற்றின் வழியே வெளிப்படும் நாகரீகமான மனசாட்சி மற்றும் பிரக்ஞை ஆகியவற்றுக்குமான சாட்சியாக மேற்சொன்ன தருணத்தையே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை எத்தனை படிநிலைகளில் நாம் அணுகினாலும் அவை யாவும் ஒரு முழுமைக்குள்ளேயே அடங்கும். கடைசியாக விர்ஜிலுடைய கதாபாத்திரங்கள், பிராந்திய அல்லது பழங்குடி பழக்கவழக்கங்களின் அடிப்படையில் நடந்து கொள்வதில்லை என்பதை அவதானிக்கலாம். ரோமானிய அம்சமும் ஐரோப்பிய அம்சமும் அவற்றில் கலந்துள்ளன. பழக்கவழக்கங்களை பொருத்தமட்டில் விர்ஜில் நிச்சயமாக பிராந்திய குணம் கொண்டவர் அல்லர்.

விர்ஜிலுடைய மனதின் முதிர்ச்சியையும், நடையையும் இந்த தருணத்தில் விளக்க முயற்சிப்பது அசாத்தியமான வேலை. என்னைவிட சிறப்பாக அதை பலர் செய்ய முடியும். கடைசியில் நாம் எல்லோரும் ஒரே கருத்தையே கொண்டிருக்க முடியும் என்றாலும் இங்கே அதை மறுபடி சொல்வதும் பெறுமதியானதே. விர்ஜிலுக்கு பின்னே ஓர் இலக்கிய மரபு இல்லாதிருந்தாலோ, அந்த இலக்கியம் பற்றி அவருக்கு நெருக்கமான ஞானம் இல்லாதிருந்தாலோ அவருடைய எழுத்து நடை சாத்தியப்பட்டிருக்காது. எனவே தன் முன்னோடிகளிடமிருந்து ஒரு சொற்றொடரையோ அல்லது கருவியையோ கடனாக பெறும்போதும் அதை மேம்படுத்தும்போதும் அவர் லத்தீன் கவிதையையே மறு ஆக்கம் செய்திருக்கிறார்.

விர்ஜில் கற்றறிந்த ஓர் ஆசிரியர். அவருடைய அனைத்துக் கல்வியும் அவர் பணியோடு தொடர்பு கொண்டிருந்தது. மேலும் அவர் பயன்பாட்டிற்காக பின்னனியில் கடந்தகால இலக்கியம் மிதமிஞ்சிய அளவில் இல்லாமல், சரியான அளவில் இருந்தது. எழுத்து நடையின் முதிர்ச்சியை பொருத்தவரையில், ஒலியாகவும் உணர்ச்சியாகவும், சிக்கலான மொழியமைப்பு மீதான திடமான கட்டுப்பாட்டினை விர்ஜில் அளவுக்கு வளர்த்துக் கொண்ட வேறொரு கவிஞர் இல்லை. அதே நேரம் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, நேரடியான, சுருக்கமான மற்றும் துணுக்குற வைக்கிற எளிமையையும் அவர் இழக்கவில்லை.

இந்த இடத்தில் நான் மேலும் விரிவாக பேச வேண்டியதில்லை. ஆனால் “பொது நடை” (Common Style) பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமாய் எண்ணுகிறேன். ஆங்கில இலக்கியத்தை வைத்து சரியான உதாரணங்கள் சொல்ல முடியாததால், நாம் “பொது நடை”க்கு உரிய மதிப்பளிக்க தவறுகிறோம். நவீன ஐரோப்பிய இலக்கியத்தில் பொது நடையின் லட்சிய வடிவத்துக்கு நெருக்கமான எழுத்தை தாந்தேயிலும்(Dante) ரசீனிலும்(Racine) காண்கிறோம். ஆங்கில கவிதையில் போப் நெருக்கமாக வருகிறார். ஆனால் ஒப்பீட்டளவில் போப்பினுடைய பொது நடையானது குறுகலான எல்லையுடையது.

பொது நடை நம்மை வியப்பிகலாழ்த்தும். “ஒரு மேதை மொழியை பயன்படுத்துகிறார்” என்பதனால் அந்த வியப்பு உருவாவதில்லை. “மொழியின் மேதமை இதில் உணரப்பட்டிருக்கிறது” என்பதே அவ்வியப்பின் காரணம். போப்பை வாசிக்கும்போது நாம் இப்படி சொல்ல இயல்வதில்லை. போப் உபயோகப்படுத்தாத, அவர் நடையில் உணரப்படாத மொழியின் வளங்கள் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதிகபட்சமாக “ஓரு காலகட்டத்தின் ஆங்கில மொழியின் மேதமை உணரப்பட்டிருக்கிறது” என்றே சொல்ல முடிகிறது.

