ஹிட்லரின் முதற் புகைப்படம்
-விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
சின்னஞ் சிறிய உடையிலிருக்கும் இந்த சிறுவன் யார்?
அந்த குழந்தை அடால்ஃப்,
ஹிட்லரின் குட்டி மகன்
அவன் வழக்கறிஞனாவானா?
வியன்னாவின் இசையரங்கில்
பாடகனாவானா?
யாருடைய குட்டிக் கை இது?
யாருடைய குட்டிக் காதும்
கண்ணும்
மூக்கும் இவை?
பாலால் நிரம்பியுள்ள வயிறை உடைய இவன்
பதிப்பாளனா? மருத்துவனா? வியாபாரியா? மதபோதகனா?
நமக்குத் தெரியாது
இந்தக் செல்லக்குட்டி எங்கே சுற்றுவான்?
தோட்டத்திற்கா, பள்ளிக்கா?
அலுவலகத்துக்கா? மணப்பெண்ணிற்காகவா?
ஒரு வேளை மேயரின் மகளுக்கா?
அரிய குட்டித் தேவதை, அம்மாவின் ஒளிக்கீற்று, வெல்லக்கட்டி,
சென்ற வருடம் அவன் பிறந்த போது
சகுணங்களுக்கு குறைவேயில்லை
நிலத்திலும் வானிலும்.
வசந்தகாலச் சூரியன்,
ஜன்னலில் இட்லிப் பூ,
முற்றத்தில் ஆர்கன் வாசிப்பவனின் இசை
மென்சிவப்பு காகிதத்தில் சுற்றப்பட்ட அதிர்ஷ்ட செல்வம்
பிரசவ வலிக்கு சற்று முன்பு
அவன் அம்மாவிற்கு ஒரு விதிவசமான கனவு
கனவில் புறாவைக் கண்டால் மகிழ்ச்சியான செய்திதான்
அது பிடிபட்டால் நெடுங்காலம் காத்திருந்த விருந்தாளி வருவார்
டொக் டொக், யாரது? அடாஃல்பின் குட்டி இதயம் தட்டுகிறது
குட்டி ரப்பர் நிப்பிள், டயாப்பர், கிலுகிலுப்பை, உணவு ஆடை
நமது துள்ளும் குழந்தை, நன்றி கடவுளே, மரத்தை உதைப்பதைப் போல, அதுவும் நன்று.
அவனுடைய சுற்றத்தினரைப் போலவே, கூடையிலிருக்கும் பூனைக்குட்டி போல,
எல்லாக் குடும்ப ஆல்பங்களிலுமிருக்கும் குட்டிகளைப் போலவே.
ஷூஷ், அழக்கூடாது, வெல்லக்கட்டி,
கருந்துணிக்குள்ளிருந்து கேமரா அதை படமெடுத்துவிடும்
க்ராபென்ஸ்றா, ப்ரனாவ்
ப்ரனாவ் சிறிய ஆனால செழிப்பான நகரம்
நேர்மையான வணிகங்கள், தயவான அண்டைவீட்டார்கள்
புளிக்கும் ரொட்டி மாவின் வாசமும்
சாம்பல் நிற சோப்பின் வாசமும் கொண்டது.
யாரும் கேட்கவில்லை –
ஊளையிடும் நாய்களையோ விதியின் காலடிகளையோ
வரலாற்றாசிரியர் தனது சட்டைக் காலரை
தளர்த்திக் கொள்கிறார்
வீட்டுப்பாடத்தை எண்ணி
கொட்டாவி விடுகிறார்.
[1]
இடாலோ கால்வினோவின் The adventures of a Photographer கதையில் ஒரு விவரணை வருகிறது. பொழுதுபோக்காக படமெடுப்பவர்கள் அனைவரும் அனேகமாக புகைப்படம் எடுக்கத் துவங்குவது குழந்தை பிறந்த பிறகு. ஏனெனில் ஒரு வயது குழந்தையை அடுத்த வருடம் இரண்டு வயது குழந்தை நிறைத்து விடுகிறது. அப்போது முதல் வயது குழந்தை எப்படி இருந்தது என்பது நினைத்துப் பார்க்க இயலாததாக ஆகி விடுவதால் அதைப் பதிவு செய்யவே முதலில் கேமராவை எடுக்கின்றனர் என.
