/

இருளின் விரல் : ஏ.வி.மணிகண்டன்

புகைப்படம் : ஏ.வி.மணிகண்டன்

[1]

சென்ற கட்டுரைக்கும் இந்த கட்டுரைக்கும் நடுவே உலகம் இரண்டு பண்டிகைக்காலங்களை கடந்திருக்கிறது. நான் மூன்று கொடும் பருவங்களை கடந்து வந்திருக்கிறேன். சிக்கல்களின் போது உடனிருந்த நண்பர், “மண்டைல இவ்வளவு சிக்கல வச்சுக்கிட்டு எழுதறப்போ மட்டும் பருப்பு மாதிரி எழுதற?” என்று கேட்டார், விளையாட்டாகதான். தீவிரமாக கேட்டிருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் எனக்கு அது திகைப்பை உருவாக்கியது. கட்டுரைகள் சிந்தனைகளாகவும் தருக்கத்தின் படி நிலைகளாகவும் எழுதப்படுவதால் நான் சிந்திக்கும் கனவானை போல என்னை முன் வைப்பதாக எண்ணிக்கொண்டிருப்பார் போல.

நம்முடைய சூழலில் சிந்திப்பதென்பது அறிவோடும், அறிவென்பது சமத்காரத்தோடும் சேர்த்து பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் இத்தனை படிப்பும் லௌகீகத்தில் பயன்படாதெனில் எதற்கு அது என குழப்பமாக வெளிப்படுகிறது. உலகியலில் செய்யும் பிழைகள் அறிவுத்தேடலோடு இணைத்துக் கொள்ளப்படுகின்றன. கடந்த ஐனூறு வருடங்களில் ஐரோப்பிய மரபில் அறிவு செல்வமாக மாறுவதன் சாத்தியம் இருந்து வந்திருக்கிறது. நாம் அதையே இலக்காக ஆக்கிக்கொள்கிறோம். மேலதிகமாக இங்கே கல்வி என்பது பொருளீட்ட எனவும், பொருளியல் வெற்றிக்கு உதவுவதே அறிவெனவும் இருக்கிறது. திரு வேறு தெள்ளியராதல் வேறு என்று வள்ளுவர் சொல்லி இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் லௌகீகத்தில் அறிவினால் பயனில்லை, தந்திரத்தால், சமத்காரத்தால் மட்டுமே பயனுண்டு. இரண்டும் வேறு வேறு என்பது மட்டுமில்லை. எதிரெதிர் திசையில் பயணிப்பவையும் கூட.

இது நாள் வரை நான் என் குழப்பங்களையும் தடுமாற்றங்களையுமே என் எழுத்திலும் புகைப்படங்களிலும் முன் வைக்கிறேன் என்றே நான் எண்ணி வந்திருக்கிறேன்.  நான் உலகிற்கு உரைக்க அல்ல, என் வழிகளை துலக்கிக்கொள்ளவே எழுதுகிறேன். இருப்பை அர்த்தமாக்கிக் கொள்ளவே படமாக்குகிறேன்.

நான் என்னுடைய வாழ்நாளில் பருப்பைப்போல உணர்ந்ததே இல்லை, ஒரு தருணத்தில் கூட, அத்தகைய வாழ்வெனக்கு அமைந்ததுமில்லை. அரிய விஷயங்களை அடைந்திருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்திருக்கிறேன். தெய்வத்தை கண்டிருக்கிறேன், பல முறை. தெருவில் கிடந்திருக்கிறேன், பல முறை. அனைத்தும் எனக்கு நிகழ்ந்தவை, என்னால் நிகழ்த்தப்பட்டவை அல்ல என்றே உணர்ந்திருக்கிறேன். பருப்பை போல உணர்வதற்கு இவையனத்தும் என்னால் நிகழ்கின்றன என்ற எண்ணம் வேண்டும்.  அந்த நிகழ்வுகள் சிந்தித்து எடுக்கப்பட்ட நம்முடைய முடிவால் நிகழ்ந்தவையாக இருக்க வேண்டும். ஒரு போதும் என் வாழ்க்கையை நானே தீர்மானித்ததாகவோ அல்லது என் திட்டப்படி நிகழ்ந்ததாகவோ உணர்ந்ததில்லை. ஆகவே மனிதர்கள் எப்படி இறுமாப்போடு இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் திகைப்பே. 

மாறாக நானறிந்த வாழ்க்கையில் பருப்பு போல இருப்பவர்கள் தெளிவாக சிந்திக்க முற்படுபவர்கள் அல்லர். தருக்க அடிப்படையை தேடுபவர்களும் அல்லர். சிந்திப்பவர்களுமே கூட அல்லர். குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு காட்சி, நெடுங்காலம் வஞ்சம் தீர்க்க விரும்பிய ஒருவன் கதை நாயகன்களில் ஒருவனான ‘டக்கோ’வை சந்தித்து சுடப் போகும் முன் எவ்வளவு காலமாக அந்த தருணத்திற்காக காத்திருந்தேன் என நீண்ட தன்னுரை ஆற்றுவான். குளியல் தொட்டியில் படுத்திருக்கும் டக்கோ வந்தவனுடைய தன்னுரை முடியும் முன்பு அவனை சுட்டுவிட்டு, சுட வந்தாயெனில் சுட்டு விடு, பேசிக் கொண்டிருக்காதே, என்று சொல்லுவான். பருப்புகள் சுட்டுவிடுபவர்கள். 

[2]

சென்ற மாதம் அப்பா பதினைந்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருந்தார். டிஸ்சார்ஜ் செய்யும் அன்று இளம் மருத்துவர் வார்டுக்கு வந்து ஒரு நோட்புக் வாங்கிட்டு வந்துடுங்க, டிஸ்சார்ஜ் சம்மரி எழுதணும் என்றார். 

மருத்துவமனைக்கு எதிரில் இருந்தவற்றில் நோட்டுபுத்தகம் விற்கும் கடை போல ஏதும் இல்லை. இருந்தவை அனைத்தும் மருந்து கடைகளும் ஹோட்டல்களும் மட்டுமே. ஒவ்வொரு கடையாக பார்த்துக்கொண்டே வந்ததில் ஒரு கடை வித்தியாசமாக இருந்தது. மருந்து கடை, மளிகைக்கடை, ஜெனரல் ஸ்டோர் என்றழைக்கப்படும் வினோத வகைப்பாடு என அனைத்து சாத்தியங்களோடுமான கடையொன்றில் நோட்டு இருக்கா என கேட்டேன். 

அவர் கொண்டு வந்து வைத்த இரு வகைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு பணமும் செலுத்திய பிறகு திகைத்து இதே நோட்டில் வேறு அட்டைப்படம் இருப்பதை தர முடியுமா என்றேன். அவர் கண்களில் தோன்றிய பாஃவத்தை புரிந்து கொள்வது  எளிது, விளக்குவது கடினம். மருத்துவமனை வாசலில் நோட்டு வாங்குபவர்கள் அட்டைப்படங்களை கவனிப்பவராக இருக்க வாய்ப்பு குறைவு போல. சிறுவர் சிறுமியரைப் போலன்றி நாற்பத்திரண்டு வயதான (ஆசாமி!?) ஒருவர் கலைந்த தலையும் நரைத்த தாடியுமான ஒருவருக்கு நோட்டின் அட்டைப்படத்திலெல்லாம் கருத்து வேறுபாடு ஒரு கேடா என்பதைப் போலிருந்தது. 