ஷேக்ஸ்பியரையோ மில்டனையோ வாசிக்கும்போது நாம் இதை சொல்வதில்லை. ஏனென்றால் அந்த எழுத்தாளருடைய மகத்துவம் பற்றியும் அவர் மொழியில் நிகழ்த்தக்கூடிய அற்புதங்கள் பற்றியும் நாம் எப்போதும் பிரக்ஞை கொண்டிருக்கிறோம். சாஸரில் (Chaucer) நாம் இன்னும் நெருக்கத்தை அறிகிறோம். ஆனால் சாஸர், வித்தியாசமானதும் நம் பார்வையில் பண்படாததாக தோன்றுவதுமான ஒரு பேச்சுவழக்கை பயன்படுத்துகிறார். மேலும் ஷேக்ஸ்பியரும் மில்டனும் ஆங்கில இலக்கியத்தில் பல சாத்தியங்களை கையாளவில்லை என்பதையே பிற்கால வரலாறு காட்டுகிறது. ஆனால் விர்ஜிலுக்கு பிறகு லத்தீன் மொழியில் பெரிய வளர்ச்சி சாத்தியமாக இருக்கவில்லை -அம்மொழியே முழுமையாக உருமாறுகிறவரையில்.

இத்தருணத்தில் நான் ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு திரும்புகிறேன். செவ்வியலின் சாதனை – இதுவரை செவ்வியல் எனும் சொல்லை பயன்படுத்திய அர்த்தத்தில்- சந்தேகத்துக்கு இடமில்லாமல் பெருமைக்குரியது என்றாலும், மக்களுக்கும் தான் பிறப்பெடுத்த மொழிக்கும் அது கலப்படமேயில்லாத ஓர் ஆசீர்வாதம்தானா? இக்கேள்வி ஒருவர் மனதில் எழுந்ததும், அவர் விர்ஜிலுக்கு பிறகான லத்தீன் கவிதை பற்றியும் பிற்கால லத்தீன் கவிஞர்கள் எவ்வளவு தூரத்துக்கு அவருடைய மகத்துவத்தின் நிழலுக்கு கீழேயே செயல்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் யோசித்தாலே போதும். விர்ஜில் உருவாக்கிய தரநிலைகளின் அடிப்படையிலேயே பின்-வந்தவர்களை பாராட்டவோ விமர்சிக்கவோ செய்கிறோம். சில புதிய வேறுபாடுகளை கண்டுபிடித்ததற்காகவோ வார்த்தைகளின் அடுக்குமுறையை மாற்றியதற்காகவோ அல்லது பூர்வீக ஆக்கத்தை மங்கலாக நினைவூட்டுவதற்காகவோ அவர்களை ரசிக்கிறோம்.

தாந்தேவுக்கு பிந்தைய இத்தாலிய கவிதையை கவனிக்கும்போது வேறுவிதமான கேள்வியே எழும். பிற்கால இத்தாலிய கவிஞர்கள் தாந்தேவை போலிச் செய்யவில்லை. மேலும், மிக வேகமாக மாறிக் கொண்டு வந்த உலகில் வாழ்கிற அணுகூலம் அவர்களுக்கு இருந்ததால் வித்தியாசமாக செயல்படுவதற்கான விஷயங்கள் இருந்தன. நேரடியான அவலமான ஒப்பீடுகளை அவர்கள் தூண்டவில்லை.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு கவிதையும் இவ்வகையில் அதிர்ஷ்டம் மிக்கதே. மகத்தான கவிஞர்கள் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே முழுவதுமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்கிலாந்திலோ பிரான்சிலோ ஷேக்ஸ்பியரின் காலத்துக்கு பிறகும் ரக்சீனின் காலத்துக்கு பிறகும் ஒரு முதல் தர கவிதை நாடகம்கூட உருவாகவில்லை. மில்டனுக்கு பின்னர், பல மகத்தான நெடுங்கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு மகத்தான காவியக் கவிதை (epic poem) எழுதப்படவில்லை. செவ்வியலோ இல்லையோ எந்தவொரு பெருங்கவியும் தன் விளைநிலத்தை முழுமையாக காலி செய்துவிடுவார். எனவே ஓர் அரிய பயிர் விளைந்த பிறகு சில தலைமுறைகளுக்கு அது தரிசாய்விடப்பட வேண்டும்.

இங்கே நீங்கள் என்னை மறுக்கலாம். செவ்வியல் மேல் நான் சுமத்தும் குற்றச்சாட்டு -ஒரு மொழியின் இலக்கியத்தின் மீதான அதன் விளைவு – அந்த இலக்கிய ஆக்கத்தின் செவ்வியல் குணத்தால் நேரவில்லை; அதன் மகத்துவத்தாலேயே நேர்கிறது எனலாம். செவ்வியல் அடைமொழியை- இதுவரை பயன்படுத்திய அர்த்தத்தில்- ஷேக்ஸ்பியருக்கும் மில்டனுக்கும் மறுத்தாலும் அவர்கள் எழுதிய வகைமையில் உச்சகட்ட மகத்துவத்துடன் வேறு கவிதை எழுதப்படவில்லை என்பதையும் நானே ஒப்புக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நான் முன்வைக்கவுள்ள வேறுபாட்டை நீங்கள் ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். ஆனால் எந்த மகத்தான கவிதையாக்கமும் அதே வகைமையில் அதே அளவு மகத்துவம் கொண்ட வேறு கவிதையாக்கங்கள் உருவாகும் சாத்தியத்தை இல்லாமல் ஆக்குகிறது என்பதை மறுக்கமுடியாது. எழுத்தாளனின் தன்னிலை நோக்கினை ஒரு காரணமாக கூறலாம்: எந்த முதல்தர கவிஞனும் தன் மொழியில் ஏற்கனவே சிறப்பாக நிகழ்த்தப்பட்டதை மீண்டும் பிரதியெடுக்க விரும்ப மாட்டான்.