குழந்தையின் வருகை வழியாக வாழ்வைக் காண்பது மத்திம வயது வரை பழகிப் போன வாழ்க்கையை மீண்டும் புதிதாகக் காணச் செய்கிறது. எல்லாமும் எப்போதும் இங்கே இப்படியே இருந்து கொண்டிருந்தது எனவும் இருக்கும் எனவும், பதின்ம வயதுக்குப்பிறகு, நம் புலன்கள் மழுங்கி இருக்கின்றன. நாம் பிறந்து வாழ்ந்து இறக்கும் படித்துறையில் ஓடிக் கொண்டிருக்கும ஆற்றை நெடுங்காலமாக நாம் படித்துறையில் ஓடும் ஆறு என்றே அறிந்திருக்கிறோம். அது அமைதியாக ஓடும் நதி நிற்பதைப் போலத் தோன்றும் புலன் மயக்கம் மட்டுமே. குழந்தைகள் நதிமூலத்தை நினைவுறுத்துகின்றன, நாம் கடலை எண்ணிக் கொள்கிறோம்.
என் மகள் யதிகா பிறந்த சில நாட்களில், புதிதாக அறிந்ததைப் போல அந்த திகைப்பு அவ்வப்போது அலையாக வந்து செல்லும், குறிப்பாக சாலையில் செல்லும் போது அல்லது மக்களிடையே இருக்கும் போது. அது, இத்தனை பேரும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தவர்கள் என்பது. அரிய கண்டுபிடிப்பல்ல, ஆனால் அந்த எண்ணம் உணர்வாக ஆக ஒரு குழந்தையை கையில் ஏந்த வேண்டியிருந்தது. எந்த சிக்கல்களுமற்ற சிறிய விலங்கைப் போல கையிலிருக்கும் குழந்தை நாம் அன்றாடம் இயல்பாக புழங்கும் உலகம் எத்தனை கடினமான பொருட்களாலும், எவ்வளவு கூரிய முனைகளாலும் ஆனது என புதிதாக உணரச் செய்தது. முடிவின்மையை பருப்பொருட்களில் அறிய வைத்தது. குழந்தை இவ்வுலகின் முடிவின்மையை சாத்தியங்களின் வழி அறியச் செய்வதைப் போல, புகைப்படம் காலத்தின் முடிவின்மையை அறியச் செய்கிறது. இரண்டும் காலத்தின் நதியில் மிதந்து வரும் பிரம்புக் கூடையில் முடிவின்மையிலிருந்து நம்மிடம் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு துளி பிரபஞ்சம்.
நாம் அன்றாடத்தில் வாழ படித்துறை போதும். புகைப்படம் பெரு நதி ஒன்றின் சிறு படித்துறை. அங்கே நின்று நாம் பார்ப்பது ஒரு நதி. நம்மால் நதியை கமண்டலத்தில் கொள்ள இயலவில்லை. ஆகவே நதியின் துளிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளிக் கொள்கிறோம். நம் அலைபேசிகள் அனைத்தும் கமண்டலங்கள்தான்.
[2]
நவீனக் கலையில் ஹிட்லர் இரண்டு புகழ்பெற்ற படிமங்களாக ஆகி இருக்கின்றார். ஒன்று சாப்ளினின் ஹிட்லர். மற்றது ஜான் ஹார்ட்ஃபீல்டின் ஹிட்லர்.
இரண்டுமே நவீன பிரஞ்ஞையோடு உருவாக்கப்பட்ட படிமங்கள். ஹிட்லரின் மிகை உணர்ச்சியின் பொய்மையை வெளிப்படுத்துபவை. ஒப்பீட்டளவில் சாப்ளினுடையது நேரடி கருத்து சித்திரம் என்பதிலிருந்து கவியுருவகமாக ஆகிறது, அதன் படிமவியல் கூறுகளால். மேலிருந்து ஒளிக்கீற்றுகள் வருவதைப் போன்று, உலகம் மேலேயிருந்து ஹிட்லரின் கையில் அருளப்படுவது போன்று, இறையியலின் படிமவியலைக் கைக்கொண்டாலும் கூட அது ஹிட்லரின் மீதான கோபத்தின், எள்ளலின் வெளிப்பாடே. சாப்ளினே அந்த பலூனை உடைத்து விடுவது அதனால்தான்.
இரண்டுமே ஹிட்லரின் அரசியலுக்கான எதிர்வினைகள். அந்த எதிர்வினையை கலையாக ஆக்கியவை.
படித்துறையில் நின்று நதியைக் காண்பது என்பது கற்பனை செய்துகொள்வதில்லை. கற்பனை அறிந்தவற்றால் ஆனது. அறிவாலும் நினைவாலும் குழப்பப்படுவது. நினைவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்குமான உறவைப் பேசும் ஹிரோகாசு கொரீடாவின் திரைப்படம் After Life. அதில் இறந்தவர்கள் மேலே செல்லும் போது அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு நினைவை சொல்லச் சொல்லி அதை மீண்டும் நிகழ்த்தி படமாக்கித் தருவார்கள். அந்த ஒரு கணத்திலேயே எஞ்சிய காலம் இறந்தவர்கள் நிலைத்திருக்கலாம். அதற்கு ஓவ்வொரிடமும் அவர்களுடைய வாழ்வின் சாராம்சமான தருணத்தை துல்லியமாக விவரிக்க சொல்லி கேட்கும்போது, ஒவ்வொரு நினைவு கூறலுக்கும் அது சற்று மாறிக் கொண்டே இருக்கும். துல்லியமாவதற்கு பதிலாக மழுங்கிக் கொண்டே போகும். இறுதியில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததா என்றே சந்தேகத்திற்குட்பட ஆரம்பித்து விடுவார்கள். வாழ்வின் சாராம்சமான தருணங்கள் என சொல்லப்படுபவைக்கே அதுதான் இடம்.