அந்த நோட்டில் ராக்கெட் புகையும் நெருப்புமாக மேலே செல்வதை போலிருந்தது. மிகச் சாதாரணமாக இருக்கலாம். மேலே செல்வது, தொழில் நுட்பம் ஆகியவை உண்மையில் நேர் மறையான அர்த்தங்களை உருவாக்கக்கூடியதுதான். ஆனால் அர்த்தம் படிமங்களில் இருக்கிறதா இல்லை பார்வையில் இருக்கிறதா என்ற விவாதத்திற்கு அப்போது நானும் என் உடலும் தயாராக இல்லை. நோயுற்ற ஒருவருடைய சம்மரி நோட்டில் மேலே செல்வது மீண்டு வருவதா அல்லது விட்டு போவதா? உம்பர்ட்டோ ஈக்கோவைதான் கேட்க வேண்டும். அல்லது மிலன் குந்தேராவை. அந்த சவாலை எதிர்கொள்ளும் மன, உடல் நிலையில் அப்போது நான் இல்லை. 

ஒரு படிமத்தை புரிந்து கொள்வது சாதாரணமானது அல்ல, வாழ்க்கையையே கூட மாற்றிவிடும் என்றிருக்கிறார் குந்தேரோ. இருப்பின் தாங்க இயலா எடையின்மை நாவலில் தெர்ஸா தாமஸை முதலில் காணும் போது ஒலிக்கும் பீத்தோவனின் இசை அசரிரீ என தோன்றி அவனை நம்பி அவள் அறிந்திராத நகரத்திற்கு இடம்பெயர்ந்து வரச் செய்து விடும். அதற்கு முன்பு அவள் பீத்தோவனைக் கேட்டது ஒரே தடவை. மிக மோசமான குடும்ப சூழலில் வளர்ந்தவளுக்கு பீத்தோவனை கேட்ட அந்த சந்தர்ப்பம் வாழ்வின் அரிய தருணங்களில் ஒன்றாக இருக்கும். அதற்கு பிறகு அவள் கேட்டதில்லை. இப்போது தாமஸை சந்திக்கும் போது மீண்டும் ஒலிக்கும் அந்த இசை அரிய ஒன்று என்ற கருத்து உணர்வாக மாறி ஒரு நிமித்தம் போல வந்து இருவரையும் இணைத்து வைத்து சென்று விடும். படிமங்கள் அத்தகையவை.  எம்.டி.எம்மின் சமீபத்திய கவிதைத் தொகுதியின் தலைப்பு இங்கு பொருத்தமானது “ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்”.

நான் கிருஷ்ணாவை முதன்முதலில் சந்திக்க சென்ற நாளில், பதினோரு மணியின் வெயிலில் வண்டியை ஓட்டிக்கொண்டு அலுவலகங்கள் நிறைந்திருந்த ஆளற்ற சாலையின் சென்று கொண்டிருந்தேன். வயதான ஒருவர் கையை காட்டி நிறுத்தி என்னை இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இடத்தில் விட்டுவிட்டு போக முடியுமா என்றார். இறக்கிவிட சொன்ன இடம் நான் அடிக்கடி செல்லும் ஆலயம். அங்கு இறக்கிவிட்ட பிறகுதான் கவனித்தேன் அவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர் என்று. நான் கிளம்புவதற்குள் தலையில் செம்பருத்தி பூவோடு கைவைத்து சென்று வா, செல்லும் காரியம் நன்று நிகழும் என்றார். அன்று சந்திப்புக்கு முன்பே மனம் உறுதி செய்து விட்டிருந்தது இவளை திருமணம் செய்து கொள்வதென்று என பிறகு எண்ணிக்கொண்ட நாட்களில் தோன்றியது. அது அதிர்ச்சியாகவும் இருக்கும். என்னுடைய சம்மதத்தை கேட்காமலேயேவா எனவும் தோன்றுவதுண்டு. ஒரு பெரும்பெருக்கில் அதை முடிவு செய்ய நான் யார் எனவும். ஆனால் ஏற்கனவே அதை முடிவு செய்திருந்த நான் யார்? அதை ஆச்சரியமாக பார்த்து கேள்வி கேட்கும் நான் யார்? அன்றைய தினத்தில் அவள் மஞ்சளும் சிவப்புமான ஆடையை அணிந்து வந்திருந்ததும், நாங்கள் சந்தித்த கஃபேயின் மரத்தில் தீக்கொன்றைகள் பூத்திருந்ததும் எல்லாமும் சேர்ந்துதான் அந்த முடிவை எடுத்திருந்தன. எதையும் அத்தனை சீக்கிரமாக முடிவெடுக்காத நான் எல்லாம் விரைவாக நிகழ்வதை திகைத்து பார்த்துக் கொண்டிருந்தேன், பார்த்துக் கொண்டிருந்த அந்த நான் யார்?

[3]

நம்மை மீறி நிகழும் செயல்களை பராக்கு பார்க்கும் அந்த தன்மையும், காட்சியை படிமங்களாக ஆக்கிக்கொள்ளும் தன்மையும் புகைப்படக்கலையோடு நெருங்கிய தொடர்புடையது என நம்புகிறேன். சற்று விரிவாக சொல்வதானால், நிகழும் எதையும் தனித்த இருப்பு விளங்கிக் கொள்வதற்குள் பிரபஞ்ச இருப்பு நடந்து கடந்து விடுவதாக இருக்கிறது. தற்செயல்களின் பெருக்கின் வழியாக முடிவின்மை நம்மை கடந்து செல்வதை பார்த்துக்கொண்டிருக்கும் எளிய பிரக்ஞை இருப்பு. நாம் அதற்கு ஒரே விதமாகதான் எதிர்வினை புரிய முடியும், நம்முடையை ஈகோவிற்கு அப்பாலான உணர்வொன்றைக் கொண்டு. எத்தனை தடவை நிகழ்ந்தாலும் நாம் எடுக்கக்கூடிய முடிவென்பது ஒன்றேயாகதான் இருக்கும். இதைத்தான் நீட்ஷே முடிவின்மையில் நிகழ்பவை [eternal recurrence] என்கிறார். நம் காதலின் இசை பீத்தோவன் வழியாக நம்மை இசைத்து செல்வது.

எதிராக, நடப்பவற்றை உடனடியாக எதிர்கொண்டு செயலாற்றுவது அசாதாரணமான புத்திக்கூர்மை தேவைப்படுவது. அப்படி செய்பவர்கள் மனிதர்களை எடைபோடுவதில் வல்லவர்களாக இருப்பவர்கள். எல்லாவற்றையும் துல்லியமாக பார்க்க இயன்றவர்கள். வணிகக்குலமொன்றில் பிறந்து வளர்ந்தாலும், சுற்றி இருப்பவர்கள் அப்படி இருப்பவர்களாக இருந்த போதிலும் எனக்கு அந்த வல்லமை எப்போதும் இருந்ததில்லை, ஆகவே கூர்மையாக இருக்க வேண்டும் என்ற முயற்சியையும் சீக்கிரமே விட்டுவிட்டேன். நெடுங்காலம் கழித்து அதை இப்படி புரிந்துகொண்டேன். இரு வேறு காலம் இருக்கிறது. நிகழ்வுகளின் காலம், பார்ப்பவனின் காலம். திரைப்படம் ஓடுவதை பார்ப்பவன் புரிந்துகொள்ளும் நிகழ்வை போல. சிலர் முன் கூட்டியே கதையை ஊகித்துவிடுகின்றனர்.