ஒரு மொழி, காலத்தினாலும் சமூக மாற்றத்தினாலும் தன் அகராதியையும் இலக்கணத்தையும் தாண்டி ஒலியமைப்பாகவும், போதுமான அளவு உருமாற்றம் அடைந்த பிறகே ஷேக்ஸ்பியர் அளவுக்கு சிறப்பான இன்னொரு நாடக கவியும், மில்டன் அளவுக்கு சிறப்பான இன்னொரு காவிய கவியும் உருவாக முடியும். மகத்தான கவிஞர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு நேர்மையான கவிஞனும் -அவன் சற்று குறைவான கவி அந்தஸ்து கொண்டிருந்தாலும்- மொழியில் ஒரு சாத்தியத்தை முதலும் கடைசியுமாக கையகப்படுத்திவிடுகிறான். அடுத்து வருபவர்களுக்கு ஒரு சாத்தியத்தை குறைவாகவே விட்டுச் செல்கிறான். அவன் உறிந்தெடுத்த நரம்பு மிகச் சிறியதாக இருக்கலாம். அல்லது காவியம் போலவோ நாடகம் போலவோ கவிதையில் ஒரு முதன்மை வடிவமாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு சிறந்த கவிஞன் ஒரு வடிவத்தை மட்டுமே தீர்ந்துப் போகச் செய்கிறானேத் தவிர மொத்த மொழியையும் அல்ல. மறுபுறம் ஒரு செவ்வியல் கவிஞனோ ஒரு வடிவத்தை மட்டுமில்லாமல் தன் காலத்தின் மொழியையே தீர்ந்து போகச் செய்கிறான்.

ஒருவன் ஒரு முழுமையான செவ்வியல் கவிஞனாக வடிவெடுக்கும்போது அவன் காலத்தின் மொழியும் பூரணத்துவத்தை எட்டுகிறது. எனவே நாம் கணக்கில் எடுக்க வேண்டியது,தனியே ஒரு கவிஞனை மட்டும் அல்ல. அவன் எழுதுகிற மொழியையும் சேர்த்து பேச வேண்டும். ஒரு செவ்வியல் கவிஞன், ஒரு மொழியை தீர்ந்துப்போகச் செய்கிறான் என்பதல்ல இங்கே விஷயம். இன்னும் தீரும் அளவு சாத்தியம் கொண்ட மொழியே செவ்வியல் கவிஞனை உருவாக்குகிறது.

இங்கே இன்னொரு கேள்வியை கேட்கும் சாய்வு தோன்றும். நம்முடைய ஆங்கில மொழியில் செயல்படுவது அதிர்ஷ்டமானது இல்லையா? செவ்வியல் இல்லாவிட்டாலும் பல்வகைப்பட்ட ஆக்கங்களுடைய செழிப்பான கடந்தகாலம் பற்றிய பெருமிதமும் புதுவகையான தனித்தன்மைக்கான சாத்தியம் கொண்ட எதிர்காலமும் இருக்கின்றனவே. இப்போது ஓர் மொழியின் இலக்கியத்திற்குள்ளாக நாம் செயல்படும்போது,   இலக்கியத்தை கடந்தகாலத்தில் உருவாக்கிய ஒரே கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாகவும், எல்லோரும் ஒரே மொழி பேசுகிறவர்களாகவும் இருக்கும்போது இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்: ஏற்கனவே நம் இலக்கியம் சாதித்தவை சார்ந்த பெருமிதம். வருங்காலத்தில் சாதிக்கக்கூடியவை சார்ந்த நம்பிக்கை.

வருங்காலத்தின்மேல் நாம் நம்பிக்கையிழந்துவிட்டால், நம் கடந்தகாலமேக்கூட முழுமையாக நம்முடைய சொந்த கடந்தகாலமாக இல்லாமல் போய்விடும் : ஓர் இறந்துபோன நாகரீகத்தின் கடந்தகாலமாகிவிடும். ஆங்கில இலக்கியத்தின் சேகரத்தில் புதியனவற்றை சேர்க்கும் ஈடுபாட்டில் பிணைந்திருக்கும் மனங்களில், இந்த கவனம், குறிப்பிட்ட வகையான ஆற்றலுடன் செயல்பட வேண்டும். ஆங்கில இலக்கியத்தில் செவ்வியல் இல்லை என்பதனாலேயே எந்தவொரு வாழும் கவிஞனும், தானும் தனக்கு பின் வருபவர்களும் முக்கியமானவற்றை எழுதிவிட முடியும் எனும் நம்பிக்கையோடு சொல்ல முடியும். ஆனால் நித்தியமான கால நோக்கில், வருங்காலம் சார்ந்த அத்தகைய ஆர்வத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை.