ப்ரௌஸ்ட் அதைத்தான் தன்னிச்சைகளுக்கு அப்பாற்பட்ட தருணங்கள் என்கிறார், அந்த நினைவுகள் அழிந்து போவதில்லை, ஆழுள்ளத்திற்குள் அழுத்தப்பட்டு கிடக்கின்றன. ஆனால் அவற்றை பிரஞ்ஞையால் எடுக்க இயலாது. இங்கிருந்து அங்கே செல்ல ஒரு பரு வடிவ தொடர்பு தேவையாக இருக்கிறது. அனேகமாக அது அந்தக் காலத்திலிருந்த ஒரு புலனனுபவமாக இருக்க வேண்டி இருக்கிறது. ப்ரௌஸ்ட்டுக்கு அது ‘மேடலின்’ சுவைக்கும் தருணமாக அமைகிறது. அப்படி ஏதுமற்ற கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதென்பது புகை மூட்டமானது. பெரும்பாலும் நினைவில் ஏதும் எஞ்சுவதில்லை, அந்த தருணங்களிலிருந்து நாம் உருவாக்கிக் கொண்ட மங்கிய சில எண்ணங்களைத் தவிர. ஆனால் அங்கே செல்ல ஒரு புகைப்படம் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. புகைப்படம் துல்லியமாக நம்முடைய கடந்த காலத்தின் தருணமொன்றைக் காட்டுகிறது. நினைவல்ல, கற்பனையல்ல, வெறும் ஒரு கணம், காலத்தின் உதிர்ந்த இலையொன்று. காற்றில் அது எழுதிச் சென்ற பக்கங்களை வாசிக்கத் தந்து நம் நினைவில் வீழ்கிறது. அதுதான் ஒரு புகைப்படத்தைக் கையிலெடுத்து பார்க்கையில் ஒரு திடுக்கிடலை அளிக்கிறது. நாம் காண்பது புகைப்படத்தை அல்ல, புகைப்படத்திலிருப்பதையும் அல்ல. அந்த இலையை மரத்தில் வைத்து எண்ணிக் கொள்கிறோம்.
காலத்தின் தொலைவில் எண்ணற்ற சாத்தியங்களின் வழியில் ஏதேதோ ஒன்றில் நுழைந்து இன்று இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம். வரும் வழியெல்லாம் நாம் அந்தந்த கணத்தை எண்ணி சூழ்ந்து முடிவெடுத்து வந்து சேர்ந்திருக்கிறோம். ஓவ்வொரு சந்திப்பின் முனையிலும் நின்று சாத்தியங்களை பரிசீலித்து முடிவெடுக்கும் போது அந்தக் கணத்திற்கு மட்டுமே ஆட்பட்டிருக்கிறோம். புகைப்படம் காலத்தை வெளியை வரைபடம் போல மேலிருந்து பார்க்க வைக்கிறது, வண்டியை ஓட்டும் போது சாலையில் மட்டுமே நமது கவனம் இருக்கிறது, புகைப்படம் கூகிள் மேப்பைப் போல வாழ்க்கையை காட்டி தருகிறது.
புகைப்படம் எந்த எதிர்வினையையும் ஆற்றுவதில்லை, வாழ்க்கை மரத்தின் ஒரு இலைக்கணம் மட்டுமே. நம் முன்னே இருப்பது பிரபஞ்சத்தின் இருத்தலின் ஒரு சாத்தியம். ஆனால் அதன் செல்திசை நம் கையிலில்லை. நிகழ்ந்ததை நாமறிவோம். கையறு நிலை என்பதற்கும் கால தரிசனம் என்பதற்கும் நடுவே நம்மை நிறுத்தி பேசா தெய்வமாக நிற்கிறது ஒரு புகைப்படம். நாம் கண்ணீரால் மோதும் காலத்தின் கற்சிலையின் முன் மெல்ல இருளாக உருண்டு வருகிறது நெஞ்சை அடைக்கச் செய்யும் கணங்கள் ஒவ்வொன்றாக.