Bull’s Head – Pablo Picasso

லௌகீகமானவர்கள் நிகழ்வுகளின் காலத்திலிருப்பவர்கள். சட்டகம் எத்தனை வேகமாக ஓடினாலும் காட்சியின் எந்த பகுதியும் அவர்களின் கண்களிலிருந்து தப்பித்துவிட முடியாது. நான் நிறுத்தி நிறுத்தி முன்னும் பின்னும் ஓட்டி பார்க்கும் வகையை சார்ந்தவன் போல, திரைப்படத்தை நூலாக வாசிப்பவன். பிறகு நான் வாசித்த புகைப்படக் கலைஞர்கள் அனைவரிடமும் இத்தகைய குணம் இருப்பதை அறிந்த போது இலகுவாக இருந்தது. நோபுயோஷி அராக்கி தன்னுடைய மனைவி இறந்த போது அதை புகைப்படமாக்கினார். அதைக் கண்டவர்கள் அவரை இரக்கமற்றவராக எண்ணினர், ஆனால் புகைப்படமாக ஆக்காமல் என்னால் வேறு எப்படியும் இந்த சூழலை எதிர்கொள்ள இயலாது என்றார். பிறகு வந்த நாட்கள் முழுவதும் தனிமையைத்தான் படமாக்கிக்கொண்டிருக்கிறார். அன்று இரக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்தக் கணமே கடந்து போய்விடுபவர்களாக இருந்திருப்பர். லௌகீகவாதிகளின் காலம் முன் சொன்னதைப் போல காலத்தின் வேகமே. ஆகவே அவர்களால் காலத்தை நீட்டிக் கொள்ளவோ சுருக்கிக் கொள்ளவோ இயலாது. அராக்கி அந்த கணத்தை நீட்டி அதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர். அல்லது படமாக்கி அதை அந்தக்கணத்தை உறுதி செய்துகொள்ளவே வருடங்கள் எடுத்துக்கொள்பவர். உறுதியான பிறகு மேலும் பல வருடங்கள் அதிலிருந்து மீள முயல்பவர்.

நிகழ்வுகளை மொழியாக ஆக்கிக்கொள்ளாத எழுத்தாளர்கள் உண்டா? எழுத்தாளர்கள் மொழியில் காலத்தை பிண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், எந்த சூழலிலும். அகத்தில் நிகழ்வதால் வெளியில் தெரிவதில்லை. புகைப்படக் கலைஞர்கள் கால ஓட்டத்தை நிறுத்தி நிறுத்தி சட்டகத்தை மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி உற்று பார்க்கின்றனர். ஆகவே காலத்தை நிறுத்திக் கொள்ளவும் முன் பின் நகர்த்திக் கொள்ளவும், அந்தக் கணத்தின் உணர்வை கேள்விகளாக விரித்துக்கொள்ளவும் இயலும். அவர்களால் பிரதம மந்திரியின் பாதுகாவலர்களைப் போல, ஓடும் கண நேரத்தில் சட்டகத்தின் எல்லைகள் வரை காண இயலாது.  மனைவியின் மரணத்தை அராக்கி உடலை கைப்பற்றி இறுக்கிக்கொள்ள விழையும் உள்ளத்தின் விழைவாக நீட்டிக்கொண்டார். அன்று மரணத்தை படமாக்காமல் இன்று இந்தக் கேள்வியை வந்தடைந்திருக்க இயலாது.

லௌகீகமானவர்களின் கண்கள் காலத்தில் “அங்கு அப்போதில்” இருப்பவை, சரியாக எடை போடுபவை, அவர்களின் கண்களின் வேகம் என்பது சித்தத்தின் வேகமே. அந்தக் கண்களின் எல்லை என்பதுவும் சித்தத்தின் எல்லையே, பயன்படுவது பயன்படாதது என்பதற்கப்பால் அந்தக் கண்கள் செல்வதில்லை. சட்டகத்தை விடவும் வேகமாக ஓடக்கூடிய கண்களாக இருந்தாலுமே கூட. கலைஞர்கள் காலத்தின் சட்டகத்தை நிறுத்தி நிறுத்தி காணும்போதும் கூட அவற்றை தன்னிலையை வைத்து காண்பதில்லை. மாறாக அங்கு காணுவது புதிய அர்த்த சாத்தியங்களையே. ஆகவேதான் யாரும் பார்க்காத  பொருட்களிலிருந்து புதிய பொருளொன்றை உருவாக்க இயல்கிறது அவர்களால்.

உளவியலாளர் விக்டர் ஃப்ராங்கல் அதை cold curiosity என்கிறார். அர்த்தமேயேற்றாமல் வெறுமனே பார்த்து நிற்பது. சித்தம் ஏற்றப்படாத பார்வை என்பதால் பார்வையின் வேகத்திற்கு சித்தம் போவதில்லை. எல்லாவற்றையும் படமாக்கி போட்டுக்கொண்டு பிறகு எடுத்து பார்த்து சித்தத்தை செலுத்திக்கொள்ளலாம் ஆகவே அர்த்தமேற்றுவதை இப்போதைக்கு ஒத்திப்போடலாம். ‘பார்க்கப்படுவது’ அங்கே ‘இருப்பதாக’ இல்லாமல் புதிய பொருளுடையதாக இருக்கிறது. உலகை சித்திரங்களாக வாசித்தல் எனலாம். வாசிப்பது என்பதன் பொருள்  ‘தான்’ அர்த்தமாக்கிக்கொள்ளுவது. ‘சொல்லப்பட்ட’ அர்த்தத்தை புரிந்து கொள்வதல்ல.

லௌகீகமானவர்கள் உலகை வாசிப்பதில்லை, கிடைப்பவற்றை தடயங்களாக வைத்து சூழலை புரிந்து கொள்கிறவர்கள், துப்பறிவாளர்கள் போல. தடயங்கள் என்பவை நிகழ சாத்தியமானவையே தவிர அர்த்த சாத்தியங்கள் அல்ல. கலைஞர்கள் தங்களின் அர்த்தமாக்கல் வழியாக வேறு ஒன்றை உருவாக்குகிறவர்கள். அதனால்தான் புகைப்படக்கலைஞர்களுக்கு கேமரா இல்லாமல் இருப்பது என்பது வாசிப்பவனுக்கு கண்ணாடியில்லாமலிருப்பதை போல பதற்றத்தை உண்டு பண்ணுவதாக இருக்கிறது. சட்டையில்லாமலிருப்பது கூட பிரச்சனையில்லை, குறைந்தது அவர்களுக்கு.

இந்த இடைவெளிதான் புகைப்படக்கலைஞர்களை தனித்து தெரிய செய்வது. ஒரு தருணத்தில் சித்தம் சென்று சேர்வதற்கு முன்பாக கண்களும் உள்ளுணர்வும் ஒரே வேகத்தில் சென்று தைப்பவர்களாக ஆக்குவது. துப்பறிவாளனுக்கும் தத்துவவாதிக்கும் அடிப்படை கரணிய நோக்குதான். சென்று சேருமிடமும் வழிமுறைகளும் வேறாக இருக்கக் காரணம் அதுதான்.

[4]

உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆஃப் தெ ரோஸ் நாவலின் வில்லியம் பாஸ்கர்வில் தத்துவமும் கலையும் பயின்றவர். துப்பறிவாளனின் கூர்மையும் தத்துவவாதியின் தர்க்கமும் கொண்டவர். மடாலயத்தின் கொலைகளை அபாரமாக துப்பறிந்தவர். மிகச்சரியாக கடவுச்சொல்களை ஊகித்தறிபவர், புதிர் வழி நூலகத்தின் வரைபடத்தை கட்டிடத்திற்கு வெளியே நின்றே ஊகித்து வரைந்து வழி கண்டடைபவர். ஆனால் ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸிடமிருந்து பாஸ்கர்வில்லை வேறுபடுத்துவது எது?