நான் உறுதிபட தெரிவிக்க விரும்புவது இதுவே : ஆங்கிலம் ஒரு வாழும் மொழியாக இருப்பதாலும், நாம் அந்த மொழியில் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் ஒரு செவ்வியல் கவிஞன் வழியாக அது முழுமையாக உணர்ந்துவிடப்படவில்லை என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். மற்றபடி பல தரப்பட்ட கவிஞர்கள் இருப்பதாலோ அல்லது ஒரு கவிஞனின் ஆக்கத்தில் மொழியின் மேதமை முழுமையாக வெளிப்பட்டிருப்பதாலோ இரண்டு இறுந்து போன மொழிகளில் ஒன்று உயர்வானது என்று சொல்ல முடியாது.

செவ்வியல் அளவுகோல் என்பது உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நம் இலக்கியத்தினை ஏற்கனவே செவ்வியலை படைத்த இன்னொரு மொழியுடன் ஒப்பிட்டு மதிப்பிட மறுத்தாலும் நம்முடைய தனித்தனி கவிஞர்களை மதிப்பிட அது அவசியமானது. ஒரு மொழி இலக்கியம் செவ்வியலாய் திரண்டு வருவது அதிர்ஷ்டம் சாந்தது.

ஒரு மொழியின் கூறுகள் அம்மொழிக்குள் எந்த அளவு இணைந்து தொழிற்படுகின்றன என்பதை பொறுத்தே செவ்வியல் பெருமளவில் உருவாவதாக நான் எண்ணுகிறேன். எனவே, லத்தீன் மொழிகள் செவ்வியலுக்கு அணுக்கமாய் இருந்தால், அதற்கு காரணம் அவை லத்தீன் என்பது மட்டுமே அல்ல. மாறாக, ஆங்கிலத்தைவிட அவை ஒரே மாதிரியான மொழிக் கூறுகளை கூடுதலாய் கொண்டிருப்பதால் பொது எழுத்துநடை நோக்கி அவை எளிதில் சென்றுவிடுகின்றன. ஆங்கிலமோ அந்த தொகுதிகளின் மற்ற சிறந்த மொழிகளைவிட அதிகம் பன்முகப்பட்டதாக  இருப்பதால் துல்லியத்தைக் காட்டிலும் வேறுபாட்டினை நோக்கி அது சாய்வு கொண்டுள்ளது. தன் ஆற்றலை உணர்வதற்கு நீண்ட காலம் எடுப்பதாகவும் உள்ளது. எனினும் இன்னும் ஆராயப்படாத பல சாத்தியங்களை அது கொண்டிருக்கிறது. தன்னிலையை தக்கவைத்தபடியே மாற்றங்களுக்கும் ஆளாவதற்கான அதிகப்படியான திறனோடிருக்கிறது.

இப்போது ஒப்பீட்டு செவ்வியல் (relative classic) மற்றும் பூரண செவ்வியல் (absolute classic) இரண்டுக்கும் நடுவிலான வித்தியாசத்திற்கு செல்கிறேன். தன் சொந்த மொழியுடனான ஒப்பீட்டின் அடிப்படையில் செவ்வியல் என்றழைக்கப்படுவதற்கும் எல்லா மொழிகளுக்கும் நடுவிலான ஒப்பீட்டின் அடிப்படையில் செவ்வியல் என்றழைக்கப்படுவதற்கும் நடுவிலான வித்தியாசமே அது. அந்த வித்தியாசத்தை வரையற்றுக்க, இதுவரை நான் குறிப்பிட்டவற்றுடன் சேர்த்து, செவ்வியலின் இன்னொரு பண்புநலனையும் முதலில் சுட்ட நினைக்கிறேன். போப் வகைப்பட்ட செவ்வியலுக்கும், விர்ஜில் வகைப்பட்ட செவ்வியலுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவ்விதம் வெளிப்படுத்தலாம். ஏற்கனவே நான் வலியுறுத்தியவற்றை மீண்டும் விசாரனை செய்யவும் வசதியாய் இருக்கும்.

ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்ட விஷயம் இது. தனிநபர்கள் முதிர்ச்சியடைவதில் உள்ள உலகப் பொதுவான கூறு, அல்லது குறைந்தபட்சம் அடிக்கடி தென்படக்கூடிய கூறு என்பது தேர்வுமுறையே ஆகும். அதாவது, சில சாத்தியங்களை தவிர்த்துவிட்டு சில சாத்தியங்களின் வளர்ச்சியை தேர்வு செய்வது. இந்த ஒற்றுமை மொழியின் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் அடையாளம் காணப்படலாம். இது உண்மையென்றால், பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டிலும் காணக் கிடைக்கிற நம்முடைய சிறிய செவ்விலக்கியத்தில் (minor classic literature), முதிர்ச்சியை எட்டாமலேயே தவிர்க்கப்பட்ட கூறுகள் மிகுதியானவை அல்லது தீவிரமானவை என்பதை கண்டறியலாம். முந்தைய காலகட்ட ஆசிரியர்களின் ஆக்கங்களில் வெளிப்பட்டு பிறகு புறக்கணிக்கப்பட்ட மொழியின் சாத்தியங்கள் குறித்த விழிப்புணர்வு வழியாகவே இந்த கண்டறிதல் உருவாகும்.