[3]
சிம்போர்ஸ்காவின் இந்தக் கவிதை அப்படி ஒரு திகைப்பை வெளிப்படுத்துகிறது. ஒரு புகைப்படமாக ஆன ஒரு நதிமூலக் கணத்தை சென்று சேர்ந்து கேள்விகளை எழுப்புகிறது. காலத்தின் அந்தப் புள்ளியில் எத்தனை சாத்தியங்கள் இருந்தன ஹிட்லருக்கு? அவன் பிறக்கும்போது நிகழ்ந்த சகுணங்கள் என கவிஞர் சுட்டுவது அன்றாடத்தின் சில தருணங்களைத்தானா? ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அவையே அற்புதங்களின் சகுணங்களாகவும் ஆகின்றனவா? குழந்தைகள் பிறப்பதென்பதே அற்புதங்கள் நிகழ்வதுதான் என்கிறாரா? யீஸ்ட்டின் மணம் எழும் ரொட்டியின் மாவு எண்ணற்ற உடல்கள் கொதிக்கும் சூளைகளை [ovens] எதிர் நோக்கி இருக்கிறதா? நாய்களின் ஊளையும் விதியின் காலடியும் அங்கே ஒலித்து, ஊரார் அதைக் கேட்கவில்லையா அல்லது அப்படி ஏதும் ஒலிக்கவேயில்லை என்று வியந்து கொள்கிறாரா? கர்த்தரைப் போலத்தான் சாத்தானும் அவதரிக்கிறானா இந்த உலகில், குழந்தையாக இருவரும் ஒன்றா? வரலாற்றாசிரியர்கள் எப்போதும் நிகழ்ந்து முடிந்த பிறகே வாசிக்கின்றனரா?
கவிதையில் வெளிப்படுவது அங்கதமா அல்லது உண்மையான வியப்பா? யூதரான சிம்போர்ஸ்கா ஒரு கணம் அந்த புகைப்படம் வழியாக ஹிட்லரை குழந்தையாகாக் கண்டது வழி எதையும் கடக்க முயல்கிறாரா? இந்த புகைப்படத்தைக் காணும் போது நாம் எப்படி உணர்கிறோம்? வரும் காலத்தை அறிந்திருந்தாலும் இந்தக் குழந்தையை கொன்று விட முடியுமா நம்மால்? அந்த கொல்ல முடியாமையைத்தான் கொஞ்சுகிறாரா ஸிம்போர்ஸ்கா?
எத்தனைக் கேள்விகள். ஆனால், முடிவின்மையை நோக்கி கேள்விகள் கேட்பதால் எஞ்சுவது என்ன? இத்தகைய கேள்விகளுக்கு என எந்த அறுதியான பதில்களும் இல்லை. அது நாமறியாததும் இல்லை. பின் ஏன் இந்தத் தத்தளிப்பு? நாமே எதையேனும் எண்ணிக் கொண்டால்தான் உண்டு. எஞ்சுவது வியப்பு மட்டுமே.
முதல்முறை கடற்கரைக்கு சென்ற போது யதிகா ஒரு சிப்பியைக் கண்டு ஆர்வமாக எடுத்து பார்த்தாள். பிறகு அருகிலேயே இன்னொன்று புதைந்திருப்பதைக் கண்டு பரபரப்பாகி கையிலெடுத்துக்கொண்டாள். சற்று தள்ளி இன்னொன்று இன்னொன்று என புதைந்திருப்பதைக் கண்டு, ஒவ்வொன்றாக தோண்டி எடுத்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு சிப்பியையும் எடுத்துக் கொண்டு விட முடியாது என உணர்ந்து, தாங்கவே முடியாமல், அப்பா இங்கெ இதயெல்லாம் யாரோ ஒளிச்சு வச்சுருக்காங்கப்பா என்றாள்.
அந்த வியப்பு மானுடம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இங்கு இதையெல்லாம் புதைத்து வைத்தது யார் என தத்துவவாதிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். சாதனைகள் யோகங்கள் செய்து அறிய முயன்றிருக்கிறார்கள். கொஞ்சி கண்ணீர் விட்டு இருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் இங்கு புதைத்து வைத்தது யாரென்று கேட்கும் போது புகைப்படம் கவிதையாகிறது.
ரிக் வேதத்தின் சிருஷ்டி கீதம் இவற்றை யாரறிவார்? அது அறியுமா அல்லது அதுவும் அறியாதா? என்ற வியப்பாக அதை எழுப்பிக் கொள்கிறது. அந்தக் கேள்வியை எழுப்பிக்கொண்ட மனம் எந்தத் தருணத்தில் அந்தக் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்திருக்கும்? ஏதோ ஒரு தருணத்தில் முடிவின்மை மொத்தத்தையும் ஒரு கணத்தில் கண்டிருக்க வேண்டும்.
ஏ.வி மணிகண்டன்
ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
புகைப்படம் கண்ணில் காணும் கவிதை