ஹோம்ஸுக்கு சந்தேகமேயில்லை. யூகிப்பது என்பது அறிவிற்கு அவமானம் என உணர்பவர் ஹோம்ஸ். ஏனெனில் அறிவென்பது அவருடைய அகங்காரமே.  அதில் யூகம் என்பது வாழ்வின் தற்செயல்களுக்கு பங்கு தருவது. ஆகவே அது அவருடைய தன்னிலையை நிராகரிப்பது, அது அவருக்கு இழிவுதான். பாஸ்கர்வில் ஒவ்வொரு அடியையும் சந்தேகத்தோடுதான் எடுத்து வைக்கிறார். நிகழ்வுகளை மட்டுமின்றி, தான் சிந்திக்கும் முறையின் மீதும் அவருக்கு ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தடயமும் பல்வேறு சாத்தியங்களை காட்டுகிறது. சாத்தியங்களை பகுத்தும் வகுத்தும் அறிவது ஹோம்சின் வழி, அதை செய்யும் ஹோம்ஸ் கரணிய அடிப்படை கொண்ட இறுக்கமான ஆளுமை. தத்துவ பேராசிரியர் காரெல் நிக்கல்சன் இந்த வேறுபாட்டை முன்வைக்கிறார்.

பாஸ்கர்வில் தத்துவத்தில் அப்டக்‌ஷன் [சி.எஸ்.பியர்ஸ்] எனும் முறையை கையாள்கிறார். கிடைக்கும் தடயங்களை வைத்து நடக்க சாத்தியமான ஒன்றிரண்டு கதைகளை ‘கற்பனை’ செய்வது, பிறகு அங்கிருந்து சாத்தியமற்ற அல்லது பொருத்தமற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராய்ந்து நீக்கிக் கொண்டே வருவது. இந்த நோக்கை பாஸ்கர்வில் அவருடைய முன்னோடியான தத்துவவாதியும் மத்திய கால சீர்திருத்தவாதியுமான ஆக்கமிடமிருந்து [William of Ockham] பெற்றிருக்கிறார். அங்கே இருப்பது புனைவுகளின் சாத்தியமும் அதை வாசிக்கும் ஒருவனும். ஒரு கொலை நடந்தால் அதை பிரபஞ்சத்தின் கதையாக யோசித்து அது நிகழ்வதற்கான மொழிபை [Narration] கற்பனையில் வாசித்துப்பார்ப்பவர் பாஸ்கர்வில். வாசிப்பவன் தற்பரிசீலனையாலானவன், அகங்காரத்தாலானவன் அல்ல. ஒவ்வொரு வாசிப்பிலும் அது பிழையாகவே இருந்தாலும் கூட சற்று முன்னகர்பவன். ஏற்கனவே இருந்தவன் அல்ல. சிந்திக்கிறேன் ஆகவே நான் இருக்கிறேன் அல்ல, வாசிக்கிறேன் ஆகவே நான் இருக்கக்கூடும் என்பவன்.

The Dog – Francisco Goya

நூலின் ஆரம்பத்தில் பாஸ்கர்வில் கூறுவார், கடவுள் இவ்வுலகை ஒரு நூலைப் போன்று படைத்திருக்கிறார். அதை வாசித்து அறிய வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. 

ஹோம்ஸ் கடவுளின் இடத்தில் தன்னை முன்வைத்து சிந்திக்கிறார். பாஸ்கர்வில் கடவுளின் நூலை வாசிப்பவனின் இடத்தில் தன்னை வைத்து சிந்திக்கிறார்.

ஆனாலும் இறுதியில் அவர் மிகச்சரியாக துப்பறிந்தது உட்பட அனைத்தும் தற்செயல்களே எனவும் நிகழ்வுகள் மீது நாம் போடும் வாசிப்புகள் அனைத்தும் நம்முடைய சாத்தியங்களே தவிர அவற்றின் முடிவுகள் அல்ல எனவும் அறிய நேர்பவர். அப்போது அவருடைய மாணவன் ஆட்ஸோவிடம் கூறுவார், இங்கிருக்கும் அனைத்திற்கும் ஒரு ஒழுங்கு உண்டெனில் கடவுளின் தன்னிச்சைக்கு எல்லை உண்டென்றாகிறது, அவரே விதிகளின்படி இயங்குபவர் என்றாகிறது. கடவுள் தன்னிச்சையானவர் என்றால் எந்த ஒழுங்குக்கும் ஆட்பட்டவரல்ல என்றால், எது கடவுள் என்பதற்கு வரையறைகள் இல்லாமலாகிறது. ஆகவே அவருடைய இருப்பே கேள்விக்குரியதாகிவிடுகிறது. இப்போது இதில் ஏதோ ஒரு முடிவெடுக்கும் பொறுப்பு நமக்கு வந்துவிடுகிறது. கடவுளின் சுதந்தரம் என்பது நம்முடைய இருப்பின் தாள இயலா எடையின்மைதானே.

அப்படியெனில் நாம் எதை வாசிக்கிறோம், நாம் அடையும் அர்த்தங்களுக்கு என்ன பெறுமதி இருக்கிறது? முடிவில் மீண்டும் பாஸ்கர்வில் கூறும் வரியே பதிலாக இருக்கக்கூடும், “நான் ஒரு போதும் படிமங்களின் உண்மைத்தன்மையை சந்தேகித்ததில்லை ஆட்ஸோ, மனிதன் இந்த அர்த்தமற்ற பெருவெளியில் தன்னை அர்த்தப்படுத்திக்கொள்ள, திசை தேர்ந்து கொள்ள அவனுக்கிருக்கும் ஒரே வழி படிமங்கள்தான். ஆனால் என்னால் அறிய இயலாதது படிமங்களுக்கிடையேயான உறவைதான்.” டெக்கார்த்தேவுக்கு ஒரு வரி சேர்த்துக் கொள்ளலாம், I think therefore I am, but not sure about anything else, including the thought itself. எஞ்சுவது நாமும் படிமங்களும் சூழ்ந்த ஒரு பிரபஞ்ச வெளி.

நாம் இங்கிருந்து கடவுளை நோக்கி, அர்த்தமின்மைகளின் பெருவெளியில் அர்த்தத்தை நோக்கி நீட்டுவது நம்முடைய கையை. அந்த இருள் வெளியில் படிமங்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என கேட்பதற்குரிய செவிகள் நமக்கு இல்லை. பீத்தோவன் அதைக் கேட்டு இசையாக்கி தந்திருக்கிறார். நட்சத்திரங்களில் மேகங்களில் வடிவங்களை கற்பனை செய்து கொள்ளும் குழந்தைகளை போல நாம் இருளை நோக்கி விரல் நீட்டி காத்திருக்கிறோம். இருளிலிருந்து ஒரு விரலுக்காக.

இவ்வுலகில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் காலத்தை என்ன செய்வது? தெரிந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் நின்று பார்க்கவும் விரும்பாதவற்றின் பின்னால் அலைந்து கொண்டிருப்பவன் வாசகன். தேடல் கொண்ட எவரும் வெற்று வெளியை நோக்கி நீண்ட விரலென விழித்திருக்கும் எஜமானனற்ற கோயாவின் நாய்தான். அதன் வெற்று வெளியை எவ்வகையிலேனும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமான என முட்டி மோதிக்கொண்டிருப்பவர்தான். இருளிலிருந்தும் முடிவின்மையிலிருந்தும் பீத்தோவனின் இசைக்கீற்றுக்காக காத்திருப்பவன்.