ஆங்கில இலக்கியத்தின் செவ்வியல் காலகட்டமானது அந்த இனத்தின் ஒட்டுமொத்த மேதைமையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இதுவரை எந்தவொரு காலகட்டத்திலும் ஆங்கில மொழியின் மேதைமை முழுமையாக உணரப்படவில்லை- நம்முடைய இம்முடிவுகள் வழியே கடந்தகாலத்தை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தின் சாத்தியங்களை கற்பனை செய்யலாம் என்றாலும்.

ஆங்கில மொழியானது பலதரப்பட்ட எழுத்து நடைக்கான வாய்ப்பை அளிக்கிறது. அதனாலேயே எந்த காலகட்டமும் எந்த எழுத்தாளரும் ஒரு பொது நடைக்கு வரமுடியாமல் இருந்திருக்கிறது. எனில், நாம் இங்கு ஒரு முடிவுக்கு வர முடிகிறது. பூரணமான செவ்வியலில், மக்கள் கூட்டத்தின் மொத்த மேதைமையும் வெளிப்பட்டாவிட்டாலும் அது நிச்சயம் உள்ளுறைந்திருக்கும். அதாவது, மொத்த மேதைமையும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதற்கான சாத்தியம் கொண்ட மொழியில் மட்டுமே அது உருவாக முடியும். அவ்விதத்தில் நம்முடைய செவ்வியல் பண்புநலன்களின் பட்டியலில் “தொகுப்புத்தன்மை”யையும் (Comprehensiveness) சேர்த்துக் கொள்ளலாம்.

டி.எஸ்.எலியட்

ஒரு மொழியின் மக்களின் குணாதிசயத்தை பிரதிநிதுத்துவம் செய்கிற விரிவான உணர்ச்சித் தளத்தினை, தன் வடிவ எல்லைக்குள் உட்பட்டு, உச்சக்கட்ட சாத்தியத்தில் வெளிப்படுத்தக்கூடியதாக செவ்வியல் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை அது சிறந்த முறையிலேயே நிகழ்த்தும். அதனால் தன் மொழி மக்களிடையே, பல்வேறுப்பட்ட வர்க்கங்கள் மற்றும் சூழ்நிலைகளை கடந்து, பெருவாரியான ஏற்பையும் பெறும்.

ஓர் இலக்கிய ஆக்கம், தன் மொழியுடனான உறவில் தொகுப்புத்தன்மையை பெறுவதைக் கடந்து அன்னிய இலக்கியங்களுடனான ஒப்பீட்டிலும் சம அளவிலான முக்கியத்துவத்தை பெறும்போது அது உலகப் பொதுத் தன்மையை  (universality) அடைகிறது. உதாரணமாக, தன் மொழியிலும் இலக்கியத்திலும் அடைந்திருக்கக்கூடிய இடத்தை வைத்து கதேவின் கவிதையை செவ்வியல் என்கிறோம். ஆனால் அதனுடைய சார்புத்தன்மையாலும், உள்ளடக்கத்தின் தற்காலிகத்தன்மையாலும், ஜெர்மானிய நுண்ணுணர்வினாலும், அதை உலக பொதுவான செவ்வியல் என்றழைக்க முடியாது. அன்னிய கண்களுக்கு கதே தன் வயதாலும் தன் மொழி மற்றும் கலாச்சாரத்தாலும் எல்லைக்குட்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய பண்பாட்டினையும் முன்வைக்க இயலாதவராக இருக்கிறார். நம்முடைய பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களை போலவே பிராந்திய எழுத்தாளராக இருப்பதால் அவர் கவிதையை உலகப் பொதுவான செவ்வியல் என்று சொல்ல முடியவில்லை. இன்னொரு கோணத்தில், அதாவது, ஒவ்வொரு ஐரோப்பியனும் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் எனும் அடிப்படையில் அவர் உலகப் பொதுவான ஆசிரியர் எனலாம். ஆனால் அது வேறு விஷயம்.

எந்த நவீன மொழியிலும் செவ்வியலுக்கு பக்கத்தில் வருகிற இடத்தை நம்மால் அறியவே முடியாது. செவ்வியலுக்காய் இரண்டு இறந்து போன மொழிகளிடமே போக வேண்டியிருக்கிறது. உண்மையில், அவை இறந்து போயிருப்பது முக்கியமானது. ஏனென்றால் அவற்றின் மரணம் வழியாகவே நாம் இந்த சொத்துக்கு உரிமை பெற்றிருக்கிறோம். அவற்றின் மரணம் என்பது எல்லா ஐரோப்பியர்களும் அவற்றை உரிமைக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதற்கப்பால் தனித்த மதிப்புடையதன்று.