மைக்கேலாஞ்சலோதான் உண்மையில் கோயாவின் நாயை வரைந்திருக்க வேண்டும், குறைந்தது இருளை நோக்கி கை நீட்டி காத்திருக்கும் மனிதனைதான் வரைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தன்னை கடவுளின் இடத்தில் வைத்து பார்த்துக்கொண்டு விட்டாரோ என தோன்றுகிறது. அங்கே படுத்துக் கொண்டு சோம்பலாக கடவுளை நோக்கி விரல் நீட்டுபவரே மிஸ்டர்.ஹோம்ஸ்.

பிற்காலத்தில் ரோம சூறையாடலுக்கு பிறகு மனமுடைந்த அதே மைக்கேலாஞ்சலோதான் தோலுரித்துக் கொல்லப்பட்ட புனித பாத்தெலோமோவின் உரிந்த தோலோடு தன் முகத்தை வரைந்து கொண்டான். இறப்பிற்கு பிறகு சொர்க்கத்திற்கு செல்வோம் எனவும் விண்ணகம் தன்னை புனித பார்த்தெல்மோவாக ஏற்கும் எனவும் எண்ணியிருக்கக்கூடும். மேலும் அப்போது நீட்ஷேவும் மார்க்ஸும் கடவுளை கொன்றிருக்கவில்லை. முக்கியமாக பீத்தோவன் பிறந்திருக்கவில்லை.

Saint Bartholomew displaying his flayed skin, with the face of Michelangelo

[5]

ஆல்பெர்ட் ட்ஹ்யூரர் அறிவின் தேவதையான மெலாங்கலியை உலகை அறிய முயன்று குழப்பமுற்று அமர்ந்திருப்பதாக அமைத்திருக்கிறார்.  அறிவியலின் கருவிகளோடும் கணிதத்தின் குறியீடுகளோடும் அமர்ந்திருக்கும் மெலாங்கலியை பற்றி கலை விமர்சகர் எர்வின் பானோஃவ்ஸ்கி குறிப்பிடுகிறார், அவளால் கண்டுபிடிக்கவும், கட்டமைக்கவும் முடியும். சிந்திக்கவும் முடியும். ஆனால் மீபொருண்மை உலகில் நுழைய முடியாது. அவள் அவளுடைய கால இட எல்லைக்குட்பட்டவள். மேலதிகமாக மீபொருண்மை உலகிற்குள் நுழையும் அதன் ஏக்கம் சாத்தியமாகததால், சாத்தியமான புற உலகையும் அடைய விரும்பாமல் சோர்வில் அமைந்திருப்பவள் என்கிறார். லௌகீகத்தின் பௌதீகத்திற்கு உட்பட்டது அறிவு. லௌகீகத்தால் புறத்தை தொட முடியும், அகத்தின் எல்லையை சென்றடைய இயலாது. அது உருவாக்கும் சலிப்பு செயலின்மையாகி சமயத்தில் லௌகீகத்தையே கூட அடைய விடாமலாக்கிவிடும்.

Melencolia I – Albrecht Dürer – 1514

மாறாக வாசிப்பு என்பதும் எழுத்து என்பதும் உலகியலுக்கு எதிரான செயல்பாடு. அன்றாடம் ‘பயனுள்ள’ செயல்களை கோருகிறது. வாசிப்பு காலத்திலும் இடத்திலும் அன்றாடத்தை விலக்கி பிற எங்கினும் செல்வது, பயனற்று இருப்பது. நூலை கையிலெடுத்து வாசிக்கும் ஒருவன் அந்த கணத்தில் தன் புற உலகை, அதன் காலத்தை துறந்தவனாகிறான். இசையை கேட்பவன் புற உலகிற்கு செவியை அடைத்துக்கொண்டிருப்பதை போல. அங்கிருந்து மீண்டும் இங்கு வரும்போது துறந்தவற்றின் பொருட்டு இழக்க வேண்டும் எனத் தெரியாமல் நூலை திறக்கவில்லை.

வாசிப்பு என்பது புறத்தை துறந்து அகத்தின் எல்லைகளை நோக்கி செல்வது. அகத்திற்கு உண்மையில் எல்லைகளில்லை. பிரபஞ்சத்தை நோக்கி விரிவதுதான் அது. புற உலகை நிராகரிக்கும் இந்த தன்மையால்தான்  வாசிப்பைக் கண்டு பௌதீக உலகு பதற்றமாகிறது. ஷோப்பனவர் சொல்வதைப் போல பார்ப்பவற்றிலெல்லாம் தன்னை விலக்கி பிரபஞ்சத்தை பார்ப்பவன் நட்சத்திரங்களை பார்த்துகொண்டே போகையில் கிணற்றில் விழுவது தவிர்க்க இயலாதது. அதற்காக தலைக்கு மேலே பால்வெளி விரிந்திருக்கையில் கிணற்றை தேடி கொண்டு நடப்பது பொருளுடையதாகிவிடுமா?

[6]

உளவியலாளர் விக்டர் ப்ஃராங்கல் யூத வதை முகாமில் மாட்டி பிறகு விடுதலையானவர். தனது முகாம் அனுபவங்களை Man’s Search for Meaning என்ற நூலாக ஆக்கியிருக்கிறார். புனைவு நூல்களுக்கு இணையான கவித்துவமான தருணங்களாலான நூல். முன் குறிப்பிட்ட கலைஞர்களுடைய குணங்கள் என நான் அறிந்தவை அனைத்தும் வதை முகாமில் இருக்கும் ஒருவருடைய உளவியல் நிலைகளுக்கு இணையாக இருந்தன. உதாரணமாக சில விஷயங்களில் அசிரத்தையாக இருப்பது அதிர்ச்சி தடுப்பானாக செயல்படுகிறது என்பது. மற்றொன்று, வதை முகாம்களில் நுண்ணுணர்வு மிக்கவர்கள்தான் அதிகமும் துயரடைந்தனர். ஆனால் அவர்களுடைய அகம் அதிகமும் சேதமடையாமலிருந்தது என்பது. எளிமையானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் முகாமிலிருந்து வெளிவந்த பிறகு மீண்டு வந்ததை புரிந்து கொள்ள வேறு வழியில்லை எனவும் கூறுகிறார். முக்கியமான ஒரு கூறு, ஆபத்தான தருணங்கள் நிறைந்த வாழ்வில் மனிதர்கள் அதீத கூர்மை கொண்டவர்களாக இருக்கக்கூடும் என நினைப்போம். ஆனால் அறிவுக்கூர்மை மழுங்கி புலன்கள் மட்டும் கூர்ந்தவர்களாக ஆவதை விவரித்திருக்கிறார். சித்தம் ஏறாத பார்வைதான், ஆகவே அவை எளிதில் படிமங்களாகின்றன.

ப்ஃராங்கல், நூலின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறார். அவருக்கு அமெரிக்கா செல்ல விசா அளிக்கப்படுகிறது. அமெரிக்கா சென்றால் நாஜிக்களிடமிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் தாய் தந்தையை வியன்னாவில் விட்டுவிட்டு செல்ல நேரும். நிச்சயம் அவர்கள் வதை முகாமிற்கு அனுப்பப்படுவர். எதை செய்வதென்ற தடுமாற்றத்தில் சில நாட்கள் கடக்கிறது. விண்ணகத்திலிருந்து ஒரு ஒளி சமிக்ஞையாக வரும் என எண்ணிகொள்கிறார். ஒரு நாள் வீட்டுக்கு வரும்போது மேசையில் கல் ஒன்றை பார்க்கிறார். அவர்கள் வழிபடும் வியன்னாவின் யூத தேவாலயம் இடிக்கப்பட்டிருக்கிறது. அதில் பத்து கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டின் உடைந்த பகுதியை அவருடைய தந்தை எடுத்து வந்து வைத்திருக்கிறார். அதில் கட்டைளையின் ஒரு எழுத்து மட்டும் அதன் பொன் பூச்சோடு  இருக்கிறது. எந்த கட்டளை என கேட்டதற்கு தந்தை சொன்னது, “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக, கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ நீண்டகாலம் வாழும்படி” என்கிறார். ஃப்ராங்கல் தன் விசாவை வீசி விடுகிறார்.

அதன்  பிறகுதான் வதை முகாமில் மாட்டிக் கொள்வது. முகாமில் கடுமையான வதைச்சூழலில் உடலும் மனமும் களைத்திருக்கும் நாளொன்றின் அதிகாலையில் பள்ளம் வெட்டிக் கொண்டிருக்கிறார், மனம் அவர் மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தது. மனைவி உயிருடன் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முகாமில் ஆவியாக்கப்பட்டுவிட்டாரா என அவருக்கு தெரியாது. அதிகாலை சாம்பல் நிறத்தில் புலர்கிறது. வானமும் பனியும் சாம்பல் நிறத்தில். சாம்பல் நிறத்தில் வெளிறிய சக கைதிகள் சுற்றிலும். மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஏன் எனக்கு இந்த துயரம் என கேட்டுக்கொள்கிறார். இந்த வாழ்வை வாழ்வதற்கு ஏதேனும் பொருளிருக்கிறதா என எண்ணுகிறார். அவ நம்பிக்கையை துளைத்து ஏதோ ஒன்று நிகழ்கிறது.  இருளடர்ந்த அதிகாலை சாம்பல் நிலவெளியை பார்த்துக்கொண்டிருந்த அந்த தருணத்தில் தூரத்திலிருந்த பண்ணை வீட்டில் விளக்கு ஒளிரத்துவங்கியது. et lux in tenebris lucet [The light shines in the darkness, and the darkness has not overcome it.] என்ற ஜானின் [John, Chapter 1, verse 5] வரிகள் நினைவுக்கு வருகின்றன. அங்கு அவர் முன்பு மனைவி இருப்பதாக தோன்றுகிறது. அப்போது அவர் வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் மண் மீது ஒரு பறவை வந்து அமர்ந்து தலையை சாய்த்து அவரை பார்க்கிறது. அந்தக்கணத்தில்  ஒரு spirit என்னை துளைத்து ஏறியது என்கிறார்.

பாஸ்கர்வில் கூறுவதைப் போல பறவைக்கும் பண்ணைவீட்டிற்கும் இறந்த மனைவிக்கும் உண்மையில் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பது நாம் அறியவே இயலாததாக கூட இருக்கும். ஆனால் முகாமில் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கான வழக்கமாக இருந்த மின் கம்பி வேலிகளில் ஓடிச் சென்று பற்றிக் கொள்வதை ஃப்ராங்கல் செய்யாமல் அந்த கடின காலங்களை கடந்து வர இந்த படிமங்கள் உதவியிருக்கின்றன. இன்று நான்கு தலைமுறைகள் கடந்து வேறொரு கம்பி வேலியை ஓடிச்சென்று தழுவும் என் ஆவலை பரிசீலனை செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேளை மிஸ்டர். ஹோம்ஸிடம் கேட்டால் முதல் பிரச்சனையே அந்த கல்லை கடவுளின் கட்டளையாக எண்ணியதுதான் எனக்கூறக்கூடும். வெண்முரசில் ஒரு சூதரின் வரி பீஷ்மரைப் பற்றி வரும், அவர் சிக்கல்களை தீர்ப்பதில் வல்லவர், பெரும்பாலும் அவரே உருவாக்கிய சிக்கல்களை. படிமங்களை வாசிப்பது அப்படிதான். அவையே சிக்கலும் அவையே தீர்வுகளும். கடவுள் அளிக்கும் துயரங்களுக்கு கடவுளே விடுதலை தரமுடியும்.

பிறகு ஏன் அத்தனை பணயம் வைத்து அந்த படிமங்களை வாசிக்க வேண்டும்? இரண்டு காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன. வாழ்க்கையை படிமங்களை எண்னி பணயம் வைத்து இழந்தவற்றையும் அடைந்தவற்றையும் எண்ணி நோக்குகயில் இன்று தோன்றுபவை. மனிதனின் தலையாய துயரம் இது ஏன் எனக்கு நிகழ்ந்தது என்பது. தலையாய இன்பம் என்பது எங்கோ ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்வது. ஹோம்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால் தீமை நிகழும் போது தண்டிக்கப்பட்டவனாக உணராமலிருப்பதும், பண்ணை வீட்டில் விளக்கெரியும் பத்து பைசா பெறாத விஷயங்கள் நிகழும் போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்வதும். இவை இரண்டையும் படிமங்கள் மட்டுமே தரக்கூடும். ஹோம்ஸ்கள் விசாவை பற்றிக் கொண்டு பறந்து போய்விடுபவர்கள், அவர்கள் காணும் சாம்பல் நிற காலைகளில் பண்ணை வீடுகளில் விளக்கெரிவதில்லை. அவர்கள் உலகில் சாம்பல் நிறம் உண்டா எனவும் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை பனி பொழியும் அதிகாலைகளில் மண் வெட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லாமலிருக்கக்கூடும். ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதற்கான வாய்ப்பும் இருந்திருக்காது. இருப்பது வேறு, எத்தனை சௌகரியமாக இருந்தாலுமே கூட, வாழ்வது வேறு. இரைச்சல்களுக்கு நடுவே இசையை தேடி இருளை நோக்கி காதுகளை நீட்டிக்கொண்டிருக்கும் நாய்க்கு மட்டுமே பொருள் கொள்ளக்கூடியது பிரபஞ்சத்தின் இசை.

கேளடா மானிடா என்று மானுடத்தை விளித்தவனும், ஜகத்தினை அழித்திடுவோம் என்றவனும்தான் வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ காட்சிப்பிழைதானோ, நானும் ஓர் கனவோ, ஞாலமும் பொய்தானோ என தன்னிலையை ஐயப்பட்டவனும் கூட. இவ்வுலகம் அந்த மொழியற்றவர்கள் புடவி நூலை வாசித்து அளிக்கும் அர்த்தங்களால் படைக்கப்பட்டது. அதன் பொருட்டுதான் பிரம்மன் கையில் ஏடு இருக்கிறது. உண்டியலன்றி.

[6]

New York Movie, 1939 by Edward Hopper

தன்னிலையை ஐயப்பட நேர்வது அனேகமாக துயரமான நிகழ்வுகளினால். இத்தகைய சந்தர்ப்பங்களில் நினைவுக்கு வருவது எட்வர்ட் ஹூப்பரின் ஓவியம். திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி மட்டும் தனித்து நின்று அழுதுகொண்டிருக்கிறாள். எனக்கு மட்டும் ஏன் இது என்ற கேள்வி எழாத பாஸ்கர்வில்கள் இருக்க சாத்தியமில்லை. உலகமே தன்னை மறந்து வேறொரு உலகில் மூழ்கி இருக்கையில் நான் மட்டும் ஏன் இப்படி என அரங்கை விட்டு வெளியேறவும் இயலாமல், படத்தைக் காணவும் இயலாமல் நிற்க நேர்கிறது என்ற கேள்வி எழும் தருணம் நிகழக்கூடும். கூடுமல்ல, நிகழும்.