கிரேக்கம் மற்றும் ரோமானியத்தின் எல்லா மகத்தான கவிஞர்களையும் கணக்கில் எடுக்கும்போதும் செவ்வியலுக்கான தரநிலையை உருவாக்கிய விதத்தில் நாம் விர்ஜிலுக்கே அதிகம் கடன்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். இப்படி சொல்வதன் அர்த்தம் விர்ஜிலே தலைசிறந்தவர் என்பதோ எல்லா வகைகளிலும் நாம் அவருக்கு கடன்பட்டிருக்கிறோம் என்பதோ அல்ல. ஒரு குறிப்பிட்ட விதத்தை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

ரோம சாம்ராஜ்யத்தில் லத்தீன் மொழியின் வரலாற்றில் உருவான ஒரு தனித்துவமான இடமே விரிஜிலின் தொகுப்புத்தன்மைக்கு, அந்த விசேஷமான தொகுப்புத்தன்மைக்கான காரணம். அவருடைய விதியை தீர்மாணித்த இடமும் எனலாம். ஏனிட்டின் (Aeneid) பிரக்ஞையிலேயே விதி பற்றி உணர்வு வருகிறது. ஏனியாஸே ஆரம்பம் முதல் இறுதி வரை விதியின் மனிதனாகவே இருக்கிறான். விதியின் கட்டளையை நிறைவேற்றுபவனாக, தன்னை வழிநடத்தக்கூடிய கடவுள்களுக்கு பின்னுள்ள உயர்ந்த ஆற்றலுக்கு ஒப்புக் கொடுப்பவனாக இருக்கிறான். உணர முடிவதும் ஆனால் தெரிந்து கொள்ள முடியாததுமான பெரிய நோக்கத்திற்காக நாடு கடத்தப்பட்டவனாகிறான்.

ஏனியாஸ் ரோம நகரத்தின் குறியீடு. ஏனியாஸுக்கு ரோம் எப்படி இருந்ததோ அப்படிதான் ஐரோப்பாவிற்கு பண்டைய ரோமிருக்கிறது. அதனாலேயே விர்ஜில் ஒரு தனித்துவமான செவ்வியலின் மையத்தை அடைகிறார். வேறெந்த மனிதரும் இடம்பெறவோ அல்லது சுவீகரிக்கவோ முடியாத, ஐரோப்பிய நாகரீகத்தின் மைய இடத்தை அவர் அடைந்திருக்கிறார். ரோம சாம்ராஜ்யமும் லத்தீன் மொழியும் ஏதாவொரு ராஜாங்கமோ ஏதோவொரு மொழியோ அல்ல. தனித்துவமான விதிவச இணைப்பை நம்மிடையே கொண்டிருக்கும் சாம்ராஜ்யம் மற்றும் மொழி. அந்த சாம்ராஜ்யமும் அந்த மொழியும் எந்த கவிஞனில் பிரக்ஞையாகவும் வெளிப்பாடாகவும் நிகழ்ந்ததோ அந்த கவிஞன் தனித்துவமான விதி பெற்றவன்.

விர்ஜிலே ரோம் நகரின் அவள் மொழியின் பிரக்ஞை; மகத்தான குரல் எனும்போது அவருடைய முக்கியத்துவத்தை இலக்கிய விமர்சனத்தாலும் பாராட்டாலும் மட்டும் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. எனினும் வாழ்க்கையை கையாளும் இலக்கிய பிரயோகங்களையோ அல்லது இலக்கிய கேள்விகளையோ கடைபிடிப்பதன் வழியே மொழியில் சொல்வதைவிடவும் கூடுதலாக உணர்த்திவிட நம்மால் முடியும். இலக்கிய பிரயோகங்களில் சொல்ல வேண்டுமென்றால் விர்ஜிலின் மதிப்பு என்பது செவ்வியல் அளவுகோலை வழ்ங்கியதிலேயே உள்ளது. வேற்று மொழி கவிஞன் வழியே தோன்றிய அளவுகோல் என்பதால் அதை நாம் நிராகரிக்க வேண்டியதில்லை.

செவ்வியல் தரநிலையை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட இலக்கிய ஆக்கத்தையும் அதனடிப்படையில் மதிப்பிடுவதற்கும் காரணம் இருக்கிறது. நம்முடைய இலக்கியம் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு தனி ஆக்கமும் எதிலாவது குறைபட்டிருக்கும் என்பதை கண்டுகொள்வதே அது. இதுவொரு அத்தியாவசியமான குறைபாடு. இந்த குறைபாடில்லாவிட்டால் வேறு சில பண்புகள் சாத்தியப்பட்டிருக்காது. எனினும் அதை நாம் ஒரு குறைபாடாகவே காண வேண்டும். அத்தியாவசியமானதாகவும் உணர்ந்தடியே.

நான் குறிப்பிடுகிற இந்த தரநிலை இல்லாமல் போனாலோ, நம்முடைய சொந்த மொழி இலக்கியத்தை மட்டும் நம்பி இந்த தரநிலையை கைவிட்டாலோ, ஒரு மேதைமையின் ஆக்கத்தை தவறான காரணங்களுக்காக கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். பிளேக்கை(Blake) தத்துவத்திற்காகவும் ஹாப்கின்ஸை(Hopkins) அவருடைய நடைக்காகவும் பாராட்டுவது போல. இங்கே ஆரம்பித்து பிறகு மேலதிக தவறுகளையும் நாம் செய்வோம். ஓர் இரண்டாம் தர எழுத்தாளருக்கு முதல் தர இடத்தை அளிப்பது போல. சுருக்கமாக சொன்னால், செவ்வியல் அளவுகோலை தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால் -மற்ற யாரைக் காட்டிலும் இந்த அளவுகோலுக்கு விர்ஜிலுக்கே நாம் அதிகம் கடன்பட்டிருக்கிறோம்- நாம் பிராந்திய எல்லைக்குள் சுருங்கிவிடுவோம்.