ஆனால் அத்தகைய தருணங்கள் அரிய வாய்ப்புகளும் கூட. அர்னால்ட் டாயென்பே நாகரீகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் நூலில் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார். நாகரீகங்களும் தனிமனிதனும் ஒரு சவாலை எதிர்கொள்ளும் போது உள் நோக்கி திரும்ப ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அனைத்தையும் எண்ணி பரிசீலிக்கவும், உருமாற்றிக்கொள்ளவும் அதன் வழி புதிய ஒன்றாக ஆகவும் வாய்ப்பாக ஆகிறது. சிலுவைகள் வரும்போது மௌனமாக ஏறிகொள்பவரே புதிய மனிதனாக உயிர்த்தெழுகிறார்.  கதைகளில், வரலாறில், தொன்மங்களில் இத்தகைய உடைவுத்தருணங்கள் நிகழும் போது ஒரு அழைப்பை போல நிகழ்கிறது. தொன்மவியலாளர் ஜோசஃப் கேம்பல் அதை “The Call to Adventure” ‘சாகசத்திற்கான குரல்’ என்கிறார். நாயகர்களை வரலாறு அல்லது தெய்வம் அழைக்கும் தருணம். அங்கிருந்து துவங்குவது நீண்ட பயணம். நிச்சயம் துயரங்களும் சவால்களும் கொண்டதுதான். ஆனால் அவர்களே தாங்கள் கண்டடைபவற்றின் வழி இச்சமூகத்திற்கு பங்களிப்பவர்கள். அல்லது இந்த சமூகத்தை உருவாக்கியவர்கள். பிரபஞ்சத்தின் இசையை கேட்டவர்கள். கஸாந்த்ஸாகீசின் நாவலின் துவக்கம் கிருஸ்துவை அழைக்கும் இந்தக்குரலின் காட்சிதான்.

விக்டர் ஃப்ராங்கல் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார், முகாமிலிருந்து விடுதலை ஆன பிறகு அவரும் நண்பரும் நடந்து செல்கின்றனர். வழியில் வயலில் ஓட்ஸ் கதிர்கள் வளர்ந்து நின்றிருக்கின்றன. நண்பர் அவற்றின் மீது நடக்க முனைந்து ஃப்ராங்கலின் கையையும் இழுக்கிறார். ஃப்ராங்கல் மறுக்க நண்பர் ஆத்திரம் கொள்கிறார். என் மனைவியை, பிள்ளைகளை அவர்கள் சாம்பலாக்கினர். என் செல்வத்தை அழித்தனர். நான் இந்த கதிர்கள் மீது கூட நடக்கக்கூடாதா? என. ஃப்ராங்கல் இந்த மன நிலையை விவரிக்கிறார். விடுதலையான பெரும்பாலானோர் அனைத்தின் மீதும் வன்முறையை பிரயோகிக்க தங்களுக்கு நடந்த அநீதி உரிமை அளித்திருக்கிறது என நம்பினர் என. ஏன் என காரணத்தை தேடும் ஒருவர் தன்னை மன மாற்றம் செய்யுமளவிற்கான காரணத்தை அடைய இயலாத போது வன்முறையாகவோ கசப்பாகவோ ஆகக்கூடும். மாறாக நிகழ்ந்தது எதுவாக இருப்பினும் நான் இப்படி பொருள் கொள்கிறேன் என வாசிப்பவர் நம்பிக்கை இழப்பதில்லை. மேலதிகமாக பண்ணை வீட்டில் விளக்கெரியும் போது வாழ்க்கைக்கு பொருளுண்டு என உணர்ந்து மீள்கிறார்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் அல்யோஷாவை அனுப்பி வைக்கையில் ஜோஸிமா சொல்வார், வாழ்க்கை உனக்கு நிறைய துரதிருஷ்டங்களை கொண்டு வரும். ஆனால் அவற்றின் வழி நீ மகிழ்வடைவாய். வாழ்க்கையை நீ ஆசீர்வதிப்பாய். பிறரும் ஆசிர்வதிக்க காரணமாவாய். அதுதான் முக்கியமானது என்று. சாகசத்தின் குரலை கேட்டு தன்னிலையை ஐயப்பட்டு சிலுவையில் மரணித்தவர்கள்தான் பிறகு உயிர்த்தெழுந்தவர்கள் அனைவரும். அவர்களே ஓவ்வொரு நூலாகவும் ஆகியிருக்கின்றனர். வாசிக்கும் ஓவ்வொருவரும் அத்தகைய நூலாக சாத்தியம் கொண்டவரே. அத்தகையவர்களாலான இவ்வுலகு ஒரு பெரிய நூலகம்.

[7]

A Scene in a Library – William Henry Fox Talbot  – 1844

அடிப்படையில் புகைப்படம் என்பது என்ன? ஒரே நேரத்தில் புற யதார்த்தமும் குறியீட்டு உண்மையும் ஆன ஒன்று. எல்லா கலைக்குமே பொருந்தக் கூடியதுதான் இந்த வரையறை என்றாலும் கூட. பிற கலைகளில் இரண்டையும் பிரித்து தேவையானதை எடுத்துக் கொள்ள முடியும். கதையை சிந்திக்காமல் வாசிப்பது என்பதை அனுபவித்து வாசிப்பதாக எண்ணிக் கொள்வதைப் போல. புகைப்படம் அந்த பிரிவினையை குழப்புவது. காரணம், அதன் புற யதார்த்தம் குறியீட்டு உண்மையை மறைப்பது. ஆகவே யதார்த்தம் எனும் போது குறியீட்டு உண்மையாகவும், குறியீட்டு உண்மை எனும் போது யதார்த்தத்தை மீறியதாகவும் தன்னை கால் மாற்றிக் கொண்டே இருப்பது. புகைப்படக்கலையின் முன்னோடிகளில் ஒருவரான [இன்னொரு] வில்லியம் ஃபாக்ஸ் டால்போட் எடுத்த ஆரம்பகால புகைப்படம் இது.

பின்னாளில் வரலாற்றாசிரியர்கள் இந்த நூல்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டிருக்கிறார்கள். அதுவே வினோதமாக இருக்கிறது. ஒருவர் தன் நூல்களைக் கொண்டு ஒரு நூலகத்தை உருவாக்கி படமாக ஆக்கியிருக்கிறார். பின்னால் வந்தவர்கள் அந்தக் கணத்தை ஆராய்ந்து நூல்களை பட்டியலிட்டிருக்கின்றனர். உறைந்த ஒரு மரப்பிசின் துளியில் சிக்கிக்கொண்ட பூச்சியிலிருந்து டிஎன்ஏவை எடுத்து  டைனோசர்கள் செய்வதாக ஜீராஸிக் பார்க்கில் வருவதைப் போல. 

Mathematics, Astronomy, Physics, Botany, Chemistry, Egyptology, Philology, and the classics were all within the scope of his investigative appetite. The Philosophical Magazine, Miscellanies of Science, Botanische Schriften, Manners and Customs of the Ancient Egyptians, Philological Essays, Poetae Minores Graeci, and Lanzi’s Storia pittorica dell’Italia ஆகிய நூல்களை பயன்படுத்தியிருக்கிறார் வில்லியம். அனேகமாக அறிவுத்துறையின் அனைத்து தரப்பின் நூல்களையும். நூல்களின் குடும்ப புகைப்படம்.

இது நூலகமா என்றால் நூலகம்தான். அவருடைய சேகரிப்புகளிலிருந்த நூல்கள்தான் இவை. ஆனால் நூலக அறையில் ஒளி போதாதென்பதால் நூல்களை அறைக்கு கொண்டு வந்து அடுக்கி படமாக்கி வைத்திருக்கிறார். ஆகவே இவை நேரடியாக நூலகமில்லை. நூல்கள் மட்டுமே. ஆனால் அவர் உத்தேசித்தது நூல்களின் படம் மட்டுமல்ல, நூலகத்தின் படமும் கூட, அதனால்தான் அப்படி தலைப்பிட்டிருக்கிறார். அல்லது வில்லியமின் தற்படமாக கூட இருக்கக்கூடும். இல்லையெனில் ஏதேனும் ஒரு என்சைக்ளோபீடியாவின் அனைத்து தொகுதிகளையும் வைத்து படமாக்கியிருக்கலாம்.  காட்சியின் வடிவ ஒருமை இன்னமும் சிறப்பாக வந்திருக்கக்கூடும்.