“பிராந்தியம்” என்றும் சொல்லும்போது அகராதி விளக்கங்களை தாண்டிய விஷயத்தை இங்கே சொல்கிறேன். “தலைநகரின் கலாச்சாரமும் நயமும் வேண்டும்” என்று நான் சொல்லவில்லை. எந்த கவிஞரையும் பிராந்திய கவிஞராக தோன்ற செய்யும் அளவுக்கு மையமான இடத்தில் விர்ஜில் இருந்தாலும் நான் அதையும் சொல்லவில்லை. “எண்ணத்திலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கையிலும் குறுகலான நோக்குக் கூடாது” என்றே சொல்ல வருகிறேன். இது கொஞ்சம் திடமில்லாத வரையறை.

நான் இங்கு குறிப்பிடுவது – சிலவற்றை புறக்கணிப்பதும் சிலவற்றை மிகைப்படுத்துவதுமான மதிப்பீடுகளின் சிதறலையே. இந்த சிதறல் உலகம் சார்ந்த விரிவான பூகோள பார்வை இல்லாததால் உருவாகவில்லை. எல்லைக்குட்பட்ட பகுதியில் கிடைக்கும் தரப்படுத்தல்களை ஒட்டுமொத்த மனித அனுபவத்தின்மேலும் திணிக்கும்போதே இந்த குறுகல் பிறக்கிறது. அதுவே தற்செயலை சாராம்சமாகவும் தற்காலிகத்தை நிரந்தரமாகவும் முன்வைக்கிறது. மனிதர்கள் ஞானத்தை அறிவுடனும், அறிவை தகவலுடனும் குழப்பிக் கொள்வதற்கான வாய்ப்பு வேறெந்த காலத்தைவிடவும் அதிகம் இருக்கும் இந்த காலத்தில், வாழ்வின் நெருக்கடிகளை தொழில்நுட்ப மொழியால் தீர்க்கும் முனைப்பு தோன்றுகையில், புதிய பெயர் தேவைப்படுகிற ஒரு புது வகையான “பிராந்தியவாதம்” பிறப்பெடுக்கிறது. இது இடத்தின் பிராந்தியத்தன்மை அல்ல. காலத்தின் பிராந்தியவாதம்.

பிராந்தியவாதத்தை பொருத்தவரையில் வரலாறு என்பதே தத்தம் கடமைகளை ஆற்றிவிட்டு காணாமல் போய்விட வேண்டிய மனித கருவிகளின் கதை மட்டுமே. அதை பொருத்தவரையில், உலகம் என்பதே உயிரோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே உரிய சொத்து. அதில் மரித்தவர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. இந்த வகைப்பட்ட பிராந்தியத்தனமையின் தீமை என்னவென்றால், உலகம் முழுக்கவுள்ள அத்தனை மக்களும் பிராந்தியங்களாக ஒன்றிணைந்தாலும், அந்த பிராந்தியங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை அன்னியர்களாக கருதும் போக்கு எழும் என்பதே.

இந்த வகையான பிராந்தியவாதம், சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் வித்திடுமேயானால் அது பற்றி கூடுதலாக பேசலாம். ஆனால் தனித்துவமான கொள்கை அல்லது தரநிலையை பின்பற்ற வேண்டிய விஷயங்களில் நம்மை அலட்சியமானவர்களாகவும், தனிநபர் விருப்பங்களை அனுமதிக்க வேண்டிய விஷயங்களில் நம்மை சகிப்பற்றவர்களாகவும் அது மாற்றுகிறது. உலகில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பலவகைப்பட்ட மதங்கள் இருப்பதில் எந்த சிக்கலும் இல்லை – நம் குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியான பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்வரை.

இந்த இடத்தில் என்னுடைய கவலை என்பது இலக்கியத்தில் உள்ள பிராந்தியவாதம் சார்ந்ததே. ஐரோப்பா முழுமையானது என்பதையும் ஐரோப்பிய இலக்கியம் முழுமையானது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஐரோப்பாவின் அலகுகள் செழிக்க, அதன் உடல் முழுக்க ஒரே இரத்தவோட்டம் பாய வேண்டும். ஐரோப்பாவின் இரத்தவோட்டம் என்பது லத்தீனும் கிரேக்கமுமே. கிரீஸ் நாட்டின் பூர்வீகத்தையும் ரோமிலேயே கண்டுபிடிக்க முடியும் என்பதால் அவ்விரண்டுமேக் கூட தனித்தனி அமைப்புகள் அல்ல.

நம் பல்வேறு மொழிகள் நடுவே, செவ்வியல் அளவுகோல் அல்லாமல், இலக்கியத்தின் சிறப்பை மதிப்பிட என்ன வகையான பொது அளவுகோல் இருக்கிறது? அந்த இரண்டும் மொழிகள் வழியே நாம் மரபாக அடைந்திருக்கிற எண்ணமும் உணர்ச்சியும் இல்லாமல்  என்ன வகையான பொது அறிவுத் திறனை நாம் பாதுகாக்க முடியும்? அந்த புரிதலை வளர்ப்பதில் எந்த ஐரோப்பிய மொழியும் ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று கூடுதல் அணுகூலம் கொண்டதல்ல.