வில்லியம் இந்த படத்தை எடுத்த காலத்தில் தொழிற்புரட்சி ஆரம்பித்து நூறாண்டுகளாகியிருந்தது. இனி வரும் காலம் அறிவியலின் காலம் எனவும் இயந்திரங்களே அறிவியலின் படிமங்கள் எனவும் எண்ணமிருந்தது. கலையில் எதிர்காலம் என்பதும் நகரங்கள் என்பதும் பேசுபொருளாகி இருந்தன. புகைப்படக்கருவியே விந்தைப் பொருளாகவும் புதிய காலத்திற்கான படிமமாகவும் இருந்தது. வில்லியம் இயந்திரங்களை விடுத்து ஏன் நூல்களை படமாக்கினார்?

இன்று வரை புகைப்படக்கலையின் ஆதார தத்துவ சிக்கலாக தொடரும் காட்சி உண்மைக்கும், குறியீட்டு உண்மைக்குமான தொடர்பு இந்த ஆரம்ப கால புகைப்படத்திலேயே பதிவாகியிருக்கிறது. ஓவ்வொரு முறை இந்த படத்தைக் காணும் போதும் நூல்களின் தலைப்புகளுக்கும் அங்கிருந்து மானுட அறிவுச் சேகரத்தின் தொகுப்புகளுக்கும் என மனம் விரிந்து பரவிக் கொண்டே இருக்கிறது. இசைத்தட்டைக் காணும் போது நினைசில் ஒலிக்கும் இசை போல.

காஃப்கா தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறார், நம்மை காயபப்படுத்தும், குடலை உருவும் நூல்களையே நாம் வாசிக்க வேண்டும். நம்மை தலையிலறைந்து எழுப்ப வில்லையெனில் நாம் எதற்காக வாசிக்கிறோம்? ஹோம்ஸ்கள் இவ்வுலகில் அதிகம் கவனமாக இருப்பது தங்கள் குடல்களின் மீதுதான். அதனால்தான் அவர் போதை ஊசிகளை தேட வேண்டி இருக்கிறது. மாறாக வாழ்க்கைக்கும் படிமங்களுக்கும் விழைவுகளுக்கும் தங்கள் குடல்களை திறந்து வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு தேவை அவ்வுலகிலிருந்து ஒரு விரல். அது இங்கே வரும் போது ஒரு நூலாகவோ படிமமாகவோ இசையாகவோ அல்லது விழைவாகவோதான் வர முடியும் போல. அது வந்தடையாத வாழ்க்கையிலிருந்து பார்த்ததால்தான் காஃப்காவால் மனிதனை கரப்பானாக வரைய முடிந்தது. அந்தக் கரப்பான் கடவுளை நோக்கி மீசையை நீட்டி குற்றம் சாட்டாததன் காரணம் ஃப்ராங்கல் அந்த ஓட்ஸ் கதிர்களின் மீது நடக்காததன் காரணத்தால்தான் என நினைக்கிறேன்.

[8]

எமிலி டிக்கின்ஸன் வாசிப்பதை பற்றிய கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். மத்திய காலகட்டத்தில் மத விசாரணைகள் என்ற பெயரில் மாற்று கருத்து கொண்ட புனிதர்களை சுற்றி சுள்ளிகளை அடுக்கி தீ மூட்டி உயிரோடு எரிப்பது சடங்காக இருந்தது. அப்படி மாண்டவர்களின் வரலாறு  Book of Martyrs என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது John Foxe என்ற இறையியலாளரால். உம்பர்ட்டோ ஈக்கோவின் நேம் ஆஃப் தெ ரோஸ் நாவலே அந்த காலகட்டத்தின் மதப்பூசல்களுக்கும் விசாரணைகளுக்குமான தத்துவ விவாதங்களை ஒட்டி நிகழ்வதுதான். கிருஸ்து ஏழ்மையை முன் வைத்தார் என சொன்னதற்காக Fra Dolcino-வும் Margaret of Trent-ம் சித்திரவதைக்குள்ளாகி எரிக்கப்பட்ட நிகழ்வும் அதற்கு முன்பான விசாரணைகளும் நாவலில் வருகின்றன. இந்த புனிதர்கள் எதன் பொருட்டு தங்கள் வாழ்க்கையை துறந்தனர்? தாங்கள் உண்மை என நம்பியவற்றால் அவர்கள் சித்திரவதைக்கப்பால் எதையேனும் அடைந்தனரா? கடவுளை வாசிப்பது அவர்களை தவறாக வழி நடத்தியதா? விண்ணகம் உண்மையில் அவர்களை பொருட்படுத்தியதா? காலத்தை நோக்கி நீண்ட அவர்களின் அலறல்கள் அந்த இருள்வெளிக்கு பொருட்டாக இருந்ததா?  யார் சொல்லக்கூடும்? விண்டவர் கண்டிலர். விண்ணகம் நம்மை பொருட்படுத்துவதாக எண்ணிக்கொண்டு என்ற வரி முக்கியமானது. முடிவின்மையின் இருளில் பீத்தோவனும் இசையும் இல்லாமலிருக்கவும் கூடும். அதனாலென்ன? அது புனிதர்கள் அடைந்த நெருப்பாக இருந்தாலுமென்ன? நமக்கு இசை கேட்காமலிருக்கிறதா என்ன?

“வாசியுங்கள், இனியவரே
பிறர் எப்படி பாடுபட்டனர் என்பதை
நாம் வலிமையாகும் வரை.
அவர்கள் எதை துறந்தனர் என்பதை
நாம் அச்சம் குறைந்தவர்களாக ஆகும் வரை.
எத்தனை தடவை
உண்மையான சாட்சிகளாக
நின்றனர் என்பதை
நாம் உதவியை பெறும் வரை.
விண்ணகம் நம்மை
பொருட்படுத்துவதாக எண்ணிக்கொண்டு.
வாசியுங்கள்.
எரியும் சுள்ளிகளின்
சற்று மேலே ஒளிர்ந்தது
நம்பிக்கை என்பதை.
நதிகளால் மூழ்கடிக்கப்பட இயலாத
பிரார்த்தனைகளின் தீரமான குரல்களை
துணிச்சலான மனிதர்களின் பெயர்களை
விண்ணகத்தின் பெண்களை.
வரலாற்றில் விடுபட்டவர்களாகி
இறவாதவர்களானதை.”

ஏ.வி மணிகண்டன்

ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

3 Comments

  1. அருமையான கட்டுரை. ஓவியங்கள், புகைப்படங்கள், நூல்கள் என நெய்து செல்லும் இந்தக் கட்டுரை நான் கற்றுக் கொள்ள வேண்டிய பார்வையை வைக்கின்றது. நன்றி.

  2. ஒரளவு புகைப்படம் எடுக்கும் நிலையிலிருக்கும் எனக்கு இக்கட்டுரை வேறொரு தளத்திற்கும் அறிதலுக்கும் மேலே முன்பே கட்டமைக்கும் திறமைக்கும் நம்மை அடைய நான் செய்ய வேண்டுவன பற்றிய நினைவூட்டலுடன் திகைப்பும் அடைந்தேன் பலமுறை படிக்க வேண்டிய பதிவு நன்றியுடன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.