லத்தீனின் உலக பொதுத்தன்மையை எந்த நவீன மொழியும் எட்டமுடியாது. லத்தீனைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில், பல லட்ச மக்களால் அம்மொழி பேசப்பட்டாலும் பல்வேறு தாய்மொழிகளையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்கள் நடுவிலான பொதுவான தொடர்பு மொழியாக இருந்தாலும், லத்தீனின் உலக பொதுத்தன்மையை அடுஹ் லட்சியமாக கொள்ள முடியாது. எனில், எந்த அடிப்படையில் விர்ஜிலை செவ்வியல் என்று சொல்கிறேனோ அந்த அடிப்படையில், எந்த நவீன மொழியும் ஒரு செவ்வியலை உருவாக்கிவிடமுடியாது எனலாம். விர்ஜில் நம்முடைய செவ்வியல். விர்ஜில், ஒட்டுமொத்த ஐரோப்பாவின் செவ்வியல்.

தாந்தே

நம்முடைய பல்வேறு இலக்கியங்களில் – லத்தீனிடமில்லாத இல்லாத- நாம் பெருமைக் கொள்ளத்தக்க பல வளங்கள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு இலக்கியமும், ரோமின் பெரிய சட்டகத்தில் வடிவத்தில் பொருந்தியே தன் இடத்தை பெறுவதனாலேயே மேன்மை கொள்கிறதே தவிர தனியாக மதிப்பிடப்படுவதால் அல்ல. நான் ஒரு புதுவகையான தீவிரத்தன்மையை, எடையை, வரலாறு சார்ந்த ஓர் உள்ளார்ந்த பார்வையை முன்மொழிகிறேன். அதற்கு ஏனியாஸை உதாரணமாக சொல்லலாம். தன் வாழ்க்கையின் சாதனைகளின் எல்லைகளை கடந்த வருங்காலத்திற்கான, ரோம சாம்ராஜ்யத்திற்கான ஏனியாஸின் அர்ப்பணிப்பை உதாரணம் காட்டலாம்.

தன் இளமையே புதைக்கப்பட்டதற்கு ஏனியாஸ் அடைந்த பிரதிபலன் என்பது ஒரு குறுகலான கடல் நிலமும், நடுவயதில் நடந்த ஓர் அரசியல் திருமணமுமே. அதனாலேயே ரோமின் விதியை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னேன். ரோமன் இலக்கியம், முதல் பார்வைக்கு பிரபல பெயர்களின் சாதாரண சேகரமாக, வரையறைக்குட்படுத்தாக தோன்றலாம். ஆனால் எந்த இலக்கியமும் அடையாதமுடியாதபடி அது உலக பொதுவானது. ஐரோப்பாவின் விதிக்கு இசைந்து தனக்கு பின்னால் வரக்கூடிய மொழிகளின் வளத்துக்கும் பன்முகத்தன்மைக்குமாய் தியாகம் செய்து, ரோமன் இலக்கியம் செவ்வியலை உருவாக்கியது.

செவ்வியல் தரநிலை ஏற்கனவே உருவாக்கப்பட்டிருப்பதே போதுமானது. அந்த வேலையை யாரும் திரும்ப செய்ய வேண்டியதில்லை. ஆனால் அந்த தரநிலையை பராமரிப்பதே நம் சுதந்திரத்திற்கான விலை. ஒழுங்கின்மைக்கு எதிரான நம் சுதந்திரத்தின் காவல் அதுவே. தாந்தேவின் புனித பயணத்தை வழிநடத்திய மகத்தான ஆவியை வருடந்தோறும் பக்தியுடன் நினைவுகொள்வதன் மூலம் நம் கடமையை ஞாபகமூட்டிக் கொள்ளலாம். அந்த மகத்தான ஆவியான விர்ஜில், அவர் அனுபவிக்க முடியாத தரிசனத்துக்காய் தாந்தேவை வழிநடத்துவதை லட்சியம் போல மேற்கொண்டார். தான் அறிந்திருக்கவே முடியாத கிறிஸ்துவ கலாச்சாரத்திற்கு ஐரோப்பாவை கொண்டுச் சென்றார். புது இத்தாலியின் மொழியில் கடைசி தடவை பேசியவர் தன் விடைபெறலை இப்படி சொன்னார்,

மகனே , நீ அநித்திய நெருப்பையும்
நித்திய நெருப்பையும் கண்டிருக்கிறாய்
என் ஆற்றல்களால் சந்திக்க முடியாத இடத்தையும்
கடந்து சென்றிருக்கிறாய்

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

1 Comment

  1. Very taxing to read, undestand and digest. முற்றிலும் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்ல முடியவில்லை. ஆனால், இக்கட்டுரை ஒரு செவ்வியல் தரம் வாய்ந்தது என்று சொல்லும் துணிவை இக்கட்டுரை வாசிப்பு வழங்கியிருக்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.